Published:Updated:

ஒத்தை வீட்டு அரசி! - சிறார் சிறுகதை

Representational Image
Representational Image

‘ராஜா...ராஜா...ராஜா…’ அவள் பெருங்குரலெடுத்துக் கூப்பிட்டும், ராஜாவைக் காணவில்லை.’எங்கே போனான்?’ என்று அவள் மனது பதைக்க ஆரம்பித்தது.வீட்டை நோக்கி ஓட்டமும் நடையுமாய்... வந்தாள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

லதா பஸ்ஸை விட்டுக் கீழே இறங்கும்போதே இருட்டிவிட்டது. 9 ஆம் நம்பர் பஸ் அன்றைக்கு லேட்.மில் ஸ்டாப்பில் அவள் மட்டுமே இறங்க, பஸ் உடனே கிளம்பிவிட்டது. கோடை காலமாக இருந்ததால், எதிரே வற்றிக் கிடக்கும் வாய்க்காலில் இறங்கி, நாலைந்து வயல்களின் ஊடே புகுந்து போனால் வீடு வந்து விடும். இது தண்ணிக் காலம் என்பதால் அப்படிப் போக முடியாது. சாலையில் கொஞ்ச தூரம் ஊர் நோக்கிப்போய் வலப்புறம் திரும்பினால் மரப்பாலம் வந்து விடும். பாலத்தில் ஏறி இறங்கி, பெரிய வரப்பில் நேராகப் போனால் அவள் வீடு வந்து விடும்.

வாய்க்காலுக்கு அப்பால் அவர்கள் வீடு மட்டுந்தான். ஒற்றையாக, தனியாக இருக்கும். ஒற்றையாக இருப்பதால் ஊரார் வாயில் அது ஒத்தை வீடாகி விட்டது.

Representational Image
Representational Image

ஊரை விட்டுத் தள்ளித் தனியாக இருந்தாலும்,அருகில் மில் பஸ் ஸ்டாப். சாலையில் சற்று நடந்தால் சிறிய கடைத்தெரு என்று வசதியான இடந்தான். வயல்களுக்கு நடுவே வீடு இருப்பதால், பயிர்க் காலங்களில் ‘ஏசி’ யில் இருப்பது போல இருக்கும். மூணாறில் தேயிலைத் தோட்டங்களுக்கு இடையே இருக்கும் தங்குமிடங்களைப் போல், அவ்வளவு அழகாக இருக்கும்.ஆடி மாதத்தில் வீட்டைச் சுற்றியுள்ள அத்தனை வயல்களும் தண்ணீருடன் இருக்க, அடுத்த மூன்று மாதங்களுக்கு ஒரே பசுமையும்,குளுமையுமாகத் தூள் கிளப்பும்.

நான்காவது மாதத்தில் பயிர்கள் முற்ற ஆரம்பித்து நெற்கதிர்கள் தங்க நிறம் காட்ட, அதுவே ரொம்பவும் ரம்மியமாக இருக்கும். கோடையில் மட்டுந்தான் கொஞ்சம் சூடு தெரியும். அவர்கள் வீடு கீற்றால் வேயப்பட்டு, கீற்றைப் பாதுகாக்க ஜம்பந்தட்டையும் போடப்பட்டுள்ளதால் சூடு உள்ளே இறங்காது.தெற்கு நோக்கிய வீடு என்பதால் காற்றுக்கும் குறைவிருக்காது.

தன் ஆறு மா நிலத்தைப் பாதுகாக்க வந்த அப்பா,அந்த இடம் பிடித்துப் போக, அங்கேயே இந்த வீட்டைக் கட்டி விட்டதாக அம்மா சொல்வார். அவர்கள் இங்கே வந்த பிறகுதான் லதா பிறந்தாளாம். தன் நிலத்தைச் சாகுபடி செய்த பிறகு,அப்பா கூலி வேலைக்குச் சென்று விடுவார். அம்மாவுக்கும் கூலி வேலைதான்.எனவேதான் லதாவை சிரமம் தெரியாமல் வளர்த்து,டவுன் பள்ளிக் கூடத்திற்கும் அனுப்புகிறார்கள். லதா படிப்பில் சுட்டி. பத்தாம் வகுப்பில் நானூற்றுச் சொச்சம் மார்க் வாங்கி, பள்ளியில் முதலாவதாக வந்தாள். +2 வைத் தொடர்ந்தபோதுதான் இந்தக் கொரோனா வந்து எடக்கு செய்ய ஆரம்பித்தது.

Representational Image
Representational Image

அவளுக்குப் பிறகு பிறந்த ஆண் குழந்தை, ‘ராஜா’விஷக் காய்ச்சலில் இறந்து போக, குடும்பமே சோகத்தில் வாடியது.லதாவால் தன் தம்பியின் பிரிவைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. திடீரென இரவில் எழுந்து அழ ஆரம்பித்து விடுவாள். அம்மாவும், அப்பாவும்தான் தங்கள் சோகங்களை மறைத்துக் கொண்டு அவளுக்கு ஆறுதல் சொல்லித் தூங்க வைப்பார்கள்.

அந்தத் துயரத்திலிருந்து அவள் மீண்டு வரப் பல மாதங்கள் ஆகி விட்டன. அம்மா, அப்பாவுக்கு, தானே மகளாகவும்,மகனாகவும் இருப்பதென்று உறுதி பூண்டு படிக்க ஆரம்பித்தாள். அதுதான் தன்னை உயரத்திற்குக் கொண்டு செல்லும் என்பதை அவள் நன்றாகவே உணர்ந்திருந்தாள். தாயும் ஆனவர் போல், அவள் தம்பியுமாகி நின்றாள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வீட்டில் வளர்த்த ஆடு, மாடுகள் ‘கஜா’புயலால் பாதிப்படைந்துபோக, அப்பா புதிதாக இரண்டு வெள்ளாடுகளை வாங்கி வந்தார். அந்த ஆடுகளில் ஒன்று போட்ட கிடாக்குட்டி அவளைக் கவர, அதற்கும் அவளைப் பிடித்துப்போக, அதற்கு இறந்து போன தன் தம்பியின் பெயரான ‘ராஜா’ வையே பெயராக வைத்தாள். சின்னக் குட்டியாய் இருந்த போதிலிருந்தே ராஜா அவளுக்கு நெருக்கமாகி விட்டான். அவள் பள்ளிக்குச் செல்கையில் மரப்பாலம் வரை வந்து வழியனுப்புவான்.

ஒரு முறை பாலத்தையும் தாண்டி வந்தபோது,சாலையில் வேகமாகச் சென்ற ஸ்கூட்டர் அவன் கால்களைப் பதம் பார்க்க,நல்ல வேளையாகச் சிறு காயத்துடன் தப்பித்துக் கொண்டான். இரண்டு மூன்று நாட்களாக அவன் சரியாகச் சாப்பிடாமல் கஷ்டப்பட்டபோது அவளும் ஒழுங்காகச் சாப்பிடாமல் துன்பத்தில் உழன்றாள். அதன் பிறகுதான் பாலத்திற்கு அப்பால் அவன் வரக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்.

Representational Image
Representational Image

விடுமுறை நாட்களில் அவள் விளையாடுவதெல்லாம் அவனுடன்தான். அவனுக்குச் சில வார்த்தைகள் மூலம் அவள் கட்டளையிட்டால் அவன் அப்படியே ஃபாலோ பண்ணு

வான்! ‘ஸ்டாப்’ என்றால் நிற்கவும்,’ரன்’ என்றால் ஓடவும் கற்றுக் கொடுத்திருந்தாள்.

சில சமயம் அவனிடம் அவள் பொய்க் கோபம் காட்ட,அவனோ அவளைச் சுற்றிச் சுற்றி வந்து அவள் முகத்தோடு தன் முகம் வைப்பான்!

அவள் சாலையைக் கடந்து மரப்பாலத்தில் ஏறியபோதே, அவளையும் அறியாமல் அவள் கண்கள் ராஜாவைத் தேடின. தினமும் பஸ் சத்தம் கேட்டதும் வீட்டிலிருந்து ஓடி வந்து பாலத்திற்கருகில் நிற்பான். அவளும் அவனுக்குப் பிடித்த பிஸ்கட்டையோ, வடையையோ ரெடியாகக் கையில் வைத்திருப்பாள்.அவற்றையெல்லாம் சாப்பிடச்

சிறு வயதிலேயே பழக்கி விட்டாள்.

வீட்டிற்கு வரும் அவள் தோழிகள் பொய்யாக அவளை அடிக்க, அவன் ஓடிச் சென்று அவர்களை முட்டுவான்.அப்பொழுது கொம்பெல்லாம் முளைக்கவில்லை. இப்பொழுதோ... சார் வளர்ந்த கொம்புகளுடன் ஆஜானுபாகுவாய் வலம் வந்து கொண்டிருக்கிறார். அவளுக்கு அதில் மிகுந்த திருப்தி.அவள் தோழிகளில் ஒருத்தியே அவளை ‘ஒத்தை வீட்டு அரசி’ என்றழைக்கத் தோழிகள் மத்தியில் அதுவே பிரபலமாயிற்று!

‘ராஜா...ராஜா...ராஜா…’ அவள் பெருங்குரலெடுத்துக் கூப்பிட்டும், ராஜாவைக் காணவில்லை.’எங்கே போனான்?’ என்று அவள் மனது பதைக்க ஆரம்பித்தது.வீட்டை நோக்கி ஓட்டமும் நடையுமாய்... வந்தாள்.

-வாசலிலும் காணவில்லை!

-கொட்டகைக்கு ஓடினாள்! ம்ஹூம்... இருட்டு வேறு…

- உள்ளே ஓடிப்போய் கொட்டகை லைட்டைப் போட்டு விட்டு, ஓடிப்போய்ப் பார்த்தாள்.

-இல்லை...இருட்டையும் துழாவிற்று அவளது கண்கள்...கொட்டகைக்குள்ளும் இல்லை…

அதற்குள் அவள் அம்மா வெளியே வந்து,’என்ன லதா...வந்ததும் வராததுமா எதை இப்பிடித் தேடி அலையறே?’

Representational Image
Representational Image

‘ராஜாவைத்தாம்மா!எங்கயுமே காணுமே...நீங்களாவது பார்த்தீங்களா?’

‘ஓ! அதுவாம்மா...அதை அப்பா வித்துட்டாரம்மா!...’ அதற்கு மேலும் அவள் ஏதோ சொல்லப்போக... ஆனால் எதையும் காதில் வாங்கும் நிலையிலில்லாத லதா, ‘என்னம்மா சொல்றீங்க...அவன் என்னோட தம்பீம்மா... ஒங்ககிட்ட பலமுறை சொல்லியிருக்கேனே... செத்துப்போன என் தம்பி கெடைச்சுட்டான்னு…. நீங்க என்னடான்னா வித்துட்டோம்னு ஈசியா சொல்றீங்க!...எங்கம்மா அப்பா?...’

லதாவுக்கு ஆத்திரமும் அழுகையும் பீறிட்டன.

‘அவரு சாயந்திரமா டவுனுக்குப் போனாரு...வந்திடுவாரு...நீ கை,காலைக் கழுவிட்டு வா... சாப்பிடலாம்!’என்ற அம்மாவை கோபமாகப் பார்த்தபடி... அவள் வீட்டிற்குள் போனாள்.

படுக்கையில் படுக்கவும் முடியவில்லை...தூங்கவும் முடியவில்லை... நிற்கவோ, நடக்கவோ கூட மனம் விரும்பவில்லை.

பள்ளியில் அவளுக்குத் தமிழாசிரியை ‘பூங்கொடி’யை ரொம்பவும் பிடிக்கும்.

பூங்கொடி பாடம் நடத்தும் விதம் எல்லோருக்குமே பிடிக்கும்.’தொடர் நிலைச் செய்

யுள்’களை நடத்தும்போது தொடர்புடைய பிற செய்யுள்களையும் சொல்லுவார். கம்பராமாயணம் நடத்துகையில், லட்சுமணன் போர் முனையில் மயங்கிக் கிடப்பதைப் பார்த்த சீதை, செய்வதறியாது திகைத்துச் சோர்ந்ததைக் கூறி விட்டு, ’ஏதாவது ஒரு சந்தர்பத்தில்தான் இதனை நாம் முழுதாக உணர முடியும்’ என்று அவர் கூறியதன் பொருள் இப்பொழுது லதாவுக்குத் தெளிவாய் விளங்கிற்று. ’அன்பான ஆடே இப்படி மனதை அலைக் கழிக்கிறதென்றால்,சீதை எப்படியெல்லாம் துடித்திருப்பார்’ என்ற எண்ணம் அடி மனத்தில் தோன்றி அலைக்கழித்தது.

அந்தப் பாடலை ஏற்கெனவே அவள் மனப்பாடம் செய்திருந்தாள்.

விழுந்தாள் எழுந்தாள் உடல்முழுதும் வியர்த்தாள்

அயர்த்தாள் வெதும்பினாள்! கொழுந்தா என்றாள்!

அயோத்தியர் தம் கோவே என்றாள்!

எவ்வுலகும் தொழும் தாள் அரசே ஓ! என்றாள்!

சோர்ந்தாள் அரற்றத் தொடங்கினாள்!’

மனதுக்குள் அந்தப்பாடல் ஓட,சீதைக்கு அனுமன் உதவியது போல,தனக்கு யார்

உதவுவார்கள் என்று எண்ணிப் பார்த்தாள்!

இரவு கடைசி பஸ்ஸில் வந்த அப்பாவிடம் விபரம் கேட்டாள்.

‘ நீ பிரியமா இருந்தது தெரியும்மா...இருந்தாலும் அது ஆடுதானே!நடவு போட நான் கேட்ட எடத்திலயெல்லாம் கடன் கெடைக்கலம்மா. நம்ம கீதாரி, சாமிக்கு வெட்ட எங்கெங்கயெல்லாமோ அலைஞ்சு திரிஞ்சி, ஒரு எடத்லயும் கெடைக்காமக் கடைசியாத்தாம்மா இங்க வந்தாரு. நம்ம கிடாயைப் பார்த்ததும் அவருக்கு ஒடனே பிடிச்சிடுச்சி... சாமிக்குத் தாம்மா கொடுத்திருக்கேன். அவரு கொடுத்த பணத்லதான், டவுனுக்குப் போயி இந்த பூச்சி மருந்தெல்லாம் வாங்கியாந்தேன்!’ என்று அவர் எதார்த்தமாகப் பேசினார்.

‘சாமிக்கு வெட்ட…’என்று அவர் சொன்னதுமே அவளுக்குப் பாதி உயிர் போயிற்று.

இருந்தாலும் பொறுமையாக,’திருவிழா எப்பப்பா?’ என்று கேட்டாள்.

‘அதுக்கு இன்னும் மூணு நாள் இருக்குதும்மா!’ என்றார் அவர்.

அவளுக்கு சற்றே உயிர் வந்தது.

இரவெல்லாம் அழுதபடி,தன்னையும் அறியாமல் பின்னிரவில் உறங்கிப் போனாள்.

Representational Image
Representational Image

காலையில் 8.45 பஸ்ஸுக்கே கிளம்பி விட்டாள்.டவுனுக்குப் போய் தன் தோழியைப் பார்த்தாள்.இரண்டு பேரும் பலமாக யோசித்த பிறகு அந்த முடிவுக்கு வந்தார்கள்.

அடுத்த நாள்... கலெக்டர் ஆபீசில் மனு கொடுக்கும் வரிசையில் முதலாவதாக லதா நின்றாள்.கலெக்டர் வரும்போதே,பருவப் பெண்ணான அவள் கண்ணீருடன் நிற்பதைப் பார்த்து விட்டார். அருகில் அழைத்து,கையில் இருக்கும் மனுவை வாங்கியபடியே, ‘என்ன வேணும்னு சொல்லும்மா! என்னை உன் அண்ணனா நெனச்சுக்க...பயப்படாம எதுவா இருந்தாலும் சொல்லு!’ என்றார்.

‘அண்ணனிடம்,தம்பியைக் காப்பாற்றச் சொல்வது எளிதாயிற்றே!’ என்று எண்ணி, அவள் அழுகையை அடக்கியபடி,தன் குடும்பச் சூழலையும்,’ராஜா’ வைத் தன் தம்பியாகவே வளர்த்ததையும் சொல்லி,எப்படியாவது ராஜாவைக் காப்பாற்றித் தரும்படியும் மன்றாடிக் கேட்டுக் கொண்டாள்.

அவளின் அன்பையும்,இரக்க குணத்தையும் உணர்ந்த கலெக்டர்,தான் அவள் விருப்பத்தை நிறைவேற்றுவதாகக் கூறி விடை கொடுத்தார்!

கலெக்டரின் பாசமும்,உறுதியான வாக்குறுதியும் அவளுக்குத் திருப்தியளித்தாலும், மனதின் ஓரத்தில் ஒருவிதப் பதற்றம் இருந்து கொண்டேயிருந்தது. ‘கலெக்டர் அணுகும் வரை ராஜாவின் உயிருக்கு எந்தவிதப் பங்கமும் வரக் கூடாது’ என்று, குல தெய்வம், இஷ்ட தெய்வம் மற்றும் நட்சத்திரத்திற்கான தெய்வம் என்று மூன்று தெய்வங்களையும் அவள் மாறி மாறி வேண்டிக் கொண்டாள்!

Representational Image
Representational Image

நிமிடங்கள் கூட நீண்ட நேரமாகத் தெரிந்தன. கண்ணை மூடினால், ராஜாவின் கழுத்தில் மாலை போட்டு இழுத்துக் கொண்டு போவதாகவே கனவு வந்தது. எப்படியோ கஷ்டப்பட்டு நேரத்தைக் கடத்தினாள்.

மூன்றாம் நாள் காலை! திடீரென சாலையில் கூட்டம் தெரிந்தது. மரப் பாலத்திற்கு அருகில் கார் வந்து நிற்பது தெரிந்தது. முன்னும்,பின்னும் சில வாகனங்களும் வந்து நின்றன. என்னவென்று பார்க்க எழுந்து வந்த அவளுக்கு, மரப்பாலத்தில் கலெக்டர் நடந்து வருவது நன்றாகத் தெரிந்தது. அவருக்குப் பின்னால் சிறிதாக ஒரு கூட்டம் தெரிந்தது.

உள்ளே ஓடிப்போய் இருந்த ஒரு நாற்காலியையும் தூசு துடைத்து எடுத்துக் கொண்டு அவள் வாசலுக்கு வரவும்,கலெக்டர் வரவும் சரியாக இருந்தது. வாசலில் நாற்காலியைப் போட்டு விட்டு இரு கைகளாலும் கும்பிட்டாள்.

கும்பிட்ட அவள் கைகளைச் சேர்த்துப் பிடித்தபடி ‘அண்ணனை எதுக்கும்மா கும்பிடறே! நான் தனியா வர்ல... உன்.. சாரி..சாரி... நம்ம.. பாசத் தம்பியையும் அழைச்சிக்கிட்டு வந்திருக்கேன்!’ என்று சொல்லிப் பின்னால் பார்க்க, டவாலி கையில் ராஜா

வைப் பிடித்திருந்தார். அந்த ஆட்டுக் கிடா-ராஜா,அவளைப் பார்த்ததும் பாய்ந்தோடி வர, அவளும் ஓடிப்போய் அதனை இறுகக் கட்டிப் பிடித்தபடி ஆனந்தக்கண்ணீர் சிந்தினாள்.

அதற்குள் கலெக்டர் வந்த செய்தி ஊருக்குள் காட்டுத் தீயாய் பரவ, கூட்டம் சேர்ந்துவிட்டது.

கலெக்டர், லதாவின் அப்பாவுக்கு வங்கிக் கடனுக்கும் ஏற்பாடு செய்திருந்தார்.

தோழிகளால் மட்டுமே ஒத்தை வீட்டு அரசி என்று அழைக்கப்பட்ட லதா, இப்பொழுது ஊராருக்கும் ஒத்தை வீட்டு அரசி ஆகிவிட்டாள்.

‘இப்படி நடக்குமா?’ என்று கேட்கிறீர்களா?

‘நடந்திருக்கிறதே!’

-ரெ.ஆத்மநாதன்,

மெக்லீன்,அமெரிக்கா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு