Published:Updated:

சாட்டல் சென்று வருவோமா? | சுவிஸ் பயணக்கட்டுரை | My Vikatan

Representational Image

கடந்த முறை வந்தபோது கேபிள் காரில் சென்று மகிழ்ந்து விட்டதாலும்,போகும் வழியில் மான்,பசு,குதிரை போன்ற விலங்குளைப் பார்த்துச் செல்லலாம் என்பதாலும்,கீழேயுள்ள கேபிள் கார் நிலையத்தை ஒரு சுற்று சுற்றி விட்டு மேலே செல்கிறோம்.

சாட்டல் சென்று வருவோமா? | சுவிஸ் பயணக்கட்டுரை | My Vikatan

கடந்த முறை வந்தபோது கேபிள் காரில் சென்று மகிழ்ந்து விட்டதாலும்,போகும் வழியில் மான்,பசு,குதிரை போன்ற விலங்குளைப் பார்த்துச் செல்லலாம் என்பதாலும்,கீழேயுள்ள கேபிள் கார் நிலையத்தை ஒரு சுற்று சுற்றி விட்டு மேலே செல்கிறோம்.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

வணக்கம் நண்பர்களே! வாருங்கள், இந்த வாரம்‘சாட்டல்’ என்ற ஊரிலுள்ள மலைக்குச்சென்று, பார்த்து, ரசித்து, மகிழ்ந்து வருவோம். சூரிக்கிலிருந்து சுமார் ஒன்றரை மணி நேரப் பயணந்தான். ஏறுங்கள் காரில். போகும்போதே இரு பக்கமும் உள்ள இயற்கை அழகை ரசித்தபடி போகலாம். இன்றைக்கு ‘வெதரு’ம் சற்று சாதகமாகவே உள்ளது. கதிரவன் தலையைக்காட்டி இங்குள்ள ஏரிகளில் முகம் பார்த்து தலை வீசிக் கொள்வதால், தண்ணீரும் மின்னுகிறது. அதோ பாருங்கள் அந்த வீட்டை. மலை முகட்டில் தனியாய் அழகாய் அனைவர் கண்களிலும் படும் உயரத்தில் எழிலாய்!

Switzerland
Switzerland

‘ஓ! அதன் எதிரே மேய்வது ஆடா?பசுவா? என்று தீர்மானிக்க முடியவில்லையா?அட நீங்க வேற!அது பசுதாங்க. உயரத்தில இருக்குறதால அப்படி உங்களுக்குத் தோணுது போல. இந்தப் பக்கம் பாருங்க!அந்த வேலிக்குள்ள அத்தனை பசுக்கள் மேய்ஞ்சுக்கிட்டிருக்கு. சரிநாம சாட்டலை நெருங்கிட்டோம்!

இன்னைக்கி ‘மன்டே’என்பதால் நாம் நம் காரிலேயே மலை மேலே ஏறலாம். சனி,ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் தனியார் கார்கள் மேலே செல்ல அனுமதியில்லை. காரணம்,பெரிதாக ஒன்றுமில்லை. விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகம் என்பதாலும், மலை மேல் ஏறும் சாலை அகலம் குறைவு என்பதாலும், மலை மேல் பார்க்கிங் வசதி அவ்வளவாக இல்லை என்பதாலும் இந்த ஏற்பாடு. மற்றொன்று, பெரும்பாலானவர்கள் ‘கேபிள்’ காரை உபயோகிக்கட்டுமே என்ற எண்ணமாகவும் இருக்கலாம். ஏனெனில்,விடுமுறை நாட்களில் மேலே செல்ல கேபிள் காரை மட்டுமே பயன்படுத்தியாக வேண்டும். இந்த சுற்றுலாத் தளம் கேபிள் காரையே பிரதானமாகக் கொண்டது.

Switzerland
Switzerland

இதோ இதுதான் கேபிள் கார் ஏறும் இடம். மெயின் ரோட்டின் பக்கத்திலேயே உள்ளது. நாம் காரிலேயே மேலே செல்ல உள்ளதாலும்,கடந்த முறை வந்தபோது கேபிள் காரில் சென்று மகிழ்ந்து விட்டதாலும்,போகும் வழியில் மான்,பசு,குதிரை போன்ற விலங்குளைப் பார்த்துச் செல்லலாம் என்பதாலும்,கீழேயுள்ள கேபிள் கார் நிலையத்தை ஒரு சுற்று சுற்றி விட்டு மேலே செல்கிறோம்.நண்பர்களில் சிலர் கேபிள் காரில் வரப் பிரியப்பட்டதால் அவர்களை அங்கு விட்டு விட்டு நாம் மேலே செல்கிறோம்!விமானத்தில்‘டேக் ஆப்’ போதுகூட முன்னே தெரியும் காட்சிகளை மட்டுமே காண முடியும்.ஆனால் கேபிள் காரில் மேலே செல்கையில் 360 டிகிரியில் சுற்றிலும் பார்க்க முடியும்!

வளைந்து செல்லும் பாதையில் மேலே ஏறுகிறோம். குறுகிய சாலைதான். அதோ,தூரத்தில் ஒரு கார் வருகிறது.நமது காரைப் பார்த்ததும் அந்தக் கார் ஓரத்தில் ஒதுங்கி நின்று விட்டது.மேலே செல்பவர்க்கே இங்கு ப்ரீயாரிடி. வாழ்க்கையில் நேர்மையாக முன்னேறத் துடிப்பவர்களுக்கும் இப்படி சமுதாயம் உதவினால் நன்றாயிருக்குமே என்ற எண்ணத்தோடே, வழி விட்டு நின்றிருந்த கார் ஓட்டுனருக்கு நன்றியுடன் கை காட்டியபடி முன்னேறினோம். எதிர்க் காரை ஓட்டி வந்தவர் ஒரு பெண். இந்தப் பாதையில் கார் ஓட்டுவதற்கு நல்ல அனுபவம் வேண்டும். அந்தப் பெண்ணோ அனாயாசமாக ஓட்டி வந்தது வியப்பையளித்தது.

RopeBridge - Sattel
RopeBridge - Sattel

பெண் சமுதாயம் எல்லா விதத்திலும் ஆண்களுக்கு இணையாகி விட்டது. இதோ பாருங்கள். ஐம்பதடி மலைச் சரிவில் ஆங்காங்கே அழகிய மான்கள். எதிர்ப்புறத்திலோ, எகிறிக் குதிக்கும் ஆடுகள். வழியில் இரண்டு மூன்று சிறு கிராமங்கள். விவசாயமும், கால்நடை வளர்ப்புமே முக்கியத் தொழில்கள் என்பதை உணர்த்தும் விதமாக, நவீன வேளாண் கருவிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

அவற்றையெல்லாம் பார்த்தபடி நாம் மேலே வந்து விட்டோம்!

கேபிள் கார்கள் ஏறிக் கொண்டும்,இறங்கிக்கொண்டும் இருக்கின்றன. இரண்டு,மூன்று ரெஸ்டாரெண்டுகள் ஃபுல் ஸ்விங்கில் இயங்கிக்கொண்டிருக்கின்றன.இங்கு மெயினாக இரண்டு,மூன்று அட்ராக்‌ஷன்கள் மட்டுமே.

முதலாவது, கேபிள் காரை விட்டு இறங்கியதுமே, எதிரே சிறுவர்களுக்கான சிறு விளையாட்டரங்கம். என்ட்ரி டிக்கட்டை வாங்கிக் கொண்டு குழந்தைகளுடன், உதவிக்குப் பெற்றோர்களும் செல்கிறார்கள். குதிப்பது, ஒளிந்து பிடித்து விளையாடுவது என்று காற்றடைத்த பெரும் பிளாஸ்டிக் தூண்களால் இதனை நிர்மாணித்திருக்கிறார்கள்.எனவே ஓடி,ஒளிந்து விளையாடும்போது,விழுந்தாலும் கூட எந்தக் காயமும் ஏற்படாது. ’கேசில்ஸ்’ என்றழைக்கப்படும் கோட்டைகள் போல் காட்சியளித்தவை, மாலை மணி ஐந்தானதும், காற்றி இறங்கிய பலூன்களாகப் பூமியில் சாய்ந்து விட்டன!’ காயமே இது பொய்யடா. வெறும் காற்றடைத்த பையடா!’ என்பது மனிதர்களைப்போல் இவற்றுக்கும் பொருந்தும் போலும்!

Sattel
Sattel

அடுத்து,சிறியவர்,பெரியவர் என்று அனைவருக்குமான ‘ரோடல்பான்’ என்று ஜெர்மனிலும், ’டோபோகானிங்’(Tobogganing)என்று ஆங்கிலத்திலும் அழைக்கப்படும் ஒரு விதமான சறுக்கு விளையாட்டு.

மேலும்,கீழும்;வளைந்தும்,நெளிந்தும்;சரிந்தும்,உயர்ந்தும் அமைக்கப்பட்டுள்ள உலோகப்பாதையில்,கார் போன்ற சிறிய அமைப்பில் நாம் அமர்ந்து கொண்டு வலம் வருவது!சிறுவர்கள் கார் போன்ற அமைப்பில் அமர்ந்து கொண்டு,பஸ் கியர் போன்று, முன்னால் உள்ள அமைப்பைப் பிடித்து பாலன்ஸ் செய்தபடி, அதனையே பிரேக்காகவும் உபயோகித்து சென்று வர வேண்டும். அதில் பயணிக்கையில் சிறுவர்கள் மட்டுமின்றிப் பெரியவர்களும் உற்சாகக் குரல் எழுப்பியபடி பயணிப்பதுதான் ஹைலைட்!

ம்! நாமும் சென்று வருவோம்!நாம் உட்கார்ந்ததும்,ஓட்டும் முறைகளை ஒரு முறை விளக்குகிறார் அங்குள்ள பணியாளர்!எதிரே சிவப்பு விளக்கு ஒளிர,பச்சை வந்ததும் போகச் சொல்கிறார்!நாமும் பச்சை சிக்னல் வந்ததும் கியரை இயக்க,வேகம் எடுக்கிறது நமது கார்!

ஆரம்பத்தில்,சற்றே பயம் கண்களில் ‘விசிட்’அடித்தாலும், நொடிகளில் அது அகன்று, உற்சாகம் கண்களிலும் மனதிலும் பரவி விடுகிறது!

திருப்பங்களில் சற்றே வேகத்தைக் குறைத்து நாம் செல்ல,ஒரு ரவுண்ட் சென்று வந்ததும், மறு ரவுண்ட் கேட்கிறது மனது!

Sattel
Sattel

அடுத்த ரவுண்டில் வேகத்தைக் கூட்ட, மகிழ்ச்சி மனமெங்கும் பரவுகிறது, காய்ந்து கிடக்கும் நிலத்தில் புது நீர் ஓடிப் பரவுவதைப்போல! இறங்க மனசே வரவில்லை!அப்பொழுதுதான் ஐந்து வயது பேத்தி, பல ரவுண்ட் அடிக்க வேண்டுமென்று அடம் பிடித்ததின் அர்த்தம் புரிந்தது!வேகத்திற்கும்,மனித மனதுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு போலும்!வேகத்தை விரும்பலாம்; அதி வேகத்தைத்தான் தவிர்க்க வேண்டுமோ!இந்தக் கார்களும்,நிற்காமல் ஓடிக் கொண்டேதான் உள்ளன.இந்த இடத்தில் யாம் கவனித்த மற்றொன்று நினைவை நிறைக்கிறது!காரில் அமரும் இடத்தில் உள்ள தடுப்பு மர வேலியின் வெளிப் புறத்தில் பைகள் மாட்டி வைப்பதற்கான கொக்கிகள் தொங்குகின்றன.

வருபவர்கள் தங்கள் பேக்குகளை,போட்டிருக்கும் ஜாக்கட்களை அந்தக் கொக்கிகளில் எந்தத் திருட்டுப் பயமும் இன்றி மாட்டி விட்டு,உற்சாகப் பயணத்தைத் தொடர்கிறார்கள்! அதுபோலவே, குழந்தைகளை வைத்துத் தள்ளும்’ஸ்ட்ராலர்’களையும் ஆங்காங்கே, அதிலுள்ள பொருட்களுடன் அப்படியேதான் விட்டுச் செல்கிறார்கள். நாமும்,பேரனை வைத்துத் தள்ளி வந்த நாலு சக்கர வண்டியை அப்படியேதான் விட்டுச் சென்றோம்.திருட்டுப் பயம் கொஞ்சமும் இல்லை!

மூன்றாவதாக உள்ளது,நீண்ட தொங்கு பாலம்.இந்தப்பக்கம் கேபிள் கார் ஸ்டேஷன். அந்தப் பக்கம் மலையிலிருந்து பிரியும் நடைபாதை!உலோகத்தால் ஆன பாதை நீண்டு கிடக்கிறது!பெரியோரும்-சிறியோரும், ஆண்களும்-பெண்களும், பலர்-தங்கள் வளர்ப்புப் பிராணியான நாய்களுடன், இதில் பவனி வருகிறார்கள்!இதில் நின்றபடி,கீழே ஓடும் டோபோ கானிங் ஐப் பார்ப்பது அழகாக இருக்கிறது. அதைத் தாண்டிச் சென்றால்,மலைச் சரிவில் உள்ள மரங்களெல்லாம் கீழே தெரிய,பாலத்தில் நடப்பது த்ரிலாக இருக்கிறது!நாங்கள் இங்கிருந்து அந்தக் கடைசி வரை சென்று விட்டு,மீண்டும் பாலத்திலேயே திரும்பி வந்தோம். சிறுவர்கள் அனாயாசமாக நடப்பதும்,ஓடுவதும் பார்க்கக் கண் கொள்ளாக் காட்சி!

Sattel
Sattel

இவற்றையெல்லாம் பார்த்த பிறகு,ரெஸ்டாரண்ட் சென்று விரும்பியதைச் சாப்பிடலாம்!

உருளையும்,சிக்கனும்,உலகப் பிரசித்தம்.சைவம் மட்டுமே சாப்பிடுவோருக்கு முன்னது எல்லா இடத்திலும் கை கொடுக்கிறது.

அதிலும் குளிரடிக்கும் மலைப்பிரதேசங்களில்,இளஞ் சூடான உருளை தரும் திருப்தியே அலாதியானது!-அது எந்த உருவத்தில் இருந்தாலும் சரி!

மாலை 5 மணி ஆனதும், எல்லா ஆட்ட பாட்டங்களும் முடிவுக்கு வந்து விடுகின்றன. கேபிள் கார்களையும் நிறுத்தி விடுகிறார்கள். அதற்கு முன்பாகவே திரும்ப வேண்டியவர்கள் திரும்பி விடுகிறார்கள். நாங்கள் இந்த முறை காரில் சென்றதால், கூட வந்திருந்த நண்பர்களைக் கேபிள் காரில் அனுப்பி விட்டு, மெதுவாகக் கிளம்பினோம்.

வாய்ப்புள்ளவர்கள் ஒரு முறையாவது வந்து இவற்றை ரசித்துச் செல்லலாம்!

மீண்டும் சந்திப்போம் நண்பர்களே!image8.jpeg

-ரெ.ஆத்மநாதன்,

காட்டிகன்,சுவிட்சர்லாந்து

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.