Published:Updated:

முட்டை! - குறுங்கதை

Representational image
Representational image

அவசரமாகச் சென்று தட்டை எடுத்துக் கொண்டு வந்தான் ராமு. வரிசையில் முதலில் நின்று விட வேண்டுமென்பது அவன் எண்ணம்.,

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அப்பாடா! ஒரு வழியாக மணி அடித்துவிட்டது. இனி சாப்பாடுதான். இன்னைக்கு முட்டை வேறு உண்டு.

அந்த மூன்றாம் வகுப்புச் சிறுவன் ராமு, காலை பள்ளி முடிந்ததற்கான அந்த மணி எப்போது அடிக்குமென்றுதான் எதிர்பார்த்துக் காத்திருந்தான். வயிறு வேறு பசியில் ‘கப கப’ என்றது.

அந்தக் கிராமத்துப் பள்ளிக் கூடத்தில் 70 பேர் படித்தாலும், பெரும்பாலானவர்கள் ஏழைகள்தான். அவர்களுக்கெல்லாம் படிப்பின் மீது உள்ள ஆர்வத்தைக் காட்டிலும் பகலில் போடும் சாப்பாட்டின் மீது கவனம் அதிகம். அதிலும் மதிய உணவில் முட்டை போடும் நாளன்று ‘அட்டடன்ஸ்’ அதிகரித்துவிடும். அந்தப் பள்ளியைச் சுற்றியுள்ள வீடுகளின் பொருளாதார நிலை அப்படி!

 சத்துணவு
சத்துணவு

அவசரமாகச் சென்று தட்டை எடுத்துக் கொண்டு வந்தான் ராமு. வரிசையில் முதலில் நின்று விட வேண்டுமென்பது அவன் எண்ணம். அப்பொழுதுதான் தனக்கு நிச்சயமாக முட்டை கிடைக்குமென்றும், ’க்யூ’ வில் பின் தங்கிவிட்டால் எங்கே கிடைக்காமல் போய் விடுமோவென்ற பயம் அந்தப் பிஞ்சு நெஞ்சத்தில் பதிந்திருந்தது. ஆனாலும் அவனுக்கு முன்னால் பலர் நின்றனர். அவனுக்கு அதுவே மீண்டும் பயத்தைக் கொடுத்தது. தனக்கு முன்னால் எத்தனை பேர் நிற்கிறார்கள் என்று எண்ண முற்பட்டான். ஆனால் வரிசை அவ்வளவு நேராக இல்லாததால் அவனால் சரியாக எண்ண முடியவில்லை. அவனுக்குப் பின்னாலும் வரிசை நீண்டிருந்ததைக் கண்டதும் சின்னதாய் ஒரு திருப்தி அவனுக்குள் வந்தது. இருந்தாலும்தான் இன்னும் அவசரமாக வந்து க்யூவில் முன்னாடியே நின்றிருக்க வேண்டும் என்று தோன்ற, சிறிதாகத் தன்னையே நொந்து கொண்டான்.

‘மெல்ல நழுவி முன்னாடி செல்லலாமா?’ என்ற சிந்தனை மனதிலோட, திரும்பிப் பார்த்தவன் கண்களில் தன் வகுப்பு வாத்தியாரே நிற்பது தெரிந்ததும், அந்த சிந்தனை அற்பாயுளில் முடிந்து போயிற்று! வரிசை மெல்ல நகர, அவனும் நகர்ந்து கொண்டே வந்தான்.

அவனுக்கு முன்பாக ஐந்து பேர்தான் இருந்தார்கள். இப்பொழுது அவனால் நன்கு எண்ண முடிந்தது. முட்டை வைத்திருந்த பாத்திரம் மேலாகத்தான் தெரிந்தது. அதில் முட்டைகள் குறைந்து விட்டன. எத்தனை இருக்கின்றன என்பது சரியாகத் தெரியவில்லை. இன்னும் நெருங்கினான். அவனுக்கு முன்னாடி 3 பேர்தான் இருந்தார்கள்.

முட்டை வைத்திருந்த பாத்திரம் இப்பொழுது நன்றாகத் தெரிந்தது. முட்டையும் மூன்று மட்டுமே இருந்தன.

அரசுப் பள்ளி மாணவர்கள்
அரசுப் பள்ளி மாணவர்கள்

அப்படியானால் அவனுக்கு முன்பு நிற்பவனுடன் முட்டை முடிந்து போய்விடுமே. அப்போ அவனுக்கு முட்டை இல்லையா? சாப்பாடு இருக்கும் பாத்திரத்தைப் பார்த்தான்.

அதில் நிறையவே இருந்தது. அப்படியானால் தனக்குச் சோறு மட்டும்தானா! மூன்றாவது நின்றவனுக்கு முட்டை கிடைத்து விட, இரண்டு பேர் மட்டுமே இப்போது.

முட்டைகளும் இரண்டு மட்டும்தான் இருந்தன. அவனுக்கு அழுகையே வந்து விட்டது.

முட்டை கிடையாதா?

அப்பொழுது உதவியாளர் ஒரு பாத்திரத்தில் 20, 30 முட்டைகளுடன் வந்து, அதனை வைத்து விட்டு, பழைய பாத்திரத்தில் இருந்த இரண்டு முட்டைகளையும் புதிய பாத்திரத்தில் எடுத்து வைத்துவிட்டு உள்ளே சென்றார்!

அப்பாடா!… அவன் நீண்ட பெருமூச்சு விட்டபடி மனத் திருப்தியுடன் வரிசையில் முன்னேறினான்!

-ரெ.ஆத்மநாதன்,

மெக்லீன்,அமெரிக்கா

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு