Published:Updated:

500 ருபாய் நோட்டு! - குறுங்கதை

கதிரின் மனம் முழுக்க தோனி அடிச்ச சிக்ஸர் போல் சிதறி இருந்தது. வாசலில் படுத்திருந்த "உசேன் போல்ட்" இவனை பார்த்ததும் வாலை ஆட்டி குரைக்க, வாசலருகே முத்தழகு காகிதத்தில் எதையோ கிறுக்கி கொண்டிருந்தாள்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அந்த புதிய கிரிக்கெட் மட்டை பார்ப்பதற்கு பளபளப்பாக புது மெருகோடு இருந்தது.

வெளிர் பழுப்பு நிறத்தில் முழுவதும் எண்ணெயில் துடைத்து போல் நேர்த்தியாக லேமினேட் செய்யப்பட்டு பளிச்சென இருக்க, உள்ளே "SPARTAN M.S.Dhoni Run" என்ற பெயர் மின்னியது. அதன் கைப்பிடி நீலம் மற்றும் பச்சை நிற ரப்பர் துணியால் வெகு இறுக்கமாக கட்டப்பட்டு மிக அழகாக வடிவமைக்கபட்டு இருந்தது.

அதன் நேர்த்தி கண்டு கண்களை அகல விரித்தான் - கதிர்.

மொழு மொழுவென்ற அதன் மேற்பரப்பில் கைவைத்து மெதுவாக நீவினான்.

அண்ணா.."செம்மயா" இருக்கு. "எத்தினி ரூபானா இது?" கதிர் கேட்டான்.

1850 ரூபாடா.! சொன்ன ராஜனுக்கு வயசு பதினேழு.

இதோட நிஜ விலை 4200. போனவாரம் Flipkart தீவாளி சலுகைல 50% தள்ளுபடி போட்டான். ஆறுமாசமா சேர்த்த காச வெச்சு வாங்கினேன். இந்த கம்பெனி பேட்ல தான் நம்ம "தல தோனி" யே வெள்ளாடுறது. அடிச்சா சொம்மா பால் பறக்கும்.

சுற்றிலும் வேடிக்கை பார்த்த சிறுவர்கள் கேட்டுவிட்டு ஆர்பரித்தார்கள்.

Representational Image
Representational Image


"டேய் ராஜு..நேரமாகுது. வாடா."

மைதானத்தின் நடுவில் ராஜனின் நண்பர்கள் ஸ்டம்ப் நட்டி கோடு போட்டு ஆளுக்கு ஒருபக்கம் தயாராகி உரக்க கூவ, ராஜு மட்டையை வாங்கி கொண்டு ஓடினான். மற்ற சிறுவர்களும் சிதற, கதிர் அவன் மட்டையோடு ஓடுவதையே பார்த்தான்.

சரிவாடா கதிரூ. "நாம வெள்ளாடலாம்."

பசங்கள் அழைக்க, கைலிருந்த மட்டையை ஒருமுறை பார்த்துவிட்டு அரை மனதுடன் மரத்தடி நோக்கி நடந்தான்.

"நட்டு" எதையோ தின்று கொண்டே வர, இவன் கையிலிருந்த மட்டையை பார்த்து வெகுளியாக சிரித்தான்.

அது அவன் நண்பர்களோடு சேர்ந்து எப்போதோ கிடைத்த தென்னை மர கட்டையில் செதுக்கியது. திருத்தமான வடிவம் இல்லாமல் அகண்டு, நேர்த்தியற்று இருக்க, நடுவில் தோனி கிரிக்கெட் மட்டையோடு இருக்கும் படம் ஒட்டி இருந்தது.

கதிரு.."ராஜீ பேட் செம்ம மெர்சலாக்கீதில்ல?!"

"நட்டு" சொல்லிவிட்டு அமைதி ஆக, கதிர் ஒன்றும் பேசவில்லை.

காசிமேட்டு கதிருக்கு வயசு பதிமூணு. ராயபுரம் குடிசையோரம் தான் வீடு. அரசு நடுநிலை பள்ளியில் ஆறாவது இரண்டாவது வருடமாக படிக்கிறான். படிப்பில் எப்பவும் சுமார் தான். கடைசி பெஞ்சு. கிரிக்கெட்னா மட்டும் உசுரு. சோறு தண்ணி இல்லாம எவ்வளவு நேரம் வேணாலும் விளையாடுவான். குப்பத்துல பசங்க கூட சும்மா திரியும்போது கூட, வெறும் காத்துல பௌலிங், பேட்டிங் செஞ்சுட்டு தான் திரிவான். அவ்வளவு காதல். அதிலும், "தல தோணி" என்று எங்கேயாவது கேட்டால் மணிநேரம் பேசும் அளவு வெறி. பள்ளிக்கூட நோட்டிலிருந்து, கதிரின் குடிசை சுவர் வரை வித விதமாக தோனியின் படங்கள் மட்டுமே அலங்கரிக்கும்.

Representational Image
Representational Image

கதிருக்கு நெருங்கிய சிநேகிதர்கள்னு சொல்ல மூன்று பேர். எதிர் வீட்டு நட்டு (நடராசு), பக்கத்துக்கு தெரு வஜ்ரம், அப்புறம் ரெண்டு தெரு தள்ளி இருக்கும் சாந்தலெட்சுமி. கதிர விட ஒரு வயசு சிறியவள். ஐந்து வயதிலிருந்தே நல்ல பழக்கம். கதிர் கூப்பிடறது - பவளம். அதுக்கு ஒரு காரணம் இருக்கு.
கதிர் போன வருடம் பெயில் ஆனதால், பவளமும் அவனும் இப்போது ஒரே ஆறாம் வகுப்பில் தான் படிக்கிறார்கள். சாந்தலெட்சுமிக்கு அப்பா இல்லை. அம்மாவிற்கு வடபழனி கோவிலருகே பூ வியாபாரம்.

வார விடுமுறையில் கதிர் இரண்டு இடங்களில் இருப்பான். ராயபுரம் பெரிய மைதானம், பிறகு பழைய மீன் மார்க்கெட் அருகே உள்ள பெரிய குப்பைமேடு. ஞாயிறு தினங்களில் குப்பைமேட்டில் திரிந்து சேகரிக்கும் எலக்ட்ரானிக், மற்றும் பழைய செம்புக்கம்பிகளை மெயின் ரோட்டில் உள்ள ஐய்யகோனார் பழைய இரும்பு கடையில் வித்து கிடைக்கும் காசை அம்மாவிடம் தருவான். எப்போதாவது பவளம் இவனோடு குப்பை சேகரிக்க வருவதுண்டு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கதிருக்கு எட்டு வயதில் ஒரு தங்கை. முத்தழகு. மேக்கப் போடுவது என்றால் கொள்ளை பிரியம். கதிரின் அப்பா அன்பரசுக்கு ஒரு தனியார் மீன்பிடி கம்பெனி படகில் தினக் கூலி வேலை. மாதத்தில் பாதி நாட்கள் கடலில் போகும் வாழ்க்கை. பஞ்சவர்ணம் வேலை செய்வது பாரிஸ் கார்னர் அருகே ஒரு கார்மெண்ட் எஸ்போர்ட் கம்பெனியில் பேக்கிங் பிரிவில் எடுபிடி வேலை.

கதிருக்கு இரண்டு வருட ஒரே நீண்ட கனவு, "தல தோணி" விளையாடுவது போல ஒரு தரமான மட்டையை வாங்கி விளையாடுவது தான்.

பஞ்சவர்ணதிற்கே தெரியாமல் சமைக்க இருக்கும் எண்ணையை எடுத்து தென்னை மர மட்டைக்கு நன்கு தடவி தடவி வைப்பான். யாரோ எப்போவோ சொன்னது. தினமும் எண்ணெய் தடவி வைத்தால் மட்டை உருக்கு போல பலமாகும் என்று.

மரத்தடியில் மேலும் சில சிறுவர்கள் சேர விளையாட துவங்கினார்கள். அன்று விளையாட்டு பெரிய ஆரவாரம் இல்லாமல் முடிய, வீடு வந்தான்.

கதிரின் மனம் முழுக்க தோனி அடிச்ச சிக்ஸர் போல் சிதறி இருந்தது. வாசலில் படுத்திருந்த "உசேன் போல்ட்" இவனை பார்த்ததும் வாலை ஆட்டி குரைக்க, வாசலருகே முத்தழகு காகிதத்தில் எதையோ கிறுக்கி கொண்டிருந்தாள். மட்டையை வெளியே கதவோரம் ஒரு மூலையில் எறிந்துவிட்டு உள்ளேபோய் சுருண்டு படுத்து விட்டான்.லேசாக மழை தூற தொடங்கியது.

ரேடியோவில் ஏதோ பாட்டு ஒலித்துக்கொண்டிருக்க அன்பழகன் வீட்டில் இல்லை.

Representational Image
Representational Image

சுவத்தோரம் இருந்த மண்ணெண்ணெய் அடுப்பில் பஞ்சவர்ணம் எதையோ கிளறி கொண்டு இருக்க, இவன் சப்தம் கேட்டுவிட்டு பார்க்காமலேயே..

டேய்.."கால அலம்பின்னு வா. சோறு துன்னலாம்". என்றாள்.

சுவத்தோரம் இருந்த தோனி படத்தை கொஞ்ச நேரம் பார்த்தவன், பின் மெதுவாக திரும்பி

"எம்மா..எத்தினி தபா சொல்றேன். "புச்சா பேட் வாங்கி தர சொல்லி..ரெண்டு தீவாளி போய்ச்சு."

சொல்லிவிட்டு எதுவும் பேசாமல் மீண்டும் உம்மென இருந்தான்.

பஞ்சவர்ணம் கையில் கரண்டியோடு திரும்பி பார்த்து மெலிதாக சிரித்து விட்டு திருப்பி கொண்டாள். வெளியே கதவருகே "உசேன்" இவனை பார்த்து வாலை ஆட்டி குரைத்து கொண்டே இருக்க, மழை தொடங்கியது.

"எம்மா..மழை பெய்யுது" சொல்லிவிட்டு முத்தழகு கையில் காகிதத்தோடு உள்ளே ஓடி வந்தாள்.

கதிர் ஒன்றும் பேசவில்லை.

அன்று அன்பழகன் வர இரவு வெகு நேரமாகி விட, கதிர் வேகமாக உறங்கி போனான்.

அடுத்தநாள் ஞாயிறு நேரமாக காசிமேடு பெரிய குப்பைமேட்டுக்கு பிளாஸ்டிக் பையோடு வந்தான். அன்று பவளமும் இவன் கூட வந்திருந்தாள். தூரத்தில் அங்கும் இங்குமாக குப்பைலாரிகள் கரும்புகை கக்கி கழிவுகளை கொண்டு வந்து கொட்டி கொண்டிருந்தது. வானம் கருமேகம் சூழ்ந்து மப்பாக இருக்க, எப்போ வேனாலும் பொத்துக் கொள்ள தயாராக இருந்தது.

கதிர் தலையர்த்தி வானத்தை ஒருமுறை பார்த்துவிட்டு குப்பைகளை வேகமாக கிளற துவங்கினான் .
அவனுக்கு தென்புறம் சற்று தள்ளி இருந்த ஒரு பள்ளத்தில் பவளமும் குப்பையை ஆர்வமாய் கிளறிக்கொண்டு இருந்தாள். தூரத்தில் லாரிவாகனங்கள் வந்து போகும் ஓசை கேட்டு கொண்டே இருந்தது.

சிறிது நேரம் சென்று இருக்கும்.

பவளம்..பவளம் என கத்தினான் கதிர்.!

குப்பையை கிளறிக்கொண்டு இருந்த பவளம் பிளாஸ்டிக் பையோடு வேகமாக அருகே ஓடி வந்தாள்.

"இன்னா ஆச்சுடா" கதிரு? ஏன் கத்துறே?!

கையில் இருந்ததை காட்டினான்.

கதிர் கையில் ஒரு கருப்பு நிற மணிபர்ஸ் இருந்தது. குப்பையும் செம்மண்ணும் இலைகளும் கலந்து அழுக்காக ஆனால் அதிகம் சிதையாமல் இருந்தது.

கதிர் கையில் வைத்திருந்த பாலிதீன் பையை மேட்டில் அப்படியே வைத்துவிட்டு அமர, அவளும் அருகே உக்கார்ந்தாள்.

பவளம் ஆர்வத்தில் பதறினாள். "கதிரு. மெதுவா. "கீஞ்சிட போய்து"

மெல்ல திறந்து ஆர்வமாக உள்ளே பார்த்தார்கள்.

மணிபர்ஸ் இரண்டு அடுக்காக இருந்தது. உள்ளே அழுக்கு படிந்தேறிய மண்ணோடும், மக்கிப்போன செடி இலைகளோடும் சில பண நோட்டுகள் இருந்தது. அது குப்பை கழிவு கலந்து உட்புற தோல் பகுதியோடு நன்கு ஒட்டி இருந்தது.

பர்ஸ்ஸின் மற்ற அறையை பார்த்தான். ஒரு விசிட்டிங் கார்டு. அது பாதி கிழிந்து பெயர் எதுவும் தெரியாத அளவு சிதைந்து இருந்தது. பைக்கில் யாரோ ஒரு வாலிபன் அமர்ந்து இருக்கும் புகைப்படம். முகம் தெளிவாக இல்லாமல் கருப்பாக எதுவோ திட்டாய் படிந்திருந்தது. பிறகு ஏதேதோ பழைய பில் காகிதங்கள்.

கதிர் அருகே இருந்த ஒரு தட்டையான மரக்குச்சியை எடுத்து நிதானமாக பக்கவாட்டில் நெம்பி பணத்தை மெதுவாக வெளியே எடுத்தான். மொத்தம் நான்கு அழுக்கு நோட்டுக்கள் இருந்தது.

இருவரும் ஆர்வமானார்கள்.

கதிர், அவன் கட்டம் போட்ட சட்டையின் பின்புறம் வைத்து ஒவ்வொரு நோட்டையும் மெதுவாக சுரண்டி குப்பை நீங்குமாறு துடைத்தான். அழுக்குகள் மறைந்து நோட்டு தெளிவாக தெரிந்தது. நான்கு ஐநூறு ருபாய் நோட்டுகள். மொத்தம் இரண்டாயிரம் ருபாய் இருந்தது.

"ய்யா.." கதிர் கண்கள் விரிய சந்தோஷத்தில் எகிறி குதித்தான்.

"செம்மடா..கதிரு". பவளமும் உற்சாகமாக ஆர்பரித்தாள்.

Representational Image
Representational Image

மணிபர்ஸ்சை பிளாஸ்டிக் பையில் வைத்திருந்த துணியால் நன்கு அழுத்தமாக துடைத்தான். பர்ஸ்ஸின் அடிப்புறம் "FOSSIL" என்று பெயர் அழுத்தமாக பதிந்து இருந்தது. நோட்டுகளை மீண்டும் உள்ளே வைத்து மடித்து டிரௌசரில் வைத்து கொண்டான்.

மெதுவாக மழை தூறல் ஆரம்பிக்க, "பவளம் வா கிளம்புவோம்." என்றான் கதிர்.

பவளம் தலையாட்டினாள்.

இருவரும் வேகமாக ஓடி பாலம் கடந்து ரோட்டோரம் இருந்த மரத்தடியில் நின்றார்கள். மழை பலம் எடுத்து பெய்ய ஆரம்பித்தது. இவர்கள் நின்ற மரத்திலிருந்து கொஞ்சம் தள்ளி உள்ள ரோட்டோர சிற்றுண்டி கடையில் FM ரேடியோ வழியாக ஏதோ ஒரு புது பாடல் ஒலித்து கொண்டு இருந்தது. ஒருவர் வேகமாக ஓடி வந்து வெளியே இருந்த தோசை கல்லை சாக்கு துணி போட்டு மூடிவிட்டு வேகமாக உள்ளே ஓடினார்.

கதிர் பாலிதீன் பையை கீழே வைத்துவிட்டு முகம் துடைத்தவாறே அவசரமாக டிரௌசரை தொட்டு பார்த்தான். ஓடி வந்த வேகத்தில் மணிபர்ஸ் எங்காவது தவறி இருக்குமோ என்று பயந்தான். நல்லவேளை பையில் இருந்தது.

நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் மழை வெள்ளத்தை அரைத்து சப்தமிட்டு கடந்து சென்று கொண்டிருந்தது. மதியம் ஒரு மணி கடந்து இருந்தது. சிறிது நேரத்தில் மழைவிட, பேசிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தார்கள்.

வழிநெடுக பவளத்திடம் ஏதேதோ பேசினாலும் கதிரின் மனசு முழுவதும் கிடைத்த பணத்தில் பேட் வாங்குவது பற்றியே வட்டமிட்டு கொண்டு இருந்தது.

குடிசைக்கு உள்ளே வந்து பஞ்சவர்ணத்தை தேடினான். காணவில்லை.

ரெண்டு நாளாக அன்பழகனுக்கு உடம்புக்கு சுகமில்லாமல் இருந்ததால், கடலுக்கு போகவில்லை. கொல்லையோரம் சிகரெட் பிடித்து கொண்டு இருந்தவன், கதிர் வந்த சப்தம் கேட்டு உள்ளே வந்தான்.

கதிர் அன்பிடம், "எப்போவ்..இங்கன பார்த்தியா?

டிரௌசரில் கைவிட்டு பர்ஸ்ஸை எடுத்து பணநோட்டுகளை அன்பு கையில் கொடுத்தான்.

"குப்பைல கெட்ச்சுது."

அன்பு வேகமாக புன்னகைத்து விட்டு வாங்கி ஆர்வமாய் எண்ணிப் பார்த்தான்.

"உண்ட எத்தினி தபா கேட்டேன்".. "நாளைக்கி சாயந்திரம் பசங்களோட பாரிஸ்ஸாண்ட ஸ்போர்ட்ஸ் ஸ்டோர் போய் பேட் வாங்கியார போறேன்."

கதிர் வெள்ளத்தியாய் சிரிக்க..

ஒரு சில நொடி தான்...அன்பின் முகம் சிறுத்துப் போனது.

கதிருக்கு ஒன்றும் புரியவில்லை. "இன்னாசுப்பா?" பதறினான்.

கதிரு..."இது கவுரூமெண்டு பழைய 500 நோட்டுடா..இப்போ எங்கனயும் செல்லாது."

சொல்லிவிட்டு ஏமாற்றமாய் கதிரை பார்க்க, கதிர் ஒன்றும் பேசாமல் சுவர் ஓரமாக போய் அப்படியே உட்கார்ந்தான். கண்ணில் நீர் கட்டி அழுகையாய் வந்தது.

கதிரு..."இந்த தீபாவளிக்கு மெய்யாலுமே பேட் வாங்கி தர்றேன் கண்ணு" அன்பு அழுத்தமாக சொன்னான்.

கதிர் ஒன்றும் பேசாமல் முட்டியை மடித்தவாறு வெளியே பார்க்க..

குடிசை வாசலோரம் தென்னை மட்டை பேட் மழைநீரில் நன்கு ஊறி மேலும் ஈரமாக இருந்தது.

-மாணிக்கம் விஜயபானு
டெக்சாஸ். ஆஸ்டின்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு