Published:Updated:

மின்மினிப் பூச்சிகளும் பின்னே ஒரு வெஜிடபிள் ஃப்ரைடு ரைஸும்! | விருந்தோம்பல் | My Vikatan

வெஜிடபிள் ஃபரைடு ரைஸ்

எல்லோரும் நடந்து கொண்டிருக்கும் போது, காய்ந்த சருகுகள் மேல் லேசான ஒரு சத்தம் கேட்டது. மெதுவாகத் திரும்பிப் பார்க்கும்போது இரண்டு காட்டெருமைகள் நின்று அசை போட்டு கொண்டிருந்தன. குழந்தைகள் இருந்ததால் அப்படியே அமைதியாகத் தங்கியிருக்கும் இடத்துக்குத் திரும்பி விட்டோம்.

மின்மினிப் பூச்சிகளும் பின்னே ஒரு வெஜிடபிள் ஃப்ரைடு ரைஸும்! | விருந்தோம்பல் | My Vikatan

எல்லோரும் நடந்து கொண்டிருக்கும் போது, காய்ந்த சருகுகள் மேல் லேசான ஒரு சத்தம் கேட்டது. மெதுவாகத் திரும்பிப் பார்க்கும்போது இரண்டு காட்டெருமைகள் நின்று அசை போட்டு கொண்டிருந்தன. குழந்தைகள் இருந்ததால் அப்படியே அமைதியாகத் தங்கியிருக்கும் இடத்துக்குத் திரும்பி விட்டோம்.

Published:Updated:
வெஜிடபிள் ஃபரைடு ரைஸ்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

முழு ஆண்டு தேர்வு விடுமுறையில் மூன்று நாள் பயணமாக கோடை விடுமுறைக்கு ஓர் உல்லாசப் பயணம் செல்லலாமா என்று நண்பர்களுடன் வாட்ஸ்அப் மூலம் உரையாடிக் கொண்டிருந்தோம். அப்போது எந்த ஒரு பரபரப்பும் இல்லாத இடத்துக்குச் செல்லலாம் என்று முடிவு செய்தோம்.
டூர் என்றாலே பார்க், லேக், வீயூபாயின்ட்ஸைக் காண ஒவ்வோர் இடத்திலும் கூட்ட நெரிசல், ஒவ்வொரு வாகனத்துக்கும் இடையே மெதுவான நகர்தலுடன் பல மணி நேரக் காத்திருப்பு, பிறகு ஒரு வழியாக பார்க்கிங் இடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு அங்குள்ள இடங்களை வேகமாகப் பார்த்துவிட்டு கிளம்பிவிடுகிறோம்.

அங்குள்ள இயற்கை அழகை ருசிக்க முடிவதில்லை. இது போல இல்லாமல் நாம் அந்த ஊரின் இயற்கை அழகையும், இதமான பருவநிலையையும் ரசிக்க வேண்டும் என்று நினைத்தோம். அப்போது கணவர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் கேரள நண்பர் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள நெல்லியம்பதி என்ற ஓர் அழகிய ஊரைப் பற்றிக் கூறினார். கேரளாவின் வித்தியாசமான டூரிஸ்ட் ஸ்பாட் அது. அங்கு கோடை காலம் உள்ளிட்ட அனைத்துக் காலங்களிலும் குளிர்ச்சியாகவே இருக்கும்.

சென்னையிலிருந்து ஆறு குடும்பங்களாகக் கிளம்பி கோயம்புத்தூர் சென்றோம். பின்பு அங்கிருந்து ஒரு வேனில் நெல்லியம்பதிக்குச் சென்றோம். மலையேறும்போது சில்லென்ற இயற்கைச் சூழலில் எந்த விதமான நெரிசலோ, புகையோ இல்லாமல் பயணித்தது ஆனந்தமாக இருந்தது. வேனில் செல்லும்போது நெளிந்து நெளிந்து செல்லும் பாதைகளில் ‌‌‌‌‌‌‌ஆங்காங்கே வீயூபாயின்ட்ஸ்(காட்சி முனைகள்) வந்ததும் நின்று பார்வையிட்டோம்.

சற்று மேலே சென்றதும் நாங்கள் தங்கியிருந்த ரிசார்ட்டை நெருங்கும்போது பரந்த தேயிலைத் தோட்டங்கள். அவற்றைப் பார்க்கும்போது பச்சை நிற கார்பெட்டை மலையில் போர்த்தியதுபோல காட்சி அளித்தது. அதன் பின்னர் நாங்கள் தங்கியிருந்த காஃபி வேலி ரிசார்ட்டுக்குள் நுழைந்தோம். செல்லும் வழி கொஞ்சம் குண்டும் குழியுமாக இருந்ததால் வளைந்து நெளிந்து சென்றோம். காஃபி வேலி ரிசார்ட்டின் உள்ளே சுற்றிச் சுற்றி வானுயர்ந்த மரங்களும் தோட்டங்களும் அடர்ந்த தேக்குமரங்களும் இருந்தன. சிறிய நீரோடையைச் சுற்றி சின்ன சின்ன குடில்கள் அமைந்திருந்தன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
நான் அப்படியே நின்று கொண்டு சில நிமிடங்கள் அந்த அமைதியான சூழலையும் இயற்கையையும் ரசித்துக்கொண்டே இருந்தேன். நாள் முழுக்க பார்த்துக்கொண்டே இருக்கலாம். நீண்ட நாட்களுக்குப் பின் நூற்றுக்கணக்கான சிட்டுக் குருவிகளை அங்கே காண முடிந்தது. மலை அணில்கள் இங்கும் அங்கும் தாவிக் கொண்டிருந்தன.

பின் அவரவர் அறைக்குச் சென்று செட்டிலானோம். காலை உணவாக கேரளா ஸ்பெஷல் புட்டு, கடலைக் கறி மற்றும் அவித்த நேந்திரம் பழம் வைத்தார்கள். காலை உணவு சாப்பிட்ட பிறகு ரிசார்ட்டை சுற்றிப் பார்க்க கிளம்பினோம்.

எல்லோரும் நடந்து கொண்டிருக்கும் போது, காய்ந்த சருகுகள் மேல் லேசான ஒரு சத்தம் கேட்டது. மெதுவாகத் திரும்பிப் பார்க்கும்போது இரண்டு காட்டெருமைகள் நின்று அசை போட்டு கொண்டிருந்தன. குழந்தைகள் இருந்ததால் அப்படியே அமைதியாகத் தங்கியிருக்கும் இடத்துக்குத் திரும்பி விட்டோம். ரிசார்ட்டில் அமைந்துள்ள பிளே ஏரியாவில் குழந்தைகள் பெரியவர்கள் எல்லோரும் சேர்ந்து விளையாடி காலை பொழுது நகர்ந்தது. அப்போது குழந்தைகளின் சத்தம் கேட்டு அந்த ஊரில் இருக்கும் சிறுவன் வந்து குழந்தைகளுடன் விளையாட ஆரம்பித்தான். பிறகுதான் தெரிந்தது அந்த சிறுவன் அவன் அப்பாவோடு கீழே அமைந்துள்ள நிர்மரா என்ற ஊரிலிருந்து ரிசார்ட்டில் சமைப்பதற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் எடுத்து வந்தவன் என்று.

Nelliyampathy
Nelliyampathy

மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத இந்த கரடு முரடான பாதைகளில் எப்படி தினமும் சென்று வருகிறீர்கள் என்று கேட்டதும் பற்கள் தெரிய சிரித்துக் கொண்டே ஓடிவிட்டான்.
ரிசார்ட்டில் கேரளா ஸ்பெஷல் லஞ்ச் ரெடியானது. அவியல், காராமணி தொவரன், ஓலன், எரிசேரி, சாம்பார், ரசம், பாகற்காய் தீயல் என அறுசுவை விருந்து. எல்லா உணவுகளும் மிகவும் சிறப்பாக இருந்தன.


பின் வெளியே இருக்கும் தேயிலைத் தோட்டத்துக்குச் சென்றோம். தேயிலைத் தோட்டத்துக்கு அருகே நடக்கும்போது ஈரத்துளிகளுடன் நனைந்த இலைகளைத் தொட்டுப் பார்க்கும்போது மனதைச் சொக்க வைத்து விட்டது. அங்கே நின்று புகைப்படங்கள் எடுத்துவிட்டு சற்று மேலே சென்று பயிர்ப்பண்ணைகளைப் பார்க்க சென்றோம். இவ்வாறு அன்று இயற்கையை ரசித்ததில் நேரம் போனதே தெரியவில்லை.
ரிசார்ட் ஓனர் எங்களிடம் எங்கு சென்றாலும் மாலை 6 மணிக்கு மேல் மக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்படும். அதனால் 7 மணிக்குள் திரும்பி வருமாறு கூறினார். நாங்கள் இருட்டுவதற்கு முன்பே ரிசார்ட்டுக்கு வந்து சேர்ந்தோம்.

பிறகு டின்னர் ரெடியானதும் சாப்பிடச் சென்றோம். ஒவ்வொரு வேளையும் சுடச்சுட சமைத்து பஃபே ஆக ஏற்பாடு செய்திருந்தனர். நாங்கள் தங்கியிருந்த ஊரில் எந்த ஒரு சின்ன ஹோட்டலோ, டீக்கடையோ இல்லை. ஆனால், நாங்கள் எதிர்பார்த்ததிற்கும் மேலாக ஒவ்வொரு வேளையும் விதவிதமான உணவுகளை அங்கேயே தயார் செய்தார்கள். செஃப் அந்த ரிசார்ட்டிலேயே இருந்ததால் அவரிடம் சமையல் குறிப்புகளைக் கேட்க ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது.

அன்று டின்னருக்கு சாஸ், செயற்கைச் சுவையூட்டிகள் ஏதும் சேர்க்காமல் சுவையான வெஜிடபிள் ஃபரைடு ரைஸ், குடைமிளகாய் பனீர் வைத்து செமி டிரை கிரேவி மற்றும் சப்பாத்தி டால் செய்திருந்தார்.

Nelliyampathy
Nelliyampathy

அன்று சாப்பிட்ட ஃபரைடு ரைஸ் பார்க்கவே அருமையாக இருந்தது. அரிசியை சரியான பதத்தில் வேகவைத்து ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் பொடியாக நறுக்கிய கேரட், குடைமிளகாய், வெங்காயத்தாள் எல்லாம் சேர்ந்து செய்திருந்தார். சாப்பிட ஆரம்பித்தவுடனே நான் நேரே அவர் கிச்சனுக்குள் நுழைந்து எப்படி இவ்வளவு டேஸ்ட்டான ஃபரைடு ரைஸ் என்று கேட்டதும் செஃப் முகத்தில் சந்தோஷம். ‘நீங்க சாப்பிட்டு வாருங்கள்... பிறகு நான் கற்றுத் தருகிறேன்’ என்றார். ஃபரைடு ரைஸுக்கு சாதத்தை நாங்கள் சிறிது நேரம் முன்பே தயார் செய்து ஆறவைத்து விடுவோம் என்றார்.

ஃபரைடு ரைஸ் எப்போது செய்தாலும் சிறிதளவு செலரி தண்டுகள் சேர்ப்பேன் என்றார்.

‘பொடியாக நறுக்கிய கேரட் மற்றும் பீன்ஸை சிறிது நேரம் கொதிக்கும் நீரில் போட்டு பிளான்ச் செய்து கொள்வேன். இப்படி செய்தால் பார்க்கவும் அழகாக இருக்கும்; சாதத்தோடு கலக்கும்போது சரியான பதத்தில் இருக்கும். பச்சையாகச் சேர்க்கும்போது பீன்ஸ் மற்றும் கேரட் சரியாக வதங்காமல் சாதத்தில் பச்சையாக இருப்பது போல இருக்கும்’ என்றார். அதன் பின் நாங்களே தயார் செய்யும் மிளகுப்பொடி சேர்ப்பேன் என்றார். ரெடிமேட் மிளகுத்தூள் மற்றும் சாஸ், வினிகர் என எதுவுமே வேண்டாம் என்றார்.

சிறிதளவு செலரி தண்டுகளும், மிளகுத்தூள் மட்டுமே போதும்... இந்த ரைஸுக்கு. செயற்கைச் சுவையூட்டிகள் தரும் அந்த உமாமி சுவையை (Umami flavours) இந்த இரண்டு பொருட்களும் தந்துவிடும் என்றார்.

காய்கறிகளை வதக்கும்போது விருப்பப்பட்டால் சிறிது சர்க்கரை சேர்த்து கொள்ளலாம் என்றார். குழந்தைகள் மட்டும் அல்ல... பெரியவர்களும் விரும்பிச் சாப்பிட்டு ஃபரைடு ரைஸ் சீக்கிரமே காலியாகி விட்டது.

Nelliyampathy
Nelliyampathy

இரவு உணவு முடிந்து உறங்கத் தயாராகும் முன்பு அரை மணி நேரம் வெளியே உட்கார்ந்து பேச ஆரம்பித்தோம். ரிசார்ட்டில் குளிருக்கு இதமாக தீ மூட்ட (கேம்ப் ஃபையர்) எல்லோரும் சுற்றி அமர்ந்துகொண்டு ரிசார்ட் ஒனரும் செஃப்பும் எங்களோடு சேர்ந்து நெல்லியம்பதி பற்றிப் பேசிக்கொண்டே இருந்தார்கள். ஒவ்வொரு விஷயத்தையும் பேசும்போது மலையாளம் கலந்த அந்தத் தமிழைக் கேட்பதற்கே ஆர்வமாக இருந்தது. அவர்களின் பேச்சுமொழியை எழுத்தால் விவரிக்க முடியவில்லை.

நீங்கள் எல்லோரும் சுற்றிப் பாருங்கள்... ஆங்காங்கே செடிகளில் மேலே ஒளி தெரியும் என்றார். பிறகுதான் பார்த்தோம்... சுற்றிச் சுற்றி பல மின்மினிப் பூச்சிகள் மின்னின. இருள் சூழ்ந்த காட்டில் அந்தக் காட்சியை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது.‌ அதேபோல மற்றொரு விஷயத்தையும் ரொம்ப கூலாகச் சொன்னார்... 'இருட்டிய பிறகு அவ்வப்போது யானை, முள்ளம்பன்றி, செந்நாய், சிறுத்தை, காட்டெருமை போன்ற வனவிலங்குகளின் வருகையை காண முடியும்’ என்று. அதனால் காலை நன்றாக விடிந்த பிறகே வாக்கிங் செல்லுங்கள் என்று கூறிவிட்டு உள்ளே சென்று விட்டார்.

எனக்கு லைட்டாக பயம் ஸ்டார்ட்டாகி விட்டது. விடிய விடிய தூக்கம் வரவில்லை. சின்ன வண்டு சத்தம், வெளியே காற்றில் தேக்கு மரங்களின் இலைகள் ஜன்னலை உரசும் போதுகூட ஒரு பயம். ஒருவேளை ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துவிட்டு மிருகங்கள் இரவு வந்துவிடுமோ என்ற‌ எண்ணம் ஓடி, விடிய விடிய தூக்கம் வராமல்‌, அதிகாலை வரை அந்தப் பயம் நீண்டு கொண்டிருந்தது.

காலை எழுந்தவுடன் ‘அப்பாடா சாமி... நல்ல வேளை சிறுத்தைகள், யானைகள் யாரும் வரவில்லை’ என்று சொல்லிக் கொண்டே ஒரு லேசான பயத்தோடு கதவைத் திறந்து டீ குடிக்க சென்றேன்.‌ பின் சூடான டீயைக் குடித்ததும் ஒரு குட்டி வாக்... அங்கே நடந்து செல்லும்போது லேசான பனிமூட்டமும் மேகக்கூட்டங்களும் கண்கொள்ளா காட்சியாக இருந்தன. பிறகு ரிசார்ட்டை காலி செய்யும்போது ரிசார்ட் ஓனர் மற்றும் செஃப்பைச் சந்தித்து அவருக்கு நான் செய்த ரவா லட்டை டேஸ்ட் செய்யக் கொடுத்தேன்.

Nelliyampathy
Nelliyampathy

இருவரும் ரசித்து சாப்பிட்டார்கள். அவர்களுக்கு மட்டும் அல்ல... அந்த டிரிப்புக்கு வந்த எல்லோருக்கும் ரவா லட்டு மிகவும் பிடித்திருந்தது! நாங்கள் தங்கியிருந்த அந்த இரண்டு நாட்களும் சுத்தமான காற்றைச் சுவாசித்து, இயற்கையோடு இணைந்து, பறவைகளின் பாடல்களைக் கேட்டு, நீரோடையின் சத்தங்களை ரசித்து, பலவிதமான உணவுகளையும் மனநிறைவோடு சாப்பிட்டு, இரவு மட்டும் லேசான த்ரில்லோடு மறக்க முடியாத நினைவுகளாக அமைந்தது எங்களது நெல்லியம்பதி டிரிப்.

இப்போது செஃப் கற்றுக்கொடுத்த வெஜிடபிள் ஃபரைடு ரைஸ் செய்முறையைப் பார்ப்போம்.

வெஜிடபிள் ஃபரைடு ரைஸ்

தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி - ஒரு கப் (225 கிராம்)
பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் வெள்ளை பகுதி - ஒரு டேபிள் ஸ்பூன்
பொடியாக நறுக்கிய செல்லரி தண்டுகள் - ஒரு டேபிள் ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கேரட் - கால் கப்
பொடியாக நறுக்கிய பீன்ஸ் - கால் கப்
நீளமாக நறுக்கிய கோஸ் - 2 டேபிள் ஸ்பூன்
பொடியாக நறுக்கிய குடைமிளகாய் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
சர்க்கரை - 1/4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் இலைகள் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை

ஸ்டெப் 1
பாஸ்மதி அரிசியை முன்று முறை கழுவி 15 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தில் ஐந்து கப் தண்ணீரை கொதிக்க விடவும். பிறகு ஊறவைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து மிதமான சூட்டில் வைத்து வேகவிடவும். அரிசி 90 சதவீதம் வெந்ததும் தண்ணீரை வடிகட்டிய பின்பு ஆற வைத்துக் கொள்ளவும்.

ஸ்டெப் 2
ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் சேர்த்து கொதித்ததும் பொடியாக நறுக்கிய கேரட் மற்றும் பீன்ஸை சேர்த்து இரண்டு நிமிடங்கள் லேசாக வேகவைத்து தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும். (அதிக நேரம் வேகவைக்க வேண்டாம்).

ஸ்டெப் 3
அகலமான கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் நறுக்கிய வெங்காயத்தாளின் வெள்ளை பகுதி மற்றும் செல்லரி தண்டுகள் சேர்த்து வதக்கவும். பின் நறுக்கிய முட்டைகோஸ் மற்றும் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். பின் வேகவைத்த பீன்ஸ் மற்றும் கேரட் சேர்த்து வேகமாக வதக்கவும். பின் அதோடு மிளகுத்தூள், சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

ஸ்டெப் 4
காய்கறிகள் வதங்கியதும் வேக வைத்த சாதத்தை சேர்த்து, தேவைப்பட்டால் சிறிது மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து, பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் இலைகள் சேர்த்து, சில நிமிடங்களுக்கு நடுவே இருந்து சாதத்தைப் பிரட்டி இறக்கவும்.

விருந்தோம்பல் பகுதியில் வெளியான முத்துலட்சுமி மாதவகிருஷ்ணனின் சமையல் குறிப்பு வீடியோக்களை இங்கே https://bit.ly/virundhombal1 காணலாம்.

சாஸ் மற்றும் சுவையூட்டிகள் ஏதும் சேர்க்காமல் செய்யும் இந்த ஃபரைடு ரைஸ் இனி எல்லோருடைய ஃபேவரைட் ரைஸாக இருக்கும் என நம்புகிறேன். மீண்டும் ஒரு அறுசுவை அனுபவ உணவோடு சந்திப்போம்!

பின்னே ஒரு விஷயம்: நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆசிரியர் தினத்தன்று என் பள்ளி ஆசிரியரிடம் பேசிய போது. ‘myvikatan-ல் வெளியாகும் உன் சமையல் குறிப்புகளைத் தவறாமல் படிப்போம்... குறிப்புகளை மட்டும் சொல்லாமல் உன் அனுபவங்களையும் பதிவு செய்வது மிகவும் அழகாக உள்ளது’ என்று கூறினார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.