Published:Updated:

அப்பாவின் செல்வாக்கு! | சிறுகதை | My Vikatan

Representational Image

இளங்கோ பைக் மெக்கானிக் கடை வைத்திருக்கிறான். ஆறடி உயரம் வளர்ந்த அவன் பார்ப்பதற்கு மிலிட்டரியில் இருப்பவர் போல் இருப்பான். பல வருடங்களாக ஒரு கட்சியில் எடுபிடி வேலை செய்து வருகிறான். சூர்யாவை "ஏய்" என்று அதிகாரத்துடனும் எரிச்சலுடனும் அழைக்க காரணம் சூர்யாவின் அப்பா குமரேசன்.

அப்பாவின் செல்வாக்கு! | சிறுகதை | My Vikatan

இளங்கோ பைக் மெக்கானிக் கடை வைத்திருக்கிறான். ஆறடி உயரம் வளர்ந்த அவன் பார்ப்பதற்கு மிலிட்டரியில் இருப்பவர் போல் இருப்பான். பல வருடங்களாக ஒரு கட்சியில் எடுபிடி வேலை செய்து வருகிறான். சூர்யாவை "ஏய்" என்று அதிகாரத்துடனும் எரிச்சலுடனும் அழைக்க காரணம் சூர்யாவின் அப்பா குமரேசன்.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

அரசு திட்டத்தின் கீழ் கட்டிய தர்ஷினியின் காங்கீரீட் வீட்டிலிருந்து இருபது வீடுகள் தள்ளி உள்ளது சூர்யாவின் ஓட்டு வாடகை வீடு. ஓட்டை டவுசரை மாட்டிக்கொண்டு தன் வீட்டிலிருந்து வெளியே வந்தவன்,

"அம்மா தர்ஷினி வீட்டுக்குப் போயி அவ நோட்டு கொடுத்துட்டு வந்துர்றேன்" என அவன் சொல்ல, அவனுடைய அம்மாவை சுற்றி கூடிநின்ற, தண்ணீர் பிடிக்க வந்த மற்ற பெண்கள் எல்லோரும் அவன் டவுசரை பார்த்து கொல்லென சிரித்தனர். அவர்களோடு சேர்ந்து எலும்பும் தோலுமாய் இருக்கும் ஈஸ்வரியும் வேறுவழியின்றி தெத்துப்பல் தெரிய சிரித்தாள்.


சரியாக அந்த நேரம் பார்த்து சற்று தூரத்தில் டூவீலரில் ஊர்ஊராகச் சென்று துணி வியாபாரம் செய்யும் துணிக்காரர் வந்தார். தார்ச்சாலையில் அடிபட்டு கிடந்த பெருக்கானின் சதைகளை கொத்தி தின்றுகொண்டிருந்த காக்கைகள் அவருடைய வண்டி சத்தம் கேட்டதும் பறந்து ஓடின. வண்டியை பெருக்கான் மீது விடாமல் வளைத்து ஓட்டி வந்தார்.

என் மானத்த காப்பாத்த வந்தவரே என்று துணிக்காரரைப் பார்த்து சொன்ன ஈஸ்வரி ரேசனில் சர்க்கரையும் கோதுமையும் வாங்க வைத்திருந்த காசில் சூர்யாவுக்குத் தகுந்த சைஸில் மூன்று ஜட்டிகளை அவரிடம் வாங்கினாள். மகனிடம் அதை நீட்டி "இந்தா புதுஜட்டி... இன்னும் ஒரு வருசத்துக்கு உனக்கு இதே ஜட்டி தான்..." என்றாள்.

Representational Image
Representational Image

புதுஜட்டியின் வாசத்தை மோந்து பார்த்தவன் அதிலிருந்த ஸ்டிக்கரை எடுத்து சுவற்றில் ஒட்டிவிட்டு ஜட்டியையும் டவுசர் பனியனையும் அவசர அவசரமாக உடலுக்குப் பொருத்தினான். தர்ஷினியின் நோட்டுப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு அவளுடைய வீட்டிற்குச் சென்றான்.

தர்ஷினியின் அப்பா இளங்கோ அப்போதுதான் வீட்டிற்கு வந்தான். தன் வீட்டிற்குள் நுழையும் சூர்யாவைப் பார்த்து "ஏய் என்ன..." என்றான் இளங்கோ.

இளங்கோ சொந்தமாக பைக் மெக்கானிக் கடை வைத்திருக்கிறான். ஆறடி உயரம் வளர்ந்த அவன் பார்ப்பதற்கு மிலிட்டரியில் இருப்பவர் போல் இருப்பான். பல வருடங்களாக ஒரு கட்சியில் எடுபிடி வேலை செய்து வருகிறான். அவன் சூர்யாவை "ஏய்" என்று அதிகாரத்துடனும் எரிச்சலுடனும் அழைக்க காரணம் சூர்யாவின் அப்பா குமரேசன். குமரேசன் ஒரு கூலித்தொழிலாளி. இளங்கோ இருக்கும் கட்சிக்கு எதிர்கட்சியில் எடுபிடியாக வேலை செய்பவன். முரட்டு குடிகாரன். பெண்கள் மத்தியில் அவனுக்கு "தண்ணிவண்டி" என்று பெயர். வாரத்தில் மூன்று நாள்கள் வேலை செய்வான், அந்தக் காசில் மீதி நான்கு நாட்கள் குடித்துவிட்டு எங்கேயாவது படுத்துக் கிடப்பான். அப்படிப்பட்ட குமரேசனை கண்டாலே இளங்கோவுக்கு ஆகாது.

"ஏய் என்ன..." என்ற இளங்கோவின் மிரட்டலான குரல் சூர்யாவை பயமுறுத்தியது. அவனது முகம் சுருங்கியது. பம்மினான்.

"தர்ஷினிகிட்ட அவ கொடுத்த நோட்டு திருப்பிக் கொடுக்கலாம்னு வந்தேன்..." என்றான் நடுங்கிய குரலில்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"நோட்டு கொடுத்தாளா... அத அங்கயே வச்சுட்டு போ..." என்று இளங்கோ கட்டளையிட அவன் வாசலிலயே வைத்துவிட்டு தலையை தொங்கபோட்டுக்கொண்டு சென்றான். இதையெல்லாம் வீட்டின் உள்ளே இருந்தபடியே கவனித்துக் கொண்டிருந்தார்கள் தர்ஷினியும் ரேவதியும்.

"ஏங்க அவிங்க அப்பனயும் அந்தாளோட கட்சியையும் பிடிக்கலனா கோவத்த அவிங்க மேல காட்டுங்க... அப்பன் மேல இருக்கற கோபத்த ஏன் அந்தப் பையன் மேல காட்டுறிங்க..." என்ற ரேவதி வேகமாக வெளியே வந்து தெருவில் சென்றுகொண்டிருந்த சூர்யாவை அழைத்தாள். தர்ஷினியும் அம்மா அருகே நின்றுகொண்டு "வாடா எலி... " என்று பட்டப்பெயர் சொல்லி அழைத்தாள்.

அழைப்பை ஏற்று அவளுடைய வீட்டிற்குத் திரும்பி வந்தான். "வா கண்ணு" என்று ரேவதி அவன் கையை பிடித்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள். வாசலில் இருந்த இளங்கோவிற்கு முகமே இல்லை.

சமையலறைக்குள் நுழைந்தாள் ரேவதி. தர்ஷினி டீவியை ஆன் செய்தாள். 32 இன்ச் எல்ஈடி டீவி. மாத தவணையில் வாங்கியது. எப்போதும் கலைஞர் கொடுத்த குட்டி டீவியில் படங்களை பார்த்து பழகிய சூர்யா முதன்முறையாக எல்ஈடி டீவியை அருகில் பார்க்கிறான். சேனல்களை வரிசையாக மாற்றிக்கொண்டு வந்து ஆதித்யா சேனல் வைத்தாள் தர்ஷினி.

Representational Image
Representational Image

ரேவதி இருவருக்கும் காபி கொண்டுவந்து கொடுத்தாள். சூடான காபியை ஊதி ஊதி குடித்துக்கொண்டிருந்தான் சூர்யா. வாசலில் இருந்த இளங்கோ வீட்டிற்குள் நுழைந்தான். சூர்யாவின் கவனம் காபியின் மீதும் டீவியின் மீதும் இருந்தது. அவனை பார்த்த இளங்கோ, "ஏய் அண்ணாந்து குடிடா..." என்றான் அதட்டலாக. அந்தக் குரலில் தர்ஷினியுமே நடுங்கிப் போனாள்.

"ஏங்க... சூடான காபிய எப்படிங்க அண்ணாந்து குடிக்க முடியும்... கொஞ்சமாச்சும் மனசாட்சியோட நடந்துக்குங்க..." என்றாள் ரேவதி. டம்ளரை பட்டென்று வைத்துவிட்டு வேகமாக அந்த வீட்டிலிருந்து வெளியேறினான் சூர்யா. சூர்யா அப்படி கோபமாக வீட்டைவிட்டு வெளியேறியது ரேவதிக்கு வருத்தத்தை உண்டாக்கியது. அவன் போவதை பார்த்த இளங்கோ,

"இதுக்கெல்லாம் ரோசத்த பாரு... இதயெல்லாம் பொச்சுல மிதிச்சு துரத்திவுடாம கூப்ட்டு நடுவீட்ல உக்கார வச்சு காப்பி ஆத்தி தந்துட்ருக்க" என்றான்.

"சும்மா நிறுத்துங்க... உங்க கட்சிக்கு எதிர்க்கட்சிக்காரனோட பிள்ளைங்கற ஒரே காரணத்துக்காக இப்படியா நடந்துக்குவிங்க... பாவம் அந்த பையன்... அவிங்க அப்பா அம்மா எப்பவும் சண்ட போட்டுக்கிட்டே இருப்பாங்க... மயித்த புடிச்சுகிட்டு தெருவுல அவிங்க போட்டுக்கிட்ட சண்டையெல்லாம் நானே நெறய வாட்டி பாத்துருக்கேன்... அந்த பையன போயி..." என்று அவள் சொல்லி முடிப்பதற்குள்,

"மூடுடி... எனக்கு அதெல்லாம் தெரியாதுனு நெனைக்கிறியா... பெரிய அன்னதெரசானு நெனப்பு... இவன் மேல எல்லாம் கருண காட்டிட்டு திரியுறா..." என்றான் இளங்கோ. அன்றைய இரவு இருவரும் மாறிமாறி கத்திக்கொண்டிருந்தனர். அதை கேட்டபடியே இரவை கழித்தாள் தர்ஷினி.

அடுத்தநாள் முதல் தர்ஷினிக்கும் சூர்யாவுக்குமான நட்பு மேலும் பலமாகிக் கொண்டே வந்தது.

லீவ் நாட்களில் தன்னுடைய வீட்டிற்கு டீவி பார்க்க வரச்சொல்லி அழைப்பாள் தர்ஷினி. அவன் வீட்டிலிருந்த கலைஞர் டீவி டிஷ்சுக்கு பல மாதங்களாக ரீசார்ஜ் செய்யாததால் ஓடாமல் இருந்தாலும் அவளுடைய அப்பாவுக்கு பயந்துகொண்டு "ஐயோ நா வரலப்பா..." என்பான். அன்றொரு நாள் டீவியில் வாகை சூடவா படம் போட்டிருந்தார்கள். தர்ஷினி அவனுடைய வீட்டிற்கே சென்று "எங்கப்பா வீட்டுல இல்ல… வா படம் பாக்கலாம்…" என்று சூர்யாவை அழைத்தாள். தர்ஷினி அழைப்பதை கவனித்த ஈஸ்வரி அவனை அருகே அழைத்து, "அவிங்க வீட்டுக்குப் போ... வேணானு சொல்லல... ஆனா எதாவது சாப்ட கொடுத்தாங்கன்னா வேணானு சொல்லிடு..." என்றாள் குசுகுசுப்பாக.

தர்ஷினியின் வீட்டிற்குப் போனான் சூர்யா. இளங்கோ எங்கயோ வெளியே சென்றிருந்தான். ரேவதி மீன் பொறித்துக் கொண்டிருந்தாள். மீன்வாசம் மூக்கை துளைத்தது.

"சூர்யா மீன் சாப்புட்றா..." என்றாள் ரேவதி. "இல்ல வேண்டாங்க... இப்பதான் எங்க வூட்ல சாப்ட்டேன்..." என்றவன் அவளை நம்ப வைப்பதற்காக வெறும் வயிற்றில் ஏப்பம் விட்டான்.

"சாப்ட்டா என்ன... மறுபடியும் சாப்ட்லாம் சாப்டு..." என்று அவனுக்கும் தர்ஷினிக்கும் ஆளுக்கு நான்கு மீன் துண்டுகள் எடுத்து வைத்தாள். இருவரும் படம் பார்த்துக்கொண்டே அந்த நான்கு துண்டுகளை நோண்டி நோண்டி மணிக்கணக்கில் தின்றுகொண்டிருந்தனர். சாப்பிட்டு முடித்ததும் வீட்டிற்குக் கிளம்புறேன் என்று சொன்ன சூர்யாவை அடம்பிடித்து தன்னுடன் சேர்ந்து டீவி பார்க்க சொன்னாள் தர்ஷினி. அவனும் டீவியை பார்த்தபடி அமர்ந்துகொண்டான்.

படம் முடிந்தும் அவர்கள் டீவியை விட்டு எழுவதாய் இல்லை. ஈஸ்வரி அவனை தேடி தர்ஷினியின் வீட்டிற்கே வந்துவிட்டாள். வீட்டுவாசலில் நின்றுகொண்டு "சூர்யா... டேய் சூர்யா... பொழுதாயிடுச்சு பாரு... வா வீட்டுக்குப் போலாம்..." என்றழைக்க ரேவதி அவனை தன் அருகே அழைத்து "இங்க மீன் சாப்ட்டத உங்கம்மாட்ட சொல்லாதடா... எதாச்சும் சொல்லி திட்டுனாலும் திட்டுவா..." என்றாள் குசுகுசுப்பாக.


இப்படி இளங்கோ இல்லாத நாட்களில் தர்ஷினியின் வீட்டிற்குச் சென்று டீவி பார்ப்பதை, வலுக்கட்டாயமாக சாப்பிட கொடுக்கும் பொருட்களில் அவ்வப்போது எதாவது சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்தான் சூர்யா. தர்ஷினி வீட்டிற்குச் செல்லும்போது வாசல் வழியாக போகாமல் கீற்றுப் படல் பொந்து வழியாக எட்டிப்பார்த்து "வொவ்... வொவ்..." என்று நாய் போல குரல் எழுப்பியபடி உள்ளே நுழைவான். அந்தச் சத்தம் கேட்டாளே தர்ஷினி மகிழ்வாள். வறுமையில் வாடினாலும் வயதுக்குண்டான சேட்டைத்தனம் அவனிடமிருந்தது. ஒருமுறை தொட்டாங்குச்சிக்குள் எதையோ மறைத்து வைத்து அதை தர்ஷினி வீட்டுக்கு கொண்டு வந்தான். தர்ஷினி அதை பார்த்து "என்னடா இது..." என்று ஆர்வமாக கேட்டாள். "உனக்குத் தான் கொண்டு வந்துருக்கேன்... என்னானு சொல்லு பாப்போம்..." என்று அவன் சொல்ல, மின்மினிப்பூச்சியாகவோ பட்டாம்பூச்சியாகவோ பொன்வண்டாகவோ இருக்குமென யூகித்தாள். "எனக்கு கண்டுபிடிக்க தெரிலடா... நீயே சொல்லு..." என்று தர்ஷினி சொல்ல, "பாத்துக்கோ" என்று தொட்டாங்குச்சிக்குள் இருக்கும் செத்துப் போன விரியன் பாம்பு குட்டியை சுருட்டி வைத்திருந்ததைக் காட்டினான். "ஐயோ..." என்று பதறிய தர்ஷினி "அட நாயே... என்னடா இது..." எனக் கத்தினாள். "பயப்படாத... செத்துப் போயிடுச்சு... வீட்டு படலோரம் படுத்திருந்துச்சு... கல்லெடுத்து தலைய நசுக்கி சாகடிச்சிட்டேன்..." என்று சிரித்துக்கொண்டே சொன்னான். "உனக்கு பாம்பு பாத்து பயமா இல்லையா..." என்று

தர்ஷினி கேட்க, "இல்ல... எனக்கு மனுசங்கனா தான் பயம்..." என்று சொன்னான்.

Representational Image
Representational Image

அன்றொரு நாள் டீவி பார்க்க வராமல் இருந்த சூர்யாவை தேடி அவனுடைய வீட்டிற்குச் சென்றாள் தர்ஷினி. துணி துவைத்துக் கொண்டிருந்த ஈஸ்வரியிடம் "சூர்யா எங்கே..." என கேட்க அவன் விளையாட போய்விட்டதாக சொன்னாள் ஈஸ்வரி.

காலை பதினோரு மணி. மண்டையைப் பிளக்கும் வெயில் அப்போதுதான் ஆரம்பமாயிருந்தது. விளையாடும் இடத்திற்குச் சென்று பார்த்தாள் தர்ஷினி. ஏழடி பள்ளத்தில் உள்ள சாய்வான முள்புதர் அருகே அந்த ஊர் இளைஞர்கள் கூடி நின்றிருந்தார்கள். "அண்ணா... சூர்யாவை பாத்திங்களா..." என்று தர்ஷினி கேட்க, "இதென்ன இங்க இருக்கான்" என்று பதிலளித்தான் கூட்டத்திலிருந்த ஒருவன். முள்புதர் அருகே சென்று பார்த்தாள். எலிக்குஞ்சு மாதிரி இருக்கிறான் என்பதற்காக யாரோ அடித்த கிரிக்கெட் பந்தை எடுக்க சொல்லி அவனை முள்புதருக்குள் அனுப்பி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் அந்த இளைஞர்கள். முள்புதரின் ஆழத்தில் உள்ள பந்தை கையில் எடுத்துவிட்டான் சூர்யா. ஆனால் வெளியே வர முடியவில்லை. முட்கள் தலையிலும் முதுகிலும் குத்திக்கொண்டிருந்தன. வியர்த்து ஒழுகியது. அவனை பார்க்க தர்ஷினிக்கு பாவமாய் இருந்தது. அவனுக்கு மேலே கிழிந்து தொங்கிய நீளமான பாம்புசட்டை அவளை பயமுறுத்தியது. தன் உடலில் குத்தி இருக்கும் முட்களை ஒவ்வொன்றாக எடுத்துவிட்டு வெளியே வரமுடியாமல் இன்ச் பை இன்ச்சாக அவன் நகர, "டேய் சனியனே... சீக்கிரம் பந்த கொடுடா... நீ வெளிய வரலனாலும் பரவால பந்த மட்டும் மேல தூக்கிப் போடு..." என்று இளைஞன் ஒருவன் அதட்ட அவனை தொடர்ந்து மற்றவர்களும் சூர்யாவை கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டினர்.

முட்களுக்குள் சிக்கிக்கொண்டவன் "ஐயோ அண்ணா என்னைய திட்டாதிங்கண்ணா... ப்ளீஸ் ணா... நா பாவம்ணா..." என்றான் தழுதழுத்த குரலில். கொஞ்சம் மேலே வந்ததும் பந்தை நீட்டினான். எட்டி பந்தை வாங்கிய இளைஞர்கள் அவனை அப்படியே விட்டுவிட்டு விளையாட சென்றனர்.


தர்ஷினி கலங்கிய கண்களுடன் அவனை பார்த்துக்கொண்டிருந்தாள். சோகத்தில் எச்சிலை விழுங்கினாள். ஒருவழியாக முள்புதரிலிருந்து வெளியே வந்தான் சூர்யா. உடலின் பெரும்பாலான இடங்களில் ரத்தத்துளிகள். அதை பார்த்த தர்ஷினி "இனிமே இங்க வராதடா..." என்றாள் கோவமாக. அவன் தலையாட்டினான்.


சூர்யாவின் அம்மா தெரு பைப்பில் தண்ணி பிடித்துக்கொண்டிருந்தாள். சூர்யா வருவதை பார்த்தவள், "ஏன்டா வெளயாடறதுக்கு எந்நேரம் போன... " என்று அதட்ட தொடங்க "சூர்யாவ எங்கம்மா புதுத்துணி போட்டுக்கிட்டு வரச்சொல்லுச்சு..." என்றாள் தர்ஷினி.

"எதுக்கு சாமி..." என்றாள் ஈஸ்வரி.


"கோவிலுக்குப் போக... இன்னிக்கு சூர்யாவுக்குப் பொறந்தநாளு..." என்றாள் தர்ஷினி. "ஐயோ மவன் பொறந்தநாள மறந்தே போய்ட்டனே... அவனும் ஒரு வார்த்த சொல்லல..." என்று பதறினாள்.

"நீ போயி ரெடி ஆவு கண்ணு... நா இவன ரெடி பண்ணி தாட்டி வுட்றேன்..." என்றாள் ஈஸ்வரி. தர்ஷினியுடன் கோவிலுக்குப் போக போறோம் என்ற ஆசையில் துள்ளிக் குதித்தபடி குளிக்க போனான். உடலில் பச்ச தண்ணி பட்டதும் முள்குத்திய இடங்களில் எரிந்தது. எரிச்சல் தாங்க முடியாதவன் அரையுங்குறையுமாக குளித்து முடித்துவிட்டு வெளியே வந்தான். அம்மா புதுத்துணி எடுத்து வைத்திருந்தாள். அணிந்துகொண்டான். அம்மா அவனை அருகே அழைத்து அழகாக வகுடெடுத்து தலைசீவிவிட்டு பவுடர் பூசிவிட்டு நெற்றியில் சாந்திப் பொட்டு வைத்து அலங்கரித்தாள். அம்மா செய்து வைத்திருந்த முருங்கைப்பூ பொறியலை ரேசன் அரிசியில் பொங்கி வைத்திருந்த சாப்பாட்டுட்டன் பிசைந்து சாப்பிட்டுவிட்டு தர்ஷினியின் வீட்டிற்கு ஓடினான். இளங்கோ கட்சி மீட்டிங் சார்பாக கூட்டாளிகளுடன் வெளியூருக்குச் சென்றிருந்தான். தர்ஷினியும் ரேவதியும் ரெடியாகி வீட்டு வாசலில் அமர்ந்திருக்க சூர்யா அவர்களை பார்த்து "போலாமா" என்றான். "டேய் ட்ரெஸ்சு சூப்பரா இருக்குடா..." என்றாள் ரேவதி. லேசாய் புன்னகைத்தான்.

அவர்கள் சென்றது மகுடேஸ்வரன் கோவிலிற்கு. விசேஷ நாள் என்பதால் நல்ல கூட்டம். வரிசையில் பலமணி நேரம் காத்திருந்து நின்று தான் கடவுளை வணங்கிவிட்டு திரும்பினர். வீட்டிற்கு வந்தபொழுது மணி மாலை ஆறு முப்பது. தர்ஷினியின் வீட்டு வாசலில் இளங்கோ அமர்ந்திருந்தான். "என்னங்க ஊருக்குப் போனிங்க... என்னாச்சு..." என்று ரேவதி கேட்க "கட்சி மீட்டிங்க தள்ளி வச்சுட்டானுங்க..." என்றான் சலிப்பாக. அவனை பார்த்து சூர்யா பம்மினான். "டேய் எலி, உள்ள வாடா" என்று தர்ஷினி அவனை உள்ளே அழைக்க வீட்டிற்குள் நுழைந்தான் சூர்யா. அவர்களுக்கு காபி வைத்தாள் ரேவதி. குடித்து முடித்துவிட்டு வெளியே வந்த சூர்யாவை வாசலில் அமர்ந்திருந்த இளங்கோ "ஏய்" என்று அழைத்தான்.

பம்மிக்கொண்டே அருகில் சென்றான் சூர்யா. தர்ஷினிக்கும் ரேவதிக்கும் தெரியாதபடி அவனை தனியாக அழைத்துச்சென்று "நாளைல இருந்து நீ எங்க வீட்டுக்கு வரக் கூடாது... என் வீட்டுல வந்து டீவி பாக்குறது, காபி குடிக்கறது, சோறு திங்கறதுனு இனிமே இருக்க கூடாது... உங்கொப்பன் என்ன புடுங்கிட்டு இருக்கான்னா என் வீட்டுல வந்து என் காசுல தின்னுட்டு படுத்துருக்க... இனிமே இங்க வந்தின்னா மூஞ்ச பேத்துடுவேன்... புரிஞ்சுதா…" என்று மிரட்ட பயந்துபோன சூர்யா “சரிங்ணா…” என்றான். இன்னும் கொஞ்சம் திட்டியிருந்தால் அழுதிருப்பான். இளங்கோ அவ்வாறு கடுமையாக பேசியதை வீட்டின் அறைக்குள் மறைந்திருந்து கேட்டாள் தர்ஷினி. அப்பாவை அடிக்க வேண்டும்போல் இருந்தது.

Representational Image
Representational Image

மயில்கள் அகவிக் கொண்டிருக்க, பிறந்த நாளென்கிற சந்தோசமில்லாமல் இளங்கோ பேசிய வார்த்தைகளால் சோர்வாக அந்த சாம்பல் நிற வெளிச்சத்தில் நடந்து சென்றான் சூர்யா.

அடுத்தநாள் காலை. எல்லா விடியலிலும் மனதை தீண்டும் வகையில் இளங்காற்று வீசும். ஆனால் அந்த காலை அவ்வளவு உக்கிரமாக இருந்தது. அதிகாலை சூரியன் மேகங்களின் இடையே மறைந்திருந்தது.

அந்த ஊரின் பால்காரர், இளங்கோ வீட்டு வாசலில் நின்று இளங்கோவை அழைத்தார். இருவரும் ஒரே கட்சியை சேர்ந்தவர்கள். பால்காரர் கட்சியின் மூத்த எடுபிடி.

"ஏண்ணா... காலைலயே..." என்று இளங்கோ தொடங்க அவர்கள் இருவருக்குமான உரையாடல் தொடங்கியது. ரேவதி சற்று தூரத்தில் இருந்து அவர்கள் பேசுவதை கவனிக்கத் தொடங்கினாள்.

"தண்ணிவண்டி குமரேசன் வீட்டுல எலவு விழுந்துருச்சுப்பா..."

"எப்படிணே..."

"அந்த பொடியன் சூர்யாவும் அவிங்க அம்மாவும் கொளுத்திகிட்டு செத்துப் போய்ட்டாங்க... அடையாளந் தெரியாத அளவுக்கு ரெண்டு பேரு உடம்பும் நல்லா கருகிப் போயிடுச்சு... குமரேச நாயி நேத்து ஓவரா தண்ணிய போட்டு வந்து சாய்ந்தரத்துலருந்து அவள அடிச்சு கொடுமபடுத்திருக்கான்... துக்கம் தாங்காதவ போங்கடானு எல்லாத்தயும் வுட்டடிச்சுட்டு பையனையும் கூடவே கூட்டிட்டு போயிட்டா பாவம்... "

இதைக் கேட்டதும் உண்மையில் இளங்கோவுக்கு குளுகுளுவென இருந்தது. ஆனால் அதை வெளியே காட்டாமல், "பாவத்த... நேத்து சாய்ந்தரம் ஏழு மணி வரைக்கும் என் வூட்லதான இருந்தான் பொடியன்... உங்க அம்மா அப்பா சண்ட போட்டுக்கிட்டாங்கனா நீ இங்க வந்துடுறானு சொல்லித்தான் அனுப்புச்சேன்... இப்புடி ஆயிடுச்சே... ப்ச்..." என்றான்.

"நா முன்னாடி போயி தலைய காமிச்சுட்டு வந்துடுறேன்..." என்று கிளம்பினார் பால்காரர். அவர்கள் பேசியது சரியாக காதில் விழாததால் இளங்கோ வீட்டிற்குள் நுழையும்போது "என்னங்க..." என்றாள் ரேவதி.

"அந்த பொடியன் சூர்யாவ அவிங்கம்மா நெருப்பு வச்சு கொன்னுட்டு அதுவும் செத்து போயிடுச்சாம்..." என்றான் அலட்சியமான தொனியில். ரேவதிக்குத் தூக்கிவாரிப் போட்டது. அதைக்கேட்ட தர்ஷினிக்கு எப்படி ரியாக்ட் பண்ணுவது எனத் தெரியவில்லை.

"வா போயி தலைய காட்டிட்டு வந்துடுவோம்... " என்று ரேவதியை அழைத்தான் இளங்கோ. தர்ஷினியும் அவர்கள் பின்னாடியே ஓடிவந்தாள்.

சூர்யாவின் வீடு முன்பு கூட்டம் கூடியிருந்தது. அவர்களை கடந்து இளங்கோவும் ரேவதியும் வீட்டிற்குள் நுழைந்தனர். தர்ஷினி வாசலில் நின்றுகொண்டாள். சூர்யாவின் சடலத்தைச் சுற்றி பெண்கள் கூடிஅமர்ந்து அழுதுகொண்டிருந்தனர். ஈஸ்வரியின் சடலம் கேட்பாரன்றி கிடந்தது.

"எப்புடுடி இந்த கொழந்தைக்கு நெருப்பு வச்சு கொல்ல மனசு வந்துச்சு... அந்தக் குடிகாரன அடிச்சு சாகடிக்கறத வுட்டுட்டு இப்படி கேனத்தனமா பெத்தத கொன்னுபுட்டு நீயும் போயிட்டியேடி முட்டாகிறுக்கி..." என்று பாட்டி ஒருவர் கதறி அழுது கொண்டிருந்தார். குமரேசன் ஒரு மூலையில் குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்தான். சுற்றி நிற்கும் மக்களின் துளைத்தெடுக்கும் பார்வையை எதிர்கொள்ள அவனுக்குத் திராணி இல்லை.

சூர்யாவின் சடலம் அருகே அமர்ந்தாள் ரேவதி.

ஈஸ்வரி சடலம் அருகே நின்ற இளங்கோ இப்போது சூர்யாவின் சடலம் அருகே வந்தான். சூர்யாவைப் பார்த்ததும் "சனியன் ஒழிஞ்சுது…" என்று மனதுக்குள் மகிழ்ந்தான். சிரிப்பு வந்தது. கஷ்டப்பட்டு அடக்கினான். ஒரு பெர்ஃபாமன்ஸை போட்டுவிடுவோம் என்று முடிவெடுத்து நெஞ்சில் அடித்துக் கொண்டு கீழே விழுந்து அழ ஆரம்பித்தான். "என் ராசா... தங்கமே... நேத்து சாய்ந்தரம் வரைக்கும் என் வீட்டுல தானடா இருந்த... இருட்டு கட்டிருச்சு நம்ம வீட்லயே இருந்து பாப்பா கூட டீவி பாத்துட்டு காலைல போடான்னு சொன்னனே... அம்மா திட்டும்னு ஓடியாந்தியேடா... இப்படி அம்மா கையால சாகத்தான் ஓடியாந்தியா... எப்ப வேணா என் வீட்டுக்கு வாடானு சொல்லியிருந்தனே... நேத்து நைட்டு நீ என் வீட்டுக்கு வந்திருக்க கூடாதா... உன்ன நான் ராஜாவாட்டாம் வளத்திருப்பனே..." என்று கதறி அழுதான். அவன் பொய்யாக அழுகிறான் என்பது தெரியாத அந்தக் கூட்டம் அவனை கண்ணீர் மல்க பார்த்துக் கொண்டிருந்தது.


ரேவதியும் அவனை கண்ணீர் மல்க பார்த்தாள், இப்படியொரு கேவலமானவனுக்கு வாக்கப்பட்டுடமே என்று. அவனது வார்த்தைகளை கேட்டு அரண்டுபோன ரேவதி எழுந்து தர்ஷினி அருகே வந்து நிற்க,

"அம்மா... அப்பா மிருகமாயிட்டாரும்மா..." என்று மகள் சொன்னதைக் கேட்டு அவளை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு அழுதாள் ரேவதி.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.