Published:Updated:

வாழு... வாழ விடு! | சிறுகதை | My Vikatan

Representational Image

இந்தக் கனவு அவளைத் துறத்துவது இன்று புதிதல்ல. ஒவ்வொரு முறையும் கல்லறையின் பெயரைப் பார்ப்பதற்கு முன்னமே விழித்துக்கொள்வாள்.

வாழு... வாழ விடு! | சிறுகதை | My Vikatan

இந்தக் கனவு அவளைத் துறத்துவது இன்று புதிதல்ல. ஒவ்வொரு முறையும் கல்லறையின் பெயரைப் பார்ப்பதற்கு முன்னமே விழித்துக்கொள்வாள்.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

காற்றின் அலை அன்று மிகவேகமாக அவளைத் தள்ளிக் கொண்டே செல்ல, ஒரு இடுகாட்டின் வாயிலில் வந்து விழுந்தாள் அனன்யா. எறிந்த கல் கீழே விழ முடியாதபடி மக்கள் கூட்டம், அனன்யாவைக் கண்டதும் இரண்டாகப் பிரிந்து வழி விட்டனர். எழுந்து அவர்கள் விட்ட வழியில் நடையைப் போட்டாள். தன் இடப்பக்கமும் வலப்பக்கமும் நின்றிருந்தவர்களில் ஒருவர் கூட அவள் சொந்தங்களாக இல்லை. அனைவரும் சக்தியின் உறவினர்கள். அம்முகங்களில் சக்தியைத் தேடினாள். ஆனால் அவன் தென்படவில்லை.. அவனைத் தேடிக் கொண்டே வந்தவள் ஒரு கல்லறையின் மீது கால் மோதி நின்றாள்.

உடல் முழுவதும் குப்பென வேர்க்க, ஏதோ குளிர்ச்சி உள்ளூறப் பறவ, பயம் கண்களை மறைக்க, விழிகளைத் தேய்த்துக் கல்லறையில் பொதிக்கப்பட்டப் பெயரைப் படிப்பதற்குள் கண் விழித்துக் கொண்டாள் உறக்கத்திலிருந்து.

Ooty
Ooty

நடுங்கும் உதகையின் பனிக்காலத்தில் வியர்த்திருந்த முகத்தைத் துடைத்துக் கொண்டு சுவர் கடிகாரத்தைப் பார்த்தாள். மணி 6 என்று காட்டியது.

“அனு… அனு… ஆபீஸுக்குக் கெளம்பலயா ?” அம்மாவின் குரல் அலை மோதிக் கொண்டிருந்தது வெளியே.

இந்தக் கனவு அவளைத் துறத்துவது இன்று புதிதல்ல. ஒவ்வொரு முறையும் கல்லறையின் பெயரைப் பார்ப்பதற்கு முன்னமே விழித்துக்கொள்வாள். இக்கனவு வரும் பொழுதெல்லாம் அவள் அமைதி தேட செல்லும் இடத்திற்கு, இன்றும் செல்ல தயாராக்கிக் கொண்டாள் மனதை.

தன் படுக்கையின் அருகில் உள்ள சிறுமேஜை தாங்கிக் கொண்டிருந்த போட்டோ ப்ரேமைப் பார்த்தாள். தினமும் காலையில் எழும் பொழுது ஒரு முறை, நாள் முடிந்து உறங்க வரும் பொழுது ஒரு முறை இப்புகைப்படத்தைப் பார்த்துக் கொள்வாள். சக்தியின் முகம் மறந்துவிடுமோ என்ற அச்சமோ என்னமோ தெரியவில்லை- இருவரும் காதலிக்கும் பொழுது எடுத்துக் கொண்ட புகைப்படம். திருமணம், ஆழம் தெரியாக் கடல் என அறியாத காலகட்டம் . காதலிக்கும் பொழுது இருவர் மட்டும் தான். திருமணம் நடந்த பின் பற்பல மனிதர்களின் ஆதிக்கம் தலைவிரித்தாடும் அன்றோ.

மலையும், அருவிகளும்,மேகம் போர்த்தியக் காற்றும் சொந்தமாகக் கொண்ட உதகையில் புகழ்பற்ற பல அருவிகள் நிறைந்திருக்கும் இடங்களை விட்டுவிட்டு இந்த அருவியைத் தேடி நான் ஏன் மறுபடியும் நடக்கிறேன் என்ற குழப்பத்திலேயே முன்னேறி நடந்தான் சக்தி.

பச்சைப்பசேல் என்று செழித்தோங்கிய பெயர் தெரியாத தாவரங்களின் நடுவே அமைந்திருந்த மண் தரையில் நடைபோட்டான். எத்தனை காதல் ஜோடிகள் இந்தப் பாதையில் கால் பதித்திருக்க வேண்டும், இவ்வழியை அமைத்திட என்று நினைத்துக் கொண்டான்.

‘நான் இந்தப் பக்கம் இருக்கிறேன்’ என்று கூறுவது போல அருவியின் ஒலி கேட்க அத்திசையில் திரும்பி நடந்தான்.

திடீரென 'சக்தி..’ என்று தன்னை அழைக்கும் குரல் கேட்டு திரும்பியவன் விழி முன் கருப்பு நிற உடலும், ஆரஞ்சு நிற மூக்கும்-கால்களும் கொண்ட இந்தியக் கருங்குருவி புல்லாங்குழல் இசை போல ஓசை எழுப்பி பாடிச்சென்றது.

தொடர்ந்து நடக்கையில் அருவியின் சாரல் அவ்வப்போது அவனை நனைத்து, அது எவ்வளவு உயரமான அருவி என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொண்டது.

வழியில் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறையே பூக்கும் நீலக்குறிஞ்சி அவனுடைய விழிகளை ஈர்க்க, அதைப் பறிக்கும் எண்ணத்தோடு நெருங்கினான். தடாலென ஒரு கம்பீரமான கொம்பு மான் ஒன்று புதருக்குள் இருந்து எழுந்து நின்று ‘இது எங்கள் சொத்து’ என்பது போல் அவனைப் பார்க்க, பூவைக் கொய்யும் எண்ணத்தை அங்கேயே புதைத்து விட்டு தொடர்ந்து நடந்தான்.

Representational Image
Representational Image

அருவியின் ஒலி முன்பை விட அதிகமாகக் கேட்க ‘நீ என்னை நெருங்கிவிட்டாய்’ எனக் கூறுவது போல் இருந்தது. அருவியைச் சென்றடைய ஒரு ஏழு எட்டு படிக்கட்டுகள் கட்டப்பட்டிருந்தன. பாதி ஏறும் பொழுது வெண்ணிற அருவியின் சாரல் மேலும் அவனை ஈரம் ஆக்கியது. கடைசி படிக்கட்டில் ஏறும் பொழுதுதான் உணர்ந்தான் தனக்கு முன் அங்கே ஓர் பெண் நின்றிகொண்டிருப்பதை. யாரென்று பேச்சுக் கொடுக்கலாம் என்று அவளை நெருங்கும் பொழுது இடி இடிப்பது போல ஓசை.

திடுக்கென முழித்தான்….

இடியல்ல…

“சக்தி.. சக்தி..” என்று கதவைத் தட்டும் ஓசை.

கனவில் கேட்ட அதே குரல் அவனை உறக்கத்திலிருந்து விழித்தெழச் செய்தது. சுவர் கடிகாரத்தைப் பார்த்தான்.

மணி 6 என்று காட்டியது.

தன் தலையணையின் உறைக்குள் பதுக்கி வைத்திருந்த புகைப்படத்தை எடுத்தான். அனுவும் அவனும்.. தினமும் ஏதோ புதிதாகப் பார்ப்பது போல பார்த்துக் கொள்வான். அப்புகைப்படத்தில் இருக்கும் அவனே அவனுக்கு புதிதாகத் தான் காட்சியளித்தான். அது புதிதா, இல்லை இன்று அவன் புதிதா என்று தினமும் கேட்டுக்கொள்வான்.

தொடர்ந்து கேட்டும் கதவோசைக்கு பதிலளிக்க கதவைத் திறந்தான். கண்ணகளில் நீர் வழிய தன் தங்கை புனிதா நின்று கொண்டிருந்தாள்.

“என்ன ஆச்சு ?”

“அண்ணா… அம்.. அம்மா... “ வாக்கியத்தை முடிப்பதற்குள் உடல் நலம் குன்றிய தன் தாயின் அறையை நோக்கி ஒடினான்.

“அம்மா…?”

தளர்ந்த உடலோடு படுத்திருந்த பார்வதி தன் மகனின் குரல் நோக்கித் தலையைத் திருப்பினார்.

“வா” என்று சைகையால் அழைக்க அருகே சென்றான்.

“ச...சக்தி… இப்புடி உக்காரு” மூச்சு இறைக்க ஆரம்பித்தது பார்வதிக்கு.

"அம்மா ஏன் ஸ்ட்ரெயின் பண்றீங்க. அமைதியா ரெஸ்ட் எடுங்க எல்லாம் சரி ஆயிடும் "

“எ… எதுவும் சரி ஆகாது. என் உயிர் போ…போனாதா சரி ஆகும். ஆ..ஆனா நான் செஞ்ச பா..பாவத்த சரி செய்யாம அதுவும் லேசுல போகாது.”

“...........???!!!!”ஒன்றும் புரியாமல் முழித்தான் சக்தி.

விழிகளில் கண்ணீர் கசிய தன் தலையணையின் அடியில் இருந்து ஒரு பொட்டலத்தை எடுத்து சக்தியின் கையில் திணித்தார்.. என்னவென்று திறந்து பார்த்த சக்தி, நெஞ்சில் ஓடி இறங்கியது போல் எழுந்து நின்றான்.

“இ..இ.. இது அனுவோட நெக்லஸ்!!!”

“என்னய மன்னிச்சிடுப்பா” என்று கை இரண்டையும் கூப்பினார் பார்வதி.

"அம்மா… அப்போ இத நீங்க தான் எடுத்தீங்களா மா?”

மௌனத்தின் துணையால் 'ஆம்' என்று கண்ணீர் வடித்தார்.

தன் தந்தையும் தங்கையும் நிற்கும் திசை நோக்கி திரும்பியவன், “ இத அம்மா தான் எடுத்தாங்கனு உங்களுக்கும் தெரியுமா?” என்று கர்ஜித்தான்.

மேலும் இரண்டு மௌனங்கள்...

“ நீங்க எல்லாரும் பண்ணின தப்புக்கு தண்டனை அனன்யாவுக்கா?. அவள நம்ப மறுத்ததுக்கு என்னையும்..

கடவுளே.. என்னைய நேசிச்சதுக்கு அவளுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா மா? உங்க எல்லாரோட கனவையும் நான் என் தோள்ல தூக்கி சுமந்தனே. அண்ணன் வாழ்க்கை பாழாப் போறதப் பாத்து உனக்குக் கூட உண்மைய சொல்லத் தோனலயா?. “

அவன் அடுக்கிய கேள்விகளுக்கு பதில் சொல்ல மூவருமே தயாராக இல்லை. அவன் அவர்களின் பதில்களை எதிர்பார்க்கவும் இல்லை.

அவர்களோடு மேலும் அங்கே நிற்க அவனுடைய உடம்பு கூசியது. அவன் மீதே வெறுப்பு உண்டாக வீட்டை விட்டு வெளியே நடந்தான்..

அனன்யாவிற்கும் சக்திக்குமான இடைவெளி இன்றோடு பத்து வருடங்கள். பத்து வருடங்களாக அவன் கால் பதிக்காத இடத்தை நோக்கி நடந்தான், இருவரும் பிரிந்த அந்த நாளை நினைவுக் கிடங்கில் இருந்து எடுத்து மென்று கொண்டே…

அனன்யாவின் பிறந்த நாள் அன்று. நகையைக் காணவில்லை என்று பதறியோடி வந்தாள்.

“டென்ஷன் ஆகாம தேடு. எங்காவது மறந்து வச்சிருப்ப”

“இல்ல சக்தி. எல்லா எடத்துலயும் தேடிட்டேன். “

“அவ அம்மா வீட்டுக்குப் போனா இல்ல போன மாசம், அங்க குடுத்திட்டு வந்திருப்பா நமக்குத் தெரியாம.”- பார்வதியின் குரல்.

“குடுக்குற கை எது, எடுக்குற கை எதுன்னு எனக்கு நல்லாவே தெரியும்”- அனன்யாவின் வாதம்.

Representational Image
Representational Image

இடையில் புனிதா பாய்ந்தாள்,

“அண்ணி என்ன? எங்கம்மா மேல பழி போடுறீங்களா ?” என்று எண்ணெய் ஊற்ற,

“என்னப்பா உன் அம்மாவுக்கே திருட்டுப் பட்டம் குடுக்குறா, நீ பாத்துட்டு சும்மா நிக்குற?” என்று தந்தை பற்றி வைத்தார்.

இவர்கள் பேதியதை விட சத்தமாக ஒலித்த சக்தியின் மௌனத்தைத் தாங்கிக் கொள்ளாமல் அனன்யா கூறிய கடைசி வார்த்தைகள் அவன் முன் மின்னலாய் வந்தது,

“என் மேல நம்பிக்கை இல்லை இல்ல சக்தி உனக்கு. உன் அம்மா என்கிட்டக் கேட்டிருந்தா நானே குடுத்திருப்பேன். இதுக்கு சாட்சி உன் அம்மா மட்டும் தான். அவங்களே சொன்னா தான் உண்டு. இருட்டுல செய்யப்பட்டது வெளிச்சத்துக்கு கண்டிப்பா ஒரு நாள் வரும். நான் போறேன்.” என்று கூறிவிட்டு அவள் பிரிந்து சென்று இன்றோடு பத்து வருடங்கள் ஆகிவிட்டன.

******

பதினைந்து கிலோ மீட்டர் தூரம் வெறும் காலிலேயே உதகை குளிரில் நடந்தே சென்றான்.

பூமிக்குள் புதையும் அளவிற்கு கால்களை மண்ணில் அழுத்தி நடை போட்டான். புதர்களையும் பச்சைச் செடிகளையும் தாண்டி ஓடினான். பத்து வருடங்களாக அவன் மேல் படாத அந்த குளிர் சாரல் பட நெஞ்சம் அடைத்தது.. கேட்க மறுத்த அருவியின் சத்தம் காதில் விழுந்த நொடி ‘ஓ' வென்று அழுதான்.

“அய்யோ எவ்வளவு பெரிய தப்புப் பண்ணிட்டேன்” என்று கதறிக்கொண்டே அருவிக்குச் செல்லும் படிக்கட்டுகளில் ஏறினான்.

அவனுக்கு முன் அங்கே ஒரு பெண் உருவம் அருவியைப் பார்த்தடி நின்றிருப்பதைக் கண்டான்.

காலையில் கண்ட கனவு நினைவுக்கு வர, தயங்கிக் கொண்டே,

“ அ .. அ .. அனு” என்றழைத்தான்.

பத்து வருடங்களாக இவ்வொற்றை வார்த்தை வரும் குரலுக்காக இந்த அருவியின் முன்பு எத்தனை நாள் காத்திருந்திருப்பாள்.

திரும்பிப் பார்க்காமலேயே “சக்தி” என்று அழ ஆரம்பித்தாள்.

அவள் முன் வந்து நின்றவன்,” அனு அ., அனு ஐ அம் சாரி. என்னய மன்னிச்சிடு.” என அவள் முன் மண்டியிட்டான்.

“பத்து வருஷ காலமா லேட்டா வருவ?” என்று கேட்டு அவனோடு மண்டியிட்டாள்.


தன் கையில் இருந்த அனன்யாவின் நகையைக் கொடுத்தான். 


இருவரும் சந்தோஷமாக இணைய, பார்வதியின் உயிரும் நிம்மதியாகப் பிரிந்தது....


கனவுகள்  நிஜமாயின....


-மலர்விழி மணியம்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.