Published:Updated:

காயங்கள் ஆற்றும் காலம்! |சிறுகதை | My Vikatan

Representational Image

மருத்துவமனையை அடைந்ததும் மருத்துவர் உடை கூட மாற்றாமல் கட்டியிருந்த சேலையை வாரி இடுப்பில் ஒரு பக்கம் செருகிக் கொண்டு பிரசவ வார்டை நோக்கி மின்னலாய்ப் பாய்ந்த திவ்யதர்ஷினியை ஆச்சர்யமாகப் பார்த்து நின்றான் சின்னு.

காயங்கள் ஆற்றும் காலம்! |சிறுகதை | My Vikatan

மருத்துவமனையை அடைந்ததும் மருத்துவர் உடை கூட மாற்றாமல் கட்டியிருந்த சேலையை வாரி இடுப்பில் ஒரு பக்கம் செருகிக் கொண்டு பிரசவ வார்டை நோக்கி மின்னலாய்ப் பாய்ந்த திவ்யதர்ஷினியை ஆச்சர்யமாகப் பார்த்து நின்றான் சின்னு.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

நிசப்தமான நல்லிரவில், பௌர்ணமி நிலவின் ஒளியால் சின்னுவின் வீடு இருந்த காலனி பட்டப்பகல் போல் ஒளிர்ந்தது. இவ்வமைதியின் ஒலி அவன் மனதை ஏதோ செய்ய, ஜன்னலின் வழியாக, நிலவைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். நிசப்தத்தைத் தகர்த்தெறிய சட்டென ஒரு ஆந்தை அலறியதும், நிகழ்காலத்திற்குத் திரும்பினான். நாற்காலியில் அமர்ந்து, பழைய செய்தித்தாளின் ஒரு பக்கத்தில், பாதி இடத்தைப் பிடித்திருந்த செய்தியை வெறித்தவாறு பார்த்தான். சின்னுவின் கண்கள் செய்தித்தாளிற்கும், குப்பைத் தொட்டியில் நான்காகக் கிழிக்கப்பட்ட ஒரு புகைப்படத்திற்கும் மாறி மாறித் தாவிய வண்ணம் இருந்தன.

திடீரென ஒலித்த அலைபேசி அவன் உருண்ட விழிகளை சற்று நிற்கச் செய்தது.

தன் அறையின் வெளியே நிகழும் செல்போன் உரையாடல் அவன் காதில் விழுந்தது.

"ஹலோ.. இஸ் இட் ஏன் எமர்ஜென்ஸி..? ஓகே.. டிரிப்ஸ் குடுக்க ஆரம்பிங்க, நான் பிப்டீன் மினிட்ஸ்ல வந்துடறேன்.”

சின்னுவின் அம்மா திவ்யதர்ஷினி பேசி முடித்துவிட்டு தன் மகனின் அறைவிளக்கு எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்து

ஆச்சர்யம் அடைந்தார். ‘எப்படியும் அம்மா பார்த்திருப்பாங்க’ என்று உணர்ந்தவன், திவ்யதர்ஷினி கதவைத் தட்டுவதற்கு முன் சின்னுவே வெளியே வந்தான்.

“என்னாச்சு மா?” என்று இருவரும் ஒரே நேரத்தில் கேள்வியை எழுப்பினர்.

சிரித்தபடி “நீ ஏன் இன்னும் தூங்காம இருக்க?” தலையைத் தடவிக் கொடுத்தவாறே திவ்யதர்ஷினி கேட்டார்.

“படிச்சுட்டு இருந்தேன்மா. அடுத்த வாரம் பைனல் செமஸ்டர்” என்று அவன் விழிகளில் தெரிந்த உண்மையை உதடுகள் மறுதலித்தன. 

“ம்ம்..” நம்பியும் நம்பாமலும் ஒரு “ம்” ஐ இறக்கி வைத்த திவ்யதர்ஷினி,

“ஹாஸ்பிடல்ல ஒரு எமர்ஜென்சி,நான் கௌம்பனும். ப்ளீஸ், எனக்கு ஒரு காப்பி போட்டு தரியா. நான் ரெடியாகி வந்துடறேன்.”

“ஓகேமா”

முகம் கழுவி தயாராகும் பொழுது என்றைக்கும் இல்லாமல் இக்கணம் சின்னுவிடம் ஏதோ ஒரு வித்யாசம் தெரிவதாக உணர்ந்தார்.

திவ்யதர்ஷினி தயாராகி வெளியே வரும் பொழுது காப்பி கப்புடன் நின்று கொண்டிருந்த தன் மகனைக் கண்டு, புன்னகைத்து, “தேங்க்யு” என்று காப்பியை வாங்கிக் குடித்தார். 

“ம் சூப்பரா இருக்குடா கண்ணா!”

“தேங்க்யு மா..” 

ஐந்து நொடி இடைவெளி விட்டு,

 “அம்மா,  நான் ஒன்னு கேக்கலாமா?”

“ம் ஷீயர்.. என்ன சின்னு?”

“வாட்ஸ் மீன் பை லவ். ?”

குடித்துக் கொண்டிருந்த காப்பி புரை ஏற,

“ஏன்டா திடீர்னு இப்புடி கேக்குற?”

“தெருஞ்சுக்கதான். சொல்லுங்க..”

Representational Image
Representational Image

நேரம் குறைவாக இருப்பதாகக் கைக்கடிகாரத்தை ஒரு கணம் பார்த்த திவ்யதர்ஷினி, "சரி.. என்கூட வா. ஹாஸ்பிடல்ல என் ரூம்ல வெய்ட் பண்ணு. ஒரு அர்ஜென்ட் டெலிவரி, அது முடிஞ்சதும் உங்கிட்ட பேசறேன்"

சற்று தயங்கியவன் மறுக்க மனமின்றி, வர ஒப்புக் கொண்டான்.

மருத்துவமனையை அடைந்ததும் மருத்துவர் உடை கூட மாற்றாமல் கட்டியிருந்த சேலையை வாரி இடுப்பில் ஒரு பக்கம் செருகிக் கொண்டு பிரசவ வார்டை நோக்கி மின்னலாய்ப் பாய்ந்த திவ்யதர்ஷினியை ஆச்சர்யமாகப் பார்த்து நின்றான் சின்னு.

அம்மாவின் ஆபிஸ் அறைக்குச் செல்லாமல் பிரசவ அறையின் வெளிப்புறம் அமர்ந்தான்.. அவனைச் சுற்றி, பிரசவத்திற்காக  உள்ளே இருக்கும் பெண்ணின் சொந்தங்கள் கைகளைக் கூப்பி அன்னார்ந்து அன்னார்ந்து குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டுமென பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர்.

கூடியிருந்தவர்களின் முகவடிவத்தை ஆராய ஆரம்பித்தான். அனைவருமே கிட்டத்தட்ட ஒரு  ஐம்பது வயதை வெற்றிகரமாக கடந்தவர்கள் போலத் தான் இருந்தார்கள். அப்பெண்ணின் கணவர் யாராக இருக்கும் என்ற கேள்வி மனதில் எழும்பொழுது,

“ வீர்ர்ர்…” என்று குழந்தையின் அழுகுரல் கேட்டது.  உறவினர்கள் அனைவரும் கண்ணீரோடு சிரித்தனர். அதைக் காண வினோதமாக இருந்தது சின்னுவிற்கு.

டாக்டர் திவ்யதர்ஷினி, பிறந்த குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டு வெளியே வந்தார். இவ்வளவு பிரகாசமான அழகான வழவத்தை அவன் இதுவரை தன் தாயின் முகத்தில் கண்டதில்லை.

தள்ளாடிய நிலையில் ஒரு பெண்மணி, "அம்மா... ரொம்ப நன்றியம்மா” என்று கைகூப்பி வணங்கினார் திவ்யதர்ஷினியைப் பார்த்து.

“இந்த நாட்டுக்காக நீங்க செஞ்ச தியாகத்துக்கும் வீரத்துக்கும் முன்னாடி நான் செய்தது ஒன்னுமே இல்லைங்கமா" என்று குழந்தையை அப்பெண்மணியிடம் கொடுத்து விட்டு, சின்னுவிற்குக் கண்ஜாடை செய்துவிட்டுச் சென்றார்.

பதினைந்து நிமிடங்கள் கழித்து வெளியே வந்தார் திவ்யதர்ஷினி.

"சின்னு, போலாமா?" 


“யெஸ் மா”

”சாரி. ரொம்ப நேரம் வெயிட் பண்ண வச்சுட்டேன்.”


“இட்ஸ் ஓகேமா. நான் இதுவரைக்கும் பார்க்காத அம்மாவ இன்னைக்குப் பாத்தேன், உங்க முகம் ரொம்ப ப்ரைட்டா இருந்துச்சு, அந்தக் குழந்தையக் கொண்டு வரும்போது.”

“ ஹஹஹ… தேங்க்யு.. தினமும் ஒரு பத்து டெலிவரியாவது பாத்துடறேன். இப்போ பார்த்த பிரசவம் சம்வாட் ஸ்பெஷல்.. சரி அத விடு.. நீ சொல்ல வந்தத சொல்லு.”


சின்னு லேசாக புன்னகைத்து, ஓரக்கண்ணால் பார்த்து,

“அம்மா, நீங்க தான் சொல்லனும்.. நான்  உங்கள ஒரு கேள்வி கேட்டேனே”

“ஸ்ஸ். ஆமா இல்ல.” என்று பல்லைக் கடித்து விட்டு ”வா, நடந்துட்டே பேசலாம்” என்று இருவரும் நடைபோட ஆரம்பித்தனர்.

“காதல்ன்னா என்னன்னு கேட்டல்ல. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி விளக்கம் சொல்லுவாங்க. என்னோட அனுபவத்த நான் உங்கிட்ட சொல்றேன். “

“உங்க அனுபவமா?? அப்பாவும் நீங்களும் அரேன்ஜ் மேரேஜ் தானே!!” வியப்பாகக் கேட்டான்.

“ஏன் கல்யாணத்துக்கு முன்னாடி எனக்கு லவ் எஃஸ்பீரியன்ஸ் இருக்கக் கூடாதா??”

“அப்புடி சொல்லல..சரி நீங்க மேல சொல்லுங்க”

”ம்.. அவரோட பேரு சிவா. ரெண்டு பேரும் ஸ்கூல்ல இருந்தே ப்ரெண்ட்ஸ். ட்டுவல்த்துக்கு அப்புறம் சிவா, என்ஜினியரிங் சேர்ந்தாங்க. நான் மெடிக்கல் காலேஜ் ஜாயின் பண்ணிட்டேன். படிப்பு முடிச்சுட்டு சிவா ஒரு வேளையில சேர்ந்தாங்க. நான் அப்போ ஸ்பெஷலைஷேஷன் பண்ணிட்டு இருந்த சமயம்”

கதை சொல்லிக் கொண்டிருக்கும் போது செய்தித்தாள் கிடங்கு வழியில் வர, ஒரு கணம் நின்றார் திவ்யதர்ஷினி. வாலிபர்கள் சிலர் அவர்களுயை பகுதிகளுக்கு செய்தித்தாள்களை விநியோகம் செய்ய தங்களுடைய சைக்கிள்களில் ஏற்றிக் கொண்டிருந்தனர். அதில் ஒரு செய்தித்தாளை திவ்யதர்ஷினி வாங்கினார். 

Representational Image
Representational Image

பின்பு கதையைத் தொடர்ந்தார்…

“ஒரு நாள் என் அப்பா அதான் உன் தாத்தா, என்னை, பாட்டி, உன் சித்தியையும் மருதமலை முருகன் கோவிலுக்குக் கூட்டிட்டுப் போயிருந்தாங்க. வழக்கம் போல தரிசனத்துக்குன்னு தான் நெனச்சேன். ஆனா அங்க ஒரு பெண் பார்க்கும் படலமே அரங்கேறுச்சு. நான் அதிர்ச்சியில அமைதியா இருந்தேன். திரும்பவும் கார்ல வீட்டுக்கு ரிடர்ன் வரும் போது, என்னோட காதல் விவகாரத்த சொன்னேன்"

அடுத்து நடந்ததை சொல்ல முயன்ற போது தீவய்தர்ஷினிக்கு உடல் நடுங்கி லேசாக வியர்க்க ஆரம்பித்தது. இளம் காலைப் பொழுதில் அம்மாவிற்கு வியர்ப்பதைக் கண்டு பதறிய சின்னு, கண்ணில் தென்பட்ட மணி பேக்கரிக்குக் கைதாங்கலாக அழைத்துப் போனான்.

“அம்மா, ஆர் யு ஓகே?” என்று பதறினான்.

“ ஐ அம் ஓகே. ஒரு டீ சொல்லிட்டு தண்ணி எடுத்துட்டு வா சின்னு.”


முகத்தை லேசாக அளம்பிவிட்டு, டீ யை ருசித்துக் கொண்டே தொடர்ந்தார்..

“அப்பாவுக்குக் கோவம் வந்தா ரொம்ப அமைதியாகிடுவாறு. அந்த அமைதி தான் ரொம்ப பயங்கரமா செய்கையில வெடிக்கும். காதல் விவகாரத்த சொன்னதும் டமாருன்னு காரக் கொண்டு போய் கரெண்ட் கம்பத்தில இடுச்சு நிறுத்தினாரு”

“அய்யைய்யோ!!!”

“அது வெறும் மிரட்டல் தான். முன் எச்சரிக்கை. நான் பிடிவாதமா நின்னா இதுக்கு மேலயும்  நடக்கும் அப்புடீங்குற எச்சரிக்கை.”

“அப்புறம்??”

“அப்புறம் என்ன, வழக்கம் போல அழுகை ஆர்ப்பாட்டம் பண்ணிணேன். சிவா கிட்ட நடந்தத சொன்னேன். நாம ஓடி போயிடலாம். நீங்க இல்லாம என்னால வாழ முடியாது. இல்லன்னா ரெண்டு பேரும் செத்து போயிடலாம்…, எக்ஸட்ரா… எக்ஸட்ரா.”

“ம்.. அவங்க என்ன சொன்னாங்க?” அவசரமாகக் கேட்டான் சின்னு.

“சிவா ரொம்ப மெட்சூர்டு மேன், அவங்க சொன்னது இதுதான். இந்த மாதிரி உயிர்களப் பணயம் வச்சு பந்தயம் ஆடுறது சரியா. மடத்தனமா நாம, தற்கொலை பண்ணிக்கிட்டா அப்புறம் நமக்கும் உன் அப்பாக்கும் என்ன வித்தியாசம் இருக்கும் சொல்லு. 

ஒரு உயிர் இந்த பூமியில வர ஒரு தாய் இருபது எலும்பு உடையுற வலிய தாங்கி பெற்றெடுக்கனும். அந்த உயிர எடுத்துக்க நமக்கு என்ன உரிமை இருக்கு?. இதெல்லாம் தாண்டி நாம கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன ஆகும்னு உன் அப்பா காட்டிட்டாரு. அப்பா அம்மாவ விடு,உன் தங்கச்சி ஏன் சாகனும்? அப்பிடி அவங்க மூனு பேரும் போயிட்டா நாம நிம்மதியா சந்தோஷமா வாழ்ந்திட முடியுமா?.நிரந்தர குற்ற உணர்ச்சிலயே சாவ வேண்டியது தான்.”

“ஸோ.. என்ன முடிவு ? பிரிஞ்சுடலாம்னா?” சின்னு வருத்தமாகக் கேட்டான்.

“ஆமா, அப்பாவோட மூர்கத்தனத்தோட போட்டி போட நாங்க ரெண்டு பேருமே தயாரா இல்ல.”

 "ஹும்ம்.. சிவா வேற பொண்ணக் கல்யாணம்

பண்ணிக்கிட்டாரா?”

“ஆமா .. நான் மட்டும் கல்யாணம் செஞ்சு நல்ல படியா வாழ்ந்து, சிவா என்னையே நெனச்சு கல்யாணம் பண்ணாம இருந்துட்டா, என்னால எப்புடி நிம்மதியா வாழ முடியும். உலகத்துல எங்கோ ஒரு மூலையில சுவாஸிச்சிட்டு இருந்தாலே அது எனக்கு பெரும் மகிழ்ச்சி.”

பெருமூச்சிவிட்டான் சின்னு.

சற்று முன் வாங்கிய செய்தித்தாளில்  இருந்த ஒரு செய்தியைக் காட்டினார் திவ்யதர்ஷினி.

“இதுல இருக்குற ராணுவ வீரன் யார் தெரியுமா?. . இன்னைக்கு நான் பிரசவம் பார்த்தது இவரோட மனைவிக்கு தான். என் கையப் பிடிச்சு வணங்கி நன்றி சொன்னாங்களே அவங்க இவரோட அம்மா. இவர் இறந்து போன செய்தியக் கேட்டுதான் நிறைமாத கர்பினியான இவரோட மனைவி மயங்கி விழுந்து பனிக்குடம் உடஞ்சுடுச்சு. அந்த எமர்ஜென்சி கால் தான் நைட் எனக்கு வந்தது"

“..................” மொழி இல்லாமல் அமைதியானான் சின்னு.

“இந்த மாதிரி எத்தனை இராணுவ வீரர்கள, வீரத் தாய்மார்கள் நாம நிம்மதியா வாழ பலி கொடுக்க அனுப்பி வைக்கிறாங்க. அதவிட இது ஒரு பெரிய கஷ்டம் இல்ல சின்னு. நாம நேசிக்குறவங்க எங்கயோ நல்ல படியா வாழ்ந்தாளே நாம சந்தோஷப் படனும். அது தான் காதல், உண்மையான காதல். வாழ முடியாம சாகிறது கோழைத்தனம். வலி தான். நாம நேசிக்கிறவங்களோட சேர்ந்து வாழ முடியலன்னா வலிதான். காலம் தான் மருந்து. காலத்தால ஆற்ற முடியாத வலி எதுவுமே இல்ல. ஜஸ்ட் கிவ் இட் சம் டைம்.. ஆத்திரத்துலயும் கோபத்துலயும் முடிவெடுக்காம கொஞ்சம் ஆறப் போட்டா எல்லாமே சரி ஆகும்.”

Representational Image
Representational Image

“ஹீம்ம்.. உங்களுக்கு தாத்தா மேல கோவம் இல்லயா?”

“ இருந்துச்சு.. அந்தக் காலத்து மனுஷங்கள, எப்படி மாத்த முடியும். இப்போ உங்களுக்கு இருக்கிற சுதந்திரம் எங்களுக்கு அப்போ இல்ல. உங்க ஜென்ரேஷனுக்கு எல்லா சுதந்திரமும் இருக்கு, ஆனா அதக் கையால தெரியல. “

“ தேங்க்ஸ் மா”

“ எதுக்குடா கண்ணா?”

“எது காதல்னு புரிய வச்சதுக்கு…”

“ம்.. சரி போலாமா வீட்டுக்கு”

மௌனமாக வீடு திரும்பினர் இருவரும்.

“சின்னு நான் போய் அப்பா என்ன செய்யறாங்கனு பாக்குறேன். நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு.”

“ஓகேமா..” என்று தன் அறைக்குச் சென்றவன், தன் மேஜை மேல் இருந்த செய்தித்தாளில்,

"தன் முன்னால் காதலியை ஓடும் ரயில் முன் தள்ளி இளைஞன் கொலை செய்தான்”

என்ற செய்தி தாங்கிய தாளைக் கிளித்துக் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு, குப்பைத் தொட்டியில் நான்கு துண்டுகளாக இருந்த தான் நேசிக்கும் பெண்ணின் புகைப்படத்தை ஒன்று சேர்த்து ஒட்டினான்.

-மலர்விழி மணியம்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.