Published:Updated:

பொன்னி! - குறுங்கதை

Representational Image

அடக் கொரங்குப் பயலே.. எம்மா நேரமா கூப்புடுறேன்..வந்து ஏன்னு கேட்டியா என்றபடியே இடது கையால் அவனது வலதுகையை இறுகப் பற்றிக்கொண்டு வலதுகையால் பளீரென்று சட்டைபோடாத முதுகில் ஒர் அடிவைத்தாள் பொன்னி...

பொன்னி! - குறுங்கதை

அடக் கொரங்குப் பயலே.. எம்மா நேரமா கூப்புடுறேன்..வந்து ஏன்னு கேட்டியா என்றபடியே இடது கையால் அவனது வலதுகையை இறுகப் பற்றிக்கொண்டு வலதுகையால் பளீரென்று சட்டைபோடாத முதுகில் ஒர் அடிவைத்தாள் பொன்னி...

Published:Updated:
Representational Image

``எலேய்... எளவரசு இங்கிட்டு வா..’’

வாசலில் ஐந்தாறு தோழர்களோடு வெகு மும்முரமாய் பம்பரம் விளையாடிக்கொண்டிருந்த இளவரசின் காதில் தாய் பொன்னி வீட்டுக்குள்ளிருந்து கூப்பிடுவது நன்றாக விழுந்தது.. ஆனால் ஆட்டத்தின் முக்கியமான கட்டமது.. இப்போது உள்ளே போகமுடியாது என்பதால் அம்மாவின் அழைப்பு காதில் விழாதமாதிரி பதிலேதும் தராமல் பம்பர விளையாட்டில் லயித்திருந்தான் இளவரசு..

எலேய்.. வான்றேல்ல.. மீண்டும் கத்தினாள் பொன்னி..

இனிமேலும் அம்மாவின் கத்தலுக்குப் பதில் தராமல் இருக்க முடியாது என்று நினைத்தவனாய் தோ.. வாரேம்மா என்றவாரே பம்பரத்தின் ஆணிக்குக் கொஞ்சம் மேலாய் ஒரு இன்ச்சுக்கு கயிற்றின் முனையை வைத்து.. ஆணியிலிருந்து மேல்நோக்கி வரிவரியாய் மிகலேசான பள்ளமாய் செதுக்கப்பட்டிருந்த கோட்டில்.. பம்பரத்தின் மேலே கோடு முடியும்வரை கயிற்றைச் சுற்றி முடித்தான்..

பம்பரம்
பம்பரம்

மிச்சமிருந்தஒரு சாண் கயிற்றை வலதுகை மோதிர விரலுக்கும் நடுவிரலுக்கும் இடையே கொண்டுபோய் நுழைத்து விரல்களைக் கயிற்றின் மற்றொரு நுனியில்.. தட்டித்தகடையாய் ஆக்கிநடுவில் துளையிட்டுக் கட்டியிருந்த சோடாமூடியில் இடிக்கும்படி வைத்து டைட்டாக்கிக்கொண்டு மண்ணில் போடப்பட்டிருந்த வட்டவடிவ கோட்டிற்குள் படுக்க வைக்கப்பட்டிருந்த ஐந்து பம்பரங்கள் மீதும்.. தனது பம்பரத்தை இயக்கி ஆக்கு வைத்து அவற்றில் ஒன்றிரெண்டையாவது கோட்டிற்கு வெளியே கொண்டு வந்துவிட்டு தொடர்ந்தும் சுற்றியபடி உறங்கும் பம்பரத்தைக் கயிற்றால் எடுத்து மேல்நோக்கித் தூக்கிப்போட்டு அபீட் என்று கத்தி மேலிருந்து கீழ்நோக்கிவரும் பம்பரத்தைக் கீழேவிழாமல் பிடித்துவிட வேண்டுமென்ற முயற்சியில் இருந்தான்.. அதற்கான முனைப்பில் இருந்த நேரத்தில் அம்மா கூப்பிடுவது அவனுக்குப் பெருத்த இடைஞ்சலாய் இருந்தது..

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதோ.. இதோ.. தனது பம்பரத்தை இயக்க ஆயத்தமானான் இளவரசு.. பம்பரமிருந்த வலக்கையை மேலே குறிப்பிட்டதூரம் தூக்கி வளையக் கோட்டிற்குள்ளிருந்த பம்பரங்கள் மீது தனது பம்பரத்தை விசையோடு விடுவித்தான்.. கண்களை மூடிக் கொண்டு இவன் வைக்கும் குறி தப்பவேண்டுமென வேண்டிக் கொண்டார்கள் மற்ற தோழர்கள்.. ம்கூம்.. குறிதப்பவில்லை.

டிக்.. என்ற சப்தத்தோடு பம்பரம் ஒன்றின் உடலில் ஆக்குவைத்துப் புள்ளியை ஏற்படுத்திவிட்டு நான்கு பம்பரங்களை வட்டத்திற்கு வெளியே தெறித்து விழவைத்துவிட்டு தானும் வெளியேவந்து வேகம் குறையாமல் சுற்றிச்சுற்றி உறங்கியது பம்பரம்.. உறங்கும் பம்பரத்தின் அடிப்புறத்தைக் கயிற்றால் இரண்டு சுற்றுசுற்றி அப்படியே மேலே தூக்கிப்போட்டு அபீட் என்று கத்தியபடி கீழ்நோக்கிவரும் பம்பரத்தை வெகு ஜாக்கிரதையாய் இருகைகளாலும் பிடித்தான் இளவரசு.. ஹோ.. வென்று கத்தியது தோழர்கள் பட்டாளம்.. படபட வென்ற கைதட்டல்.. விஷ்க்.. விஷ்க் கென்ற விசில் சப்தம்.. அத்தனைப் பசங்களுமாய் அவனைத்தூக்க முயன்றனர்.. ஒரே இறைச்சல்..

Representational Image
Representational Image

இவர்கள் போடும் இறைச்சலில் தன்தாய் வெளியே வருவதை இளவரசு கவனிக்கவில்லை.. மனசு துள்ளாட்டம் போட்டது..

அடக் கொரங்குப் பயலே.. எம்மா நேரமா கூப்புடுறேன்..வந்து ஏன்னு கேட்டியா என்றபடியே இடது கையால் அவனது வலதுகையை இறுகப் பற்றிக்கொண்டு வலதுகையால் பளீரென்று சட்டைபோடாத முதுகில் ஒர் அடிவைத்தாள் பொன்னி. யம்மா..யம்மா..யம்மா அடிக்காத அடிக்காத என்று கத்தி அம்மாவின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு ஓடப் பார்த்தான் இளவரசு.. முடியவில்லை..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இளவரசு அம்மாவிடம் அடி வாங்கியதைப் பார்த்த அவனுடைய சகாக்கள் நிமிட நேரத்தில் இடத்தைக் காலி செய்திருந்தனர்..

தரதரவென்று அவனைக் குடிசைக்குள் இழுத்துச்சென்றாள் பொன்னி..

அம்மா அடித்ததைக்கூடத்தாங்கிக் கொள்ளலாம்போல இருந்தது இளவரசுக்கு.. தோழர்களின் முன்னே தன்னை அடித்ததுதான் அவமானமாய் இருந்தது..

ஏ..என்னிய அடிக்கிற..நா என்னா செஞ்சே..பள்ளியோடம் லீவுதானே.. லீவுல வெளியாட மாட்டாவுளா..

வாய மூடுடா நாதாரி நாயே..எதுனா பேசுன வாய்லயே போடுவேன்..பசீல ஒருமணிநேரமா புள்ள அளுதுகிட்டு கெடக்கு..இருந்த பாலும் திரிஞ்சி போய்ட்டே..டீக்கடையிலேர்ந்து ஒரு டீன்னா வாங்கி அதுக்கு தருவோம்னு நெனச்சி ஒன்னய வாங்கிக்கிட்டு வரச்சொல்லலாமுன்னு கூப்டா..காதுல வாங்கினியா நீயி..

சட்டென அடங்கிப்போனான் இளவரசு..தங்கச்சிப் பாப்பாவுக்குப் பசிக்கிதாம்மா.. செல்லிக்குட்டி..சிலுக்குக்குட்டி..என்றபடி விரித்திருந்த துணியில் வாயில் விரல் போட்டபடி படுத்துக்கிடந்த நான்குமாத தங்கச்சிப் பாப்பாவிடம் சென்று விளையாட்டுக்காட்டினான் இளவரசு..

Representational Image
Representational Image

லேய்.. இந்தா என்றபடி எவர்சில்வர் தூக்கு டிபன் பாக்ஸையும் பத்துரூபாய்த் தாளையும் அவனிடம் கொடுத்தாள் பொன்னி.. சீக்கிரமா போ.. அடுத்த அழுகய தங்கச்சி அழுவ ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி டீய வாங்கிக்கிட்டு.. போனமா வந்தமான்னு வா.. எங்கியும் பராக்குபாத்துக்கிட்டு நிக்காத புரியுதா.. பத்துநிமிசத்துல நீ வூட்டுக்கு வல்ல முதுகுத்தோல உறிச்சிப்பிடுவேன்.. ஆமா..

என்னா பத்துரூவா குடுக்குற..பத்து ரூவாக்கி ஒரு டீதா கெடைக்கும்.. எனக்கு டீ?..காலேலேந்து டீ கூட குடிக்கில..ரொம்ப பசிக்கிது..

பசிச்சா டீய வாங்கிக்கிட்டு வந்துட்டு பளைய சோறும் ராவுக்கு வெச்ச கொளம்பும் இருக்கு துண்ணு..

போம்மா..எப்பவும் பளைய சோறுதானா.. வேணா..பாண்டி வூட்டுல..குமாரு வூட்டுல.. சின்னாவூட்டுலல்லாம் தெனமும் காலேல இட்டிலி தோச பூரின்னு துண்ணத் தராங்க..நம்ம வூட்டுல எப்பவும் பளைய சோறுதான்.. சிணுங்கினான் இளவரசு..

அடி செருப்பால.. குடிகாரப் பய மவனே..ஒங்கப்ப தென சம்பாரிச்சிகிட்டு வந்து கையில குடுக்கறான்ல..ஒனக்கு வாய்க்கு வக்கணையா ஆக்கிப்போட.. போடா..நாதாரிக்குப் பொறந்த நாயே.. எ.. வவுத்தெரிச்சல கொட்டிக்காத.. நா..நாத்துப்பறிக்கவும் நடவு நடவும் கள பறிக்கவும் அறுப்பறுக்கவும்னு போயிம்..சமயத்துல கட்டட வேலைக்கு சித்தாளா போயி நாலுகாசு சம்பாரிக்கரதயும் அடிச்சு புடிக்கிக்கிட்டு போயி தண்ணியடிச்சுட்டு கண்ட எடத்துல வுளுந்து கெடக்குற பேமானி ஓ அப்ப..ஏதோ ரேஷனுல அரிசி பாமாயிலு கோதும கொடுக்கறாங்க.. அரை வவுத்துக்கு கஞ்சியாவுது குடிக்கிறோம்..இதுல ஒனக்கு நாக்குக்கு ருசியா கேக்குதா..கத்தும் அம்மாவின் வார்த்தைகளின் உண்மை இளவரசைப் பேசமுடியாமல் ஆக்கியது.

குடிசை வீடுகள்
குடிசை வீடுகள்

தன்னைப்பெற்றவன் தினமும் அம்மாவை அடித்துப் பணத்தைப் பறித்துச் செல்வதும் மீண்டும் குடித்துவிட்டு வந்து அடிப்பதும் அம்மா அழுவதும் கத்துவதும் அவனுக்குப் பார்த்துப் பார்த்துப் பழகிய ஒன்று..

அப்பாவை நினைத்தாலே கசப்பாய் இருந்தது அவனுக்கு.. அப்பாவாம் அப்பா.. ஒரு சொக்காயோ ஒரு டிரௌசரோ வாங்கிக் கொடுத்துருப்பாரா இதுவர.. ஏன் ஒரு சாக்லேட்டு ஒரு முட்டாயி.. ஒருதடவயாச்சும் நம்மள தூக்கி கொஞ்சீருப்பாரா.. தங்கச்சி.. அது எம்மா அளக்காருக்கு.. அதுக்கு ஒரு கவுனு வாங்கித்தந்துருப்பாரா.. எப்பபாரு குடிச்சிட்டு வந்து அம்மாவ.. பணங்குடு பணங்குடுன்னு முடியப்புடிச்சி இளுத்துப் போட்டு அடிக்கிறதும்.. சோத்துப்பானைய சோத்தோட தூக்கிப்போட்டு ஒடைக்கிறதும்.. இவுருல்லாம் ஒரு அப்பாரு.. பாவமில்ல அம்மா.. தெனமும் அடியவாங்கிக்கிட்டு அளுதுக்கிட்டே.. பாருபாரு.. நா நல்லா படிச்சு பெரியவனாகி போலீஸாகி இந்த ஆள முட்டிக்கிமுட்டி தட்டி ஜெயிலுல தள்ளுறேன்.. மனதிற்குள் கறுவிக்கொண்டான் ஒன்பதுவயது இளவரசு..

சிவமணி டீஸ்டால்..

சுசீக்கா ஒருடீ என்றபடி தூக்குடிபன் பாக்ஸை பால் காய்ந்து கொண்டிருந்த ஸ்டவ் அருகே வைத்துவிட்டுப் பத்து ரூபாய்த்தாளை நீட்டினான்..

என்னாடா எளவரசு டீ வாங்க வந்ருக்க..வூட்டுல போடலியா..

இல்ல சுசீக்கா.. பாலு கெட்டுப் போச்சாம்.. தங்கச்சி பாப்பாக்குதா டீ..

அப்ப ஒனக்கு ..

ரெண்டுலாம் வாங்க காசில்லக்கா.. கொஞ்சம் அதிகமா ஊத்திக் கொடுக்கா.. நானும் குடிப்பேன்ல..

ஆமாண்டா.. ஒம் பத்து ரூவாக்கி அஞ்சு டீ குடுப்பாங்க.. ஆசையப்பாரு என்று சொல்லிச்சிரித்துக்கொண்டே கொஞ்சம் அதிகமாகவே டீயை ஊற்றி டிபன்பாக்ஸை மூடிக் கொடுத்தாள் நாற்பது வயது சுசீக்கா..

இளவரசின் பார்வை கண்ணாடி அலமாரிக்குள் பேசின்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சுருள்போளி, சுழியன், வடை போண்டா இவற்றின் மீது ஏக்கதோடு பட்டுத் திரும்பியது..

என்னாடா பாக்குற..அதெல்லாம் ஒன்னு அஞ்சு ரூவா..

அக்கா.. சுருளு போளி ஒன்னுனா குடுக்கா..

காசு..

அக்கா.. நா படிச்சு பெரியவனாகி போலீஸ் வேலைக்குப்போயி சம்பாரிக்கக்கொள்ள அஞ்சுரூவாய கொடுத்துடறேன்க்கா.. எளுதின்னா வெச்சுக்க..

நீ படிச்சி பெரியவனாகி போலீஸாகி .. சிரித்தாள் சுசீக்கா.. பாவம் பொன்னி.. குடிகார புருஷங்கூட என்னா பாடுபடுது.. இந்தபயலாவது நல்லா வரட்டும் என்று நினைத்தபடி போளி ஒன்றை எடுத்து நீட்டினாள்..

போளி
போளி

ஹை.. டேங்ஸ்.. அக்கோவ்.. கணக்குல எளுதிக்கக்காவ் என்றபடி மிகுந்த சந்தோஷத்தோடு போளியை வாங்கிக்கொண்டு டீத்தூக்கை எடுத்துக்கொண்டு நகர்ந்தவன் கண்களில் பட்டது அந்தக் காட்சி..

டீக்கடைக்கு பத்தடி தூரத்தில் தலைமாட்டில் பசுமாடு ஒன்று சாணியைப்போட்டு மூத்திரம் போய் அதன் மீதே அசைபோட்டு அமர்ந்திருக்க.. முதுகுப்பக்கம் சொரிநாயொன்று சுருண்டு கிடக்க.. தண்ணிபோட்டுவிட்டு வேட்டி விலகி பட்டாபட்டி அன்டிராயர் வெளியே தெரிய.. வாந்தியெடுத்த வாய்மீது ஈக்கள் மொய்க்க உருண்டுகிடந்தான் இந்தியக் 'குடிமகன்' டெல்லிபாபு.. இளவரசைப் பெற்றவன். பகீரென்றது இளவரசுக்கு..ஐயோ..நம்ம ப்ரெண்டுங்க யாராச்சும் இந்தாளு இப்டி கெடக்குறத பாத்ருப்பாங்களோ.. எம்மாம் அவமானம் பாவி.. குடிகாரப்பாவி.. அப்டியே பஸ்ஸோ ராலியோ ஏறி இந்தாள சாவடிக்கனும்.. சாவட்டும்..

பெற்றவன் மீது வெறுப்பு கூடியது.. கையிலிருந்த சுருள்போளியைத் திங்கக்கூட பிடிக்கவில்லை..

மெள்ளத் திரும்பி வீடுநோக்கி நடக்கத் தொடங்கினான்.. வலது கையில் டீ டிபன்பாக்ஸ்.. இடக்கையில் சுருள் போளி..

வழியில் இருந்த அம்மன்கோயில் மதில் சுவற்றில் பசியோடு அமர்ந்திருந்த இரண்டு மெகாசைஸ் குரங்குகள் இவனையே.. இவன் கைகளையே நோக்கின.. சடாரென்று ஒரே தாவாய்த்தாவி இவனுக்கு முன்னால் குதித்து இவனின் வழிமறித்து.. ஒருகுரங்கு போளியையும்.. மற்றொன்று டீ டிபன்பாக்ஸையும் வெடுக்கென பறித்துக்கொள்ள.. இதைச் சிறிதும் எதிர்பார்க்காத இளவரசு பயந்துபோய் அய்யோ... அய்யோ கொரங்கு கொரங்கு என்று கத்தியபடி கீழே விழுந்தான்..

கூட்டம்கூடி பலரும் குரங்குகளைத் துரத்த.. கோயில் கோபுரத்தில் போய் அமர்ந்த குரங்குகளில் ஒன்று போளியைச்சுவைக்க மற்றொன்று டிபன்பாக்ஸை வாயால் திறந்து டீயைக்குடித்து விட்டு சமத்தாய் மூடி டிபன்பாக்ஸைத் தூக்கியெறிந்தது.. விழுந்தவேகத்தில் தத்தளமாய் நசுங்கிப்போய் கிடந்த டிபன்பாக்ஸை யாரோ ஒருவர் எடுத்துக்கொடுக்க.. அம்மாவுக்கு என்ன பதில் சொல்வது என்ற பயத்திலும்..கிடைக்கப்போகும் அடியை நினைத்தும் அழுது கொண்டே வீடுவந்து சேர்ந்தான் இளவரசு..

குரங்குகள்
குரங்குகள்

அவன் நினைத்துப் பயந்தது போலவே.. அறிவுகெட்ட முண்டமே.. எங்கிட்டு நின்னு பராக்குபாத்த என்றபடி விசிறிக் காம்பால் முதுகிலும் தொடையிலும் கால்களிலும் அம்மா கொடுத்த அடியால் அடிபட்ட இடமெல்லாம் வலியும் எரிச்சலையும் கொடுக்க.. அதோடு பசியும் சேர்ந்துகொள்ள அப்படியே மடங்கி சுவற்றில் சாய்ந்து அமர்ந்து அழ ஆரம்பித்தான் இளவரசு..

வாசலில் அரவம்கேட்டது.. ச்சே.. வூட்டுக்கு வரவே புடிக்கில..எப்பப் பாரு சத்தமும் அளுகையுந்தான் என்றபடி அழுக்கு வேட்டியும் கலைந்த தலையும் உளறும் வாயுமாய் தள்ளாடியபடி உள்ளே வந்தான் பொன்னியின் குடிகாரப்புருஷன் டெல்லிபாபு..

பாவம்.. இவுரு ஒழச்சு சலிச்சுப்போய் வாராரு.. வூடு அமைதியாயில்ல பாவம்.. என்றாள் பொன்னி.

என்னாடி வாயி நீளுது.. ஏதுடா..

புருஷங்கார வாரானே.. குளிக்க சுடுதண்ணி வெச்சுகுடுப்பம்.. தட்டு வெச்சு சோறுபோடுவோம்னு இல்லாத ... முண்ட..

ச்சீ.. நீயெல்லாம் ஒருமனுஷன்.. ஒருபுருஷன்.. ஒனக்கு முதுகுதேச்சு குளிப்பாட்டி.. தலயதோட்டிவுட்டு தட்டு வெச்சு சோறு போடனும்.. வாயில வண்டவண்டயா வருது.. கத்தினாள் பொன்னி..

அதிகசப்தத்தால் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை விழித்துக் கொண்டு அழ ஆரம்பித்தது..

சனியன்.. அழுவுறுதப்பாரு.. பொட்டநாயி.. இது பொறக்கலன்னு யாரு அளுதா என்றபடி குழந்தையின் முதுகுக்குக்கீழ் பாதத்தைச்செருகி ஒரே எத்து எத்தினான் குடிகார டெல்லிபாபு.. மல்லாந்து படுத்திருந்த குழந்தை இரண்டடி தள்ளிப்போய் குப்புற விழுந்து வீரிட்டது.. தரையில் மூக்கு மோதி உள்ளிமூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது..

அய்யோ..பாவீ..பாவீ..நாசமா போறவனே நீ நல்லாருப்பியா..

கத்திக்கொண்டே குழந்தையை வாரித் தூக்கினாள் பொன்னி..


அவள் தலைமுடியைப்பற்றி இழுத்து கெட்ட வார்த்தைகளைச் சொல்லிச்சொல்லி அடித்தான் டெல்லிபாபு..

பொன்னி! - குறுங்கதை

சட்டென அம்மா தன்னை அடித்ததை மறந்துபோனான் இளவரசு.. குடிகார அப்பன் தங்கச்சியை எட்டி உதைத்ததயும்..தாயின் முடியைப் பிடித்திழுத்து அடிப்பதையும் பார்த்தவனுக்கு ஏற்கனவே இருந்த பசியாலும்.. விசிறி மட்டையால் அடிவாங்கியதால் முதுகும் கால்களும் வலியும் காந்தலுமாய் இருக்க.. அடிவயிற்றிலிருந்து அப்பனைப்பார்த்துக் கோபம் கொப்பளித்தது.. அடித்து நொறுக்க வேண்டும்போல் இருந்தது..

இன்னது செய்கிறோம் என்று தெரியாதவனாக மூலையில் சாத்தியிருந்த சவுக்குமர உருட்டுக்கட்டையை எடுத்து பலம்கொண்டமட்டும் தன் அப்பன் டெல்லிபாபுவின் பின் மண்டையில் ஓங்கி அடித்தான்.. அடுத்தகணம் ரத்தம் பீரிட்டுத் தெறிக்க.. அப்படியே சாய்ந்து சடலமாகிப்போனான் டெல்லிபாபு.. அதேநேரம் இளவரசுவை விளையாடக் கூப்பிட வந்த பாண்டி நடந்த அனைத்தையும் பார்த்துவிட..

அய்யோ.. அய்யோ எளவரசு அவ அப்பாவ மண்டையப் பொளந்து கொன்னுட்டான் கொல.. கொல.. என்று கத்திக்கொண்டே ஓட.. அடுத்த அரைமணி நேரத்தில்.. வாசலில் போலீஸ் ஜீப் வந்து நின்றது.. அம்மாவின் இடுப்பைக் கட்டிக்கொண்டு கதறியழுதான் இளவரசு..

ஐயா.. எம்மவன் அப்பனக் கொல்லனும்னுலாம் அடிக்கலீங்க ஐயா.. தங்கச்சிய ஒதச்சி.. என்னையும் அடிச்சத பாத்து கோவத்துல சும்மாதான் அடிச்சிருக்கான்.. கொல்லுற நோக்கமெல்லாம் அவுனுக்கு இல்லீங்கய்யா..அவன வுட்டுடுங்க ஐயா.. இன்ஸ்பெக்டரைக் கையெடுத்துக்கும்பிட்டுக் கதறினாள் பொன்னி..

இப்படித்தான் நடந்திருக்க வேண்டுமென இன்ஸ்பெக்டருக்கும் தெரிந்தேயிருந்தது.. ஆனாலும் சட்டப்படிதானே செயலாற்றமுடியும். அம்மாவின் இடுப்பைக் கட்டிக்கொண்டு அழும் இளவரசுவை வலுக்கட்டாயமாய்ப் பிரித்து ஜீப்பிலேற்ற..ஜீப் கிளம்பி வேகமெடுத்தது..

ஜீப்பின் பின்னாலேயே எளவரசூ.. எளவரசூ எம்மவனே என்று அழுதுகத்திக் கதறியபடி ஓடினாள் பொன்னி..

Representational Image
Representational Image

அம்மா.. அளுவாதம்மா.. நா சீக்கிரமா வந்துடுவேம்மா.. அளுவாதம்மா என்ற இளவரசின் அலறல் சப்தம் மெல்லத் தேய்ந்து மறைந்தது..

சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து நிச்சயம் விரைவில் வெளி வந்துவிடுவான் இளவரசு.. நன்கு படித்துப் பெரியவனாகி தன் விருப்பம் போலவே போலீஸாகி இன்ஸ்பெக்டராவான்.. அப்போதும் பலவீடுகளிலும் குடித்துவிட்டுவந்து மனைவியை அடிக்கும் ஆண்கள் இருக்கத்தான் செய்வார்கள்.. அவர்களைப் பிடித்து முட்டிக்குமுட்டித் தட்டி ஜெயிலில் தள்ளுவான் தன் மகன்.. இது நடக்கத்தான் போகிறது என்ற நம்பிக்கையோடு தன்மகன் இளவரசு திரும்பிவரும் அந்த நாளுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தாள் பொன்னி.

-காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன்

காஞ்சிபுரம்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism