வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
அதிகாலை நேரம்: அருகில் இருக்கும் மசூதியில் இருந்து வரும் அசான் ஓசையை கேட்டு எழுந்த வேலம்மாள்... டேய் எழுந்திரு... முல்லா கூவும் சத்தம் கேட்ட பின்பு தூங்க கூடாதுன்னு சொல்லி இருக்கேன்ல... எழுந்திரு... போய் வேலையை பாரு என்று தன் மகனை அதட்டி எழுப்பினாள் வேலம்மாள். என்னம்மா... உனக்கு இதே வேலையா போச்சு என்று புலம்பிக்கொண்டே எழுந்தான் மகன் ராமு. பின்பு தயாராகி தாய் வேலம்மாள் கொடுத்த டீயை அருந்துவிட்டு மாட்டை ஓட்டிக் கொண்டு தன் தோட்டத்திற்கு புறப்பட்டான் ராமு. வீட்டில்... அடுத்த வேலையை பார்க்க தொடங்கினாள் வேலம்மாள்.
மசூதியிலிருந்து வரும் அசான் ஓசையால் சற்று தூக்கம் கலைந்து பின் புரண்டு மீண்டும் போர்த்திக்கொண்டு படுத்தான் பக்கத்து வீட்டில் வசிக்கும் பஷீர்.
பிற்பகல் நேரம்: பள்ளியில் நடந்து கொண்டிருக்கும் ஆண்டுவிழாவில் பானுவின் பரதநாட்டியத்தை பார்த்து அசந்து போய் கைதட்டினார்கள் விழாவிற்கு வந்தவர்கள்... பானுவை தனியாக அழைத்து பாராட்டினார் விழாவிற்கு தலைமை ஏற்று வந்த பெண் எம்எல்ஏ சரஸ்வதி.

அவளை அழைத்துக் கொண்டு போக புர்கா அணிந்தபடி வந்தாள் தாய் ஷகிலா. அதைப் பார்த்த சரஸ்வதி... பானு நீ முஸ்லிமா? என்று கேட்டார். ஆமாம் மேடம் என்றாள் பானு. நல்லா பரதநாட்டியம் ஆடுறமா என்று பாராட்டினார்.
`` நான் அஞ்சு வருஷமா பரதநாட்டியம் கற்றுக் கொண்டிருக்கிறேன் மேடம்’’ என்று சொல்லிவிட்டு தன் தாயுடன் சென்றாள் பானு.
அவளை ஆச்சரியத்துடன் பார்த்தார் எம்எல்ஏ சரஸ்வதி. மாலை நேரம்: எதிர்வீட்டு குழந்தை ஓயாமல் அழுது கொண்டிருப்பதை பார்த்த வேலம்மாள்... சாந்தி என்ன ஆச்சு குழந்தைக்கு? என்று கேட்டாள்.
என்னவென்று தெரியல அக்கா... கொஞ்ச நாளா குழந்தை பயந்து பயந்து அழுவுது. ராத்திரி முழுக்க ஒரே அழுகை என்று வருத்தத்துடன் சொன்னாள் சாந்தி. ஓ அப்படியா? என்று யோசித்தவள்.... சாந்தி... இன்னும் கொஞ்ச நேரத்துல முல்லா கூவுவாங்க... அப்போ குழந்தையை தூக்கிக்கொண்டு நீ மசூதிக்கு போ... அங்கு தொழுகை முடிந்த பின்பு அசரத் வந்து மந்திரம் ஓதி ஊதுவார். பிறகு குழந்தைக்கு சரியாகிவிடும் என்றாள் வேலம்மாள்.

முல்லா கூவும் சத்தம் கேட்டதும் வேலம்மாள் சொல்லியபடி மசூதிக்கு குழந்தையை தூக்கிக் கொண்டு போனாள் சாந்தி. அங்கு தொழுகை முடிந்த பின்பு சிலர் ஒவ்வொருவராய் மந்திரம் ஓதி குழந்தை மீது ஊதினர்.
சிறிது நேரத்திற்கு பிறகு வந்த அசரத் மந்திரம் ஓதி குழந்தை தலைமீது கையை வைத்து ஊதினார். தன் கையில் வைத்திருந்த காசை கொடுத்தாள் சாந்தி. நாங்க பணம் ஏதும் வாங்குவதில்லை மா... என்று சொல்லி விட்டு சென்றார் அசரத். பின்பு குழந்தையை தூக்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள் சாந்தி.
அலுவலகத்தில் வேலை முடிந்து கிளம்பிக் கொண்டிருந்தான் பஷீர். அப்போது அவன் போன் ரிங் ஆனது... எடுத்துப் பேசினான். சொல்லு ஷகிலா... ஓ அப்படியா? ரொம்ப சந்தோஷம்.? இதோ கிளம்பி கொண்டு இருக்கிறேன் கொஞ்ச நேரத்தில் வந்து விடுவேன் என்று போனை கட் செய்தான்.
அதைப் பார்த்துக் கொண்டிருந்த சக ஊழியர் ரூபஸ்.... என்ன பஷீர்? என்ன விஷயம் என்றார். என் மகள் பானு இன்று நடந்த பள்ளி விழாவில் பரதநாட்டியத்தில் முதல் பரிசு வாங்கி இருக்காளாம் என்றான் சந்தோஷத்துடன்... அப்படியா... மிக்க மகிழ்ச்சி என்றார் ரூபஸ்.

என் மகள் பானுவிற்கு ரொம்ப நாளாகவே வலது கால்முட்டி பின்பக்கம் வீங்கியிருக்கு. அவள் வலியை தாங்கிக் கொண்டுதான் ஆடுகிறாள். எங்கெங்கோ வைத்தியம் பார்த்தும் பயனில்லை என்று அலுத்துக் கொண்டு சொன்னான் பஷீர். இதைக் கேட்ட ரூபஸ் சிறிது நேரம் யோசித்தவாறு.... பஷீர் நீ ஒன்னு செய். அருகில் இருக்கும் மலை உச்சியில் ஒரு முருகன் கோயில் இருக்கு. அங்கு உள்ள சாமியார் ஒருவர் வைத்தியம் பார்க்கிறார். அவரிடம் கூட்டிட்டு போய் காமிச்சிட்டு வா. அவர் சரி செய்து விடுவார் என்று நினைக்கிறேன் என்றார் ரூபஸ்..அப்டின்னா நாளைக்கே கூட்டிட்டு போறேன் என்று சொல்லிவிட்டு வீடு வந்து சேர்ந்தான் பஷீர்.
விஷயத்தை மனைவி மகளிடம் சொன்னான்.
மறுநாள்: மனைவி ஷகிலா மற்றும் மகள் பானுவுடன் முருகன் கோவில் அருகே உள்ள சாமியாரிடம் போனான் பஷீர். எவ்வளவு நாளா இந்த பிரச்சனை இருக்கு மா? என்று புர்கா அணிந்தபடி உட்கார்ந்து இருந்த ஷகிலாவிடம் கேட்டார் சாமியார். ரொம்ப நாளாக இருக்குங்க என்றாள் அவள். பானுவின் கால் வீக்கத்தை பார்த்தபின்பு தன்னிடம் இருந்த மூலிகையால் செய்யப்பட்ட தைலத்தை கொடுத்து இதை பத்து நாட்கள் தடவி பாருங்க... வீக்கம் குறையவில்லைனா மீண்டும் வாங்க என்று பஷிர் இடம் தைலத்தை கொடுத்தார் சாமியார்.

அதை வாங்கிக்கொண்ட பஷீர் தன் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து கொடுக்க... நான் பணம் வாங்குவதில்லை என்று சொல்லிவிட்டு அடுத்த நோயாளியை அழைத்தார் சாமியார். இரண்டு நாட்களுக்குப் பிறகு: மாலையில் குழந்தையுடன் நின்றிருந்த சாந்தியை பார்த்த வேலம்மாள்.... குழந்தைக்கு இப்ப எப்படி இருக்கு? என்று கேட்டாள். நல்லா ஆயிடுச்சு அக்கா... நீங்க சொன்ன மாதிரி மசூதிக்கு போய் மந்திரம் ஓதியது நல்லதாப் போச்சு அக்கா என்றாள் சாந்தி. அதே சமயத்தில் அலுவலகத்தில் பஷீர்... ரூபஸ் நீங்க சொன்னது நல்லதா போச்சு. பானுவுக்கு இப்போ வீக்கம் குறைய ஆரம்பிச்சிருக்கு. ரொம்ப தேங்க்ஸ் ரூபஸ் என்றான் பஷீர்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.