Published:Updated:

கரீம்! - குறுங்கதை

Representational Image

அனைத்தையும் கண் சிமிட்டாமல், கவனித்துக் கொண்டிருந்தான் கரீம். இன்னிக்கு நம்ம வேட்டை இந்தப் பெரியவர்தான் என தீர்மானித்துக் கொண்டான் கரீம். இவன் அருகில் வந்து பெரியவர் நிற்க...

கரீம்! - குறுங்கதை

அனைத்தையும் கண் சிமிட்டாமல், கவனித்துக் கொண்டிருந்தான் கரீம். இன்னிக்கு நம்ம வேட்டை இந்தப் பெரியவர்தான் என தீர்மானித்துக் கொண்டான் கரீம். இவன் அருகில் வந்து பெரியவர் நிற்க...

Published:Updated:
Representational Image

மத்தியானவேளை. கோயம்பேடு பஸ் நிலையம் அருகில் உள்ள நடுத்தரமான உணவகம். அதன் உள்ளே வந்த கரீம், அங்கே இருக்கும் சூழ்நிலையை நோட்டமிட்டான். மதியவேளை என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. சூழ்நிலை தனக்கு சாதகமாக இருப்பதை உறுதி செய்து கொண்டான். அவனருகில் வந்த சர்வர்..., ``சார்... சாப்பாடு டோக்கன் வாங்கி விட்டு வரணும்'' என்றார்.

``ஓ அப்படியா.. சரி'' என்று சொல்லிவிட்டு டோக்கன் தரும் மேஜைக்கு அருகே சென்று...

``ஒரு சாப்பாடு'' என்று கரீம் பணத்தை நீட்ட .. அங்கு அமர்ந்திருந்தவர் அதை வாங்கிக் கொண்டு டோக்கன் கொடுத்து விட்டு மீதி சில்லறையை கொடுக்க.. வாங்கிக்கொண்டு நகர்ந்தான் கரீம்.

Representational Image
Representational Image

சுற்றும் முற்றும் அவன் பார்க்க, அனைத்து இடமும் நிறைந்து இருந்தது. முதல் மேஜை அருகே நின்று கொண்டான். சற்று நேரத்தில் முகத்தில் வெண்ணிற தாடி, தலையில் தொப்பி, குர்தா அணிந்த பெரியவர் ஒருவர் உள்ளே நுழைந்து, தன் பர்ஸில் இருந்து பணத்தை எடுத்து சாப்பாடு டோக்கன் வாங்கிக்கொண்டு, பர்ஸ்சை தன் குர்தாவிற்குள் வைத்துக்கொண்டு, மெதுவாக தள்ளாடியபடியே நடந்து வந்தார்.

அனைத்தையும் கண் சிமிட்டாமல், கவனித்துக் கொண்டிருந்தான் கரீம். இன்னிக்கு நம்ம வேட்டை இந்தப் பெரியவர்தான் என தீர்மானித்துக் கொண்டான் கரீம். இவன் அருகில் வந்து பெரியவர் நிற்க,

``கொஞ்சம் இருங்க பாய்.. கொஞ்ச நேரத்தில் இந்த மேஜை காலியாக போகுது. நாம் இங்கே உட்கார்ந்து சாப்பிடலாம்'' என்றான் கரீம்.

``சரி பா..''

என்றார் பெரியவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சிறிது நேரத்தில் மேஜை காலியாக, பெரியவரும், கரீமும் உட்கார்ந்து கொண்டனர். சர்வர் வந்து இருவரிடமும் டோக்கன் வாங்கி சென்றார். பின்பு இருவருக்கும் சாப்பாடு வைக்கப்பட்டது. வாழை இலையில் தண்ணீர் தெளித்த பிறகு, ஆவி பறக்க சூடான சாதம் வைக்கப்பட அப்பளம், பொரியல், ஊறுகாய் என சர்வர் வைக்க, மிகுந்த அக்கறை கொண்டவனாய், சாம்பார் எடுத்து பெரியவரின் சாதத்தின் மீது ஊற்றினான் கரீம்.

``போதும்.. போதும்பா'' என்றார் பெரியவர்.

இருவரும் சாப்பிட ஆரம்பித்தனர். மெதுவாக பேச்சுக் கொடுத்தான் கரீம்.

``நீங்க எந்த ஊரு? எங்கிருந்து வரீங்க?'' என்று கேட்டான்.

பெரியவர் பேச ஆரம்பித்தார், ``திருவல்லிக்கேணி-ல இருக்கேன் பா. சின்னதாக பொட்டி கடை வெச்சிருக்கேன். எனக்கு ஒரே மகள். சிறு வயதிலேயே என் மனைவி இறந்து விட்டதனால், நானே மகளை வளர்க்க வேண்டியதா போச்சு. பிறகு திருப்பத்தூர் அருகில் திருமணம் செய்து வெச்சேன். மாப்பிள்ளை தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறார். பேரன் இப்ப பள்ளியில் படிக்கிறான். ரொம்ப நாளாச்சு. அதான் போய் பார்த்துவிட்டு வரலாம்னு இருக்கேன். பேரனுக்கு திருப்பத்தூர் நக்படியான் பூந்தினா கொள்ளை பிரியம். அங்கே போய் வாங்கிக்கிட்டு, அப்படியே ஏதாவது விளையாட்டு பொருள் வாங்கிக்கொண்டு போகலாம்னு இருக்கேன். அப்புறம் மகளிடம் பணம் ஏதாவது கொடுத்துட்டு வரலாம்னு நினைச்சுட்டு இருக்கேன். இப்பதான் தொழுகை முடிச்சிட்டு வந்தேன். சாப்பிட்ட பிறகு பஸ் ஏறி போகணும்’’ என்றார் சாப்பிட்டுக்கொண்டே.

Representational Image
Representational Image

``அப்பளம் காலியாகிவிட்டது. பெரியவருக்கு ஒரு அப்பளம் வைப்பா..’’ என்றான் உரிமையாக.

``நீ எந்த ஊரு பா?’’ என்றார் பெரியவர்.

``நான் மயிலாடுதுறை பக்கத்துல ஒரு கிராமம்.. அம்மா கிடையாது. அப்பா மட்டும்தான். ரொம்ப நாளாகிப் போச்சு. அதான் போய் பார்த்துட்டு வரலாம் இருக்கேன். நானும் சாப்பிட்ட பிறகு பஸ் ஏறனும்’’ என்றான்.

பேசிக்கொண்டே பெரியவர் அசந்த நேரம், அவரின் பர்ஸ்சை அடித்துவிட்டான். சாப்பிட்ட பின்பு பெரியவர் கூடவே பஸ் நிற்கும் இடம் வரை வந்தான்.

``பாய்... திருப்பத்தூர் பஸ் இங்கேதான் வரும். பஸ் வர்ற வரைக்கும் இங்கே உட்காருங்க’’ என்று நிழற்குடையில் இருக்கும் நாற்காலியில் அவரை உட்கார வைத்தான்.

``சரி .. நான் கிளம்புறேன்’’என்றான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``சரிப்பா.. ரொம்ப சந்தோஷம். பத்திரமாய் போப்பா... நம்ம வாழ்க்கையில நடக்கிற ஒவ்வொரு சம்பவத்திற்கும் ஏதாவது காரணம் இருக்கும். பார்ப்போம்’’ என்றார் பெரியவர்.

இதைக்கேட்டு ஹா.. ஹா..ஹா.. என்று பலமாக சிரித்தபடி, ``அந்த நம்பிக்கை எல்லாம் எனக்கு கிடையாது பாய்’’ என்று சொல்லிவிட்டு பரபரவென்று நடந்து சென்று மயிலாடுதுறை கிளம்பிய பஸ்ஸில் அவசர அவசரமாக ஏறி உட்கார்ந்து அமர்ந்துகொண்டான்.

பஸ் கிளம்பியது. சிறிது நேரத்திற்குப் பிறகு, பெரியவரிடம் திருடிய பர்ஸ்சை திறந்து அதில் இருந்த பணத்தை எடுத்தான். காலி பர்ஸ்சை ஜன்னல் வழியாக வெளியே வீசினான். பணத்தை எண்ணிப் பார்த்தான். 9 ஆயிரத்து 200 ரூபாய் இருந்தது. அடடா... இன்று நமக்கு ஜாக்பாட் என்று நினைத்தபடி, பணத்தை பாக்கெட்டில் வைத்துக் கொண்டான். பெரியவர் தன் பேரனுக்கு பூந்தி வாங்கி கொடுக்கணும்னு சொன்னாரே, என்று நினைப்பு வர.. சரி விடு... ஒவ்வொரு சம்பவத்திற்கும் ஒரு காரணம் இருக்கும் என்று அவரே சொன்னாரே... பார்க்கலாம் என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டான்.

பஸ் சென்று கொண்டிருந்தது. ஜன்னலோரம் சாய்ந்தபடி தூங்கினான்.

Representational Image
Representational Image

கரீம்... மயிலாடுதுறை அருகே உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவன். சிறுவயதிலேயே அம்மா இறந்து விட்டதால், அப்பா உமர்பாஷா தான் வளர்த்தார். தந்தையின் அதிகப்படியான கண்டிப்பு காரணமாக தந்தை, மகன் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகமானது. கரீம் வளர, வளர தவறான நட்புக்கள் காரணமாக அனைத்து கெட்ட பழக்கமும் வந்து சேர்ந்தது அவனிடம். ஒரு நாள் அவன் தந்தை அவனை அடித்து விட, கோபத்தில் சொல்லாமல், கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறி சென்னை வந்தடைந்தான்.

பல நாட்களாக பசி, பட்டினி காரணமாக திருட்டில் இறங்கிவிட்டான். நல்ல வேளையாக இவன் திருடும் விஷயம் ஊரில் யாருக்கும் இன்னும் தெரியவில்லை. ஊரிலிருந்து வந்து பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், ஏனோ இரு நாட்களாக அப்பாவின் ஞாபகம் அவனுக்கு அதிகமாக வந்து கொண்டிருக்கிறது.

என்னதான் சண்டை போட்டாலும், அம்மாவின் மறைவிற்குப் பிறகு வேறு திருமணம் செய்து கொள்ளாமல் தன்னை வளர்த்தவர் ஆயிற்றே, என்ற எண்ணத்தால் அப்பாவின் மீது அவனுக்கு சிறிது பாசம் இருக்கிறது. சரி... ஒருமுறை போய் அப்பாவை பார்த்து விட்டு வரலாம் என்று கிளம்பியவன், செலவுக்கு என்ன செய்ய... யாரிடமாவது திருடனும், என்று நினைத்துக்கொண்டு வந்தவனிடம் சிக்கினார் பெரியவர். நள்ளிரவு தாண்டியது. தன் கிராமத்திற்கு வந்து சேர்ந்தான் கரீம்.

அப்பாவை பார்த்துவிட்டு தன்னிடம் இருக்கும் பணத்தை அவரிடமே கொடுத்து விட்டு வந்து விடலாம் என்று நினைத்துக் கொண்டே நடந்தான். தெருமுனையில்... கரீம் என்ற குரல் கேட்க... திரும்பிப் பார்த்தான். பால்ய நண்பன் பஷீர்.

``விஷயம் கேள்விப்பட்டுதான் வந்தியா கரீம்?’’ என்று கேட்டான்.

``விஷயமா?’’ ஏதும் புரியாமல் பார்த்தான் கரீம்.

``என்ன விஷயம்?’’ என்று கேட்டான்.

``அப்ப தெரியாமத்தான் வந்திருக்கியா?. மன்னிச்சிடு கரீம். உன் அப்பா மெளத் ஆகிவிட்டார்’’ என்றான் பஷீர்.

``எப்போ?’’ அதிர்ச்சி தாங்காமல் கேட்டான் கரீம்.

``மதியம் 2 மணி இருக்கும். தொழுகை முடிச்சிட்டு சாப்பிட உட்கார்ந்தவர், நெஞ்சுவலி வந்து படுத்தார். அப்படியே இறந்துட்டார்’’ என்றான் பஷீர்.

கண் கலங்கி கொண்டே வீட்டின் அருகே சென்றான் கரீம். வெளியில் பந்தல் போடப்பட்டிருந்தது. அக்கம்பக்கத்தார் சோகத்துடன் உட்கார்ந்து கொண்டிருந்தனர். உள்ளே சென்றான். தன் தந்தையைப் பார்த்து கதறி அழுதான். பிறகு ஆசுவாசப்படுத்திக்கொண்டு, ஒரு ஓரமாகப் போய் நின்று கொண்டு தன் தந்தையின் முகத்தையே வெறித்தவாறு பார்த்துக் கொண்டிருந்தான்.

ஒரு கணம் அப்பாவின் முகத்தில் அந்தப் பெரியவரின் முகம் வந்து போனது. திடுக்கிட்டான். நம் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு சம்பவத்திற்கும் ஏதோ ஒரு காரணம் இருக்கும் என்று பெரியவர் சொன்னது ஞாபகம் வந்தது. அப்போ நாம் சந்தித்த அந்த பெரியவர், நினைத்துப் பார்த்தான். அப்பாவின் இறுதி சடங்கிற்காக தான், அந்தப் பெரியவரின் பணம் தன்னிடம் வந்து சேர்ந்தது என்றவாறு புரிந்து கொண்டான்.

உடனே அருகில் இருந்த பஷீரிடம் தன் பாக்கெட்டில் வைத்திருந்த பணத்தை எடுத்து, அப்பாவின் இறுதி சடங்கு செலவுக்காக என்று கொடுத்தான். பல மணி நேரத்திற்கு பிறகு, இனி தன் வாழ்வில் திருடுவது என்பதே கூடாது என நினைத்தவாறே, அக்கம்-பக்கம் வீட்டாருடன் சேர்ந்து தன் தந்தையின் ஜனாஸாவை தூக்கினான் கரீம்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism