Published:Updated:

அரிசோனா பெரிய பள்ளத்தாக்கில் ஒரு சாகச பயணம்! - வரகால்பட்டு டூ அமெரிக்கா - 2 | My Vikatan

கொலராடொ ஆறு

எங்கள் பயண திட்டப்படியும், கை கடிகாரத்து ஜிபிஎஸ் படியும் இந்நேரம் ஃபாண்டம் ரான்ச் வந்திருக்க வேண்டும். இன்னும் ஏன் வரவில்லை என்று எண்ணம் எல்லோருக்கும் ஓடியது.

அரிசோனா பெரிய பள்ளத்தாக்கில் ஒரு சாகச பயணம்! - வரகால்பட்டு டூ அமெரிக்கா - 2 | My Vikatan

எங்கள் பயண திட்டப்படியும், கை கடிகாரத்து ஜிபிஎஸ் படியும் இந்நேரம் ஃபாண்டம் ரான்ச் வந்திருக்க வேண்டும். இன்னும் ஏன் வரவில்லை என்று எண்ணம் எல்லோருக்கும் ஓடியது.

Published:Updated:
கொலராடொ ஆறு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

ஃபாண்டம் ரான்ச் இன்னும் 8 மைல்கள் என்று சொன்னேன் இல்லையா?

பாதையில் வெப்பநிலை 58 C-ஐ விட அதிகமாக இருந்தது, அதிர்ஷ்டவசமாக, அருகிலுள்ள நீர் ஓடையில் 10 நிமிடங்கள் நன்றாக குளித்து உடலை குளிரிவித்து கொள்ள முடிந்தது. மேலும் சூரிய பகவானுக்கு பணிந்து, பார்த்து நடக்க முயற்சித்தோம். இடையிடையில் நிழல் வந்தால் ஓய்வெடுத்து கொண்டோம்.

இப்போது, எதிர்பார்க்கப்பட்ட 8 மைல்களை கடந்த பிறகும், ஃபாண்டம் ரான்ச் உண்மையில் எங்களுக்கு ஃபாண்டம் (பேய்) போல் உணர்வை தர தொடங்கியது, எங்கள் பயண திட்டப்படியும், கை கடிகாரத்து ஜிபிஎஸ் படியும் இந்நேரம் ஃபாண்டம் ரான்ச் வந்திருக்க வேண்டும். இன்னும் ஏன் வரவில்லை என்று எண்ணம் எல்லோருக்கும் ஓடியது. தண்ணீர் இருப்பு குறைய ஆரம்பித்திருந்தது. (பக்கத்தில் ஒரு ஓடை தொடர்ந்தது – மனம் அந்த குடல் புழு செய்தியையும் மறக்கவில்லை)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கொலராடொ ஆறு
கொலராடொ ஆறு

ஒவ்வொரு திருப்பத்திலும் ஃபாண்டம் (ராஞ்ச்) தோன்றும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம், ஆனால் தவறாமல் ஒவ்வொரு திருப்பத்திலும் மனதிற்கு ஏமாற்றம் என்ற திருநெல்வேலி அல்வா மட்டுமே வழங்கப்பட்டது. மேலும், என்னுடைய கை கடிகார - ஜிபிஎஸ் உண்மையானதை விட அதிக மைல்கள் நடந்து விட்டதாக காட்டியது (சூரியனின் சீற்றம், முற்றிலும் சூழ்ந்திருந்த மலைப்பாறைகள் காரணமாக சிக்னல் சிக்கல்கள் இருந்து ஜிபிஎஸ்-ம் சரியாக வேலை செய்யவில்லை).

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நாங்கள் பல மைல்கள் நடந்தோம், மறுபடியும் சொன்னால் நம்புங்கள் - பார்ப்பதெல்லாம் ஒரு உணவகத்தின் நுழைவாயில், அங்கு சுஜாதாவின் (கணேஷ்) வசந்த் விவரிப்பில் ஒரு அழகான இளம்பெண், கையில் எலுமிச்சைப் பழ சாறுடன் எங்களை வரவேற்பது போல கண்ணுக்கு தெரிந்தது. ஆஹா, இதுதான் அது என்று ஆனந்தம் வந்தது. ஆனால் நாங்கள் அதை நெருங்க நெருங்க பாறைகளும் சிறு மரங்களின் இலைகள் மட்டுமே எங்கள் மனதுடன் விளையாடி கொண்டிருந்தது புரிந்தது.

அதிக உஷ்ணம், உடலில் குறைந்து போன தாதுக்கள், உள் மனதின் எதிர்பார்ப்பு இவையெல்லாம் நமக்கு தேவையான அழகான அதிசயங்களை மனதுக்கு வரைந்து காட்டியது. வாயிற்குதான் கிட்டவில்லை. (ஆனாலும் எனக்காக உழைக்கும் என் மனதுக்கு, மனதார நன்றி).

தி பாக்ஸ் - 2
தி பாக்ஸ் - 2

சரியான நேரத்தில் சரியான எண்ணங்களை கொண்டு வருவதில் எத்தனை கணிணிகள் வந்தாலும் மனதிற்கு இணை என்றும் இருக்கப்போவதில்லை.

எங்கே செல்லும் இந்த பாதை என்று இளையராஜா வந்து பாடினார். நாங்கள் எங்கும் செல்லாத பாதையில் நடக்கிறோமோ என்று யோசிக்க ஆரம்பித்தோம். இப்போது தண்ணீரை ரேஷன் செய்து குடிக்க ஆரம்பித்தோம். குடல் புழு நினைவில் பக்கத்தில் சல சலவென்று ஒடும் அழகான ஓடை தண்ணீர் எங்கள் தாகத்திற்கு இறுதி இலக்காக தள்ளிப்போனது.

செல்லும் வழியில் இடையிடையே பல மலையேறுபவர்கள் ஓய்வெடுப்பதைக் கண்டோம், ஃபாண்டம் ரான்ச்-க்கு இன்னும் அரை மைல்தான் இருக்க வேண்டும் என்று எங்களிடம் கூறினர், ஆனால் அவர்களின் அந்த அரை மைல் சொல் ஊக்கத்திற்குப் பிறகு அந்த இடத்தை நாங்கள் அடைய மேலும் 3 மைல்கள் ஆனது. (நன்றி, இடையிடையில் அமர்ந்திருந்த மக்களே! நீங்கள் உடல் உயிருள்ள மனிதர்கள்தான் என்று நான் இன்னும் நம்புகிறேன்).

மலை வழி காட்டி - 1
மலை வழி காட்டி - 1

ஃபாண்டம் ரான்ச்-ஐ அடைந்தவுடன். முதலில் கொஞ்சம் தண்ணீர் குடித்தேன். பின்னர் அங்கு மிகவும் பிரபலமான ஒரு எலுமிச்சைப் பழச்சாறு மிக மெதுவாக உள்ளே இறக்கப்பட்டது.

பின்னர் தலை மீது பெரிய கண்ணாடி ஜாடிகளில் கொண்டு வந்த தண்ணீர் ஊற்றப்பட்டது. என்னவென்று பிறகு சொல்கிறேன்.

நாங்கள் ஹைக்கை அதிகாலையில் ஆரம்பிக்கும் இடத்திலேயே எச்சரிக்கை பலகைகள் பல இருந்தன, வெப்பத்தால் பலர் எப்படி பாதிக்கப்படலாம் என்று. எப்படியோ அந்த எச்சரிக்கை என் நினைவுக்கு வந்தது, ஆனால் மனதைக் கட்டுப்படுத்தி, அந்த நல்ல எலுமிச்சைப் பழச்சாருடன், எந்த அசம்பாவிதமும் இல்லாமல் என்னால் சமாளிக்க முடிந்தது.

எச்சரிக்கை பலகை
எச்சரிக்கை பலகை
லெமனேட் ஸ்டாண்ட் / ரெஸ்டாரண்டில் இருந்த பெண்மணி இரண்டு பெரிய ஜாடிகளில் தண்ணீரைக் கொண்டு வந்து என் தலையிலும் இன்னும் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வந்து அங்கிருந்த மற்ற சிலர் தலை மீதும் ஊற்றினார். உடல் சற்று குளிர்ந்தது, நாங்கள் மரத்தின் அடியிலும் சூரிய ஒளியின் குறையின்றி ஓய்வெடுத்தோம், ஏனெனில் அங்கு ஓய்வெடுக்க மிகவும் குறைவான நிழல் மட்டுமே இருந்தது.
ஹைக் குச்சி - காலணி
ஹைக் குச்சி - காலணி

இங்கிருந்து இந்தியன் கார்டன்ஸ் முகாம் இடத்திற்கு மற்றொரு 5 மைல்கள் நடைப்பயணம். இரண்டு மணிநேரம் ஓய்வெடுக்கலாம் என்று அதிகம் நிழல் தராத மரங்களின் கீழ் வரிசையாக முகாம் பாய்களை பிரித்து சாய்ந்திருந்தோம்.

சிறிது ஓய்விற்கு பிறகு, மாலை 4:30 மணிக்கு நடையை தொடங்குவதற்கு முன், அருகிலிருந்த மற்றொரு ஓடையில் 10 நிமிடம் மறுபடியும் குளித்தோம்.

துரதிர்ஷ்டவசமாக, நான் குளிக்கும் பொழுது, என் இடுப்புப் பையில் உப்பு மாத்திரைகள் வைத்து இருப்பதை மறந்துவிட்டேன், எல்லாம் தண்ணீரில் நனைந்து வீணாகி, அவற்றை தூக்கி எறிய வேண்டியிருந்தது. இதுவரை, அவை எனது வேர்வையில் காணாமல் போன தாதுக்களை உடலில் மீண்டும் நிரப்புவதற்கு பெரும் ஆதரவாக இருந்தன. இருந்தாலும் என்ன செய்வது - ஒரு கை பார்க்க வேண்டியதுதான். அடுத்த நடை கொஞ்சம் மலைப்பாகத்தான் இருந்தது.

முதலில் கொலராடோ ஆற்றின் சில்வர் பாலத்தை கடந்து இந்தியன் கார்டன்ஸ் நோக்கி மலை வழி ஏறினோம்.

கொலராடொ ஆறு – சில்வர் பாலம்
கொலராடொ ஆறு – சில்வர் பாலம்

மலையேறுதல், எதிர்பார்த்தபடி, கொஞ்சம் செங்குத்தாக இருப்பதால் சிறிது கடினமாக இருந்தது. நிச்சயமாக, ஒருவர் உடல் நிலையை நல்ல விதமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருந்தால், இந்த ஹைக்-ஐ 2 நாட்களில் செயவதை விட ஒரே நாளில் செய்வது மிகவும் நல்லது என்று தோன்றியது.

நான் சொல்வது கொஞ்சம் செய்து முடித்த அகங்காரமாக கூட தோன்றலாம், ஆனால் இரண்டு நாட்கள் என்பதால் கூடாரத்தையும் கொஞ்சம் அதிகமான உணவையும் எடுத்துச் செல்ல வேண்டும், அந்த பளு கூட்டல் ஹைக்-ஐ எளிதாக்கவில்லை.

நல்ல வேளையாக, நாங்கள் ஒரு வலுவான குழுவாக இருந்தோம், ஒருவருக்கொருவர் உந்துதலாக இருந்து, யாருக்காவது செல்வது அதிக கடினமாக இருந்தால் மற்றவர் உதவியுடன் தொடர்ந்து ஏறினோம்.

சாப்பாட்டு மேசை மீது காலணி, உலோக பெட்டியில் சாப்பாடு
சாப்பாட்டு மேசை மீது காலணி, உலோக பெட்டியில் சாப்பாடு

இரவு 8 மணி அளவில், நாங்கள் இந்தியன் கார்டன்ஸ் அருகில் செல்லும் பொழுது நன்கு இருட்டியிருந்தது. அதிகாலை 3:15 மணிக்கு துவங்கிய பயணம்.

வழியில், அந்த இரவு நடைப்பயணத்தின் போது, நிறைய பெரிய மான்கள் படுத்திருந்தன. அவைகளின் கண்கள் பளிச்சிட்டு தெரிந்தன. நெடுஞ்சாலைகளில் கார் ஹெட்லேம்ப்களை வெறித்துப் பார்க்கும் விலங்குகளப் போல, எங்களிடமிருந்து சிறிது தொலைவில் படுத்திருந்த பல மான்களின் கண்கள் நிலவின் ஒளியில் பிரதிபலிக்க நாங்கள் இரண்டு கால் விலங்குகளாகி அவற்றை வெறித்துப் பார்ப்பது போல் தோன்றியது.

அந்த நிலவொளி கண்ணழகு மான்கள் என்ன நினைத்தனவோ தெரியவில்லை – ஆனால் சிந்திக்கும் திறன் இருந்திருந்தால் “இந்த மனிதர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்?, அவர்களால் இந்த பள்ளத்தாக்கின் ஆழத்தில் கூட நம்மைத் தனியாக விட முடியவில்லை” என்று நினைத்துக் கொண்டிருக்கலாம்.

வழியில் ஓடை சிறிது கரை கடந்து, நாங்கள் நடக்கும் வழியிலும் காலடி தெரியாமல் பாதையை கழுவி ஓடிக்கொண்டிருந்தது.

இருள், காலடி தண்ணீர். ஒரு வழிப்பாதை. வழியில் ஒரு விஷமற்ற “சாதாரண ராஜ நாகம்” இருந்தது (பிறகு படித்து தெரிந்து கொண்டோம்). அந்த இருளான நேரத்தில் எங்களின் சோர்வடைந்த மனது அது நிச்சயம் மிகவும் விஷமுள்ள “ராட்டில் ஸ்நேக்” என்று உறுதிப்படுத்தியது, அதைக் கடந்து செல்வதில் நாங்கள் மிகவும் கவனமாக இருந்தோம்.

நாங்கள் இந்தியன் கார்டன்ஸ்-ஐ அடைந்ததும், நண்பர்கள் இருவர் இரவு கூடாரமிட்டு தங்கும் இடத்தை கண்டுபிடித்தனர். இரவு 9 மணிக்கு அந்த உயரத்திலும் வெப்பநிலை 36 டிகிரி (96 டிகிரி F) ஆக இருந்தது.

வெப்ப நிலை
வெப்ப நிலை

ஹெட்லேம்ப்களில் “வெள்ளை” விளக்கு எரிந்தபோது அதை “சிவப்பு” வண்ண விளக்குக்கு மாற்றுமாறு அங்கு இருந்த இன்னுமொரு முகாம்வாசி புகார் கூறினர். சிவப்பு வெளிச்சம் தூங்க இருப்பவர்களின் தூக்கத்தை கெடுக்காது என்று படித்திருக்கிறோம்.

நாங்கள் பகிர்ந்து உறங்க நான்கு தனித்தனி கூடாரத்தை அமைத்து, முகாமில் கொடுக்கப்பட்ட கம்பங்களில் எங்கள் பைகளை உயரத்தில் தொங்கவிட்டு, விலங்குகளை ஈர்க்காத, உடைக்க முடியாத உலோக பெட்டிகளில் எங்கள் மீதமிருந்த உணவைப் பூட்டி பாதுகாத்து, இரவு 10:30 மணி அளவில் கூடாரத்திற்குள் படுத்துக் கொண்டோம்.

ஸ்லீப் ஸ்விட்ச் உடனடியாக வேலை செய்தது, காலை விரைவாக வந்து விட்டது போல தோன்றியது. ஒரு நல்ல உறக்கத்திற்கு பிறகு காலையில் மிகவும் புத்துணர்ச்சியுடன் விடிந்தது.

மானாடும் காலை
மானாடும் காலை

சிக்னல் இல்லையென்பதால் மனைவி மகள்களுடன் தொடர்பில்லாமல் 30 மணி நேரம் இருந்தது இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன்.

கையில் கொண்டு சென்ற அடுப்பு ஏற்றி உடனடி காபி செய்தோம். கையில் காபி, மனதில் நடையில் பாதிக்கும் மேல் முடித்து விட்ட மகிழ்ச்சி, அந்த அழகான நிலையில் மலைக்காட்டின் மான் ஓடும் காலையில் மயங்கி, மனதில் கவிதை வந்தது. ஒரு மகள் கலிஃபோர்னியாவிலும், ஒரு மகள் நெதர்லாந்திலும், ஏற்றி விட்ட ஏணி இன்று பாதாள பள்ளத்தாக்கிலும் என்று அழகாக தோன்றியது. ஆனால் டல்லாஸிலிருந்து, நாம் ஒரு அணி, அதில் ஏது தனி ஏணி என்று மனைவி சண்டையிடுவாள் என்பதில் கவிதை பாதியில் கட்டாகிப்போனது. காதலில் தோற்றவர்கள் மட்டும் ஏன் நல்ல கவிஞராகிறார்கள் என்ற காரணம் புரிந்தது போல் இருந்தது.

எங்களின் இறுதி இலக்கான பிரைட் ஏஞ்சல் டிரெயில்ஹெட் வரை செல்ல இன்னும் 5 மைல்கள் இருப்பதால், நாங்கள் இன்னும் வலிமை சேர்த்து கொள்ள வேண்டும்.

நான் திடீரென சீன தேசத்தவனாகி மேசை மற்றும் காகித தட்டை தவிர்த்து, வைக்கபட்ட எல்லாவற்றையும் சாப்பிட்டு அடுத்த ஹைக்-கிற்கு தேவையான கார்போஹைட்ரேட்களை ஏற்றிக் கொண்டேன். சிறந்த டீ-யும், காலை உணவும் தயாராகி நன்கு சாப்பிட்டோம். அதற்காக ஒரு நண்பர் டல்லாஸிலிருந்து ஒரு பாத்திரம், வாயு அடுப்பு எடுத்து அதையும் விடாமல் தூக்கி வந்ததின் பலனை அனுபவித்தோம்.

பாத்திர நிழல்
பாத்திர நிழல்

மீண்டும் மலையேற ஆரம்பித்தோம் — தலை தூக்கி பார்த்தால் அடைய வேண்டிய இடம் மேலே மிக உயரத்தில் தெரிந்தது., எங்களின் அட்டவணைப்படி இன்னும் 5 மைல் நடை, 3000 அடி ஏற்றம் என்று. உடலுக்கு செய்து முடி என்று கட்டளயிடுவது என் கடமை என்று மனம் சொன்னது புரிந்தது. கட்டளை செயலாக்கப்பட்டது.

பிரைட் ஏஞ்சல்-க்கு முன், 3 மைல் மற்றும் 1.5 மைல் நிறுத்தத்திற்கு என்று இடையில் எங்களுக்கு இரண்டு நிறுத்தங்கள் இருந்தன.

3 மைல் நிறுத்தத்தில், கால்கள் கெஞ்சியது - சிறிது ஓய்வெடுக்கலாம் என்று நினைத்தால், பலரும் தொடர்ந்து நடந்து விடலாம் என்று அறிவுறுத்தினர். அதனால் நிற்கவில்லை. அது இன்னும் விரைவாக செல்லத் தூண்டியது.

எங்களுக்கு முன்னால் சென்ற எங்களது குழு நண்பர் ஒருவர் சிறிது ஓய்வுக்கு படுத்தவர் 1.5 மைல் நிறுத்தத்தில் அடித்து போட்டது போல நன்கு தூங்கி கொண்டிருந்தார். அவரையும் “எழுந்திருங்க, இது நம்ம இறங்க வேண்டிய நிறுத்தம் இல்லை” என்று ஒரு நண்பர் எழுப்பி கொண்டு வந்தார்.

எங்கே செல்லும் இந்த பாதை
எங்கே செல்லும் இந்த பாதை

நாங்கள் பிரைட் ஏஞ்சல் அருகில் செல்லும் பொழுது கை பேசி வேலை செய்ய ஆரம்பித்து விட்டது. முன்னால் சென்ற சில நண்பர்கள் எல்லோரும் மேலே இலக்கை அடைந்தவுடன் குறுஞ்செய்தி அனுப்பினார்கள். பிறகு எல்லோரும் ஒவ்வொருவராக வந்தடைந்தோம்.

நான் இறுதி இலக்கை அடைந்தபோது, ஏதோ பெரிய சிகரத்திலேயே ஏறி விட்டது போல் உணர்வு. மன சந்தோஷம், ஒரு கடினமான செயலை முடித்ததாலா அல்லது அது நல்ல படியாக முடிந்ததாலா, எது அது என்று புரியாத சந்தோஷ யோக நிலை. ஆனாலும் நல்லவற்றை முயற்சித்து அதை செய்து முடித்த பின் கிடைக்கும் மகிழ்ச்சியை அலசி ஆராயாமல் அது வந்த படி அப்படியே எடுத்துக்கொள்ள வேண்டும்.

பல வருடங்களுக்கு முன்னர் மலை ஏறியவர்கள் அல்லது கிராண்ட் கேன்யன்ஸ் வழியாக நடந்த முதல் மனிதருக்கு உயர் தொழில்நுட்ப சாதனங்கள் எதுவும் இருந்திருக்காது, அவர்கள் சாதனைகளை நினைத்தால் இப்பொழுது நாங்கள் செய்தெதெல்லாம் கணக்கிலே சேராது. ஆனால் இது எனக்கும், உடன் வந்த நண்பர்களுக்கும், ஏன் இதைப்போல கடினமான ஒரு செயலை முடிக்கும் எல்லோருக்கும், வாழ்க்கையில் ஒரு பெரிய அனுபவத்தை கொடுக்கும் என்பதை மறுக்க முடியாது. மற்றும் எங்கள் யாருக்கும் எந்த விபரீதமும் நேராமல் இதை நல்ல விதமாக செய்து முடித்ததில் அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி.

பள்ளத்தாக்கில் இருந்து மேலேறி, பிரைட் ஏஞ்சல் டிரெயில்ஹெட்டி-ல் வெளி வரும்பொழுது அங்கு பலர் எங்களின் இந்த முயற்ச்சிக்காக மன மகிழ்ச்சியுற்று கை தட்டி வரவேற்றார்கள். மற்றவர்களின் முயற்சி வெற்றி அடைந்ததற்கான உண்மையான மனிதம் மட்டுமே தெரிந்தது.

முடித்த பின் குழு
முடித்த பின் குழு

நம் உலகத்தில்தான் எத்தனை அழகு கொட்டிக்கிடக்கிறது!.

அதை அழியாமல் பாதுகாக்கும் பல நல்ல உள்ளங்களுக்கு மனம் நன்றி சொன்னது.

வாசகர்களாகிய நீங்கள் என் அனுபவத்தை பகிர அனுமதி தந்ததற்கு மிக்க நன்றி.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.