Published:Updated:

‘மணி’விழா! - சிறுகதை

Representational Image ( Istock )

தம்பி ஆறுமுகத்தின் தடபுடலான மணிவிழா ஏற்பாடுகளைப் பற்றி நெருங்கிய உறவினர்கள் மூலம் அவ்வப்போது அவருக்கு செய்திகள் வந்துகொண்டே இருந்தன. தன்னிடம் ஒட்டாத உறவினர்களின் பகட்டு வார்த்தைகளைக் கேட்டுத் தனக்குள் சிரித்துக்கொண்டார்.

‘மணி’விழா! - சிறுகதை

தம்பி ஆறுமுகத்தின் தடபுடலான மணிவிழா ஏற்பாடுகளைப் பற்றி நெருங்கிய உறவினர்கள் மூலம் அவ்வப்போது அவருக்கு செய்திகள் வந்துகொண்டே இருந்தன. தன்னிடம் ஒட்டாத உறவினர்களின் பகட்டு வார்த்தைகளைக் கேட்டுத் தனக்குள் சிரித்துக்கொண்டார்.

Published:Updated:
Representational Image ( Istock )

அரவிந்தனும், ஆறுமுகமும் இரட்டையர்கள். சில மணித்துளிகள் முன்னால் பிறந்த அரவிந்தன் மூத்தவர். ஆறுமுகம் இளையவர்.

பொழுது விடிந்தால் அவர்களுக்கு அறுபது அகவை பூர்த்தியாகிறது.

வறுமையில வாடிய மூத்தவர் அரவிந்தன் கையைப் பிசைந்து கொண்டு நின்றார்.

தம்பி ஆறுமுகத்தின் தடபுடலான மணிவிழா ஏற்பாடுகளைப் பற்றி நெருங்கிய உறவினர்கள் மூலம் அவ்வப்போது அவருக்கு செய்திகள் வந்துகொண்டே இருந்தன. தன்னிடம் ஒட்டாத உறவினர்களின் பகட்டு வார்த்தைகளைக் கேட்டுத் தனக்குள் சிரித்துக்கொண்டார்.

அரவிந்தனுக்கும், ஓரளவு விமரிசையாக தன் மணிவிழாவைக் கொண்டாட ஆசைதான். விரலுக்குத் தக்க வீங்கம்தானே தகும்.

“என்னங்க, பொழுது விடிஞ்சா அறுபது பூர்த்தி. உங்க தம்பியோட மணிவிழாவுக்கு ரொம்ப தடபுடலா ஏற்பாடு நடக்குது. சென்னை அன்னலெட்சுமில வெள்ளித்தட்டு விருந்துக்கு ஏற்பாடு பண்ணியிருக்காராம்..!”

“........”

“ ஒரு சாப்பாடு 2000 ரூபாயாம்..! நம்ப உறவுக்காரங்க 25 பேரையும் ஏசி பஸ்’ல அழைச்சிக்கிட்டுப் போறாராம் விருந்துக்கு. நாளை காலை 11 மணிக்கு ‘சூப்’போட விருந்து தொடங்கி மதியம் 1 மணி வரைக்கும் ‘டேபிள் ப்ளாக்’ பண்ணியிருக்காளாம்.”

Representational Image
Representational Image

‘உங்க மணி விழாவை எப்படிக் கொண்டாடறதா உத்தேசம்..?’ என்று மறைமுகமாகக் கேட்கும் மனைவிமேல் கரிசனம் வந்தது,

“ ஈஸ்வரன் கோவிலுக்குப் போய் அர்ச்சனை பண்ணிக்கிட்டு வருவோம்..” என்றார் விட்டேற்றியாக.

“நாம அர்ச்சனை செஞ்சிக்கறது இருக்கட்டும். விசேஷ நாள்ல நாலு பேருக்கு சாப்பாடு போட வேண்டாமா…?”

“என்ன செய்யறது ஜானகி? நம்ம வசதிவாய்ப்பு அப்படி. தம்பி ஆறுமுகம் , இன்னைக்கு இந்த ஊர்ல பெரிய புள்ளி. பிஸினஸ்ல கொடிகட்டிப் பறக்கிறான். சாஸ்திர சம்ப்ரதாயங்களுக்கு மதிப்பு கொடுக்காவிட்டாலும் , அவனோட வசதியை வெளிச்சம்போட்டுக் காட்ட, எதுவும் செய்வான்..!” என்றவர், கவலையோடு, அனிச்சையாய்த் தெருவைப் பார்க்க, விளக்குக் கம்பத்தில் இரண்டு அணில்கள் ஒன்றையொன்று துரத்தி விளையாடிக்கொண்டிருந்தன.

சுழலும் காலச் சக்கரம். எப்படித்தான் ஒருவனை மலையிலும், மற்றவனை மடுவிலும் தள்ளிவிடுகிறது.!. கைக்கும் வாய்க்குமாக சொற்ப வருமானம் பார்க்கும் அரவிந்தனால் பெரிதாக என்னதான் செய்துவிடமுடியும்..!

“இப்படி இடிஞ்சி போய் உட்கார்ந்துட்டா ஆச்சா.!” என்று கணவரின் கன்னத்தில் கை வைத்துத் திருப்பிய ஜானகியின் கைகளை அலங்கரிந்த ரப்பர் வளையல்களைக் கண்டு, கண்கள் கலங்கின.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஈர்க்குகளால் அலங்கரிக்கப்பட்ட அவள் மூக்கு காதுகளை பார்க்கத் துணிவில்லை அவருக்கு. தலையைக் குனிந்துகொண்டார் அரவிந்தன்.

தன் பதினைந்தாவது வயதில், தந்தையின் மறைவிற்குப் பிறகு குடும்பத்தைத் தாங்கும் பொறுப்பை சிரமேற்கொண்டு, ‘தர்மம், ஞாயம், என இருந்து இப்படி ஏமாளி ஆகிவிட்டோமோ…?’ என்ற கழிவிரக்கத்தில் கலங்கினார்.

‘அம்மா சாவின்போது, இறுதிச் சடங்கு காரியங்களுக்குக் கூட நயா பைசா செலவு செய்யாமல் சட்டம் பேசிய தம்பியை இந்த உறவுக்காரர்கள், எப்படியெல்லாம் ஏசிப் பேசினார்கள்..? அவனை குடும்பத்தை விட்டுத் தள்ளி வைக்கவேண்டும் என்றெல்லாம் ஆக்ராஷமாய் சீறினார்களே…!

இன்று அதே உறவுக்காரர்கள் என்னை அல்லவா முழுதுமாய் தள்ளி வைத்துவிட்டு, அவனோடு வெள்ளித்தட்டில் விருந்து சாப்பிடப் போகிறார்கள்…!

சை…ஏமாத்துக்கார உலகம்…!’ எனப் பழைய நினைவுகளை ஆயாசத்துடன் அசைபோட்டது மனம்.

Representational Image
Representational Image

“பெருமூச்சு விட்டுக்கிட்டு உட்கார்ந்திருந்தால் ஆச்சா.. மேலே ஆக வேண்டியதைப் பாருங்க.!” என்றாள் ஜானகி.

“வெறும் கையால என்னத்த முழம் போடறது..?”

“இந்தாங்க பிடிங்க. ஆபத்துக்கு உதவுமேன்னு சிறுகச் சிறுக சேமிச்சு வெச்ச பணம் 1500 ரூபாய் இருக்கு..” என்று பணம் அடங்கிய சுருக்குப் பையை கையில் திணித்துவிட்டு சமையலறைக்குள் சென்றாள்.

மனதில் குபேரன் கொடுத்த நம்பிக்கைக் கீற்றுகள் பிரகாசிக்க, தெருவில் இறங்கி நடந்தார்.

“ஹலோ.. மிஸ்டர் ஆறுமுகம், அன்னலட்சுமி மேனேஜர் ஸ்பீக்கிங்…”

“சொல்லுங்க சார்…”

“மணி பதினொண்ணே முக்கால். இதுக்கு மேலே வந்தாலும் முழு விருந்து பரிமாற முடியாது. உங்க ஆர்டரை கேன்ஸல் பண்ணிடறேன். வேறே எங்கேயாவது விருந்துக்கு ஏற்பாடு பண்ணிக்கோங்க…”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“ மேனேஜர் சார்.! வெகிகள்ல டெக்னிக்கல் இஷ்யூஸ், தவிர சாலை மறியல், மாற்றுப் பாதைனு சுத்தினதால லேட் ஆகுது… பெரிய மனசு பண்ணுங்க…” கெஞ்சினார் ஆறுமுகம்.

“எக்ஸ்ட்ரீம்லி சாரி. மதியம் 1.30 க்கு எக்ஸ் மினிஸ்ட்டர் வீட்டு ஃபங்ஷன்..! எல்லா டேபிள்களையும் ப்ளாக் பண்ணிட்டார். உங்க ஷெட்யூல் படி 1 மணிக்கு இடத்தை காலி பண்ணியே ஆகணும். உங்க அட்வான்ஸ் ரிடர்ன் பண்ணிடுவோம்…” மேலே பேச விடாமல் போன் கட் செய்தார் மேனேஜர்.

சொந்த பந்தங்களுக்கு நடுவில் ஆறுமுகத்திற்கு இது கௌரவப் பிரச்சனை. என்ன செய்வது..? பரபரத்தார்.

Representational Image
Representational Image

இலக்கை எட்ட ஆகும் நேரம் 40 நிமிடம் எனக் காட்டியது கூகுள் …

“மேனேஜர் சார்.. .! 12.30 க்கு வந்து சேருவோம். ஒரு மணி வரைக்கும் எங்க டைம் இருக்கில்ல…?”

“ சாரி மிஸ்டர் ஆறுமுகம். அந்த அரைமணி நேரத்துல ஃபுல் மீல்ஸ் முடியாது. சாம்பார் சாதம், தயிர் சாதம் இரண்டும்தான் தரலாம். 100 ரூபாய் பில் பண்ணுவோம்.” என்று விவரம் சொல்லி போனை வைத்தார் மேனேஜர்.

அடுத்த முயற்சியாக , போன் செய்து முக்கியஸ்தர்களை தூது அனுப்பினார் ஆறுமுகம்.

ஏற்பாடு செய்த இரண்டு தொழிலதிபர்களுமே “மினிஸ்டர் வீட்டு ஃபங்ஷன்’கறதுனால, எங்களால எதுவும் செய்ய முடியலை… சாரி…” என்று கை விரித்துவிட்டனர்.

மாற்று ஏற்பாடுகள் எதுவுமே கைகொடுக்காது, என்ற நிலையில் வேறு வழியே இன்றி, தன் உறவினர்களோடு சாப்பாட்டு அறைக்குள் ஆறுமுகம் நுழைந்தபோது மணி 12.40.

பரிமாறப்பட்டு தயாராய் இருந்த தட்டுக்களின் முன் அனைவரும் அவசர அவசரமாய் அமர்ந்தனர்.

“இன்னும் 20 நிமிஷத்துல சாப்பிட்டு முடிச்சிடுங்க.”.என்ற மேனேஜரின் குரலில் கண்டிப்பு இருந்தது.

‘சாப்பிட்டு முடிச்சிடுங்க’ என்பதில் ‘இடத்தை காலி பண்ணுங்க’ என்ற பொருள் பொதிந்திருந்தது.

தட்டு, தரை, மேசை என சுத்தம் செய்வோர் தங்கள் தொழில் கருவிகளுடனும், கடமை உணர்வுடனும் நின்று அனைவரின் முதுகையும் பார்வையால் துளைத்தனர் .

மணி 12.55

மந்திரியின் அழைப்பாளர்கள் ஓரிருவராக வரத்தொடங்கி ஆங்காங்கே மேசையை நிரப்பத் தொடங்கிவிட்டனர்.

இரண்டு மணி நேர படாடோபமான விருந்துக்காக அன்னலட்சுமிக்கு வந்த ஆறுமுகமும் அவர் உறவினர்களும், தாமதமாய் வந்த குற்ற உணர்வுடனும், ஏமாற்றத்துடனும், கனத்த இதயத்துடனும், வெள்ளித் தட்டில் வைக்கப்பட்ட சாம்பார் சாதத்தையும், தயிர்சோற்றையும் அவசர அவசரமாய் விழுங்கிக்கொண்டிருந்தனர்.

அதே நேரத்தில், ஒரு வேளை சாப்பாட்டுக்கு ரூபாய் 1500 என்று நிறுவனத்தால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் செலுத்தி விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்த அந்த முதியோர் இல்லத்தில், மனப்பூர்வமாக தங்களை வாழ்த்திய 15 முதியவர்களோடு அமர்ந்து எளிய விருந்தை மகிழ்ச்சியாக உண்டு மணிவிழா கண்டு மகிழ்ந்தனர் அரவிந்தன் தம்பதியினர்.

-ஜூனியர் தேஜ் (கட்டுரையாளர் – உளவியல் ஆலோசகர்)

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism