Published:Updated:

ஒலிம்பிக் பதக்கத்தை ரெண்டா கட் பண்ணின கதை தெரியுமா? - வாக்கிங் டாக்கிங் -16

Representational Image
Representational Image

1936 ல் பெர்லின் ஒலிம்பிக்கில கம்பு ஊன்றி உயரம் தாண்டுதலில் இரண்டு பேர் இரண்டாவது இடத்தைப்பிடிச்சுட்டாங்க…

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

இன்று லேசான தூறல்…

வாக்கிங் போவதா இல்லையா? என இரு யோசனைகள்… ஆனால், திருமதியைப் பொறுத்தவரை வெகுவான காரணம் இல்லாமல் வாக்கிங் தடை இல்லை! எப்போதும் நடை தான்.

தூறல் நிற்கும்வரை ஒலிம்பிக் பார்க்கலாம் என டிவியை ஆன் செய்தேன்.

ஹாக்கியில் இந்தியா வெண்கலம் பதக்கம் வென்ற அற்புதமான தருணங்களை செய்திச் சேனல்கள் திரும்ப திரும்ப ஒலிப்பரப்பு செய்தன. இந்த வெற்றி 40 ஆண்டுகளுக்குப்பிறகு கிடைத்தது!

சூப்பர்… சூப்பர் என கொஞ்சம் சத்தமாகவே கத்தி விட்டேன்…

க்கூம்… டிவி முன்னாடி நின்னு கத்தி என்ன பிரயோஜனம்? இது திருமதியின் குரல்!

வாக்கிங்
வாக்கிங்
Representational Image

இந்தியா ஜெயிச்சிருக்கே… அரையிறுதியில தோத்தா என்ன? நானாயிருந்தா… இரண்டு பேருக்கும் வெள்ளிப்பதக்கத்தை காக்காகடி போட்டு வெட்டிக் கொடுத்திருப்பேன்…

அதென்ன காக்காகடி…

கொஞ்சமா கடிச்சு…கொடுக்கிறது தான்…

இப்படி தான்…1936 ல் பெர்லின் ஒலிம்பிக்கில கம்பு ஊன்றி உயரம் தாண்டுதலில் இரண்டு பேர் இரண்டாவது இடத்தைப் பிடிச்சுட்டாங்க…

கம்பை வெட்டி இரண்டு பேருக்கும் கொடுத்துட்டாங்களா?

உங்க அறிவு ஏன் தான் இப்படி வேலை செய்தோ?

என் அறிவுக்கு என்ன மோசம்?

”ஆனதுக்கு ஒரு ஆகாதது

ஆகாததுக்கு ஒரு ஆனது” என திருமதி சொன்னது நன்றாகவே கேட்கச் செய்ததது.

யார் ஆகாதது… யார் ஆனது? எனத்திருப்பிக் கேட்டேன்!

”அது உலகத்திற்கே தெரியுமே…” என பதில் வந்தது.

உலகத்திற்கு தெரியும்… ஆனா, எங்க மாமனாருக்குத் தெரியலையே…

கம்புக்காக எதுக்கு எங்கப்பாவை வம்புக்கு இழுக்கிறீங்க?

”நான் வேண்டாமுன்னு தான் சொன்னேன்…ஆமா!” எனச் சிரித்தேன்.

”பந்தியிலேயே வேணாம்னுட்டாங்க!

இவன் இலை பொத்தல்ன்னு எந்திரிச்சிட்டேங்கிறான்!”ங்கிறதை கேள்விப்பட்டீர்களா?

அவசரமாக,” இல்லை!”யென தலையசைத்துக்கொண்டே,”சில்வர் மெடலை ரெண்டா கட் பண்ணிக்கொடுத்துட்டாங்களா?” எனக்கேட்டேன்.

இல்ல….இல்ல…

அப்புறம் என்னதான் பண்ணினாங்க?

வெள்ளிப்பதக்கத்தை ரெண்டாவும், வெண்கல பதக்கத்தை ரெண்டாவும் கட் பண்ணி இரண்டு பேருக்கும் அதில பாதி, இதில பாதி கொடுத்துட்டாங்க…

”கேட்கவே ஆச்சரியமா இருக்கே…” எனச் சத்தமில்லாமல் சிரித்தேன்.

நான் சொன்னதை நம்பலை தானே?

எப்படி கண்டுப்பிடிச்ச?

உதடுகளை பல்லை ஒட்டின மாதிரி வைச்சுட்டு சிரிச்சா வேற என்ன அர்த்தமாம்?

இப்படி வேற அர்த்தம் இருக்கா?

அது மட்டுமில்ல…பல்லு வெளியே தெரியாம சிரிச்சா…உங்களுக்குள்ளே நீங்களே பேசி சிரிச்சுக்கிறீங்கன்னு அர்த்தம்!

அப்படி பார்த்தா… எப்பவுமே நீ சிரிக்கிறப்ப பல்லு வெளியே தெரியறது இல்லையே…

Representational Image
Representational Image

ஹலோ அது சிரிப்பு அல்ல… வெறியில பல்லை நறநறன்னு கடிக்கிறது…

சிரிப்பது வந்தாலும் லேசாக சிரித்தேன்…

இப்ப மனசுக்குள்ள சந்தோசமா?

அட சாமி! அதையும் கண்டுபிடிச்சிட்டியே…

ஆமா…மேல் பல்வரிசை மட்டும் தெரியற மாதிரி சிரிச்சா… அது தான் அர்த்தம்!

உனக்கு கோபம் வந்தா எனக்கு சிரிப்பு வருது… நான் என்ன செய்ய?

நீங்க ஒண்ணும் செய்ய வேண்டாம்… நான் இனி பேச மாட்டேன்!

உண்மையில் திருமதிக்குச் சற்று கோபம் வந்ததது போல உணர்ந்தேன்.

நீ உண்ணாவிரதம் இருக்க போறீயா? மெளனவிரதம் இருக்க போறீயா?

இதில உங்களுக்கு என்ன லாபம்?

உண்ணாவிரதம் இருந்தா உனக்கு லாபம்… உடம்பு குறையும்! மெளன விரதம் இருந்தா எனக்கு லாபம்…

திருமதிக்கு கோபம் போன இடம் தெரியலவில்லை!

”தயிருக்குச் சட்டி ஆதாரம்

சட்டிக்குத் தயிர் ஆதாரம்!, போவீகளா அந்தப்பக்கம்!” எனச்சொல்லிச் சிரிக்க ஆரம்பித்தார்!

நான் எதாவது சொன்னா… நீங்க எதாவது சொல்லியே ஆகணுமா?

ஆமாம்…

இதை தான் நியூட்டனின் மூன்றாவது விதி சொல்லுது…

என் விதி, அதையெல்லாம் நான் படிக்கல…

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உங்களுக்கு நியூட்டனின் முன்றாவது விதிக் கூடவா ஞாபகம் இல்லை?

ஓ! தெரியுமே! கவிஞர் நா. முத்துக்குமார் எழுதிய புத்தகம்…

அது சரி! ஆனா, நா கேட்டது அறிவியல வர நீயூட்டன் மூன்றாவது விதி!

”முழுசா தெரியாது. ஆனா கடைசி வரி மட்டும் தெரியும்!” எனத் தோளை உயர்த்தினேன்.

சரி கடைசி வரி மட்டும் சொல்லுங்க…

”என்பது தான் நியூட்டனின் மூன்றாவது விதி ஆகும்.” இது தான் கடைசி வரி,

திருமதிக்கு என்ன சொல்வதென்றுத் தெரியவில்லை!

நானே சொல்றேன்…

சொல்லு… சொல்லு!!

ஒவ்வொரு விசைக்கு சமமான எதிர்விசை உண்டு…

நான் சிரிக்கும்போது திருமதிக்கு கோபம் வருவதை தான் சொல்கிறார் இப்படி சொல்கிறாரோ என நினைத்து,

”இந்த நியூட்டனின் மூன்றாவது எல்லாம் உங்க அப்பா, அம்மாவுக்கு பொருந்தாதா?” எனக்கேட்டேன்.

வாக்கிங்
வாக்கிங்

எங்க அப்பா, அம்மா காலத்தில மட்டுமல்ல, சங்க காலத்தில கூட இந்த விதி இருந்திருக்கு தெரியுமா?

அப்படியா விஷயம்?

திருமதி பாட ஆரம்பித்தார்…

புல்வீழ் இற்றிக் கல்லிவர்வெள் வேர்
வரையிழி அருவியின் தோன்றும் நாடன்
தீதில் நெஞ்சத்துக் கிளவி நம் வயின்
வந்தன்று வாழி தோழி நாமும்
நெய் பெய்தீயின் எதிர்கொண்டு
தான் மணந்தனையமென விடுகந் தூதே.

(குறுந்தொகை 106,கபிலர்)

திருமதி நிறுத்தி மூச்சு விட்டார்…

த்தூ…

இவ்வளவு பெரிய பாட்டு பாடினது கேக்கிலையா? த்தூ மட்டுமா கேட்டுது?

ஆமாம் என்று சொல்ல முடியாதே, ஆகையால்,” கடைசியாக தூதே… மட்டும் காதில விழுந்தது…” என்றேன்.

உங்க காதில ஈயத்தை ஊத்த…

சரி…சரி… என்ன அர்த்தம்?

தலைவனிடமிருந்து தூது வருகிறது! பதிலுக்கு தீப்போன்று தூது விடுவோம் என்கிறாள் தலைவி!

இப்பவெல்லாம் RTI க்கு பதில் சொல்ற மாதிரி ஒரே வரியில விளக்கத்தைச் சொல்லி முடிச்சிட்ட...

ஆமாங்க… RTI ஐ வந்த புதுசில பயந்து போய் விரிவா பதில் சொன்னாங்க…இப்ப எல்லோரும் சமாளிக்கப் பழகிட்டாங்க… எதைக்கேட்டாலும் தீப்போல பதில் வரும்!

ஓ… அதனால தான் பதிலைப் படிச்சவுடன் வயிறு எரியுதோ! சரி… அர்த்தம் சொல்லு… தலைவன் தூது என்னாச்சு?

அது தான் நியூட்டனின் மூன்றாவது விதி! பழிக்குப்பழி!!

சீக்கிரமா சொல்லு... ரொமான்ஸா இருக்கே!


தலைவியின் மனதைக் கொள்ளைக்கொள்ள தலைவன் தன் நெஞ்சத்தனைய தூது விடுகிறான்.

ஆரம்பமே அசத்தால...சொல்லு!

ஆனால், தலைவியோ”தூது பயனற்றது!” என உதட்டைப் பிதுக்கிறாள்.

பசங்களை உசுப்பிதேறதே வேலையா போச்சு! ஏனாம்?

”தலைவன் மலையில் கற்களுக்கிடையே பரவிய வேர் கொண்ட இற்றி மரம் உள்ளது”

அட ஆத்தி! அதென்ன இற்றி மரம்?

அத்தி மரம் தான்…

அத்தி மரம் நல்லது தானே?

Representational Image
Representational Image

”அந்த அத்திமரம் காதலுக்கு எந்த உபயோகமில்லை… ஆனா, அதன் வேர் அருவி மாதிரி தெரியுதுன்னு சொல்லி நம்மை மயக்கப் பார்க்கிறான்… நாம் அதை நம்பி ஏமாந்திடக்கூடாது… நாமும் நெய் ஊற்றப்பட்ட தீ போல… தூது விட்டு வைச்சு செய்யணும்…”ன்னு தலைவி தோழியிடம் கூறுகிறாள்.

அதாவது விசைக்கு எதிர் விசை…

ஆகா… நியூட்டனின் மூன்றாவது விதி…

எனக்கு வீட்டில் நடக்கும் சண்டைகள் ஞாபகம் வந்தன. எல்லாமே நீயூட்டனின் மூன்றாவது விதி தான்.

வாய் விட்டுச் சிரித்தேன்…

எல்லா பல்லும் தெரிய சிரிக்கிறீங்க… என்னவோ சந்தோசமா நினைச்சு இருக்கீங்க…

டக்கென்று வாயை மூடிக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன்!

  • வாக்கிங் தொடரும்

- சி.ஆர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு