Published:Updated:

அந்த அரை மணி நரகம்! | My Vikatan

பாம்பு

அவன் அப்பா உயிரோடு இருக்கும்போது அடிக்கடி சொல்வார், ' நீ வாழ்க்கையில் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால், மூன்று இடங்களுக்குப் போகாமல் இருக்க வேண்டும். ஆஸ்பத்திரி, போலீஸ் ஸ்டேசன் மற்றும் கோர்ட்.'

அந்த அரை மணி நரகம்! | My Vikatan

அவன் அப்பா உயிரோடு இருக்கும்போது அடிக்கடி சொல்வார், ' நீ வாழ்க்கையில் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால், மூன்று இடங்களுக்குப் போகாமல் இருக்க வேண்டும். ஆஸ்பத்திரி, போலீஸ் ஸ்டேசன் மற்றும் கோர்ட்.'

Published:Updated:
பாம்பு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

கோர்ட்டிலிருந்து பஸ் ஸ்டேண்ட் வருவதற்கே தங்கராசுக்கு மணி நான்காகிவிட்டது. காலை பத்து மணியிலிருந்தே கோர்ட் வராண்டாவில் காத்திருக்க வைத்து விட்டார் அவனின் வக்கீல். கடைசியாக மூன்று மணிக்குத்தான் கேஸ் வந்தது. அதுவும் வாய்தாவில் முடிந்து விட்டது. காத்திருந்த களைப்புடன், பசியும் சேர்ந்து கொண்டு அவனை வாட்டியது. மதிய உணவிற்கு வக்கீல் கூப்பிட்டபோதுகூட‌, தான் காலை, இரவு இரண்டு வேலை மாத்திரமே சாப்பிடுவது வழக்கம் என்று கூறி தப்பித்துக் கொண்டான். காரணம் அவருடன் சென்றால் அவருக்கும் சேர்த்து சாப்பாடு டோக்கன் அவன் வாங்க வேண்டும். சில சமயம் தன் வக்கீல் நண்பரையும் கூட்டிக் கொண்டு வந்து விடுவார். தன் சொந்த செலவென்றால் கோர்ட் கேண்டீனில் சாப்பிடும் அவர், கிளையண்ட் சிக்கிக்கொண்டால் அருகிலுள்ள நான் வெஜ் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்வார். சாப்பாட்டு பில், அவன் தோட்டத்தில் விளையும் ஒரு மூட்டை மிளகாய் விற்றால் கிடைக்கும் காசுக்கு இணையாக‌ வந்துவிடும்.

அவன் அப்பா உயிரோடு இருக்கும்போது அடிக்கடி சொல்வார்,

' நீ வாழ்க்கையில் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால், மூன்று இடங்களுக்குப் போகாமல் இருக்க வேண்டும். ஆஸ்பத்திரி, போலீஸ் ஸ்டேசன் மற்றும் கோர்ட்.'

தங்கராசு மூன்றுக்கும் போய் வந்து விட்டான், பக்கத்துத் தோட்டத்துப் பங்காளி பரமசிவத்துடன் ஏற்பட்ட வாய்க்கால் தண்ணீர் பங்கிடும் தகராறில்.

வாய்க்கால்
வாய்க்கால்

ஐந்து மணிக்கு அவனின் ஊருக்கு நேரடி பஸ் உண்டு. அதை விட்டால் அப்புறம் போகும் பஸ்கள் எல்லாம் ஒரு கிலோ மீட்டர் தள்ளி சுற்றுப் பாதையில் செல்லும். எப்படியும் ஐந்து மணி பஸ்ஸைப் பிடித்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான் தங்கராசு. இன்னும் நேரம் இருக்கிறது. நடக்கும் வழியில், ஒரு கடையில் சூடாகப் போட்டுக் கொண்டிருந்த பஜ்ஜி வாசம் அவனை இழுத்தது.

காலையில் ஏழு மணிக்கு வீட்டில் பழையது குடித்துக் கிளம்பியது. வெறும் வயிறு அவ்வப்போது பொறுமியது. வீடு போய்ச் சேர மணி ஆறாகலாம். ஒரு பஜ்ஜியும், டீயும் குடித்தால் சமாளித்து விடலாம். அவனைக் கேட்காமலேயே கால்கள் கடைக்குள் நுழைந்தன. சிறிய தட்டில், வாழை இலையை நறுக்கி வைத்து, இரண்டு பஜ்ஜியும், வெள்ளை நிற தேங்காய் சட்னியும் கொடுத்த அந்த சப்ளையர், தெய்வத்தின் மறு உரு போல் தோன்றினான் தங்கராசுவுக்கு. ஒரு பஜ்ஜி போதும் என்று சொல்ல நினைத்தாலும், பஜ்ஜியின் பொன் நிறத்தோடு கூடிய வாசனையும், அதன் ஜோடியான சட்னியும் அவனைச் சொல்ல விடவில்லை.

சாப்பிட்டு விட்டு, ஒரு டீயும் குடித்து முடித்தபோதுதான் அவன் கண்களில் ஒளியே வந்தது. அவசர அவசரமாக பஸ் நிற்கும் இடத்திற்கு வந்தான் தங்கராசு. நல்லவேளை பஸ் கிளம்பத் தயாராக நின்றது. பஸ்சுக்குள் ஏறிப் பார்த்தபோது நடுவில் மூன்று பேர் அமரும் சீட்டில், ஒரு சீட் காலி இருப்பது தெரிந்து, பரபரப்புடன் விரைந்து அந்தச் சீட்டில் அமர்ந்தான். காலையில் இருந்தே காத்திருக்கும் கொக்கைப் போல கோர்ட்டில் நின்று சலித்த கால்கள், மீண்டும், முக்கால் மணி நேரம் பஸ்ஸில் நிற்கத் தயாராய் இல்லை.

பக்கத்தில் பார்த்தான். சட்டையில்லாமல்,வெற்றுடம்புடன், காந்தி கட்டியிருப்பதைப் போல வேட்டியைச்சுருட்டிக் கட்டிக் கொண்டு அமர்ந்து இருக்கும் மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அவரின் பக்கத்தில், காதுகளில் தொங்கும் ஏராளமான தோடுகளுடன், வெற்றிலை எச்சில் வடிய தூங்கிக் கொண்டிருந்த பெண்மணி அவர் மனைவியாக இருக்க வேண்டும். அந்த மனிதன் மடியில் ஒரு வட்டமான மூங்கில் கூடையை வைத்து, அதன் மேல் தன் கைகள் இரண்டையும் வைத்துக் கொண்டிருந்தார்.

பேருந்து நிலையம்
பேருந்து நிலையம்

வழக்கமாக, பாம்பாட்டிகள் வைத்திருக்கும் கூடையைப் போலவே இருந்தது அவர் மடியில் வைத்திருந்த அந்த வட்டமான மூங்கில் கூடை. கண்டக்டர் வந்து டிக்கெட் கொடுத்து விட்டுப் போய் விட்டார். ஊர் வரும் வரை, சற்று கண் அசரலாமா என்று யோசித்தான் தங்கராசு.

கண் மூடியபோது ' உஸ்ஸ்' என்ற சப்தம் கேட்டது. சில சமயம் பஸ்சில் ஓட்டுனர் பிரேக் போடும்போது அது போல சப்தம் வரும் என்று சமாதானப்படுத்திக் கொண்டு, மீண்டும் கண்ணை மூட முயற்சித்தான் தங்கராசு. மீண்டும் 'உஸ்ஸ்' சப்தம் கேட்டவுடன் கண்ணைத் திறந்த போது, பக்கத்து சீட் மனிதர் வைத்திருந்த மூங்கில் கூடையின் மூடி மேலெழுந்து கீழிறங்கியது. ஒரு வேளை அந்த அசைவுகூட தனக்கு ஏற்பட்ட பிரம்மையோ என்று தோன்றியது அவனுக்கு. பஸ் சென்று கொண்டிருந்த வேகத்தில் கூடை அசைந்ததோ? ஆனால், அடுத்த முறை கூடையை உற்று நோக்கிக் கொண்டிருக்கும் போதே 'உஸ்ஸ்' என்ற சப்தத்தைத் தொடர்ந்து, மூங்கில் கூடையின் மூடி எழுந்து எழுந்து அடங்கியது. ஒரே நிமிடத்தில் 'குப்' பென்று வியர்த்தது. இது அதுதான் என்று தீர்மானித்து, சுற்று முற்றும் பார்த்தான் தங்கராசு. ஓடவோ, ஒளியவோ இடமில்லை. எழுந்தால், அந்த அசைவில் அது தாவிவிட்டால்?

கிராமத்தில், விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளரும்போது தோட்டத்திலும், காடுகளிலும் பல வகையான பாம்புகளைப் பார்த்திருந்ததால், அப்போது பெரிதாக பயம் இருக்கவில்லை. ஆனால், பள்ளி நண்பன் சுப்பிரமணிதான் பயம் கிளம்பக் காரணமாக இருந்தான். ஒருமுறை கல்லால் ஒரு பாம்பை அடித்து விரட்டியதைப் பற்றிச் சொல்லும்போதுதான் அவன் சொன்னான்,

' டேய்.. பாம்பை அடிச்சுட்டு உசுரோடு விடக்கூடாதுடா... அது அடிச்சவங்களை திரும்ப வந்து பழிவாங்குமாம். சுடுகாட்டில் மரத்தில் ஏறி நின்று தன்னை அடித்தவன் எரிக்கப் படுவதைப் பார்த்து விட்டுத்தான் கீழிறங்குமாம். எங்க பாட்டி சொன்னாங்க..' என்று கூறி என்னை அப்போதே இரக்கத்தோடு பார்த்தான்.

அரசு பேருந்து
அரசு பேருந்து

அந்த வயதில் அவன் கூறியதை நம்பிய தங்கராசுவின் மனதில் பாம்பால்தான் பழி வாங்கப் படுவோம் என்ற பயம் தொற்றிக் கொண்டது. இரவில் தூக்கத்தில் கனவில் வரும் பாம்புகள் அவனைத் துரத்துவதும் அவன் அலறி எழுவதும் கொஞ்ச நாள் நடந்தது. அதற்குப் பிறகு வேலியில் இருக்கும் பச்சைப் பாம்பு, தண்ணீரில் இருக்கும் தண்ணீர்ப் பாம்பைக் கண்டால் கூட வேகமாக இடத்தைக் காலி செய்து விடுவான். இனியும் தாமதித்தால் பயத்தில் எங்கே தன் இருதயம் நின்று விடுமோ என்ற பயத்தில், பக்கத்தில் இருந்த பெரியவரை சுட்டு விரலால் சுரண்டி எழுப்பினான். தூக்கம் கலையாமல் அவனைத் திரும்பிப் பார்த்த அவர் தங்கராசுவிடம் கேட்டார்,

' ஏனுங்க கூப்பிட்டீங்ளா?'

' உஸ், உஸ்னு சத்தம் வருதே அது என்னங்க?' கேட்கும்போதே அடிக்கண்ணில் கூடையின் மேல் ஒரு கண் வைத்துக் கொண்டான். திடீரென்று கிளம்பிவிட்டால்?

' ஹி..ஹி..என் சம்சாரமுங்க...ஒரு மாசமா நெஞ்சுச்சளி... மூச்சு விட்டா விசில் சத்தமாட்ட வருமுங்க.. நீங்களே பாருங்க..'

எட்டி ஆழ்ந்து உறங்கும் அவர் மனைவியைப் பார்த்த போதுதான் தெரிந்தது. இதுவரை நான் வியர்த்து என் சட்டை நனைந்ததற்குக் காரணம் அந்த அம்மணி மூச்சு விடும்போது விட்ட சவுண்டுதான் என்று. அது சரி அந்தக் கூடையில் பார்த்த அந்த அசைவு?

அந்தப் பெரியவரிடம் கூடை அசைவைப் பற்றிக் கேட்டபோது, மெதுவாகக் கூடை மூடியை லேசாகத் தூக்கிக் காட்டினார். உள்ளே கையடக்கமே உள்ள இரண்டு மூன்று கோழிக் குஞ்சுகள் சுற்றிக் கொண்டிருந்தன.

அந்த மனிதர் ரகசியமாகச் சொன்னார்,

' கோழின்னு தெரிஞ்சா கண்டக்டர் பஸ்சில ஏற விட மாட்டார். அதான் மூடி எடுத்துட்டுப் போறன்' என்றார்.

அடப்பாவி, அரை மணி நேரம் என்னை கதிகலங்க வைத்து விட்டாயே என்று மனதுக்குள் அவரைத் திட்டினேன்.

இந்த சம்பவத்தைச் சொல்லும்போது என் மனைவி கேவலமாகச் சிரிக்கும் சிரிப்பின் ஓசை இப்போதே காதுகளில் ரீங்காரித்தது.

*****

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.