Published:Updated:

நாலெழுத்து அறியாதவ! - சிறுகதை

நடையில படுக்கையைப் போட்டவ அறைக்குத் திரும்பிப் போய் வெளக்க அணைச்சிட்டு வந்தா. பாயில படுத்தா, கண்ணு மூடுவேனான்னது. மெல்ல மாடிப்படி ஏறிப் போனா. ‘பெத்த புள்ளைய பாக்க இப்புடி...’ ங்கிற நெனப்போட அமுதனோட அறைக் கதவ மெல்லமா தெறந்தா.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

“தே... இன்னும் எம்புட்டுச் சாமானத்ததேன் மூட்டக் கட்டுவே... போறது என்ன படிக்கிறதுக்கா இல்லை இங்கேயிருந்து தூக்கிட்டுப் போறத குந்தித் தின்னுறதுக்கா?” நடுக்கூடத்துல போட்ட ராமலிங்கத்தோட கொரலு வூடு முச்சூடும் தெறிச்சது.

புருசங்காரன் குடுத்த சத்தத்துல நெஞ்சு கொதிச்சி கெடந்த பூங்காவனத்துக்கு அப்பிடியொரு ஆங்காரம் வந்திச்சிதான். என்னிக்கித்தான் அவ கட்டுன மனுசனோட சொல்லுக்கு மறு சொல் உகுத்திருக்கா? ‘என்ன மனுசனோ? காலமுச்சூடுமா இப்புடி இருப்பாக? நான் வாங்கியாந்த வரம் அப்பிடிப்போல’ நெனச்சவ வா வரைக்கும் வந்த தொயரத்த கூட்டி முழுங்குனா. பொண்டாட்டிகிட்ட கத்திய ராமலிங்கம் வூட்டுக்கு வெளிய காரு பக்கத்துல நின்னுக்கிட்டிருந்த நாயோட தலைய நின்னமேனிக்கி தடவுனாரு. இதுக்குத்தான் காத்திருந்தேன்னு சொல்றமாதிரி அது அவர பாத்துச்சி. எம்புட்டு வேலையிருந்தாலும் மனுசன் அதுகிட்ட செல்லங் கொஞ்சாம ஒறங்கப் போறதில்ல.

Representational Image
Representational Image

அதப்பாத்த பூங்காவனத்துக்குப் பத்திக்கிட்டு வந்திச்சி. ‘ம்கூம்.... இதுல ஒண்ணும் கொறச்சலில்ல. வெல ஒசந்த நாயின்னு அது பெருமைய பாக்குறவககிட்ட பீத்திக்கணும். என்ன சென்மமோ? பெத்த புள்ளைய அம்புட்டுத் தொலைவு அனுப்ப கல்லு மனசு எப்பிடித்தான் எடங் குடுக்குதோ? அணப்புலயே வச்சிருந்த புள்ளையாச்சேங்குற எண்ணம் ரவக்கூடவா இல்லாம போவும்? இங்க கடலூருல இல்லாத காலேசா? அங்கயிருக்குற செதம்பரத்துக்கு அனுப்பட்டும் இல்ல அந்தாண்ட பாண்டிக்கு அனுப்பட்டும். அத்தெல்லாம் வுட்டுப்புட்டு மதுரைக்குதேன் அனுப்புவேன்னா எப்புடி? கெவுரவம்... அல்லாத்திலும் கெவுரவம்.... மக்க மனுசா பாத்து கவுன்சுலரு வூட்டுப் புள்ளிவோ வெளியூருக்குப் போயி பெரிய படிப்பு படிக்குதுவோன்னு பேசணும். அதுக்கோசரந்தேன் மூத்தவன் சேகர பட்டணத்துக்கு அனுப்புனாவோ. அவனும் படிச்சான்... படிச்சான்... அத்தினி வருசம் படிச்சான். ஈ பூரா எடத்துலகூட ரூவா நோட்டு பூந்து வர்ற காலமாச்சே. எப்பிடியோ ஒருவளியா பட்டணத்த காலி பண்ணிக்கிட்டு வந்து சேந்தான்... பொட்டப்புள்ளைய கட்டிக்குடுத்து நாட்டவுட்டே அனுப்பியாச்சி... இப்ப எங்கடைக்குட்டிச் செல்லத்தையும் அனுப்பப் போறாக...’ பூங்காவனம் உள்ளுக்குள் புலம்பிக்கிட்டே ரவா உருண்டைங்கள சம்புடத்துக்குள்ள அலுங்காம அடுக்குனா.

‘ம்... மத்த மத்த நாளுன்னா செஞ்சி முடிக்கிறதுக்குள்ள புள்ள போவ வர பத்த சாப்புட்டிருக்கும்’ சம்புடத்து மூடியில வுளுந்த கண்ணுத் தண்ணிய சீலத்துணியால தொடச்சிவுட்டா.

“இன்னும் ஏன் உக்காந்திருக்கே? ஒன் ஆத்தாக்காரி என்னன்னா நாளைக்கி தீபாவளியாட்டம் சுட்டு அடுக்குறா. பொளுது வெடிய கெளம்பணும். அல்லாத்தையும் எடுத்து வச்சிட்டுத் தூங்குலே” நடை ஊஞ்சல்ல ஒக்காந்திருந்த அமுதனிடம் புருசங்காரன் போட்ட சத்தத்துல பூங்காவனம் அடுப்பங்கரையிலிருந்து விறுவிறுன்னு வந்தா. “காத்தால பயணப்படுற புள்ளையாண்ட என்னாத்துக்கு இப்புடிச் சத்தம் போடுதீய? ஒண்டித் தனிச்சி எங்கனா போயிருந்த புள்ளையா என்ன? இம்புட்டு வயசான சிறுக்கி எனக்கே புள்ள ஒத்தையில இருக்குமான்னுட்டு நாலு நாளா ஒறக்கம் புடிக்கல. பச்சமண்ண அம்புட்டுத் தொலவுல அனுப்ப எப்புடித்தான் மனசு வருதோ? இங்கல்லாம் இல்லாத படிப்பு மதுரையிலதான் இருக்குதாக்கும்?”ன்னு ஒரே மூச்சில குமுறலைக் கொட்டிவுட்டா. நிமுந்து பாத்த அமுதன் ஒண்ணுஞ் சொல்லாமலே மாடிப்படி ஏற, சேகரு டீவிய வுட்டுட்டு ஆத்தாகாரிய பாத்தான்.

Representational Image
Representational Image

“ஏதேது...? நாக்கு நீளுது... எல்லா நல்லது கெட்டதும் எங்களுக்குத் தெரியும். ஆக்குனமா அறிச்சமான்னு இல்லாம வக்காலத்து வாங்க வந்துட்டா. வாய மூடிட்டு போ” கட்டுனவக கொரலு பொங்குனதுல பூங்காவனம் அடுப்பங்கரைக்குள்ள அடங்கிட்டா. “எல சேகரு... நீ என்னத்துக்கு இன்னும் டிவிய பாத்துக்கிட்டு ஒக்காந்திருக்க? அஞ்சு மணிக்குதான கெளம்பணும்?” “ஆமாம்பா” ன்னு மூத்தவன் சொல்ல “வெரசா போய்த் தூங்கு”ன்னு சொல்லிட்டு அறைக்குப் போனாரு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘இந்த மனுசனுக்கு புள்ளய தொலவுல அனுப்புறோம்கிற வெசனம் இத்துனூண்டு கூடவா இருக்காது? ம்கூம்... அது இருந்திருந்தா ஒத்த பொண்ண சீமையில இருக்கிற மாப்புளைக்கி கட்டி வச்சிருப்பாரா? சிங்கப்பூரு இப்போல்லாம் கூப்புடுற தொலவாட்டம் ஆயிடுச்சின்னு வக்கண பேச்சி வேற. எதுனா ஆத்திரம் அவசரம்னா ஒரு போன போட்டா அடுத்த பிளேன்ல மவ வந்து எறங்கிடுமாம். எங்கிட்ட என்னல்லாம் கதைய சொல்லிக் கட்டிக் குடுத்தாரு. தாலி கட்டி போன புள்ள ஆறு மாசம் கழிச்சி அப்பன் ஆத்தாள பாக்கணும்னு ஒருக்கா வந்தா. பொறவுதான் இந்தக் கொரோனா வந்து சேந்துச்சி. தலைச்சன் புள்ளப்பேருன்னா சும்மாவா? பொம்பள சென்மத்துக்குதேன் அந்த வலியும் வேதனையும் தெரியும். அந்நிய மண்ணுல ஒத்த மனுசியா பெத்துப் பொழைச்சி கர சேந்துருக்கா. இப்ப புள்ளைக்கிப் பொறந்தநாளும் கொண்டாடியாச்சி இன்னும் பிளேனும் வுடல, மவளயும் பேரப்புள்ளையயும் கண்ணார காணல. இன்னும் எம்புட்டு நாளுதான் எம்பொண்ண நான் போனுல பாத்துக்கிட்டிருக்கப் போறேனோ? அதைப்பத்தில்லாம் இவிகளுக்கு வெசனம் எங்க இருக்க போவுது? மவள தேசம்வுட்டுத் தேசம் அனுப்புனப்பவே மனுசன் கலங்குல...’ மூக்கைச் சிந்திச் சன்னலுக்கு வெளியே வீசிட்டு முந்தானையில் கையைத் தொடைச்சா.

Representational Image
Representational Image

ஆறிப்போயிருந்த எண்ணெயைப் பாட்டிலில் ஊத்திக்கிட்டிருந்தப்ப கனைக்குற சத்தங் கேட்டிச்சி. இருப்புச்சட்டியக் கீழே வச்சிட்டுச் சொம்புல தண்ணியை எடுத்துக்கிட்டுப் போய் புருசங்கிட்ட நீட்டுனா. தண்ணிய குடிச்சவரு “இன்னிக்காச்சும் சிங்கப்பூருலயிருந்து போனு வந்திச்சா?”ன்னு கேக்க, எடமும் வலமுமா தலையசைச்ச பூங்காவனம் தலையைக் குனிஞ்சிக்கிட்டே வெளிய வந்தா.

‘நெதமும் பேசிக்கிட்டிருந்த மவதேன்... நாலு நாளா ஒரு சத்தமும் காங்கல. காலேசுக்குப் போன வருசமே கண்ணாலம் கட்டி வைக்கணும்னு அப்பஞ் சொல்ல, புள்ள துடிச்சில்ல போயிட்டா. படிச்சி முடிச்ச பொறவு கண்ணாலம் கட்டிக்குறேன்னு கொஞ்சமா கெஞ்சினா? அவ கரைஞ்சது அவிக காதுலயா கேட்டிச்சி? அப்பங்காரங்கிட்ட மல்லுக்கட்டி, பொறத்தால அண்ணன்காரங் கால்ல வுளுந்தும் என்னா புண்ணியம்? நீயாவது சொல்லுத்தான்னு ஆத்தாக்காரிகிட்ட வந்து நின்னா. மவ கண்ணுல தண்ணிய பாத்த அன்னிக்கே ஆம்படையாங்கிட்ட அவ கதறிப் பாத்தது அவளுக்கு எங்க தெரியப் போவுது?’

‘பொட்டிக் கடக்காரரு மவன் பாசானத்த குடிச்ச பிந்திதான சொமந்தவளுக்கு வெசயமே தெரிஞ்சது. அவன் வாயில சாணிய கரைச்சி ஊத்துனதுதேன் தெரியும். அப்பால அவங் குடும்பம் எங்க போச்சின்னு ஆருக்குத் தெரியும்? ம்... இப்போ என்ன புள்ளக்குட்டியோட மவகாரி நல்லாத்தானே இருக்கா? தம்பிக்காரன் பன்னண்டாம்பு பாசான சேதிய சொன்ன அன்னிக்கி வாகொள்ளாச் சிரிப்போட பேசுனவதேன். ஒடம்பொறப்பு பள்ளிக்கூடத்துலேயே மொதோ எடத்துல வந்தா பூரிப்பு இருக்காதா பின்ன? பொறத்தால வாய் வார்த்தயில்ல. கூடப்பொறந்த பொறப்பாச்சேன்னு கொஞ்சங்கூடவா ரத்த பாசம் இருக்காது? படிச்சி முடிச்ச பொறவு கண்ணாலம் கட்டிக் குடுக்கலாமுன்னு அக்காக்காரிக்காக அந்த வயசுலேயே அப்பன எதுத்து பேசுன புள்ளையாச்சே. அத்தக்கூடவா மறந்துட்டா?’ நெனைக்க நெனைக்க அவளுக்கு நெஞ்சு கனம் கூடிப்போனது.

Representational Image
Representational Image

‘ஆரு எப்புடியிருந்தா என்ன ராசா? நான் இருக்கேன்யா ஒனக்கு’ன்னு நெனைச்சிக்கிட்டு மாடத்துல வச்சிருந்த போனை எடுத்தா. பன்னண்டாம்பு ரிசல்டு வந்த அன்னிக்கி டிவிகாரங்க மவங்கிட்ட பேசுன வீடியோவை போட்டா. ‘நான் கலெக்டராகி மக்களுக்கு சேவை செய்வேன்!’ அத்தசோடு பெருத்திருந்த புள்ள மொவத்த பாத்துக்கிட்டேயிருந்தா. ‘இவிக மூஞ்ச இப்புடிப் பரங்கிக்காயாட்டம்ல வச்சிருக்காக. ம்... வூட்டுல அன்னிக்கி நடந்த கச்சேரி மட்டும் சிறுசா என்ன? டாக்டருக்குப் படிடான்னு அவிய சொல்ல, கலெக்டருக்குப் படிக்கிறேன்னு புள்ள மொள்ளமாதேன் சொன்னிச்சி. என்னா ஆட்டம் ஆடிட்டாக? டாக்டருக்குப் படிச்சா நல்ல பேரும் வரும்படியும் கெடைக்குமாம். படிக்கிற புள்ளைக்கி, என்ன புடிக்குதோ அத்தப் படிச்சிட்டுப் போவட்டுமே. இந்தப் பத்து வருசத்துல இவிக வாங்கிப் போட்டிருக்க சொத்தே நாலு தலமொறைக்கித் தாங்குற அளவுக்கு கெடக்குறப்ப, பணத்தாச இன்னும் வுட்டுப் போவலியே.

வெறும் வவுறு சத்தங் குடுக்க, பூங்காவனம் சொம்பு நெறையா தண்ணிய மொண்டு குடிச்சா. ‘ஏதோ இத்த மட்டும் சேகருக்காவது தம்பிக்காரங்கிற அக்கறை வந்திச்சே... எப்பவும் சின்னவன் மேல எரிபுரின்னு கெடக்குறவன் வெளியூருக்குப் போயிப் படிக்கட்டும்னு இவிய சொன்னதும் அவந்தேன் மொதோ ஆளா சரின்னான். காலேசுக்குப் போயிட்டா அல்லாஞ் சரியாயிடும்னு படிச்சவக சொல்றப்ப இந்தப் படிப்பறிவில்லாத சென்மம் வேணான்னா சொல்லப் போறா? ஏதோ மவங்காரன் நெனச்ச படிப்பையே படிக்கட்டும்னு வுட்டாகளே அதே போதும்தான். இருந்தாலும் பக்கத்துலவுள்ள காலேசுல படிக்கட்டுமேன்னு ஆனமுட்டும் அவ சொன்னத ஆரு கேட்டாவோ?’ பலகாரங்க இருந்த டப்பாவ கட்டப் பையில வச்சி அமுதனின் பொட்டிக்குப் பக்கத்துல வச்சவ, புள்ள எல்லாத்தையும் சரியா எடுத்து வச்சிருப்பானாங்குற சந்தேகத்துல பொட்டியத் தொறந்தா. அவனது உடுப்புக்கும் கீழயிருந்த அவளோட சந்தன நெற சீல கண்ணுலப் பட்டுச்சி. ‘எம்மவனே...’ன்னு சத்தங் காட்டாம குலுங்குனா.

Representational Image
Representational Image

“இன்னும் என்னாத்த பண்ற?” அறைக்குள்ளிருந்து கொரலு வெளியே பாயவும் சடுதியில பொடவையைப் பொட்டிக்குள்ள வச்சிட்டு அதும் மேலே துணிங்கள அடுக்குனா.

அறைக்குப் போய் பாய், தலையாணிய எடுத்துக்கிட்டு வெளியே போவுறத ராமலிங்கம் கண்கொட்டாம பாத்துக்கிட்டேயிருந்தாக. முந்தி மாதிரின்னா அந்தப் பார்வைக்கு அறையவுட்டு கால வெளிய வச்சிருக்கமாட்டா.

“ஆரு வெளக்க அணைக்கிறது?”

நடையில படுக்கையைப் போட்டவ அறைக்குத் திரும்பிப் போய் வெளக்க அணைச்சிட்டு வந்தா. பாயில படுத்தா, கண்ணு மூடுவேனான்னது. மெல்ல மாடிப்படி ஏறிப் போனா. ‘பெத்த புள்ளைய பாக்க இப்புடி...’ ங்கிற நெனப்போட அமுதனோட அறைக் கதவ மெல்லமா தெறந்தா. விடி வெளக்கு வெளிச்சத்துல புள்ள தூங்குறதப் பாத்தவ கண்ணு நெறஞ்சது. என்ன வுட்டுட்டுப் போவாதய்யான்னு கட்டிக்கிட்டு அளுவணும்போலத் தோணிச்சி. படிக்கப்போற புள்ளைய நாமே கெடுக்கலாமாங்குற எண்ணத்துல அப்புடியே பாத்துக்கிட்டே நின்னா.

‘எந்தச் சாமிக்கு என்ன கொறைய வச்சேனோ? ஒன்ன இப்புடி ஆக்கிட்டானே... எந்தக் கொடுமய கொடுத்தாலும் அவன் எனக்குக் கொடுத்துருக்கலாமே...’ அவளால அதுக்கு மேல அஞ்ச நிக்க முடியல. படி எறங்கி வந்தவ கொல்லைப்புறக் கதவைத் தெறந்து வெளியே வந்தா. தெரு வெளக்கு வெளிச்சத்துல கட்டியிருந்த கன்னுக்குட்டி அவ தலையக் கண்டதும் தலையை ஆட்டிக்கிட்டு கிட்ட வந்தது. “இப்புடியிருக்கிற எஞ்சாமிய வுட்டுப்போட்டு நான் எப்புடியிருப்பேன்? பெத்த வவுறு எரியிறத ஆரும் ஒணரமாட்டுறாகளே... இஞ்ச இருக்குற பயலுவளே கேலி பண்ணிப் பேசுறத தாங்க முடியாம எங்கிட்டச் சொல்லி அளுவுமே. போற எடத்துல புள்ளிவோ எதுனா ஒண்ணு கெடக்க ஒண்ணு சொல்லிட்டா எம்புள்ள ஆராண்ட சொல்லும்?” கன்னுக்குட்டிய கட்டிக்கிட்டு வாவுட்டு அளுதா.

Representational Image
Representational Image

ஆத்தாக்காரி அழுவுறத மேலயிலிருந்து பாத்த அமுதனுக்கு நெஞ்சு கனத்திச்சி. தன்னை மதுரைக்கு அனுப்பப் போவதா பேச்சு வந்ததிலிருந்தே பெத்தவளின் உள்ளக் கொதிப்பை ஒணந்து வர்றான். சித்த முந்தி அறைக்கு வந்த அம்மா மடியில் படுத்துக் கதறணும்னுங்கிற நெனைப்பை செரமப்பட்டுதேன் அடக்குனான். “என்னைய மன்னிச்சிடும்மா... நானா எந்தத் தப்பும் செய்யலையே... எனக்கு மட்டும் ஏம்மா இப்படி ஆச்சி?” சன்னலைப் புடிச்சிக்கிட்டு நின்னவனது ஒடம்பு குலுங்கிச்சி.

அமுதன் அம்புட்டு மார்க்கு எடுத்தான்னு ஊரு சனம் வாவூறிப் போய்க் கெடக்க, வூட்டுக்குள்ள நடந்த அமளி கொஞ்சமா? என்னமோ ஒரு சந்தேகத்திலியே இருந்தவக, அவிய நெனப்பு நெசந்தேன்னு மவன் வாயால கேட்டதும் கொஞ்சமா ஆட்டம் போட்டாக? எம் பேர கெடுக்கன்னே வந்து சேந்தியான்னு பச்ச பெல்ட்டால வெளாசுனதுல புள்ளக்கி ஒடம்பு முச்சூடும் இரத்த விளாரால்ல ஆச்சி! அவன் ஒடம்பு மட்டுமா? புள்ள வளத்துருக்காளாம் புள்ளன்னு தடுக்க வந்த பூங்காவனத்தையும் மிதிச்சில்ல தள்ளுனாக. பொட்டப்புள்ளயாட்டம் அவனக் கூப்புடாதன்னு எத்தினிவாட்டிச் சொல்லியிருப்பேன்னு ஆத்தாக்காரிய பொரட்டி எடுக்க அம்புட்டு நோவோட கெடந்த புள்ள ஆத்தாள அடிக்க வேணாமுன்னு கதறுனானே!

‘நீ அழுவாதம்மா... வெளியூருக்குப் போனா மாறிடுவேன்னு அப்பாவும் அண்ணனும் சொல்றாங்க. இவங்க நெனைக்குற மாதிரி என்னால மாத்திக்க முடியாதும்மா. நானாவா இப்படி ஆனேன்? என்னைய நெனச்சி நீ கவலப்படாதம்மா... ஒன்னோட அருமை இங்க யாருக்கும் தெரியல. நான் கலெக்டரா ஆகி ஒன்ன ராசாத்தியாட்டம் பாத்துக்குவேம்மா’ன்னு அமுதன் உள்ளுக்குள்ள உருகுனான்.

ராவெல்லாம் முளிச்சிருந்த பூங்காவனம் அண்டாவுல சுடுதண்ணியை வெளாவிட்டு புள்ளைய எளுப்புனா. மவங்காரன் கண்ணு செவந்து கெடக்க, “போய்க் குளிச்சிட்டு வா ராசா”ன்னு மூஞ்ச பாக்காமலே சொன்னா. புள்ள குளிச்சிட்டு வர்றதுக்குள்ள இட்லியக் கொண்டு போய் மேசையில வச்சா. அமுதனுக்குப் புடிச்ச புதினா சட்டினி வாசம் வூட்டுக் கூடத்த நெறச்சது. “போற எடத்துல ஓட்டலே இல்ல பாரு... காப்பிய மட்டும் குடிச்சிட்டுப் போவட்டும். இத்தெல்லாம் உள்ள கொண்டு வை”ன்னு அவிக சத்தம் போட்டாக.

Representational Image
Representational Image

‘இவியபாட்டுக்கு கெளம்ப வேண்டியதுதான? புள்ளைக்கி நான் செய்யுறத ஏன் தடுக்குறாக?’ கண்ணுத்தண்ணிய வுட்டுக்கிட்டே மேசை மேல வச்ச இட்லி, சட்னிய எடுத்துக்கிட்டு அடுப்பங்கரைக்குள்ள போனா.

‘நானும் கூட வர்றேன்னு சொன்னதையும் வாணாம்னுட்டாக. அங்க போய் அளுதா மத்தவங்க என்ன நெனைப்பாங்கன்றாக. எம்புள்ளைய பெரிய படிப்பு படிக்க கூடப்போய் அனுப்பக்கூட எனக்குக் குடுப்பன இல்ல. என்ன இது? கெளம்புற நேரமாச்சி. இன்னும் இவிக உடுப்ப மாத்தாம இருக்காகளே!’

“எல சேகரு... சொன்னது நெனவிருக்கா? போய்ச் சேந்ததோட போன போடு.”

“நீங்களும் புள்ளகூடப் போவலியா?”ன்னு கேட்ட பூங்காவனத்துக்கு அழுவ பொத்துக்கிட்டு வந்திச்சி.

“இப்போ என்னாத்துக்கு இப்புடி ஒப்பாரி வைக்கிறே? எனக்கு ஒரு முக்கியமான வேலையிருக்கு. சேகருக்கு எல்லாந் தெரியும். வந்துட்டா பெருசா ஞாயம் பேச...” துண்டை ஒதறித் தோள்ல போட்டாரு.

“அண்ணங்கூடத்தான போறேன். ஒண்ணும் கவலைப்படாதீங்கம்மா. காலேஜ் லீவு வுட்டதோட வீட்டுக்கு வந்துடுவேன். சரியா?”

உள்ளயிருந்த கார சேகர் வூட்டு வாசல்ல கொண்டாந்து நிறுத்தினான். பூங்காவனத்துக்கு மவங்கிட்ட என்னவோ சொல்லணும்போல இருந்திச்சி. வாய தெறக்க முடியல. புள்ளையைக் கட்டிப் புடிச்சி தலையை எறக்கி முன்நெத்தியில முத்தம் குடுத்தா. அமுதனோட கண்ணு செவந்து கெடந்தாலும் சிரிச்சிக்கிட்டே பயணம் சொல்லிட்டுக் கெளம்பினான்.

அவியளோட கனைப்பை கேட்டும் காரு கண்ணுக்கு மறைஞ்சி வெகுநேரம் வரைக்கும் அவ வூட்டுக்குள்ள போவலியே. சாமியறைக்குப் போய்க் கொலதெய்வத்துக்கு காசு முடிஞ்சி வச்சிட்டு அங்கியே உக்காந்தா. ‘அவிக எத்த செஞ்சாலும் சரியாத்தேன் செய்வாக... புத்திகெட்டவளுக்கு நாலு எளுத்து தெரிஞ்சிருந்தா இம்புட்டு வெசனத்த ஏன் படப்போறேன்?’ தனக்குத்தானே தேறுதல் சொல்லிக்கிட்டு கொல்லைப்பக்கம் போனா. கன்னுக்குட்டி தலையாட்டிக்கிட்டுப் பக்கத்துல வந்திச்சி. “அமுதன் பெரிய படிப்பு படிச்சிட்டு பெரியாளா வரணும்ல. கலெக்டரோட அம்மாவாக்கும் நானு”ன்னு அதுங்கிட்ட சொல்லிட்டு அங்கியே சித்த நாழி உக்காந்திருந்துட்டுப் பொறவுதான் வூட்டுக்குள்ள போனா.

Representational Image
Representational Image

‘இதென்னாடிது அக்குரும்பாயிருக்கு? முக்கியமான வேலையிருக்குன்னு சொன்ன மனுசன் சீமைத் தண்ணியோட ஒக்காந்திருக்காக! ம்... தொட்டுக்க எதுனா கொண்டு வந்து வைக்கலன்னு தையா தக்கான்னு ஆடுறதுக்குள்ள வைப்போம்’ன்னுட்டு அடுப்படிக்குள்ள போனா. சட்டியிலிருந்த நாட்டுக்கோழி கொளம்ப சுட வச்சி கொண்டாந்து அவிக எதுத்தாப்புல வச்சிட்டு அடுப்படிக்குள்ள போனவளுக்கு கண்ணுத்தண்ணி ஒடப்பெடுத்திச்சி.

புள்ளைய நெனச்சிக்கிட்டே அடுப்பாங்கரையில குந்தியிருந்தவ காகறிகார அம்மா சத்தம் கேட்டு வெளிய வந்தா. இன்னைக்கி எதுவும் வேணாம்னு சொல்லிட்டுத் திரும்புனா. மேசையிலிருந்த பாட்டில்தான் காலியா இருந்திச்சே தவிர கிண்ணத்துல வச்ச கோளிக் கொளம்பு அப்புடியே இருந்திச்சி. ‘கறி வாசம் அடிச்சாலே சட்டியில இருக்கிறத கொண்டாங்குற மனுசன் இத்த ஏறெடுத்தும் பாக்காம போயிருக்காகன்னா...? எஞ்சாமீ... புள்ள மேல ஒனக்கு அம்புட்டுப் புரியமாய்யா? ஒனக்கு இருக்குற பதைப்ப அறியாத வெளங்காதச் சிறுக்கி இத்தினி நாளு வெசனத்துல கெடந்துட்டனே...!’ புருசங்காரன் மனச படிச்ச பூங்காவனத்துக்கு நெல கொள்ளல.

‘வெளிய கடுகடுன்னு இருந்தாலும் புள்ளமேல மனுசனுக்கு உள்ளுக்குள்ள அம்புட்டு கரிசனம் இருந்திருக்கே.’ மொதோ மொதோ புருசங்காரர கட்டிப்புடிச்சி கன்னத்துல முத்தம் குடுக்கணும்னு மனசு பரபரத்திச்சி. சொள்ளு வடியிறது தெரியாம கொரட்டவுட்டு தூங்குனவர வச்சக்கண்ணு வாங்காம பாத்துக்கிட்டிருந்தா.

வெளியே நாய் சன்னமா கொரலு குடுத்திச்சி. எப்பவும் அந்தச் சத்தத்த கேட்டா “எம்மாங் கொள்ளையத்தான் அந்த வவுறு தாங்குமோ?”ன்னு கடுகடுத்துக்கிட்டுதான் ஆக்கி வச்ச மாட்டுக்கறியும் சோறுமா கொண்டாந்து போடுவா. இன்னிக்கி ஓட்டமா போய் தட்டு நெறைய எலும்பும் கறியுமா கொண்டாந்து வச்சா. தட்ட பாத்த நாய் அவள நிமுந்து பாத்தது. “என்னா பாக்குறே? எப்பவும் ஐயா போட்டாதான இம்புட்டு கறிய போடுவாக. இவ இன்னிக்குப் போட்டிருக்காளேன்னா? ஒங்க ஐயாவோட மனச அறியாம கெடந்துட்டேன் இந்தப் பாவி”ன்னு சொல்லிக்கிட்டு அத்தோட தலைய வாஞ்சையா தடவுனா. அது கொஞ்சம் நவுந்து நின்னு சாப்புட்டது.

பழைய சோறு
பழைய சோறு

அடுப்பாங்கரைக்குப் போனவ குண்டான்ல பளையதை அள்ளிப்போட்டு, ஐஸ்பொட்டியில இருந்த தயிரை ஊத்தி, சின்ன வெங்காயத்த கடிச்சிக்கிட்டு ஒரே முட்டா கஞ்சிய குடிச்சி முடிச்சா. நாலு நாளா ஒறக்கம் புடிக்காம கெடந்த கண்ணு அவள இளுத்துக்கிட்டுப் போச்சி.

‘போனு அடிக்குது... வேட்டி நளுவுனதுகூடத் தெரியாம இப்புடித் தூங்குறாகளே?’

படிச்சவக எதுனா பேசுவாக, அவியளுக்கு பதில் சொல்ல ஏலுமான்னு ஆம்படையாங்காரன் போன அவ திரும்பிக்கூடப் பாக்க மாட்டா. அதுபாட்டுக்கு அடிச்சிக்கிட்டு கெடக்கேன்னு கிட்ட வந்து பாத்தா. ‘அட எம்புள்ள அமுதனா? கூறு கெட்டவ வேத்து மனுசாளாயிருக்கும்னுல்ல நெனச்சிட்டேன்’னு பச்சை வட்டத்த மேல தள்ளுனா.

“எப்பா... சோலிய முடிக்கிற நேரத்துல பய எப்புடியோ பறந்துட்டான். ரொம்ப தொலவுல்லாம் போயிருக்க முடியாது. நம்மாளுவோ நாலா பக்கமும் போயிருக்காங்க. மாட்டுனதும் கதைய முடிச்சிடுவன். நாம பேசுனபடி ஆள காணலன்னு நாளைக்கி போலீசுல கம்ப்ளைண்டு கொடுத்துரு. வச்சிறவா?” மூத்தவன் குசுகுசுன்னு சொன்னான்.

“அடப்பாவிங்களா... அமுதா....!!!”

-மணிமாலா மதியழகன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு