வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
சிவநாதன் செய்வதறியாமல் திகைத்து போய் அமர்ந்திருந்தார்.இது வரையில் இப்படி ஒரு சூழ்நிலை அவருக்கு வந்ததே இல்லைஅவர்தான் எல்லோருக்கும் செய்து கொடுப்பார்.சின்ன வயதிலிருந்தே பொறுப்புகளை சுமந்து பழகியவர்.
இப்போதுஅவசரமாக அவசியமாக பணம் புரட்ட வேண்டும் என்ற நிலை வந்ததும் மனதில் வந்தது முதன் முதலில் அவர் வாங்கிய மனைதான்.
அம்மாவின் பெயரில் வாங்கிய அந்த நிலம் இப்போது பல பிரச்சினைகளையும் சேர்த்துக்கொண்டு வந்ததுதான் அவரை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
சகோதரர்களும் சகோதரியும் சேர்ந்து கொண்டு பங்கு கேட்டது அதிகம் வேதனையைக் கொடுத்தது.
சொல்லப் போனால் அவர்கள் அனைவரையும் படிக்க வைத்து இந்த நிலைக்கு கொண்டு வந்ததே அவர்தான்.
சுலபமாக எல்லாவற்றையும் மறந்து விட்டு கையெழுத்து போடவே யோசித்துக் கொண்டு பல பிரச்சினை களையும் கிளப்புகிறார்கள்.
சுஜி ,எவ்வளவு கஷ்டப்பட்டு அவளுக்கு கல்யாணம் செய்து வைத்தார்.!
தம்பிகளுக்கும் அப்படியே ஆசைப்பட்ட படி படிக்க வைத்து திருமணமும் செய்து வைத்தார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
யாரும் அவரை தெய்வம் என்று கொண்டாட வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. ஆனால் சாதாரண நன்றி உணர்ச்சி கூட இல்லாமல் போனதுதான் அவரை அதிகம் வருத்தியது.
எத்தனை முறை ரேணு சொல்லி யிருப்பாள் ! கேட்டாரா அவர்!
'நான் என் குடும்பத்தில் மூத்த பையன்.என் அம்மா என்னை நம்பித்தான் உயிர் வாழ்கிறாள் அப்பா போனபிறகு நான் தான் அவர்களுக்கு எல்லாமே!'திரும்ப திரும்ப அதையே சொல்லுவார்.
அவள் மட்டுமில்லை , பெற்ற பெண்கள் எவ்வளவு தரம் சொல்லி சொல்லி அலுத்துப்போனார்கள்
'போதும்ப்பா! திருப்பிதிருப்பி உங்க டயலாக் மனசுல பதிஞ்சுடுச்சு.'
எப்போது அவர்கூடப்பிறந்தவர்களுக்கும் ரேணுவுக்கும் நடுவில் பிரச்னை வந்தாலும் அவர் கண்ணை மூடிக் கொண்டு சகோதரர்களைத்தான் ஆதரிப்பார்.
பெண் மதுவின் கல்யாணத்தின் போது சொல்லாமல் குரு காரை எடுத்துக் கொண்டு போய் பல பிரச்னைகளை சந்தித்த போது கூட அவர் எதுவுமே கேட்டதில்லை.
பதினாறு வயதில் படத்தில் சப்பாணி சொல்வது மாதிரி' சந்தைக்கு போணும் ஆத்தா வையும் ' மாதிரி திரும்ப திரும்ப 'என் கூட பிறந்தவர்கள்.அவர்களுக்கு நான் தான் எல்லாம்'. என்று மட்டும் தான் சொல்வார்.
கண்மூடித்தனமான பாசமும் பந்தமும் அவரைக் கட்டிப் போட்டிருந்தன.
'அப்ப நாங்க,' என்று கேட்கும் பெண்களுக்கு அவரால் பதில் சொல்ல முடியாது.
'அம்மா இன்னொரு வீட்டிலிருந்து வந்தவள் என்று சொல்லி சொல்லி பாட்டி உங்களை உருவேற்றியிருக்கிறார்கள்.
உங்களுக்கும் அம்மாவுக்கும் நல்லா ஒரு தடுப்பு சுவரை ஏற்படுத்தி விட்டுட்டாங்க.அதே சமயத்திலே உங்க கூட பிறந்தவங்ககிட்டே அண்ணன் கிட்டே மரியாதையா நடந்துக்கோங்க. அவன் உங்களுக்காக எவ்வளவு கஷ்டப்படுகிறான் என்றும் சொல்லியிருக்கலாமே ! ’ என்று குமுறும் அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டதே இல்லை. புரிந்து கொள்ள முயற்சித்ததும் இல்லை.
தன்னையே பாதிக்கும் வேளையில் தான் அவருடைய கண் திறந்தது.
இப்போதும் மனையை வாங்குவதற்கு ஆள் பார்த்து தயார் செய்த பிறகும் ரெஜிஸ்டர் ஆபீஸுக்கு வராமல் இழுத்தடித்தார்கள் . ஏதாவது சாக்கு போக்கு சொல்லும் அவர்கள் தன் கூடப் பிறந்தவர்கள் தானா என்று இப்போது தான் சந்தேகமே வந்தது அவருக்கு.
தற்செயலாக சந்தித்த பால்ய நண்பரிடம் புலம்பித்தள்ளினார்.
'இப்போ எல்லாம் சொல்லி என்ன பிரயோஜனம்?

உனக்கு வந்தா ரத்தம் மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?
உன்னை நம்பி வந்த பெண்ணை யார் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்று விட்டு க் கொடுத்தது நீதானே ?'
கோபத்துடன் சாடினார் அவர்.
'இப்போ இந்த பிரச்சினைக்கு வழி சொல்லு.எந்தப்பக்கம் போனாலும் முட்டுது.'
'என்னை என்ன பண்ண சொல்றே சரி வா வீட்டில் போய் எல்லோருமாக பேசுவோம் .குரு , தேவா , சுஜி எல்லோரையும் கூப்பிட்டு பேசலாம்'.
அதிசயமாக எல்லோரும் வீட்டிற்கு வந்திருந்தார்கள்.
முதலில் சிவ நாதன் தன்னுடைய பிரச்சினைகளை சொன்னார்.
ஃபாக்டரிக்கு இப்போ மெஷினரி வாங்கினதிலே நிறைய பணம் முடங்கிடுச்சு. கொஞ்சம் நஷ்டமும் ஆகிவிட்டது . அதுதான் அந்த வேலன் சாவடி பக்கத்தில் வாங்கிய மனையை விற்று விடலாம் என்று பார்க்கிறேன்.
எல்லோரும் பேசாமல் இருக்க சுந்தரம் தான் கேட்டார்.
'கையெழுத்து போடுவதில் உங்களுக்கு என்ன கஷ்டம்? '
'கஷ்டம் ஒண்ணும் இல்லை .எங்க பங்கு கொடுத்திடு அப்படின்னு தான் சொல்றோம்.'
'நீங்க அந்த இடம் வாங்க எவ்வளவு காசு போட்டீங்க?'
'இது என்ன கேள்வி ?
அம்மா பேரில் இருக்கிறதால பங்கு கேட்கிறோம் . இதே அவன் ஃபாக்டரியில் நாங்க ஏதாவது கேட்கிறோமா?'
நீ என்னம்மா சொல்ற? சுஜியைப் பார்த்து அவர் கேட்டார்
சின்ன அண்ணன் சொன்னதுதான். அன்றைக்கே அவர் தன் பெயரில் வாங்கியிருந்தால் இந்த பிரச்னையே வராதே.,"
'அட பாவிங்களா ! எனக்கென்று எதையுமே நான் யோசித்ததில்லையே! அதிலிருந்து வந்த வருமானம் அத்தனையும் உங்களுக்கு தானே செலவழித்தேன்."
மனதுக்குள் மறுகினார்.
அவர் நினைத்ததை சுந்தரம் வெளிப்படையாக கேட்டே விட்டார்
அது அவரோட கடமை சார்
பதில் பட்டென்று வந்தது.
'சரி, உங்களுக்கு கடமை உணர்ச்சி எதுவும் கிடையாதா.'
'கிடையாது மாமா . கோவில் உண்டியலில் போடறதுக்கு தான் நமக்கு உரிமை, எடுக்க முடியாதே!
எங்கப்பா ஒரு சுமைதாங்கி கல். அவர்கள் நினைத்த போதெல்லாம் வந்து இளைப்பாறலாம். ஆனா கல்லுக்கு உணர்ச்சி மட்டும் இருக்ககூடாது.'
மது கொதிப்புடன் கூறினாள்
'இப்பவும் பாருங்களேன் நீ கஷ்டப்படாதே! அப்படின்னு சொல்றாங்களா!'
அவர்கள் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து க் கொண்டனர்
'அண்ணே, நீகூப்பிட்டே! நாங்க வந்தோம். சின்னப்பிள்ளைங்களை எல்லாம் பேச விடறதா இருந்தா நாங்க கிளம்புறோம்.'
'இருங்க , நீ பேசாதம்மா’ , கண்டித்தார் சுந்தரம்.
'இதோ பாருங்க, ஆனால் உண்மையில் உங்கள் பங்கு அதில் என்ன இருக்கிறது?
சட்டம் தரும் சலுகை கூட சமுதாயம் தரவில்லையேன்னு ஒரு பாட்டு உண்டு.
சிவனுடைய உழைப்பும் ஈடுபாடும் அந்த ஃபாக்டரியில் பங்குதாரர் ஆக்கியிருக்கு.
ஆனால் உங்களுக்காக அவன் உழைத்தது பாடுபட்டது எல்லாம் விழலுக்கு இறைத்த நீர் மாதிரி ஆயிடுச்சு.
அவர் மனம் வருந்தி பேசும் போதும் அவர்கள் ஒன்றும் பேசவில்லை.
சுஜி தான் வாயைத் திறந்தாள்.
அம்மா இருக்கும் போதே இதை வித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
ஆமாம் அம்மா உங்களை எல்லாம் கூப்பிட்டு கொடுத்திருப்பாள்.
உங்களுக்கு பணம் தான் பெரிசா தெரியுது. நான் அப்படி நினைச்சதே இல்லை.
அப்புறம் எதுக்கு இந்த பஞ்சாயத்து?
குரு கேட்டதும் அவர் திகைத்துப் போனார். எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு பேசாமல் இருந்த ரேணு இப்போது பேசினாள்.
``அண்ணா சம தரையிலே நடக்கிறவங்களுக்கும் ஒரு பள்ளத்தில் விழுந்து எழுந்து வரவங்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. தான் மட்டுமில்லாமல் தன்னை சேர்ந்தவர்களையும் மேலே கொண்டு வர அவங்க படற பாடு எவ்வளவு தெரியுமா? ஆமை ஓட்டை சுமக்கிற மாதிரி பொறுப்பை சுமக்கிறாங்க..
எனக்கு வருத்தமே இல்லை அண்ணா
ஒரு சந்தர்ப்ப வாதியாவோ ஒரு சுயநலவாதியாவோ இவர் இருந்திருந்தாத்தான் நிச்சயம் வருத்தப்பட்டிருப்பேன்.’’
அவள் பளிச்சென்று சொன்னது அவர்கள் மூவருக்கும் எரிச்சலை மூட்டியது.
``உங்களுக்கு சம்பந்தமே இல்லாத விஷயத்தில் நீங்கள் ஏன் தலையிடுகிறீர்கள்?’’
தேவா குறுக்கிட்டு அவள் பேச்சை கத்தரித்தான்.
``நிஜம் தாம்மா அப்பாவோட கஷ்டங்களில் மட்டும் தான் உனக்கு பங்கு. சொத்தில் இல்லை.’’
பெண் சொன்னதைக் கேட்டு சிவநாதன் நிலை குலைந்தார்.
அம்மான்னு சொன்னா தெய்வம் மாதிரி அப்படின்னு நினைக்க வைச்சு பழகிவிட்டவர் அவர். அவளும் ஒரு சாதாரண மனுஷி தான் என்று தோன்றியதே இல்லை.
தப்பு தப்பாக யோசித்து அவர்கள் ஆடிய தாளத்துக்கெல்லாம் ஆடியவர் தனக்கு என்று எதுவும் யோசித்ததே இல்லை.

கஷ்டம் என்று வரும் போது எல்லோருடைய முக மூடியும் கழன்று விழ அவர் மிகவும் நொந்து போனார். காலம் கடந்த ஞானோதயம்.
ஒரு முடிவுமில்லாமல் அவர்கள் கலைந்து போனார்கள். தீர்மானமாக எல்லோரும் ஒன்று மட்டும் சொல்லி விட்டு போனார்கள்.
சோர்ந்து போய் அமர்ந்திருந்த சிவநாதனிடம் வந்து அமர்ந்தாள் மஞ்சு.
``அப்பா இதுக்கு ஒரு வழி இருக்கு. நான் சொல்லவா?’’
அவர் நிமிர்ந்தார். என்ன வழி அவர் புரியாமல் கேட்டார்.
``முதலில் கவலைப்படுகிறதை நிறுத்துங்க.
இதை விட பெரிய கஷ்டத்திலிருந்து எல்லாம் வெளியே வந்திருக்கீங்க இது வெறும் பணக்கஷ்டம் மட்டும் தானே
சமீபத்தில் ஃகாபிடே நிறுவனம் எவ்வளவு கோடி நஷ்டத்திலிருந்து மீண்டிருக்கிறது தெரியுமா.
உங்களுக்கு தேவை துணிச்சலும் முன்யோசனையும் தான் .
வேற விதத்தில் உங்கள் பிரச்சினையை சமாளிக்கலாம்.’’
``எப்படி’’, அவர் ஆலோசனை கேட்டார்.
முதலில் இந்த மனையை அடகு வைத்து பணம் புரட்டலாம். விற்பது பற்றி அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் .
அவ்வளவு பணம் வராதே தயங்கினார் அவர்.
வித்தாதான் பங்கு போட மூன்று பேர் வந்துடுவாங்களே. அதோட உடனே நடக்கிற வேலை இல்லை இது .
'எப்ப பண்ணினாலும் பணம் கொடுத்து தாம்மா ஆகணும்.'
அவர் கசந்த முறுவலுடன் சொன்னார்.
'அதனால் என்ன அப்பா ! இப்போதைய பிரச்சினை அலுவலகத்தோடது. அதை முதலில் முடிங்க.'
'உங்களுக்கு வருத்தமாகவே இல்லையாம்மா!'சுரத்தே இல்லாமல் அவர் கேட்டார்.
'இருக்குப்பா ஆனா, அது பணம் சம்பந்தப்பட்டது இல்லை.அது வேற!
உங்கள் கூட பிறந்த மூன்று பேருக்கும் உங்கள் பணம்தான் பெரிசு. ஆனா உங்க கூடவே இருக்கிற எங்களுக்கு உங்க மனசு தான் பெரிசு.
நீங்கள் வருத்தப்பட ஒண்ணுமே இல்லை. முட்டாளாக்கிட்டதா நினைச்சு அவங்க சந்தோஷமாக இருக்கலாம். ஆனால் நீங்க சுயநலமா இல்லாம இருந்திருந்தால் இந்த நிலைமைக்கு வந்திருப்பாங்களா. அதை யோசிக்க மாட்டார்கள்!
ஒரு பாட்டில் வருவது மாதிரி தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே! தவறியும் வானம் மண்ணில் வீழ்வதில்லையே!.அது மாதிரி நீங்கள் வானத்தை போலப்பா!’’
இதமாக சொன்னவள் அவர் கரங்களை ஆதுரத்துடன் பிடித்துக் கொண்டாள். பாரமாக மனதிலிருந்த சங்கடம் விலகி சவால்களை சமாளிக்க புன்முறுவலுடன் நிமிர்ந்து அமர்ந்தார் சிவநாதன்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.