Published:Updated:

கடைசி குயில்! | சிறுகதை | My Vikatan

Representational Image ( Vikatan Photo Library : Vijay.T )

உள்ளே பெட்ரூமில் அமர்ந்து லேப்டாப்பை நோண்டியபடி தாத்தா பேத்தி உரையாடலை கவனித்த மருமகள் ஒருகணம் ஜன்னல் வழியாக மாமாவை எட்டிப்பார்த்து சிரித்தாள். வசமாக சிக்கிக்கொண்டார் மாமா என்று நினைத்துக்கொண்டு...

கடைசி குயில்! | சிறுகதை | My Vikatan

உள்ளே பெட்ரூமில் அமர்ந்து லேப்டாப்பை நோண்டியபடி தாத்தா பேத்தி உரையாடலை கவனித்த மருமகள் ஒருகணம் ஜன்னல் வழியாக மாமாவை எட்டிப்பார்த்து சிரித்தாள். வசமாக சிக்கிக்கொண்டார் மாமா என்று நினைத்துக்கொண்டு...

Published:Updated:
Representational Image ( Vikatan Photo Library : Vijay.T )

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

விவசாய கூலியான அந்த தாத்தாவின் காதில் நரைமுடிகள் முளைத்து நீண்டிருந்தன. தாத்தாவுக்கு வலிக்காதபடி அதை மெதுவாக தடவிப் பார்த்தாள் கவிக்குட்டி. தாத்தாவுக்கு கூசுவதுபோல் இருந்தது. அந்த மதிய பொழுதில்... கயிற்றுக்கட்டிலில் வெறுமனே கண்களை மூடி ஆழ்ந்த சிந்தனையிலிருந்த தாத்தா பேத்தியின் குறும்புத்தனத்தால் மெல்ல எழுந்து அமர்ந்தார். 

கவிக்குட்டியை தூக்கி கட்டிலில் அமர வைக்க, "தாத்தா... எனக்கொரு டவுட்..." என்றாள் கவி. 

"என்ன டவுட்..." 

"உங்க வயிறு பானை மாதிரி பெருசா இருக்குள்ள... உள்ள என்ன இருக்கு? ஏன் கேட்குறேன்னா லேடிஸ்சுங்க வயிறு பெருசா இருந்துச்சுன்னா உள்ள குட்டி குழந்தைங்க வளருதுனு அர்த்தம்... ஆனா பாய்ஸ்சோட பானை வயித்துல என்ன தான் வளரும்?" 

Representational Image
Representational Image
Vikatan Photo Library

கட்டிலிலிருந்து எழுந்து சென்று கண்ணாடியை பார்த்து நரைத்த மீசையை சீவி தலையை வாரிக்கொண்டு கவிக்குட்டி அருகே வந்தமர்ந்தார். 

"நான் என் வயித்துக்குள்ள என்ன வளக்குறேன்னு தெரியுமா?"

"ம்... சொல்லுங்க சொல்லுங்க..."

"என் வயித்துக்குள்ள ஒரு காடு இருக்கு... அந்தக் காட்டுக்குள்ள யானை, புலி, கரடி, நாய், பன்னி அதோட குட்டிங்க... அணிலு, மயிலு, கிளி, நாரை அதோட குஞ்சுங்க எல்லாமே வளருது..."

"ஹையோ நிஜமாவா? சிங்கமும் உங்க வயித்துக்குள்ள வளருதா..."

"ஆமா... சிங்கமும் வளருது... வேணும்னா என் வயித்துல காது வச்சு கேளேன்..."

கவிக்குட்டி தாத்தாவின் பானை வயிற்றில் காது வைத்துக் கேட்டாள். 

தாத்தா சிங்கம் போல கர்ஜிக்க... 

வயிற்றில் காதை வைத்தபடியே, 

"சூப்பர்... தாத்தா..." என்றாள். 

தாத்தா மயில்போல அகவ...

மீண்டும் "அய்யோ... செம தாத்தா..." என்று வியந்தாள். 

"தாத்தா... உங்க வயித்துக்குள்ள தூக்கணாங்குருவி இருக்கா..." என்று கவிக்குட்டி கேட்க, 

தூக்கணாங்குருவி போல கத்த தெரியாத தாத்தா திருதிருவென முழித்தார். 

என்ன சொல்லி தப்பிப்பதென தெரியாத தாத்தா... 

"தூக்கணாங்குருவி தூங்கிடுச்சு..." என்று பொய் சொல்ல... 

உள்ளே பெட்ரூமில் அமர்ந்து லேப்டாப்பை நோண்டியபடி தாத்தா பேத்தி உரையாடலை கவனித்த மருமகள் ஒருகணம் ஜன்னல் வழியாக மாமாவை எட்டிப்பார்த்து சிரித்தாள். வசமாக சிக்கிக்கொண்டார் மாமா என்று நினைத்துக்கொண்டு... தாத்தா பேத்தி விளையாட்டை அவர்களுக்கு தெரியாமல் அமைதியாக ஒளிந்திருந்து பார்த்தார். 

Representational Image
Representational Image

தாத்தாவின் பானை வயிற்றில் மீண்டும் காதை வைத்துக்கொண்டு... 

தாத்தா புலி... 

தாத்தா யானை...

தாத்தா கரடி...

தாத்தா குரங்கு... 

என்று அவள் வரிசையாய் கேட்க... எல்லா விலங்குகளை போல குரல்கொடுத்தார் தாத்தா. 

ஒருசில உயிரினங்களை போல தாத்தாவுக்கு குரல் கொடுக்க தெரியாதபோது அந்த உயிரினங்கள் எல்லாம் தூங்கிவிட்டதாகவும் அவைகள் மௌனவிரதம் இருப்பதாகவும் பொய் சொல்லி தப்பித்தார். மருமகள் அவர்கள் விளையாட்டை பார்த்துவிட்டு மெல்லிய புன்னகையோடு வேலையை தொடர்ந்தார். 

தாத்தாவின் வயிற்றை நினைத்து அசந்து போனாள் கவிக்குட்டி. அன்று மாலை தாத்தாவின் ஸ்கூட்டியில் முன்புறம் நின்றபடி, தள்ளுவண்டியில் விற்கும் வறுத்த கடலையை நியூஸ்பேப்பரில் கூம்புவடிவில் சுருட்டி தருவதை ஆசையாக வாங்க பயணிக்கும்போது, எதிரே தெரிந்த மாமாக்கள், தாத்தாக்களின் பானை வயிறுகளை பார்த்தாள். எல்லோருடைய வயிற்றுக்குள்ளும் காடும் அந்தக் காட்டிற்குள் யானை, புலி, சிங்கம் எல்லாம் வளர்ந்துகொண்டிருப்பதாகவும் நினைக்க தொடங்கினாள் கவிக்குட்டி. 

வறுத்த கடலை வாங்கி தின்றுவிட்டு வீடு திரும்பும்போது ஸ்கூட்டியில் நின்றபடி பயணித்தவள் தாத்தாவை இனிமேல் ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ள வேண்டுமென உறுதியெடுத்தாள். வீட்டிலிருக்கும்போது தாத்தா தண்ணி கேட்டால் குடுகுடுவென ஓடிப்போய் மோந்து வருவாள்.

Representational Image
Representational Image

தாத்தா தண்ணி குடித்தால் தான் அவர் வயிற்றுக்குள் இருக்கிற செடிகொடிகள், மரங்கள், உயிரினங்கள் எல்லாம் செழிப்பாக வளரும் என நம்பினாள்.

பலநாட்களாக தொடர்ந்த இந்த தாத்தா பேத்தி விளையாட்டில் மருமகளும் மகனும் தலையிடுவதில்லை. அன்றொரு நாள் பேத்தி பிரைமரி ஸ்கூலிற்குச் சென்றிருந்த மதிய வேளையில், வீட்டிற்கு வெளியே நின்று போன் பேசும்போது, சாலையில் நடுத்தர வயது பெண் ஒருவர் தள்ளுவண்டி தள்ளி வருவதை கவனித்தார்.

மண்ணால் செய்யப்பட்ட சாமி சிலைகள், விளக்குகள், வீட்டு சாமான்கள், உண்டியல்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் எல்லாம் அந்தப் பெண்ணின் வண்டியில் இருந்தன. அவற்றிற்கு நடுவே மண்குயில் ஒன்று இருப்பதை பார்த்து அதை எடுத்து திருப்பி திருப்பி பார்த்தார். 

"இதென்னமா குருவி தலைலயும் வால்லையும் ஓட்டை இருக்கு..." என்று தள்ளுவண்டி பெண்ணிடம் கேட்க, 

"இது மண்குயிலுங்க... இதோட வாலுல வாய்வச்சு ஊதினா விசில் மாதிரி சத்தம் கேட்கும்... தண்ணி ஊத்தி ஊதுனா குயில் மாதிரியே சத்தம் வரும்..." என்று சொல்லி அதில் தண்ணீரை ஊற்றி தாத்தாவிடம் ஊத கொடுத்தார் அந்தப்பெண். தாத்தா மண்குயிலின் வாலில் வாய் வைத்து ஊத அந்தச்சத்தம் காதுக்கு குளுமையாகவும் இனிமையாகவும் இருந்ததால் "அட" என்று வியந்து முகமலர்ந்து, அதை தன் பேத்திக்கு ஆசையாக வாங்கினார்.

அந்த வண்டியிலிருந்த கடைசி மண்குயில் அது. ஆலங்கட்டி மழைத்தண்ணியை ஆசையாக பிடித்து அதில் உருவாக்கிய மண்குயில்களில் அதுவும் ஒன்று. தயாரித்து வருட கணக்கில் ஆகிறது. மண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருட்களை யாரும் பெரிதாய் விரும்புவதில்லை என்பதால் மண்குயில் தயாரிப்பை இதோடு நிறுத்திவிடலாம் என்று முடிவு செய்து அந்தக் கடைசி மண்குயிலின் விற்பனைக்காக பலநாட்களாக காத்திருந்தார் அந்தப் பெண்.

Representational Image
Representational Image

"ஏய் மண்குயிலே... உன் கூட பொறந்தவங்களாம் ஆளுக்கொரு திசைல பறந்து போயிட்டாங்க... நீ மட்டும் ஏன் ஒத்தையா என் வண்டில உக்காந்திருக்க... யார்கிட்டயாவது விற்பனை ஆகி அவங்க வீட்ட குதூகல படுத்து போ..." 

"ஏய் மண்குயிலே... நீ தான் என்கிட்ட இருக்குற கடைசி பீசு... உனக்கென்ன என்னைய ரொம்ப பிடிச்சு போச்சா... என்கிட்டருந்து போகவே மாட்டிங்குற..."

என்று ஒவ்வொரு நாள் இரவும் அந்த மண்குயிலிடம் தனிமையில் பேசியும் இருக்கிறார் அவர். ஏனோ அந்தக் கடைசி மண்குயில் இன்று தன்னைவிட்டு போனதும் தன்னுடனே இருந்த ஒருத்தர் இனிமேல் திரும்ப வரமாட்டார் என்பதை போலுணர்ந்தார் அவர். 

பிரைமரி ஸ்கூலிலிருந்து திரும்பி வந்த பேத்தியிடம் அந்த மண்குயிலை கொடுத்தார் தாத்தா. அப்போது முதல் வீட்டிற்குள் மண்குயிலின் சத்தம் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்தது. 

அடுத்தநாள் மதியம்... 

வயல் வேலைகளை முடித்துவிட்டு வந்த தாத்தா கயிற்றுக்கட்டிலில் உள்ள கயிறுகளை அவுத்து மீண்டும் இறுக்கி கட்டிவிட்டு படுத்து உறங்கினார். அப்போது அவரது காதருகே சென்று தண்ணியால் நிரப்பப்பட்ட மண்குயிலை ஊதினாள். உடலெங்கும் சிலிர்த்துப்போக தாத்தா விசுக்கென எழுந்தார். தாத்தா அப்படி விசுக்கென எழுவது அவளுக்கு சிரிப்பாய் இருந்தது. 

Representational Image
Representational Image

தாத்தா அவளை துரத்த... மண்குயிலை ஊதிக்கொண்டே நழுவி நழுவி ஓடினாள். சரியாக அப்போது "மாமா... தேங்கா ஒன்னு உரிச்சு தாங்க..." என்று மருமகள் வீட்டிற்குள் இருந்தபடி சத்தமாய் சொல்ல, தேங்கா தண்ணி குடிப்பதற்காக கவிக்குட்டி தாத்தா அருகே பூனை போல் மெதுவாய் வந்தாள். "மாட்டிக்கிட்டியா..." என்று தாத்தா அவளை பிடித்துக்கொண்டார். தாத்தா தேங்காய் உரித்து முடித்து அதை உடைக்க... கவிக்குட்டி வாயை ஆவென்று காட்டினாள். அவள் வாயிற்குள் தேங்காய் தண்ணியை விழச்செய்துவிட்டு மருமகளிடம் உடைத்த தேங்காய் மூடிகளை நீட்ட கவிக்குட்டி மீண்டும் தாத்தாவின் காதில் மண்குயிலை ஊதிவிட்டு ஓடினாள். 

மருமகளுக்கு அந்த மண்குயிலின் சத்தம் ரொம்பவே பிடித்துப்போக... அன்று நள்ளிரவு... கவிக்குட்டியும், மாமாவும், கணவரும் உறங்கும்போது அந்த மண்குயிலை மாடிக்கு எடுத்துச் சென்று சுற்றிமுற்றி பார்த்துவிட்டு நட்சத்திரங்களை பார்த்தபடி மெதுவாக ஊதிப்பார்த்தாள்.

நட்சத்திரங்கள் எல்லாம் வெள்ளை குயில்களாக மாறி தன்னைச்சுற்றி பறப்பதை போல உணர்ந்தாள். கோவாப்பழம் கோணப்புளியங்கா நவாப்பழம் எல்லாவற்றையும் சுவைத்து பார்த்த காலம் நினைவுக்கு வந்தது. தானும் சிறுமியாய் மாறியதை போல உணர்ந்து ஆசை தீர மண்குயிலை ஊதிப் பார்த்தவள், கீழே வந்து யாருக்கும் தெரியாமல் இருந்த இடத்திலயே அந்த மண்குயிலை வைத்துவிட்டு உறங்கினாள். மண்குயிலுக்குள் அவள் ஊற்றிய தண்ணீர் அப்படியே இருந்தது. 

Representational Image
Representational Image

அடுத்தநாள் அதிகாலையில் கவிக்குட்டிக்கு நேரமாக தூக்கம் தெளிந்தது. முதல் வேளையாக மண்குயிலை எடுத்துப் பார்க்க அதில் ஏற்கனவே நீர் நிரம்பியிருப்பதை பார்த்து குழம்பிப் போனாள். அம்மாவை சந்தேகமாகப் பார்த்தாள். அம்மாவுக்கும் சரியாக அப்போது தூக்கம் தெளிய... பெட்டிலிருந்தபடி கவியை எட்டிப் பார்த்தார். 

"என்னடி?"

"ஒன்னுமில்ல... இந்த மண்குயில் நைட்டு பறந்துபோயி எங்கயோ தண்ணி குடிச்சிட்டு வந்திருக்குது... அதான் அதோட வயித்துக்குள்ள நான் ஊத்துறதுக்கு முன்னாடியே தண்ணி நெரம்பிருக்கு..." என்று சொல்ல, "அப்பாடா... தப்பிச்சோம்..." என்று நினைத்தாள் அம்மா. 

கவிக்குட்டி, வெளியே தன் கயிற்றுக்கட்டிலில் படுத்து உறங்கிய தாத்தாவின் காதருகே சென்று நீர் நிரம்பிய மண்குயிலை ஊத தாத்தா எப்போதும் போல உடல் சிலிர்த்து எழுந்து அமர்ந்தார். 

தாத்தாவை பார்த்து... 

"தாத்தா... குயிலு தான் தினமும் நம்மள விடிய காத்தால எழுப்பி விடுது... அதான் உன் வயித்துக்குள்ள இருக்குற எல்லா ஜீவன்களையும் எழுப்பிவிட்டேன்..." என்று அவள் சொல்ல,

"ஆமா... ஒவ்வொரு காடும் குயில் சத்தம் கேட்டப்பறம் தான் உயிர் பெறுது..." என்று சொல்லியபடி எழுந்து வயல் வேலைக்குச் செல்ல ஆய்த்தமானார். அன்று வயல்வேலை முடிந்து வந்ததும் அவரிடம் சொல்லிவிட்டு கவிக்குட்டி, மருமகள், மகன் மூவரும் கோவிலுக்குச் சென்றிருந்தனர். விஷேச நாளான அன்று கோவில் வாசலில் பருவ பெண்கள் வரைந்திருந்த கோலமயிலை ஆச்சர்யமாய் பார்த்துவிட்டு... கோவில் கிணற்றிலுள்ள வண்ண வண்ண மீன்களை ஒன் டூ த்ரி என்று எண்ணிவிட்டு... அங்கிருந்த சாமி ஊஞ்சலில் ஏறி தூரி ஆடிவிட்டு... கோவில் காலண்டர் பேப்பரில் தாத்தாவுக்கு திருநீறு மடித்து வைத்துக் கொண்டாள் கவி. 

வீடு திரும்பியபொழுது அக்கம்பக்கத்தினர் தாத்தாவின் கட்டிலைச் சுற்றி நின்றுகொண்டிருந்தனர். தாத்தாவுக்கு பேச்சு மூச்சு இல்லை. 

"நீங்க போன கொஞ்ச நேரத்துல தலைச்சுத்தி கீழ விழுந்துட்டாரு...  பக்கத்துட்டூக்காரரு தண்ணி தெளிச்சு நீராரம் கொடுத்து பாத்தாரு... ஒன்னும் வேலைக்காகல..." என்று அவரது மகனிடம் சொன்னார் உறவுக்காரர். கவிக்குட்டி, தான் கொண்டுவந்த கோவில் திருநீறை தாத்தாவின் நெற்றியிலும் வயிற்றிலும் பூசிவிட்டு அவர் வாயில் கொஞ்சம் திருநீறு திணித்துவிட்டாள். தாத்தாவிடம் எந்த அசைவுமில்லை என்பதால் கவிக்குட்டியின் கண்களில் மிரட்சி தெரிந்தது. 

Representational Image
Representational Image

அந்தக் கிராமத்தில் வசிக்கும் மூக்கு டாக்டர் வந்து தாத்தாவின் நாடியை பிடித்து பார்த்துவிட்டு "இன்னிக்கு நைட்டுக்குள்ள முடிஞ்சிரும்" என்றார். மூக்கு டாக்டர் என்றால் மூக்கு ஸ்பெசலிஸ்ட்டெல்லாம் இல்லை. மூக்கு நீளமாக இருப்பதால் மூக்கு டாக்டர் என பெயர் பெற்றவர். அந்த மூக்கு டாக்டர் சொல்லிவிட்டால் அவ்வளவு தான் நிச்சயம் அது நடந்தே தீரும். அவ்வளவு அனுபவசாலி.

அவர் "பெரியாஸ்பத்திரிக்கு போங்க" என்று சொன்னால் எப்படியும் பிழைத்துக்கொள்வார் என்றர்த்தம். முடிஞ்சிடும் என்று சொல்லிவிட்டால் கண்டிப்பாக முடிந்துவிடும். அவர் முடிஞ்சிடும் என்று சொன்ன பிறகு யாரும் உயிர்த்தெழுந்ததாய் சரித்திரமே இல்லை. மகனும் மருமகளும் பதற்றத்துடனே உறவுக்கார பெரியவர்களுடன் அழுதபடி பேச... கவிக்குட்டிக்கு அன்று இரவு முழுக்க தூக்கம் வரவில்லை. தாத்தா இறக்க போகிறார் என்பதை எப்படியோ உணர்ந்துகொண்டாள். 

தாத்தா இறந்துவிட்டால்... 

அவர் வயிற்றுக்குள்ளிருக்கும் யானை, புலி, சிங்கம் அதன் குட்டிகள் எல்லாமே இறந்துபோய்விடும் என பதறியவள் தாத்தாவை எப்படியாவது உயிர்ப்பிழைக்க வைக்க வேண்டுமென யோசித்தபடியே இருந்தாள். நேரம் கடந்துகொண்டே இருந்தது. 

"நைட்டுக்குள்ள முடிஞ்சிரும்னு மூக்கு டாக்டரு சொன்னாப்ள... நடுச்சாமம் வந்துருச்சு... ஜீவன் எதுக்காகவோ இழுத்துட்டு இருக்குது..." என்று பொறுமையிழந்த பாட்டி ஒருவர் சொல்ல... 

தாத்தாவுக்கு பிடித்த பறையை கொண்டுவந்து வாசித்துக்காட்டினார்கள். பறையிசை கேட்டும் எழவும் இல்லை போகவும் இல்லை. சலங்கையை கட்டிக்கொண்டு வந்து கரகாட்டக்காரர் ஆட்டமாடி சலங்கை ஒலியை எழுப்ப அந்தச் சத்தம் கேட்டும் தாத்தாவிடம் அசைவில்லை. புல்லாங்குழல் சத்தம், வீரமாத்தி ஆயா பாடும் நாட்டுப்புற பாட்டு என்று இப்படியே தாத்தாவுக்கு பிடித்ததை எல்லாம் யோசித்து யோசித்து விசாரித்து விசாரித்து ஒவ்வொன்றாக செய்து பார்த்தனர். எதுவும் வேலைக்காகவில்லை. "போவமாட்டிங்குதே" என்று எல்லோரும் புலம்ப ஆரம்பித்துவிட்டனர். 

Representational Image
Representational Image
Sakthi Arunagiri.V

கவிக்குட்டி தனது மண்குயிலில் நீரை நிரப்பிக்கொண்டு வந்து தாத்தாவின் செவியில் உள்ள நரைமுடியை தடவிக்கொடுத்து, "தாத்தா... நீ செத்துப் போயிட்டா உன் வயித்துக்குள்ள இருக்குற யானை, புலி, சிங்கம் எல்லாமே செத்துப் போயிரும்... ஒவ்வொரு நாளும் குயிலு சத்தம் கேட்டுத்தான எல்லோருக்கும் உயிர் வருது... அந்த மாதிரி நீயும் உயிர்ப்பிழைச்சு வா..." என்று சொல்லி தாத்தா தனக்கு ஆசையாக வாங்கிக் கொடுத்த மண்குயிலை அவர் காதருகே வைத்து ஊதினாள். தாத்தாவுக்கு வழக்கம்போல உடல் சிலிர்த்தது. விரல்கள் துடித்தது. மூக்கு விடைத்தது. மூடிய இமைக்குள் கருவிழிகள் நான்கு திசைகளிலும் சுழன்றாட... வயிற்றுக்குள் எதோ ஒரு வேதியியல் மாற்றம் நடந்ததை போல உணர்ந்த தாத்தா... நடுங்கிய உதடுகளுடன்,

"கவிக்குட்டி... தாத்தா வயித்துக்குள்ள இப்ப பெரிய மயிலு தோகைய விரிச்சாட, குஞ்சு மயிலும் அதுக்கு பக்கத்துலயே குட்டி தோகைய விரிச்சாடுதுடி..." என்று கண்கள் மூடியிருந்தபடியே பேசினார் தாத்தா. அதைக்கேட்ட கிழவிகள் சிலர் மனதிற்குள் "ம்க்கும்" என்றனர்.

கவிக்குட்டிக்கு இப்போதுதான் தாத்தா வயித்துக்குள்ள இருக்குற எல்லாமே இனி உயிரோட இருக்கும் என்கிற மனநிம்மதி வந்தது. பட்டாம்பூச்சி ஒன்று காளை மாட்டை சுற்றிச்சுற்றி பறந்து அதை எழுப்பி துள்ளி திரிய வைப்பது போல... மரணம் வரை சென்ற தாத்தா பேத்தியின் மண்குயில் சத்தம் கேட்டு மெல்ல கண்களை திறந்தார். சுற்றி நின்றவர்களை கைத்தாங்கலாக பிடித்து எழுந்து அமர்ந்தார். 

மருமகளும் மகனும் கண்ணீரை துடைத்துக்கொள்ள... மரணத்திற்காக காத்திருந்த பெரியவர்கள் "போங்க போங்க... அந்த மனுசனுக்கு ஆயுசு கெட்டி..." என்று தங்களுக்குள் பேசி கவலையுடன் கலைந்து சென்றனர்.  

கவிக்குட்டி தாத்தாவின் பானை வயிற்றில் காதை வைத்து "தாத்தா சிங்கம்..." என்று சொல்ல...

சிங்கம் போல கர்ஜித்தார் தாத்தா.  

அந்தக் கடைசி மண்குயில் தாத்தாவின் கட்டிலுக்கடியில் அமைதியாக அமர்ந்திருந்தது. 

-----

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.