வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
ஏதோ ஒரு வருடத்தின் ஏதோ ஓர் ஊரின் ஏதோ ஒரு புத்தகக் கண்காட்சியில் தான் அந்தப் புத்தகத்தைப் பார்த்தேன். இரண்டு பெரும் பதிப்பாளர்களின் இரண்டு பெருத்த ஸ்டால்களுக்கு இடையே, ஒரு கொழுத்த புத்தகத்தின் நடுவே சொருகப்பட்ட புக்மார்க்கைப் போல், திணறி நின்றிருந்தது அந்த ஸ்டால்.
உள்ளே இடம் கொள்ளாமல் வெளியே பிதுக்கப்பட்டிருந்த புத்தகங்கள் இரு பக்கத்து ஸ்டால்களிலும் இறைந்து கிடைக்க, போடப்பட்டிருந்த ஒற்றை மேசையின் மீது இருந்த ஒரே ஒரு புத்தகத்தைத் தவிர வேறு எதுவும் இன்றிக் காலியாயிருந்தது அந்த ஸ்டால்.

ஒற்றைப் புத்தகத்தின் ஒற்றைப் பிரதிக்கு ஒரு ஸ்டாலா? ஆச்சர்யமா ஆவலா என்று அறிவதற்குள் கைகள் அந்தப் புத்தகத்தை எடுத்திருந்தன.
வெள்ளை அட்டையில் 'புத்தகம்' என்ற கருப்பு எழுத்துக்களைத் தவிர வேறு எதுவும் இல்லை. எழுதியவரின் பெயரோ, பதிப்பகத்தின் முகவரியோ எதுவும் இல்லை. பின் அட்டையைத் திருப்பிப் பார்த்ததில் நூற்குறிப்போ ஆசிரியரைப் பற்றியோ எதுவும் இல்லாமல் வெறுமையான வெள்ளையாயிருந்தது.
"வாங்கிக்கறீங்களா?"
திடுக்கென்று தலை நிமிர்த்திப் பார்த்தேன். மார்பு வரைத் தொங்கிய வெள்ளை தாடியும், தோள்கள் வரைத் தொங்கிய நரைத்த முடியுமாய் கண்களில் புன்னகை வழிய முன்னே நிற்பவரை ஸ்டாலில் பார்த்த மாதிரி நினைவில்லை.

"என்ன புக் இது? எதுவுமே போடலையே?"
"உள்ள போட்டிருக்கே, பாக்கலையா?"
அட்டையைப் பிரித்து முதல் பக்கத்தைப் பார்த்தேன்.
"ஹலோ", என்றிருந்தது.
வேறு எதுவும் இல்லை.
மற்ற பக்கங்களை விசிறிப் பார்த்தேன். வெறும் வெள்ளைத் தாள்கள்.
"ஒரு வார்த்தையைத் தவிர வேற எதுவும் இல்லையே. இது என்ன தான் புக்?"
"நீங்க தேடற புக் தான்".
"நான் தேடற புக்கா? நான் புக் வாங்கணும்னே வரலையே இங்க".
"சரி, அப்போ உங்களைத் தேடற புக்ன்னு வேணும்னா வச்சுக்கோங்க".
"என்னையத் தேடற புக்கா? என்ன கிண்டல் பண்றீங்களா?"
"அதுக்கா ஸ்டால் போட்டு உக்காந்திருக்கேன்?"
"சரி, பின்ன எதுக்கு?"
"நீங்க வருவீங்கன்னு தான்".

"என்னது, நான் வருவேன்னா? நான் வருவேன், இங்க வந்து நிப்பேன்னு எனக்கேத் தெரியாது. உங்களுக்குத் தெரிஞ்சு நீங்க உக்காந்திருக்கீங்களா நான் வருவேன்னு . . .? என்ன மறுபடியும் கிண்டலா?"
"நீங்களே சொல்லுங்க… எவ்வளவு பேர் இப்போ இங்க இருக்காங்க? எல்லா ஸ்டால்லையும் எவ்வளவு கூட்டம் நிக்குது . . .? இங்க யாரு இருக்கா உங்களைத் தவிர?"
சுற்றிலும் பார்த்தேன். விடுமுறை தினமாதலால் கூட்டம் அலைமோதியது. எனக்கு இருபுறமும் இருக்கும் ஸ்டால்களில் உள்ளே நுழைய இடமில்லாமல் வெளியேக் காத்து நின்றன மனித உடல்கள்.
"ஒத்த புஸ்தகத்த வச்சிருந்தா யாரு வருவா?"
"ஒத்த புஸ்தகம் இல்லை. ஒருத்தருக்கான புஸ்தகம்".
"சரி . . . நீங்க சொல்றபடியே வச்சுக்குவோம். இது ஒருத்தருக்கான புஸ்தகம்னு, அந்த ஒருத்தர் யாரும் வரலைன்னா . . .?"
"அடுத்தக் கண்காட்சிக்குப் போகணும்".
"அப்பிடி எத்தனை கண்காட்சிக்குப் போயிருப்பீங்க?"
"எத்தனை கண்காட்சிக்குப் போயிருந்தா என்ன? இப்போ இங்க இருக்கேன். வாங்கிக்கறீங்களா?"
"ஒண்ணுமே இல்லாத புக்கை எப்பிடி வாங்கறது?"
"ஏன்…? இனிமே இருக்கலாமில்லையா?"
"என்னது? இனிமே இருக்குமா? என்ன மறுபடியும் கிண்டலா?"
"இல்லையே".

ஊன்றிப் பார்த்தேன் அவரை. எந்தச் சலனமுமில்லாமல் சிறு புன்னகையுடன் என் பார்வையை எதிர்கொண்டார்.
ஒன்றும் புரியாமல் மறுபடியும் முன் அட்டையைத் திறந்து பார்த்தேன்.
முதல் பக்கத்தில் இருந்த ஒற்றை வார்த்தை "ஹலோ"வும் இப்போது இல்லை.
திடுக்கிட்டு அவரைப் பார்த்தேன்.
"என்ன இது . . . 'ஹலோ' கூட இப்ப இல்லை? வெத்துக் காகிதமா இருக்கு எல்லாம்?"
"இனிமே தான் எழுதிக்கணும்", என்றார் மேலும் ஆழமான புன்னகையுடன்.
அந்த விளையாட்டை மேலும் தொடர விருப்பமின்றி புத்தகத்தை மேசை மேல் வைத்துவிட்டு நகர்ந்தேன் எதுவும் சொல்லாமல். அவரும் எதுவும் பேசாமல் என்னையேப் பார்த்துக்கொண்டிருந்தார் புன்னகை மாறாமல்.
இரண்டு எட்டு கூட எடுத்து வைத்திருக்க மாட்டேன், சடாரென்றுத் திரும்பி வந்து மேசையில் இருந்த புத்தகத்தைக் கையில் எடுத்தேன்.
"எவ்ளோ?"
"நீங்க எவ்வளவு குடுக்கறீங்களோ அவ்வளவு".

அதிர்ச்சியடையும், ஆச்சர்யப்படும் நிலைகளையெல்லாம் அப்போது நான் கடந்துவிட்டிருந்தபடியால் எதுவும் சொல்லாமல், பர்ஸில் கைவிட்டுக் கிடைத்ததை உருவி மேசையில் வைத்துவிட்டு, புத்தகத்தைக் கையில் எடுத்துக்கொண்டுத் திரும்பிப் பார்க்காமல் நடந்தேன்.
வாங்கிய புத்தகத்தை மார்போடு அணைத்துக்கொண்டு, மீதமிருந்த ஸ்டால்களில் பார்வையை சுழலவிட்டுக்கொண்டு நடந்தாலும், மனம் மட்டும் நான் விட்டு வந்த ஸ்டாலிலேயே நின்றிருந்தது. கண்காட்சியை விட்டு வெளியேறும் வாசலுக்கு அருகில் வந்த போது சட்டென்று தோன்றியது - 'வேறு யாரேனும் அந்த ஸ்டாலுக்கு முன் நின்றிருப்பார்களோ?' என்று.
தெரிந்து கொள்ளும் ஆவல் உந்தித் தள்ள, தேடிக்கொண்டே நடந்தேன், அடையாளமாய் இருந்த அந்த இரண்டு பெரும் பதிப்பாளர்களின் இரண்டு பெருத்த ஸ்டால்களை. அவற்றைக் கண்டவுடன் நின்றேன் ஒன்றும் புரியாமல்.
இரண்டிற்கும் நடுவே இடைச்செருகலாய் எதுவும் இல்லை. ஒரேத் தடுப்புப் பிரிப்பு இரண்டு ஸ்டால்களுக்கும் இரண்டு பக்க புத்தக அலமாரிகளைத் தாங்கி நிற்க, கூட்டம் இன்னமும் அங்கே வழிந்துகொண்டு தான் இருந்தது.

"இங்க உங்களுக்குப் பக்கத்துல இன்னொரு சின்ன ஸ்டால் இருந்ததே . . . அது எங்க காணோம்?" என்று கேட்டேன் பக்கத்து ஸ்டாலின் ஊழியர் ஒருவரிடம்.
"இன்னொரு சின்ன ஸ்டாலா? அப்படி எதுவும் இல்லையே இங்க. மொதல்ல இருந்து நாங்க தான் இருக்கோம்", என்றார்.
"இல்லீங்க . . . இருந்தது. இந்த புக் கூட அதுல தான் வாங்கினேன்", என்று கையிலிருந்த புத்தகத்தைக் காட்டினேன்.
புத்தகத்தையும் என்னையும் மாறி மாறி பார்த்தவர், "தெரியலீங்க", என்றுவிட்டு அவர் வேலையைப் பார்க்கப் போய்விட்டார்.
சிரிப்பு வந்தது எனக்கு. என் வாழ்க்கையில் இப்படி நான் ஏமாந்ததில்லை. ஏதேதோ ஏமாற்று வித்தைகளைப் பற்றியும் மோசடிகளைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் 'அவ்வளவு கூட மூளையில்லாமலா இருக்காங்க!' என்று எண்ணி சிரித்துக் கொள்வேன். இதோ . . . இப்போது . . . இங்கே . . . நானே . .
'பர்ஸிலிருந்து எவ்வளவு எடுத்துக் கொடுத்தேன் என்று தெரியவில்லையே', என்று நொந்து கொண்டு பர்ஸை எடுத்துப் பார்க்க வலது கையிலிருந்த புத்தகத்தை இடது கைக்கு மாற்றும் போது கை நழுவி அது கீழே விழுந்து திறந்தது.
விழுந்ததை எடுக்க அனிச்சையாய்க் கீழே குனியும் போது கண்ணில் பட்டன பக்கங்கள் நிரப்பியிருந்த அச்சடித்த எழுத்துக்கள்.
சடாரென்று எகிறிய இதயத் துடிப்புடன் அவசரமாய்க் குனிந்து எடுத்து மொத்தமாய் விசிறிப் பார்க்கையில் வெள்ளைப் பக்கங்கள் முழுதும் விரவியிருந்தன கருப்பு வார்த்தைகள். கைகள் நடுங்க முதல் பக்கத்தைப் பிரித்தேன்.

“ஏதோ ஒரு வருடத்தின் ஏதோ ஓர் ஊரின் ஏதோ ஒரு புத்தகக் கண்காட்சியில் தான் அந்தப் புத்தகத்தைப் பார்த்தேன்”, என்று ஆரம்பித்து நிகழ்ந்தவைகள் அனைத்தும் நிரப்பியிருந்தன பக்கங்களை.
இதயத்தின் இரைச்சல் காதுகளுக்குள் அலையடிக்க இறுகப் பிடித்த விரல்களுடன் அவசரமாய்த் தேடி வாசித்த இறுதி வரிகள்…
"இதயத்தின் இரைச்சல் காதுகளுக்குள் அலையடிக்க இறுகப் பிடித்த விரல்களுடன் அவசரமாய்த் தேடி வாசித்த இறுதி வரிகள்… “ஏதோ ஒரு வருடத்தின் ஏதோ ஓர் ஊரின் ஏதோ ஒரு புத்தகக் கண்காட்சியில் தான் அந்தப் புத்தகத்தைப் பார்த்தேன்”.
__________
கா. தாஸ்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.