Published:Updated:

சமயபுரத்தாளே சாட்சி! |சிறுகதை | My Vikatan

சமயபுரம் மாரியம்மன்

பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறவேண்டி இந்தக் கண்ணபுரத்தாளை.. சமயபுரத்தாளை எண்ணி பட்டினி இருந்து விரதம் மேற்கொள்வதுண்டு. இது இயற்கை.

சமயபுரத்தாளே சாட்சி! |சிறுகதை | My Vikatan

பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறவேண்டி இந்தக் கண்ணபுரத்தாளை.. சமயபுரத்தாளை எண்ணி பட்டினி இருந்து விரதம் மேற்கொள்வதுண்டு. இது இயற்கை.

Published:Updated:
சமயபுரம் மாரியம்மன்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

அன்று ஆவணி ஞாயிற்றுக் கிழமை.

கோயிலில் பக்தர்களின் கூட்டநெரிசல் கட்டுக்கடங்காமல் திமிறிக் கொண்டிருந்தது.

ஆயிரம் கண்கள் கொண்டு அண்ட சராசரத்தையும் காக்கும் மகாசக்தி சமயபுரம் மாரியம்மாவின் அருட் பார்வையில் நனைவதே பெரும் பாக்யமென்று பக்தர்கள் முண்டியடித்துக்கொண்டு அவளைத் தரிசித்துக் கொண்டிருந்தனர். வாழ்க்கையில் ஒருமுறையாவது ஆத்தா சமயபுரத்தாளை தரிசித்துவிட்டால் போதும் தரிசித்தவரின் ஏழுவமிசத்தாரையும் எந்தத் தீங்கும் அணுகாது என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஐந்துதலை நாகம் படமெடுத்துக் குடைபிடிக்க நாகக்குடையின் கீழ் நெற்றியில் பட்டையாய் விபூதியும் அதன் நடுவே குங்குமமும் தரித்து காதில் தோடும் மூக்கில் மூக்குத்தியும் பளபளத்துப் பிரகாசிக்க ஒரு காலை மடித்து மற்றொருகாலைத் தொங்கவிட்டு கண்களில் கருணை வெள்ளம் வழியவழிய ஆஜானுபாகுவாய் அம்சமாய் அமர்ந்திருக்கிறாள் சமயபுரத்தாள். அவளின் காலடியில் மூன்று அரக்கர்களின் தலைகள் பொம்மைவடிவில். அவை மனிதர்களின் மனத்திலிருந்து அறுத்தெறியப்படவேண்டிய ஆணவம் கன்மம் மாயை எனும் மும்மதங்களென உணர்த்தப் படுவதாகச் சொல்லப்படுகிறது.

சமயபுரம் மாரியம்மன்
சமயபுரம் மாரியம்மன்

நந்தகோபரும் யசோதையும் பெற்றெடுத்த பெண்குழந்தை கண்ணனுக்குப் பதிலாக கம்சனின் சிறையில் வசுதேவருக்கும் தேவகிக்கும் பிறந்த எட்டாவது குழந்தையென வைக்கப்பட கம்சன் அப்பெண் குழந்தையைக் கொல்ல முற்பட அக்குழந்தை அவனின் கரங்களிலிருந்து நழுவி மேலே சென்று உன்னைக் கொல்ல கிருஷ்ணன் அவதரித்துவிட்டான் எனச்சொல்லி மறைந்து சமயபுரம் வந்து திருக்கோயில் கொண்டதாகவும் அவளே இவள் என்றும் சொல்வதுண்டு. இது காலம்காலமாய் சொல்லப்படும் கர்ணபரம்பரைக் கதை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறவேண்டி இந்தக் கண்ணபுரத்தாளை.. சமயபுரத்தாளை எண்ணி பட்டினி இருந்து விரதம் மேற்கொள்வதுண்டு. இது இயற்கை.

ஆனால் கருணையே வடிவான இந்தத்தாயோ தன்னால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் நலம்பெறவேண்டி வருடத்தில் இருபத்தேழு நாட்கள் பட்டினி கிடந்து விரதம் மேற் கொள்வதை என்னவென்று சொல்வது."பச்சைப்பட்டினி"என்ற பெயரில் பக்தர்களின் நலனுக்காகவும் விலங்குகள் பறவைகள் ஊர்வன என அனைத்து ஜீவன்களுக்காகவும் விரதமிருக்கும் தாய் சமயபுரத்தாளுக்கு மாசிமாதம் தொடங்கி பங்குனி வரை ஓர் இருபத்தேழு நாட்களுக்கு காலை ஒருவேளை மட்டும் எளிமையான நைவேத்தியமும் இரவில் பாலும் பழங்களும் மட்டுமே படைக்கப் படுகிறது. உலகத்துக்கே தாயான இவளின் தாயன்புக்கு ஈடேது.

திருமணம் தாலிபாக்யம் பிள்ளைப்பேறு பிணிநீங்க பகைமை அகல ஆயுள் அறிவு ஆரோக்யம் ஐஸ்வர்யம் என்று தங்களுக்குத் தேவையானதைக் கேட்டு பக்தியோடு தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு வேண்டியதை வேண்டியபடி தருபவளல்லவா சமயபுரத்தாள்.

யாருக்கு எதை எப்போது எப்படித் தரவேண்டுமென்பதை அறிந்தவளல்லவா அவள்.

அனைத்தையும் அறிந்த அவளுக்கு.. அதோ.. அதோ.. பதைபதைக்கும் வெயிலில் காலில் செருப்பின்றி தோளில் நான்கு வயதுக் குழந்தையைச் சுமந்தபடி தண்ணீர்கூட அருந்தாமல் விரதம் மேற்கொண்டு ஏழு கிலோமீட்டர் தொலைவிலிருந்து கால் நடையாகவே நெஞ்சில் பக்தியும் கண்களில் கண்ணீருமாய் நடக்கமுடியாமல் நடந்தபடி தன்னைநாடி வரும் ஏழை அஞ்சம்மாவைத் தெரியாதா என்ன?..

 சமயபுரம் மாரியம்மன்
சமயபுரம் மாரியம்மன்

காலைமணி ஒன்பதுதான் என்றாலும் வெயில் ரொம்பவும் கடுமையாகத் தான் இருந்தது. கதிரவனுக்கு என்ன கோபமோ வெப்பத்தை வாரியிறைத்து அனலைப் பரப்பிக் கொண்டிருந்தான். காலை ஏழுமணிக்கு வீட்டிலிருந்து கிளம்பிய அஞ்சம்மா இரண்டுமணி நேரத்தில் வெறும் ஐந்து கிலோமீட்டர் தொலைவையே கடந்திருந்தாள்.

நடுநடுவே தோளில் கிடந்த குழந்தை பசியாலோ வெயிலின் தாக்கத்தாலோ சிணுங்குவதும் அழுவதுமாக இருக்க மரநிழலில் ஒதுங்குவதும் குழந்தைக்குப் பால்.. கஞ்சி ஏதாவது கொடுத்து பசியாற்றுவதாயும் இருந்ததால் நேரம் சென்றுகொண்டே இருந்தது. அடிமடியில் புடவைத் தலைப்பில் காலையில் தெரிந்தவர்கள் ஐந்துபேர் வீட்டில் மடிப்பிச்சையாய் வாங்கிய அரிசி வேறு கனத்தது. கடும் வெயிலாலும் வெறும் வயிராயும் இருந்ததால் ஏற்பட்ட பசியாலும் அஞ்சம்மாவுக்கு மிகவும் களைப்பாயும் தாகமாயும் இருந்தது. தார்ரோட்டின் சூடுவேறு கால்களைப் பதம் பார்க்க கால்களில் வலியும் எரிச்சலும் தாங்கமுடியாத வேதனையைத்தர மேற்கொண்டு நடக்கமுடியுமா என்று தோன்ற வழியிலிருந்த புளியமர நிழலில் அமர்ந்து குழந்தையை மடியில் படுக்க வைத்துக்கொண்டாள் அஞ்சம்மா.

மடியில் கிடக்கும் குழந்தையைப் பார்த்த அஞ்சம்மாவின் கண்களிலிருந்து சரசரவெனக் கண்ணீர் கன்னங்களில் இறங்க நெஞ்சிலிருந்து கேவல் வெடித்து வெளியேவந்தது.

ஆத்தா.. மகமாயீ..

சமயபுரத்தாளே..

இன்னும் எத்தினிநாளைக்கும்மா இந்த வேதன.. எப்பம்மா கண்ணுதொறந்து பாப்ப.. நானும் ஒன்ன வேண்டாத நாளில்ல.. கெஞ்சாத நேரமில்ல..

ஆத்தா.. கல்லுமனசுக்காரியா நீ..

இல்லாட்டி எவ்விஷயத்துலதா கல்லா.. காதுகேக்காதவளா ஆயிட்டியா.. இல்ல.. இல்ல.. ஒன்ன சொல்லக் கூடாது.. நாஞ்செஞ்ச பாவம்.. இப்பிடியோரு புள்ள எனக்கு..

நா ஏழதான்.. ஆனாலும் ஏழைக்கு கொழந்த வேணும்கிற ஆச இருக்கக்கூடாதா.. தாயே மாரியாத்தா பிள்ளைவரம் குடும்மான்னு ஒங்கிட்டதானே மடிப்பிச்ச ஏந்துனேன்.. கல்யாணமாகி ஆறு வருஷங்கழிச்சிதானே நீ மனமிரங்கின. குடுத்த.. ஒரு ஆம்புளப் புள்ளைய குடுத்த..ஆனா.. இப்பிடியோரு கொறையோடு குடுத்துட்டியேம்மா..

காது கேக்காத.. கண்பார்வ இல்லாத புள்ளையா குடுத்துட்டியேம்மா.. பெத்தபுள்ளையோட கொறைய பாத்துட்டு என்னால வைத்தியமும் பண்ணமுடியாது வச்சும் காப்பாத்த முடியாதுன்னு என்னையும் எம்புள்ளையையும் கட்டினவ அம்போன்னு வுட்டுட்டுல்ல ஓடிட்டான்.

இந்தப்புள்ளையத் தூக்கிக்கிட்டு ஏறாத கவுருமெண்டு ஆஸ்பத்திரி இல்ல.. ஒங்கிட்ட சொல்லிச்சொல்லி அழுவாத நாளில்ல.. டாக்டருங்க என்னென்னமோ டெஸ்டுல்லா செஞ்சாங்க..நெறைய டாக்டருங்க

ஒன்னும் பண்ணமுடியாது.. இது பிறவி கொறபாடுன்னு சொல்லிட்டாங்க..ரெண்டு டாக்டருதா.. மொயற்சி செஞ்சுனா பாக்கலாம்..ஆனா ரெண்டு லெச்சம் செலவாவும்.. செலவுல அஞ்சுல ஒரு பங்கு பணம் நீ கட்டனும்..பாக்கிய கவுருமெண்டு ஏத்துக்கும்கிறாங்க..

நா நாப்பதாயிரம் கட்டுனும்னுல்ல சொல்லிட்டாங்க.. நெதம் நாப்பது ரூவா வருமானங்கூட இல்லாத நா நாப்பதாயிரம் எப்பிடிம்மா கட்டுவே.. அம்மாஞ்செலவு செஞ்சாலும் கொறைபாடு நீங்கிடுங்கறது என்ன நிச்சயம்..நா என்னம்மா செய்யுவே..இந்த ஏழைக்கு ஒன்னவிட்டா வேறு கதி ஏதும்மா?..ஒன்னு.. நீ குடுத்த இந்த புள்ளையோட கொறபாட்ட நீக்கி காதுகேக்கவெச்சு கண்ணுதெரிய வையி..இல்லாட்டி எங்க ரெண்டுபேரையும் ஒங்கிட்டையே அழச்சுக்கோ..

இனிமேலும் அழுதழுது என்னால வாழமுடியாதும்மா.. விம்மியழுதாள் அஞ்சம்மா. அழும் அஞ்சம்மாவுக்கு சமயபுரத்தாள் என்னசெய்யக் காத்திருக்கிறாளோ.. அதை அவள் மட்டுமே அறிவாள்.

குழந்தையைத்தூக்கித் தோளில் வைத்தவாறு மெள்ள எழுந்து கண்ணபுரத்தாள் கோயிலை நோக்கி நடக்கத் தொடங்கினாள் அஞ்சம்மா.

 சமயபுரம் மாரியம்மன்
சமயபுரம் மாரியம்மன்

தேசிய நெடுஞ்சாலையில் வழுக்கிக்கொண்டு ஓடிக் கொண்டிருந்தது அந்த BMW கார்.

இந்தியாவில் விரல்விட்டு எண்ணக்கூடிய நரம்பியல் நிபுணர்களில் ஒருவராகப் புகழ்பெற்ற டாக்டர் வராகமூர்த்தி முன்சீட்டில் டிரைவருக்கு அருகாமையில் அமர்ந்திருக்க..பின் சீட்டில் அவரின் மனைவி புனிதவதியும் ஒரே மகள் அனிதாவும் மகள் வயிற்றுப் பேரன்கள் பத்துவயது முகுந்த்தும் மூன்று வயது வைகுந்த்தும் அமர்ந்திருக்க கார் டாக்டரின் குடும்பத்தினர் கலந்து கொள்ளவேண்டிய சுபநிகழ்வு ஒன்றுக்காக நிகழ்ச்சியிடம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

அப்பா.. மகள் அனிதா அழைக்கவும்.. அனி.. என்னம்மா என்றபடி பின்னால் திரும்பி மகளைப்பார்த்தார் டாக்டர் வராகமூர்த்தி.

முகுந்த்துக்கு வயிறு கடமுடாங்கு தாம்ப்பா.. பாத் டூ போகணுமாம்.

ஓ.. அதுனாலென்ன..டிரைவர் அதோ..அங்க தெரியுதே ஒரு ஸ்னாக்ஸ் கடையும் டீக்கடையும்..அதுக்குப்பக்கத்துல ஒரு கட்டணக் கழிப்பிடம் இருக்குல்ல.. அங்க நிறுத்துங்க..

கார் நிறுத்தப்பட்டது. டீக்கடை வாசலில் ஆண்களும் பெண்களுமாய் ஐந்தாறு பேர் நின்றிருந்தனர்.

டாக்டரின் மனைவியைத்தவிற மற்றவர்கள் காரிலிருந்து இறங்க..

டிரைவர்.. முகுந்துக்குத் துணையாய் கழிப்பிடம் நோக்கி நடக்க.. டாக்டரும் மகள் அனிதாவும் அவள் கைவிரலைப் பற்றியபடி மூன்று வயது வைகுந்தும் காரின் பக்கத்தில் நின்றிருந்தனர். புடவையைச் சரிசெய்துகொண்டாள் அனிதா.

அந்த நிமிடநேரத்தில் தாயின் விரலைப்பற்றியிருந்த மூன்று வயது குழந்தை வைகுந்த் விரலிலிருந்து விடுபட.. கண்ணிமைக்கும் நேரத்தில்.. சரசரவென இங்குமங்கும் வாகனங்கள் பறந்துகொண்டிருந்த அந்த தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே ஓடத்தொடங்கியது. விபரீதம் அறியாத மூன்றே வயதுப் பிள்ளை. குழந்தை பிடியிலிருந்து நழுவி சாலையின் குறுக்கே ஓடுவதை உணர்ந்த டாக்டர் வராகமூர்த்தியும் மகள் அனிதாவும் அடுத்தடுத்து பறக்கும் வாகனங்களின் குறுக்கீடால் ஓடிச்சென்று குழந்தையை பிடிக்க முடியாமல் கத்திக் கதறினார்கள். சப்தம்போட்டுக் கத்தினார்கள். அசுரவேகத்தில் கண்மூடித்தனமாய் வந்து கொண்டிருந்தது வேனொன்று. சாலையின் குறுக்காய் குழந்தையொன்று ஓடிவருவதைப் பார்த்த வேன் டிரைவர் சட்டென ப்ரேக் போட முயற்சிக்க பிரேக் சரியாக வேலை செய்யாமல் போக குழந்தையை நோக்கி தாறுமாறாய் ஓடிவந்தது வேன். குழந்தைக்கும் வேனுக்கும் சிலஅடிகளே இடைவெளியிருக்க விபரீதம் நடந்தேவிடும் என்றுணர்ந்த டாக்டரும் மகள் அனிதாவும் அடிவயிற்றிலிருந்து பீதியோடு கத்த..

அடுத்தநொடி நடந்தது அந்த அற்புதம். டீக்கடை வாசலில் நிற்றுகொண்டிருந்த பெண்களில் ஒருத்தி சாலையைக் கிராஸ்செய்ய காத்திருந்தாளோ என்னவோ கண்ணிமைக்கும் நேரத்துக்குள் தனக்கு என்ன நேர்ந்தாலும் சரி குழந்தையைக் காப்பாற்றியே தீருவது என்று நினைத்திருப்பாளோ என்னவோ சடாரென சாலைக்கு ஓடிவந்து லபக்கென குழந்தையை அள்ளித் தன்னோடு கட்டிக்கொண்டு சாலையோரம் நோக்கி உருண்டாள்.அ டுத்தநொடி ப்ரேக் பிடிக்காத வேன் தலைகுப்புறக் கவிழ்ந்தது.

குழந்தையைக் காப்பாற்றிய பெண்ணையும் குழந்தையையும் சுற்றிக்கூட்டம் கூடிவிட்டது. முப்பது வயது மதிக்கத்தக்க அந்தப் பெண்ணின் காலிலேயே விழுந்துவிட்டாள் அனிதா. தானொரு புகழ்பெற்ற மருத்துவர் பெரும் பணக்காரர் என்பதையெல்லாம் மறந்து கைகூப்பி அழுதபடி அந்தபெண்ணுக்கு நாதழுதழுக்க நன்றிசொன்னார் வராகமூர்த்தி.

அம்மா.. என்தாயே.. எம்பேரன காப்பாத்தின தெய்வம் நீ..எங்க குலதெய்வம் சமயபுரத்தாளேதான்-

எல்லோரும் காரில் ஏறியாகிவிட்டது. பீதியிலிருந்து யாரும் இன்னும் வெளிவரவில்லையென்பது காருக்குள் நிலவிய கனத்த மௌனமே சாட்சியாகிப்போனது.

டாக்டர்தான் மௌனத்தைக் கலைத்தார். நாமெல்லாம் இப்ப எந்த விழாவுக்கும் போகவேண்டாம்.. நேரா சமயபுரம் போய் நம்ம குலதெய்வம் கால்ல விழுவோம். அவதான் நம்ம பேரன காப்பாத்திக் குடுத்தவ.. அந்தபொண்ணு மட்டும் அங்க இல்லேன்னா.. நெனச்சுப் பாக்கவே நெஞ்சுகலங்குது நினைத்தவளாய் கோயிலின் வாசலைக்கூடத் தாண்ட முடியாமல் ஓரமாய் நின்று விட்டாள் அஞ்சம்மா.

கோயிலுக்குக் கொஞ்சதூரத்தில் காரை நிறுத்திவிட்டு நடந்தே கோயிலை அடைந்தார்கள் வராகமூர்த்திக் குடும்பத்தினர். வாசலுக்கே வந்து அவர்களை உள்ளே அழைத்துச்செல்ல அலுவலக ஊழியர் காத்திருக்க அவரோடு உள்ளேசெல்ல கோவில் படியருகே சென்ற வராகமூர்த்தி அப்படியே திகைத்து நின்றுவிட்டார். தோளில் குழந்தையொன்றை ஏந்தியபடி உள்ளே செல்லமுடியாமல் ஒரு ஓரமாய் வருந்தும் முகத்தோடு நிற்கும் அஞ்சம்மாவைப் பார்த்து அசந்து நின்றுவிட்டார். இந்தப் பொண்ணுதானே நம்ம பேரன் வைகுந்த காப்பாத்தினவ. இப்ப இங்க தோள்ல கொழந்தையோடு நிக்கறா.. கண்ணை கசக்கிவிட்டுப் பார்த்தார். எந்த மாற்றமும் இல்லை. இந்தப் பொண்ணு அந்தப் பொண்ணேதான். ஒருவேள காரகீரபுடிச்சி நமக்கு முன்னால இங்க வந்திருப்பாளோ.. மனம் ஏனோ அதை ஏற்க மறுத்தது.. பரபரத்தது.

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில்
சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில்

கோயில் அலுவலக ஊழியரிடம் அஞ்சம்மாவைச் சுட்டிக்காட்டி ஏதோ சொல்லிவிட்டு குடும்பத்தோடு விஐபி செல்லும் வழியில் உள்ளே சென்று கண்ணபுரத்தாளின் அருகே சென்றார்.

அடுத்த ஐந்தாவது நிமிடம் அஞ்சம்மா தோளில் குழந்தையோடு மாரியம்மன் அருகில் அலுவலக ஊழியரால் கொண்டுவந்து நிறுத்தப்பட்டாள். அவளால் எதையும் நம்ப முடியவில்லை. இதென்ன இதென்ன மாயம். .இப்பிடிக்கூட நடக்குமா.. மாயமா மந்திரமா இதென்ன அதிசயம்.. இதென்ன அற்புதம்..அம்மா..அம்மா..நானா ஒன்னோட அருகுல.. இந்த ஏழைக்கு இப்பிடியொரு அருளா ஒன்னால.. அங்கு நிற்கும் யாரையும் அவள் நிமிர்ந்தும் பார்க்கவில்லை. கிடைத்ததற்கரிய பாக்யம்.. வாய்ப்பு..

அதைத்தவற விடக்கூடாதென நினைத்தாளோ என்னவோ.. தோளிலிருந்த குழந்தையை அம்பாளின் முன் கிடத்தினாள்.

அம்மா..ஆத்தா..இதோ..இதோ..நீ குடுத்த புள்ள..பாரு நல்லாபாரு தாயீ..

ஒங்கிட்ட நா மடிப்பிச்ச கேட்டுக் கேட்டு நீ குடுத்த புள்ள..நா பிச்சகேட்டேன்னு புள்ளைய கொடுத்த நீ..நீ குடுத்த புள்ளைக்கு பார்வையையும் காதுகேக்கும் திறனையும் ஏம்மா குடுக்காம போன..நிமிஷமும் ஒன்னநான் மறந்திருப்பேனா..தினம் தினம் ஒன்ன கெஞ்சுறேன்.. அழுவுறேன்..நீயே கதின்னு ஒன்னையே நம்பி கெடக்குறேன். ஏம்மா மனசு எரங்க மாட்டேங்குற..நீ குடுத்த எம் புள்ளைக்கு இனிமே காது கேக்கவேகேக்காது..பார்வ கெடைக்கவே கெடைக்காதுன்னா.. இனிமேலும் இந்த ஒலகத்துல எங்கள வெக்காதம்மா..

எங்க ரெண்டுபேரு உசிரையும் எடுத்துக்கோம்மா..அழுது கதறிக் கொண்டே தரையில் விழ்ந்து வணங்கியவளை..அம்மா என்று கனிவோடு அழைத்தார் டாக்டர் வராகமூர்த்தி. எழுந்து நின்று அவரைப் பார்த்தாள் அஞ்சம்மா..

அம்மா.. நீதானேம்மா இதோ நிற்கிறானே எம்பேரன் இவன அரைமணிநேரம் முன்பு சாலைவிபத்துல மாட்டாம இவன் உயிர காப்பாத்தின.. ஒன்ன இந்தத் தாய் கைவிடமாட்டாம்மா என்றார்.

அதிர்ந்து போனாள் அஞ்சம்மா. என்னையா சொல்றீங்க.. நா ஒங்க பேரப்புள்ளைய விபத்துலேந்து காப்பாத்துனேனா. இதுக்கு முன்னாடி ஒங்களையோ இந்த புள்ளையையோ நாம் பாத்ததே இல்லையேய்யா.. வூட்டுலேந்து காலேல கெளம்பி கால்நடையா நடந்து வந்து ஒரு மணிநேரம் முன்பே இங்க வந்துட்டேன்யா. அரமணி முன்னாடி எப்டீய்யா விபத்துநடந்த இடத்துல நான் இருந்திருக்க முடியும்?

அதிர்ந்து போனது டாக்டர் குடும்பம்.

அப்ப..அப்ப..வைகுந்த காப்பாத்தினது யாரு? அந்தப் பொண்ணு அச்சுஅசலா இதோ நிக்கறாளே இவளே மாதிரிதானே இருந்தா..குரலும் கூட இந்த பொண்ணோட குரல் போலவேதானே இருந்துது..குழம்பித் தவித்தது டாக்டர் குடும்பம்.

இவர்களின் உரையாடலைக் கேட்டபடியிருந்த அர்ச்சகருக்கு பொறிதட்டியது. டாக்டர் சார்..எல்லாம் இதோ ஒக்காந்ருக்காளே இவளோட திருவிளையாடல்தா..எதையும் இவ காரணமில்லாம நடத்தமாட்டா..நீங்க ஒரு மருத்துவர்.

இதோ தன்னோட குழந்தையோட குறைகள போக்கும்மான்னு ஆத்தாக்கிட்ட நின்னு அழும் இவளுக்கு ஒங்கமூலம் உதவி கிடைக்கச் செய்யனும்னு அம்மா மகமாயி நெனைக்கிறா போலருக்கு..இந்த பொண்ணு ரூபத்துல ஒங்க பேரன காப்பாத்த வந்தது சாட்சாத் மாரியாத்தாதான்னு தோன்றது. விபத்துங்கர ஒரு ஏற்பாட்ட கண்ணாத்தாவே உண்டாக்கி இந்தபொண்ணு ரூபத்துல காப்பாத்துறா மாரிவந்து ஒங்க ரெண்டுபேரையும் சந்திக்க வெச்சு..இந்தப்பொண்ணுக்கு ஒதவனும்னு ஒங்க மனசுல ஒரு எண்ணத்த தோணவெக்கினும்னு இந்த சமயபுரத்தா நெனைக்-- கிறாளோ என்னவோ..யார் அறிவார் அவமனச..என்று அர்ச்சகர் நீண்ட உரைநிகழ்த்த ஆடிப்போனார் டாக்டர் வராகமூர்த்தி.உடல் புல்லரித்தது..

 சமயபுரம் மாரியம்மன்
சமயபுரம் மாரியம்மன்

என்ன தோன்றியதோ அம்மா தாயே என் குலசாமியே என்றபடி அம்மனுக்கு முன் தரையில் கிடத்தப் பட்டிருந்த அஞ்சம்மாவின் குழந்தையைக் குந்தி அமர்ந்து தொட்டுப்பார்த்தார்.காதுகளை மேலும் கீழும் இழுத்துப்பார்த்தும் கண்இமைகளை பிரித்துப் பார்த்தும் செய்தவர்..அஞ்சம்மாவைப்பார்த்து அம்மா..ஒங்க குழந்தைக்கு சிகிச்சை நான் கொடுக்கறேன்.என்னால சாத்தியாமில்லாம போனா ஒங்கமகன வெளிநாட்டுக்கு கொண்டுபோயி சிகிச்ச அளித்து காதுகேக்கவெச்சு பார்வகிடைக்க வைக்கிற பொறுப்ப நா ஏத்துக்குறேன்னு..இதோ ஒக்காந்திருக்காளே ஈரேழு ஒலகத்தையும் காத்து ரக்ஷிக்கிற தாய் இந்த சமயபுரத்தா இவள சாட்சியாவச்சு ஒங்களுக்கு உறுதியளிக்கிறேன்.இவளன்றி ஓர்அணுவும் அசையாது.இவ என்ன செய்யனும்னு நெனைக்கிறாளோ அது நடந்தேதீரும்.இனி கவலையே உங்களுக்கு வேண்டாம்.ஒங்க மகனோட குறைபாடுகள.. இல்லாம செய்யனும்னு இவமுடிவெடுத்துட்டா..

அது நடந்தே தீரும்மா என்றார் ஆவேசம் வந்தவர்போல்.

டாண் டாண் என்று அருளாக கூறுவதுபோல் அம்மாவின்

கோயில் மணி ஓங்கி ஒலித்தது. யார்யாருக்கு எதை எப்படி எப்போது தரவேண்டும் என்பது அனைத்தும் அறிந்த அந்த அகிலாண்ட நாயகிக்குத் தெரியாதா என்ன?..

ஆத்தா.. என்று தன்னை மறந்து கத்தியபடி கண்களிலிருந்து கண்ணீர் பெருகி கன்னத்தில் இறங்க அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகியைக் கைகூப்பி வணங்கினாள் அஞ்சம்மா.

**செல்லாத்தா.. செல்ல மாரியாத்தா..

எங்கள் சிந்தையில் வந்து..

அரை வினாடி நில்லாத்தா..

கண்ணாத்தா..ஒன்ன காணாட்டா..

இந்த ஜென்மமெடுத்து..

என்ன பயனென்று..

சொல்லடி நீ ஆத்தா**

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.