வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
அன்று வானம் மப்பும் மந்தாரமுமாய் "பிசுபிசு" என லேசாக தூரிக்கொண்டு இருந்தது...
மணி காலை சரியாக 6.45 ஐ நெருங்கியதும் என் கண்கள், அனிச்சையாக ஓட்டல் வாசலில், அந்த பெரியவர் வருகைக்காக தேட ஆரம்பிக்கிறது! இன்று காலை 6.30மணிக்கே.. நான் வேலூர் "பேலஸ் கேஃப்" ஓட்டலுக்கு சென்று வழக்கம் போல் இரண்டு இட்லி, ஒரு வடை, சாம்பார், நெய்க்கு ,ஆடர் செய்து சாப்பிட துவங்கி இருந்தேன்.
80து களில் வேலூர் பேலஸ் கேப், அதன் தனிச்சுவைக்காக பிரசித்தி பெற்ற தலைசிறந்த ஓட்டல். வேலூர் மெயின் மார்க்கெட்டை ஒட்டிய ஹைரோட்டில் அந்த ஓட்டல் அமைந்திருந்ததால், காலை மாலை சுவையான சிற்றுண்டிக்காக, வியாபாரிகள் அங்கு குவிந்த வண்ணம் இருப்பர். காலை 8 மணி வாக்கில் உட்கார இடம் கிடைக்காமல் ரோட்டில் ஒரு கும்பல் காத்திருக்கும் என்றால் அதன் மகிமையை பார்த்துக் கொள்ளுங்களேன். அதற்காகவே நான் தினமும் அதிகாலை 6.30 மணிக்கே அங்கு, ஆஜராகி விடுவதை வழக்கமாக கொண்டிருந்தேன்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மாடிப்படிக்கு அருகில், கை அலம்பும் இடத்திற்கு சற்றே தள்ளி, சிறிது ஒதுக்குபுறமாக இருந்த, அந்த இரண்டுபேர் அமரக்கூடிய மேஜைதான் என் ஆஸ்த்தான இருக்கை. ஏனோ அந்த இடத்திற்கு அவ்வளவு "டிமேண்ட்" கிடையாது... தினமும் மிகச்சரியாக, 6.45மணிக்கு "டாண்ணு" எதிர் சீட்டில் ஒரு 65 வயது மதிக்கத்தக்க பெரியவர் வந்து அமர்வார்.
சற்றே உயரமாக, வெள்ளை கதர் வேட்டி சட்டை அணிந்து கொண்டு, நெற்றியில் சிவப்பழமாக விபூதி குங்குமம் தரித்து, முகம் முழுக்க இனம் புரியாத சோகம் அப்பிக்கிடக்க, அதேசமயம் தீர்க்கமான பார்வையுடன், அவர் வந்து அமரும் போது, ஒவ்வொரு நாளும் என்னுள், ஏதோவொரு இனம்புரியாத இனிய புத்துணர்ச்சி தோன்றும்.
வலது கையில் வெள்ளை ரோமங்களுக்கு இடையே, சதுரவடிவிலான பழைய ஃபேவர்லூபா கைக்கடிகாரமும், இடது மணிக்கட்டில் கருப்பு கயிறும் கட்டி இருப்பார்.
இரண்டு இட்லி சாம்பார், நெய்யுடன் (வடை ஏனோ வாங்குவதில்லை) சேர்த்து சாப்பிடும் அந்த நளினத்தை அவருக்கு தெரியாமல் நான் ஓரக்கண்ணால் பார்த்து ரசிப்பேன்.
பிறகு கை அலம்பாமல், அந்த ஓட்டலின் "ட்ரேட்"மார்க்கான ஃபில்டர் காப்பியை பளபளக்கும் பித்தளை "டபரா டம்ளரில்" வாங்கி, நிதானமாக ஆற்றி, சற்று எக்ஸ்ட்ரா சீனியை கலந்து, சிறிது சிறிதாக சூப்பி உறிஞ்சி, உறிஞ்சி ரசித்து குடிக்கும் அழகை பார்ப்பேன்!
அதன் பிறகு அவர் மெல்ல எழுந்து கை அலம்பிக்கொண்டு உள்சட்டை பாக்கெட்டில் ,பில்லுக்கான காசை மெல்ல எடுத்து கவுண்டரில் செலுத்தி விட்டு , வாயிலை தாண்டி சென்று மறையும்வரை அவரை கண்களால் தொடர்ந்த வண்ணம், நான் மெல்ல நிதானமாக என் சிற்றுண்டியை சாப்பிடுவேன்.
இது ஒரு ஆறு மாத காலமாக தினசரி நிகழும் ஒரு செயலாக இருந்தது. ஒருநாள் கூட நானும் அவரும் ஓட்டலில் சந்திக்க தவறியதே இல்லை. ஆனால் நானும் சரி, அவரும் சரி, ஒரு வார்த்தை கூட இன்றுவரை பேசிக்கொண்டதுமில்லை, புன்னகைத்து கொண்டதுமில்லை. அவர் ஒவ்வொரு நாளும் வெளியேறும் போது "நாம் ஏன் அவரிடம் பேசக்கூடாது? அவர் என்னைவிட பெரியவர் தானே, நாமே ஏன் வலிய சென்று பேச்சு கொடுக்க கூடாது?" என நினைப்பேன். ஆனால் இன்று வரை அதை ஏனோ நிறைவேற்றியது இல்லை.
இன்று ஏனோ மணி 6.45 மணியை தாண்டியும் அவரை காணாததால், மனதில் ஒரு பயம் கலந்த பரபரப்பு தொற்றிக்கொண்டது.. "பெரியவருக்கு.. என்ன ஆயிற்றோ? ஏது ஆயிற்றோ ?"என்று மனதில் ஒரு அச்சம் பரவி என்னை திகிலுற செய்தது, தட்டில் இருந்த , ஆசையாய் ஆர்டர் செய்த நெய்பொங்கலை பிசைந்தேனே தவிர உண்ணவில்லை. அந்த சுவையான பொங்கல் ஏனோ இப்போது கசந்தது. தொண்டையில் இறங்க மறுத்தது, மீண்டும் மீண்டும் என் விழிகள் ஓட்டலின் நிலை வாயிலையே.. சுற்றி சுற்றி அவர் வரவுக்காக வட்டமடித்து கொண்டே இருந்தது. ஒவ்வொரு மணி துளியும் என் கிலியையும் வலியையும் அதிகப்படுத்தியது.
*****
சிறுவயதில்...
சித்ரா பௌர்ணமி புஷ்ப பல்லக்கு திருவிழாவில்... என் தந்தையை ஒருமுறை தொலைத்து, அழுது நின்ற அந்த மணித்துளிகளின்,
அதீத துன்பத்தை இந்த மணித்துளிகளில் ஏனோ உணர்ந்தேன்! ஒருவேளை சிறுவயதில் தந்தையை நான் பறிகொடுத்ததால், இந்த மனநிலை ஏற்படுகிறதோ ??
"யாரோ ஒருவர் வராம போனதுக்கு,
நீ ஏன் கவலப்படற?" என என் மூளை, மீண்டும் மீண்டும் வினா எழுப்பினாலும்...
என் இதயம் ஏனோ இனம்புரியாது அழுதது...!
"சார்.!. சூடா வெங்காய வடை ரெடி ஆயிடுச்சி, கொண்டு வரட்டுமா சார்!" என சர்வர் என் காதருகே கேட்க,
சுய நினைவு வந்து "ஆங் இல்ல! வேணா!" என்று ஏதோ உளரினேன்!
"ஸ்பெஷல் பில்டர் காப்பியாவது கொண்டு வரட்டுமா சார்?" என அவன் மீண்டும் (கணிசமாக டிப்ஸ் வாங்கும் நன்றி விஸ்வாசத்தில் ) பரிவு பொங்க பாசத்துடன் கேட்க,
அவன் மீது ஏனோ எரிந்து விழுந்தேன்! அவன் ஒன்றும் புரியாமல் நழுவினான்!

என் பார்வை மொத்தமும் வாயிற்படியில்...
அவர் வரவுக்காக குத்திட்டு நின்றது! ஓட்டலின் சுவரில் மாட்டப்பட்ட பெரிய ஆங்கிலேய காலத்து வட்ட வடிவ சுவர்கடிகாரம் "டாங்க் ! டாங்க்!" என 7முறை அடிக்க, எனக்கு அழுகையே வரும்போல ஆகிவிட்டது!
கூட்டம் வேறு அதிகரிக்க தொடங்கவே, பொங்கலை அப்படியே விட்டுவிட்டு, கைகழுவி பில்லுக்கான பணம் கொடுத்துவிட்டு, வெளியே நடை பிணம்போல் வந்து நின்றேன்! மெயின் ரோட்டில் வாகன இரைச்சல் காதை பிளக்க, ...
என் "வெல்ல மண்டியை" திறக்கும் நேரம் நெருங்கியது பற்றிக்கூட நினைவோ, கவலையோ, கொள்ளாமல், நாலாபுறமும் பெரியவர் முகம் தெரிகிறதா? என சுற்றும் முற்றும் பார்த்த வண்ணம் என் கால்கள், சாலையில் நங்கூரமிட்டு நடக்க மறுத்தது!
"சே!நானும் ஒரு மனிதனா?,
அவரிடம் தினமும் ஒருசில வார்த்தைகளாவது அன்பாய் பேசி இருக்கலாமே,?
அவர் விலாசம் வாங்கி வைத்திருக்கலாமே?" என பலவாறு , என் உள்மனம் என்னை வறுத்து எடுத்தது!
"அவருக்கு என்ன ஆச்சோ? ஏது ஆச்சோ தெரியவில்லையே!" என அவர் நினைவு என்னை மேலும் மேலும் துன்பப்படுத்த..,
அவர் சோகம் கலந்த முகம் வேறு,
என் கண் முன் தோன்றி வதைக்கவே, எனக்கு ஓவென்று அழவேண்டும் போல் இருந்தது! "யாரோ ஒரு மனிதனை பற்றி என் மனம் ஏன் இப்படி கவலைப்படுது, எனக்கு என்ன ஆச்சு! ஏன் இப்படி பைத்தியம் போல் மாறிப்போனேன்!" என என்னை நானே கேட்டுக்கொள்ள....
அதோ! அதோ!...
தூரத்தில் அவர் வருவது போல் தோன்ற.. "கடவுளே அது அவராக இருக்க வேண்டுமே!" என என் ஆழ்மனம் வேண்ட...
ஆம் அவரேதான்.. அவரேதான்!
எனக்கு ஏதோ லாட்டரியில் 10 லட்சம் விழுந்தது போல் பெருமகிழ்ச்சி ஏற்பட்டது. என் கால்கள் என்னையும் மீறி ஓட்டம் பெருநடையாக அவரை நோக்கி பாய்ந்தது. அவரை நெருங்கி அப்படியே கட்டி அணைத்து கொண்டே, "ஏன் சார் லேட்? என்ன ஆச்சு? உங்களுக்கு ஒண்ணும் ஆகலயே?" என வினவினேன்.
திருவிழாவில், தொலைத்த என் தந்தையை மீண்டும் பார்த்தபோது சிறுவயதில் எப்படி தேம்பி தேம்பி அழுதேனோ! அதேபோல, இப்போதும் இந்த 40 வயதிலும் , என்னையும் அறியாமல் அழுது கொண்டிருந்தேன்!
அவர் ஆச்சர்யத்துடன் "என்ன ஆச்சு?ஏன் தம்பி அழரீங்க?" என ஆதங்கத்துடன் கேட்க!
"ஏன் சார் லேட்டு. நீங்க வராம உங்களுக்கு என்ன ஆச்சோ ஏது ஆச்சோன்னு பயந்துட்டேன் சார்!" என நான் விம்மலுடன் கூற...
அவரும் என்னை ஆதரவாக பற்றி இறுக அணைத்துக்கொண்டு கொண்டு "எனக்கு ஒண்ணும் ஆகலப்பா. இன்னிக்கு ஏனோ தெரியல நீண்ட நேரம் என்னையும் அறியாம தூங்கிட்டேன் தம்பி!"என சமாதானம் கூறியபடி,
அவரும் என்னுடன் சேர்ந்து அழத்தொடங்கினார்!
எங்கள் இரண்டு இளகிய இதயங்களையும் ஏதோ ஒரு இனம் புரியாத பாசப் பிணைப்பு கட்டியாட்கொண்டது!! அவர் முகத்தில் எப்போதும் கப்பியிருக்கும் அந்த சோகராகம் சுத்தமாக இப்போது முற்றிலும் மறைந்துபோய், ஒரு புத்தம்புது பூர்ண சந்திரன் போல் அவர் முகம் ஜொலித்தது!
(முற்றும்)
-மரு உடலியங்கியல் பாலா