Published:Updated:

ஓவியம்! | சிறுகதை | My Vikatan

Representational Image

கொடுத்திருக்கும் அட்வான்ஸ் ரூம் வாடகைக்கு சரியாகப் போய்விடும் என்றும், கிளம்பும் அவசரத்தில் வரமுடியாமல் போகலாமென்பதால் இன்று வந்து பார்த்துவிட்டு போக வந்ததாகவும் கூறினான்.

ஓவியம்! | சிறுகதை | My Vikatan

கொடுத்திருக்கும் அட்வான்ஸ் ரூம் வாடகைக்கு சரியாகப் போய்விடும் என்றும், கிளம்பும் அவசரத்தில் வரமுடியாமல் போகலாமென்பதால் இன்று வந்து பார்த்துவிட்டு போக வந்ததாகவும் கூறினான்.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

"இங்க பெயிண்டர் ஆறுமுகம்…?"

"என்ன வேணும் சொல்லுங்க".

"இல்ல, பெயிண்டரைப் பாக்கணும்".

"நாந்தான்… சொல்லுங்க".

இப்போது ஊன்றிப் பார்த்தான் அவரை. வயது நாற்பதுக்கு மேலோ, ஐம்பதுக்கு மேலோ… தெரியவில்லை. பரட்டையாய்க் கலைந்து ஆங்காங்கே வெள்ளைத் துகள் அப்பியிருந்தத் தலையில் நரை தனியாய்த் தெரிந்தது. பெயிண்டர்களுக்கே உரித்தான ஒரு பழைய பெயிண்ட் கறைகள் அப்பிய டி-ஷர்ட்டும் லுங்கியும் அணிந்திருந்த அந்த ஒடிசலான உருவத்தைப் பார்த்ததில் அவனுக்கு சற்று சந்தேகம் வந்தது, அவனுக்கு வேண்டிய காரியத்தை முடித்துக் கொடுப்பாரா எதிரில் இருப்பவர் என்று.

"படம் …" என்று இழுத்தான்.

"படம் வரையணுமா?" என்று கேட்டார் பெயிண்டர்.

ஆமென்று தலையசைத்தான்.

"இந்த வயசுலயேவா?"

அந்தக் கேள்விக்கு பதில் ஏதும் அவனிடம் இல்லாததால் அமைதியாய் இருந்தான்.

"மத்ததெல்லாம் முயற்சி பண்ணிட்டியா?"

மறுபடியும் ஆமென்று தலையசைத்தான்.

"குடும்பம்?"

"அண்ணன் மட்டும். அம்மா அப்பா போய்ச் சேந்துட்டாங்க".

"பொண்டாட்டி, புள்ள?"

"யாரும் இல்ல".

"ம்ம்ம்… பொண்டாட்டி, புள்ள இருந்தா படம் வரைஞ்சு தரமாட்டேன்".

"இல்லீங்க. அப்பிடி எந்த நெனப்பும் கூட இதுவரைக்கும் வரல".

"உன்ன நம்பி வேற யாரும் இருக்காங்களா? அண்ணன் எப்பிடி?"

"அண்ணனுக்குக் கல்யாணம் ஆகி ஒரு பையன் இருக்கான். ஏதோ அவங்க அளவுல அவங்க இருக்காங்க. என்னய நம்பி அவங்க இல்ல. அவங்கள நம்பித்தான் இத்தனை நாளு நான் இருந்தேன். இனியும் அவங்களுக்கு பாரமா இருக்க வேணாம்னு தான்…".

Representational Image
Representational Image

"சாவறதுக்கு முயற்சி பண்ணியா?"

"அதுக்கு தைரியம் இருந்தா நான் ஏன் உங்ககிட்ட வரப்போறேன்?"

மேலும் கீழும் அவனைப் பார்த்தார் பெயிண்டர் ஆறுமுகம். முப்பதைத் தொடாத வயது. கிடைக்கும் போது கிடைப்பதை சாப்பிடுவதைக் காட்டும் தேகம். துவைத்து துவைத்து இற்றுப்போன துணிகள். முகத்தில் மூன்று நாள் தாடி. அவரைப் பார்க்க வருவதற்காக மண்டிக் கிடந்த முடியில் அரக்கப் பரக்க இழுத்த சீப்பின் அறிகுறி. அவரைப் ப்ரத்யேகமாகத் தேடி வருபவர்களின் கண்களில் ததும்பி வழியும் தப்பிக்க வழியில்லாமல் அகப்பட்டுக்கொண்ட மிரட்சி. இவரைப் பற்றி எப்படித் தான் தெரியுமோ? எப்படியாவது தேடி வந்துவிடுகிறார்கள் இவனைப் போல்.

"சரி, போட்டோ வேணுமே. வச்சிருக்கியா?"

"போட்டோவா?"

"பாத்து வரைய".

"இல்லீங்களே".

"அது இல்லாம எப்பிடி? போயி ஒனக்கு பிடிச்ச போட்டோ ஏதாவது இருந்தா எடுத்துட்டு வா".

"எங்கிட்ட எதுவும் இல்லீங்களே".

"அப்ப உங்க அண்ணங்கிட்ட இருக்கான்னு கேளு. போட்டோ இல்லாம முடியாது".

"சரிங்க".

"எடுத்துட்டு வீட்ல வந்து பாரு. இடம் ஞாபகம் இருக்குல்ல?"

"ம். அங்கதான் போனேன். உங்க வீட்ல தான் இங்க அனுப்புனாங்க".

Representational Image
Representational Image

வேறு எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்தான். சற்றுத் தூரம் சென்றபின் திரும்பிப் பார்த்தான். பெயிண்டர் ஆறுமுகம் பாதியில் விட்ட காம்பௌண்ட் சுவரின் பெயிண்டிங் வேலையைத் தொடர்ந்துகொண்டிருந்தார். சற்று நேரம் அவரையே சிந்தனையுடன் பார்த்துக்கொண்டிருந்தவன் சட்டென்று தலையை உதறிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். தெருவின் முனையைத் திரும்பியதும் அண்ணனுக்கு அலைபேசியில் மிஸ்டு கால் கொடுத்தான். அவன் அலைபேசியில் பேலன்ஸ் தீர்ந்து வெகு நாட்களாகியிருந்தது.

"என்னடா, ரெண்டு நாளா போனே காணோம்?" என்றான் அண்ணன் அடுத்த இரண்டு நிமிடங்களில்.

"இல்லண்ணே, நேர்ல வரலாம்னு தான்…"என்று மழுப்பினான்.

"சரி, ராத்திரி சாப்புட வந்துடு" என்றபடி போனைக் கட் செய்தான் அண்ணன்.

"என்னங்க, தம்பி நேர்ல வர்றாராக்கும்?" என்றாள் கோமதி.

"ம்".

"பணம் வேணும்னாதான் வீட்டுக்கு வருவாரு. இன்னும் குடுக்க நம்மகிட்ட மட்டும் ஏதுங்க?"

"வாஸ்தவந்தான். ஆனா அவனுக்கு நம்மள விட்டா வேற யாரு இருக்கா, கோமு?"

"வாஸ்தவந்தான். அவருக்கு நம்மள விட்டா யாரும் இல்ல. நமக்கும் நம்மள விட்டா வேற யாருங்க இருக்காங்க?"

Representational Image
Representational Image

"என்ன கோமு பண்ணறது? அம்மா அப்பா போனதுக்கப்புறம் சின்ன வயசுல இருந்து நான் தூக்கி வளர்த்த பையன். உனக்குத் தெரியாததா? நீதான சொல்லுவ, தம்பிதாங்க நமக்கு மூத்த புள்ளைன்னு".

"ஆமாங்க. இல்லைன்னு சொல்லலையே. ஆனா ஒரு விஷயம் நீங்க புரிஞ்சுக்கலையோன்னு தோணுது. கன்னுக்குட்டியைத் தூக்கி சுமக்கலாம். காளை மாட்ட தூக்கி சுமக்க முடியாது".

"எனக்கும் தெரியாம இல்ல, கோமு. பாவம், அவனும் என்னதான் பண்ணுவான்? படிப்பு வரல. உடம்பும் நோஞ்சான். படிச்சவன் பாக்குற வேலைக்கும் போகமுடியலை, படிக்காதவன் உழைக்கிற உழைப்புக்கும் உடம்பு இல்ல. வச்சுக் குடுத்த கடைய நடத்தவும் சாமர்த்தியம் பத்தலை. போட்ட முதலும் போயி, இப்பக் கடன் தான் நிக்குது".

"அந்தக் கடன் அவரு தலைல இல்ல. நம்ம தலைல. அது நாம வாங்குன கடன். அத அடைக்கறதுக்கே இன்னும் எத்தனை வருஷம் ஆகுமோ? அடைச்சப்புறம் நாம கொஞ்சம் மிச்சம் பிடிச்சு நம்ம பையன் எதிர்காலத்துக்கு பாக்கணும்".

"எனக்கும் தெரியுது, கோமு. இப்ப என்ன பண்ண சொல்ற? வீட்டுக்கு வரேன்னு சொல்றவன வரவேண்டாம்னா சொல்ல முடியும்? அவன் வேற எங்க போவான்?"

"தம்பிய வீட்டுக்கு வரவேண்டாம்னு நான் சொல்றதா நீங்க நெனச்சிட்டு என்னய கல்நெஞ்சக்காரி ஆக்காதீங்க. நான் சொல்ற ஒரே விஷயம் இது தான் - காசு, பணம்னு இன்னும் குடுக்கறதுக்கு நம்மகிட்ட எதுவும் இல்ல. வேணும்னா அவரு இருக்கற ரூமைக் காலி பண்ணிட்டு ஒரேடியா இங்க வந்து இருக்கட்டும். பாக்கி இருக்கற ரூம் வாடகையை வேணா நம்ம குடுத்துடலாம். அதோட போகட்டும் பணம். நாம சாப்பிடுற சாப்பாட்டை அவரும் சாப்பிடட்டும். எவ்வளவு நாள் நம்மளால முடியுமோ அவ்வளவு நாள் நாம பார்த்துக்குவோம். ஆனா காசா, பணமா நயா பைசா குடுக்கறதுக்கு இனிமே நான் சம்மதிக்க மாட்டேன்".

Representational Image
Representational Image

"நீ சொல்றதும் சரிதான், கோமு. ரூம் அட்வான்ஸ் போக வாடகை எவ்வளவு பாக்கி இருக்குன்னு கேட்கலாம். இன்னிக்கு அவன் வரட்டும். அவன்கிட்ட பேசி ஒரு முடிவுக்கு வந்துடலாம்".

இரவு ஏழு மணி வாக்கில் வீட்டிற்கு வந்தவன் அதிசயமாய் இனிப்புகளும் அண்ணன் மகன் சுரேஷிற்கு சாக்லெட்டுகளும் வாங்கி வந்திருந்தான். அண்ணனையும் அண்ணியையும் நிற்கவைத்துக் கால்களில் விழுந்து வணங்கினான். தனக்கு வெளியூரில் ஒரு வேலைக் கிடைத்திருப்பதாகவும், நண்பனுக்கு நண்பனின் கம்பெனியில் செக்யூரிட்டி வேலைக்குச் சேர்ந்திருப்பதாகவும் ஓரிரு நாட்களில் கிளம்ப வேண்டும் என்றும் கூறினான்.

கொடுத்திருக்கும் அட்வான்ஸ் ரூம் வாடகைக்கு சரியாகப் போய்விடும் என்றும், கிளம்பும் அவசரத்தில் வரமுடியாமல் போகலாமென்பதால் இன்று வந்து பார்த்துவிட்டு போக வந்ததாகவும் கூறினான். 'அந்த வேலையை இங்கேயே செய்யக்கூடாதா, ஏன் வெளியூர் செல்ல வேண்டும்', என்று கேட்ட அண்ணனிடம் அவனை முந்திக்கொண்டு அவன் அண்ணி, 'போயிட்டு வரட்டுங்க. அப்பத்தான் உலகம் தெரியும்', என்று கூறியதை அவசரமாக அவனும் தீவிரமாக ஆமோதித்தான்.

தங்குமிடம், உணவு என்று விசாரித்த அண்ணனிடம் எல்லாம் கம்பெனியேப் பார்த்துக்கொள்ளுவதாகக் கூறினான். சற்றுக் கவலையுடனேயே அவனைப் பார்த்துக்கொண்டிருந்த அண்ணனிடம் எதுவும் கவலைப்பட வேண்டாமென்றும் போகும் இடம் மிகவும் நல்ல இடமென்றும் கூறி அவனை சமாதானப்படுத்தினான்.

Representational Image
Representational Image

அதிசயமாய் அன்றிரவு உணவு சிரிப்பும் பேச்சுமாய் முடிந்தது. தூக்கக் கலக்கத்தில் சொக்கி விழுந்த சுரேஷை கவனமாய்த் தூக்கிச் சென்று படுக்கையில் கிடத்திவிட்டு அண்ணனுடன் முன் அறைக்கு வந்தான்.

"ஏண்ணே, போட்டோ ஆல்பம்ன்னு ஏதாச்சும் உங்கிட்ட இருக்கா என்ன?" என்று கேட்டான்.

ஆச்சர்யமாய் அவனைப் பார்த்த அண்ணனிடம், "இல்லண்ணே, அம்மா அப்பா முகமே மறந்துபோச்சு. ஏதாவது போட்டோ இருந்தா ஊருக்கு எடுத்துட்டுப் போலாம்னுதான் கேட்டேன்", என்றான்.

பீரோவிலிருந்து ஒரு பழைய ஆல்பத்தை எடுத்து வந்த அண்ணனிடமிருந்து ஆவலாய் அதை வாங்கினான். அருகில் அமர்ந்த அண்ணன் அதில் இருக்கும் போட்டோக்களைப் பற்றி ஒவ்வொன்றாய் சொல்லிக்கொண்டே வர சுவாரஸ்யமாய் கேட்பது போல் பார்த்துக்கொண்டே வந்தான். அநேகமாய் எல்லாம் கல்யாண வீடுகளிலும் ஏதாவது விசேஷங்களிலும் எடுத்த போட்டோக்களாய் இருந்தன. எந்தப் போட்டோவும் அவன் எதிர்பார்த்த மாதிரி இல்லை என்பதால் அடிவயிற்றில் கூடிக்கொண்டே செல்லும் கலக்கத்துடன் பக்கங்களைத் திருப்பிக் கொண்டே வந்தவனின் பார்வை சட்டென்று நின்றது ஒரு போட்டோவில்.

"இது எப்பண்ணே எடுத்தது?" என்றான் அந்த போட்டோவைக் காட்டி.

"இது நம்ம பக்கத்து வீட்டு சுந்தரம் மாமா எடுத்தது. அப்பா சொல்லியிருக்காரு. ஞாபகம் இருக்கு", என்றபடி பிளாஸ்டிக் கவரிலிருந்து அந்த போட்டோவை அவன் அண்ணன் வெளியே எடுத்தான்.

போட்டோவில் அவர்கள் வீட்டின் முகப்புத் தெரிந்தது. அப்பாவும் தாத்தாவும் ஆளுக்கொரு திண்ணையில் அமர்ந்திருக்க, அப்பாவின் அருகே தலைவாசல் நிலையில் சாய்ந்துகொண்டு அம்மா நின்றிருந்தார். மூவரின் கண்களும் வாசலின் முன் தெருவில் கோலி விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களின் மீது பதிந்து, முகங்களில் புன்னகையை அப்பிவிட்டிருந்தது.

ஏழு-எட்டு வயது சிறுவர்கள் ஏழு பேர் தெருவில் கிடந்த கோலி குண்டுகளை சுற்றி குத்துக்காலிட்டு அமர்ந்திருக்க, ஒரு சிறுவன் ஒரு கோலியைக் குறி வைத்து அவனுடைய கோலிக்குண்டால் அதைத் தாக்குவதற்கு ஒரு கண் மூடி இடது கையை நீட்டி வலது கையைத் தூக்கியபடி நின்றுகொண்டிருந்தான்.

Representational Image
Representational Image

சுற்றி அமர்ந்திருந்த சிறுவர்கள் ஆறு பேர் முகங்களில் அவன் அடித்துவிடக்கூடாதே என்ற பதட்டம் அப்பட்டமாகத் தெரிய, ஒருவன் மட்டும் 'விட்றாத, அடி', என்பதான பாவனையுடன், நிற்கும் சிறுவனைப் பார்த்துக்கொண்டிருந்தான். கோலியை அடிப்பதற்கு நிற்கும் சிறுவன் அவன் தான் என்றும், 'விட்றாத, அடி', என்பதான பாவனையுடன் இருப்பவன் அவனுடைய அண்ணன் என்றும் அவனுக்குத் தெரிந்தது. மற்றவர்கள் அவன் நினைவில் இல்லை.

"சுந்தரம் மாமா மொதமொதல்ல செல்போன் வாங்குனப்ப அதுல என்னல்லாம் இருக்குன்னு காட்டுறதுக்காக இந்தப் போட்டோவை எடுத்து நம்ம வீட்ல காட்டிருக்காரு. செல்போன்ல போட்டோவைப் பாத்ததும் அம்மா அப்பாகிட்ட அது போட்டோவா வேணும்னு கேட்டிருக்காங்க. அப்பா சுந்தரம் மாமாட்ட சொல்ல, அவரு அதப் பிரிண்ட் போட்டுக் கொண்டுவந்து குடுத்துட்டாரு", என்றபடி அந்தப் போட்டோவை அவனிடம் நீட்டினான் அண்ணன்.

"இதுல தான் நாம எல்லோரும் இருக்கோம். மத்ததெல்லாம் சும்மா விசேஷ வீட்டு போட்டோ தான். இத எடுத்துட்டு போ. அம்மா, அப்பா, தாத்தா எப்பவும் கூட இருக்கற மாதிரி இருக்கும்".

இரண்டு கைகளில் பயபக்தியுடன் வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டான் அவன். விடைபெறும் முன் அண்ணனையும் அண்ணியையும் நிற்க வைத்து மறுபடியும் கால்களில் விழுந்து வணங்கி திருநீறு பூசிவிடச் சொன்னான். அண்ணனுக்குத் தொண்டை அடைக்க, அண்ணி கம்மிய குரலில், "போற எடத்துல நல்லா இருங்க, தம்பி", என்று நா தழுதழுக்க ஆசிர்வதித்து வழியனுப்பி வைத்தார்.

மறுநாள் காலை வெகு சீக்கிரமே பெயிண்டர் ஆறுமுகத்தின் வீட்டிற்குச் சென்றான், அவர் வேலைக்குக் கிளம்பும் முன் அவரைப் பார்த்து போட்டோவைக் கொடுத்துவிட வேண்டும் என்ற அவசரத்துடன். அவர் வீட்டு வாசலில் காத்து நிற்கும் போது அவனுக்குத் தோன்றியது இவர் பெயிண்டர் வேலை பார்க்கும் ஓவியரா அல்லது ஓவியர் வேலை பார்க்கும் பெயிண்டரா என்று. எது எப்படியோ, தனக்குப் படம் கிடைத்தால் போதும் என்ற நினைப்புடன் போட்டோவை அவரிடம் கொடுத்தான்.

ஒன்றும் சொல்லாமல் அமைதியாய் போட்டோவை வாங்கிப் பார்த்தவர், "மூணு நாளு கழிச்சு வந்துப் படத்த வாங்கிட்டுப் போ", என்றார்.

"மூணு நாளா?" என்றவனிடம், "இத்தனை பேரையும் படம் போடணுமில்ல?" என்றார்.

"சரி", என்றுத் திரும்பிச் செல்ல இருந்தவனிடம், "வரப்போ ஒரு ரூபா கொண்டுட்டு வா. படத்த சும்மா தரமாட்டேன்", என்றார்.

மூன்று நாட்கள் கழித்து ஒற்றை ரூபாயுடன் மறுபடியும் பெயிண்டர் ஆறுமுகத்தின் வீட்டு வாசலில் காத்திருந்தவனிடம் நாணயத்தை வாங்கிக்கொண்டு பழைய செய்தித்தாளில் சுற்றிய சுருள் ஒன்றை நீட்டினார்.

"போற எடத்துல நீ நெனைக்கற மாதிரி இல்லைன்னா என்ன பண்ணுவ? போனா போனதுதான். திரும்பி வர முடியாது", என்றார் நீட்டிய சுருளை அவனிடம் முழுதும் கொடுக்காமல் கையில் வைத்துக்கொண்டே.

ஒன்றும் சொல்லாமல் மௌனமாய் தலை கவிழ்ந்து இருந்தவனை ஒரு கணம் ஊன்றிப் பார்த்தார் பெயிண்டர் ஆறுமுகம்.

"ஆக வேண்டிய காரியத்தையெல்லாம் முடிச்சிட்டுக் கடைசியாப் படத்தப் பிரி", என்றபடி அவனிடம் சுருளைக் கொடுத்துவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் வீட்டிற்குள் சென்றுக் கதவைத் தாழிட்டார்.

ரூமுக்கு வந்து ஆக வேண்டிய காரியங்கள் என்னென்ன என்று யோசித்தான். எதுவும் இல்லை. தெரிந்தவர்கள் சிலரிடமாவது அண்ணனிடம் சொன்னதையே சொல்லலாமா என்று யோசித்தான். வேண்டாம், தேவையற்றக் கேள்விகள் வரும். அவற்றை சமாளிக்க மேலும் மேலும் ஏதாவது கதைகள் சொல்லவேண்டி வரும் என்று அந்த யோசனையையும் விட்டான். அண்ணனைத் தவிர அவனைத் தேடுபவர்கள் யாரும் இல்லை என்பதும், அவனது இருப்பையே இரு நாட்களில் அவனைத் தெரிந்தவர்களும் கூட மறந்துவிடுவார்கள் என்பதும் அவனுக்குத் தெரிந்துதான் இருந்தது.

சட்டென்று ஆயாசம் அப்பியது அவனை. விவரம் தெரிந்ததிலிருந்து வாழ்க்கையோடு, வாழ்க்கைக்காக என்று போராடிப் போராடி ஓய்ந்து போயிருந்தான். வாழ்வுக் களத்தில் நிராயுதபாணியாக நின்றது மட்டுமல்லாமல் வாழ்வின் தாக்குதல்களையும் வாள் வீச்சுக்களையும் தடுக்கும் திராணியும் கூட வற்றிப் போய், போர்க் கைதியாகி நின்று கொண்டிருந்தான்.

கொண்டு வந்தக் காகித சுருளை ஓரத்தில் இருந்த காலுடைந்த மேஜையில், சிதறிக் கிடந்தப் பொருட்களை அள்ளி மூலையில் போட்டுவிட்டு, நடு நாயகமாக வைத்தான். இருப்பதிலேயே கொஞ்சம் சுமாராக இருக்கும் சட்டையையும் பேண்ட்டையும் எடுத்துக்கொண்டு குளித்து அவற்றை உடுத்தி வந்தான். கதவை உள்பக்கமாக தள்ளினால் திறந்துகொள்ளும் படி லேசாகத் தாழிட்டுவிட்டு வந்து மேஜையின் முன் நின்றான்.

செய்தித்தாளைப் பிரித்துக் கசக்கி மூலையில் எரிந்து விட்டு அவன் கொடுத்த போட்டோவைப் பார்த்து பெயிண்டர் ஆறுமுகம் வரைந்து கொடுத்தப் படத்தைப் பிரித்தான். போட்டோவை விட தத்ரூபமாக இருந்தது ஓவியம். மேஜை முழுக்க விரிந்திருந்த ஓவியத்தில் அம்மாவும் அப்பாவும் தாத்தாவும் கவலை இல்லாமல் சிரித்துக்கொண்டிருந்தார்கள். சூரிய ஒளியில் தெருவில் இருந்த புழுதித் துகள்கள் காற்றில் மின்னிப் பறந்தன. அமர்ந்திருந்த சிறுவர்களின் நெற்றியிலும் கன்னங்களிலும் வியர்வைத் துளிகள் வடிந்தன. நெஞ்சு விம்மியது அவனுக்கு. கவலையில்லாத வாழ்வின் உருவமாய் இருந்தது அந்த ஓவியம்.

கண்ணில் திரண்ட துளி இமை தாண்டி வடிய, கோலிக்குண்டை குறிபார்க்கும் தன் உருவத்தின் மீது ஆசையாய்க் கை வைத்துத் தடவினான். தடவிய அவன் கை தீட்டப்பட்டிருந்த ஓவிய வண்ணங்களில் கரைந்து கலக்க, சட்டென்று உள்ளிழுக்கப்பட்டுக் காணாமல் போனான் ஓவியத்தினுள்.

______________________________________

-கா. தாஸ்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.