Published:Updated:

ப்ளாக்கியும் எட்டு குட்டிகளும்! | சிறுகதை | My Vikatan

Representational Image

அன்றைக்கு காலை நேர பரபரப்பில் சமைத்துக் கொண்டிருந்த போது ப்ளாக்கியின் குரைப்பு சத்தம் அதிகரித்துக் கொண்டே வந்தது. மற்ற நாய்களின் குரலும், ப்ளாக்கிக்கு எதிராக குரைக்க ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டிருந்தது.

ப்ளாக்கியும் எட்டு குட்டிகளும்! | சிறுகதை | My Vikatan

அன்றைக்கு காலை நேர பரபரப்பில் சமைத்துக் கொண்டிருந்த போது ப்ளாக்கியின் குரைப்பு சத்தம் அதிகரித்துக் கொண்டே வந்தது. மற்ற நாய்களின் குரலும், ப்ளாக்கிக்கு எதிராக குரைக்க ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டிருந்தது.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

ப்ளாக்கி எட்டுக் குட்டி போட்டிருக்கு.. 'அட எட்டுக் குட்டியா?' அந்த செய்தி தான் அந்தத் தெருவின் இன்றைய ஹாட் நியூஸ்.

"அட அப்படியா அது மாசமா இருந்ததா?"

" உங்களுக்குத் தெரியலையா?"

"அட எங்கே போங்க, அங்கே இங்கேனு போயிட்டு ப்ளாக்கிய கூட நான் பாக்கவேயில்லை."

காலையில் பால் வாங்க வரும் பெண்கள் அந்த வீதியில் நின்று பேசிக் கொண்டு இருந்தார்கள்.

ப்ளாக்கியோ, தன்னைத்தான் பேசுகிறார்கள் என்பது தெரியாமல் குட்டி போட்ட களைப்பில் முணகிக் கொண்டே, மூச்சு வாங்கியவாறே தன் குட்டிகளை காலுக்கடியில் போட்டு அணைத்துப் படுத்துக் கிடந்தது.

குட்டி போட்டக் களைப்பில் இருக்கும் ப்ளாக்கிக்கு அருகில், மழையில் முளைத்த காளான் போல், வளர்ப்புக் காளான் அடைத்து வரும் காலி டப்பாக்கள் குடியேறியது. அந்த வீதியில் இருப்பவர்கள் ப்ளாக்கி குட்டி போட்டதைத் தெரிந்து கொண்டு அவரவர் பங்குக்கு உணவை டப்பாவில் நிரப்பியதில் உணவு கீழே வழிந்துக் கொண்டிருந்தது.

ப்ளாக்கி அங்கே குவிந்திருக்கும் சாப்பாட்டை எல்லாம் அப்படியே சாப்பிட்டு விடாது. அதுக்கு நல்ல தயிரு, பால் போட்ட சாதம் பிஸ்கெட் மற்றும் வரிக்கி பிடித்திருந்தது.

Representational Image
Representational Image

ப்ளாக்கி அந்த தெருவுக்குள் வந்த கதை எனக்கு நினைவுக்கு வந்தது. ஒரு நாள் காலையில் வாசல் தெளித்து விட்டு திரும்பும் போது 'ஊ..ஊங்கியா.. ..ங்காஊஊ …என முணகும் குரல் கேட்டது. அன்று மழை பெய்து சாலையில் அதிகமான ஈரம். அந்த குட்டி நல்லா கறுப்பா லட்சணமா பார்க்க அழகாக குளிரில் ஊதறிக் கொண்டிருந்தது. அதை விரட்ட மனசில்லாமல் அதுக்கு பால் ஊற்றி வைத்தேன். அது எல்லோர் வீட்டு முன் நின்று, ங்கியா ங்கியா என்று கத்தும் சத்தம் கேட்டாலே வெளியே வந்து பால் ஊற்றி வைத்தார்கள்.

சிலர் பயந்து கொண்டு இப்படி தினமும் பால் வைத்துக் கொண்டு இருந்தால் நம்ம வீட்டுக்குள் வந்திடுனு ஒதுங்கினார்கள். மரம் வச்சவன் தண்ணி ஊத்துவான் என்ற பழமொழி அந்த குட்டி வளர காரணமானது. கறுப்புக் கலரில் இருந்ததால் ப்ளாக்கி என அழைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

கொஞ்சம் வளர வளர அதன் குறும்புத் தனம் அதிகரித்தது. ஆம் வாகனத்தில் செல்வோரை துரத்துவதும், குழந்தைகள் விளையாடும் போது, அவர்களுடன் தொட்டு விளையாட்டு விளையாட ஆசைப்பட்டது. அதனால் ஓடும் குழந்தைகள் முன் நான்கு கால் பாய்ச்சலில் பாய்ந்து தன் குறும்புத்தனத்தை காட்ட ஆரம்பித்தது. குழந்தைகள் பயந்து கத்த ஆரம்பித்தால், அது சந்தோஷமாக தொரத்தும். ஆனால் கடிக்காது.

சிறு குழந்தைகள் சாப்பிட அடம் பிடிக்கும் போது, 'அங்கே பாரு ப்ளாக்கி வரான் எனச் சொன்னால், அவர்கள் பயந்து சாப்பிடுவார்கள் என்று பார்த்தால் ப்ளாக்கிக்கு ஒரு வாய் போடச் சொல்லி குழந்தைகள் அடம் பிடிக்கும். அதனால் குழந்தைகள் உணவை பங்கிட்டு ருசியான உணவுகளை சாப்பிட்டு வாலை ஆட்டிக் குதுகலிக்கும்.

ப்ளாக்கி பெண்ணாக போனதால், அதைச் சுற்றிலும் ஆண் ரோமியோக்களின் வட்டம் அதிகரிக்க ஆரம்பித்தது. பல நேரங்களில் அந்த தெரு மக்களின் இரவு தூக்கத்தை கெடுக்கும் அளவிற்கு அளவற்ற ரோமியோக்கள் இந்த ப்ளாக்கியை இணையாக்கி கொள்ள வட்டமடித்து ஒவ்வொரு முறையும் சண்டையிட்டதுகள். சண்டையில் கத்தல் கூச்சல்..

இசைந்து வரும் இணையை விட பலாத்தகாரம் செய்து இணையிடம் சேர்வது எத்தனை அபத்தமானது.அப்படித்தான் பிடிக்காத ரோமியோக்களை, பிடித்த ரோம்மியோக்கள் துரத்த ஆரம்பித்தது.

இப்படி அப்படினு தன் வயிற்றில் கருவை சுமந்து கொண்டு அந்த தெருவில் நடமாட ஆரம்பித்து விட்டது. ஊரெல்லாம் ஊர்வலம் போய் வந்தாலும் அதனுடைய இருப்பிடம் எங்கள் தெருவில் இருக்கும் ஏதாவது ஒரு வீட்டின் தலைவாசலாக இருந்தது.

அன்று மாலை மழை பெய்து ஓய்ந்திருந்தது. ப்ளாக்கியின் குரைப்பு அதிகமாக கேட்டது. அந்த வீட்டின் கேட்டைப் பார்த்தே ஓயாமல் குரைத்துக் கொண்டேயிருந்தது. ' அட ஒரு நாளும் இப்படிக் குரைக்காதே என்று அவர்கள் வீட்டுக்கு வெளியே வந்து ' என்ன ப்ளாக்கி எதுக்கு இப்படி கத்தறேனு? பார்க்கும் போது அது அப்போதும் விடாமல் குரைத்தது. அது குரைத்த திசை நோக்கிப் பார்க்க ஒரு அரை அடி நீளத்தில் பாம்பு ஒன்று ஊர்ந்து கொண்டு வீட்டுக்குள் நுழைய முற்பட்டுக் கொண்டிருந்தது. அதை நுழைய விடாமல் செய்யவே அந்த குரைப்பு..

அது முதல் ப்ளாக்கிக்கு எங்கள் தெருவில் அந்தஸ்த்து உயர்ந்து விட்டது. தாய்மை நிலையில் இருந்த ப்ளாக்கி புரட்டாசி மாதம் அட மழை ஆரம்பிக்கும் நாளில் குட்டிகளை ஈன்றெடுத்து விட்டது. அது குறித்தான செய்திகள் தான் எங்கள் தெருவில் பிரபலமாக உலா வந்து கொண்டிருக்கிறது.

சின்னக் குழந்தைகளுக்கு ப்ளாக்கியின் கண்விழிக்காத குட்டிகளின் மீதான ஆச்சரியங்களும், அதை அவர்கள் கை நீட்டி சிரித்து ரசித்துப் பார்க்கும் அழகும் நமக்குள் ஏதோ ஒரு மகிழ்ச்சியை நிறைக்கிறது.

ப்ளாக்கிக்கு குட்டிகள் பிறந்தவுடன் நிறைய பொறுப்புகள் வந்து விட்டது. ஆம்! தாய்மையை மிஞ்ச எந்த சக்தியாலும் முடியாது என்பதை கண் முன்னால் தினமும் நிருபித்துக் கொண்டு இருக்கிறது. தவறான வழியில் குழந்தையைப் பெற்று விட்டு, அந்தக் குழந்தையைக் கொண்டு சென்று வளர்க்கத் துணிவில்லாமல் சில நேரங்களில் சமுதாய மான அவமானங்களுக்குப் பயந்து கொண்டு, குழந்தை பிறந்தவுடன் தொப்புள் கொடி அறுத்துப் போட்டு அதன் இரத்தப் பிசுபிசுப்பு உணரும் முன், கிடைத்த துணியில் சுற்றி மனதில் ஈவு இரக்கமே இல்லாமல், சாக்கடையிலோ குப்பைக்குள்ளோ, முட்புதரிலோ தூக்கி எறிந்து செல்லும் ஆறரிவு கொண்ட அரக்க மனதுக்கு கூட சில நேரங்களில் தாய்மை உணர்வு வருவதில்லை.

அன்றைக்கு காலை நேர பரபரப்பில் சமைத்துக் கொண்டிருந்த போது ப்ளாக்கியின் குரைப்பு சத்தம் அதிகரித்துக் கொண்டே வந்தது. மற்ற நாய்களின் குரலும், ப்ளாக்கிக்கு எதிராக குரைக்க ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டிருந்தது. காரணம் தன் குட்டிகளை அந்த ரோமியோக்கள் எடுத்து சென்று தின்று விடும் என்று தெருவுக்குள் வர விடாமல் துரத்தி துரத்தி சண்டைப் போடுகிறது. இந்தப் பக்கம் அந்தப் பக்கம் என ஏழெட்டு நாய்கள் அத்தனையும் ஒருத்தியாக ஓடி ஓடி துரத்துகிறது. அதன் தாய்மை உணர்வில் மனம் நெகிழ்ந்து அந்த நேரத்தில் வருகிறவர்கள் அதுக்கு உதவியாக மற்ற நாய்களைத் துரத்தி விடும் போது மகிழ்ச்சியில் வாலாட்டுகிறது.

மழை வரும் நேரத்தில், தன் குட்டிகளை காலக்கடியில் போட்டு அணைத்துக் கொள்ளும் பாங்கு, யாராவது புதியவர்கள் அந்த இடத்தில் வந்தால் தன் குழந்தையை எடுத்துட்டு போயிடுவாங்களோ என்ற பரிதவிப்பில் அலைமோதும் அதன் தாய்மை உணர்வில் கரையாத மனமும் கரைந்து போகும்.

ஏற்கனவே அந்த தெருவில் அடிக்கடி நாய்கள் வந்து கொண்டிருக்கிறது. ப்ளாக்கியின் குட்டிகள் வளர்ந்து விட்டால் இதன் அலப்பறைகள் தாங்க இயலாது என்று யோசித்துக் கொண்டிருக்கும் அந்த தெருவாசிகள், யாராவது நல்ல காப்பாளர்கள் எடுத்து செல்வார்களா? என்று அந்த குட்டிகளை அப்புறப்படுத்த முடியாமல் திணறிக் கொண்டு இருக்கிறார்கள்.

-யசோதா பழனிச்சாமி. ஈரோடு.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.