சுடச்சுட ஆவிபறக்கும் இஞ்சி டீயை
இரண்டு டம்ளர்களில் நிரப்பி ட்ரே ஒன்றில் வைத்து எடுத்துக்கொண்டு கிச்சனிலிருந்து வெளியே வந்தாள் அகிலா.
ஹாலில் சோஃபாவில் அருகருகே அமர்ந்தபடி டிவியில் மூழ்கிப் போயிருந்தனர் அகிலாவின் மாமனார் சுந்தரமும் மாமியார் மீனாட்சியும்.
என்னங்க..மழை வரப்போறாமாதிரி இடிஇடிக்கிது..என்றார் கணவரிடம் மீனாட்சி.
ஆமா மீனாட்சி..மழை வரும் போலத்தான் இருக்கு என்று சுந்தரம் சொல்லிமுடிப்பதற்குள் படபடவென்று பெருஞ்சப்தத்துடன் பெரிய பெரிய தூரலாய் போட ஆரம்பித்தது. ஹாலின் திறந்திருந்த ஜன்னல் கதவுகள் காற்றில் படீரென ஜன்னல் மரக்கட்டையில் வந்து மோதிக் கொண்டன.
சட்டென எழுந்து ஜன்னல் கதவுகளை தாழ்ப்பாள் போட ஜன்னலருகே சென்றார் சுந்தரம். கைகளை வெளியே நீட்டி கதவுகளை உள்நோக்கி இழுத்த சுந்தரத்தின் கைகளை படைபோல் பறந்து வந்த கொசுக்கள் கடித்துப் பதம்பார்க்க.. ஐயோடீ..கொசு என்னமா கடிக்கிது என்றபடி கைகளை உதறி பரபரவென்று கைகளை மாற்றிமாற்றி தேய்த்துத்தேய்த்துச் சொரிந்துகொண்டார் சுந்தரம்.

கிச்சனிலிருந்து டீயோடு ஹாலுக்குள் நுழைந்த அகிலாவின் காதில் மாமனாரின் புலம்பல் விழுந்ததோடு கொசுக்கடியால் அவர் படும் பாடும் கண்ணில் பட..ஐயோ மாமா..ஸாரி மாமா கொசு கடிச்சிடுச்சா..ஸாரி மாமா சாயந்திரம் அஞ்சுமணிக்கே நான் ஜன்னல சாத்தியிருக்கனும்.. மறந்துட்டேன்.. இப்ப பாருங்க ஒங்களுக்கு.. ஸாரிமாமா..ஸாரி.. ஸாரி.. எம்மேலதான் தப்பு..தவித்துப்போன அகிலா கையிலிருந்த டீ டம்ளர்கள் வைத்திருந்த ட்ரேயை மேஜைமீது வைத்துவிட்டு கப்போர்டிலிருந்து டால்கம் பவுடர் டப்பாவை எடுத்து பவுடரை மாமனாரின் கைகளில் தூவி கொசுக்கடித்து சிவந்து தடித்துப் போயிருந்த இடங்களில் தடவிவிட்டாள் கொசுவிரட்டி லிக்விடேட்டரை ஆன் செய்தாள்.இவற்றை செய்து முடிப்பதற்குள் பத்து தடவைகளுக்கு மேல் ஸாரி ஸாரி என்று சொல்லியிருப்பாள்.
மாமா உக்காருங்க மாமா என்றாள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSசுந்தரம் சோபாவில் அமர டீ ட்ரேயை மாமனார் மாமியார் எதிரில் நீட்டி இஞ்சி டீ அத்த..எடுத்துக்குங்க அத்த..எடுத்துக்குங்க மாமா என்றாள் அன்பும் பவ்யமுமாய்..
சுடச்சுட இருந்த இஞ்சி டீயின் மணம் நாசியை நிறைக்க மெல்ல டீயை உறிஞ்சினார் மீனாட்சி.சூப்பர் மா..இஞ்சி கமகமக்க டீ பிரமாதம் அகிலா..அதும் வெளியே மழைபெய்யுற இந்த நேரத்துல டீ ரொம்ப இதமா பிரமாதமா இருக்கு அகிலா.. என்னங்க நான் சொல்றது சரிதானே?..என்றார் அருகில் அமர்ந்து டீயைக் கொஞ்சம் கொஞ்சமாக ரசித்து ருசித்துக் குடித்துக்கொண்டிருந்த கணவரிடம்..
ஆமா..ஆமா..ஷ்யூர்..ஷ்யூர்.. என்னமா இருக்கு இஞ்சி டீ செம்மசூப்பர் மா அகிலா..இப்டியொரு டீ குடுத்ததுக்கு ரொம்ப தேங்ஸ்மா அகிலா..

ஐயோ மாமா..என்னமாமா இது..தேங்ஸ் கீங்ஸுன்லாம் சொல்லிக்கிட்டு..அவசரமாய் இடைமறித்தாள் அகிலா.
இல்லம்மா அகிலா..இதுமாரி டீயெல்லாம் நீ போட்டுக் குடுத்தீன்னா அப்புறம் இங்கியே டேரா அடிச்சிடுவோம் என்றார் சுந்தரம் வேடிக்கையும் விளையாட்டுமாய் சிரித்துக்கொண்டு.
அதானே.. என்று மீனாட்சி கணவரின் விளையாட்டுப்பேச்சை சிரித்தபடியே ஆமோதிக்க.. மூவரும் வாய்விட்டு சிரித்தனர்.
``ஏம்மாமா.. ஏங்கத்த.. நிஜமாவே நீங்க ரெண்டுபேரும் எங்களோட இங்கியே தங்கிட்டா என்ன?.. எதுக்கு நீங்க தனியா இருக்கனும்..எப்பவும் ஒங்கபுள்ள ஒங்க ரெண்டுபேரையும் பத்தி பொலம்பிக்கிட்டேதான் இருப்பாரு..வயசானகாலத்துல அம்மாவும் அப்பாவும் இப்பிடி தனியா இருக்குறது மனசுக்கு கவலையாவும் கஷ்டமாவும் இருக்கு..எங்ககூட வந்து இருங்கன்னா கேக்க மாட்டேங்குறாங்கன்னு அடிக்கடி பொலம்புவாரு.. நானும் அதையேதான் கேக்கறேன் அத்த..மாமா நீங்க ரெண்டுபேரும் இங்கயே வந்துடுங்களேன்.. ஒங்க பேரனுக்கும் பாட்டிதாத்தாகூட இருக்குற சந்தோஷம் கெடைக்குமில்ல'' என்று வாஞ்சையோடு கேட்டாள் அகிலா.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
``அகிலா.. எங்களுக்கு மட்டும் பேரப்புள்ளய கொஞ்சனும் அவனோட வெளையாடனும் மகன்.. மருமகளோட சேர்ந்திருக்கனும்னு ஆசை இல்லையா என்ன?ஆனாலும்
திருப்பூர்ல நமக்கு சின்னதா பனியன் கம்பெனி இருக்குல்ல..அத பாத்துக்கனும்.. நாலஞ்சு கடைகளுக்கு வாடகைக்கு இடம் கொடுத்துருக்கோம்.. மாச வாடகைய கலெக்ட் பண்ணனும்.. அதோட வசிக்கிற சொந்தவீட்ட பூட்டிப்போட மனசு வல்லம்மா.. இதெல்லாம் இல்லாட்டி பெத்த புள்ளைங்க மூணு பேர்ட்டயும் நாலுநாலு மாசம் ஷிப்ட் போட்டு இருந்துடுடலாமே.. மூணுபேருமே ஆசையாதான் கூப்புடுறீங்க..இருக்கட்டும்.. இப்ப முடியுது..இன்னும் வயசாகி எங்களுக்கு முடியாம வந்துட்டா ஒங்ககிட்ட வராம வேற எங்க போகப்போறோம்..
தினம்தினம் மூணு புள்ளைங்களும் மருமகள்களும் போன்செய்து எங்க சௌகரியத்தப்பத்தி விசாரிக்கும்போது எங்க ரெண்டுபேருக்கும் எவ்வளவு சந்தோஷமா இருக்கும் தெரியுமாம்மா?.. ஆண்டவன் பாசமான புள்ளைங்களையும்..நல்ல மருமகள்களையும் எங்களுக்கு கொடுத்துருக்காருன்னு. அதுக்காக ஆண்டவனுக்கு நாங்க தினம்தினம் நன்றி சொல்லிக்கிட்டு இருப்போம்மா..'' என்றார் சுந்தரம் தழுதழுத்த குரலில்.

சட்டெனக்குனிந்து அத்தை மாமா கால்களைத் தொட்டு வணங்கினாள் அகிலா..
நல்லா இரும்மா.. என்று மருமகளின் தலைதொட்டுவாழ்த்தினார்கள் சுந்தரமும் மீனாட்சியும்..
``அத்த.. ராத்திரிக்கு சாப்பிட என்ன செய்ய.. சொல்லுங்க அத்த..''
``என்னம்மா இது.. ஒனக்கு என்ன தோனுதோ அதச்செய்யும்மா..''
``இல்லத்த.. நீங்க சொல்லுங்கத்த.. அதையே செய்யு... ''
அகிலா மாமியார் மீனாட்சியிடம் கேட்டு முடிப்பதற்குள் பட்டென கேபிளில் கரண்ட்போய் ஸ்கிரீனில் நோ சிக்னல்.. நோ சிக்னல் என்ற வாசகம் ஒளிர்ந்தது. அரைமணிநேரமாய் மேற்படி காட்சிகள் நடந்துகொண்டிருந்த "விளக்கேற்ற வந்தவள்" சீரியல் கேபிளில் கரண்ட் போனதால் நின்றுபோனது.
கலைஞரின் இலவச டிவியில் மேற்படி சீரியலைப் பார்த்தபடி பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்தபடி இருந்த பெருமாள் கரண்ட்போய் சீரியல் நின்று போனதும் சட்டென பக்கத்தில் ஸ்டூல் ஒன்றில் அமர்ந்தபடி சீரியலைப் பார்த்துக்கொண்டிருந்த மனைவி சரசுவைத் திரும்பிப் பார்த்தார். மனைவி கண்களில் கண்ணீரின் ஈரம் பளபளத்தது..
``என்ன சரசு அழுவுறயா.. கண்ணுல தண்ணி தளும்புது..''
``ப்ச்..இல்லீங்க..''
``பொய் சொல்லாத சரசு..நீ ஏ அழுவுறன்னு எனக்குத் தெரியும்.. சரசு இது சீரியல் சரசு.. நெசமில்ல.. சும்மா வாங்குற காசுக்கு நடிக்கிறாங்க..''
``அப்ப நல்ல மகனுங்க நல்ல மருமகளுங்களே ஒலகத்துல இருக்க மாட்டாவுளா..? நம்ம மகனுங்கள்ள ஒருத்தங்கூட நம்மகிட்ட பாசமா இல்லியே.. ஒரு மருமவகூட அகிலா மாதிரி நம்மள நம்ம மாமனாரு நம்ம மாமியாருன்னு நெனச்சு நம்மள ஆதரிக்கலயே அன்பு காட்டலியே..''
``ஒலகத்துல நல்ல மகனுங்க.. நல்ல மருமகளுங்க இல்லாமயா போவாங்க? இருப்பாங்க சரசு.. ஆனா நமக்கு அப்பிடி அமையிலயே.. நாம கொடுத்து வெச்சது அவ்வளவுதா.. மூணு மகனுங்க மூணு மருமவளுங்க பேராப்புள்ளைங்க இருந்தாலும் நாம அனாதயாத்தாங் கெடக்கனுங்குறது நம்ம விதி.. நா ஒன்னும் இந்த சீரியலுல வர்ற மாமனார் சுந்தரம் மாரி பனியன் கம்பெனி ஓனரோ.. கடைங்களுக்கு இடத்த வாடகைக்கு விட்டு சம்பாதிக்கிற ஆளோ கிடையாதே சரசு.. ரொம்ப சாதாரண மாட்டுத் தரகந்தானே.. பத்து ரூவா காசு சம்பாதிக்க செருப்புதேய நடக்குறவன்.. வயசாயிட்டு இப்ப.. அந்தவேலையும் பாக்க முடியாம ஒனக்கு கவுருமென்ட்டு கொடுக்குற முதியோர் பென்சனு.. ரேஷன்ல கெடைக்குற இலவச அரிசி கோதுமை பாமாயிலுலதான் நம்ம ரெண்டு பேரோட வயிரும் காயாம கெடக்குது.. இப்பிடி பொழப்ப நடத்துற நம்மள.. நாம பெத்த மூணு புள்ளைங்களும் மருமவள்களும் மதிப்பாங்களா என்ன? சொல்லு சரசு.. மூணு ஆம்பளப் புள்ளைங்கள பெத்துருக்கோம்..

கடைசிகாலத்துல இவுனுங்க மூணுபேரும் நம்மள ஒக்காத்தி வெச்சு கஞ்சி ஊத்துவானுங்க.. வயசான காலத்துல எங்குளுக்கு ஒரு கொறைவும் இருக்காதுன்னு எல்லார்ட்டியும் எப்டீல்லாம் பீத்திக்குவோம்.. அத்தனையும் பொய்யாயிடுச்சு.. நாமளும் சீரியலுல வர்ர மாமனாரு சுந்தரம்.. மாமியாரு மீனாட்சி மாதிரி பணக்காரவங்களா இருந்தோம்னா நம்ம மவனுங்களும் மருமவள்களும் நம்மள மதிப்பாங்க.. நாம ஏழையாயில்ல இருக்குறோம்.. விடு சரசு.. உலகம் இப்பிடித்தான்.. பணமில்லாதவன் பொணத்துக்கு சமம்.. பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லன்னு தெரியாமலா சொல்லிவெச்சுருக்காங்க.. அழுவாத சரசு''
என்றபடி எண்பத்தஞ்சு வயது உடல் வற்றிப்போன பெருமாள் வயது மூப்பால் நடுங்கும் தனது கரத்தால் எண்பத்திரெண்டு வயதான முதுமையின் காரணமாய் வளைந்து போன முதுகோடு.. ஊன்றுகோலின் துணையோடு.. பெற்றபிள்ளைகளின் உதாசீனத்தால் கண்களில் திரண்ட கண்ணீரோடு இரவு சாப்பாட்டுக்கு என்னசெய்வது என்ற கவலையும் யோசனையுமாய் ஸ்டூலிலிருந்து எழுந்து கூனியபடி லேசாய் நடுங்கும் உடலோடு நின்ற மனைவியின் முதுகை ஆதூரத்தோடு தடவிக்கொடுத்தார்.
சட்டென கேபிளில் கரண்ட் வர.. டிவியில் பழைய திரைப்படம் போட்டிருந்தார்கள் போலும்.. அப்படத்திலிருந்து..
"தாயிற் சிறந்த கோயிலுமில்லை..
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை"
ஆயிரம் உறவில் பெருமைகள்
இல்லை..
அன்னை தந்தையே..
அன்பின் எல்லை..
என்ற பாடல் காட்சி ஓடிக் கொண்டிருந்தது.
பாடலைக்கேட்டு விரக்தியோடு சிரித்தார் பெருமாள்.. கோயிலாவது?.. மந்திரமாவது?..
காசேதான் கடவுளடா என்று காசைத்துரத்திக்கொண்டு ஓடும் இந்தக்காலத்தில் தாயாவது? தந்தையாவது?.. பிள்ளையாவது?பாசமாவது? என்ற வேதனை தோன்ற.. இப்போது பெருமாளின் கண்களில் கண்ணீர் அரும்பியது.
-காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன்.
காஞ்சிபுரம்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.