Published:Updated:

ஒளிராத மத்தாப்பூக்கள்! | சிறுகதை | My Vikatan

Representational Image

அம்மா.. சும்மா இரும்மா.. ஏதோ கேட்டேன்.. நாமெல்லாம் அவ்வளவு தொகைக்கெல்லாம் போன்லாம் வாங்கமுடியாதுன்னு தெரியாதா எனக்கு.. அத மறந்துடு.. நான் எப்பிடியாச்சும் படிச்சிடுவேன்.

ஒளிராத மத்தாப்பூக்கள்! | சிறுகதை | My Vikatan

அம்மா.. சும்மா இரும்மா.. ஏதோ கேட்டேன்.. நாமெல்லாம் அவ்வளவு தொகைக்கெல்லாம் போன்லாம் வாங்கமுடியாதுன்னு தெரியாதா எனக்கு.. அத மறந்துடு.. நான் எப்பிடியாச்சும் படிச்சிடுவேன்.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

இரவு மணி பத்தரை. குடிசையின் நடுநாயகமாய் போடப்பட்டிருந்த அந்த ஒற்றை பல்பின் வெளிச்சத்தில் அடுத்தமாதம் நடக்கவிருந்த TNPSC குரூப் 4 தேர்வுக்காக பொது அறிவுக் கேள்வி பதில்கள் அடங்கிய புத்தகத்தைத் திறந்து வைத்துக் கொண்டு அதில் கண்களை ஓட்டிக்கொண்டிருந்த அமுதாவின் செவிகளில் சுவற்றோரமாய் கிழிந்த பாயொன்றில் கண்களைமூடியபடி படுத்துக்கிடந்த தாய் சரோஜாவின் முனகல் சப்தம் கேட்டது.

கண்களைத் திருப்பி முனகும் தாயைப்பார்த்த அமுதா.. அம்மா ஏம்மா மொனகுற ஒடம்புக்கு முடியிலயா.. என்று கேட்டாள்.

ம்..ம்..ஒடம்பு ஒரேடியா அனத்துது.. காந்துது அமுதா..
சட்டெனப் படிப்பதை நிறுத்திவிட்டு எழுந்து தாய் சரோஜாவின் அருகில் வந்த அமுதா குனிந்து தாயின் கழுத்திலும் நெற்றியிலும் கைவைத்துப்பார்த்துவிட்டு..

அய்யோடீ.. நெருப்பா கொதிக்குது ஒடம்பு..என்ன இப்பிடி காந்துது.. ஜுரம் வீசி அடிக்குது..என்றாள்.

குரலில் கவலை தெரிந்தது. கையில ஜொரமாத்ரகூட இல்ல..இந்த ராத்திரி நேரத்துல மருந்துகடைக்கும் போக முடியாது..

Representational Image
Representational Image

கவலையோடும் வருத்தத்தோடும் தனக்குத்தானே சொல்லிக்கொள்ளும் மகளைப் பார்த்தாள் சரோஜா..

அமுதாகண்ணு கவலப்படாத கண்ணு.. காலேல சரியாயிடும்.. நீ போய்ப்படி கண்ணு.. நீயுந்தா ஆறுமாசமா போனு.. அதென்ன சொமார்ட்டு போனு வேணும்.. கவுருமெண்டு பரிச்ச எளுதனும்.. போனுல அதென்ன அதென்ன ஆன் லைனு ஆன்லைனு அதுல பரிச்சைக்குத் தேவையான நெறைய வெவரங்க இருக்கும்னு சொல்லி கேட்டுக்கிட்டு இருக்குற.. ஐநூறு ஆயிரம்னாகூட உருண்டுபொரண்டு எப்பிடியாச்சும் வாங்கிடலாம்.. எட்டாயிரம் பாத்தாயிரத்துக்கு எங்கிட்டு போவுறது..பொறுப்பா படிக்கிற பொண்ணு நீ... நீ கேக்குற போனகூட வாங்கிக் கொடுக்க முடியாத துப்புகெட்டவளால்ல நா இருக்குறே.. என்ற சரோஜாவின் கண்களில் ஏற்கனவே ஜுரத்தால் நெருப்பாய்ச் சுடும் உடம்பின் சூட்டால் சூடான கண்ணீர் அரும்பி நின்றது..


அம்மா.. சும்மா இரும்மா.. ஏதோ கேட்டேன்.. நாமெல்லாம் அவ்வளவு தொகைக்கெல்லாம் போன்லாம் வாங்கமுடியாதுன்னு தெரியாதா எனக்கு.. அத மறந்துடு.. நான் எப்பிடியாச்சும் படிச்சிடுவேன். நடக்கப்போற கவர்மெண்ட் எக்ஸாம நல்லா எழுதி பாஸ் பண்ணி நல்லவேலைக்குப் போயி நெறைய சம்பாரிச்சு ஒன்ன நல்லா பாத்துக்கு வேம்மா.. நீ படுற கஷ்டமெல்லாம் சீீக்கிரமே தீீந்துடும்மா என்று... மகள் பாடம் படிக்கக் கேட்ட போனைத் தன்னால் வாங்கித்தர முடியாத தவிப்பில் பேசும் தாயைச்.. சமாதானம் செய்தாள் அமுதா..


அம்மா.. டீ வெச்சுத்தரவா..பேச்சை மாற்றினாள்.


ப்ச்..ஒன்னும் வேண்டாம் ராசாத்தி.. எவ்வவுத்துல பொறந்த பாவத்துக்கு நீதான் வறுமேல என்னா பாடுபடுற.. குடிகார அப்பனாலும்..உருப்படாவட்டி அண்ணணாலும் ஒனக்கு பத்துபைசா பிரயோசனம் இல்லியே கண்ணு.. எனக்குத் தாலி கட்டினவனும் சரியில்ல வவுத்துல பொறந்த புள்ளையும் சரியில்ல.. நாம்பெத்த மவ நீ எம்மேல காட்டுற பரிவும் பாசமுந்தான் பாலவனத்து சோலயா மனசுக்கு ஆறுதலா இருக்கு கண்ணு.. நீ மட்டும் எனக்கு பொறக்கலின்னா குடிகாரப் புருஷங்கிட்ட தினந்தினம் அடிவாங்கி சாவுறதும் அடங்காத நாதாரிப்பய மவனோட மல்லுக்கட்டி வாழறதுமான வாழ்க்கைய வெறுத்து எப்பவோ அரளிவெதய அரச்சுகுடிச்சி செத்துருப்பேந் தாயி.. கண்ணீர்மல்க நெருப்பாய்ச்சுடும் கைகளால் அமுதாவின் தலையைக் கோதிவிட்டாள் சரோஜா.


தட்..தட்..தட்..

வாசல்கதவு தட்டப்படும் சப்தத்தைத் தொடர்ந்து அடியே மகாராணியும் எளவரசியும் தூங்கிட்டீங்களா?.. பத்துமணிக்கல்லாம் பொம்பளைங்களுக்கு என்னாங்கடி அப்பிடி தூக்கம்.. ஏதுடா வெளியே போன புருஷன் வருவானே.. அவுனுக்குப் பசிக்குமே சோறு போடனுமேங்கற அக்கறையோ பொறுப்போ கட்டுன பொண்டாட்டிக்கு இருக்க வேண்டாம்?..பொண்டாட்டி ஒனக்கே அந்த எண்ணம் இல்ல நீ பெத்த பொண்ணுக்கு அப்பங்காரன் இன்னும் வல்லியே அவுனுக்குப் பசிக்குமே சோறு வெக்கினுமேன்னு தோணப்போவுதா என்ன..எட்டு ஊருக்குக்கேட்பதுபோல் கத்தினான் சரோஜாவின் குடிகாரக் கணவன் அம்மாசி.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது தினமும் நடக்கும் கூத்துதான் என்பதால் சரோஜாவும் அமுதாவும் அமைதியாய் இருக்க மனைவியோ மகளோ வந்து கதவைத் திறக்க வில்லை என்ற கோபத்தில் கதவு தாளிடப்படாமல் வெறுமனே சாத்திதான் இருக்கிறது என்பது தெரியாமல் முழு உடம்பாலும் வேகமாய்க் கதவை மோத படீரென்று கதவு திறந்து.. திறந்த கொண்ட வேகத்தில் உள்ளே வந்து விழுந்தான் அம்மாசி. குப்புற அடித்து விழுந்ததால் குடித்திருந்த காரணத்தால் சட்டெனத் தலையைைத் தூக்கி எழுந்திருக்க முடியாமல் சிறிதுநேரம் அப்படியே கிடந்தவனின் வாயிலிருந்து வெளிப்பட்ட வார்த்தைகள் எந்த தணிக்கைக்கும் அடங்காதவை.


மெதுவாய் எழுந்து அமர்ந்தவனின் எதிரில் சோறும் ரசமும் கொண்டு வைக்கப்பட ஏய்..என்னாங்கடி இது..?கத்தினான்.


ஏ..கண்ணு தெரீல..சோறும் ரசமும்..


என்னாது சோறும் ரசமுமா..எவண்டி துண்ணுவாயித..கருவாட்டுக் கொளம்பு வக்கிமாட்ட..இதென்ன ரசம்.. சப்தமாய்க் கத்தியபடி ரசமிருந்த பாத்திரத்தைத் தள்ளிவிட பாத்திரம் கவிழ்ந்து ரசம் தரையில் படர்ந்து நீளவாக்கில் ஓடியது.


ஆமா..ஏங்கேக்கமாட்ட..ராவும் பகலுமா மாடா ஒழச்சி ஓடாதேஞ்சு தெனந்தெனம் சம்பாரிச்சிக் கொணாந்து கையில கொடுக்கறீல்ல ஒனக்கு கருவாட்டுக்கொழம்பு மட்டுமில்லை நெத்திலிமீனு வறுவலுமில்ல வறுத்து வெக்கினும் குடிகார நாய்க்கு அஞ்சுவிதமும் ஆக்கிப் போடனுமா.. கத்திய சரோஜாவுக்கு மூச்சு வாங்கியது.


ஏய் என்னாடி வாய் நீளுது.. உட்கார்ந்திருந்த அம்மாசி தட்டுத்தடுமாறி எழுந்து பாயில் அமர்ந்திருந்த சரோஜாவின் தலையைப்பிடித்துக் குனியவைத்து பலம் கொண்டமட்டும் முதுகில் படீர்படீரென்று அடித்தான்.


ஐயோ..ஐயோ அம்மாவ அடிக்காத..அடிக்காத..பாவம் அம்மாவுக்கே ஒடம்பு சரியில்ல..தாயை அடிக்கும் குடிகாரத் தந்தையைத் தடுத்தாள் அமுதா..


என்னாபேச்சுபேசுறா இவ..

Representational Image
Representational Image

என்னாப்பா பேசிடுச்சி அம்மா..நீ குடிச்சிட்டு வந்து தினதினம் அம்மாவ மறுபடியும் குடிக்க காசுகேக்குறதும் குடுக்காட்டி இழுத்துப்போட்டு அடிக்கிறதும்.. மனசு தாங்கலப்பா.. அம்மாவுக்கு புருஷனா எனக்கு அப்பாவா நீ இதுவர என்னப்பா செஞ்சிருக்க.. பாவம் அம்மா.. நீயும் பத்துகாசு சம்பாரிச்சு அம்மா கைல குடுக்குறது இல்ல..எனக்கு மூத்தவனா ஒருத்தம் பொறந்துருக்கானே.. அவனாலயும் பத்துகாசுக்குப் பிரயோசனம் இல்ல..குடும்பத்த எப்டிப்பா ஓட்டுறது..பட்டாசு தயாரிக்கிற பேக்ட்ரீல இடுப்பொடிய வேலசெஞ்சு கந்தகபவுடரு வாசத்த சுவாசிச்சு சுவாசிச்சு ஒடம்பு கெட்டுப்போய் சீக்காளி மாதிரி ஆயிட்ட அம்மா சம்பாரிச்சு கொண்டுவர அந்த கொஞ்ச சம்பளத்தையும் குடிக்க அடிச்சு ஒதச்சு புடிங்கிகிட்டு போறியே நீ திருந்தவே மாட்டியா.. குமாரு.. அதா எனக்கு மூத்தவனா பொறந்துருக்கானே ஒருத்தன் வயசு இருவத்ரெண்டு ஆகியும் படிப்புமில்லாம ஒழுக்கமுமில்லாம வெட்டியா ஊரசுத்திக்கிட்டு வீட்டுக்குள்ள நுழையும் போதெல்லாம் பணம் பணம்னு அம்மாவ நச்சரிச்சு சண்டபோட்டுகிட்டு வீட்டு செலவுக்குன்னு வெக்கிற பணத்தயும் எடுத்துக்கிட்டு போயிடறதுன்னு..ஏம்ப்பா இப்பிடி இருக்கீங்க ரெண்டுபேரும்.. இன்னும் எத்தன நாளைக்குதான் அம்மா ஒடா ஒழச்சு ஒண்டியா இந்த குடும்பத்தக் காப்பாத்தும்.. ரெண்டுபேரும் என்னிக்குதான் திருந்துவீங்க.. ஆம்பளைங்களா லட்சணமா குடும்பத்த காப்பாத்துவீங்க..

ஏய் நிறுத்து நிறுத்து.. பேசிக்கிட்டே போவுற..அப்பன பாத்து இப்பிடிதா பேசுவியா.. ஏய் நல்லா கேட்டுக்கடி.. ஒங்கம்மா வேலைக்கு போவ நான் அனுமதிச்சத்துக்கே அவ நெதமும் எனக்கு நூறு ரூவா கொடுக்கனும்.. நானும் எம்மவனும் ஆம்பளைங்கடி குடிப்போம்.. ஊர்சுத்துவோம்..எப்பவேணா வூட்டுக்கு வருவோம்.. பொட்டச்சிங்க நீங்க எங்குளுக்கு அடங்கித்தாண்டி போவனும்.. ஏண்டி களுத இத்தினி பேசுறயே.. நீயும் சம்பாரிக்கலாமே.. என்று ஆரம்பித்து அவன் பேசிய பேச்சுக்களைக் காதுகொண்டு கேட்கமுடியாமல் காதுகளைப் பொத்திக்கொண்டாள் அமுதா..

பெற்ற மகளைப்பார்த்து அவன் பேசிய பேச்சுக்களைக்கேட்ட சரோஜா காளியாகிப்போனாள்..அடப்பாவி..நீ நாசமா போவ.. பெத்த பொண்ணப் பாத்து இப்பிடியா பேசுவ..ஒன்ன மாரியாத்தா கொண்டுபோக.. காளியாத்தா ஒன்ன வாரிச்சுருட்டி வாயிலபோட்டுக்க..நீ லாரீல அடிபட்டுச்சாவ..நாசமா போறபாவி..அப்படியே ஒவ்வாயி இழுக்கணும்டா..வயிரெரிய சொல்லுரேண்டா பாவி ஒனக்கு நல்லசாவு வராதுடா..கத்தினாள் சரோஜா..மூச்சிரைத்தது..

ஏய்..என்னாடி சாவமா குடுக்குற என்று கத்தியபடி சோற்றுப் பானையில் நட்டுவைத்திருந்த கரண்டியை எடுத்து சரோஜாவை ஓங்கி அடிக்க அது அவள் நெற்றியில் பட்டு எலுமிச்சை அளவு அடிபட்ட இடம் புடைத்துப்போனது. வீடு ரணகளம் ஆனது.


விடிகாலை மணி நாலு.வாசல்கதவு படபடவென்று தட்டும் சப்தம்..ஏய் அமுதா கதவ தொற... கூடப் பிறந்தவனின் குரல் கேட்டுப்போய் வாசல் கதவைத் திறந்தாள் அமுதா..கலைந்த கேசமும் சிவந்த கண்களும் அழுக்கேறிய டிரஸ்ஸுமாய் புயல்போல உள்ளேநுழைந்தான் ஊர்பொறுக்கி குமார். ஏய்..அமுதா சூடா டீ போடு.. ஒரே களைப்பா இருக்கு..


அய்யோ பாவம் தொர ராத்திரி ஷிப்ட்டு வேலபாத்துட்டு களைப்பா வாராரு.. சம்பள பணத்த கையில குடுப்பாரு வாங்கிக்க அமுதா.. மூஞ்சியும் மொகரையும் பாரு. ஊரச்சுத்திக்கிட்டு ரவுடித்தனம் பண்ணிக்கிட்டு நெனச்சப்ப வீட்டுக்கு வர்ரது அதிகாரம் பண்ணுறது..தூ..தத்தேரி நாயே..இப்ப எதுக்கு வூட்டுக்கு வந்த..கையி அரிக்கிதா..பெத்தவ உயிரக்கொடுத்து சம்பாரிக்கிற அஞ்சுபத்தையும் அப்பனாட்டம் அடிச்சி புடிங்கிட்டு போவலாம்னு வந்தியா..பொறுக்கிப் பயலே.. சுடச்சுட டீ கேக்குதா ஒனக்கு..மூஞ்சில சுடுதண்ணிய வெச்சு ஊத்துவேன்..தறுதல நாயே...பாயில் அமர்ந்திருந்த சரோஜா மகனைப்பார்த்துக் கத்தினாள்.

ரொம்பப் பேசுற நீ..நா ஆம்பள.. எப்பிடி வேணாலும் இருப்பேன் எங்க வேணாலும் போவேன் வருவேன்..நீ கேக்கமுடியாது..

தூத்தேறி..ஆம்பளயாம் ஆம்பள.. பத்துகாசு சம்பாரிச்சு குடும்பத்தக் காப்பாத்த துப்பில்ல..ஆம்பளன்னு சொல்லிக்கிற..வெக்கமா இல்ல ஒனக்கு..

அம்மா..சும்மா இரும்மா..ஒனக்கே ஒடம்பு முடியல..வீணா கத்தாத.. என்று தாயைப் பார்த்துச் சொல்லிவிட்டு மீீண்டும் தன்படுக்கையில் போய்ப் படுத்துக்கொண்டாள் அமுதா.


கேட்டவுடன் டீ போட்டுக் கொண்டுவந்து தராமல் படுக்கையில்போய் படுத்துக்கொண்ட தங்கை அமுதாவை பார்த்துக் கோபத்தில் உறுமினான் குமார்.


காலை மணி எட்டு."பூபதி ஃபயர் ஒர்க்ஸ்" என்ற பெயர்பலகை மாட்டிய பட்டாசு தயாரிக்கும் தொழிற் சாலையின் அந்த மினிபேருந்து வழக்கமாய் வந்து நிற்கும் நிறுத்தத்தில் வந்து நின்றது.அந்த பேருந்துக்காகக் காத்திருந்த ஃபயர் ஒர்க்ஸ்ஸின் தொழிலாளர்கள் ஒவ்வொருவராய் பேருந்தில் ஏற கொஞ்சம் சிரமப்பட்டே பேருந்தில் ஏறினாள் சரோஜா. மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. முதல்நாள் இரவிலிருந்தே காலியாகக் கிடந்த வயிறு டொர்டொர்ரென்று சப்தம் எழுப்பியது. இரண்டுபேர் அமரும் சீட்டில் ஜன்னலோரம் அமர்ந்து சீட்டில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள்.

பட்டாசு உற்பத்தி
பட்டாசு உற்பத்தி

சரோசா.. பொம்மியக்கா அழைக்கும் குரல்.


அக்கா என்றபடியே கண்களைத் திறந்த சரோஜா பக்கத்தில் வந்து அமர்ந்திருந்த பொம்மியக்காவைப் பார்த்தாள்.


ஏஞ்சரோசா.. மேலுக்கு சொகமில்லியா.. என்னவோபோல இருக்குற..


ஆமாக்கா.. ராவுலேந்து சொரமடிக்குது..


ஏதும் வவுத்துக்குத் துண்ணியா..


இல்லக்கா.. நாக்கு கசக்குது.. எதும் துண்ணப் புடிக்கிலக்கா.. ஒயர்க்கூடையிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து வாயில் சரித்துக்கொண்டாள் சரோஜா. வெறும் வயிற்றில் தண்ணீர் டொர்டொர்ரென்று இறங்கும் சப்தம் கேட்டது.

அக்கா..

என்ன சரோசா..சொல்லு..

ஏண்டா உயிரோட இருக்கோம்னு இருக்குக்கா..

ஏ..புருஷனும் மவனும் ரோதன பண்றானுவளா..

ப்ச்..புடிக்கிலக்கா.. எம்மவ அமுதாவுக்காகத்தான்கா நா உசிரோட இருக்குறேன்.. இல்லாங்காட்டி அரளிவெதய அரச்சுக் குடிச்சிட்டு எப்பவோ செத்ருப் பேன்க்கா..

அப்பிடி சொல்லாத சரோசா ஒனக்கும் ஒருநா விடியும். ஒம்மவ நல்லாபடிச்சு ப்ளஸ்டூவல நெறைய மார்க் வாங்கி பாஸ்பண்ணிருச்சு.. இனிமே அது வேலைக்குப் போயி சம்பாரிச்சு ஒன்ன கைமேலவெச்சு தாங்கும் சரோசா..ஒங்கஷ்டம் தீந்துடும் பாரு.. காய்ச்சலால் சுடும் சரோஜாவின் கைகளைப்பிடித்து ஆறுதல் கூறினாள் பொம்மியக்கா.

ஆமாங்க்கா..எம்மவ அமுதா ப்ளஸ்டூவுல நெறையா மார்க்கு வாங்கி பாஸ் பண்ணிருச்சுதான்.. ஆனா அதுதான் எம்மாங்கஷ்டப்பட்டு படிச்சிச்சு..பாவங்க்கா அது.. ஆறுமாசமா ஸொமார்ட்டு போனு..அதா வயசு புள்ளைங்கல்லாம் கையில வெச்சுக்கிட்டுத் திரியுதுங்களே..அந்த போனு வேணும்னு கேட்டுக்கிட்டே இருக்கு..ஏதோ கவுருமெண்டு வேலைக்குப் போவ பரிச்ச எளுதப் போவுதாம்..அந்த போனுல பரிச்சைக்குத் தேவையான பாடம்லாம் போட்ருகுமாம்ல..

எனக்கும் அந்த போனு கெடச்சா நல்லா படிப்பேம்மா..நல்லா பரிச்ச எளுதி பாஸாகி வேலைக்குப் போயிடுவேம்மாகுது.. கேட்டு ஆறுமாசமாச்சு.. பத்தாயிரம் ஆவுமாம்.. நா அம்புட்டு பணத்துக்கு எங்கிட்டு போவேன். ஆனாலும் மவளுக்கு போனு வாங்கித் தரனும்னு மனசு கெடந்து அடிச்சிக்கிதுக்கா.. ஒங்கிட்ட மட்டும் ஒருவிஷயம் சொல்றேன்கா.. நம்ம புது அரசாங்கம் பதவி ஏத்தப்ப ரேஷன் கார்டுக்கு ரெண்டு ரெண்டா நாயிரம் பணம் குடுத்தாங்கள்ள.. அத பத்ரமா வெச்ருக்கேன்கா.. அதோட நம்ம ஏலச்சீட்டு நடத்துற காசியம்மா இருக்குல்ல அதுண்ட அய்யாயிரம் ரூவா சீட்டுக்கு மாசாமாசம் பணம்கட்டுறேன்.. அது முடியப்போவுது..காசியம்மா வர்ர திங்கக்கெளம என்னைய வரச்சொல்லிருக்கு. கொசுறு சேத்து அஞ்சாயிரத்து எட்டுநூறு கெடைக்கும் வந்து வாங்கிக்கனு சொல்லீருக்குக்கா..

நாலாயிரமும் அஞ்சாயிரமும் ஒம்போதாயிரம் ஆச்சுதா.. இன்னிக்கி சனிக்கெழம நமக்கு வாரசம்பளம் போடுவாங்கல்ல.. அந்த ஆயிரத்தைனூரையும் சேத்துப் போட்டு எம்மவள போனுகடைக்கு அளைச்சிகிட்டுப்போயி அது ஆசப்பட்டாமாரி அதுங்கையில போனு வாங்கிக்கொடுக்கனும்னு இருக்கேன்க்கா.. போன எம்மவ கைல கொடுக்கும்போது அதும் மொகத்துல தெரியிர சந்தோஷத்த பாக்கணுங்க்கா.. சொல்லும்போதே நா தழுதழுத்தது.. தாய்மையில் இதயம் விம்மியது சரோஜாவுக்கு.

செய்யி சரோசா என்றபடி பற்றியிருந்த அவளின் கரங்களை பாசத்தோடு அழுத்தினாள் பொம்மியக்கா.

எப்போதும் ஏழைகளுக்கு ஏழைகள்தான் ஆதரவோ.

சரோஜா வேலைக்குச் சென்றபிறகு அமுதா அடுத்ததெருவிலிருந்த தையல் கிளாஸுக்குச் சென்றுவிட குடிகார அம்மாசிக்கு தண்ணி அடிக்கக் கையில் காசில்லாமல் காசுக்கு என்ன செய்வது என்று கவலைையாய் இருந்தது. வயிறுவேறு பசித்தது. நாஷ்டாவுக்கும் வழியில்லை. ஏகத்துக்கும் எரிச்சலாய் கோபமாய் வந்தது.வேலைக்குப் போகக் கொள்ள.. புருஷங்காரனுக்கு ஆயிரம் செலவிருக்குமே இந்தா வெச்சுக்கன்னு ஒரு நூறு ரூவாயாச்சும் புருஷங்காரங் கையில குடுத்துட்டுப் போவம்னு ஒரு பொஞ்சாதிக்குத் தோணாது?.. இவல்லாம் ஒரு பொண்டாட்டி.. ச்சை..சனியம் புடிச்சவ.. வாய்விட்டுப் புலம்பிக்கொண்டே இங்குமங்கும்

கண்களை ஓடவிட்டவன் கண்களில் பட்டது கைக்கு அடக்கமாய் மெல்லிய கயிற்றால் கட்டிவைக்கப் பட்டிருந்த அட்டைப்பெட்டி. என்னவா இருக்கும் என்று மனம் குறுகுறுத்தது. ஒரு வேகத்தோடு அட்டைப்பெட்டியின் அருகே சென்று கயிற்றை அவிழ்த்து உள்ளே பார்த்தபோது அத்தனையும் அமுதாவின் ப்ளஸ்டூ புத்தகங்கள் ரெகார்டு நோட்டுகள். நிறைய ஜெராக்ஸ் பேப்பர்கள். ச்சே..வெறும் புத்தகமும் நோட்டும்.. வெறுப்போடு அட்டைப்பெட்டியைக் காலால் எட்டி உதைத்தான். சட்டென மின்னலடித்தது ஒரு யோசனை. கடத்தெருவுல இருக்குற பழைய புத்தவக்கடையில இம்மாம் புத்தவத்தையும் வெலக்கிப் போட்டா ஒரு குவார்ட்டருக்கு கடைக்காரனு பணம் தரமாட்டான்?.. பாப்பமே காசு பத்தாட்டி டாஸ்மாக் கடைவாசல்ல யார்ட்டியாவது கைநீட்டுனா கொடுக்கமாட்டாங்களா.

குடுப்பாங்க.. குடுப்பாங்க.. கை நீட்டுறது நமக்கு புதுசா என்ன என்று நினைத்தவனாய் புத்தகங்கள் அடங்கிய அந்த அட்டைப்பெட்டியைத் தூக்கித் தோளில் வைத்துக் கொண்டு இப்போதைக்கு புக்கை விற்றால் குவார்ட்டர்க்காவது காசு கிடைக்குமே என்ற சந்தோஷத்தோடு வீட்டைவிட்டு வெளியேறினான் குடிகாரன் அம்மாசி.

Representational Image
Representational Image

அம்மாசி வெளியேறிய பத்தாவது நிமிடம் தூங்கிக்கொண்டிருந்த குமார் எழுந்தான். எழுந்ததுமே மனம் முழுவதும் கவலை பற்றிக் கொண்டது..காரணம்..அவனின் ரவுடிகுரூப்பின் தலைவனாய் இருந்த சோமுவுக்கு அன்று பிறந்தநாள். பட்டாக்கத்தியால் கேக்வெட்டி விமரிசையாய்க் கொண்டாடுவது என்று தீர்மானமானதால் டாஸ்மாக்பாட்டில் மட்டன் பிரியாணி ரெக்கார்டு டான்ஸ் அனைத்துக்கும் குரூப்பில் இருக்கும் ஒவ்வொருவரும் ரூபாய் மூவாயிரம் தரவேண்டுமென தீர்மானிக்கப்பட நாளொன்றுக்கு முப்பது ரூபாய்க்கே வழியில்லாத தான் எப்படி மூவாயிரம் தருவதென தவித்தான். தரித்திரம் புடிச்ச வீட்டுல தேடிப்பாத்தா மூணுரூவாகூட தேறாது..மூவாயிரமா இருக்கும் என்று நினைத்தவனாய் ஏதோ ஒரு நப்பாசையில் வீட்டை அப்படியே புரட்டிப்போடுவதைப்போல் புரட்டிப்புரட்டித் தேடிப்பார்த்தவனுக்கு ஏமாற்றாமே மிஞ்ச தரித்திரம் புடிச்ச வீடு என்று கோபத்தோடு கத்தியபடி ரேஷன் கோதுமை கொட்டி வைத்திருந்த பிளாஸ்டிக் பக்கெட்டை பலங்கொண்டமட்டும் காலால் ஓங்கி உதைக்க பக்கெட் பக்கவாட்டில் சாய்ந்து உருண்டு உருண்டு ஓட அதிலிருந்த கோதுமை பக்பக்கென வெளியே கொஞ்சம் கொஞ்சமாக தரையில் கொட்ட சரோஜா ரேஷன்கார்டுக்குக் கொடுத்த நாலாயிரம் ரூபாயை பாலிதின் பையில் போட்டுக்கட்டி பத்திரப் படுத்தி வைத்திருந்த அந்தப் பணமிருந்த பாலிதின் பை கோதுமைக்குள்ளிருந்து வெளியே வந்துவிழுந்து குமாரின் கண்களில் பட்டது.


ஆஹா..ஆஹா என்று கத்தியபடி பணமிருந்த பாலிதின் பையை பாய்ந்து எடுத்துப் பிரித்துப் பார்த்துவிட்டு கட்டுப்படுத்த முடியாத சந்தோஷத்தோடு பேண்ட் பாக்கெட்டில் பணத்தைத் திணித்துக்கொண்டு வாசல் கதவைக்கூடச் சாத்தாமல் வெளியே ஓடினான் குமாரு.


ஊருக்குவெளியே ஒதுக்குப்புறமாய் நின்றிருந்த பூபதி ஃபயர் ஒர்க்ஸ் என்ற நீண்ட பெயர்ப் பலகையோடுகூடிய அந்த பட்டாசு ஆலைக் கட்டிடத்தின் முன் வந்து நின்ற மினிபேருந்திலிருந்து மெள்ள கீழே இறங்கினாள் சரோஜா.


பட்டாசு ஆலையில் விதவிதமாய்ப் பட்டாசுகளும் வாணங்களும் மத்தாப்புக்களும் ராக்கெட்.. ஏரோப்ளேன் என்று பலவும் தயாரிக்கப்படுவதால் ஆண்டு முழுவதும் தயாரிப்புவேலை வெகு மும்முரமாய் நடக்கும்.

வேலைசெய்யும் தொழிலாளர்களில் ஒருபிரிவினர் ஒருநாள் குறிப்பிட்ட மத்தாப்பு தயாரிக்கும் பிரிவில் வேலைசெய்தால் மறுநாள் வெடிதாயாரிக்கும் வேறு பிரிவுக்கு அனுப்பப்படுவர்.ஒரே பிரிவில் நிரந்தரமாய் வேலைசெய்ய அனுமதிக்கப்படுவதில்லை.காலை வேலைக்கு வந்தவுடன் நோட்டீஸ் போர்டில் தாங்கள் வேலை செய்யச் செல்லவேண்டிய பிரிவு எது என்று அறிவிக்கப்பட்டிருப்பதைப் பார்த்துத் தெரிந்துகொண்டு அந்தப் பிரிவுக்குச் செல்வர்.அதன்படி தனக்கான இன்றைய வேலைக்கான பிரிவு அணுகுண்டு தயாரிக்கும் பிரிவு என்று நோட்டீஸ் போர்டைப்பார்த்து அறிந்து கொண்டு சரோஜா அப்பிரிவை நோக்கி நடக்க பொம்மியக்கா பிஜிலிவெடி மற்றும் ஹண்ரட்வாலா பிரிவை நோக்கி நடந்தாள்.

மதியம் ஒருமணியை நெருங்கிக் கொண்டிருந்தது நேரம். சின்னச் சின்னதாய் கிண்ணம்போல் செய்யப்பட்டிருந்த பேப்பர்க் கப்புகளில் வெடிமருந்தை ஒரே அளவாய் நிரப்பிக் கொண்டிருந்தாள் சரோஜா. ஒருநாள் வேலையில் இத்தனை கிலோ வெடிமருந்து கப்புகளில் நிரப்பவேண்டும் என்பது அந்தவேலை ஒதுக்கப்பட்டவருக்கான கண்டிஷன்.காய்ச்சலும் பசியும் சரோஜாவை மிகவும் களைப் படையச்செய்தன.இடுப்பும் முதுகும் வலியால் வெட்டின.காலைநீட்டி மல்லாந்து படுத்தால் தேவலாம்போல் இருந்தது.வேலைநேரத்தில் படுப்பதெப்படி..


மதியசாப்பாட்டு நேரத்துக்கான மணியடிக்க முகம் கைகால் அலம்பிவந்து சுவரில் சாய்ந்து அமர்ந்து கொண்ட சரோஜா ஒயர்க்ககூடையிலிருந்து இட்லி இருந்த டிபன்பாக்ஸை வெளியே எடுத்துத்திறந்தபோது சாப்பிடப் பிடிக்காமல் உமட்டியது..டப்பாவை மூடிவைத்துவிட்டு பாட்டிலிலிருந்த தண்ணீரைக்குடித்துவிட்டு சுவரில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள்.எப்படா சாயந்திரம் அஞ்சுமணி ஆவும்னு இருக்கு. சம்பளத்த வாங்கிக்கிட்டு வூட்டுக்குப்போவனும்..நாள நாத்திக்கெளம தரிச்சு திங்கக்கெளம
வூட்டுல வெச்சுருக்குற நாலாயிரம்... காசியம்மா கொடுக்குற சீட்டுப்பணம் அஞ்சாயிரம்.. சம்பளப்பணம் ஆயிரத்தைனூறு அல்லாத்தையும் சேத்து எடுத்துக்கிட்டு அமுதாக்குட்டிய அழச்சுக்கிட்டு போனு கடைக்குப் போய் புதுபோன வாங்கி அதுங்கையில கொடுத்தா.. அமுதா நானு போனுவாங்கித்தருவேன்னு கொஞ்சங்கூட எதிர்பாத்துருக் காதுல்ல..அப்பிடியே அதிசயச்சுப்போயி..சந்தோஷத்துல அம்மான்னு சொல்லிக்கிட்டே என்னயக்கட்டிப் புடிச்சிக்காது.. கற்பனையாய் நினைக்கும்போதே மகிழ்ச்சியில் மனம் நிறைய உடல் புல்லரித்தது சரோஜாவுக்கு. கண்களில் மகள் மீதிருந்த அதீத பாசத்தில் கண்ணீர் அரும்பியது. பாவம் சரோஜா.. நாலாயிரம் பணம்.. பெற்ற பிள்ளையால் களவாடப் பட்டுவிட்டது என்பது அவளுக்குத் தெரியாதே.

மணி மூன்று. சரோஜா வேலைசெய்த அந்த அணுகுண்டு தயாரிக்கும் பிரிவில் பத்து பேருக்குமேல் தயாரிப்பில் ஈடுபட்டிருந்ததால் அணுகுண்டு வெடி அதிக அளவு தயாரிக்கப்பட்டு அம்பாரமாய்க் குவிந்திருந்தது.

டக்.. டக்கென்று தள்ளுவண்டியில் சிறிய இரும்புராடால் அடித்துச் சப்தமெழுப்பிக்கொண்டே வண்டியை இழுத்து வந்தான் வீரமுத்து. அவனுக்கென்ன அவசரமோ அம்பாரமாய் குவிந்திருந்த ஆட்டாம்பாமை கூடையால் சரசரவென்று வண்டியில் மிக வேகவேகமாய் அள்ளி அள்ளி வீசிவீசிக் கொட்டினான் சரக்சரக்கென்று தரையில் கூடையை தேய்த்துத்தேய்த்து வெடியை அள்ளியபோது அணுகுண்டு ஒன்றோடொன்று உரசி தீப்பொறி உண்டாக அடுத்தடுத்து வெடிகளின் திரிகளில் பொறி பற்றியது. அடுத்தநொடி கண்ணிமைக்கும் நேரத்தில் குபீரென்று தீ பரவ அந்தஅறையில் இருந்த அத்தனை வெடிகளும் மீதமிருந்த வெடிமருந்தும் ஒருசேரத் தீப்பற்றி டமார் டுமீரென்ற பெருஞ்சத்தத்துடன் வெடித்துச்சிதற கணநேரத்தில் சரோஜா இருந்த அறை டமாரென்று இடிந்துவீழ்ந்து தரைமட்டமாகி தீ வானத்தைதொடும் அளவு கொழுவிட்டெரிந்தது.


அடுத்த பத்தாவது நிமிடம் அந்த இடமே அல்லோலகல்லோலப்பட்டது.


அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு முடிந்து சரோஜாவின் தீயால் கருகி கரிக்கட்டையாய் மாரிப்போன உடல் கொடுக்கப்பட.. தாய் சரோஜாவின் உடலைப் பார்த்துக் கதறும் அமுதாவுக்கு ஆறுதல் யாராலும் சொல்லமுடியவில்லை.


அரசாங்கம் சரோஜாவின் சாவுக்கு இழப்பீடாய் ஒரு லட்ச ரூபாய் அறிவிக்க.. அந்தப் பணத்தில் எத்தனை நாள் டாஸ்மாக் சரக்கு வாங்கலாமென்று அம்மாசியும்.. அந்தப்பணத்தில் தன்பங்காய் குடிகார அப்பனிடம் அடித்துப்பிடித்து வாங்கி எப்படியெல்லாம் கூட்டாளி களோடு கும்மாளமடிக்கலாமென்று பொறுக்கி குமாரும் கற்பனையில் மிதக்க..


தாயின் இழப்பையும் பிரிவையும் தாங்கமுடியாமல் இனி அழக்கூட கண்ணீர் இல்லை என்ற நிலையில்.. தாயில்லா தனக்கு இனி நாதி யாருமில்லை என்பதை உணர்ந்திருந்த அமுதா அரசுத் தேர்வையும் அதில் தேர்ச்சி பெற்றால் அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையும் நைந்துபோக அடுத்தவேளை உணவிற்கு பெற்றவனையோ கூடப் பிறந்தவனையோ நம்பிப் பயனில்லை என்ற முடிவுக்கு வந்தவளாய் இதோ..கையில் டிபன்பாக்ஸும் வாட்டர் பாட்டிலும் வைக்கப்பட்டிருக்கும் ஒயர்க் கூடையோடு "சாரதி ஃபயர் ஒர்க்ஸ்" என்ற பெயர்ப்பலகை தாங்கிய மினிபஸ் வந்து நிற்கக்கூடிய நிறுத்தம் நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.சிவகாசியில் பட்டாசுத்தாயாரிப்புத் தொழிற் சாலைகளுக்கா பஞ்சம்.. பூபதி இல்லாவிட்டால் சாரதி..


சரோஜா.. அமுதா போல் உலகத்தில் வண்ணமோ வெளிச்சமோ இல்லாத ஒளிரா மத்தாப்பூப்போன்ற பெண்கள் எத்தனை பேரோ?..


காலம்தான் மருந்தாகி அமுதாவின்
மனதைத் தேற்றி அவள் தன் கனவுகளை நினைவாக்கி வாழ்க்கையில் வெற்றிபெறச் செய்யவேண்டும். காலம் செய்யுமோ அதனை?..

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.