Published:Updated:

தாயெனும் தெய்வத்தை! - குறுங்கதை

Representational Image ( Photo by Jan Canty on Unsplash )

உட்கார்ந்திருப்பவர்களில் ஒருவர் கூட கிழவியின் வயதையும் முதுமையால் ஏற்பட்டிருக்கும் முடியாமையையும் கருத்தில் கொண்டு எழுந்து இடம் கொடுக்கவில்லை..மனிதம் செத்துவிட்டதோ?..

தாயெனும் தெய்வத்தை! - குறுங்கதை

உட்கார்ந்திருப்பவர்களில் ஒருவர் கூட கிழவியின் வயதையும் முதுமையால் ஏற்பட்டிருக்கும் முடியாமையையும் கருத்தில் கொண்டு எழுந்து இடம் கொடுக்கவில்லை..மனிதம் செத்துவிட்டதோ?..

Published:Updated:
Representational Image ( Photo by Jan Canty on Unsplash )

பீச் ஸ்டேஷனிலிருந்து திருமால்பூர் வரை செல்லும் அந்த மின்சாரத் தொடர்வண்டி குரோம்பேட்டை ஸ்டேஷனில் வந்து நின்றது. ஏறுவோரும் இறங்குவோருமாகக் கூட்டம் முண்டியடித்தது..ட்ரெயினின் எல்லா பெட்டிகளின் வாயிலிலும் ஏகத்துக்கும் கூட்டம் மொய்த்தது..

இந்தக்கூட்டத்தினிடையே எப்படி ஏறுவது என்ற பிரமிப்போடும் தவிப்போடும் நின்றிருந்தாள் பொன்னாத்தா கிழவி.வெறும் ரெண்டுநிமிடமே நிற்கும் ட்ரெயினில் முண்டியடித்து ஏறுவது தனக்கு சாத்தியமற்ற செயல் என்று தயங்கி நின்ற கிழவியை.. ``பாட்டீ.. வண்டீல ஏறனுமா..’’ எனக்கேட்டபடி அருகில் வந்த ரெயில்வே போலீஸ்காரர் ஒருவர் கேட்க..

``ஆமா’’ என்றாள் கிழவி.. அதற்குள் வண்டி கிளம்பிவிட கையிலிருந்த விசிலை வேகமாக ஊதினார் அந்த போலீஸ்காரர்.. கிளம்பி சற்றே நகர்ந்த ட்ரெயின் சட்டென நின்றது..டிரைவர் எட்டிப்பார்த்தார்..

சட்டென பொன்னாத்தா கிழவியின் இடுப்பைப் பற்றி அப்படியே தூக்கி வண்டிக்குள் நிறுத்தினார் போலீஸ்காரர். வண்டி நகர்ந்தது..

மின்சார ரயில்
மின்சார ரயில்

வண்டிக்குள் உட்கார இடமில்லை. தலைக்குமேல் தொங்கும் வளையத்தைப் பிடித்துக்கொண்டு நிற்கும் வயதோ அதற்கான தெம்போ இல்லை பொன்னாத்தாவுக்கு.

நெருக்கியடித்து நிற்கும் கூட்டத்தினரிடையே கையை நுழைத்து சீட்டின் கம்பியைக்கூட பிடிக்க இயலவில்லை நிற்க முடியாமல் தவியாய்த் தவித்தாள் கிழவி.. எண்பது வயது உடல் நடுங்கியது.. படபடப்பாய் இருந்தது..

உட்கார்ந்திருப்பவர்களில் ஒருவர் கூட கிழவியின் வயதையும் முதுமையால் ஏற்பட்டிருக்கும் முடியாமையையும் கருத்தில் கொண்டு எழுந்து இடம் கொடுக்கவில்லை..மனிதம் செத்துவிட்டதோ?..

அடுத்த ஸ்டேஷனு வந்திச்சின்னா யாராச்சும்னா எறங்குவாங்க அப்பவாச்சும் ஒக்கார முடிஞ்சா தேவுல.. நினைத்துக் கொண்டாள் கிழவி..

அடுத்த ஸ்டேஷனில் வண்டி ஒரு குலுக்கலோடு நின்றபோது பேலன்ஸ் தவறி பக்கத்தில் நிற்பவர்மீது சட்டென மோதிச் சாய..

``ஏ..கெழவி பாத்து நிக்கிமாட்டியா..’’ ஒர் இளசு ஏளனம் செய்தது.. பேரன் வயதுதானிருக்கும் அந்தப்பையனிடம்.. கோச்சுக்காதப்பா பாட்டியால நிக்கமுடீல கண்ணு என்றாள் கிழவி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உட்கார்ந்திருந்தவர்கள்.. நின்று கொண்டிருந்தவர்கள் எனப்பலரும் கீழே இறங்கும் அவசரத்திலும்.. வண்டிக்குள் ஏறி இடம் கிடைக்குமா என பார்க்க முயன்றவர்களும் இடித்த
இடியை வாங்கியபடி நின்று கொண்டிருந்த கிழவிக்கு காலியான சீட்டுக்கு அருகே நின்றிருந்தவர்களால் சீட்டுகள் நிரம்பிவிட இப்போதும் உட்கார இடம் கிடைக்கவில்லை..

ஒருவழியாய் செங்கல்பட்டு ஸ்டேஷனை வந்தடைந்தது ட்ரெயின்.. அடுத்த நிமிடம் காலியாகிப்போனது கம்ப்பார்ட்மென்ட்.

உஸ்.. அப்பாடி என்றபடி ஜன்னலோர இடத்தில் அமர்ந்து அப்படியே கண்களைமூடி பின்புறமாய்ச் சாய்ந்து கொண்டாள் பொன்னாத்தா கிழவி.. தேய்ந்து மெலிந்த தேகம்.. முதுமையால் முகத்தில் வரிவரியாய்க் கோடுகள்.. சுண்டிச்சுருங்கிப்போன தோல்.. பொக்கை வாய்.. கூனல் விழுந்த முதுகு..பஞ்சுமிட்டாயாய் வெளுத்துப்போன தலைமுடி.. பஞ்சடைந்தகண்கள் மொத்தமாய் உடல் முழுதும் முதுமையின் ஆட்சி..

Representational Image
Representational Image

வெளியிலிருந்து வெப்பக்காற்று வீசியது.. புடவைத்தலைப்பால் முகத்தையும் கழுத்தையும் அழுத்தித் துடைத்துக்கொண்டாள்.. பக்கத்தில் சாய்த்து வைத்த.. அரைப்பழசில் இரண்டு காட்டன் புடவைகள்.. லேசாய் வெளுத்துப் போயிருந்த இரண்டு ஜாக்கெட்டுகள்.. சுமாராய் இருந்த ஒரு உள்பாவாடை.. ஒரு கிழிந்த துண்டு இவைகள் அடங்கிய துணிப்பையை இன்னும்கொஞ்சம் தன்னருகே இழுத்து வைத்துக் கொண்டாள்..

டீ..டீ..டீ..காபி..காபி..டீ..காபி..டீ..காபி..
கத்தியபடி கையில் டீ கேனைச் சுமந்தபடி வண்டியை ஒட்டி இங்குமங்கும் நடக்கும் டீ விற்பவர்கள்..

கிழவிக்கு டீ குடித்தால் தேவலாம் போல் இருந்தது.. முந்தானையின் நுனியிலிருந்த முடிச்சை அவிழ்த்தாள்.. அதற்குள்ளிருந்த உள்ளங்கை அளவேயிருந்த பாலிதீன் பையை எடுத்து அதனை இரண்டாய் மடித்துச் சுற்றியிருந்த ரப்பர்பேண்டை விலக்கி பைக்குள் விரல்களைவிட்டு அதற்குள் வைத்திருந்த பணத்தை வெளியேயெடுத்து எண்ணிப் பார்த்தபோது ஒரு இருபது ரூபாய் நோட்டு.. ஒரு பத்துரூபாய் நோட்டு.. ஒரு அஞ்சு ரூவா காயினுமாய் மொத்தமாய் முப்பத்தஞ்சு ரூபாய் இருந்தது.. அவ்வளவுதான் இருக்மென்று கிழவிக்கும் தெரியும்.. கொட்டிக்கொட்டி அளந்தாலும் குறுணி பதக்காகுமா என்ன.. 2எ332அல்லது காசு குட்டிதான் போடுமா?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டீ பத்து ரூவா இருக்கும் என நினைத்தபடி பத்து ரூபாய்த் தாளை எடுத்து வலது கை கட்டைவிரலுக்கும் ஆட்காட்டிவிரலுக்கும் நடுவிரலுக்கும் இடையே வைத்து நீவினாள்.. மனம் கணக்குப்போட்டது.. பத்து ரூவா டீ குடிக்க போயிட்டுன்னா மிச்சம் இருவத்தஞ்சுதா இருக்கும்.. திரும்பி வரக்கொள்ள டிக்கிட்டு எடுக்க?.. காஞ்சிவரத்துலேந்து குரோம்பேட்டைக்கு டிக்கிட்டு பதினஞ்சு ரூவா.. இப்ப குரோம்பேட்டையிலேந்து காஞ்சீவரம் போக அப்பிடிதானே டிக்கிட்டு எடுத்தோம்.. சமயத்துல பொண்ணுட்ட நாங் க்ரோம்பேட்ட கெளம்புறேன்னா..
ரெயிலுக்கு காசுவச்சுருக்கியான்னு கூட கேக்காம போய்ட்டுவான்னு பட்டுன்னுல்ல சொல்லிடும்.. ரயிலுக்கு டிக்கெட்டு வாங்க காசு குடுன்னு எப்பிடி கேக்குறது.. பாசமில்லாத மவ பாசமில்லாத மவன்..

 ரயில்
ரயில்

யாருவூட்டுக்குப் போனாலும் வெறுங்கைய வீசிக்கிட்டு எப்பிடி போவுறது.. அதும் பொண்ணு வூட்டுக்கு.. ஆப்பிளு ஆரஞ்சுன்னு வாங்கவேண்டா.. பத்து ரூவா பிஸ்கேட்டு பாக்கெட்டாச்சும் வாங்கிட்டு போவவேண்டாமா.. பேரம் பேத்திங்க இருக்குங்கள்ள.. ஆனா அதுங்க ரெண்டும் இந்த பத்துரூவா பிஸ்கேட்டையெல்லாம் சீந்தவே சீந்தாது.. நமக்குதா அஞ்ஞானம் கெடந்து அடிச்சிக்கிது.. நாம பெத்தபொண்ணு நம்முள மதிச்சாதானே பேரம்பேத்திங்க மதிக்கும்.. மனம் வலித்தது பொன்னாத்தாவுக்கு.. மவனுவதா பொஞ்சாதி பேச்சகேட்டுக்கிட்டு பெத்தவள மதிக்கமாட்டானுவன்னு சொல்லுவாக.. ஒட்டுமொத்தமா எல்லாரோட மவனுங்களும் அப்பிடியில்ல.. நாம வவுறு தொறந்த வேள அப்பிடி.. பொதுவா மவளுங்க பெத்தவங்ககிட்ட பாசமா இருப்பாங்கன்னு சொல்லுவாங்க.. ஆனா நாஞ்செஞ்ச பாவம் எம்பொண்ணுமில்ல எங்கிட்ட பாசமில்லாம இருக்கு..

இதோ.. இப்ப பொண்ணுவீட்டுக்கு போவுறமே.. அப்டியே வாம்மா வாம்மான்னு ஆசஆசயா மவளும்.. பாட்டி பாட்டீன்னு பேரம் பேத்தியும் கூப்டவா போறாங்க.. ப்ச்..பாத்தவொடனே..ம்..வா என்று மொகத்துல சின்ன சந்தோஷத்தக் கூட காட்டாத.. பேருக்க வான்னு கூப்டுட்டு அடுக்களைக்குப் போயிடுவா பொண்ணு.. இஷ்டப்பட்டா டீ குடுப்பா.. இல்லாட்டி இல்ல.. நாலு நாளுகூட சேந்தாப்புல இருக்கமுடியாது.. மறுபடியும் கெளம்பி மவன் வீட்டுக்கு.. வேண்டாத விருந்தாளி போல போய் நிக்கினும்.. தெனந்தெனம் மருமவ பேசுர பேச்சு அய்யோ அம்மாடீ.. மனசு என்னமா நோவுது.. ஏண்டி அம்மாவ இப்பிடி கண்டமேனிக்குப் பேசுறன்னு ஒருதடவ கேட்ருப்பானா புள்ள.. எனக்குவேண்டா பூஷணிக்கா.. எனக்கும் வேண்டா பூஷணிக்கான்னு கிராமங்கள்ள சொலவட சொல்லுவாங்க.. அதுபோலதா நா புள்ளைக்கும் வேண்டாம்.. பொண்ணுக்கும் வேண்டாம்..

பாட்டி
பாட்டி
Representational Image | Pixabay

சொவத்துல அடிச்ச பந்தாட்டம் புள்ள வூட்டுலேந்து பொண்ணுவூடு மறுபடி பொண்ணுவூட்டுலேந்து புள்ளவூடு.. என்ன கேவலமான பொழப்பு இது.. காலேல மருமவ எவ்வளவு கேவலமா பேசிச்சு.. இத்தினிக்கும் நா எதுனாச்சும் கேக்குறனா பேசுறனா.. டீ குடுத்தா குடிப்பேன் குடுக்காட்டி ஏங்குடுக்கலன்னு கூட கேக்கமாட்டேன்.. சோறு எப்ப போடுதோ அப்பதா தும்பேன் பசிச்சாலும் வாயத் தொறக்காமதா குந்தியிருப்பேன்.. கட்டக்கூட பொடவ.. தாங்கட்டுன பழசதாங்குடுக்கும்.. வேண்டாமுனு மறுத்துறுப்பேனா.. தேமேன்னு விதிய நெனச்சி குந்தியிருக்குற என்னிய எப்டீல்லாம் பேசும்.. அப்டியே சாவுலாம் போலன்னா இருக்கும்.. இன்னிக்கி காலேல.. ஏ.. கெழவி.. நீ.. இங்கியேதா இருந்து எவ்வுயிரதா எடுப்பியா..


போயேன் பொண்ணுவூட்டுக்கு.. அத்தையும் நீதான பெத்த.. எப்பிடி வார்த்தயால வறுத்து எடுத்திச்சி மருமவ..பொஞ்சாதி பேசுரதக் கேட்டபடி மூஞ்ச சவரஞ்செஞ்சிகிட்டு பேசாதல்ல நின்னிக்கிட்டிருந்தான் மவன்..பலவ மேல மடிச்சி வச்சிருந்த எம்பொடவைங்கள எடுத்து தூக்கி எறிஞ்சி..போ..போன்னு கத்திகிட்டே ..

இந்தா ரயிலுக்குன்னு சொல்லி அப்பது ரூவாய தூக்கில்ல வீசி எறிஞ்சிச்சு.. அதுக்கும்மேல அங்கிட்டு இருந்தா களுத்தபுடிச்சி கூட வெளிய தள்ளிடும்னு பொங்கிவந்த அளுகய அடக்கிட்டு மானங்கெட்டத்தனமா பொடவைங்கள பொறுக்கி பையிலபோட்டுகிட்டு கூடவே மருமவ விட்டெறிஞ்ச அம்பது ரூவாயயும் பொறுக்கிக்கிட்டுல்ல வெளியவந்தேன்..அம்மா போவாதம்மான்னு பெத்தபுள்ள சொல்லவே இல்லியே..எல்லாத்தியும் பாத்துகிட்டுத்தானே இருந்தான்.. பாவி மவன்..மூணு வயசு வரைக்குமில்ல தாய்பாலு குடிச்சான்..
பாசமில்லாம எப்பிடி போனான்..

இவ எங்க போய்டுவா.. களுதகெட்டா குட்டிச்சுவரு.. பொண்ணுவூட்டுக்குதா போயிருப்பானு நெனைப்பாக.. ஆனா பொண்ணுவூட்டுல மட்டும் ஒக்காத்தி வெச்சு ஒபசாரமா பண்ணுவாங்க மவனுக்கு கொஞ்சமும் சளைச்சவ இல்ல மவ..

ம்கூம்..பொண்ணு வூட்டுக்கும் போகவேண்டாம்..இனிமேலுக்கு புள்ள வூட்டுக்கும் போகவேண்டாம்..

சட்டென ஏதோ ஒரு தீர்மானத்துக்கு வந்தவளாய் பத்துரூவாயை மீண்டும் பாலிதீன் பையில் வைத்து முந்தானையில் முடிந்துகொண்டு ட்ரெயினிலிலிருந்து கீழே இறங்கினாள் பொன்னாத்தா..

 தாயெனும் தெய்வத்தை! - குறுங்கதை

ஸ்டேஷனிலிருந்து வெளியே வந்தவளை.. அங்கு நின்றிருந்த ஆட்டோக்குள்ளிருந்த ஆட்டோ டிரைவர் எட்டிப் பார்த்து பாட்டி எங்க போவணும் என்று கேட்க..

ஏந்தம்பி காட்டாங்கொளத்தூர்ல வயசானவுங்கள பாத்துக்கிட.. ஏதோ.. சொல்லுவாங்களே..அது என்னா.. தலையைச் சொரிந்தாள்..

ஓ..முதியோர் இல்லமா.. பெத்ததுங்க வெரட்டிடிச்சா..

பொன்னாத்தா பதிலேதும் சொல்லவில்லை..

பாட்டி இந்நேரத்துக்கு பஸ்ஸுல்லா இல்ல..வண்டீல ஏறு..

ஐயோ..ஆட்டோக்கு குடுக்கல்லாம் அம்மாம் காசில்லப்பா..

பாட்டி.. ஒன்னய யாரு காசுகேட்டா.. வண்டீல ஏறு.. நா அழச்சுகிட்டுப்போயி.. அங்க தெரிஞ்சவங்க இருக்காங்க அவுங்ககிட்ட சொல்லி ஒன்னய சேத்துவுடுறேன்..

என்னாது.. மெய்யாலுமா சொல்லுர?..

ஆமா பாட்டி.. ஒன்னாட்டம் பெத்தபுள்ளைங்களால ஒதுக்கித்தள்ளபட்ட தாய்ங்க முதியோர் இல்லத்துல சேர ஒதவுனா.. அடுத்த சென்மத்துல நா மனுசப்பிறவின்னு இல்ல எந்தப்பிறவியா பொறந்தாலும் என்னப்பெக்குற தாயி என்னப்பெத்ததுமே சாவாம இருக்கட்டும்.. தாய்ப்பாசம் எனக்குக் கெடைக்கட்டும்.. பெத்த தாயோட வாழுற வாழ்க்கய நாங் கும்புடுற சாமி எனக்குக்குடுக்கட்டும்.. வண்டீல ஏறு பாட்டி..

மனிதம் இன்னும் சாகவில்லை..

நீ நல்லா இருப்ப என்று நெஞ்சார சொல்லியபடி ஆட்டோவில் ஏறி அமர்ந்து கொண்டாள் பொன்னாத்தா கிழவி..
**************
-காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism