கங்காணி இறந்து விட்டதாக காலையிலேயே யரோ வந்து சொன்னார்கள்.
அந்த காலத்தில் தமிழ் நாட்டிலிருந்து மலேசிய மற்றும் பிற மத்திய கிழக்கு நாடுகளில் இருந்த ரப்பர் தோட்டத்துக்கு வேலைக்கு (கொத்தடிமைகளாக) ஆள் சேர்த்து கூட்டிக்கொண்டு சென்று அவர்களுடன் தங்கி தங்களுடைய கட்டுப்பாட்டில் அனைவரையும் வேலைவாங்கி வெள்ளை காரர்களுக்கு சேவகம் செய்தவர்களை கங்காணி என்று அழைப்பார்கள்.
ஆனால் இந்த கங்காணிக்கு ஏன் அப்படி பெயர் வந்தது என்று தெரியவில்லை.
எங்கள் பள்ளிக்கூடத்திலிருந்து மாலை மூன்று மணிக்கு மேல் கங்காணிக்கு இறுதி மரியாதை செலுத்த செல்லலாம் என்று ஆசிரியர்கள் பேசிக்கொண்டார்கள். யார் இந்த கங்காணி? ஏன் பள்ளிக்கூடத்திலிருந்து அனைவரும் சென்று மரியாதையை செலுத்தவேண்டும்?

எங்கள் ஊர் பள்ளி கூடம் ஒரு உயர் துவக்க பள்ளி. எட்டாம் வகுப்பு வரை உண்டு. துவக்க பள்ளியாக இருந்து தரம் உயர்த்த பட்டதால் உயர் நிலை பள்ளி போல இது உயர் துவக்க பள்ளி (Higher Elementary School) என்று பெயர் பெற்றது. இப்போது அதை நடு நிலை பள்ளி (Middle School) என்று சொல்கிறார்கள்.
எங்கள் பள்ளியின் ஆல் இன் ஆல் அழகு ராஜா கங்காணிதான். பார்ப்பதற்கு நெடுநெடுவென உயரம் கருத்த உடம்பு கை கால்கள் நீண்டு ஒல்லியாக இருக்கும். ஆனால் திடகாத்திரமான மனிதர். எப்பொழுதும் மொட்டை தலை போல் முடி ஓட்ட வெட்டப்பட்டிருக்கும். அதில் வெள்ளை அடித்தது போல முடி. தலையை வார தேவையில்லை. கை கால்களின் தோல்கள் சுருக்கமடைந்து இருக்கும். பற்கள் கொட்டி ஒன்றோ இரண்டோ பற்களுடன் கன்னங்கள் உள்ளடைந்து இருக்கும்.
அவருக்கு குழந்தைகள் இல்லை. மனைவி மட்டும். ஒருமுறை எதற்காகவோ அவருடைய வீட்டிற்கு அவரை கூப்பிட சென்றபோது அவர் மனைவி அவரை திட்டிக்கொண்டிருந்தார். எதனையும் காதில் வாங்கி கொள்ளாமல் "நீ வா தம்பி போலாம்...." என்று கிளம்பிவிட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஎப்பொழுதும் ஒரு பழுப்படைந்த வெள்ளை வேட்டியும் சட்டியும் அணிந்திருப்பார். வேட்டியின் நிறம் தான் வெண்மையில்லையே தவிர தினமும் துவைத்து சுத்தமாக உடுத்திக்கொள்வார். காலை ஏழு மணி வாக்கில் எங்கள் வீட்டிற்கு வந்து பள்ளி கூடத்தின் சாவியை வாங்கி கொள்வார். என்னுடைய அம்மா அந்த பள்ளியில் ஆசிரியராக இருந்ததாலும் பள்ளிக்கு பின்புறம் எங்கள் வீடு என்பதாலும் பள்ளிக்கூட சாவி எங்கள் வீட்டில் தான் இருக்கும்.
விடுமுறை நாட்களில் எங்கள் ஊரில் யார் வீட்டிலாவது விஷேஷம் என்றால் எங்கள் வீட்டிற்கு வந்து டீச்சர் ரெண்டு பெஞ்சு வேணும் விசேஷம் முடிஞ்சோடனே திருப்பி கொண்டு வந்து போட்டுடறோம் என்பார்கள். கிராமத்தில் இது போன்ற உதவிகளை மறுக்க முடியாது.

சரி மீண்டும் கங்காணிக்கு வருவோம். ஏழு மணிக்கு வந்து சாவியை வாங்கி கொண்டால் பள்ளிக்கு மொத்தம் நான்கு கட்டடங்கள். ஆனால் இரண்டு ஓரிடத்திலும் மற்ற இரண்டு சற்று தொலைவிலும் இருக்கும். அனைத்தையும் அவரே தென்னை ஓலையால் கிழித்து தயார் செய்த நீண்ட விளக்குமாரால் சுத்தமாக கூட்டிவிட்டு மைதானத்தில் கிடைக்கும் குப்பைகளையும் கூட்டி சுத்தமாக்கி முடிக்க எட்டரை மணியாகிவிடும். பின்பு பள்ளி எதிர்புறம் இருக்கும் பொது கிணற்றில் சென்று வாளி கயிற்றை விட்டு நீர் சேந்தி கை கால் கழுவிக்கொண்டு பள்ளிக்கும் நீர் கொண்டு வந்து வைப்பார். வகுப்பறைகளில் இருக்கும் மேசை நாற்காலிகளை துடைத்து வைப்பார்.
சரியாக ஒன்பதே கால் மணிக்கு பள்ளிக்கு முன் தொங்கி கொண்டிருக்கும் ஒரு சிறிய தண்டவாள துண்டில் ஒரு சிறிய இரும்பு துண்டை வைத்து நீண்ட முதல் மணி அடிப்பார். பத்து நிமிடம் கழித்து இரண்டாவது மணி விட்டு விட்டு இரண்டு முறை அடிக்க பிரேயர் தொடங்கும். பிரேயர் முடிந்து வகுப்பறைகளை வருகை பதிவேடுகளை கொடுத்துவிட்டு சிறிது நேரம் கழித்து மீண்டும் அவைகளை தலைமையாசிரியர் மேசைக்கு கொண்டு செல்வார்.
அந்த காலத்தில் காமராஜர் கொண்டுவந்த மத்திய உணவு திட்டம் அமலில் இருந்தது. உடைத்த கோதுமையும் சோயா எண்ணெய்யும் பள்ளிக்கு கொடுக்க படும். காலைக்கும் மதியத்திற்கு இடைப்பட்ட நேரத்தில் அந்த உடைத்த கோதுமையை வைத்து சுவையான கோதுமை பொங்கலும் அதற்கு தொட்டுக்கொள்ள ஒரு கீரை கூட்டும் செய்வார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அப்பொழுது விறகடுப்புதான். அதற்கு தேவையான விறகை விடுமுறை நாட்களில் அவரே கோடாலி வைத்து உடைத்து கொள்வார். நான் பலமுறை சாப்பிட்டுருக்கிறேன். இதற்கிடையில் சிறு இடைவேளையில் (Recess) மணியடிக்கும் வேலையும் தவறாமல் பார்த்து கொள்வார். மதிய உணவு இடைவேளையில் அவர் தயாரித்த மதிய உணவை பிள்ளைகளுக்கு அவரே பரிமாறுவார். பரிமாறி முடித்தவுடன் பாத்திரங்களை ஒதுங்க வைத்து விட்டு அவருக்கு மிஞ்சிய உணவை சாப்பிடுவார்.
சில நிமிடங்கள் மட்டுமே ஓய்வு கிடைக்கும். அதற்குள் மணி ஒன்றே முக்கால் ஆகிவிடும். நீண்ட முதல் மணி அடிக்க வேண்டிய நேரம் தவறாமல் கடிகாரத்தை பார்த்து சரியாக அடித்து விட்டு மீண்டும் கால் மணிநேரம் கழித்து இரண்டாவது மணி அடித்து பிற்பகல் வகுப்பு தொடங்கும். மீண்டும் வருகை பதிவேடு அனைத்து வகுப்புகளுக்கும் கொடுத்து பிற்பகல் வருகை பதிவு செய்தவுடன் மீண்டும் அதனை தலைமை ஆசிரியரின் மேசைக்கு கொண்டு செல்வார். பின்பு சமையல் பாத்திரத்தை சுத்தம் செய்து வைத்து விட்டு நிமிர்ந்தால் மூன்றரை மணியாகிவிடும்.

பிற்பகல் இடைவேளை மணியடிக்க பத்து நிமிடம் கழித்து விளையாட்டு அல்லது நீதி போதனை வகுப்பு கடைசியாக நடக்க நாலேகால் மணிக்கு பிரேயர் மணி பின்பு தேசியகீதம் பாடி அன்றைய பள்ளி நேரம் முடிவடைய நீண்ட மணி அடித்து முடித்து வைப்பார். எப்பொழுதாவது குழந்தைகளுடன் குழந்தையாக அவரும் சேமியா ஐஸ் வாங்கி சாப்பிடுவார். பள்ளியில் பிள்ளைகள் அனைவரும் அவரிடம் மரியாதையாக நடந்து கொள்வார்கள். என்ன ஒன்று அனைவருக்கும் அவர் கங்காணிதான்.
பள்ளி நேரம் முடிந்தாலும் அனைத்து பிள்ளைகளும் சென்ற பின்பு ஆசிரியர்கள் அனைவரும் சென்ற பிறகு வகுப்பறைகளை பூட்டி சாவியை திரும்ப கொண்டுவந்து எங்கள் வீட்டில் கொடுக்கும்போது மணி ஐந்தாகியிருக்கும். சாவியை கொடுத்து விட்டு சிறிது நேரம் பேசிவிட்டு வீட்டிற்கு செல்வார்.
பள்ளி உதவியாளராக இருந்த அவருக்கு அரசாங்க சம்பளம் வந்ததாக ஞாபகம். எவ்வளவு என்று தெரியாது. ஆனால் ஒரு நாட்கள் கூட விடுப்பு எடுக்காமல் தினமும் வந்து விடுவார். இவ்வளவு வேலைகள் செய்தாலும் அவருடைய முகத்தில் சிறு சலிப்பு கூட எட்டி பார்த்ததாக நினைவில்லை. வேலையிலிருந்து ஓய்வு பெற்று சில நாட்களுக்கு பின்பு ஒருநாள் அவர் இறந்து விட்டதாக யாரோ வந்து சொன்னார்கள்.
ஒருமுறை பள்ளிக்கு பின்புறமிருந்த ஒரு வாத மர பொந்தில் தேனீக்கள் கூடு கட்டியிருந்தது. அந்த மரம் வழியாகத்தான் பிள்ளைகள் பலரும் சென்று வருவார்கள். ஏனோ எனக்கு மட்டும் விதி வேறுமாதிரி வேலை செய்தது. நான் அந்த வழியாக பயந்து கொண்டே செல்ல பலமுறை என்னை தேனீ கொட்ட ஏனோ நான் ஈ படத்தின் ஈ போல எனக்கும் தேனீக்கும் என்ன பூர்வ ஜென்ம பகையோ தெரியவில்லை. ஆனால் இதை கண்காணிக்கு சொல்ல "அட என்னப்பா நீயி ...வா அது ஒன்னும் பண்ணாது..." என்று அவர் என்னை கூட்டிக் கொண்டு அந்த மர பொந்திற்கு சென்று அவருடைய கையை உள்ளே விட்டு அனைத்து தேனடைகளையும் அசாதரணமாக உடைத்து வெளியில் எடுத்தார்.

சும்மா நடந்து சென்றபோது என்னை துரத்தி துரத்தி கொட்டிய தேனீக்கள் இப்போது அவரை ஏதும் செய்யாமல் அவருடைய கையில் ஊர்ந்து கொண்டிருந்தது தான் இங்கே அதிசயம். அவர் இறந்து விட்டதாக சொன்ன போது ஏனோ எனக்கு இது நினைவில் வந்தது.
ஒரு மாலை வாங்கி கொண்டு அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களும் அவருடைய வீட்டிற்கு சென்ற போது நானும் சென்றேன். பெரிதாக அவருக்கு உறவினர்கள் இல்லாததால் அவ்வளவாக கூட்டமில்லை. ஒரு பெஞ்சில் அவருடைய நீண்ட உடல் கிடத்தப்பட்டிருக்க அவருடைய உடலில் ஒன்றிரண்டு மாலைகள் இருந்தன. தலைமை ஆசிரியர் அவருடைய உடலுக்கு மாலை அணிவித்து மரியாதையை செய்தவுடன் எனக்கு சிறிது துக்கம் தொண்டையை அடைத்தது. கண்களில் கண்ணீர் முட்டியது. ஏனோ அவருடைய முகம் அழகாக இருப்பது போல எனக்கு தோன்றியது. ஆம் அவர் அழகு ராஜாதான். அழகு என்பது புறத்தோற்றம் தொடர்புடையது மட்டும் இல்லை தானே.......
-ஆனந்தகுமார் முத்துசாமி.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.