Published:Updated:

நான்காம் பிறை! | சிறுகதை | My Vikatan

தெருக்கூத்து

மொத்த கூட்டமும் திரை விலகும் கனத்திற்காக காத்திருக்க, நாரத கானசபை எனும் எழுத்து தாங்கிய திரை விலக மக்களின் ஆர்ப்பாட்டத்துடன் அரிச்சந்திர புராணம் கூத்து தொடங்கியது. ராஜபார்ட் ராஜவேலு அரிச்சந்திரனாக வர கரகொலி பெருகியது.

நான்காம் பிறை! | சிறுகதை | My Vikatan

மொத்த கூட்டமும் திரை விலகும் கனத்திற்காக காத்திருக்க, நாரத கானசபை எனும் எழுத்து தாங்கிய திரை விலக மக்களின் ஆர்ப்பாட்டத்துடன் அரிச்சந்திர புராணம் கூத்து தொடங்கியது. ராஜபார்ட் ராஜவேலு அரிச்சந்திரனாக வர கரகொலி பெருகியது.

Published:Updated:
தெருக்கூத்து

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

அவங்க வந்திட்டாங்க…….. ஊர் மக்கள் கண் முழுவதும் அந்த வில்லுவண்டியையும் அதிலிருந்து இறங்கிய ராஜபார்ட்டையும் அவனுடன் வந்திறங்கியவர்களையும் கிடைத்த இண்டு இடுக்கு வழியாக பார்த்து பிரமித்தன. கோயில் பூசாரி ராஜபார்ட்டுக்கு பட்டு பட்டம்கட்டி, மாலையிட்டு, சூடம் காட்டுவதை ஊர் பெரியவர்கள் பக்தியுடன் பார்த்தனர். சுத்துப்பட்டு ஊர் மக்கள் அனைவரும் புடைசூழ மேளதாளத்துடன் வெடி சத்தத்துடன் ஊருக்குள் நுழைந்தனர்.

மொத்த கூட்டமும் திரை விலகும் கனத்திற்காக காத்திருக்க, நாரத கானசபை எனும் எழுத்து தாங்கிய திரை விலக மக்களின் ஆர்ப்பாட்டத்துடன் அரிச்சந்திர புராணம் கூத்து தொடங்கியது. ராஜபார்ட் ராஜவேலு அரிச்சந்திரனாக வர கரகொலி பெருகியது. சற்று நேரத்திற்கு எல்லாம் மொத்த கூட்டமும் மெய் மறந்து போயினர்……

திடீரென ஏற்பட்ட சிறு சலனத்தில் கம்மாய் நீரில் பிறைநிலவு தத்தளிக்க அதை கண்டு தன் பழைய நினைவுகளிலிருந்து சற்று மீண்ட ராஜவேலு, கம்மாய் நீரிலிருந்து பார்வையை விலக்கி ஆகாயத்தில் மிதக்கும் பிறையை கண்டார். மூன்றாம் பிறை…… சில நிமிடங்களே நீடித்தாலும் பார்ககுறது அதிஷ்டம் என அனைவரும் காண துடிப்பது. ஒரு காலத்தில் நானும் உன்னை மாதிரிதான் என அவர் மனம் எண்ண துவங்கவும், ஊர் தலைவர் பாதையில் நடந்து வரவும் சரியாக இருந்தது.

தெருக்கூத்து
தெருக்கூத்து

என்ன? ராசவேலு தனியா கம்மாக்கரையிலே…., திருவிழாவுக்கு போகலையா, இல்லையா உங்கள பாக்கணும்னுதான்…. திருவிழாவில நம்ம கூத்தை பத்தி நீங்க ஒரு வார்த்தை சொன்னீங்கன்னா, போயி மத்த வேலையை பார்ப்பேனுங்க…..

ஏண்டா! அதான் மொத்த ஊரே சேர்ந்து இந்த வருஷம் திருவிழாவுக்கு அந்த சினிமா புகழ் நடனக்குழுவதான் புக் பண்ணனும்னு சொல்லி அதுவும் முடிவாயிச்சு. இப்ப போயி அதப்பத்தி பேசி ஆகிற வேலையை பாருடா…… எதை ரசிக்கிறாங்களோ அதத்தான் போட முடியும். இவன் என்னடான்னா…. கூத்து அது இதுன்னுட்டு…..

ஐயா உள்ளுர்ல நம்ம கூத்த போடலைன்னா மத்த ஊர்ல எப்படியா கூப்பிடுவாங்க….. இதவிட்டா வேற பொழப்பு. அதவிட வருசாவருசம் கூத்துகட்டிட்டு இப்ப எதுவும் இல்லாமல் …… அவன் குரலை கேட்க அவர் அங்கு இல்லை…… மூன்றாம்பிறை மட்டும் அவன் நிலையை உணர்ந்தவாறு மெல்ல மெல்ல தேய்ந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ராசவேலுவின் மொத்த குடும்பமும் கூத்து கட்டியே பொழைக்கும் பரம்பரை. இவரு ராசபார்ட்டுன்னா இவர் பொண்டாட்டிதான் ஸ்திரிபார்ட்…… மகள் தான் கூத்து டான்ஸர்…. அவளோட புருசன்தான் பபூன். அவங்கதான் கலகலப்பா அதேசமயம் நல்ல சிந்தனையுடன் பேசி நாடகத்தை துவக்குவாங்க.

பிறகு ஆரம்பிக்கிற கூத்து விடிய விடிய நடக்கும். மொத்த சனமும் அரிச்சந்திரன் காலத்துக்கே போயி அரிச்சந்திரனுக்காக கண்ணீர் விட்டு கொண்டிருப்பார்கள் மெய்மறந்து……. அது ஒரு காலம்…..

ஊர் தலைவரையும் தவறாக எண்ண முடியவில்லை ராசவேலுவால்… மக்களின் ரசனையும் மாறிடுச்சு….. பழத்தின் மதிப்பு விதைக்கு இல்லை என நினைத்தபடியே செய்வதறியாது வீட்டினுள் சென்ற ராஜவேலுவை அனைத்து கண்களும் ஏக்கத்துடன் பார்த்தன. அவர் கையை விரித்தபடியே துவண்டு கீழே விழ அனைவரும் பதறி அவரிடம் நெருங்கினர்.

சற்று சுதாரித்துவிட்டு அமைதியாக படுக்கையில் படுத்து பிடிவாதமாக கண்ணை மூடி தூங்க முயற்சித்தார்…. ஆனால் மனம் மட்டும் உறங்க மறுத்தது. காசு தேவைதான். அதுவும் இப்ப இருக்கிற குடும்ப கஷ்டத்தில ரொம்ப தேவை….. ஆனால் காசு மட்டும்தானா? அரிதாரத்தை பூசி மேடையில் ஏறினா மனசு பூரா நெறைஞ்சு….. அந்த சந்தோசம் இனி கிடைக்காதா? சோத்துக்காக கூத்த விட்டுட்டு வேற பொழைப்புக்கு போறதா? அதை நினைக்கவும் கண்ணீர் முட்டவும் அடக்கிக் கொண்டு கண் மூடினார். அவர் நிலையை உணர்ந்தவாறே அவர் குடும்பமும் நாளையை எண்ணி விடியலை நோக்கி எண்ணியவாறே கண் அயர்ந்தனர்.

தெருக்கூத்து
தெருக்கூத்து

ஒரு உண்மை கலைஞனின் உறக்கம் கூட காண்பவரை உள்ளம் கலங்க வைக்கும் என்பதை அந்த காட்சியை கண்டவர் உணரலாம்…

விடிந்து வெகு நேரமாகியும் யாவரும் செயலற்று படுக்கையிலே கிடந்தனர். ராசவேலுவின் மனைவி மட்டும் தன் ஸ்தரிபார்ட் உடையை தடவிக் கொண்டே மனதினுள் வள்ளியாக மாறி முருகனிடம் பொய் கோபம் காட்டி கொண்டிருந்தாள்.

சூரியன் உச்சியை நெருங்கும் நேரம் ராசவேலு படுக்கையிலிருந்து எழுந்தார். கட்டிலில் இருமியபடியே படுத்துக் கிடந்த தந்தையை பார்த்தார். கூத்திலே அவர் இட்டுகட்டி பாடுவது ஞாபகம் வர எழுந்து முகம் கழுவி வெளியே போனவரு பொழுது சாய்ந்துதான் மீண்டும் வீட்டுக்குள்ள வந்தாரு…

எல்லாரும் அவங்க அவங்க அரிதார பொருள பார்த்து கண் கலங்கி நிற்க, ராசவேலு பேச ஆரம்பிச்சாரு…..

என்னாலே கூத்த விட முடியாது. உசிர வேணா விடுவேன். ஒரு கலைஞன் எல்லாத்துக்கும் முன்னோடியா இருக்கணும். தற்கொலைங்கிற எண்ணம் மக்கள்கிட்ட இருந்து போகணும்னா அது கலைஞனால்தான் முடியும்னு நான் சொல்வேன். ஆனா இன்றைக்கு அந்த நிலையை தவிர எனக்கு வேற வழியில்லை. சாப்பாட்டுல விசம் கலந்திருக்கேன். நான் சாப்பிடப் போறேன். சாப்பிடறவங்க சாப்பிடலாம் என சொல்லிவிட்டு, அவர் சாப்பிட துவங்க அனைவரும் அவர் கொண்டு வந்த பையில் உள்ள பொட்டலத்தை பிரிக்க துவங்கினர்…. கதவு தட்டப்படும் ஓசை கேட்டு ஆழ்ந்த யோசனையிலிருந்து சற்று நிதானத்திற்கு வந்த ராசவேலு கதவை திறக்க சொல்கிறார். விலை கம்மின்னா விஷமும் மெதுவாத்தான் வேலை செய்யும் போலனு நினைத்து சுற்றிலும் பார்த்தார். அனைவரும் கலங்கிய கண்களுடன் விட்டத்தை பார்த்தபடியே இருந்தனர். வெளியே தெருவில் ஸ்பீக்கரில் அம்மன் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

தெருக்கூத்து
தெருக்கூத்து

ஊர் தலைவர் மற்றும் சிலர் வெளியே நிற்பதை கண்ட ராசவேலு, ஒரு கும்பிடு போட்டு என்னய்யா விஷயம், வீடு தேடி வந்திருக்கீக? என்றார். ‘வேற ஒண்ணுமில்ல வேலு, அந்த டான்ஸ் குரூப் திடீருன்னு வரமுடியாம போச்சு, அதான் உண்னையே கூத்து போட சொல்லாம்னு வந்தோம். சரி ஆகிறத டக்குன்னு பாருன்னு, சொல்லிவிட்டு அவன் பதில் எதிர்பாராமல் அவர்கள் சென்றனர்.

அவர்கள் செல்வதையே பார்த்துவிட்டு, உள்ளே பார்த்தார். அனைத்து கண்களில் இருந்ததும் ஒன்றுதான். இது இறைவன் அளித்த வரம். கூத்துலேயே உயிர் போறத விரும்பாத கலைஞன் யாரு இருக்கா???

நாரத கானசபை திரை விலக வந்தேனே…. என குரல் முழங்க ராசவேலு மேடையில் நின்றான் ராஜபார்ட்டாய். கூட்டம் சுவராசமற்று பார்த்தது. அவர்கள் எதிர்பார்ப்பு மாறிய ஏமாற்றம் எல்லா பக்கமும் உச்… என்ற குரலாய் ஒலித்தன.

மேடையில் வந்துட்டா ராசவேலு உலகையே மறந்துடுவாறு, மொத்த உசிரும் விசத்தை குடுச்சுட்டு கூத்து கட்டுற எண்ணமே அவருக்கில்லை, அவருக்கு மட்டுமில்ல அவர் குடும்பத்துக்கும்…….

தன் காட்சியை முடித்துவிட்டு மேடைக்கு பின்னுள்ள ஒப்பனை தட்டிக்கு சென்றார். எதிரில் அவள் மகளும் கணவனும் மேடையை நோக்கிச் சென்றனர். உள்ளே அரிசந்திரன் மனைவி ஒப்பனையில் தன் மனைவி தயாராகுவதை பார்த்தார். அவரும் இவரை பார்த்தார் கண் கலங்க…

அதற்குள் வெளியே ஓசை பெருகியது. திரையை விலக்கி மேடையை பார்த்தார். மேடைக்கு முன்பு போதையில் ஒருவன் தன் மகளின் குனிந்து ஆடும் உடலை மேய்ந்து கொண்டிருந்தான். பிணமானாலும் பெண்ணின் உடலை காமத்துடன் பார்க்கும் வெறியர்கள்தான் நினைவுக்கு வந்தனர். ஆனால் அதைப்பற்றி கவலையே இல்லாமல் மகளும், மருமகனும் ஊரையே சிரிக்க வைக்க முயன்றனர்.

காட்சிகளுக்கிடையே மக்களை கவர்வதற்காக காட்டிய விசயங்கள் இன்று விரசத்துடன் அதை மட்டுமே காண துடிக்கும் கண்களை பார்த்தார். ஆனால் அனைத்து கண்களும் மேடையை விட்டு கோயிலருகே வந்து நின்ற வேனையே பார்த்தது. “பாயும்புலி நடனக்குழு” என்று கொட்டை எழுத்தில் தொங்கிய பேனரும் வண்டியிலிருந்து இறங்கும் பெண்களையும் பிறரையும் கண்டு மொத்த கூட்டமும் மகிழ்ந்தது. அவுங்க வந்திட்டாங்க… குரல் எல்லா பக்கமும் ஒலித்தன.

மீண்டும் திரை விலக அம்மன் வேடத்தில் ஒரு பெண் ஆட அதை தொடர்ந்து எம்.ஜி.ஆர்., சிவாஜி முதல் ……. சூர்யா வரை அனைத்து கெட்டப்களிலும் ஆடலும் பாடலும் அரங்கேற தொடங்க கூட்டம் உற்சாகமடைய தொடங்கியது. மேடைக்கு பின்புற தெருவில் ராஜவேல் குடும்பம் ஊரைவிட்டு சென்று கொண்டிருந்தது.

ஊருக்கு வெளியே கம்மாக்கரையில் அரிச்சந்திரனும் அவன் மனைவியும் அமர்ந்திருந்தனர். அருகிலிருந்து பாறையில் பபூனும், டான்சரும் ஓரமாக இருமியபடியே ராசவேலுவின் தந்தையும் யோசனையற்று வானையே வெறித்தபடி அமர்ந்திருந்தனர்.

ராசவேலு வானில் பிறையையே பார்த்துக் கொண்டிருந்தார். நேற்று என் சில நிமிட காட்சிக்காக அதிர்ஷ்டம் என காத்துகிடந்த கண்கள்தான் இன்று என்னை கண்டால் துரதிஷ்டம் என்பன போல் தலையை குனிந்து செல்கின்றன. அதுக்காக நான் கவலைப்படுவதில்லை. இன்றுதான் மேலும் அதிகமாய் ஒளிர்வேன் என்பது போல் நான்காம்பிறை ஒளிர்ந்து கொண்டிருந்தது.

நீயும் நானும் ஒன்றுதான் என நான்காம் பிறையை பார்த்து எண்ணியவாறே திரும்பி பார்த்தார். ஒவ்வொருவராக வானம் எனும் மேடையில் கூத்துகட்ட தங்கள் உடலை மண்ணில் விட்டு சென்று கொண்டிருந்தார்கள். ராசவேலும் ராஜபார்ட் ஆகி கொண்டிருந்தார்.

இவர்கள் கூத்தை காண மக்கள் இல்லாவிட்டாலும் நான் இருப்பேன் என்பது போல் நான்காம்பிறை அவர்கள் கூத்தை கண்டு மெய் மறந்து போய் கொண்டிருந்தது.

தூரத்தில் “ரிங்க ரிங்க ரிங்க ரிங்க ரிங்காரோ….” பாடலும் மக்களின் வெறியோசையும் கேட்பது காற்றில் மிதந்து வந்தது.

-இரா.இதயச்சந்திரன்