Published:Updated:

வறுமையின் அடி வலிது! | சிறுகதை | My Vikatan

Representational Image ( Photo by Gangadhar Koppula on Unsplash )

அன்பு இல்லத்திலிருந்து நினைவு நாளன்று தொலைபேசியில் கூப்பிட்டு அம்மாவின் பெயரில் அனைவருக்கும் உணவு வழங்கியாதாக் கூறுவார்கள். ஆனால் ஏனோ கடந்த இரண்டு வருடங்களாக அந்தத் தகவல் வருவதில்லை.

வறுமையின் அடி வலிது! | சிறுகதை | My Vikatan

அன்பு இல்லத்திலிருந்து நினைவு நாளன்று தொலைபேசியில் கூப்பிட்டு அம்மாவின் பெயரில் அனைவருக்கும் உணவு வழங்கியாதாக் கூறுவார்கள். ஆனால் ஏனோ கடந்த இரண்டு வருடங்களாக அந்தத் தகவல் வருவதில்லை.

Published:Updated:
Representational Image ( Photo by Gangadhar Koppula on Unsplash )

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

" என்னங்க மறந்திடாதீங்க.." சமையல் கட்டிலிருந்து சகதர்மிணியின் குரல். இயந்திரம் போல(வழக்கம்போல?) என் குரலும், " சரி.. எத்தனை கிலோ?".

" என்ன எத்தனை கிலோ.. நான் என்ன கேட்ட‌.. நீங்க என்ன சொல்றீங்க ?" இடுப்பில் கைவைத்துக் கொண்டு வழக்கமான மிரட்டும் தொனியில்(சீரியல் வடிவுக்கரசி ?) கேட்டாள் மனைவி.

" ஆபிஸ் விட்டு வரும்போது இரண்டு கிலோ தக்காளி வாங்கி வரச் சொல்லி நேத்து சொன்னே.. அதுதானே?"

" கடவுளே.. கடவுளே.. எல்லாம் மறந்திடுவீங்க.. உங்க அம்மா நினைவு நாள் வர்ற ‌ஞாயிற்றுக் கிழமை வருது. வழக்கமா அன்பு இல்லத்திற்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பீங்களே.. அதைக் கொடுக்க மறந்திடாதீங்கன்னு சொல்ல வந்தேன்.."

" சரி..சரி.. " என்று கூறி அந்த சப்ஜக்டை அத்தோடு முடிக்க முனைந்தேன். அதிகமாக ஒரு வார்த்தை பேசினாலும் அது ஆபத்துக்கு வழிகோலும் என்பது எனது முப்பது வருட அனுபவம். மாமனார் டெலிகிராப் ஆபிசில் பணி புரிந்தவர் என்பதோலோ என்னவோ என் மனைவி மற்றும் அவளின் குடும்பத்தினரும் மணிரத்னம் பட டயலாக் போல ஒரு வார்த்தை மட்டுமே பேசுவார்கள். அந்த வார்த்தைக்குத் தேவையான சப்ஜக்ட் அல்லது ஆப்ஜக்ட் நாம்தான் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கடந்த நான்கைந்து வருடங்களாக அம்மாவின் நினைவு நாளன்று ஆயிரம் ரூபாய் அன்பு இல்லத்திற்கு கொடுத்து வந்தேன். அன்பு இல்லத்திலிருந்து நினைவு நாளன்று தொலைபேசியில் கூப்பிட்டு அம்மாவின் பெயரில் அனைவருக்கும் உணவு வழங்கியாதாக் கூறுவார்கள். ஆனால் ஏனோ கடந்த இரண்டு வருடங்களாக அந்தத் தகவல் வருவதில்லை. அந்த நிர்வாகக் குறைபாடு மனதிற்கு ஏனோ நிறைவைத் தரவில்லை. அதனால் இந்த முறை அம்மாவின் நினைவு நாளன்று நானே சிவசக்தி பால் பண்ணையில் பார்சல் சாதம் வாங்கி என் கைப்பட பசியாற சிலருக்குக் கொடுக்கலாம் என்று முடிவு செய்து விட்டேன்.

Representational Image
Representational Image

என் எந்த முடிவுக்கும் சில, பல ஆட்சேபணைகளைச் சொல்லும் என் மனைவி ஏனோ இந்த முடிவுக்குத் தன் முழு ஆதரவைத் தெரிவித்தார். கேபினட் அப்ரூவலே கிடைத்து விட்டதால் நான் முழுமூச்சில் இறங்கினேன். தானும் கூட வருவேன் என்று பெப்பில் தொத்திக் கொண்ட மனைவியுடன் சென்று சாப்பாட்டுப் பொட்டலங்கள் வாங்கி வெளியே வந்தவுடன் ஒரு மூதாட்டி கை நீட்டினார். ஒரு பொட்டலம் தந்துவிட்டு அடுத்து கொஞ்ச தூரத்தில் ஈஸ்வரன் கோயில் வீதியில் அமர்ந்திருந்த ஒருவரிடம் ஒரு பார்சலை நீட்டினேன். அங்கேதான் எனக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. வேண்டாம் என்று சைகை காட்டினார் அவர். ஒட்டிய வயிறும், வளர்ந்த தாடியும், கிழிந்து தொங்கிய சட்டையும் அவர் ஒன்றும் செல்வச் செழிப்பில் இல்லை என்பதை நன்கு உணர்த்தியது. காரணம் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்டேன், " ஏன் சாப்பாடு வேண்டாமா?"

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

" உடம்பு சரியில்லை" என்று சுருக்கமாக முடித்துக் கொண்டு முகத்தைத் திருப்பிக்கொண்டார். காமராஜ் சாலையில், மெடிக்கல் ஸ்டோர் மூலையில் பரட்டைத்தலையுடனும், கிழிந்த சேலையுடன் ஒரு பெண் உட்கார்ந்திருந்தார். பார்த்தவுடன் தெரிந்தது அவர் மனநிலை சரியில்லாதவர் என்று. மனைவியிடம் கொடுத்து ஒரு சாப்பாட்டுப் பொட்டலம் கொடுக்கச் சொன்னேன். பொட்டலத்தை வாங்காமல் அந்தப் பெண் தேம்பித் தேம்பி அழத்தொடங்கினார். என்ன கேட்டாலும் பதில் சொல்லாமல் அழுது கொண்டே இருந்தார்.

பக்கத்திலிருந்த மெடிக்கல் ஸ்டோர்க்காரர் சொன்னார், "காலையில இருந்து இப்படித்தாங்க .. என்ன குடுத்தாலும் வாங்க மாட்டேங்குது. அழுதுக்கிட்டே இருக்கு".

இரண்டாம் முறை அதிர்ச்சி ஏற்பட்டது எனக்கு. சாப்பாட்டைக் கண்டால் ஓடி வந்து வாங்கிக் கொள்வார்கள் என்று நினைத்திருந்த எனக்கு, வயிறு காய்ந்திருந்த நிலையிலும் சாப்பாட்டை மறுத்த அந்த இரண்டு பேரும் பெரும் ஞானிகளாய்த் தெரிந்தார்கள்.

Representational Image
Representational Image

பெரிய மாரியம்மன் கோவிலருகில் வரும்போது மூன்று உணவுப் பொட்டலம் மாத்திரம் மீதம் இருந்தது.

கைக்குழந்தையுடன் வந்த ஒரு பெண் ஒரு பொட்டலமும், வயதான் ஒருவர் ஒரு பொட்டலமும் பெற்றுக்கொள்ள மீதமுள்ள ஒரு பொட்டலத்திற்க்கு காத்திருந்தவர்கள் இரண்டு சிறுவர்கள். என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருந்த போது ஒரு சிறுவன் வெடுக்கென கையில் இருந்த ஒரு பொட்டலத்தை பறிப்பது போல இழுத்துக் கொண்டான். தனக்கு உணவு இல்லை என்பதை உணர்ந்து கொண்ட மற்ற சிறுவன் என்னை கோபத்துடன் நோக்கி தன் கையால் என் தொடையில் அடித்தான். கோபம் கொண்ட என் மனைவி "டேய்.." என்று கூவியவுடன் ஒரு கணம் தான் செய்த தவறின் பயத்தில் ஒரே ஓட்டமாக ஓடினான். "இவனுக்கெல்லாம் கொழுப்பு.." என்று கோபத்தில் குமுறிக் கொண்டிருந்த மனைவியிடம் அமைதியாகக் கூறினேன், " அவன் என்னை அடித்ததாகவா நினைக்கிறாய்? அவனின் வறுமையை, பசியை அடித்து ஆறுதல் பெற்றுச் செல்கிறான். விடு.."

வீடு வரும் வரை அவனின் பசி முகமும், கோப முகமும் என்னைத் துரத்திக் கொண்டே இருந்தது.

********

-சின்னுசாமி சந்திரசேகரன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.