Published:Updated:

இலக்கிய காதல்! | சிறுகதை| My Vikatan

Representational Image

கத்தியால் குத்துவதும், இரயிலில் தள்ளி இரக்கமின்றிக் கொல்வதும் காதல் இல்லை இளைஞர்களே! கடும் மனவெறி அது!உண்மைக் காதலது உயர்வொன்றுக்கே வழி வகுக்கும்!

இலக்கிய காதல்! | சிறுகதை| My Vikatan

கத்தியால் குத்துவதும், இரயிலில் தள்ளி இரக்கமின்றிக் கொல்வதும் காதல் இல்லை இளைஞர்களே! கடும் மனவெறி அது!உண்மைக் காதலது உயர்வொன்றுக்கே வழி வகுக்கும்!

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

அரசன் மகளோ அனைத்தழகும் பொருந்தியவள்! அரசனுக்கோ ஆண் வாரிசு இல்லாததால், அழகு மகளுக்கே அடுத்த வாரிசுப்பட்டம். வில்,வேல்,வாள் என்று, விதம் விதமான கலைகளிலும் தேர்ந்தே அவள் இருந்தாள்!

தேறாதது, கவி இயற்றும் கலையில் மட்டுமே. இலக்கண வரம்பறிந்து, இலக்கியத்துள் புகுந்து, கவியியற்றலில் தன்மகள் கடைத்தேற வேண்டுமென்றே தாகம் மிகக் கொண்டான், தன்னிகரில்லா அம்மன்னன். மந்திரியை அழைத்தான். மகள் அமுதவல்லிக்குச் சீரிய கவித்திறத்தைச் சிறப்பாய் கற்றுத்தர கவிஞனைத் தேர்ந்து கொணறுமாறு கட்டளையிட்டான்.அரசன் கட்டளைக்கு அந்நாளில் மறுப்பேது? அமைச்சர் விரைந்தார். நாட்டிலுள்ள நற்கவிகளின் விபரங்களைச் சேகரித்தார்.

உதாரன் ஒருவனே உயர் கவிஞன் என்று ஊருலகம் சொல்லிற்று.அமைச்சரும் அவனைக் கண்டு,அது உண்மையென்பதை உணர்ந்தார்.

மறுநாள் மன்னனிடம் மனந்திறந்து,சிலவற்றை சிலாகித்தார். ’கவியில் அவன் திறமை கடல் போன்று பரந்தது.திறமையின் புகலிடம். தீரம் நிறைந்தவன். இளைஞன் அவன்;இனிய முகம் படைத்தோன்; தீரம் கொண்டவன்; ஆனாலும் என் அடி மனத்தில் அந்த ஒரு பயமுண்டு. இளவரசி மனத்தினிலே இளைஞன் அவன், சிம்மாசனம் போட்டுச் சிறப்பிடத்தைப் பிடித்திடவும் வாய்ப்புண்டு. உபாயம் ஒன்றும் அறிவேன். உங்களுக்கும் உடன்பாடென்றால் அதன் மூலம் இருவரையும் அண்ட விடாமல் தடுத்திடலாம்.’

‘வீண் பீடிகை ஏன் அமைச்சரே! விபரத்தைக் கூறுங்கள். வேண்டாத ஒன்றையா விளம்பிடவே போகின்றீர்?’

‘இருவருக்கும் இடையினிலே ஏகமாய் பெருந்திரையை கட்டி வைத்திடுவோம். அரண்மனைத் தோட்டத்து அழகிய மரங்களிடை அதனைக்கட்டிடுவோம். அவனிடத்தில், ‘இளவரசியாயிருந்தாலும் அவள் ஒரு நலி குட்டரோகி!’ என்றே புகன்று, எக்காரணம் கொண்டும் அவளைப் பார்த்திடவே கூடாது!என்றே பகிர்ந்திடுவோம். பார்த்திட்டால் உனக்குப் பாடம் சொல்லுதலில் உற்சாகம் குறைந்திடுமென்றும் உரைத்து வைத்திடுவோம்.

Representational Image
Representational Image

இப்புறம், அமுதவல்லியிடமோ, ஆசான் ஆன்ற புலமையுள்ளவன் என்றாலும்,பார்வை பறிபோன குருடு என்றும் பகர்ந்திடுவோம். அவனை நீ கண்டால் ‘இவனிடமா நான் இலக்கணம் பயில வேண்டுமென்று எண்ணி மருகுவாய்!’என்றும் எடுத்துரைப்போம்!’என்க,அரசனோ சரி என்பதற்கு அடையாளமாகத் தலையசைத்தான்.

காவலர்கள் போனார்கள். கவிஞனை அழைத்தார்கள். அரசாளப்போகும் அரசனின் ஒற்றை மகளுக்கு உதாரன் பாடமெடுக்கப் பணித்தார்கள். அமைச்சரும்,மன்னரும் தங்கள் திட்டப்படி, தடையை விதித்தார்கள். உதாரனும், அமுதவல்லியும் அரச கட்டளையை ஏற்றார்கள். ’உண்மை ஆசிரியர் தான் அறிந்த அனைத்தையுமே மாணவர்க்குப் போதிக்கவே விரும்புவார்!’ என்ற உயர்ந்த எண்ணம் கொண்ட உதாரன், கவிதையின் ஆழத்தைக் கச்சிதமாய்ப் போதித்தான்.அமுதவல்லியும் ஆவலுடன் கவி கற்றாள்! 

நாட்கள் நகர்ந்தன. பாடங்கள் நித்தமும் பதமாய் முடிந்தன. நேரந்தவறாது வாத்தியாரும், மாணவியும் வந்து போயினர். அன்றைக்குப் பார்த்து அமுதவல்லிக்குச் சிறு தடை. ஆசிரியர் வந்தும் அவள் வரவில்லை. கிரிவல நாள் அது. வானத்து நிலவதுவோ வட்டமாய், முழு வடிவில் !ஆயிரமாயிரம் ஒளிக்கற்றைகளால் அரண்மனைத் தோட்டத்தை அப்படியே அரவணைத்திருந்தது. கனைத்துப் பார்த்தான்; அழைத்தும் பார்த்தான். அப்புறத்திலிருந்து சிறிதும்  வரவில்லை அரவம். அப்படியே நிமிர்கிறான். வெள்ளி நிலவு அவன்முகத்திலும் விளையாட… நட்சத்திரங்களையெல்லாம் நீர்த்துப் போகச் செய்து விட்டு…அரண்மனை மாடத்தில்…அடுத்துள்ள மரங்களில்…தூரத்து ஏரியில்… துலாம்பரமாய் மின்னிட…

தன்னை மறந்த அவன் தளிர் நிலவின் அழகில் மயங்கி நிற்கிறான். கவிஞனல்லவா?ஆரம்பிக்கிறான் அழகு நிலவைப்பார்த்து…

‘நீலவான் ஆடைக்குள் உடல்மறைத்து

நிலாவென்று காட்டுகின்றாய் ஒளி முகத்தைக்

கோலமுழுதும் காட்டி விட்டாற் காதற்

கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ?வானச்

சோலையிலே பூத்த தனிப் பூவோ நீதான்

சொக்கவெள்ளிப் பாற்குடமோ அமுத ஊற்றோ!

காலைவந்த செம்பரிதிக் கடலில் மூழ்கிக்

கனல் மாறிக் குளிரடைந்த ஒளிப் பிழம்போ?’

என்ன அருமையான கற்பனைகள்!நீரொழுக்கான வாத்தைகள்!நெஞ்சத்தை நிறைக்கும் உவமான, உவமேயங்கள்!

அம்மட்டோ…மேலும் நீளும் கற்பனைகள் சமுதாய நோக்கையும் கொண்டவை!

…..  ….  ….  ….

‘தினைத்துணையும் பயனின்றிப் பசித்த மக்கள்

சிறிதுகூழ் தேடுங்கால் பானை ஆரக் 

கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம்

கவின்நிலவே உனைக் காணும் இன்பந்தானோ?’

சமத்துவ சமுதாயத்தைக் காண விழையும் கவிஞரின் வரிகள் பொன்முலாம் பூசப்பட வேண்டியவையல்லவா?

அத்தோடு நிறுத்தவில்லை! மேலும் தொடர்கிறார்.

….  ….  ….   ….

‘அன்புள்ளம் பூணுகின்றேன் அதுவும் முற்றி

ஆகாயம் அளாவுமொரு காதல் கொண்டேன்!

இன்பமெனும் பால்நுரையே குளிர் விளக்கே

எனைஇழந்தேன் உன்எழிலில் கலந்த தாலே!’

என்றே முடிப்பார் உதாரன் வாயால் உயர்கவி பாவேந்தர்!

காதல் வயப்பட்டால் அன்பும், ஆகாயம் அளவுக்கு அளவிலாக் காதலும், பெருகுமாம்!

கத்தியால் குத்துவதும், இரயிலில் தள்ளி இரக்கமின்றிக் கொல்வதும் காதல் இல்லை இளைஞர்களே! கடும் மனவெறி அது!உண்மைக் காதலது உயர்வொன்றுக்கே வழி வகுக்கும்!தனக்கில்லையென்றாலும், தான் காதலித்தவள் எங்கோ மகிழ்வுடனே இருந்திட வேண்டுமென்று எண்ணுவதே காதல்!அடிபட்டு, உதைபட்டு அனைத்தையும் இழந்து நின்றாலும், உள்ளத்தில் நினைத்தவளை உயர்வாகக் கருதுதலே காதல்!

சரி! கதைக்கு வருவோமா?

‘நீலவான் ஆடையென்று’ உதாரன் ஆரம்பித்த உடனேயே திரைக்கு அப்பால் வந்து விட்டாள், ஆரணங்கு அமுதவல்லி!

ஆனாலும் அவன் கவியில் அப்படியே மயங்கி விட்டாள்! மயக்கம் தெளிந்தபோது வந்தது நிதான எண்ணம். கண்பார்வை அற்றவனால் கவின் நிலவை வருணிக்க எவ்வாறு முடியுமென்று இதயம் கேள்வி கேட்கத் தன் குறுவாளால் திரையைக் கிழித்தெறிந்தாள்! அளவெடுத்து அச்சில் வார்த்த ஆணழகனாய் உதாரன் கண்டாள்! அவ்வளவுதான. அவனும் பார்த்தான்!

காதல் மின்னல்கள் கண்களில் புகுந்தன. ஏமாற்றப்பட்டது ஏகமாய்த் தெரியவர, ஈருடலும் ஓர் உடலாயின! நிலவும் மெல்ல வெட்கி, மேகத் திரையைப் போட்டுக் கொண்டாள்!

ஓடினார்கள் ஒற்றர்கள் உண்மையைப் போட்டுடைத்தார்கள். அரசனும் அமைச்சனும் அவசரமாய்க் கூடினார்கள்.

‘சிரமறுத்தல் வேந்தனுக்குப் பொழுது போக்கும் சிறியகதை

நமக்கெல்லாம் உயிரின் வாதை!’

என்பதுதானே ஏழைகளின் புலம்பல்.

‘கவிஞனை ராணி கைப்பிடிக்க விடலாகாது!’ என்றே மன்னன் எடுத்தான் முடிவை. கவிஞனைத் தண்டிக்கத் தன் சொந்த மகளையும் பலி கொடுக்கத் தயாரானான்,பாதக மன்னன்!கொலைஞர்களை ஏவி இருவரையும் கொடுங்களம் ஏகச் செய்தான்!கொலைக் களத்தில் மக்கள் கூட்டமாய்ச் சேர்ந்து விட்டார்!

Representational Image
Representational Image

கவிஞனும் இளவரசியும் கூறினர் தம் நியாயத்தை.

‘தன் மகளுக்கு எனையழைத்துக் கவிதை சொல்லித்

தரச்சொன்னான் அவ்வாறு தருங்காலிந்தப்

பொன்மகளும் எனைக்காதல் எந்திரத்தால்

புலன்மாற்றிப் போட்டுவிட்டாள் ஒப்பி விட்டேன்!

என்னுயிருக் கழவில்லை!அந்தோ எந்தன்

எழுதாத சித்திரம் போல் வீற்றிருக்கும்

மன்னுயிர் வெட்டப்படுமோர் மாபழிக்கு

மனநடுக்கங் கொள்ளுகின்றேன்!இன்னுங் கேட்பீர்!

கவனியுங்கள் இளைஞர்களே!தன்னால் தான் காதலிக்கும் பெண்ணுக்குத்

துயர் வருவதை ‘மாபழி’என்கிறார்.அத்தோடு விட்டாரா?தமிழ் மீதுள்ள பற்றை எவ்வாறு கூறுகிறார் பாருங்கள்!

‘தமிழறிந்ததால் வேந்தன் எனையழைத்தான்

தமிழ்க்கவி என்றே எனையவளும் காதலித்தாள்!

அமுதென்று சொல்லுமிந்தத் தமிழ் என்ஆவி

அழிவதற்குக் காரணமாய் இருந்ததென்று

சமுதாயம் நினைத்திடுமோ ஐயகோ! என்

தாய்மொழிக்குப் பழிவந்தால் சகிப்ப துண்டோ?

உமையொன்று வேண்டுகின்றேன் மாசில்லாத

உயர்தமிழை உயிரென்று போற்றுமின்காள்!

நான் சாவதற்குக் காரணம் தமிழ்தானென்று வரலாறு எழுதப்படுவதைக் கவிஞரால் பொறுக்க முடியவில்லை!புலம்பித் தவிக்கிறார்.

ராமாயணத்தில், இராவணன் இலட்சுமணரைப் போர்க்களத்தில் மூர்ச்சையடையச் செய்த சேதி கேட்டதும், சீதை எவ்வாறெல்லாம் அழுது சோர்ந்தாள் என்பதைக் கம்பர் கவிநயத்துடன் கூறுவது, இங்கும் கருத்தில் கொள்ளத் தக்கது.

‘விழுந்தாள் எழுந்தாள் உடல் முழுதும் வியர்த்தாள்

அயர்த்தாள் வெதும்பினாள்! கொழுந்தா என்றாள்-அயோத்தியர் தம்

கோவே என்றாள் எவ்வுலகும் தொழும் தாள் அரசே ஓ! என்றாள்

சோர்ந்தாள்! அரற்றத் தொடங்கினாள்!’

என்ன செய்கிறோம் என்பதை அறியாமலே எல்லாவற்றையும் செய்து அரற்றினாளாம் சீதை! அதே நிலைதான் உதாரனுக்கும்!

உதாரன் எல்லாவற்றையும் சொல்லிய பிறகு,

‘அரசன் மகள் தன்நாளில் குடிகட்கெல்லாம்

ஆளுரிமை பொதுவாக்க நினைத்திருந்தாள்!….’

என்பதையும் கூற, அரசன் மகள் அதனை உறுதிப்படுத்த, மக்கள் கொலைஞர்களை விரட்ட, அங்கே காதலர்கள் விடுதலை பெற்றார்கள்!

‘பில்கணீயம்’ என்ற வடமொழிக் கவிதையின் தமிழாக்கம் என்றாலும், பாரதி தாசன் அவர்களின் (புரட்சிக் கவி) கற்பனைத்திறமும், சமுதாய நோக்கும், மொழிப்பற்றும் அவற்றை எடுத்தாளும் விதமும் எக்காலத்தும் நிலைத்து நிற்கக் கூடியவை!நம்மை உணர்ச்சிப் பெருக்கில் உழலச் செய்பவை!

பெருவாரியான இளைஞர்கள் இவை போன்ற நல் இலக்கியங்களைப் படித்து இன்புற வேண்டும்.

துளியைத்தான் நான் தந்துள்ளேன்! முழுதையும் படித்தால் மேலும் சுவைக்கும்!

-ரெ.ஆத்மநாதன்,

காட்டிகன்,சுவிட்சர்லாந்து

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.