வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
தன் பெரியம்மாவுடன் கவிதாவைப் பெண் பார்க்க வந்திருந்தான் கணேசன். பெரியம்மா என்றால் சொந்தப் பெரியம்மா அல்ல. தூரத்து உறவில் பெரியம்மா முறை ஆக வேண்டும். அப்பா, அம்மாவை சிறு வயதிலேயே இழந்து பரிதாபமாய் ஒற்றையாய் நின்ற கணேசனை, கருணை அடிப்படையில் வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட நல்ல மனுஷி.
தன் நிலைமை அறிந்து, பெரியம்மாவுக்கு அதிகச் சிரமம் கொடுக்காமல் பொறுப்புடன் படித்து இன்று வங்கியில் பணி புரிந்து கொண்டிருக்கும் கணேசனுக்கு அவளை விட்டால் வேறு உறவுகள் இல்லாததால் பெண் பார்க்கும் படலத்துக்கு கூட்டி வந்திருந்தான்.

தரகர் மூலம் கணேசனுக்கு கவிதாவின் ஜாதகம் வந்தபோது அவனுக்கு எல்லா விதத்திலும் நிறைவாகவே இருந்தது. முதலாவதாக அவனைப் போலவே கவிதாவும் வேறொரு தேசியமயமாக்கப் பட்ட வங்கியில் அதே ஊரில் பணி செய்துகொண்டிருந்தாள். ஜாதகமும் மிகவும் திருப்தியாகப் பொருந்தி வந்தது. இவன் எப்படி ஒற்றை ஆளோ, அதேபோல பெற்றோருக்கு ஒற்றைப் பெண் கவிதா. அவனுக்குத்தான் ஒரு சந்தேகம். இப்படி குடும்பம் என்ற ஒரு அமைப்பு இல்லாத தனக்குப் பெண் கொடுப்பார்களா என்று. ஆனால் தரகர் வந்து பெண் பார்க்க வரச் சொன்னார்கள் என்று சொன்னபோது அவனின் மகிழ்ச்சி இரட்டிப்பானது.
ஆனாலும், புரோக்கரை நம்பாமல் பெண் பார்க்கப் போவதற்கு முதல் நாள், கவிதாவின் தொலைபேசிக்கு நேரடியாக அழைத்துத் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டான். தன்னுடைய கல்வித்தகுதி, குணநலன்களைக் கூறியதோடு நிற்காமல், தனக்கு குடும்பமோ உறவுகளோ இல்லை என்பதையும் தெளிவாக்கினான். அதன் பிறகும் பெண் பார்க்க வரலாம் என்று கவிதா பச்சைக் கொடி காட்டிய பிறகுதான், பெரியம்மாவைக் கூட்டிக் கொண்டு இன்று பெண் பார்க்க வந்திருந்தான் கணேசன்.

கவிதாவின் அப்பா அம்மா, கணேசனையும் அவன் பெரியம்மாவையும் மிகவும் மரியாதையாகவும், இன்முகத்துடனும் வரவேற்று அமர வைத்தனர். கொஞ்ச நேரத்தில் கவிதாவும் இனிப்புடனும், தேனீனுருடனும் வெளியே வந்து கை கூப்பி வணங்கினாள். எந்த வித ஒப்பனையும் இல்லாமல், பூப்போட்ட வெள்ளை நிற சுடிதாரில் இருந்தாள். புடவை கட்ட வற்புறுத்திய அம்மாவிடம் அரை மணி நேரம் முன்புதான் சண்டை போட்டு ஜெயித்திருந்தாள்.
கணேசன் தன் பிறப்பு, வளர்ப்பு, கல்வி, வேலை போன்றவற்றை விவரமாக மூவருக்கும் எடுத்துரைத்தான். வெளிப்படையாகப் பேசுவதற்காகவே புரோக்கரை கூட்டி வரவில்லை என்றும் கூறினான். கவிதாவின் பெற்றோரும் கவிதாவைப் பற்றியும், தங்களின் குடும்பத்தைப் பற்றியும் விவரித்தனர். அனைத்தும் சுமுகமாகப் போய்க்கொண்டிருந்த வேளையில், கவிதா ஆரம்பித்தாள்.
' நீங்கள் பேசி முடித்து விட்டீர்கள் என்றால், நான் கொஞ்சம் பேச வேண்டும்'.
கூடி வரும் சம்பந்தத்தில் குழப்பம் வந்துவிடுமோ என்ற பதைப்புடன் கவிதாவைப் பார்த்தாள் அவளின் அம்மா சிவகாமி.
' நேற்று நீங்கள் தொலைபேசியில் பேசியபோது உங்களின் பிளஸ், மைனஸ் எல்லாம் வெளிப்படையா சொன்னீங்க. அதே மாதிரி நானும் கொஞ்சம் வெளிப்படையா பேசணும்.'
இப்போது கணேசனின் பெரியம்மா முகத்தில் கொஞ்சம் திகில் பரவியது.
தொடர்ந்தாள் கவிதா,
' திருமணத்திற்குப் பிறகு நாம் இருவரும் தனி வீட்டில்தான் இருக்கப் போகிறோம். இருவரும் வேலைக்குப் போகிறவர்கள். பணிச்சுமை சமமாக இருக்கும். அதனால் வீட்டு வேலைகளையும், சமையல் செய்வது உட்பட பகிர்ந்து கொள்ள வேண்டும். சம்மதமா? '.

' பகிர்ந்து கொள்வது என்றால், காய்கறி வாங்கி வருவது, பிறகு சமையலின் போது நறுக்கிக் கொடுப்பது, தேநீர் போடுவது போலத்தானே?' என்றான் கணேசன்.
' அப்படியில்லை.. நான் ஒரு நாள் சமையல் செய்தால், அடுத்த நாள் முழுவதும் நீங்க செய்ய வேண்டும். பெட் காபி உட்பட..'
நிலைமை மோசமாகிப் போய் விடுமோ என்ற பயத்தில் குறுக்கிட முயன்ற சிவகாமி அம்மாவை பார்வையால் அடக்கினாள் கவிதா. கவிதாவின் பெரியம்மா உறைந்து மெளனியாகிவிட்டாள்.
அதிர்ச்சியிலிருந்து மீண்ட கணேசன் கேட்டான்,
' சரி.. வேறு ஏதாவது நிபந்தனைகள் உண்டா?'
' உண்டு.. குழந்தைகள் பிறந்து அவர்களை வளர்க்கும் பணியிலேயும் சம பங்கு உண்டு. ஆய் கழுவி விடுவது உட்பட..'. இந்த முறை பொறுக்க முடியாமல் கவிதாவின் அப்பா மூர்த்தி குறுக்கிட்டார்,
' என்னம்மா இது.. பெண்கள் செய்ய வேண்டிய வேலைகளையெல்லாம் ஆண்களை செய்யச் சொல்றியே?'.
கடுகடுப்புடன் அப்பாவைப் பார்த்துக் கேட்டாள் கவிதா,
' எந்தச் சட்டப் புத்தகத்தில் இது ஆண் வேலை, இது பெண் வேலை அப்படின்னு இருக்குப்பா?'.
' அப்படி இல்லம்மா, இதெல்லாம் காலம் காலமா நடந்து வர்றதும்மா..' மூர்த்தி பலவீனமாக முனகினார்.
' கணவன் இறந்த பிறகு உடன்கட்டை ஏறும் பழக்கம் கூட இருந்தது. இப்ப இருக்கா? காலங்கள் கடக்கும் போது சில நடைமுறைகளை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும் அப்பா' என்றவுடன் வாயடைத்துக்கொண்டார் மூர்த்தி.
மனசு கேட்காமல் இடையில் குறுக்கிட்டாள் அம்மா சிவகாமி,
' அதுக்காக? எல்லாவற்றையும் சட்டென மாத்திக்க முடியுமா?'.

'ஏம்மா மாத்திக்க முடியாது? போன வருசம் உன் தங்கை கணவர், அதான் என் சித்தப்பா இறந்து போனப்ப, வழக்கமாக உடுக்கக் கொடுக்கும் வெள்ளைச் சேலையைச் சித்திக்குக் கொடுக்காமல் கலர் சேலை உடுக்கவும், பொட்டு வைத்துக் கொள்ளவும் நம் உறவுகளும், ஏன் நீங்களும்தான் அனுமதித்தீர்களே? அதற்குப் பெயர் என்ன?'.
' அதுது...உன் சித்திக்கு சின்ன வயசு. இப்ப இருந்து அமங்கலமா இருக்கனுமான்னுதான்..'
' தப்பில்லம்மா.. இதைத்தான் நானும் சொல்றேன். காலத்துக்கு ஏற்ப மாறணும்னு' என்று கூறி அம்மாவின் வாயை அடைத்தாள் கவிதா.
' உங்க நிபந்தனைகள் இவ்வளவுதானா, இன்னும் இருக்கா?' என்றான் கணேசன். அவன் குரலில் கோபத்தை விட ஒரு ஆர்வமே மிளிர்ந்தது.
' இன்னும் இருக்கு. நேற்று தொலைபேசியில் பேசும் போது சொன்னீங்கல்ல, ஞாயிற்றுக்கிழமை அன்று மாத்திரம் பீர் குடிப்பேன்னு... அப்படி குடிக்கும்போது அதில் பாதி எனக்கும் வேண்டும்'.
அந்த ஹாலில் இருந்த அனைவரும் அதிர்ந்தனர், கணேசனும் கவிதாவும் தவிர.
' குடித்தால் கொடுக்கிறேன்' என்றான் கணேசன். அப்போதே முடிவெடுத்துவிட்டான் இனி குடிப்பதில்லையென்று.

' சரி.. இந்த நிபந்தனைகளை எல்லாம் எழுதி கையெழுத்து போட்டுத் தர வேண்டுமா?' கொஞ்சம் நக்கல் கலந்து கேட்டான் கணேசன்.
' தேவையில்லை ' என்றாள் கவிதா உறுதியான குரலில்.
' நிபந்தனைகள் மீறப்பட்டால் மணவிலக்கு கேட்கப்படும்'.
மீண்டும் அதிர்ச்சியில் உறைந்தது ஹால்.
ஆனால் எந்த அதிர்ச்சியும் இல்லாமல் அமைதியாய் ஒலித்தது கணேசனின் குரல்,
' நியாயமான உங்களின் அனைத்து நிபந்தனைகளையும் முழு மனதோடு ஏற்கிறேன்'. அதிர்ச்சி நிறைந்திருந்த அந்த ஹாலில் மகிழ்ச்சி அலை பரவியது.
' இந்த நாட்டு பெண்களுக்கு முப்பத்து மூன்று சதவீதம் கிடைத்ததோ இல்லையோ உங்களுக்குக் கிடைத்து விட்டது ' என்றான் கணேசன் கவிதாவை நோக்கி .
' முப்பத்து மூன்றல்ல.. ஐம்பது சதவீதம்' என்றாள் கவிதா.
அந்த ஹால் சிரிப்பலைகளால் நிரம்பி வழிந்தது.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.