Published:Updated:

வீழ்கையிலும் மகிழ்ச்சிதானோ? | சுவிஸ் சுற்றுலா பகிர்வு | My Vikatan

Rhine falls

நீர் வீழ்ச்சியின் அருகே வரை சென்று,தூவானத்தை ரசித்த பிறகு,மெதுவாக ஓரங்கட்டி அந்தப் படிகளின் அருகில் படகுகளை நிறுத்துகிறார்கள்.

வீழ்கையிலும் மகிழ்ச்சிதானோ? | சுவிஸ் சுற்றுலா பகிர்வு | My Vikatan

நீர் வீழ்ச்சியின் அருகே வரை சென்று,தூவானத்தை ரசித்த பிறகு,மெதுவாக ஓரங்கட்டி அந்தப் படிகளின் அருகில் படகுகளை நிறுத்துகிறார்கள்.

Published:Updated:
Rhine falls

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

எனதன்பு நண்பர்களே! வணக்கம். நமது தமிழகத்தில் வெப்பம் குறைந்து, ஆங்காங்கே மழை தூறியும், ஆற்றோர மக்களுக்கு அடிக்கடி அறிவிப்புகளும் வந்து கொண்டுள்ளனவா? இந்த நேரத்தில் இங்குள்ள (சுவிசில்), ஒரு நீர்வீழ்ச்சிக்கு ஒரு ரவுண்ட் அடித்து வருவோமா?

மலையும், நீரும், நிர்மூலமான வானமும் எப்பொழுதுமே மனித மனங்களுக்கு மகிழ்ச்சியையும், அமைதியையும் வாரி வழங்கும் வள்ளல்கள்!

அதனால்தான் மருத்துவர்கள் கூட, நீண்ட நாள் நோய் வாய்ப்படுபவர்களை மலை வாசஸ்தலங்களுக்குச் சென்று ஓய்வெடுக்குமாறு ஆலோசனை கூறுகின்றனர். கடலையும், வானையும் இணைத்துப் பார்க்கின்றபோது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை!

அதிலும் அந்த நாள் பௌர்ணமி நாளாக இருந்து, வானமும் அலைந்து திரியும் மேகங்களைப் பிடித்து ஓரமாக உள்ள சிறையில் அடைத்து விட்டால், நிலவுப் பெண்ணின் முழு முகத்தையும், ஒளி வெள்ளத்தில் கண்டு அதிகமாகவே இன்புறலாம். அப்படியே வானத்தைப் பார்த்தபடி, இளைஞர்கள் தங்கள் இதயங்களில் குடி வைத்திருக்கும் காதலர்களை எண்ணிக் களிப்புறலாம். இதயத்தோட்டத்தில் இருவரும் இனிய உலா வரலாம். வட்ட நிலவில் தன் காதலியின்/காதலனின் முகத்தைக் கற்பனையில் ஒட்டி,மகிழலாம்.

சரி! காரில் ஏறி விட்டீர்களா?சூரிக் சிட்டியிலிருந்து ஐம்பதே கி.மீ.,தான். சுமார் அரை மணி நேரப்பயணமே. இதோ வந்து இறங்கி விட்டோம்!-‘ரைன்ஃபால்’நீர் வீழ்ச்சியில்.வாருங்கள் நீர் வீழ்ச்சியை அருகில் சென்று பார்ப்போம்.

Switzerland
Switzerland

இரண்டு கரைகளிலும் இருந்து படகுச் சவாரி செய்ய,எந்திரப் படகுகள் ஏகமாய் உண்டு! நீர் வீழ்ச்சியின் அருகிலேயே உயரமான குன்று,சுவிசின் கொடியுடன் நிமிர்ந்து நிற்கிறது.அதன் மீது ஏற,படிகள் அமைத்திருக்கிறார்கள்.

நீர் வீழ்ச்சியின் அருகே வரை சென்று,தூவானத்தை ரசித்த பிறகு,மெதுவாக ஓரங்கட்டி அந்தப் படிகளின் அருகில் படகுகளை நிறுத்துகிறார்கள். விருப்பமுள்ளவர்கள் இறங்கி மேலே செல்லலாம்!அடுத்த முறை படகு வரும் போது திரும்பிக் கொள்ளலாம்.

ஆற்றில் படகுச் சவாரி செய்ய விரும்புவோர்க்கென்று அரை மணி நேர ட்ரிப் ஒன்றும் வைத்துள்ளார்கள்.சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை சென்று வந்து,நீர் வீழ்ச்சி அருகிலும் சென்று ரசிக்கலாம்.நீர் வீழ்ச்சியை மட்டும் பார்த்தால் போதுமென்று நினைப்பவர்களுக்கு,15 நிமிடப் படகுச் சவாரி உண்டு!நீண்ட படகுச் சவாரியின்போது

ஜெர்மனி பார்டரைக் காட்டுகிறார்கள்.ஆற்றின் ஓரத்தில் பூங்காக்களும்,வீடுகளும்,நடைப் பயிற்சி செல்வதற்கான பாதைகளும் உள்ளன.வாத்துகளும்,நீர்ப்பறவைகளும்,மீன்களும் சுதந்திரமாக வாழ்கின்றன.நுழைவுக் கட்டணமும்,படகுக் கட்டணமும் செலுத்த வேண்டும்.

நீரோட்டத்தை எதிர்த்துப் படகுகள் மூச்சைப் பிடித்து முன்னேறுவதும், நீர் தன் வேகத்தால் அவற்றின் வேகத்தைத் தடுத்து நிறுத்துவதும், பார்க்க வேடிக்கையாய் இருக்கிறது. இயற்கையின் முன், மனிதர்களும் அவர்கள் படைத்த எந்திரங்களும் சில சமயங்களில் தோற்றுத்தான் போகுமோ!

Rhine falls
Rhine falls

நீர் வீழ்ச்சிகள் உடலுக்கும், மனதுக்கும் இதமளிப்பதுடன் மகத்தான ஒரு பாடத்தையும் நமக்குக் கற்றுத் தருகின்றன.

‘வீழும்போதுங்கூட நான் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியளித்து விட்டே வீழ்வேன்!’ என்பதுதான் அது!

நமது நாட்டிலுள்ள நீர் வீழ்ச்சிகளுக்கும் இந்த ‘ரைன்ஃபால்’ நீர் வீழ்ச்சிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. நம்மவை மழை பெய்யும் காலங்களில், அதாவது நீர் வரத்து உள்ள காலங்களில் மட்டுமே ஆர்ப்பரித்துக் கொட்டி அனைவரையும் ஈர்க்கும். இந்த ரைன்ஃபால் வீழ்ச்சியோ ஆண்டு முழுவதும் அட்டகாசமாக ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் என்கிறார்கள்.

அமெரிக்காவின் நயாகராவில், இரவில் பார்க்கில் மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருப்பதால் கொட்டும் நீருக்குக் கூடவே அழகு சேர்ப்பார்கள்-வண்ண விளக்குகளால்! இங்கோ,பார்வை நேரமான ஐந்து மணி ஆகி விட்டால், அநேகமாக நீர் வீழ்ச்சியை அனாதையாக்கி விட்டு அனைவரும் கிளம்பி விடுகிறார்கள்!

என்ன நண்பர்களே! படகுச் சவாரி பரவசப்படுத்தியதா? படகுத் துறையில் பவனி வரும் மீன்களைப் பார்த்து அமைதி அடைந்தீர்களா? வீடுகளின் வரவேற்பறையில், கண்ணாடி மீன் தொட்டிகளில் மீன் வளர்ப்பவர்கள், தினமும் அவர்களுக்கு வசதியான நேரத்தில், ஒரு பத்துப் பதினைந்து நிமிடங்கள் அவற்றின் மூவ்மெண்ட்களைப் பார்த்து ரசித்தாலே மனம் அமைதி பெறுமாம்! இரத்த அழுத்தம் நார்மலுக்கு வருமாம். டென்ஷன் குறையுமாம்! எத்தனை பேர் அதை நடைமுறைப் படுத்துகிறார்களோ!

கோடைக்குப் பிறகு புது நீர் வந்து, வயல்களில் பாய ஆரம்பித்ததும்,வயல் வெடிப்புகளிலுள்ள பூரான், பூச்சிகள்,எலி, பாம்பென்று அத்தனையும் வெளிக் கிளம்பி ஓடுவதைப்போல,நம் உள்ளத்தில் புதைந்துள்ள அத்தனை வன்மங்களும் நீரைக் கண்டதும் கரைந்து போவதால்தான் மனம் மகிழ்ந்து,அமைதி பெறுகிறது போலும்!

Rhine falls
Rhine falls

இதனைப் பார்த்து வர ஓர் அரை நாள் போதுமானது.குடும்ப சகிதம் செல்பவர்கள் ஒரு முழு நாளையும் செலவிடலாம்.அக்கரைக்குப் படகில் சென்று விட்டு,அப்புறம் குடும்பத்தாருடன் நடைப்பயணமாக மெல்ல வந்து,ரயில்வே பாலத்துடன் இணைந்த நடைபாதையில் இந்தப் பக்கம் வரலாம்.தினமும் 45 நிமிடமாவது நடக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

காரில்,பஸ்ஸில்,ரயிலில் என்று, எல்லாவித வாகன வசதிகளையும் பயன்படுத்தலாம்.அதிலும் ரயிலில் சென்றால், இறங்கியவுடனே படிகளில் கீழிறங்கி நீர் வீழ்ச்சியை ரசிக்கலாம்.அவ்வளவு அருகில் உள்ளது ரயில் நிறுத்தம்.

சரி! கிளம்பலாமா!நயாகரா ஆகட்டும்,இந்த ரைன்ஃபால் ஆகட்டும்,நீர் வீழ்ச்சிகள் என்று பெயர்தானே தவிர,நீரின் தூவானத்தைத்தான் நம்மால் ரசிக்க முடிகிறது.

நம் குற்றால அருவியில்,தலைக்கு நல்ல எண்ணையைத் தேய்த்துக் கொண்டு,சடசடவென அடிக்கும் நீரின் அடியில் தலையைக் காட்ட,தடவியிருந்த எண்ணை, சீயக்காய் தேய்க்காமலேயே பறந்தோடி,முடியைப் பஞ்சாக்கும் மாயமெல்லாம்,நம்மூரின் தனித் தன்மை!அதற்காகவே நாம் ஆனந்தப்படலாம்.ஒரு வேளை அமெரிக்க,ஐரோப்பாவின் சீதோஷ்ணம் காரணமாக,தூவானத்தோடே நிறுத்திக் கொள்கிறார்களோ!இவையனைத்தும் பொழுது போக்கு மட்டுமே!மனம் உற்சாகம் கொள்வதால் உடலிலும் உயிர்ப்பு தோன்றலாம்!ஆனால் உடலுக்கும் மனதுக்கும் ஒருசேர உரமளிப்பவை நமது ஊர் நீர் வீழ்ச்சிகளே!

Rhine falls
Rhine falls

‘மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ!’என்ற பாலுவின் குரலை மறக்கவே முடியாது. காதல் நிறைவேற ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு யுக்தி உண்டு போலும்.ஐரோப்பாவில், குறிப்பாக பிரான்சு நாட்டில், பாலங்களில் வரிசையாகப் பூட்டப்பட்ட பூட்டுகள் தொங்கும்.காதலர்கள் பூட்டைப் பூட்டி விட்டு சாவியை ஆற்றில் வீசி விடுவார்களாம். பூட்டப்பட்ட பூட்டு போல அவர்களின் அன்பும் இறுகுமாம்!பக்கத்து நாடான இங்கும் அது கடைப்பிடிக்கப்படுகிறது!

வாழட்டும் எங்கள் காதல்..

நண்பர்களே.. தயாராக இருங்கள்.. அடுத்து ஒரு மலைக்குப் போவோம்.. அப்புறம் ஒரு ‘தீம் பார்க்’ செல்வோம்!

என்றும் நட்புடன்!

-ரெ.ஆத்மநாதன்,

காட்டிகன்,சுவிட்சர்லாந்து

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.