Published:Updated:

செப்டம்பர் நாலு! | சிறுகதை | My Vikatan

Representational Image

ரூபா சௌத்ரி பற்றி நான் கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் நேர் சந்திப்பு இது வரை நிகழ்ந்திருக்கவில்லை. அந்த வங்கியில் பணி புரியும் பெண் ஊழியர்களின் நல சங்கத்திற்கு ரூபாவே தலைவி. அவளால் வீட்டிற்கு அனுப்பப்பட்ட ஆண் ஊழியர்களின் பட்டியல் பெரிது.

செப்டம்பர் நாலு! | சிறுகதை | My Vikatan

ரூபா சௌத்ரி பற்றி நான் கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் நேர் சந்திப்பு இது வரை நிகழ்ந்திருக்கவில்லை. அந்த வங்கியில் பணி புரியும் பெண் ஊழியர்களின் நல சங்கத்திற்கு ரூபாவே தலைவி. அவளால் வீட்டிற்கு அனுப்பப்பட்ட ஆண் ஊழியர்களின் பட்டியல் பெரிது.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

இந்தர் எனும் இந்த்ரஜித்

செப்டம்பர் நாலு எனக்கு இன்னொரு சாதாரண நாளாகத் தான் துவங்கியிருந்தது.

நான். இந்தர் எனும் இந்திரஜித். இன்னும் கல்யாணம் ஆகவில்லை. எலிஜிபில் பாச்சிலர் .நரசிம்மம் கமிட்டி பரிந்துரைப்புகளில் உதயமாகி இருந்த புதிய தலைமுறை வங்கிகளில் ஒன்றில் மார்க்கெட்டிங் மானேஜர். எனக்கு கீழ் பத்து விற்பனை பிரதிநிதிகள். எனக்கு மேல் பல படிநிலைகள்.

மானேஜர், சீஃப் மானேஜர், துணை வைஸ் பிரசிடெண்ட் படிநிலைகள் இப்படியே செல்லும். எப்படியாவது துணை வைஸ் பிரசிடெண்ட் நிலையை அடைவதே என் வாழ்வின் குறிக்கோள்.

அலுவலகம் சென்றவுடன் அன்று காலை எனக்கு வந்திருந்த மின்னஞ்சல்களை முதலில் நோட்டமிட்டேன்.

சேமிப்பு கணக்கு, நடப்பு கணக்கு விகிதம் உயர வேண்டும்.

காப்பீடு வியாபாரத்திற்கென்று ஒரு போட்டி வைக்கப்பட்டிருந்தது.

விற்பனை பிரதிநிதிகளின் விற்பனை குறியீடு நிறைவு செய்யாதவர்களின் பட்டியல். யார் யார் அடுத்த மாதம் வீட்டிற்கு அனுப்பப் படுவார்கள் என்று எச்சரிக்கை அஞ்சல் ஒன்று.

நான் அடுத்த அஞ்சலை ஏறக்குறைய தவற விட்டு மீண்டும் பிடித்தேன்.

மனிதவளத் துறையில் வேலை பார்க்கும் எனது நண்பர்களில் ஒருவனிடமிருந்து வந்திருந்தது அந்த மின்னஞ்சல்.

அன்று. செப்டம்பர். நாலாம் தேதி பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் பெயர் பட்டியல். ஒரு குறிப்பிட்ட குழுவிற்கு அந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருந்தது.

ஒரு துணை வைஸ் பிரசிடென்ட். ரூபா சௌத்ரிக்கு அன்று பிறந்தநாள்.

ரூபா சௌத்ரி பற்றி நான் கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் நேர் சந்திப்பு இது வரை நிகழ்ந்திருக்கவில்லை. அந்த வங்கியில் பணி புரியும் பெண் ஊழியர்களின் நல சங்கத்திற்கு ரூபாவே தலைவி. அவளால் வீட்டிற்கு அனுப்பப்பட்ட ஆண் ஊழியர்களின் பட்டியல் பெரிது.

நேரம் செல்லச் செல்ல, பூமியின் சூடு ஏற ஏற விற்பனை பிரதிநிதிகளின் தினசரி சந்திப்பில் நான் ரூபாவை மறந்து போனேன்.

அன்று ஒரு மிகுந்த மதிப்புள்ள வாடிக்கையாளரை சந்தித்துவிட்டு கிளை திரும்பும்பொழுது மறந்து போயிருந்த ரூபாவின் நினைவு மீண்டும் வந்தது.

நான் கவிதைகள் எழுதக்கூடியவன். வண்டியின் கியரை மாற்றும் பொழுது பிறந்தநாள் வாழ்த்தின் முதல் நான்கு வரிகள் என் மனதில் தோன்றியது.

விற்பனையில் இருந்ததால் செய்து பார்த்தால் என்ன என்று எனக்கு தோன்றியது.

Representational Image
Representational Image

“பரிட்சித்துப் பார்த்துவிட வேண்டியது தான்” எனக்கு நானே முடிவு செய்து கொண்டேன்.

கிளைக்கு திரும்பி மின்னஞ்சலை திறந்து அந்த குறிப்பிட்ட அஞ்சலை தேடி எடுத்தேன்.

மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருந்த குழுவினரின் பெயர்களை பார்த்தேன். அனைவரும் பொறுப்பான பதவியில் இருப்பவர்கள். பெரும்பாலும் பெண்கள்.

மின்னஞ்சலில் பதிவு செய்ய ஆரம்பித்தேன்,

”காலை கோவில் சென்றேன்

அனைவரும் வியந்து நோக்கினர்

அறிவித்தேன் சந்தோஷமாய்

இன்று ரூபா சௌத்ரியின் பிறந்தநாள்.

வழியில் வானம் நோக்கினேன்

பறவைகள் அன்பு சொல்லி பறந்தன

அவைகளும் அறிந்திருக்கும் போல்

இன்று ரூபா சௌத்ரியின் பிறந்தநாளென

அலுவலகம் முழுதும் சொன்னேன்

மதியம் அனைவருக்கும் விருந்து.

கேள்விகணைகளுக்கு பதில் அளித்தேன்

இன்று ரூபா சௌத்ரியின் பிறந்தநாள்”

வாழ்த்து அனுப்பிய ஐந்தே நிமிடத்தில் ரூபா சௌத்ரியின் பதில் மின்னஞ்சல் வந்தது. ”வாழ்த்துக்களுக்கு நன்றி. கொண்டு கொடுப்புச் செய்கிறேன்”

அடுத்த நாள் மனித வள துறையின் தலைவரிடமிருந்து ஒரு எச்சரிக்கை மின்னஞ்சல் வந்தது,”கோரப்படாத மின்னஞ்சல்கள் அனுப்புகிறாய். உன் நடவடிக்கையை மாற்றிக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறாய். மாறவில்லையெனில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்”

மின்னஞ்சல் கிடைத்த மறு நொடி மனித வள துறை தலைவரை கைபேசியில் தொடர்பு கொண்டேன்.

ம.வ.துறை தலைவர் ,”இந்தர் ரூபா சௌத்ரி உன் மேல் புகார் அளித்திருக்கிறாள். அவளிடம் பேசி சரி செய்துகொள்”

நான் ரூ.சௌவ்விடம் தொலைபேசி தொடர்பு கொண்டு வினவினேன்,”என்ன தவறு என் மேல்? ஏனிந்த தேவையில்லாத புகார்?” என் குரலில் வருத்தத்தை

விட அடிபட்ட வலி தான் தெரிந்தது.

ரூபா என்னிடம் சொன்னாள்,” என் பிறந்தநாளென்றால் எனக்கு வாழ்த்து தெரிவிக்கவேண்டியது தானே. ஊரெல்லாம் சொன்னாயல்லவா. அதனால் தான். இந்த முறை விட்டு விட்டேன்…” வாக்கியம் முடிக்காமல் ரூபா மீதியை என் யூகத்திற்கே விட்டு விட்டாள்.

ரூபா எனும் ரூபா சௌத்ரி

செப். நாலு.

எனது பிறந்தநாள். துவக்கமே ஏமாற்றமாய் இருந்தது.

சௌத்ரி, எனது பெட்டர் ஹாஃப், கம்பெனி விஷயமாய், தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியூர் போய்விட்டான்.

மகனுக்கு நேற்று மெல்ல ஆரம்பித்த ஜலதோஷம் கொஞ்சம் கொஞ்சமாக காய்ச்சலாய் வலுப்பெற்றிருந்தது.

தலை குளிக்க நினைத்தால் கெய்ஸர் வேலை பார்க்கவில்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக வேலைக்காரி விடுமுறையை நீட்டித்திருந்தாள்.

“இன்று பிறந்த நாள் என்பதால் வங்கியில் அரை நாள் விடுப்பு கிடைக்கும். ஆனால் போன காலாண்டு செயலாக்கம் சரி வர இல்லை. தொழில் போட்டி அதிகமாகி விட்டது. கனவை நனவாக்கி செயல்படும் இளைஞர்களும் இளம் பெண்களும் அதிகமாக வங்கிக்குள் வந்து விட்டார்கள்.இவர்களுடன் போட்டி போட்டு வேலை பார்க்கவேண்டும்.ஒவ்வொரு பிறந்த நாளும் வயதாவதை ஞாபகம் கொணருகிறது”

இவ்வாறெல்லாம் மனதில் ஓடிய ஓட்டங்களுடன் காலை ஏதோ பெயருக்கு சாண்ட்விச் தயார் செய்து சாப்பிட்டேன். மதியம் காண்டீனில் சாப்பிட்டுக் கொள்ளலாம்.

பக்கத்து வீட்டு ரேகாவிடம் சொல்லிவிட்டேன். மகன் அஸ்வினை கொஞ்சம் பார்த்துக்கொள்ள. ரேகா பார்த்துக் கொள்வாள். போன வாரம் ரேகாவும் அவள் கணவனும் ஈவ்னிங் ஷோ போனபோது அவள் மகளை நான் தான் பார்த்துக்கொண்டேன்.

காலை பத்து மணி அலுவலகத்துக்கு ஒன்பதரைக்கே ஆஜராகி விட்டேன். தலைமை நிர்வாக அலுவலரிடம் இருந்து அழைப்பு வந்தது.

Representational Image
Representational Image

பிறந்தநாள் வாழ்த்து சொல்வார் என்று எதிர்பார்த்து போனால் அவரது வரவேற்பு வேறு விதமாய் இருந்தது. உட்காரக் கூட சொல்லவில்லை. “ ரூபா உன் தலைமையில் செயல்படும் வெர்ட்டிகலின் செயல்பாடு குறைந்துகொண்டே போகிறது. லாப நஷ்ட கணக்கு பார்த்தால் செலவு அதிகம் காண்பிக்கிறது. முன்னேற்றம் தேவை”

தலைமை நிர்வாக அலுவலரின் அறைக்குள் பேசப்படுபவை எல்லாம் பெயருக்கு தான் நான்கு சுவர்களுக்குள்: பேசி முடித்த மறுகணமே மொத்த தலைமை அலுவலகமும் அறிந்திருக்கும் உள்ளே என்ன பேசப் பட்டதென்று.

அன்றும் அப்படித்தான். தலைமை நிர்வாக அதிகாரி அறை விட்டு வெளியே வந்தேன். த.நி.அவின் செயலாளி திறக்கப்படாதிருந்த மின்னஞ்சலில் கவனம் செலுத்தி என் முகம் பார்ப்பது தவிர்த்தாள்.

என் கூண்டிற்கு வந்தேன். அன்று ஒரு பெரிய வாராக் கடன் மீட்பு சம்பந்தமாக பேச்சு வார்த்தை. ஆரம்பம் முதலே சரிப்பட்டு வரவில்லை. துவண்டு போய் உட்கார்ந்திருந்தேன்.

திடீரென மின்னஞ்சலில் முன்பின் தெரியாத ஒரு சக தொழிலாளியிடம் இருந்து பிறந்த நாள் வாழ்த்து

“…இன்று ரூபா சௌத்ரியின் பிறந்தநாள்” என்று முடிந்திருந்தது.

உடனே வாழ்த்துக்களுக்கு நன்றி பகிர்ந்தேன். ஆனாலும் என் வியாபார மூளை அந்த பிறந்தநாள் வாழ்த்து கொண்டு ஒரு லாபம் காண யுக்தி வகுத்தது.

எனக்கு மட்டும் வந்திருக்கிறதா என்று பார்த்தேன். இல்லை. ஒரு குழுவிற்கே பகிரப்பட்டிருந்த மின்னஞ்சல் அது.

மனிதவளத்துறை தலைமை அதிகாரியை இண்டெர்காமில் தொடர்பு கொண்டேன். அவருக்கும் அந்த மின்னஞ்சல் சென்றிருந்தது. ஒற்றர்கள். ஒற்றர்கள்.

அடுத்த நாள் அந்த முட்டாள் என்னை தொடர்பு கொண்டான்,” என்ன தவறு என் மேல் ?” என்று. அவனுக்கு தெரியுமா தலைமை அலுவலகத்தின் அரசியல் பற்றி.

இந்தரும் ரூபாவும்

ஒரு வங்கியின் நேர்காணலுக்கு மும்பை வொர்லியில் இருந்த அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஆண்களும் பெண்களும் குழுமியிருந்தனர்.

நேர்த்தியாக உடை உடுத்தியிருந்த ஒரு இளம் பெண் வெளியில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணை அவள் அருகில் சென்று மெலிய குரலில் உள்வருமாறு அழைத்தாள். பதினைந்து நிமிடம் முடிந்ததும் அந்த பெண் வெளியே வர அவளைக் கடந்து அடுத்து ஒரு இளைஞன் உள் சென்றான்.

நேர்காணல் முடித்து வெளியே வந்த அந்த பெண்ணுக்கு அவளை கடந்து சென்ற அந்த இளைஞனை தெரியாது.

அந்த இளைஞனுக்கும் அந்த பெண்ணை தெரியாது.

நாமும் அவர்களை ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்ய தேவையில்லை.

அந்த பெண்ணின் பெயர் ரூபா சௌத்ரி.

அந்த இளைஞன் பெயர் இந்திரஜித்.

அன்புடன்

எஃப்.எம்.பொனவெஞ்சர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.