Published:Updated:

வள்ளியம்மையும் ஆட்டுக்குட்டிகளும்! | சிறுகதை | My Vikatan

Representational Image ( Vikatan Photo Library )

ஓட்டை செருப்பின் வழியாக கல் ஏறுவதைக் கூடப் பொருட்படுத்தாமல் ஆற்றோரத்திற்கு சின்னப்பிள்ளை போல ஓடினார் கருப்பண்ணன். எப்போதும் சந்திக்கும் பாறையின் முகட்டில் வள்ளியம்மாள் தென்பட்டதும் இறக்கை முழைத்தப் பட்டாம்பூச்சியாய் பறந்து சென்றார்.

வள்ளியம்மையும் ஆட்டுக்குட்டிகளும்! | சிறுகதை | My Vikatan

ஓட்டை செருப்பின் வழியாக கல் ஏறுவதைக் கூடப் பொருட்படுத்தாமல் ஆற்றோரத்திற்கு சின்னப்பிள்ளை போல ஓடினார் கருப்பண்ணன். எப்போதும் சந்திக்கும் பாறையின் முகட்டில் வள்ளியம்மாள் தென்பட்டதும் இறக்கை முழைத்தப் பட்டாம்பூச்சியாய் பறந்து சென்றார்.

Published:Updated:
Representational Image ( Vikatan Photo Library )

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

அதிகாலை ஐந்து மணி இருக்கும், போர்த்தியிருந்த போர்வையில் ஆங்காங்கே இருந்த ஓட்டைகளின் வழியாக மார்கழி மாதக் குளிர் நுழைந்து கருப்பண்ணனின் தூக்கத்தை சற்றே சோதித்துக் கொண்டிருந்தது.

மாதா கோயிலின் மணியோசை “டங்.. டங்.. டங்..” என அடித்தது. இது இந்த சிறிய கிராமத்தின் அலாரம் மணி. உச்சுக் கொட்டிக் கொண்டே சற்று சலிப்போடு உறக்கத்திற்கு விடை கொடுத்துக் கண் விழித்துப் பார்த்தாள் அன்புச்செல்வி. அவளுடைய போர்வையின் பாதியை இழுத்துப் போர்த்தி்க் கொண்டு உறங்கும் தன் நான்கு வயது மகன் முத்துச்சாமியின் நெற்றியில் லேசாக முத்தமிட்டு,  மீதி போர்வையையும் அவனுக்கே சமர்ப்பித்து பின் குடிசையை விட்டு வெளியே வந்தாள்.

“கொக்.. கொக்.. கொக்..” என்று கொக்கரித்தக் கோழிக்கும் அதன் குஞ்சுகளுக்கும்  அதன் பொட்டுக் கூடைகளில் இருந்து விடுதலை கொடுத்துவிட்டு, உடைந்து கிடந்த செங்கற்கள் பொடியைக் கொஞ்சம் எடுத்து வாயில் போட்டுப் பல்லை சுத்தம் செய்தாள்.

 பின்பு மூங்கில் மரத்தின் மிச்சங்களை அடுப்பிற்கு இறையாக்கித் தீ மூட்டி, வரக்காப்பியைக் கொதிக்க வைத்தாள். நான்கு கால்களில் ஒன்று பழுதாகிவிட்ட கயிற்றுக் கட்டிலில் தைரியமாக உறங்கிக் கொண்டிருந்த கருப்பண்ணனை எழுப்பினாள்.

 “ஐயா..  ஐயா… ஏந்திரிங்க மணியாச்சு. ஆறரை மணி பஸ் வந்திடும்.”

 ஒரு விதமான முறுக்கலோடு ஓட்டைப் போர்வையை விலக்கி, எழுந்து உட்கார்ந்தார் கருப்பண்ணன்.

 “சுடுதண்ணி இருக்கா தாயீ ” 

Representational Image
Representational Image

அவர் மொழியில் சுடுதண்ணி என்றால் காப்பி என்று அர்த்தம்.

“அடுப்புல காயுது. நீங்க முகம் கழுவி பல்லு தேய்ச்சுட்டு வாங்க.”

பனியில் விறைத்திருந்த தன் சுருங்கிய தோலுடைய பாதங்களை ஒன்றோடொன்று தேய்த்து சூடேற்றிக்கொண்டு கட்டிலில் இருந்து மண்ணில் கால் பதித்தார். பல்தேய்த்து முகம் கழுவும் பொழுது ஆட்டுக் கொட்டிலைப் பார்த்தார். ஆடுகளைக் காணவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தார் எங்கு மேய்கிறது என்று. சற்றே புலர்ந்திருந்த காலைப் பொழுது அவர் விழிகளுக்கு போதுமான வெளிச்சத்தைத் தரவில்லை. முகம் கழுவி விட்டு அடுப்பின் அருகில் குந்த வைத்து அமர்ந்து சூடேற்றிக் கொண்டு,அன்புச்செல்வி கொடுத்தக் காப்பியை வாங்கிக் குடிக்க ஆரம்பித்தார்.

இருபத்து ஐந்து வயதைக் கடந்துவிட்ட அன்புச்செல்வி, கருப்பண்ணனுக்கு முதல் பேத்தி. தன் கணவன் கஞ்சா புகைக்கு ஆகுதி ஆன பிறகு பிறந்த வீட்டோடு இருக்கலாம் என்று கைக்குழந்தையோடு வந்தவள், தாத்தாவிற்குத் துணையாக இருந்துவிட்டாள்.

தன் பழுப்பு நிற விழிகளை உருட்டியபடி காப்பியைக் குடித்துக் கொண்டிருந்த கருப்பண்ணன்,

“அப்பன் வந்தானா?” என்று தன் தலைமகனைப் பற்றி விசாரித்தார்.

தன் தந்தையின் பேச்சை எடுத்தாலே அன்புச்செல்விக்கு ஆத்திரமாக வரும். அது தெரிந்தும் ஒரு நாளில் ஐந்து முறையாவது கேட்டுவிடுவார் கருப்பண்ணன். எழுபத்தைந்து வயதின் மறதி கூட காரணமாக இருக்கலாம்.

Representational Image
Representational Image

“அப்பன் வந்து ஆவப்போறது என்ன இப்ப?. ஒம்ம மவனுக்கு நான் என்ன ஒரே மகளா? ரெண்டாம் பொண்டாட்டியும் அதுங்க பெத்ததும் தான ஒலகம் உம் மவனுக்கு” என்று கர்ஜித்தாள்.

"என்ன இருந்தாலும் உன்னப் பெத்தவனுல்ல தாயீ?”

“அதான் பெத்துட்டே இருக்காப்பலயா?. இந்த ஆளோட கொடும தாங்காம என் அம்மா ஓடிடுச்சு. இந்த ஆளுக்கு துணை வேணும்னு வேற கலியாணம் கட்டிக்கிட்டான். என்னப் பத்தி யாராவது நெனச்சுப் பாத்தீங்களா? கொண்டவனயும் தூக்கி மண்ணுக்குக் கொடுத்துட்டு மூழியா உக்கார்ந்து இருக்கேன். என்னயப் பத்திக் கவலப் படாத அப்பன எப்புடி நான் மதிக்குறது?”

அதற்கு மேல் மகனுக்காக வக்காளத்து வாங்க கருப்பண்ணனிடம் வார்த்ததைகள் இல்லை.

“ எந்தன தப்பு செஞ்சாலும் சரி, எப்பேற்பட்ட அசிங்கத்தச் செஞ்சாலும் சரி, உங்களுக்கு உம்ம மவனுங்க தான் பெருசு. ஆறு பெத்தியே ஐயா அதுல ஒரு பொம்பலப் புள்ளையை மட்டும் உமக்குக் கொடுத்தானே அந்த ஆண்டவன். பாவி. அந்த ஆறயுமே பொட்டப் புள்ளையா குடுத்துருக்கக் கூடாதா.”

இந்த வரியை அன்புச்செல்வி கூறும் பொழுதெல்லாம் தன் மகன்கள் பிறந்த தினங்கள் கண் முன் வந்து போகும் கருப்பண்ணனுக்கு. ஆண் பிள்ளைகள் பிறந்தால் கொண்டாடிய காலகட்டம் அது. ஏதோ பெரிய சாதனை வீரனைப் போல வானம் பார்த்து மீசையை முறுக்கிக் கொண்டு தன் ஐந்து மகன்களையும் கையில் ஏந்திய தருணத்தை அசை போடும் அவரது மனம். அறுவரில் மூன்றாவதாக ஒற்றைப் பெண் பிள்ளை பிறந்த போதும் ஆனந்தம் தான் அவருக்கு.

அன்புச்செல்வி எழுந்து வாசலைக் கூட்டிக் கொண்டே தொடர்ந்தாள்…

“எல்லா வீட்டுலயும் ஆம்பலப் பசங்க சம்பாதுச்சு குடும்பத்தக் காப்பத்தும். என்ன சாபமோ, இந்தக் குடும்பத்துக்கு அந்தக் கொடுப்பனை இல்லாமப் போயிடுச்சு. ஒத்த பொம்பளப் புள்ளயா பொறந்த என் அத்தகாரி தான் படியளக்குறா. உமக்கு வாய்ச்ச மருமகளுங்க இல்லன்னா உம் மவனுங்க பொழப்பு நாறிடும். எல்லாம் ஆத்தா செஞ்ச புண்ணியம் இந்த வீட்டுக்கு வந்த பொம்பளைங்க எல்லாம் நல்லவளா இருக்காளுங்க. பெண் துணை இல்லாம ஒரு ஆம்பள ஒத்தயா நின்னு பசங்கள வளர்த்தா என்ன ஆகுங்குறதுக்கு நீதான் ஐயா உதாரணம். நீ போயீ, ஆத்தா இருந்திருந்தா…... “ என்று தன்னை மீறி வந்த வார்த்தைகளைப் பல்லைக் கடித்து வெட்டிக் கொண்டாள்.

சற்று திரும்பிப் பார்த்தாள். கருப்பண்ணன் அடுப்பின் அருகில் இல்லை. வேலியைத் தாண்டி வெளியே எட்டிப் பார்த்தாள். அவர் பஸ் ஸ்டாப்பை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்.

பொங்கிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டு உள்ளே சென்றாள் அன்புச்செல்வி.

கருப்பண்ணன் பஸ் ஸ்டாப்பை அடையும் முன்னரே 49A டவுன் பஸ் அடுத்த ஊரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

Representational Image
Representational Image

கருப்பண்ணனின் மங்கலான பழுப்பு விழிகளில் அவருடைய மகள் சரஸ்வதி இரு கையிலும் பைகளைச் சுமந்தபடி நடந்து வந்து கொண்டிருந்தாள் அவரை நோக்கி. அவளுக்கு முன் அவளுடைய மகள் பூஜா ஓடி வந்து கொண்டிருந்தாள்,

“ஐயாாாாாா… ஐயாாாாாா…” என்று கத்திக் கொண்டே.

தள்ளாடிய நடையும் ஓட்டமுமாக கருப்பண்ணனும் ஓடினார். பேத்தியை அடைந்ததும் தன்னிடம் முன் வரிசையில் மீதி இருந்த இரண்டு பற்களைக் காட்டி சிரித்து மகிழ்ந்து,

“அம்மா... என்னப் பெத்த தாயீ!! “என்று அள்ளிக் கொண்டார் பூஜாவை.

“ஐயா எப்புடி இருக்கீங்க” என்று தன் தாத்தாவின் இரு கன்னங்களுக்கும் தன் உள்ளங்கைகளைக் கொடுத்துக் கேட்டாள் பூஜா.

“சாமி.. நல்லா இருக்குறேன். எத்தன நாள் லீவு உனக்கு”

“‘ரெண்டு நாளு தான் ஐயா” சற்றே ஏமாற்றத்தோடு கூறினாள்.

பைகளின் கனத்தோடு தன் அப்பாவின் அருகில் வந்தாள் சரஸ்வதி.

"வா தாயீ . களைப்பா இருக்கா. பை கனமா இருக்கா?”

"அதெல்லாம் இல்லீங்க ஐயா.. உங்களுக்கு உடம்பு எப்புடி இருக்கு.. பல் வலி பரவாயில்லயா? “ என்று உடல் உறுப்புகளைப் பற்றி ஒவ்வொன்றாக விசாரித்தாள்.

“அதெல்லாம் பரவாயில்ல சாமி. செருப்பு ஓட்ட வழியா காலுல ஒரு ஆணி ஏறிடுச்சு. அதுதான் இன்னும் ஆறாம இருக்கு” என்று அவர் கூறும்போது சரஸ்வதிக்குக் கண்கள் கலங்கியது.

“இன்னைக்கு கடை வீதிக்குப் போயி ஒரு நல்ல செருப்பு வாங்கிக்கலாம்” என்று கூறிக்கொண்டே வருகையில் வழியில் பெட்டிக் கடை தென்படவே, தன் பர்ஸ்ஸில் இருந்து சில்லறைக் காசுகளை எடுத்துத் தன் தந்தையின் மேல்சட்டைப் பாக்கெட்டில் வைத்தாள் சரஸ்வதி.

பெட்டிக்கடையை நெருங்கியதும், பூஜா தன் தாத்தாவின் கையைப் பிடித்துக் கொண்டு, “ஐயா ஏதாச்சும் தீனி வாங்கித் தாங்க” என்று கேட்டாள்.

Representational Image
Representational Image

“பை நெறைய வாங்கிட்டு வந்தாலும் ஐயா கையால வாங்கி சாப்பிட்டா தான் அவளுக்குத் திருப்தி” என்று சரஸ்வதி கூறினாள்.

தன் பாக்கெட்டில் மகள் வைத்த சில்லறைக் காசுகளைத் தொட்டுப் பார்த்தபடியே, “வா சாமி. என்ன வேணும்மோ வாங்கிக்கோ “ என்று பூஜாவை பெட்டிக்கடைக்கு அழைத்துச் சென்றார்.

ஒரு கையில் தேன்மிட்டாயும் , எழந்தவடையும், கம்மர்கட்டும், வாங்கிக் கொண்டு மறு கையில் தன் தாத்தாவின் கையைப் பிடித்துக் கொண்டு நடக்கும் பொழுது முன்தினம் பள்ளித் தோழிகளிடம் “நான் நாளைக்கு என் தாத்தா வீட்டுக்குப் போறேன். என் தாத்தா நான் என்ன கேட்டாலும் வாங்கித் தருவாங்க” என்று கூறிய காட்சி மின்னலாய் வந்து போனது பூஜாவிற்கு.

தன் குடும்பக் கதைகளைப் பற்றி உரையாடிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தனர்.

“வா அத்த” என்று சரஸ்வதியை வரவேற்று பைகளை வாங்கிக் கொண்டாள் அன்புச்செல்வி..

அன்புச்செல்வியின் இடுப்பில் இருந்த முத்துச்சாமியை சரஸ்வதி வாஞ்சையோடு எடுத்து முத்தமிட்டாள்.

“ஏன் செல்வி, புள்ள முகம் வாடி இருக்கு?”

“ரெண்டு நாளா காய்ச்சல் அத்த. இன்னைக்குப் பரவாயில்ல. ஒடம்பு சோர்வா இருக்குதுபோல"

“அக்கா.. “என்று கட்டிக்கொண்டாள் பூஜா.

"டே.. பூஜா குட்டி. நல்லா இருக்கியா. எப்புடி படிக்குற?”

“நான் தான் க்ளாஸ் பஸ்ட்டு “ என்று பெருமிதமாய்க் கூறினாள் பூஜா.

“சூப்பர் சூப்பர்.. சரி வா திண்ணையில உக்காரு. அக்கா உனக்கு முறுக்கு சுட்டு வச்சேன். எடுத்தாரேன்” உள்ளே ஓடி முறுக்கோடு வெளியே வந்தாள்.

“சாப்பாட்டுக்கே கஷ்டமா இருக்குற நேரத்துல எதுக்கு செல்வி முறுக்கெல்லாம் சுட்ட” என்று வருத்தமாகக் கேட்டாள் சரஸ்வதி.

“விடு அத்த, புள்ள லீவுக்கு தான் வரா. ஏதோ என்னால முடுஞ்சத செஞ்சு தரேன்” என்று கூறிக்கொண்டே பூஜாவின் கையில் இரு முறுக்குகளைத் திணித்தாள். பூஜா அதில் ஒன்றை முத்துச்சாமிக்குக் கொடுத்தாள்.

“மாவு அரச்சு எடுத்தாந்தேன் பாரு. தோசை சுட்டுத் தரேன். சட்டினி அரைக்க தேங்காய் இருக்கா?” என்று சரஸ்வதி கேட்டாள்.

“நீ தோச சுட்டுட்டு இரு அத்த. நான் போயி தேங்காயும் ஒடச்ச கடலையும் வாங்கியாறேன்” என்று கூறிவிட்டுப் பெட்டிக் கடையை நோக்கி ஓடினாள்.

சரஸ்வதி தன் ஊருக்கு வரும் பொழுதெல்லாம் ஒரு பெரிய பாத்திரத்தில் தோசை மாவும், கணவருக்குத் தெரியாமல் வாங்கி வைத்திருந்த மளிகைச் சமான்களையும் , தன் சம்பளத்தில் எடுத்து வைத்திருந்த சிறு சேமிப்பையும் தன் பிறந்த வீட்டிற்குக் கொண்டு வருவது வழக்கம்.

Representational Image
Representational Image

வாங்கி வந்த தேங்காய் சில்லுகளையும், உடைத்த கடலையையும் சேர்த்து ஆட்டுக் கல்லில் சட்டினி அரைத்தாள் அன்புசெல்வி. சரஸ்வதி மெதுமெதுவென வார்த்துக் கொடுத்த தோசையை ருசித்துச் சாப்பிட்ட கருப்பண்ணன், வேப்ப மரத்தில் கட்டியிருந்த டயர் ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்த பூஜாவயும் முத்துச்சாமியையும் பார்த்தபடி திண்ணையில் அமர்ந்திருந்தார்.

சட்டென கருப்பண்ணனின் விழிகள் தன் ஆட்டுக் குட்டிகள் வருவது தென்படவும், “தாயீ... ஆடுகளப் புடுச்சு கட்டி வையி. நான் போயி வள்ளியம்மையப் பார்த்துட்டு வந்துடறேன்.” என்று தோள் துண்டைப் போட்டுக் கொண்டு, ஓட்டை செருப்பை மாட்டிக் கொண்டு ஆற்றங்கரைக்குக் கிளம்பினார்.

“என்ன சொல்லிட்டுப் போறாரு!!!???.” என்று ஒன்றும் புரியாமல் அதிர்ச்சியாய்ப் பார்த்தாள் சரஸ்வதி.

“ஆறு மாசமா இதே கூத்துதான் நடக்குது. ஆட்டுக்குட்டிகளக் கட்டி வைய்யி, வள்ளியம்மாளப் பாத்துட்டு வந்துடறன்னு, ஆத்தோரம் போயிட்டு போயிட்டு வராரு. சில சமயம் வர்றதில்ல. நான் தேடிப் போயி கூட்டியாரேன் . வள்ளியம்மா கூட பேசிட்டு நேரம் ஆயுடுச்சுனு சொல்றாரு” என்றாள் அன்புச்செல்வி.

சரஸ்வதியால் அன்புச்செல்வி கூறுவதை தாங்க முடியவில்லை.

வள்ளியம்மாவைப் பற்றிப் பேச்சு திசை திரும்பி, கடந்து வந்த பாதையில் மீண்டும் பயணித்தபடி படையளுக்குத் தேவையான வேலைகளைப் பார்க்கத் துவங்கினார்கள் இருவரும்.

ஓட்டை செருப்பின் வழியாக கல் ஏறுவதைக் கூடப் பொருட்படுத்தாமல் ஆற்றோரத்திற்கு சின்னப்பிள்ளை போல ஓடினார் கருப்பண்ணன். எப்போதும் சந்திக்கும் பாறையின் முகட்டில் வள்ளியம்மாள் தென்பட்டதும் இறக்கை முழைத்தப் பட்டாம்பூச்சியாய் பறந்து சென்றார்.

மஞ்சள் நிறச் சுங்கிடிச் சேலை காற்றில் ஆட, தன் செவத்த உடம்பைக் காட்டி காற்று வாங்கிக் கொண்டு, ஆற்று நீரைத் தன் கால்களால் சுழற்றிய படி அமர்ந்திருக்கும் வள்ளியம்மையைக் காணும் பொழுது ஒரு கணம் இதயம் நின்று மீண்டும் துடிப்பதை உணர்ந்தார் கருப்பண்ணன்.

அருகில் செல்ல பயந்து, இரண்டடி இடைவெளி விட்டு நின்று கொண்டு, “மிக்குக்குக்கும்" என்று கனைத்தார்.. வள்ளியம்மையிடம் இருந்து பதில் இல்லை.

“உனக்கு என் மேல இன்னுமா கோவம்?? பேசு புள்ள.”

“................”

“பேசிப் பேசியே சாவடிப்ப. இப்பப் பேசாமயே சாவடிக்குற”

“................”

“தப்புத்தான் நான் உனக்குச் செஞ்சதெல்லாம் தப்புத்தான். பாவம் தான். நான் பாவி தான். எவ்வளவு நாள் என்னை விட்டு ஓடி ஓடிப் போவ?”

“................”

“ உன்னக் கலியாணம் கட்டி அஞ்சு வருஷம் பிரிஞ்சு இருந்தேன் என் அம்மா பேச்சக் கேட்டு. என்னோட அய்யன் உன்னக் கூட்டியாந்து குடும்பம் நடத்தச் சொல்லி புத்தி சொன்னாரு. உன்னய சமாதானமா கூட்டிட்டுப் போக வந்தாலும் எனக்கு ஆம்பலங்கிற திமிரு அப்போ. பொட்டச்சிகிட்ட கெஞ்சுறதான்னு அகம்பாவம். வா வாழலாம்னு கூட்டிட்டுப் போக வந்து, உன்னய அஞ்சு மைலுக்கு வெறும் கால்லயே நடக்க வச்சப் பாவி நானு. பாரு அந்தப் பாவத்துக்குதான கால்ல ஆணி, கல்லெல்லாம் குத்தி அனுபவிக்குறேன்.” என்று ஓட்டை செருப்பைக் கழற்றி விட்டு ரத்தமும் சீழும் கசியும் காயத்தைக் காட்டினார்.

“................”

“ இந்தக் காயத்தப் பாத்தும் உனக்கு மனசு எரங்கலயா?”

“................”

“ எப்படி யெரக்கம் வரும். நான் அடுச்சு உனக்கு வராத ரத்தமா? அந்த வயசுல எனக்கு தெம்பு இருந்துச்சு உடம்புல, திமிரு இருந்துச்சு நெஞ்சுல, தெனம் உந்தலை மயிரப் பிடிச்சு இழுத்து அடிச்சு நொறுக்கினேன். தப்பு தான். புத்தி கெட்டுப் போயி நடந்துகிட்டேன். நான் போனா தான் உனக்கு என் அருமை தெரியுமுன்னு ஒவ்வொறு தடவயும் அடி வாங்கிட்டு சொல்லுவியே. உண்ம தான் தாயீ. நீ போன பின்ன நான் நட பொனமா அலயுறேனே.” என்று அழுதார்.

“................”

வள்ளியம்மையும் ஆட்டுக்குட்டிகளும்! | சிறுகதை | My Vikatan

வழிந்த கண்ணீரைத் தோள் துண்டில் துடைத்துக் கொண்டே,

“வள்ளியம்மா.. உன்னய நான் உன் ஊரு மேட்டுவளவுக்குப் பொண்ணு பாக்க வாரயில நீ கட்டியிருந்த சேலை நெரம் கூட என் நியாபகத்துல இருக்குது புள்ள.. என் குடும்பத்துல எந்த புள்ளையும் உன் நெரம் இல்ல புள்ள. உன்னய கட்டிகிட்டு என் ஊர்த் தெருவுல நடக்கும் போது என் சாதிக்கார பயலுவ வயிறு எறியுறத பாக்க ஆசப் பட்டேன். உன்ன கட்டியே ஆவேண்ணு கலியாணம் கட்டி கூட்டியாந்தேன்”

திடீரென காற்று பலமாக வீசி ஆற்றோரம் இருந்த மணலை கருப்பண்ணனின் முகத்தில் அடித்தது.

மணல் துகள்கள் முகத்தில் சுளீர் என்று அடித்ததும், கண்களில் நீர் வழிந்தது கருப்பண்ணனிற்கு.

"அடி அடி… அடி தாயீ.. உன் ஆத்திரம் தீர அடி. உன்னயக் கலியாணம் செஞ்சுகிட்டு என் ஆசை எல்லாம் நெறவேத்திக்கிட்டேன். உன் ஆசை, உன் பொறந்த வீட்டு பந்தம் எல்லாத்தயும் அறுத்து வுட்டு உன்னய என் வீட்டுலயே அடச்சுக்கிட்டேன். அடி தாயி, என்னய இன்னும் அடி. உனக்கு நான் செஞ்ச கொடுமைக்குத் தான நான் அனுபவிக்குறேன். மொத கொழந்த உண்டானப்ப உன் வயித்துல எட்டி ஒதச்சு அதக் கொன்னேனே.. அடி தாயி அடி. உனக்கு உடம்பு நல்லா இருக்கா இல்லையா , காய்ச்சலா தலை வலியா எதப் பத்தியும் கேக்காம என் உடல் பசிக்கு உன் உடம்ப எறையாக்கினேனே என்னய அடி. இந்த சண்டாளன இன்னும் அடி.”

காற்று இன்னமும் வேகம் கொண்டு சுற்றி இருந்த மரமெல்லாம் கிளை விரித்து ஆடத் துவங்கியது.

“ஆறு புள்ளைகள எனக்குக் குடுத்துட்டு நட்டாத்துல என்னய உட்டுட்டு நீ மட்டும் போயிட்ட, தனியா கெடந்து அனுபவின்னு.. அஞ்சு பசங்களுக்கும் உசுரக் குடுத்து வளத்தேனே. ஆனா என் ஒத்தப் பொட்டப் புள்ள மட்டும் இல்ல எல்லாருக்கும் படியளந்து காப்பாத்துது. ஆம்பலப் புள்ளைங்க என்னய தூக்கி நிறுத்தும்னு நெனச்சேனே, என்னைய வேறோட சாய்ச்சிட்டானுங்களே”

காற்று இப்போது “ஊ… ஊ… ஊ…” என்று ஓலத்தோடு வீசியது.

"சிரிக்குறியா தாயீ... சிரி .. பொம்பள தான் பெரிய சக்தினு காட்ட நம்ம வீட்டுப் பொம்பளைங்க எல்லாம் உன் சாயல்ல இருக்கு குணத்துல. நான் செஞ்ச பாவம் ஆம்பலப் பசங்க எல்லாம் என் சாயல்ல இருக்கு… நீ சிரி..

என்னயப் பலி வாங்கிப்புட்ட இல்ல.. நீ சிரி…”

ஆற்றங்கரை திடீரென மௌனத்தை விழுங்கிக் கொண்டது.

அருகில் இருந்த வள்ளியம்மையின் உருவம் இப்போது வெகு தூரத்தில் தெரிந்தது கருப்பண்ணனின் பழுப்பு விழிகளில்.

“ தாயீயீயீ…….. போகாத தாயி… நான் தப்பா சொல்லிப் புட்டேன். நீ பலி வாங்கல. நான் தான் பாவீ. நான் செஞ்ச பாவம் எல்லாம் தான் என்னையக் கொல்லுது. மேயப் போன ஆடுகள எவனோ திருடிட்டுப் போனதுக்கு உன்ன அடிச்சு ரணம் ஆக்கின பாவி நான் தான் அம்மா. அதானே கடைசி. அப்புறம் ஆடும் வரல நீயும் வரலயே வீட்டுக்கு. இந்த ஆத்தோட போயிட்டியே.. நீ என் வீட்டு குல தெய்வம் தாயீ. என் அம்மா.. என்னக் காத்த மாரியம்மா நீ. என்ன விட்டுப் போகாத. என்னயுங் கூட்டிட்டுப் போ உன்னோட. நானும் வரேன் ” என்று ஓடினார்…

“ஐயாாா....ஐயாாா…..ஐயாாா…” என்ற சத்தம் கேட்டு சற்று நின்றார். பரிட்சயமான குரல் என்று தோன்ற திரும்பிப் பார்த்தார்.

பூஜாவும் முத்துச்சாயியும் ஓடி வந்து கொண்டிருந்தனர்.

"வரேன் வரேன் சாமிகளா” என்று ஆற்று நீரில் முகத்தில் படிந்திருந்த மணலைக் கழுவினார்.

Representational Image
Representational Image

நெருங்கி வந்த பூஜாவும் முத்துச்சாமியும்,

“ஐயா.. மாமாங்களும் அத்தைகளும் வந்தாச்சு, சாப்பாடெல்லாம் செஞ்சாச்சு. ஆத்தாவுக்கு சாமி கும்பிட உங்கள கூட்டியாரச் சொன்னாங்க. வாங்க போலாம், பசிக்குது” என்று பூஜா அழைத்தாள்.

வள்ளியம்மை மறைந்த திசையை திரும்பிப் பார்த்தார். அவளது பிம்பம் காற்றோடு கரைவது கருப்பண்ணனின் பழுப்பு விழிகழுக்கு மட்டும் தெரிந்தது.

பூஜா- முத்துச்சாமியின் கைகளைப் பற்றிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார்.

ஐந்து மகன்களும் அவர்களுது மனைவிமார்களும் அவர்களது பிள்ளைகளும் வரிசை கட்டி நின்று கொண்டிருந்தனர்.

ஆட்டுக்கொட்டிலைத் திரும்பிப் பார்த்தார். ஆடுகள் இல்லாமல் வெறுமையாக இருந்தது கண்டு மனம் நொந்து போனது. மறதிக்கும் மரணத்திற்கும் நடுவில் ஊசலாடிய சிற்சில நினைவிக் கீற்றுகளில், தொங்கிக் கொண்டிருக்கும் அவரது உயிரின் வலியைத் தாங்க முடியாமல் தவியாய் தவித்தார்.

குடிசைக்குள் சென்றார் கருப்பண்ணன். அனைவரும் அவரைப் பின் தொடர்ந்தனர். ஒரு ஓரத்தில் வள்ளியம்மையின் புகைப்படம் மலர் மாலையைத் தாங்கியவாரு உட்கார்ந்திருக்க, அதன் முன் வள்ளியம்மைக்குப் பிடித்த பண்டங்கள் வாழை இலையில் வரிசையாக இடம் பிடித்திருந்தது. தோளில் இருந்த துண்டை இடுப்பிற்கு இடம் மாற்றி விட்டு தேங்காயை எடுத்து இரண்டாகப் பிளந்து இளநீரை சொம்பில் ஊற்றினார் கருப்பண்ணன். ஊதுபத்தியைப் பற்ற வைத்து வாழைப்பழத்தில் நட்டு வைத்தார். பிறகு சூடம் ஏற்றி,வள்ளியம்மைக்கும் வள்ளியம்மைக்காகப் படைக்கப்பட்ட சாப்பாட்டிற்கும் காட்டி விட்டு, தன் வாரிசுகளின் பக்கம் திரும்பி அனைவருக்கும் கற்பூர நெருப்பை நீட்ட, ஒவ்வொருவாக கண்களில் ஒற்றிக் கொண்டனர்..

பிறகு திருநீற்றுத் தட்டில் தன் மூவிரலையும் பதித்து நெற்றியில் இட்டுக் கொண்டு, அனைவரது நெற்றியிலும் பூசி விட்டார்.

பின்பு படைக்கப்பட்ட இலையை மூத்த மகன் எடுத்துக் கொண்டு வெளியே செல்ல அனைவரும் பின் தொடர்ந்தனர்.

“கா... கா.. கா…” என்று கூப்பாடு போட ஆரம்பித்தனர். வைத்த சாப்பாட்டை சுற்றி சுற்றி காகங்கள் பறந்து தள்ளியது. ஆனால் ஒன்று கூட இலையில் வாய் வைக்கவில்லை.

“இது வருஷ வருஷம் நடக்குற கூத்துதான” என ஏலனமாகப் பார்த்தாள் அன்புச்செல்வி.

அவள் பார்வையைக் கண்ட சரஸ்வதி,

“சும்மா இரு புள்ள” என்று முனுமுனுத்தாள்.

அடுத்தடுத்த மகன்களும் சென்று ஒரு பிடி சோறு எடுத்து, வெவ்வேறு இடங்களில் வைத்துப் பார்த்தார்கள். ம்ஹூம் காகம் ஐநூறு இருக்கும் அருகே இருந்த மரங்களிலும் வீட்டின் மேலும், ஒன்று கூட இலையை நெருங்கவில்லை.

“என்னடி இப்புடி வருஷ வருஷம் சோதிக்குது ஆத்தா நம்மள!!!” என்றாள் சரஸ்வதி.

“பின்ன ஐயன் கொஞ்ச நஞ்ச கொடுமையா பண்ணுச்சு. ஐயன் பெத்த மவனுங்களும் அப்படியே கொடுமைப் படுத்துரானுங்க அவனுங்க பொண்டாட்டிகள. எப்புடி ஆத்தா மன்னிக்கும்" அன்புச்செல்வி வக்கீலைப் போல வாதாடினாள்.

"அம்மா செத்து இத்தன வருஷமாவாடி அதுக்கு கோவம் கொறையில?”

“வருஷா வருஷமா இதுதான் நடக்குது. ஆனாலும் வெக்கமே இல்லாம உன் அண்ணன் தம்பிங்க எலைய எடுத்துட்டுப் போறானுங்க” என்று கூறியவள், வீட்டின் மருமகள்களைப் பார்த்து,

“சித்திங்களா எல்லாரும் ரெடியா? வருஷத்துல இந்த ஒரு நாள் தான் நம்ம பவரக் காட்ட முடியுது. போலாமா?” என்றாள்.

“ம்.. ம்.. நாங்க ரெடி” என்று பெண் படை எழுந்து முந்தானையை இடுப்பில் சொறுகிக் கொண்டு இலையை நோக்கிச் சென்றனர்.

அனைவரும் ஒரே நேரத்தில் ஒரு பிடியை எடுத்து வேறு வேறு இடத்தில் வைக்க, காகங்கள் கடல் அலை போல வந்து உணவை எடுத்துச் சென்றன.

படையல் சாப்பாடு அனைவருக்கும் பரிமாறப் பட்டது. வந்தவர்கள் அனைவரும் சாயுங்காலம் கிளம்பத் தயாரானார்கள். எல்லா சித்திமார்களும் கணவனுக்குத் தெரியாமல் முந்தானையில் முடிந்து வைத்திருந்த சிறுதொகையை முத்துச்சாமியின் கையில் கொடுத்து விட்டுச் சென்றார்கள். சரஸ்வதி செல்லும் முன் அன்புச்செல்வியிடம் ஐயாவிற்கு செருப்பு வாங்கப் பணம் கொடுத்தாள். அதை வாங்கிக் கொண்ட அன்புச்செல்வி,

“ ஒரு நிமிஷம் இரு அத்த” என்று கூறி தன் இரும்புப் பெட்டியில் இருந்த எட்டாயிரம் ரூபாயை எடுத்தாள். முத்துச்சாமியின் கைகளில் இருந்த தன் சித்திகள் கொடுத்த பணத்தையும் சேர்த்து சரஸ்வதியிடம் கொடுத்தாள்.

“இது எதுக்கு செல்வி” புரியாமல் சரஸ்வதி கேட்டாள்.

“இது முத்துச்சாமியோட டி.பி ட்ரீட்மெண்டுக்கு நீ ஆஸபத்திரிக்குக் கட்டினது அத்த. உனக்கும் ஆயிரம் செலவு இருக்கும். நானும் என் புள்ளயும் என்னைக்குமே யாருக்குமே பாரமா இருக்க மாட்டோம்.” என்றாள்.

Representational Image
Representational Image

அன்புச்செல்வியின் தன்மானத்தை மதித்துப் பணத்தை கை நீட்டி வாங்கும் பொழுது தான் சரஸ்வதி கவனித்தாள் அன்புச்செல்வியின் காப்பு காய்த்திருந்தக் கரங்களை.

விருந்தினர்கள் சென்ற பின் ஆள் அரவம் இல்லாத வெறுமையான இடமாக குடிசை மாறியது. இவ்வமைதியில் மூழ்க்கி தூங்க முயற்சித்து முயற்சித்து தோற்றுப் போனாள் அன்புச்செல்வி.

திடீரென கருப்பண்ணனின் சத்தம் கேட்க வெளியே சென்றாள்.

“வள்ளியம்மா.. ஆடுகளப் புடி… ஆடுகளக் கட்டி வை. வள்ளியம்மா…” என்று கத்திக்கொண்டே வேட்டி இல்லாமல் கோவணத்தோடு தெருவில் ஓடிக் கொண்டிருந்தார் கருப்பண்ணன்.

“ஐயாாா.. ஐயாாா..,” என்று பதறியபடி பின் தொடர்ந்து ஓடினாள் அன்புச்செல்வி.

சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் உதவிக்கு ஓடி வந்து கருப்பண்ணனை வீடு கொண்டு சேர்த்தார்கள்.

"வள்ளியம்மா…வள்ளியம்மா…” என்று பிதற்றினார்.

“இந்த மாத்திரையப் போட்டுக்குங்க ஐயா” என்று ஒரு தூக்க மாத்திரையைக் கொடுத்துத் தூங்க வைத்தாள் அன்புச்செல்வி...

ஆடுகள் இல்லாத கொட்டிலும், வள்ளியம்மை இல்லாத இந்தக் குடிசையும் அன்புச்செல்வியின் மனதையும் அழுத்தியது.

-மலர்விழி மணியம்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.