Published:Updated:

தென்றலே என்னைத் தீண்டாதே! | சிறுகதை | My Vikatan

Representational Image ( Photo by karthegan Padmanaban on Unsplash )

நண்பர்களின் பேச்சை காதில் வாங்காமல், வாகனத்திலிருந்து கீழிறங்கி பள்ளியில் இருந்து வெளியேறும் மாணவர்களையே பார்த்தபடி நின்றேன். சீறுடையின் நிறம் மாறியிருந்தது, 12 வருடங்களுக்கு முன்பு நான் படித்தபோது இருந்த வெளிர் சந்தன நிற சீறுடைதான் அழகு எனத் தோன்றியது.

தென்றலே என்னைத் தீண்டாதே! | சிறுகதை | My Vikatan

நண்பர்களின் பேச்சை காதில் வாங்காமல், வாகனத்திலிருந்து கீழிறங்கி பள்ளியில் இருந்து வெளியேறும் மாணவர்களையே பார்த்தபடி நின்றேன். சீறுடையின் நிறம் மாறியிருந்தது, 12 வருடங்களுக்கு முன்பு நான் படித்தபோது இருந்த வெளிர் சந்தன நிற சீறுடைதான் அழகு எனத் தோன்றியது.

Published:Updated:
Representational Image ( Photo by karthegan Padmanaban on Unsplash )

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

தென்காசி 25 கி.மீ. என்ற அறிவிப்பு பலகையை தாண்டி சென்றுகொண்டிருந்தது எங்கள் ஹோண்டா சிட்டி.

“மச்சி இவன் என்னமோ தென்காசினா அப்படி காத்து அடிக்கும், இப்படி சாரல் அடிக்கும்னு விதம் விதமா கத விட்டான், ஆனா வெயில் இப்படி மண்டய பொளக்குது!” என்றான் கௌதம்.

“அட பக்கி… இந்த உலகத்துல எவன்டா அவனோட சொந்த ஊர பத்தி உண்மைய சொல்லியிருக்கான்? கொஞ்சம் எக்ஸ்டிரா பிட் போடத்தான் செய்வானுங்க!” என்று நக்கலடித்தான் வினோத்.

“டேய் சும்மா இருங்கடா, புளியங்குடிதான் தாண்டியிருக்கோம் இன்னும் கொஞ்ச நேரத்துல பாரு கிளைமேட் எப்படி சேஞ்ச் ஆகுதுன்னு” என்றேன்.

நாங்கள் சென்னையில் உள்ள பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் அடுத்தடுத்த கேபினில் பணிபுரியும் பொறியாளர்கள். தென்காசி நான் பிறந்து வளர்ந்த ஊர். தந்தையின் வேலை மாறுதல் காரணமாக சென்னைக்குக் குடி பெயர்ந்து, அங்கேயே பொறியியல் முடித்து, பணிபுரிய தொடங்கியதாலும். இங்கு வரவேண்டிய தேவை இல்லாததாலும் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தென்காசி வருவதற்கான வாய்ப்பு அமையவில்லை.

கடையநல்லூரை தாண்டியதும், ஜன்னல் கண்ணாடியை இறக்கிவிட்டேன்.

“டேய் ஏன்டா? வெளிய இன்னும் வெயில்தாண்டா…” என்று கௌதம் சொல்லி முடிப்பதற்குள் ஒரு இதமான தென்றல் வாகனத்திற்குள் நுழைந்து அவர்களை வருடியது.

“என்னடா இது, ஒரே சமயத்துல வெயிலும் இருக்குது, காத்தும் ஜில்லுனு இருக்கு?” என்று ஆச்சர்யப்பட்டனர் இருவரும்.

“தம்பிகளா இது தென்காசி… இங்க இப்படித்தான்” என பெருமிதமாய் கூறினேன்.

கௌதம், வினோத் இருவருமே மதுரையை தாண்டி தெற்கே வந்ததில்லை. நான்தான் தென்காசியின் அருமை, பெருமைகளை எடுத்துக்கூறி வலுக்கட்டாயமாக இழுத்து வந்திருக்கிறேன்.

இடைகால் வந்ததும் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு, ” டேய் வினோத், இதுதாண்டா நான் படிச்ச ஸ்கூல்” என்று சாலையோரம் இருந்த மீனாட்சி சுந்தரனார் ஞாபகார்த்த மேல்நிலைப் பள்ளியை காண்பித்தேன்.

பள்ளி முடிந்து நீல நிற சீருடை அணிந்த மாணவ, மாணவியர்கள் வெளியேறிக் கொண்டிருந்தனர்.

Tenkasi
Tenkasi
Photo by DICSON on Unsplash

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“ஓ… கோ எட்-டா? அப்போ கண்டிப்பா உனக்கு ஒரு லவ் ட்ராக் ஓடிருக்கணுமே”

“அதெல்லாம் ஒரு மண்ணும் கிடையாது.. மூடு…”

“டேய் என்னடா…? வெயில் கொளுத்தி எடுக்குற சென்னைலயே நம்ம வினோத்லாம் +2 முடிக்குறதுக்குல்ல மூணு லவ் பண்ணியிருக்கான்… இப்படி கிளைமேட்டுல இருந்துட்டு லவ் இல்லன்னா எப்படி?”

நண்பர்களின் பேச்சை காதில் வாங்காமல், வாகனத்திலிருந்து கீழிறங்கி பள்ளியில் இருந்து வெளியேறும் மாணவர்களையே பார்த்தபடி நின்றேன். சீறுடையின் நிறம் மாறியிருந்தது, 12 வருடங்களுக்கு முன்பு நான் படித்தபோது இருந்த வெளிர் சந்தன நிற சீறுடைதான் அழகு எனத் தோன்றியது.

தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்து விட்டு +1 படிப்பதற்காக இந்த பள்ளியில் சேர்ந்தேன். ஆண்கள் பள்ளியிலேயே படித்த காரணத்தால் தொடக்கத்தில் இப்பள்ளி புதிதாய் தோற்றமளித்தது. பள்ளியின் முதல்நாள் இப்போதும் என் நினைவில் இருந்தது.

தென்காசியில் இருந்து 20ஏ பேருந்தில் ஏறினால் 30 நிமிடங்களில் இடைகால் வந்துவிடலாம். முதல் நாள் பள்ளியில் நுழையும் போது வகுப்பறை எந்தப் பக்கம் இருக்கும் என்று சிந்தித்துக்கொண்டே மனம் சொன்ன திசையில் நகர்ந்தேன்.

“அண்ணா… பிளஸ் ஒன் மேத்ஸ், பயலாஜி கிளாஸ் ரூம் எந்தப்பக்கம்?” ஒரு மெல்லிய குரல் தயக்கம் கலந்து முதுகுக்கு பின்னால் கேட்டது.

“நானும் அதத்தான் தேடிக்கிட்டு இருக்கேன்” என சொல்வதற்காக திரும்பி அவளை பார்த்த நொடியிலேயே அந்த பதில் “என் கூட வா… காட்டுறேன்” என்பதாக மாறியது.

அவள் கண்களில் இருந்த தயக்கமும், புத்தம் புதிதாய் இருந்த சீருடையும், அவளும் நம்மைப் போல் இந்தப் பள்ளிக்கு புதிது என்பதைக் காட்டிக்கொடுத்தன. அவளது சிறிய நெற்றிக்கு சிகப்பு வண்ண ஸ்டிக்கர் பொட்டுடன், சிறிய மஞ்சள் கீற்றும் இணைந்து அவ்வளவு பொறுத்தமாக இருந்தது.

“தேங்கஸ்ணா…” என்றவாறே என்னுடன் நடக்க ஆரம்பித்தாள்.

“டென்த் எந்த ஸ்கூல்?”

“தென்காசி மஞ்சம்மாள்-ணா”

“சரி… ஒரு நிமிஷம் வெய்ட் பண்ணு” என்று சொல்லிவிட்டு சற்று தள்ளி நின்று கொணடிருந்த மாணவர்களிடம் எங்களது வகுப்பறைக்கான வழியை கேட்டு வந்தேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“அதோ அந்த கிளாஸ் ரூம்தான், வா போகலாம்” என்றேன்

“இருக்கட்டும்ணா… நானே போய்க்கிறேன்”

“சும்மா இரு.. நீ வேற ஸ்கூலுக்கு புதுசு, யாராவது கிண்டல் பண்ணுணா என்ன பண்ணுவ? நானும் துணைக்கு வர்றேன்” என்றபடி அவளுடன் சேர்ந்து நடந்தேன்.

வகுப்பறைக்குள் நுழைந்ததும் அவள் திரும்பி “தேங்க்ஸ்ணா” என்றாள். “பரவாயில்லம்மா நானும் இதே கிளாஸ்தான்” என்றேன். சற்றே அதிர்ச்சியாய் என்னைப் பார்த்தவள் பேசாமல் அங்கு இருந்த மாணவிகளுடன் போய் அமர்ந்தாள்.

காலையில் மாஸ்டர் சார் (ஆங்கில ஆசிரியரை மாஸ்டர் என்றுதான் அழைப்போம்) வகுப்பறைக்குள் நுழைந்ததும்,

“புதுசா ஜாய்ன் பண்ணிருக்குற ஸ்டூடண்ட்ஸ்லாம் எந்திச்சு நில்லுங்க?” என்றதும்,.

பத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருடன் அவளும் எழுந்தாள், நான் மாணவர்கள் வரிசையில் கடைசி பெஞ்சில் அமர்ந்திருந்தாலும் தயங்கி, தயங்கி எழுந்தேன்.

“துரைய தூக்குறதுக்கு தனியா ஆள வரச்சொல்லட்டுமா?” என்று அசிங்கப்படுத்தினார் மாஸ்டர் சார்.

“தம்பி எந்த ஸ்கூல்ல இருந்து வந்துருக்கீங்க?”

“தென்காசி ஐ.சி.ஐ சார்”

“அதான் நீ எந்திக்குற தோரணைலயே தெரியுதே… ஏன்பா அங்க எல்லாம் பிளஸ் ஒன் இல்லாமலா இங்க வந்துருக்க?”

“இல்ல சார், அந்த ஸ்கூல விட, இந்த ஸ்கூல் நல்லாருக்கும்னு சொன்னாங்க…அதான்…” தயங்கி தயங்கி பதில் கூறினேன்.

“அப்படி சொன்னவங்ககிட்ட போய், நான் அந்த ஸ்கூல விட்டு போயிட்டேன், இனிமே அந்த ஸ்கூல் நல்லாதான் இருக்கும்-னு சொல்லிடு சரியா?” என்றார்.

அனைவரும் சிரித்தனர். அவமானமாய் உணர்ந்ததால் தலை குனிந்தவாறே நின்றேன்.

“சரி, சரி, சிரிச்சது போதும்” அதட்டினார் மாஸ்டர் சார்.

அன்று மாலை பள்ளி முடிந்து தென்காசி செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்றேன், அவளும்தான்.

திரும்பி அவளைப் பார்த்தேன். என்னைப் பார்த்ததும் பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு வேறு பக்கம் திரும்பினாள்.

Representational Image
Representational Image
Photo by Mwesigwa Joel on Unsplash

காலையை விட இப்போது இன்னும் அதிக அவமானமாய் இருந்தது. எதுவும் பேசாமல் பேருந்தில் ஏறினேன்.

பள்ளியில் சேர்ந்த ஒரு வாரத்திற்கு பிறகு மாலை பள்ளி முடிந்து 20ஏ பேருந்தில் தென்காசி சென்று கொண்டிருந்தேன். முன்னிருக்கையில் அவள். எங்களுக்கு இன்னமும் மாணவர்களுக்கான இலவச பயணச்சீட்டு வழங்கப்படவில்லை. பேருந்து சிவராமபேட்டையைத் தாண்டி திரும்பவும், அவள் பதட்டத்துடன் என்னிடம் திரும்பினாள்.

“பஸ்ஸுக்கு வச்சுருந்த காச காணோம்… எனக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்துடுறியா…” என்று கேட்கவும், நடத்துனர் “டிக்கெட், டிக்கெட்…” என்றபடி அவளிடம் வரவும் சரியாய் இருந்தது.

“பின்னாடி எடுப்பாங்க” என்றபடி என்னைக் காட்டினாள் என் பதிலை எதிர்பாராமலேயே.

அன்று முதல் நாங்கள் இருவரும் மிகச்சிறந்த நண்பர்களாய் மாறினோம். அடுத்த இரண்டு ஆண்டுகளில் பலமுறை என் மனதை அவளிடம் வெளிப்படுத்த முயன்று தோற்றிருக்கிறேன், அவளின் நட்பை இழக்க நேரிடுமோ என்ற பயத்தால். பின்னர், கல்லூரி, வேலை என தொடர்ந்து வந்த சராசரி இளைஞனுக்கான அனைத்து இலக்குகளையும் அடைவதற்கான முயற்சிகளில் அவளை விட்டு வெகுதூரம் விலகியிருந்தேன். மீண்டும் எங்கள் பள்ளியைப் பார்த்தவுடன் எல்லாம் ஏதோ நேற்று நடந்தது போலிருந்தது.

பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருந்த மாணவர்கள் தங்களது புத்தகப்பைகளை தோள்களுக்குள் போட்டு தயாரானார்கள். திரும்பிப் பார்த்தேன். நாங்கள் இருவரும் தினமும் சென்ற அதே 20ஏ பேருந்து, வேறு நிறத்தில் வந்து கொண்டிருந்தது.

“டேய் வினோத்… இந்தா கார் கீய புடி, நான் தென்காசிக்கு பஸ்ல போறேன், நீங்க ரெண்டு பேரும் கூகுள் மேப்ப புடிச்சு தென்காசி பஸ் ஸ்டாண்டுல போய் வெய்ட் பண்ணுங்க”

“டேய்… நில்லுடா…” என்ற நண்பர்களின் குரலுக்கு பதிலளிக்காமல் வந்து நின்ற பேருந்தில் ஏறினேன்.

பேருந்தில் ஏறியதும் காலியாக இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்தேன். பேருந்து நயினாரகரத்தை தாண்டியதும் எனக்கு பின்னால் நடத்துனரின் சத்தம்.

“ஏம்மா… டிக்கெட்..”

“முன்னாடி பிளாக் ஷர்ட் போட்டுருக்குறவரு எடுப்பாரு”

எனது சட்டையின் நிறம் கறுப்பு என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு பின்னால் திரும்பினேன், பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு பள்ளிச்சீருடையில் பார்த்த அவள் இப்போது சேலையில் இன்னும் அழகாக தெரிந்தாள்.

கொடிக்குறிச்சி தாண்டியதும் பேருந்தில் இருந்த மாணவர்கள் மொத்தமாய் இறங்கியதில்,, அவளாகவே எனது இருக்கையில் வந்து அமர்ந்த அவளை கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன்..

சில அடிப்படை விசாரிப்புகளுக்கு பின்னர்,

“உன்ன நான் முதல் முறையா எப்போ பார்த்தேன்னு தெரியுமா?” என்றாள்.

“தெரியுமே… நம்ம ஸ்கூல்ல வச்சு பிளஸ் ஒன் கிளாஸ் ரூம் தெரியாம நீ முழிச்சுக்கிட்டு இருந்தப்ப” தாமதிக்காமல் சொன்னேன்.

“அது நீ என்ன பாத்தது, நான் உன்ன ஃபர்ஸ்ட் டைம் பாத்தது இதே 20ஏ பேருந்தில்தான்”

நான் அதிர்ச்சியாய் அவளை ஏறிட்டேன்.

“ஸ்கூலோட ஃபர்ஸ்ட் டே அன்னைக்கு நானும் இதே 20ஏ பஸ்லதான் உன் சீட்டுக்கு பின்னாடி உக்கார்ந்து வந்தேன், நீ கண்டக்டர்கிட்ட ‘அண்ணே… இடைகால் வரும்போது கொஞ்சம் சொல்லுங்க’-ன்னு சொன்னது இப்பவும் எனக்கு நியாபகம் இருக்கு.

“அப்போ நானும் ஸ்கூலுக்கு புதுசுதான்னு உனக்கு….”

“நல்லாவே தெரியும்”

“அப்புறம் ஏன் என்ட வந்து கிளாஸ்ரூம் எங்கன்னு கேட்ட?”

“நீ ஏன் ‘என் கூட வா காட்டுறேன்’-னு சொன்ன?”

பதில் சொல்லாமல் அவளையே பார்த்தேன். அவள் விழிகளில் ததும்பிய நீரை முகத்தை திருப்பி துடைத்தாள்.

Representational Image
Representational Image

“இப்பக்கூட நீ நம்ம ஸ்கூல வெறிச்சுப் பாத்தத பாத்துக்கிட்டுதான் இருந்தேன்”

“நீ அங்கதான் இருந்தியா?”

“ம்… கடையநல்லூர் பஸ் ஏறுறதுக்காக ஆப்போசிட் சைட் பஸ் ஸ்டாப்ல வெய்ட் பண்ணிக்கிட்டு இருந்தேன்”

“அப்போ இந்த பஸ்ல எப்படி?”

“நீ எப்படியும் இந்த பஸ்ல ஏறுவன்னு தோணுச்சு, உன் பின்னாலயே நானும் ஏறிட்டேன்”

“சரி கடையநல்லூர்க்கு எதுக்கு போற?”

“அங்கதான் என்ன கட்டிக்குடுத்துருக்காங்க” என்றவள் தன் கண்களில் வழியும் நீரை பொருட்படுத்தாமல் குத்துக்கல்வலசை விலக்கில் இறங்கினாள்.

தென்காசி புதிய பேருந்து நிலையம்.

“மச்சி… என்ன கிளைமேட்டுடா… கேரளா தோத்துச்சு போ..!” என்று சிலாகித்த வினோத்திடமிருந்து சாவியை பெற்றுக்கொண்டு காரை திருப்பினேன்.

“டேய்… எங்கடா போற?

வருடிச்சென்ற தென்றலொன்று அனலாய் தகித்ததால் கண்ணாடியை ஏற்றிவிட்டபடியே “சென்னைக்கு” என்றேன்.


சுந்தரபாண்டியன்,

தூத்துக்குடி.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.