Published:Updated:

வீட்டுக்குள் நிலவு! - சிறார் குறுங்கதை

மணிக்கு அவ்வளவு வசதிகள் இருந்தும், தனிமை ரொம்பவும் பொல்லாததாக இருந்தது. எப்பொழுதுதான் பள்ளி திறக்குமோ? என்ற ஏக்கம் மேலோங்கியது. ராஜாவைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

மணியும்,ராஜாவும் ஒரே ஊரில் பிறந்தவர்கள்.ஒரே வயதினர்.ஒரே வகுப்பிலும் படிப்பவர்கள்.ஆனாலும் கொரோனாவுக்கு முன்பு வரை அவர்கள் சந்தித்துக் கொண்டதில்லை!

மணியின் தந்தை பெரிய கான்ட்ராக்டர்.வீடு,கார் என்று எல்லா வசதிகளும் படைத்தவர். ஊரில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய பணக்காரர்களில் ஒருவர். எனவே தன் மகன் மணியை,சிறு வயது முதலே ஊட்டி கான்வெண்டில் சேர்த்து விட்டிருந்தார்.

ஊட்டியிலும் அவருக்கு ஒரு வீடு இருந்தது. ஓய்வு கிடைக்கும் போதெல்லாம், தன் மனைவியுடன் அங்கு சென்று தங்கி,மகன் மணியையும் அடிக்கடி சென்று பார்த்து வருவதை வாடிக்கையாக வைத்திருந்தார்.

கொரோனா வந்ததும் பள்ளிகள் மூடப்பட, மணி வீட்டிற்கு வந்து தங்க நேர்ந்தது.

‘லாக் டௌன்’ காலத்தில் வெளியில் செல்ல வேறு முடியாமல் போனதும், பையன் தொடர்ந்து ஊட்டியில் படிக்க வேண்டாமென்று மணியின் தாய் முடிவு செய்து விட்டார். கணவனிடம் அதனைத் தெரிவிக்க, அவரோ சற்று யோசித்தார். அவர் யோசிப்பதைக் கண்டதும் ‘எங்கே தன் முடிவுக்கு ஒத்துக் கொள்ள மாட்டாரோ’ என்று யோசித்த அவள், கோயம்புத்தூர் சைடில் கொரோனா அதிகம் இருப்பதையும், அதோடு மட்டுமில்லாமல் ஊட்டி சுற்றுலாத் தளம் ஆகையால், எப்போது பார்த்தாலும் எங்கெங்கெல்லாம் இருந்தோ மக்கள் வந்து போவதையும் காரணம் காட்டி, கான்வெண்டில் இருந்து மணியின் சர்டிபிகேட்களை வாங்கச் செய்ததுடன், உள்ளூர் பள்ளியிலேயே சேர்த்து விடவும் ஏற்பாடு செய்து விட்டாள்.

Representational Image
Representational Image

பள்ளியில் புதிதாகச் சேர்ந்த அன்றுதான் மணியும் ராஜாவும் சந்தித்தார்கள். தலைமை ஆசிரியர் அறையில் நின்றபோது, திடீரென ராஜாவுக்கு தொண்டைக் கமறல் ஏற்பட, மணி தான் கொண்டு வந்திருந்த கைக்கடக்கமான ப்ளாஸ்கில் இருந்து வெது வெதுப்பான வெந்நீரை ஊற்றிக் கொடுக்க, மணியின் அந்தச் செய்கையும், அவன் கையில் இருந்த அழகான ப்ளாஸ்கும் ராஜாவை வெகுவாகக் கவர்ந்து விட்டன.

வெளியில் வந்ததும் இருவரும் பரஸ்பரம் விபரங்கள் கூறி நண்பர்களாகி விட்டார்கள். மணி வந்திருந்த காரைப்பார்த்து ராஜா வியந்து நிற்க, அதனைப் பார்த்த மணி, காரின் டிரைவரைக் கூப்பிட்டு காரை எடுக்கச் சொன்னதுடன், ராஜாவையும் ஏற்றிக் கொண்டு, பள்ளி மைதானத்தில் இரண்டு ரவுண்ட் அடிக்கச் சொன்னான். ஏற்கெனவே ப்ளாஸ்க் நீர் மூலமாகவே உருகிப் போயிருந்த ராஜாவுக்கு, மணியின் அந்தச் செயல் மேலும் வியப்பூட்ட,அவன் மணி மீது அளவு கடந்த பாசம் வைக்க வழி வகுத்தது. இருவரும் அன்று பிரிந்து விட்டாலும், மீண்டும் பள்ளி திறக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.

பள்ளியின் மேற்குப் புறத்தில்,வசதி படைத்த பணக்காரர்களின் மாடி வீடுகள் இருக்க,கிழக்குப் பகுதியில் குடிசை வீடுகளே அதிகம்.மணியின் வீடு மேற்கில், நடுநாயகமாக இருந்தது.இரண்டு மாடிகள் கொண்ட வீட்டில், இரண்டு கார்கள் நிறுத்துமளவுக்கு நீண்ட வாசல். பின்புறத்தில் வாழைத் தோட்டம். நீண்டிருக்கும் மதில் சுவரில் ஆங்காங்கே வண்ண விளக்குகள். அந்த மதில் சுவரையும், வீட்டையும் தழுவியிருக்கும் உயர்ந்த வகை பெயிண்ட், பகட்டைப் பறை சாற்றுவதாக அமைந்திருந்தது.

ஊரின் ஓரத்தில்,வயல்களுக்கு அருகில், வாய்க்கால் கரைகளுக்கு அருகில்தான் ராஜாவின் வீடு. ’ T’ வடிவில் இரண்டு கொட்டகைகளே ராஜாவின் வீடு. இரண்டுக்கும் இடையே வைத்திருந்த வாரித் தகரம் ஓட்டையாகிப் போனதால், மழை வந்தால் பார்த்திபனின் ‘குடைக்குள் மழை!’ என்ற தலைப்பைப் போல ‘வீட்டிற்குள் மழை!’ என்றாகி விடும். மெழுகப்பட்ட மண் தரையை மழை நீர்,கட்டித் தழுவிக் கொண்டு ஓடும்.

முன் கொட்டகையில் இதுவென்றால், பின் கொட்டகையின் கீற்றுக்கள் இற்றுப்போக, ஆங்காங்கே ஒழுகும். ஒழுகலின் அளவுக்கேற்ப வீட்டிலுள்ள தட்டுக்கள், கிண்ணங்கள், சட்டிகள் என்று அனைத்தும் அந்தந்த இடங்களில் வைக்கப்படும். நீண்ட நேர மழையென்றால், மழை நீரால் நிரம்பும் பாத்திரங்களை எடுத்து நீரை வெளியில் கொட்ட, ஓர் ஆள் சுறுசுறுப்பாக இயங்கியாக வேண்டும். ராஜாவும் அவன் அக்காவும் அந்தப் பணியில் கில்லாடிகள். ஒலிம்பிக்கில் இதனை ஒரு விளையாட்டுப் போட்டியாகச் சேர்த்தால்,இருவரும் தங்கப் பதக்கங்களைத் தட்டிக் கொண்டு வந்து விடுவார்கள்.ராஜாவின் அப்பாவும் அம்மாவும் கூலி வேலை செய்பவர்கள். அடுப்பில் பூனைக்குட்டியை அண்ட விடாமல் இருப்பதற்கே அவர்களின் வருமானம் போதுமானதாக இருந்தது. வாய்க்கும் வயிற்றுக்குமாக ஓடிக் கொண்டிருந்த வாழ்க்கையைக் கொரோனா வந்து மேலும் சிரமப்படுத்தியது. என்ன நடந்தாலும் காலச் சக்கரம் தன் வழியே ஓடிக்கொண்டேதானே இருக்கிறது. அப்படித் தான் கடனை உடனை வாங்கிக் காலத்தைக் கழித்துக் கொண்டிருந்தார்கள்.

Representational Image
Representational Image

மணிக்கு அவ்வளவு வசதிகள் இருந்தும், தனிமை ரொம்பவும் பொல்லாததாக இருந்தது. எப்பொழுதுதான் பள்ளி திறக்குமோ? என்ற ஏக்கம் மேலோங்கியது. ராஜாவைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. ஆனாலும் கொரோனாவைக் காரணங்காட்டி, அவனுடைய தாய் அவனை வெளியிலேயே விடுவதில்லை. மாறாக இரண்டு, மூன்று நாட்களுக்கொரு முறை டவுனுக்குக் காரில் அழைத்துச் சென்று, அவன் விரும்பியவற்றை வாங்கிக் கொடுத்தாள். அந்தமுறை போனபோது அந்த ‘க்ளோ இன் த டார்க்’ ஸ்டிக்கர் (Glow in the Dark-Sticker) அவன் கண்களில்பட அதனை வாங்கி வந்தான்.

நிலவும், நட்சத்திரங்களும் நிறைந்த பெரிய கவர் அது. அவன் படுக்கை அறையில் அவன் கட்டிலுக்குநேர் மேலே வளைந்த நிலவினையும், அதனைச் சுற்றி அறை முழுவதும் கவர் செய்யும் விதமாக நட்சத்திரங்களையும் ஒட்டினான்.இரவில் எரியும் மின் விளக்கைக் கிரகித்துக் கொள்ளும் அது,விளக்கினை அணைத்ததும் இருளில் மிளிரும்.மொட்டை மாடியில், நிலவையும், நட்சத்திரத்தையும் பார்த்துக் கொண்டே படுத்திருக்கும் ஒரு பரவசப் பிரமையை அது உண்டாக்கும். அதனை ஒட்டி முடித்து,எல்இடி பல்பைக் கொஞ்ச நேரம் எரியவிட்டு அணைத்ததும், நிலவும், நட்சத்திரங்களும் ஒளிர்ந்தன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எப்போது இரவு வரும் என்று காத்திருந்து,மாலையானதும் லைட்டை எரிய விட்டு விட்டு,இரவு சீக்கிரமாகவே சாப்பிட்டு விட்டு வந்து விளக்கை அணைத்துப் படுத்ததும் நிலவும்,நட்சத்திரங்களும் அவனிடம் பேசின.அவனுக்கு அது ரொம்பவும் பிடித்துப் போயிற்று.உடனே எழும்பி,தன் தாயை அவன் அறைக்கு அழைத்து வந்து அதனைக் காட்டி மகிழ்ந்தான்! தந்தையார் எப்பொழுதும் ‘பிசி’ என்பதால் அவர்களுக்குள் அவ்வளவு நெருக்கம் ஏற்படவில்லை! நிலவைப் பார்த்த படியே அன்று தூங்கிப்போனான்.

காலையிலிருந்தே அவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. தெரிந்த நண்பர்களுக்கெல்லாம் அதனைக் காட்டி மகிழ ஆசை.குறிப்பாக ராஜாவுக்குக் காட்டி அவனை ஆச்சரியப்பட வைக்க விரும்பினான். ஆனால் அந்த ஊரில் அவனுக்கு அதிகமாக நண்பர்கள் இல்லை. ராஜாவையும் பார்க்க முடியவில்லை. என்ன செய்வதென்று யோசித்த சமயத்தில்தான், பள்ளிகள் திறக்கப்படும் என்ற இனிப்பான செய்தி வந்து அவனை சந்தோஷப்படுத்தியது. அவன் உடனடியாகவே பள்ளி செல்லத் தயாராகி விட்டான்.

Representational Image
Representational Image

பள்ளியில், ’ஸ்வீட்’ கொடுத்து வரவேற்றார்கள். உள்ளூர் பள்ளியில் சேர்ந்ததில் அவனுக்கு ஒரு திருப்தி. ’தினமும் அம்மா, அப்பாவைப் பார்க்கலாம். ஹாஸ்டல் போல் கண்டிஷன்கள் ஏதுமின்றி, விரும்பியபடி வீட்டில் இருக்கலாம்!’ என்ற எண்ணமே அவன் திருப்திக்குக் காரணம். ராஜாவைப் பார்த்ததும் அவனுக்கு மகிழ்ச்சி அதிகமாகியது. அதே நிலைதான் ராஜாவுக்கும். தன்னிடம் மணி காட்டும் பரிவை அவனும் நன்றாகவே உணர்ந்திருந்தான். அன்று முதல் நாளே, மணி தன் விருப்பத்தையுணர்ந்து அவன் காரில் ஏற்றிச் சுற்றிக்காட்டியது ராஜாவை மிகவும் கவர்ந்து விட்டது.

பள்ளி ஆரம்பித்து இரண்டொரு நாட்களிலேயே இருவரும் மிக நெருங்கிய நண்பர்களாகி விட்டார்கள்.மணிக்கு,ராஜாவைத் தன் வீட்டுக்கு அழைத்துப்போய், அவன் அறையில் ஒட்டியுள்ள ‘க்ளோ இன் த டார்க்’ ஸ்டிக்கரைக்காட்ட மிகுந்த ஆசை.எனவே ராஜாவைத் தன் வீட்டிற்கு அழைத்தான். ராஜாவும், தன் வீட்டில் சொல்லி விட்டு, இரண்டொரு நாட்களுக்குப் பின்னர் வருவதாகத் தெரிவித்தான். பள்ளி விட்டதும் ராஜா போய், வீட்டிலுள்ள ஆடு,மாடுகளைக் கவனிக்கும் பொறுப்பும் இருந்தது. எனவே தன் தாய் வேலைக்குச் செல்லாத ஒரு நாளில் மணியின் வீட்டிற்குச் சென்று வர முடிவு செய்தான்!

அன்றைக்குப் பள்ளி விட்டதும்,மணி ராஜாவைக் கூட்டிக்கொண்டு தன் வீட்டிற்கு வந்தான். அல்வா, வடை பாதாம்பால் சாப்பிட்ட பிறகு இருவரும் மணியின் அறைக்குச் சென்றனர். ’டீ’ என்ற பெயரில் ஒரு கலர் சுடு தண்ணியைக் குடிக்கும் ராஜாவுக்கு, மணியின் வீட்டு டிபன் புதுமையாக இருந்தது. பாதாம்பால் ருசி நாக்கிலேயே ‘டேரா’ போட்டிருந்தது. மணி அறைக்குள் சென்றதும் இரண்டு பக்கமும் இருந்த ஜன்னல்களை மூடி, திரைச் சீலையையும் தொங்க விட்டு, கூடுமான வரை அறையை இருளாக்கினான். சில நிமிடங்களே மின் விளக்கைப் போட்டு உடன் அணைத்துவிட்டு, அறையின் மேலே பார்க்குமாறு ராஜாவை வேண்டினான். மேலே, வட்ட நிலவும், நட்சத்திரங்களும் மின்னின.ராஜாவின் கண்களில் மின்னலை எதிர்பார்த்த மணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏனெனில் மணி எதிர்பார்த்த அளவுக்கு ராஜா அதில் கிறங்கிப் போய்விடவில்லை. தன் ஏமாற்றத்தை மறைத்தபடி, ”ஏன் ராஜா.. இது நல்லாயில்லையா? உனக்குப் பிடிக்குமென்று நினைத்தேன்!”என்ற மணியை இடை மறித்த ராஜா,

“ ரொம்ப நல்லாத்தான் இருக்கு… நான் இல்லைன்னு சொல்லலையே ஆனா… இது செயற்கைதானே மணி.. நான் இது மாதிரி இயற்கையையே பார்த்து ரசிச்சதாலேயே என்னவோ… நீ எதிர்பார்த்தபடி என்னாலே ஆச்சரியப்பட முடியலே!” என்று பெரிய மனிதன் தோரணையில் பேசினான்.

“நீ என்ன சொல்ற…ராஜா…இயற்கை…செயற்கைன்னு…”

“ அது வேற ஒண்ணுமில்ல மணி…எங்க வீட்ல படுத்து கூரையைப் பார்த்தா, நிஜமான நிலவையும், நட்சத்திரங்களையும் பார்க்கலாம். பெய்யற மழையை உள்ளேயிருந்தே அனுபவிக்கலாம்…” என்று கூறியவனின் மனதில், மழைக் காலம் நெருங்குவதை முன்னிட்டு அப்பாவும், அம்மாவும் யார், யாரிடமோ கடன் வாங்கி,புதிதாகக் கீற்று வாங்கி வந்து வேய்ந்தது,கண்முன்னால் வந்து போயிற்று.

குடிசை
குடிசை

அந்த வருத்தமெதுவும் வராமல் வளர்ந்த மணியால், அதனையெல்லாம் புரிந்து கொள்ள முடியாது என்று எண்ணியபடி,” நல்லாத்தான் இருக்கு மணி… எங்க வாங்கின… இத நீயேதான் ஒட்டினியா?”என்று கேட்டான்! அந்தக் கேள்விகளில்

லயித்த மணி, ’தான் டவுனில் வாங்கி வந்ததையும், ஒட்டியதையும் விலா வாரியாகச் சொல்லவாரம்பித்தான்.

நாளடைவில் இருவரிடையே நல்ல நட்புறவு மலர, ராஜாவும், மணியும் ‘ராஜாமணி’ ஆகிப் போனார்கள்.ஆம்.இருவரும் ஒன்றிணைந்தே எதையும் செய்ய ஆரம்பிக்க, பள்ளியில் அவர்கள் பெயர் பிரபலமானது!

புதுக் கீற்று போட்ட பிறகு நிலவையும், நட்சத்திரங்களையும் காண முடியாமல் போனதால், அடுத்த பௌர்ணமி அன்று பரணில் ஏறி, கீற்றை நுணுக்கமாகச் சற்று விலக்கி வைத்து விட்டுப் படுத்தான் ராஜா. அது என்ன நுணுக்கம் என்கிறீர்களா?

அவன் படுக்கையிலிருந்து பார்த்தால் நிலவும் இரண்டொரு நட்சத்திரங்களும் தெரியும். ஆனால் மழை பெய்தால் ஒழுகாது!

ராஜா இயற்கையை அனுபவிக்க, செயற்கையிலேயே திருப்தி அடைந்து கொண்டிருந்தான், கான்டராக்டர் மகன் மணி!

-ரெ.ஆத்மநாதன்,

மெக்லீன்,அமெரிக்கா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு