Published:Updated:

ஆனந்தவிகடனும் தேன்மிட்டாயும்! | சிறுகதை | My Vikatan

ஆனந்த விகடன்

இருவரும் விடைபெற்றுச் சென்றவுடன் வாசல் கதவைத் தாள் போட்டுவிட்டுத் திரும்பிய மாமி.. பாரேன் ரேஷ்மா குட்டிதான் எத்தன அழகு..பொண் கொழந்தைங்க ஒன்ணொண்ணுமே கவிதைதான்..நானும் ஆறு வசுல ரேஷ்மா குட்டி மாரி க்யூட்டா இருந்துருப்பேன்ல.....

ஆனந்தவிகடனும் தேன்மிட்டாயும்! | சிறுகதை | My Vikatan

இருவரும் விடைபெற்றுச் சென்றவுடன் வாசல் கதவைத் தாள் போட்டுவிட்டுத் திரும்பிய மாமி.. பாரேன் ரேஷ்மா குட்டிதான் எத்தன அழகு..பொண் கொழந்தைங்க ஒன்ணொண்ணுமே கவிதைதான்..நானும் ஆறு வசுல ரேஷ்மா குட்டி மாரி க்யூட்டா இருந்துருப்பேன்ல.....

Published:Updated:
ஆனந்த விகடன்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

அன்று கிருத்திகை. காலை மணி எட்டு. வீட்டில் தினசரி வழக்கமாய் செய்யும் சாமி பூஜையை முடித்துவிட்டு குமரகோட்டம் முருகன் கோயிலுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார் நடேசன். காலம்பர மணி எட்டுதா ஆறுது.. இப்பவே வெயில் இப்டி கொளுத்த ஆரம்பிச்சுடுத்தே.. கோவிலுக்குப் போய்ட்டு திரும்பிவர எப்டியும் மணி பத்தாயிடும்.. வெயில் தகிக்கும்.. இன்னிக்கு செவ்வாக் கெழமவேற கோயில்ல கூட்டம் நிமிடு தெறிக்கும் தனக்குத்தானே பேசிக்கொண்டார்.
சொர்ணா ஒரு வா காப்பின்னா குடேன்.. அப்டியே தண்ணிபாட்டில்ல தண்ணி ரொப்பிக் குடு.. வெய்யில்ல வெளீல கெளம்பவே பயமாருக்கு..

தோ வரேன்னா.. என்று சொல்லியபடி இடது கையில் தண்ணீர் பாட்டிலும் வலது கையில் குடிக்கும் பதமாய் ஆற்றிய காபி அடங்கிய டம்ளரோடு சமையலறையிலிருந்து வெளியே வந்தார் சொர்ணா மாமி.

``இந்தாங்கோன்னா..’’

மனைவி தந்த காபியை வாங்கிக் குடித்து விட்டு தண்ணீர்பாட்டிலை வாங்கி மஞ்சப்பையில் வைத்துக் கொண்டு.. ``சொர்ணம் கடேல அர்ச்சனதட்டு வாங்கி அர்ச்சன பண்ணீர்றேன்.. சரியா.. நா வரேன்.. கதவ சாத்திக்கோ’’ என்றபடி வெளியே சென்றார் நடேசன்.

டிகிரி காபி
டிகிரி காபி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கணவர் நடேசன் வெளியே சென்றதும் வாசல் கதவைத் தாழ்ப்பாள் போட்டுவிட்டு கிச்சனுக்குள் நுழைந்த மாமிக்கு வாஷிங்மெஷின் துணிகளைத் துவைத்து முடித்துவிட்டதாய் ம்யூஸிக் எழுப்பி சேதியைச் சொல்ல.. மொதல்ல துணிய ஒணத்திடலாம்.. அப்பறமான்னா பாக்கி வேலய பாக்கலாம் என நினைத்தவராய் வாஷிங்மெஷினை நோக்கிச் சென்றவரை காலிங்பெல் ஒலியெழுப்பி அழைத்தது.


யாரது என்று கேட்டுக்கொண்டே வாசல் கதவை நோக்கிச்சென்று கதவில் பொருத்தியிருந்த பீப்ஹோல் வழியாய்ப் பார்த்தார் சொர்ணா மாமி. நான்கு வீடு தள்ளி இருக்கும் அபார்ட்மென்ட்டில் குடியிருக்கும் சாந்தி நிற்பது தெரிந்தது..

சாந்தி.. என்று வாய்விட்டுத் தனக்குத்தானே சொல்லிக் கொண்டே கதவைத் திறந்த மாமி சாந்தியோடு கூடவே புதுடிரெஸ்ஸோடும் முகமெங்கும் சந்தோஷத்தோடும் கையில் குட்டிகுட்டியாய் நிறைய சாக்லெட்டுக்கள் நிரம்பிய பாக்ஸோடும் நின்றுகொண்டிருந்த சாந்தியின் குட்டிப்பொண்ணு ரேஷ்மாவும் நின்று கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு.. ``வா..வா..வா..சாந்தி..உள்ள வா.. ரேஷ்மா குட்டீ நீயும் உள்ள வா கண்ணு’’ என்று வாய் நிறைய வரவேற்றார்.
உள்ளே நுழைந்தார்கள் சாந்தியும் குட்டிப் பொண்ணு ரேஷ்மாவும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ரேஷ்மாவின் முகமலர்ச்சியையும் புது டிரெஸ்ஸையும் கையிலிருந்த சாக்லெட் பாக்ஸையும் பார்த்ததுமே அவளுக்கு அன்று பர்த்டே என்று புரிந்துபோனது மாமிக்கு.

``ஹாய்.. ரேஷ்மா குட்டி.. பிங்க கலர் ட்ரெஸ்ஸு .. பிங்க் கலர்ல வளையல் கழுத்துல பிங்க கலர்ல கல்லு வெச்ச நெக்லஸ் பளபளன்னு.. பார்ரா காதுலகூட பிங்க் கலர்ல பூத்தோடும் கொடஜிமிக்கியும்.. எல்லாமே செமையா சூப்பரா இருக்குடா ரேஷ்மா குட்டி..கையிலவேற சாக்லெட் பாக்ஸ்..மொத்தத்துல கைகால் மொளச்ச ரோஜாப்பு மாதிரின்னா இருக்க.. ரேஷ்மா குட்டீ.. இவ்வளவு ஜம்முனு ட்ரெஸ் பண்ணிருக்கியே இன்னிக்கு ஒனக்கு என்னடா கண்ணு விசேஷம்..’’

என்னவென்று தெரியாதுபோல் ரேஷ்மாவுக்கு சமமான உயரத்தில் தன் உடலைச் சுருக்கிக்கொண்டு அவள் முகத்தருகே தன் முகம் வைத்துக் கேட்டார் சொர்ணா மாமி.

``பாட்டீ.. இன்னிக்கு எனக்கு ஹேப்பி பர்த்டே..இந்த வளையல் நெக்லஸ் தோடு ஜிமிக்கி நெய்ல் பாலிஷ் எல்லாம் எங்க வருண் அங்கிள் வாங்கிக் குடுத்தது.. எங்க வருண் மாமாவ எனக்கு ரொம்பப் புடிக்கும்.. எங்க வருண் மாமா ஊருக்கு பேருக்கா.. நாளைக்கு வருவா.. மாமாக்கு நான் நெறையா சாக்லேட் குடுப்பேன்.. இந்தாங்கோ பாட்டீ நீங்களும் சாக்லேட் எடுத்துக்கோங்கோ..’’

Representational Image
Representational Image

``ஓ..ரேஷ்மா குட்டிக்கு இன்னிக்கு பர்த்டேயா?..தீர்க்காயுஸா இருக்கனும் ரேஷ்மாவின் தலைதொட்டு ஆசிர்வதித்த மாமி..மாமான்னா ரொம்ப புடிக்குமா ரேஷ்மாக்கு என்று கேட்டார்...’’

``ஆமா.. ரொம்பரொம்ப புடிக்கும்..’’

``ஒன்னாட்டம் சின்னபொண்ணா நா இருக்கறச்சே எங்க மாமாவும் எனக்கு எல்லாம் வாங்கித்தருவா.. எனக்கும் எங்க மாமாவ ரொம்ப புடிக்கும்.. அது சரி.. இன்னிலேந்து ரேஷ்மா குட்டிக்கு எத்தனாவது வயசு ஆரம்பம்?..’’

``பாட்டீ இன்னிலேந்து எனக்கு ஆறுவயசு ஆரம்பிகறதாம்..அம்மா சொன்னா.. ஐ ஆம் சிக்ஸ் இயர்ஸ் ஓல்டு பாட்டீ..

ஓ..குட்..குட்.. எத்தனாவது படிக்கிற?..

நானா.. நா ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் சி செக்ஷன்..செயிண்ட் லூயிஸ் கான்வென்ட்.. செவிலிமேடு.. நா சாகித்யா.. சத்யா.. ஸ்வேதா.. ஜான்வி.. தர்ஷன்.. திலீப் எல்லாரும் படிக்கிறோம்.. எனக்கு சுனில புடிக்காது.. அவ எப்பவும் அடிப்பான் கிள்ளுவான்.. புடிச்சுபுடிச்சு தள்ளுவான்..’’

``ஏய்..சும்மா இருடி..ஒரு கேள்வி கேட்டா ஒம்போது பதில் சொல்றது..இவ எப்பவும் இப்டிதான் மாமி வளவளன்னு பேசுவா நய்நய்னு எதாவது கேள்வி கேட்டுண்டே இருப்பா..செத்தநாழி சும்மா இருக்கமாட்டா..வெஷமக் கொடுக்கு..’’

சிரித்துக்கொண்டே சொன்னாள் சாந்தி.. ஆனாலும் பேச்சில் பெண்ணைப்பற்றி பெருமையும் இருந்தது.

``கொழந்தைங்கன்னா அப்பிடித்தான் இருக்கும்..அப்பிடித்தான் இருக்கனும்..சுட்டியா..சுறுசுறுன்னு இருக்க வேண்டாமா..புடிச்சுவெச்ச புள்ளையாராட்டமாவா இருக்கறது..’’


``பாட்டிக்கு சாக்லெட் குடுடி..’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``இந்தாங்கோ பாட்டி..சாக்லெட் பாக்ஸை மாமியிடம் நீட்ட ஹேப்பி பர்த்டே டு யூ ரேஷ்மா குட்டி என்றபடி சாக்லெட் ஒன்றை எடுத்துக் கொண்டபோது பாட்டீ.. தாத்தாக்கு?..தாத்தாக்கும் எடுத்துக்கோங்கோ..’’

தேங்க்யூ ரேஷ்மா குட்டி..பாரேன் எவ்வளவு சமத்தா சொல்றத..

மாமி இன்னும் நாலாத்துக்குப் போகனும் கெளம்பறேன்..பாட்டிய நமஸ்காரம் பண்ணுடி என்று சாந்தி பெண்ணிடம் சொல்ல..

செத்த இரு..தோ வந்துர்றேன்..என்று சொல்லிவிட்டு கிச்சனுக்குள் சென்று கப்போர்டில் வைத்திருந்த பர்ஸிலிருந்து நூறுரூபாய்த் தாள் ஒன்றையும் சுவாமிக்கு நைவேத்தியம் செய்து வைத்திருந்த ஆப்பிள் ஒன்றினையும் குங்குமச் சிமிழையும் தாம்பாளத்தில் வைத்து எடுத்துக்கொண்டு வெளியேவந்து

ம்..இப்ப நமஸ்காரம் பண்ணுவியாம் பாட்டிய என்று சொல்ல கையிலிருந்த சாக்லேட் பாக்ஸை அம்மாவிடம் கொடுத்துவிட்டு மாமிக்கு நமஸ்காரம் செய்துவிட்டு எழுந்தாள் ரேஷ்மா குட்டி.

Representational Image
Representational Image

செல்லக்குட்டி.. நன்னா இருக்கணும் அமோகமா இருக்கணும் என்று சொல்லி ரேஷ்மாவின் நெற்றியில் குங்குமம் வைத்துவிட்டு வாழ்த்திக்கொண்டே தாம்பாளத்தை நீட்ட .. தேங்ஸ் பாட்டி என்று சொல்லியபடி பணத்தையும் பழத்தையும் எடுத்துக்கொண்டாள் ரேஷ்மா குட்டி.. சாந்தி நீயும் குங்குமம் எடுத்துக்கோம்மா என்று சொல்ல குங்குமம் எடுத்து இட்டுக்கொண்டாள் சாந்தி.

சரி மாமி அப்ப நாங்க வரோம்.. பாட்டிக்கு பை சொல்லிட்டு வாடி என்று ரேஷ்மாவிடம் சொல்ல.. பாட்டீ..பை..பாட்டி என்று சொல்லி ஒரு ஃப்ளையிங் கிஸ்வேறு ரேஷ்மா அனுப்ப சட்டென அதனை வலது கையால் பிடிப்பதுபோல் பாவனைசெய்து கையை நெஞ்சில் வைத்துக்கொண்டார் மாமி.சாந்தியும் மாமியும் சேர்ந்து சிரித்தனர்.

இருவரும் விடைபெற்றுச் சென்றவுடன் வாசல் கதவைத் தாள் போட்டுவிட்டுத் திரும்பிய மாமி.. பாரேன் ரேஷ்மா குட்டிதான் எத்தன அழகு..பொண் கொழந்தைங்க ஒன்ணொண்ணுமே கவிதைதான்..நானும் ஆறு வசுல ரேஷ்மா குட்டி மாரி க்யூட்டா இருந்துருப்பேன்ல..நானும் அப்ப ஒன்னாவதுதானே படிச்சிண்டு இருந்திருப்பேன்..என்று நினைத்தவாறு சுற்றிக் கொண்டிருந்த சீலிங் ஃபேனுக்குக் கீழே ப்ளாஸ்டிக் சேர் ஒன்றினை இழுத்துப் போட்டுகொண்டு அமர்ந்தார் சொர்ணா மாமி..அவரை அறியாது அவரின் தலை சேரில் சாய

மாமியின் நினைவு தனது சிறுபிராய வாழ்க்கைக்குள் நுழைந்தது.கடந்து சென்ற காலமும்.. வாழ்க்கையும்.. நடந்த சம்பவங்களும் எழுபது வயதைத்தாண்டிய மாமியின் மனதில் நிழல் படமாய் விரிந்தது.

கும்பகோணத்திலிருந்து மன்னார்குடி நோக்கிச் செல்லும் அந்த கேடிகே என்ற தனியார் பேருந்து மருதாநல்லூரைத்தாண்டி கருப்பு வர்ணம் அடிக்கப்பட்ட சிமெண்ட் போர்டில் திப்பிராஜபுரம் என்று மஞ்சள் வண்ணத்தில் எழுதப்பட்டு.. சிமெண்ட் கம்பத்தில் இணைக்கப்பட்டு கொஞ்சம் சாய்வாய் நின்றிருந்த அந்த தூண் இருந்த பகுதியில் தன் மூக்கை நுழைத்தபோது நேரம் காலை பதினொன்றாகியிருந்தது.

ஊர் தொடங்கும் இடத்திலே மாரியம்மன்கோயில்.. கோயிலைத் தாண்டினால் இருபுறக் கரைகளையும் தொட்டுச் செல்லும் என்னாளும் வற்றாத திருமலைராஜன் ஆறு. ஆற்றின் மேலிருக்கும் பாலத்தைக் கடந்தால் அருள்மிகு விக்ரமசோளேஸ்வரர் திருக்கோயில்.

சிவன்கோயில் பஸ் ஸ்டாப்பிங் என்ற பெயர் பெற்ற அந்த ஸ்டாப்பிங்கில் பொதுவாய் கும்பகோணத்திலிருந்து மன்னார்குடி மற்றும் அதைத்தாண்டிய பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் அனைத்துமே நின்றுசெல்லும். பஸ்ஸை விட்டு இறங்கினால் சட்டென அக்ரஹாரத்தில் நுழைந்து விடலாம். சதுரம் போல் நான்கு தெருக்களைக் கொண்ட அக்ரஹாரத்தில் ஒவ்வொரு தெருவிலும் எதிரும் புதிருமாய் இடைவெளியின்றி அடர்த்தியாய் வீடுகள். அக்கரஹாரத்தின் ஆரம்பத்தில் சிவன் கோயிலின் மொட்டைகோபுரவாசல்.. அக்ரஹாரத்தின் ஆரம்பத்தில் சிவன்கோயில் என்றால் கடைசியில் பெருமாள் கோயில். அருள்மிகு வேணுகோபால ஸ்வாமி திருக்கோயில்.

Representational Image
Representational Image

நாலு தெருக்களிலும் வடக்குத்தெருவுக்கு சிறப்பு அதிகம். பெரும்பாலும் நடுத்தர குடும்பதினர் வாழும் தெரு. ஒற்றுமை அதிகம். பெரும்பாலும் வீீட்டுக்கு ஐந்தாறு குழந்தைகளுக்குப் பஞ்சமில்லை ஓரிரு வீட்டைத்தவிர. நிறைய பிள்ளைகள் இருந்ததால் அவர்களின் விளைையாட்டும்.. போடும் சப்தமும் அதிகம். சிறுபிள்ளைகள்தான் என்பதால் ஆண்பிள்ளைகள் பெண் பிள்ளைகளென்று வித்தியாச மெல்லாம் கிடையாது. கலந்து கட்டியாய் விளையாடுவார்கள். அதனாலேயே வடக்குத்தெரு எப்போதுமே ஜேஜே என்று இருக்கும்.

அன்றும் அப்படித்தான் ஐந்து வயதிலிருந்து பத்துப்பனிரெண்டு வயதுக்குட்பட்ட நிறைய பிள்ளைகள் அவரவர்களுக்கென்று குழு அமைத்துக்கொண்டு திருடன் போலீஸ்.. கல்லா மண்ணா.. சடுகுடு.. கண்ணாமூச்சிரேரேரே.. பிள்ளையார் பந்து.. சாதாபாண்டி.. ஏரோப்ளேன் பாண்டி.. மீன்வலை.. நாலுமூலைத்தாய்ச்சி. .பூப்பரிக்க வருகிறோம்.. ஒருகுடம் தண்ணி ஊத்தி..கிச்சுகிச்சு தாம்பாளம் என்று விளையாடிக் கொண்டிருந்தார்கள்.தெரு மிகவும் நீளமான தெரு என்பதால் விளையாடும் குழுக்களுக்கு இடபற்றாக்குறையோ அதனால் அவற்றுக்குள் சண்டையோ இல்லை.

குழந்தைகள் வெகு மும்முரமாய் விளையாடிக்கொண்டிருந்த அந்த நேரத்தில்..டம்..டம் டம்முக்கு டம்முக்கு..ஜலக் ஜலக்..என்று ஒருவித்தியாசமான.. இப்படியான ஓசை என்று எழுத்தில் வர்ணிக்க முடியாத ஓசையை சலங்கை கட்டிய பேரிகையில் அதற்குண்டான மரக்குச்சியால் தட்டி எழுப்பிக் கொண்டு பஸ் நின்று செல்லும் மெயின் ரோட்டிலிருந்து அக்ரஹாரத்துக்குள் நுழைந்தது சினிமாவண்டி. அடுத்தநொடி சினிமாவண்டிடோய் என்று ஒரே நேரத்தில் கத்திக்கொண்டு விளையாடிக்கொண்டிருந்த விளையாட்டைக் கைவிட்டு ஹோ என்ற சப்தத்துக்குமாரி.. கத்திக் கொண்டே திமுதிமுவென்று சினிமாவண்டியை நோக்கி ஓடியது பசங்கள் பட்டாளம்.

ஹேமா மல்லிகா லலிதா சகுந்தலா பிரேமா கலா சாவித்ரி சாந்தா ஜானா என தன்னோடு பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் படிக்கும் தன் சம வயதுத்தோழிகளோடு தானும் ஒருவளாய் சினிமா வண்டியை நோக்கி ஓடிக் கொண்டிருந்தாள் ஆறுவயது சொர்ணா.

முழங்கால் வரையில் தொங்கும் குட்டை கௌவுன். காபிபொடி கலரில் சந்தனக்கலரில் சின்னச் சின்னதாய்ப் பூப்போட்டிருந்த அந்த கௌவுன்.. பவுன் கலரிலிருக்கும் சொர்ணாவை பளீரென்று எடுத்துக்காட்டியது. அந்த கௌவுனை அவள் அணியும் போதெல்லாம் அக்கம்பக்கத்து மாமிகள் அவள் வாயைக் கிளறுவார்கள். ஏய் சொர்ணாகுட்டி..ரொம்ப நன்னாருக்குடி இந்த கவுன். பாத்தாலே இத எனக்குப் போட்டுப் பாக்கணும் போல இருக்கே.. கொஞ்சம் கழட்டிதாயேன்.. போட்டுப்பாக்கறேன்..

``ம்..அதெல்லாம் முடியாது.. கயட்டீல்லாம் தரமாட்டேன்.. என்னோடது..’’

``இத யாரு வாங்கிக் குடுத்தா அதையாவது சொல்லு அம்மாவா.. மாமாவா..’’

``அம்மால்ல..மாமால்ல..’’

அப்ப யாரு..

``எங்க ஜெயாக்கா வாங்கிக்குடுத்தா.. எங்க ஜெயாக்கா பம்பாயில இருக்கா..ரயில்ல போணும்.. தூதூதூதூதூரக்க இருக்கு பம்பாய்..தெரியுமா..அங்க இருக்கா ஜெயாக்கா..நீல்லாம் போமுடியாது..’’

``ஓ..அப்பசரி..ஒங்க ஜெயாக்காண்ட கேட்டு இதேமாரி ஒரு கவுன் வாங்கிக்கிறேன்.இன்னிக்கே லெட்டர் எழுதி போடறேன்.’’

``ம்..வேண்டா..வேண்டா..கூடாது கூடாது..’’


``ஏண்டி வேண்டா..நாங்கேப்பேன் ஒன் அக்காண்ட..’’


``ஊகூம்..ஊகூம்..கூடாது..கூடாது..அது என்னோட ஜெயாக்கா..எனக்கு மட்டுந்தா அக்கா..ஒங்க அக்கா ஊர்ல இருக்கா அவாள கேளு..’’


``பாருடி இவள..’’ சொர்ணாவின் பேச்சைக்கேட்டுச் சிரிப்பார்கள் மாமிகள்.

Representational Image
Representational Image

கிராப்பும் இல்லாமல் பாப்பும் இல்லாமல் வெட்டப்பட்ட தலைமுடி..

சைடில் வகிடெடுத்து வாரியிருப்பதும் காதுகளில் சின்னதாய் வளையமும் சிரிக்கும்போது இடது கன்னதில் விழும் குழியும் ஆறுவயதுக்கான சரியான உயரமும் உடலமைப்பும் சல்லிசல்லியான பேச்சும் துறுதுறுப்பும் சொர்ணாவைப் பார்க்கும் யாருக்கும் அவளை சொர்ணாக்குட்டீ என்று அழைத்து கன்னத்தைப்பிடித்து கிள்ளச்சொல்லும்.சிலர் அவள் பளீரென்று கலராய் இருப்பதைப் பார்த்து அடி வெள்ளச்சி என்றும் சிலர் இங்லீஷ்காரி என்றும் பாசத்தோடு கூப்பிடுவார்கள்.யார் எப்படி அழைத்தாலும் சொர்ணாவுக்குத் தன் சுப்புணிமாமா தன்னை அழைக்கும் லங்கிணி என்ற பெயர்தான் ரொம்பப் பிடிக்கும்.விபரம் தெரிந்த வயதில் லங்கிணி யார் என்பதை அறியவந்தபோது மாமாவோடு சண்டைபோட்டது ஒரு தமாஷ் கதை.

சினிமாவண்டி கிழக்குத்தெரு பக்கம் திரும்பியது. அத்தனை பசங்களும் அதன் பின்னாடியே ஓடினார்கள். வண்டியின் இருபக்கத்திலும் பெரிய சைஸில் சினிமா போஸ்டர் ஒட்டப்பட்டிருக்க.. ஒருபக்கத்தில் சிவாஜி கணேசன் சாவித்திரியின் மெகாசைஸ் படமும் பண்டரிபாய் ரெங்காராவ் நம்பியார் படங்கள் முகம்மட்டுமாயும் தெரிய. .இன்று இப்படம் கடைசி என்று அன்னையின் ஆணை பட போஸ்டரும் மறுபக்கத்தில் எம்.ஜி.ராமச்சந்திரன் பானுமதி சரோஜாதேவி நம்பியார் நடித்த ஒருகோடிருபாய் வசூல்செய்து சாதனைபுரிந்த நாடோடி மன்னன் நாளை (17-3-1958) வியாழன் முதல் வலங்கைமானில் உங்கள் அபிமான விக்டரி டூரிங் டாக்கீஸில்.. காணத்தவறாதீர்கள் என்றும் போஸ்டர் ஒட்டியிருக்க.. வண்டிக்குள்ளிருந்த ஆள் ஒருவர் நாடோடிமன்னன் பட நோட்டீஸைகளை கொத்துக் கொத்தாய் வெளியே வீசி எறிய..காற்றில் பறக்கும் நோட்டீஸைப் பொறுக்க பசங்கள் பட்டாளத்தில் ஒரேபோட்டி.. ஒவ்வொருவர் கையிலும் பத்து நோட்டீஸுகளுக்குமேல்..ஆறுவயதே ஆன சொர்ணாவும் சளைக்காமல் நோட்டீஸ் பொறுக்கினாள்.

``ஏய்..சொர்ணா போதுண்டி நோட்டீஸ்.. எனக்கு கால வலிக்கறது வா ஆத்துக்குப்போலாம்..’’தோழி ஹேமா சொல்ல..

குட்டிப் பெண்கள் இருவரும் கிளம்பிவிட்டார்கள்.

கேடிகே பஸ் சிவன்கோவில் ஸ்டாப்பிங்கில் வந்து நின்றது. பஸ்ஸிலிருந்து கீழே இறங்கினார்கள் சொர்ணாவின் தாய் சாரதாவும் ஹேமாவின் தாய் ராஜமும்.

``பயம்மா இருக்குடி ராஜம். சொர்ணா ஆத்துல ரகள அடிச்சு ஆத்த ரெண்டாக்கிண்ருப்பா.. காலேல அவ முழிச்சுக்கறத்துக்கு முன்னாடியே அஞ்ஜரமணிக்கே மகாமகக் கொளத்துல ஸ்னானம் பண்ணக் கெளம்பிட்டமா.. அப்பறமா மாவு சலிக்கிற சல்லட.. இரும்பு அடுப்பு..மாவு இடிக்க இரும்பு ஒலக்கன்னு வாங்க அலஞ்சமா..பாரு வர்றத்துக்கு ரொம்ப லேட்டாயிடுத்து.. அவ.. அவ அப்பாவ என்னபாடு படுத்தறாளோ..’’ கவலைப்பட்டு புலம்பும் சாரதாவை ``கவலபடாதடி சாரதா எம்பொண்ணும் ஒம்பொண்ணும் தெருத்தங்கச்சிங்க.. ரெண்டுமா எங்கியாவது வெளையாடிண்டு இருக்கும் பாரு’’ என்று சமாதானப் படுத்தினாள் ராஜம்.

ஆத்து வாசல் ஒட்டுத்திண்ணயில் அமர்ந்து சினிமா நோட்டீஸை மடியில் வைத்து எழுத்துக்கள் மீது விரல் வைத்து ஒவ்வொரு வார்த்தையாய் படித்துக்கொண்டிருந்தாள் சொர்ணா. ஒன்றாம் வகுப்பில் அ ஆ இ ஈ முடித்து க ங ச ஞ..ககாகிகீ கற்று.. எழுத்துக்கூட்டிப்படிக்கும் அளவு முன்னேறி இருந்தாள்.அதில் ரொம்ப பெருமை அவளுக்கு.. அந்தப் பெருமையிலும் சந்தோஷத்திலும் சுவற்று விளம்பரம்.. மளிகைக்கடை சாமான் கட்டும் துண்டுப்பேப்பர்கள்..

Representational Image
Representational Image

வாராந்திர பத்திரிகைகளின் பெயர்கள் என விரல்வைத்துப் படிப்பது வழக்கமாயிற்று.. சிலசமயம் சட்டென எழுத்துக்கள் புரிபடாது தவறாய்ப்படிப்பதுண்டு.. தாய் சாரதா அருகிலிருந்தால் திருத்துவதுண்டு.

இப்போது அருகில் யாரு மில்லாததால் படிப்பது தவறா சரியா அவளுக்கே தெரியவில்லை.

ஷ ஸ ஜ ஹ இதெல்லாம் கொஞ்சம்

தடுமாறியது.

இரண்டு கைகளிலும் பொருட்கள் நிரம்பிய பைகளோடு வீட்டு வாசல் படியில் கால்வைத்த சாரதாவுக்கு சொர்ணா சமத்தாய் ஒட்டுத் திண்ணையில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தது கண்டு நிம்மதியாயிற்று.

அன்று வீடு முழுதும் ஒட்டடை அடிக்கப்பட இருந்ததால் பரணில் கிடந்த தட்டுமுட்டுச் சாமான்களெல்லாம் கீழே இறக்கப்பட்டு வீடு களேபரமாய் இருக்க பரணிலிருந்து இறக்கி வைக்கப்பட்டிருந்த பெரியசைஸ் அட்டைப்பெட்டி முழுவதும் பழைய ஆனந்தவிகடன் புத்தகங்கள். பளபளவென்று ஆயில்பெயிண்ட்டில் அழகழகாய் படத்தோடு பார்த்தாலே அட்டையைத் தொட்டுத்தடவிப்பார்க்க ஆசையைத்தூண்டும் வண்ணம் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. எத்தனை ஆண்டுகளாய் சேர்த்து வைக்கப்பட்ட புத்தகங்களோ. அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்த சொர்ணாவை அட்டைப்பெட்டியில் இருந்த.. பளபளக்கும் விகடனட்டை கண்ணில்பட்டு ஈர்க்க அதனை நோக்கி ஓடினாள். ஹை..ஹை.. என்றபடி கண்கள் விரிய ஒவ்வொரு விகடனாகப் பார்த்தவளின் கண்களில் பட்டது அந்த விகடன்.

1956ம் வருடம் வெளிவந்த ஆனந்தவிகடன். தரையில் பாட்டி அமர்ந்திருக்க பென்ச்சில் அமர்ந்திருந்த தாத்தா மூக்குப்பொடி போடுவதுபோல் வரையப்பட்டிருந்த அந்த படம் நிஜ பாட்டிதாத்தாபோல் அத்தனை அம்சமாக இருக்க சொர்ணாவின் பார்வை அதன்மீது பட்டது. அடுத்தநொடி அம்மா.. அம்மா..பாட்டி தாத்தாம்மா பாட்டி தாத்தா என்று கத்தியபடி அந்த விகடனைப் பாய்ந்து எடுத்தாள் சொர்ணா.

தன் தோழிகளில் பலபேராத்தில் தாத்தா பாட்டி இருக்க தன்னாத்தில் மட்டும் பாட்டிதாத்தா இல்லையென்ற குறை அவளுக்கு இருந்தது..அம்மாவிடம் கேட்டால் ஒன்னோட தாத்தா பாட்டி சாமிட்ட போயிருக்கா சீக்கிரம் வந்துடுவான்னு சொல்லி சொல்லி அவர்களை எதிர்பார்த்து எதிர்பார்த்து காத்திருக்க அவர்கள் வராமல் போகவே ஏமாற்றத்தோடு இருக்கும் சொர்ணாவின் பிஞ்சுமனம் கையிலிருக்கும் புத்தக அட்டைப் படத்தில் இருக்கும் தாத்தாபாட்டிதான் தன்னுடைய தாத்தாபாட்டியோ என்ற எண்ணம் தோன்ற ஆனந்தவிகடனை தூக்கிக்கொண்டு சமயலறையில் சமையல் வேலையில் மும்முரமாய் இருந்த அம்மாவிடம் ஓடினாள்..

``அம்மா..அம்மா..இங்க பாரு..இங்க பாரேன்.. இவாதானா என்னோட தாத்தாபாட்டி..தாய் சாரதாவின் புடவைத் தலைப்பைப் பிடித்துப் பிடித்து இழுத்தாள்..’’

என்னடி எப்பபாரு நொய்நொய்னு என்று அலுத்துக் கொண்டே திரும்பி விகடனட்டையை பார்த்துவிட்டு.. அப்போதைக்கு சொர்ணாவின் தொண தொணப்பிலிருந்து விடுபட்டால் போதுமென்று நினைத்தாளோ என்னவோ..அட.. ஆமா இவாதாண்டி ஒன்னோட தாத்தாபாட்டி.. ஹை.. சொர்ணாகுட்டிக்கு அவளோட தாத்தாபாட்டி கெடச்சாச்சு என்றபடியே கைவேலையைத்தொடர..அப்ப தாத்தாபாட்டி இங்க எப்ப வருவா..

வருவா..வருவா..வந்துடுவா..போ..நீபோய் ஒன் ஃப்ரெண்டு கிட்டல்லாம் ஒந்தாத்தாபாட்டிய கொண்டுபோய் காமி என்று சொர்ணாவிடமிருந்து அப்போதைக்குத் தப்பித்தால் போதும் என்று சொர்ணாவை அனுப்பி வைத்தாள் சாரதா.

Representational Image
Representational Image

விபரமறியா வயதில் அன்று முதல் ஆனந்தவிகடன் அட்டைப்பட தாத்தாபாட்டியைத் தனது தாத்தாபாட்டியென்ற நம்பிக்கையோடு அந்த ஆனந்த விகடனைத் தனது புத்தக டெஸ்கில் பத்திரப்படுத்திவிட்டு அவர்களின் வரவுக்காகக் காத்திருந்தாள் சொர்ணாக்குட்டி..

மதியம் மூன்றுமணி கொல்லைப் புறத்தில் நிழலிலமர்ந்து வீட்டு வேலை செய்யும் லஷ்மி பாட்டி மருதாணி இட இருகைகளிலும் இட்டு முடித்தாகி வலதுகாலில் இட லஷ்மிக்கு காலைக் காட்டியபடி அமர்ந்திருந்தாள் சொர்ணா.

அண்ணா வாங்கோ.. வாங்கோ.. பிள்ளைத்தாச்சியின் வயிறுபோல் உப்பிய இரண்டு பைகளைத் தூக்கிக் கொண்டு உஸ் அப்பாடா என்னவெயில் என்ன வெயில் என்று சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்த தன் உடன் பிறந்த அண்ணனை வாயெல்லாம் பல்லாக வரவேற்றாள் சாரதா.

பைகளை பென்ச்மீது வைத்துவிட்டு துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டார் சாரதாவின் அண்ணா

சுப்புணி என்கிற சுப்ரமணியன். நாற்பத்தைந்து வயது..நல்ல நிறம்.ரெட்டைநாடி சரீரம்..தலையில் குடுமி.காதுகளில் சிவப்புக் கடுக்கன்.பஞ்சக்கட்ச வேஷ்டி..கும்பகோணத்தில் முனிசபல் பள்ளியில் ஆங்கில ஆசிரியர்.

சாரதாவைவிட பதினோரு வயது மூத்தவர். அடிக்கடி விளையாட்டாய் சாரதா எனக்கும் ஒனக்கும் பதினோரு வயசு வித்யாசம் அதேமாரி ஒம்பெரியபொண்ணு ஜெயத்துக்கும் லங்கிணிக்கும் (சொர்ணா) பதினோரு வயசு வித்யாசம். அப்டியே நம்ம அம்மாவ கொண்ருக்கடி சாரதா நீ என்பார். பதினேழு வயசுலயே கல்யாணமாகி பம்பாய்க்குபோய்ட்டா ஜெயம். பாத்து எவ்வளவு நாளாச்சு.. என்பார். தங்கைமீதும் தங்கை குழந்தைகள் மீதும் அளவுகடந்த பாசம் அவருக்கு.

``ஏம்மா..எப்டிருக்க..சௌக்கியமா..மாப்ள சாமா சௌக்யமா..அவர எங்க காணும்..லங்கிணி குட்டி(சொர்ணா)எங்க போய்ட்டா..’’ அடுக்கடுக்காய் கேள்வி கேட்டார் சொர்ணாவின் மாமா சுப்புணி.

``இல்லண்ணா இவர் ஒரம் வாங்க அவரோட ஃப்ரண்ட் சேதுசாரோட வண்டி கட்டிண்டு போயிருக்கார்..வர நேரந்தான்..சொர்ணா கொல்லைல மருதாணி இட்டுக்கறா..’’கூப்டறேன்.

``சொர்ணா சொர்ணா.` மாமா வந்ருக்காடீ.. கொல்லைப்புரம் பார்த்துக் கத்தினாள் சாரதா..

மாமா வந்திருக்கா என்ற அம்மாவின் வார்த்தை காதில் விழுந்த அடுத்த நொடி மருதாணி இடும் காலை லஷ்மியிடமிருந்து சட்டென்று விடுவித்துக்கொண்டு மாமா.. மாமா .. என்று கத்திக்கொண்டே மின்னலென ஓடிவந்தவள் கையில் மருதாணி இருக்கே அது மாமாவைக் கட்டிப்பிடித்தால் மாமாவின் வேஷ்டியில் ஒட்டி வேஷ்டி கறைபடுமே என்றெல்லாம் சிந்திக்கத் தெரியாதவளாய் மாமா என்று கத்தியபடி மாமாவைக் கட்டிக்கொள்ள மருதாணி ஈஷி வேஷ்டி திட்டுத்திட்டாய் கறையானது.

சொர்ணாவை அடிக்கப்போன சாரதாவைத் தடுத்தார் சுப்புணிமாமா.விடு..அவ கொழந்த வேஷ்டிய சலவைக்குப்போட்டா சரியாயிடும்.


மருதாணியிட்டிருந்த கையைப் பார்த்தாள் சொர்ணா.. கன்னா பின்னாவென்று கலைந்து போயிருந்தது மருதாணி.ஓடிப்போய் அடுக்கில் நிரப்பிவைத்திருந்த தண்ணீரில் கைகளை விட்டு மருதாணியை அழித்து சுத்தப்படுத்தி காலிலும் தண்ணீரை ஊற்றி அலம்பிவிட்டு மாமாவிடம் ஓடிவந்தாள் சொர்ணா.

வாங்கோ வாங்கோ..எப்ப வந்தேள் கேட்டபடியே உள்ளே வந்தார் சாரதாவின் கணவர் சாமா..உடன் சேதுசார்.

பரஸ்பரம் விஜாரிப்புகள் முடிந்து காபி குடித்தாயிற்று..

மாமா..

என்ன லங்கிணி..

நான்கேட்டேனே வாங்கிண்டு வந்தேளா..

லங்கிணி என்ன கேட்டா..மறந்து போச்சே..

போங்கோ மாமா..போனவாட்டி வந்தப்ப..பலூன்..தேன்முட்டாய்..அணுகுண்டு முட்டாய்(கமர்கட்) கேட்டேனே..

தோ..பாரு..பை நெறைய திங்கறத்துக்கு பஷ்ஷணம் வாங்கிண்டு வந்ருக்கேன்..எல்லாம் ஒனக்குதான்..

``போங்கோ..மாமா..எனக்கு தேன் முட்டாய்..அணுகுண்டு முட்டாய்..பலூன்தா வேணும்..’’பிடிவாதாம் பிடித்தாள் சொர்ணா..

``ஏய்..சொர்ணா..மாமா திங்க பைநெறைய வாங்கிண்டு வந்ருக்கா அத திம்பியா..அதவிட்டுட்டு தேன்முட்டாய் அணுகுண்டுமுட்டாய் கேக்கற..அதெல்லாம் நம்மூர் கடேலயே கெடைக்கும்..நா வாங்கித்தறேன்..’’ அதட்டினார் சொர்ணாவின் அப்பா சாமா.

``ம்கூம்..அதெல்லாம் முடியாது.. மாமாதான் வாங்கித் தரணும்..’’ சிணுங்க ஆரம்பித்தாள் சொர்ணா.

சொர்ணா அழுதால் அவளின் மாமாவுக்கு மனசு கேட்காது.

``சரி ..லங்கிணி குட்டி ..நா சொல்றத நீ கரெக்டா செஞ்சிட்டா நீ கேட்டத நான் வாங்கித்தருவேன்.. கரெக்டா செய்யில வாங்கில்லாந் தரமாட்டேன் சரியா..இன்னோன்னு நாஞ்சொல்றத நீ கரெக்ட்டா செய்யிலேன்னா நீ தோத்துட்டேன்னு அர்த்தம்.. அப்பிடி தோத்துட்டா.. நீ.. தோருக்கே இந்த பென்ச்மேல ஏறி பத்துநிமிஷம் கையகட்டிண்டு வெரலால வாயப் பொத்திண்டு நிக்கணும்.. சரியா சொல்லு..’’ என்றார் சுப்புணிமாமா.


இதைக்கொஞ்சமும் எதிர் பார்க்காத சொர்ணா கொஞ்சம் தயங்கியவாறு

``ம்..நா என்ன செய்யணும்’’ என்று கேட்டாள் ஈனஸ்வரத்தில்.

ஆனந்த விகடன்
ஆனந்த விகடன்

அவளை என்ன செய்யச் சொல்வது

என்று புரியாதவராய் சுற்றுமுற்றும் பார்த்த சுப்புணிமாமாவின் கண்களில் பட்டது அன்றுதான் வந்திருந்த..மேஜைமீது கிடந்த ஆனந்தவிகடன்.

சட்டென அந்த ஆனந்தவிகடனை எடுத்து சொர்ணாவிடம் கொடுத்து லங்கிணி..தோ..இந்தப் புத்தகத்தோட அட்டேல எழுதிருக்கறத ஒன்னுவிடாம

நீ தப்புல்லாம படிச்சிட்டீன்னா நீ கேட்டத நா வாங்கித்தருவேன்.அப்பிடி நீ கரெக்டா தப்புல்லாம படிக்கில வாங்கித்தரமாட்டேன்.நீ பென்ஞ்சு மேல ஏறி நிக்கணும்.சரியா..என்ன சொல்ற..என்றார்.

ப்பூ..மாமா இவ்ளதானா..நா நல்லா படிச்சுடுவேன்..புஸ்தகத்த குடுங்கோ என்று.. படித்துமுடிப்பதற்குள் தான் எப்படித் திணறிப்போகப்போகிறோம் என்பது தெரியாமல் கைநீட்டி வாங்கிக் கொண்டாள்.

மிட்டாய்.. பலூனுக்காக இல்லை யென்றாலும் தன்மகள் தப்பில்லாமல் படித்து விடவேண்டும் என்ற எதிர்பார்ப்போடு அவளையே பார்த்தபடி நின்றிருந்தார்கள் சாரதாவும் சாமாவும்..சேதுசார் நடுவராய் பொறுப்பேற்றுக் கொண்டார்.தன் மருமாளுக்கு தேவையில்லாமல் டென்ஷன் தருகிறோமோ என்ற தவிப்போடிருந்தார் சுப்புணிமாமா.

புத்தகத்தை கையில் வாங்கிய சொர்ணா அதைத் தரையில் வைத்தாள்.தலையை லேசாய்க் குனிந்து அட்டையையே சில நிமிடம் உற்றுப்பார்த்தாள்.ஆ என்ற எழுத்தில் தன் வலது கை ஆட்காட்டி விரலை வைத்தாள்.

ஆ..ன..--ஆன..

ந்..ந் இது என்ன எழுத்து என்ற சந்தேகம் வர எழுத்தின் மீது விரலால் எழுதி எழுதி பார்த்தாள். கண்களைமூடி க் ங் ச் சொல்லிப்பார்த்தாள்..பிடிபட்டுவிட்டது..ந்..ந்..வாய்விட்டுச் சொல்லிக்கொண்டாள் சொர்ணா.. ஆனந்..அடுத்து.. 'த' ஈஸியாய்ப் புரிந்தது.

ஆ..ன..ந்..த--தனித்தனியாய்ப் படித்ததை சேர்த்துப் படித்தாள்..ஆனந்த..என்றாள்.

அடுத்து விகட படித்துவிட்டு..ன்.. சிறு தவிப்பு..சமாளித்தாள்.. ன்..என்றாள்..வி..க..ட..ன்--விகடன்...

'ஆனந்தவிகடன்' சேர்த்து மிகச்சரியாய் படித்து முடிக்க அம்மா சாரதாவும் அப்பா சாமாவும் சேதுசாரும் சுப்புணிமாமாவும் கைதட்டினார்கள்.

அடுத்து விகடன் வெளியான தேதி..

23-3-58.மிகச்சரியாக படித்தாயிற்று.

25 காசு படித்தாயிற்று.ஏபிசிடி யெல்லாம் முதல் வகுப்பில் சொல்லித்தருவதில்லை என்பதால்

ANANDA VIKATAN என்பதை படிக்கவேண்டாம் என்று தீர்ப்பாயிற்று.

அடுத்து கீழே விழுந்து கிடப்பவர் போலீஸ்காரரிடம் பேசும் வசனம் படிக்க நேர்கையில் 'போ' வும் 'ஸ்' சும் படிக்க ரொம்பவுமே சிரமப்படாள்.அப்படி சொர்ணா சிரப்பட்டு படிக்க முயன்று கொண்டிருந்த நேரத்தில் நடுவர் சேதுசார் செவியில் பாவம் லங்கிணி

படிக்க சிரமப்படறா..ஆனாலும் கொழந்தைக்குதான் எத்தன விடாமுயற்சி..கொஞ்சம்கொஞ்சம் தப்பா படிச்சாலும் சரி..நன்னா கரெக்ட்டா படிச்சதா..அவ ஜெயிச்சுட்டதா தீர்ப்பு சொல்லீடுங்கோ என்று சுப்புணிமாமாவால் சொல்லப்பட்டது.அத்தனை பாசம் மருமாள் மீது அவருக்கு.

நிறைய சரியாகவும் குறைவாய்த் தவறாகவும் முழுவதும் படித்து முடித்துவிட்டு அம்மாவையும் மாமாவயும் பார்த்தாள் சொர்ணா.

ஹாஹாஹா சொர்ணாக்குட்டி ஜம்முனு தப்பே இல்லாம படிச்சுட்டா..அவ ஜெயிச்சுட்டா என்று

படபட வென்று கைதட்டி ஆரவாரம் செய்தனர் சொர்ணாவின் அம்மா சாரதாவும் அப்பா சாமாவும்.

இங்லீஷ்காரி(சொர்ணாவை சேதுசார் அழைக்கும் பெயர்) ஜெயிச்சுட்டா என்று சத்தமாகக் குரலெழுப்பினார் சேதுசார்..

ஹை..என் மருமான்னா மருமாதான் லங்கிணிகுட்டி..நீ சமத்துடா.. கெட்டிக்காரிடா கண்ணு.. சுப்புணிமாமா கண்களில் கண்ணீர் கசிய சொர்ணாவின் முதுகில் பாசத்தோடு தட்டிக்கொடுத்தார்.

நாநாக்கும் ரொம்ப கரெக்ட்டா படிச்சேன் என்ற சந்தோஷம் தாங்க முடியவில்லை சொர்ணாவுக்கு.. பெருமை பொங்கி வழிந்தது முகத்தில்.

ம்..ம்..வாங்கோ மாமா கடைக்கு.. பலூன்..தேன் முட்டாய்..அணுகுண்டு முட்டாய்லாம் வாங்கணுமோனோ..

பரங்கிப்பேட்டை சண்முகசெட்டியார் கடை..

சிவப்பு..பச்சை..நீலம்..மஞ்சள்..கருநீலம் ஆகிய கலர்களில் ஐந்து பலூன்கள் காற்றடிக்கப்பட்டு நூல்கட்டப்பட்டு ஐந்து பலூன் நூல்களின் அடிபகுதியும் ஒன்றாய் முடியப்பட்டு சொர்ணாவின் கையில் கொடுக்கப்பட்டபோது எல்லையில்லா சந்தோஷம் அவளுக்கு.

அடுத்து ஐந்து தேன்மிட்டாய்..ஐந்து அணுகுண்டு மிட்டாய்(உருண்டை வடிவில் பெரிய சைஸ் நாகப்பழ அளவில் செய்யப்பட்ட கமர்கட் வெள்ளிபோன்ற ஜிகினா பேப்பரில் சுற்றி வைக்கப் பட்டிருக்கும்..பார்க்க தீபாவளிக்கு வைக்கும் அணுகுண்டு வெடியைப்போல் தோற்றமளிக்கும்.. அதனால் அதை கமர்கட் என்று சொல்லாமல் அணுகுண்டு மிட்டாய் என்பர்)தனித்தனியாய்ப் பேப்பரில் கட்டி தன்னிடம் தரப்பட்டபோது..ஆறு வயது சொர்ணாவின் பிஞ்சு இதயம் ஆனந்தத்தால் துள்ளியது.

லங்கிணி குட்டி.. நீ கேட்ட எல்லாம்

வாங்கியாச்சா..போலாமா என்று கேட்ட மாமாவிடம்.. மாமா.. அதோ.. அந்த சேப்பு முட்டாய் ஒண்ணேண்ணு மாமா..

அது வேண்டா லங்கிணி..அது நல்லதில்ல..

ஒண்ணுதாம்மாமா..

தேன்மிட்டாய்
தேன்மிட்டாய்

செட்டியார்.. பாட்டிலிலிருந்து சிகப்பு கலர் கலந்து சீனியால் செய்யப்பட்ட மிட்டாயொன்றை எடுத்துக்கொடுக்க..

சட்டென அதை வாயில் போட்டுக் கொண்டாள் சொர்ணா.. அடுத்த நொடி அது வாயில் கரைந்து காணாமல் போனது.வாயும் நாக்கும் உதடுகளும் ரத்தம் குடித்த காட்டேரி போல் செக்கச்செவேரென்று சிவந்துபோனது.

கண்களை மலர்த்தி பெரிதாக்கி நாக்கை நீ...ட்டி ஹாஹா என்று வேகமாய்க் குரலெழுப்பி மாமாவைப் பயமுறுத்தினாள் சொர்ணா.

சுப்புணிமாமா மட்டுமல்ல செட்டியாரும் பயந்ததுபோல் நடித்துச் சிரித்தார்கள்.

வீட்டுக்கு(ஆத்துக்கு)வந்தாயிற்று..

கையிலிருக்கும் பலூன்களோடும் தேன்மிட்டாய் மற்றும் அணுகுண்டு மிட்டாய்ப் பொட்டலங்களோடும் கூடத்தின் ஒருகோடியிலிருந்து மறுகோடிக்கு இங்கிருந்து அங்கு அங்கிருந்து இங்கு ஓடிஓடி சுற்றிச்சுற்றி வந்தாள் சொர்ணா..அத்தனை சந்தோஷம் மனதில்.

சட்டென நின்றாள் என்ன தோன்றியதோ..அம்மாவிடம் ஓடினாள்..அம்மா..அம்மா..அந்த புஸ்தகம் பேரென்ன ம்ம்ம்.. ம்..ஆனந்தவிகடன்..ஆனந்தவிகடன்

அந்த புஸ்தகத்தாலதானே மாமா எனக்கு இதெல்லாம் வாங்கித்தந்தா..

அந்த புஸ்தகத்த நா பத்ரமா என்னோட டெஸ்க்ல தாத்தாபாட்டி இருக்கற புஸ்தகத்தோட வெச்சுக்கவா..

ஓ..வெச்சுக்கோடி கண்ணு..அம்மா சாரதா சொல்ல..23-3-58 ல் வெளியான 'ஆனந்தவிகடனை' வெகு வாஞ்சையோடு தன் டெஸ்க்கில் தன் தாத்தாபாட்டி என்ற நம்பிக்கையோடு எடுத்து வைத்திருந்த விகடனோடு சேர்த்து பத்திரப்படுத்தினாள் சொர்ணா.

ரொம்ப வருஷம் அந்த இரண்டு விகடனும் அதே டெஸ்க்கில் பத்திரமாக இருந்ததாக பெரியவளாய் வளர்ந்த பிறகும் கூட தாய் சாரதா கூறக் கேட்டிருக்கிறாள் சொர்ணா..

காலிங் பெல் சப்தம் கேட்டு பழைய நினைவுகளிலிருந்து சட்டென வெளிவந்தார் சொர்ணாமாமி.

எழுந்து சென்று கதவைத்திறந்தார்.. உள்ளே நுழைந்த நடேசன்..என்ன சொர்ணம் தூங்கிட்டியா..

இல்லன்னா..சும்மா..

யார் வந்ருந்தா..டேபிள்ள தாம்பாளம் குங்குமச்சிமிழ்லாம் இருக்கு..

அதான்னா..நாலாந்தாண்டி ஃப்ளாட்ஸுல சாந்தி இருக்காளோனோ அவ பொண்ணு ரேஷ்மா குட்டிக்கு இன்னிக்கி பர்த்டேயாம்..சாக்லெட் குடுக்க வந்திருந்தா..பணம் வெச்சுகுடுத்து குங்குமங் குடுத்தேன்..

ரேஷ்மா குட்டி எப்டி இருக்காங்கறேள்.. அப்டியே சின்ன வயசுல நா இருந்தாப்ல..அச்சுஅசலா

என்னமாரியே கெட்டிக்காரியா.. சமத்தா.. க்யூட்டா.. துறுதுறுன்னு..

அடியம்மா..போதும் சுயபுராணம்.. மணி பன்னெண்டு ஆகப்போறுது..கையகால அலம்பிண்டுவரேன்.எலயப்போடு பசிக்கறது என்று சொல்லி சிரித்தபடி பாத்ரூம் நோக்கிச்சென்றார் நடேசன்..

பகீரென்றது மாமிக்கு சாமி நேவேதியத்துக்கு மகா நேவேதியம்னு சாதம் மட்டும்தானே வெச்சேன்.. இன்னும் கொழம்பு ரசம் கறி ஒண்ணுமே பண்ணலியே.. அடராமா..பழச நெனச்சுண்டு இப்டியா ஒக்காந்திருந்திருப்பா ஒருத்தி..பின்னந்தலையில் கையால் தட்டிக்கொண்டே கிச்சனுக்குள் ஓடினார் சொர்ணாமாமி.

காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism