Published:Updated:

மைக்ரோசிப்பில் பெயர்கள்; மெய்நிகர் டெலிகாஸ்ட்! - அசத்தும் நாசாவின் மார்ஸ் மிஷன் #MyVikatan

mars mission
mars mission

உலகம் முழுக்க இருந்தும் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் பெயர்களை நாசா இணையதளப் பக்கத்திற்கு அனுப்பியிருந்தனர்...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

விண்வெளி-மனிதனது ஆர்வத்தைத் தூண்டும் ஒரு இடமாகவே காலகாலமாக இருந்து வருகிறது. கண்முன்னே இருக்கக் கூடிய பொருட்களை ஆய்வு செய்வதைவிட, கண்ணுக்குத் தெரியாத, எங்கேயோ கோடிக்கணக்கான கிலோ மீட்டர்களுக்கு அப்பால் உள்ள கோள்களையும், துணைக்கோள்களையும் செயற்கைக்கோள் கண்கள் கொண்டு ஆய்வு செய்வது மனிதனுக்கு என்றுமே சுவாரஸ்யமூட்டுவதாய் உள்ளது.

Mars
Mars
Pixabay

சூரிய குடும்பத்தில் பூமிக்கு அடுத்தபடியாக உயிரினங்கள் வாழத் தகுதியுள்ள ஒரு கிரகமாக செவ்வாய் இருக்கும் என விண்வெளி அறிவியல் நம்புகிறது. அந்த வகையில் பூமிக்கு அருகாமை கிரகமான செவ்வாய் குறித்த மனிதனது தேடல் தொடர்கிறது.

இந்தியா, `மங்கள்யான்’ என்னும் பெயருடைய விண்கலத்தை நவம்பர் 2013-இல் செவ்வாய்க்கு அனுப்பியது. இது வெற்றிகரமாகச் செவ்வாயைச் சுற்றி ஆய்வை மேற்கொண்டது. அடுத்ததாக மங்கள்யான் 2 என்னும் ஒரு விண்கலத்தை 2024 வாக்கில் செவ்வாய்க்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) செவ்வாய் கிரகத்தை சுற்றி வருவதற்காக Hope என்னும் பெயருடைய விண்கலத்தை ஜூலை 19-இல் அனுப்பி உள்ளது.

கடந்த வாரம் சீனா, Tianwen-1 என்னும் செவ்வாயில் தரையிறங்கி ஆராயும் (ரோவர்) வகையிலான விண்கலத்தை Long March 5 ராக்கெட் மூலம் செவ்வாய்க்கு ஏவியுள்ளது. அதனைத் தொடர்ந்து அமெரிக்கா Perseverance எனும் பெயருடைய ஒரு ரோவரை செவ்வாய்க்கு ஏவ உள்ளது. சீன அமெரிக்க நாடுகளின் ரோவர்கள் பிப்ரவரி 2021 இல் செவ்வாயில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

UAE அனுப்பியுள்ள விண்கலம் செவ்வாயில் தரையிறங்காது. செவ்வாயைச் சுற்றி வந்தபடி மட்டுமே ஆய்வுகளை மேற்கொள்ளும். ஆனால், அமெரிக்கா மற்றும் சீனாவின் விண்கலங்கள் செவ்வாயில் இறங்கி (Lander & Rover) ஆய்வுகளைச் செய்யும்.

பொதுவாக இம்மாதிரியான அயல்கிரக தரையிறங்குதல் சோதனைகளில் விண்கலத்தில் மூன்று விதமான அமைப்புகள் இருக்கும்.

1)ஆர்பிட்டர்: கோள்களைச் சுற்றிய வண்ணம் ஆய்வு செய்யும்.

2)லேண்டர்: அயல் கிரகங்களில் விண்கலத்தை பத்திரமாகத் தரையிறங்கி ஆய்வுகளை மேற்கொள்ளும்.

3)ரோவர்: தரையில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்து சென்று ஆய்வுகள் செய்யும்.

China's mars mission
China's mars mission
Ng Han Guan

செவ்வாயைத் தொட்டுவிடத் துடிக்கும் அமெரிக்காவின் Perseverance Rover குறித்த ஒரு பார்வை:

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா செவ்வாய் கிரகத்திற்கு Perseverance என்னும் பெயருடைய விண்கலத்தை (ரோவர்) ஜூலை 30 மாலை 5.20 மணிக்கு United Launch Alliance Atlas V-541 என்னும் பெயருடைய ராக்கெட்டில் அனுப்ப உள்ளது. இது 7 மாதப் பயணங்களுக்குப் பிறகு பிப்ரவரி 18, 2021 இல் செவ்வாயில் Jezero பள்ளத்தில் தரையிறங்க உள்ளது. நாசாவின் இந்தக் கனவுத் திட்டத்திற்கு Mission - Mars 2020- Perseverance Rover என்று பெயரிடப்பட்டுள்ளது.

Perseverance: செவ்வாய்க்கு ரவுண்டு ட்ரிப் அடிக்கும் நாசா - ஜூலை 30-ல் விண்ணில் பாய்கிறது!

Perseverance Rover செவ்வாயில் மேற்கொள்ளவுள்ள முக்கிய சோதனைகள்:

# செவ்வாய் கிரகத்தின் உயிர் ஆற்றல் குறித்து Perseverance ஆய்வு செய்ய உள்ளது.

# பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய செவ்வாயின் சூழல் ஆய்வு செய்யப்பட உள்ளது.

# Jezero பள்ளத்தின் தனித்துவமான பாறைகளில் பண்டைய நுண்ணுயிர் வாழ்வின் அறிகுறிகளை இந்த Perseverance ரோவர் தேடும்.

# Perseverance, தன் பயிற்சியைப் பயன்படுத்தி பாறை மற்றும் மண் மாதிரிகளைச் சேகரித்து, பூமிக்கு எதிர்காலத்தில் அவற்றை எடுத்து வருவதற்கான சாத்தியக் கூறுகளையும் ஆராயும்.

# சந்திரனைத் தாண்டிய மனித ஆய்வுக்கு வழி வகுக்கும் பல்வேறு புதிய தொழில் நுட்பங்களை நிரூபிக்கும் வாய்ப்பை Perseverance நாசாவிற்கு வழங்கும்.

Mars mission , Nasa
Mars mission , Nasa
AP

Perseverance ரோவரில் உள்ள முக்கியக் கருவிகள்:

1.Camera:

மொத்தம் 23 சக்திவாய்ந்த கேமராக்கள் Perseverance Rover இல் உள்ளன.

2.Microphone:

தரையிறங்கும் நிகழ்வின் போதும், ரோவரை ஓட்டும் போதும், மாதிரிகள் சேகரிக்கும் போதும் பயன்படுத்துவதற்கு ரோவரில் இரண்டு சக்திவாய்ந்த மைக்ரோஃபோன்கள் இருக்கின்றன.

3.Ingenuity Helicopter:

செவ்வாயில் தரையிறங்க உள்ள ரோவரில் Ingenuity என்னும் பெயருடைய ஹெலிகாப்டர் இணைக்கப்பட்டுள்ளது.

Ingenuity என்பது ஒரு ரோபோ ஹெலிகாப்டர் ஆகும். இது செவ்வாய் கிரகத்தில் சுவாரஸ்யமான இலக்குகளைத் தேடுவதற்கான புதிய தொழில்நுட்பத்தை அங்கு சோதித்துப் பார்க்கப் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் எதிர்கால செவ்வாய் ரோவர்களுக்கான சிறந்த ஓடுதளப் பாதையைத் திட்டமிடவும் Ingenuity உதவ உள்ளது. இந்த சிறிய ட்ரோன் ஹெலிகாப்டர், செவ்வாய் கிரக 2020 பயணத்தின் ஒரு பகுதியாக Perseverance ரோவரில் இருந்து 2021 இல் அது செவ்வாயில் லேண்ட் ஆன பிறகு பயன்படுத்தப்படும்.

கேமராக்களைத் தவிர இந்த ஹெலிகாப்டரில் வேறு எந்த அறிவியல் கருவியும் இல்லை.ரோவர் பணியின் ஆரம்பத்தில்,அதன் 30 நாள்கள் சோதனையின் போது Ingenuity ஹெலிகாப்டர் ஐந்து முறை வரை பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு முறை தரையிறங்கிய பின்னரும் Perseverance உடன் Ingenuity நேரடியாக தொடர்பு கொண்டு தரவுகளைப் பகிர்ந்து கொள்ளும். Ingenuity ஹெலிகாப்டர் எதிர்பார்த்தபடி செயல்பட்டால்,எதிர்கால செவ்வாய் வான்வழி பயணங்களுக்கான முறையான வடிவமைப்பை நாசாவால் உருவாக்க முடியும்.

Mars mission , Nasa
Mars mission , Nasa
AP

4.SHERLOC:

SHERLOC என்னும் பெயருடைய ஸ்பெக்ட்ரோமீட்டர் ரோவரில் பொருத்தப்பட்டுள்ளது.இது மேம்பட்ட அளவிலான இமேஜிங்கை வழங்கும் ஸ்பெக்ட்ரோமீட்டர் ஆகும். செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் பறக்கும் முதல் யு.வி.ராமன் ஸ்பெக்ட்ரோமீட்டராக ஷெர்லாக் இருக்கும்.

5.Mastcam-Z:

மாஸ்ட்காம்-இசட் என்பது ரோவரில் உள்ள கேமரா அமைப்பின் பெயர். மாஸ்ட்கேம்-இசட் இல் அதிநவீன கேமராக்கள் உள்ளன.

இவை உருவங்களைப் பெரிதாக்கவும், 3 டி படங்கள் மற்றும் வீடியோக்களை அதிவேகமாக எடுக்கவும் தொலைதூர பொருள்களை விரிவாக ஆராயவும் உதவும்.

6.SuperCam:

Perseverance ரோவரில் உள்ள சூப்பர் கேம் செவ்வாய் கிரகத்தில் கடந்த கால வாழ்க்கையுடன் தொடர்புடைய கரிம சேர்மங்களைத் தேடவும்,இதற்காக கேமரா,லேசர் மற்றும் ஸ்பெக்ட்ரோமீட்டர்களைப் பயன்படுத்தி பாறைகள் மற்றும் மண்ணை ஆராயவும் உதவுகிறது.

7.MOXIE:

செவ்வாய் ஆக்ஸிஜன் In-Situ வள பயன்பாட்டு சோதனை MOXIE என அழைக்கப்படுகிறது.செவ்வாய் கிரகத்தின் மனித ஆய்வுக்கு நாசா தயாராகி வருகிறது.மேலும் வருங்கால ஆய்வாளர்கள் செவ்வாய் வளிமண்டலத்தில் இருந்து ஆக்ஸிஜனை உந்துவிசை மற்றும் சுவாசத்திற்காக உற்பத்தி செய்வதற்கான வழியை MOXIE ஆராயும்.

செவ்வாய்க்கு நமது பெயரை அனுப்புவதற்கான டிக்கெட்
செவ்வாய்க்கு நமது பெயரை அனுப்புவதற்கான டிக்கெட்

8.MEDA:

செவ்வாய் சுற்றுச்சூழல் இயக்கவியல் அனலைசர் MEDA என அழைக்கப்படுகிறது.

இது காற்றின் வேகம் மற்றும் திசை, வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் உள்ளிட்ட வானிலை அளவீடுகளை செய்யும்.

மேலும் செவ்வாய் வளிமண்டலத்தில் உள்ள தூசி துகள்களின் அளவையும் MEDA அளவிடும்.

9.RIMFAX:

செவ்வாய் கிரகத்தின் துணை மேற்பரப்பு பரிசோதனைக்கான ரேடார் இமேஜர், ரிம்ஃபாக்ஸ் என அழைக்கப்படுகிறது.

10.PIXL:

எக்ஸ்ரே லித்தோ கெமிஸ்ட்ரிக்கான கிரக கருவி PIXL என அழைக்கப்படுகிறது.இதில் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் என்று ஒரு கருவி உள்ளது.இது ஒரு சிறிய அளவில் வேதியியல் கூறுகளை அடையாளம் காட்டுகிறது.PIXL ஒரு கேமராவையும் கொண்டுள்ளது.இது பாறை மற்றும் மண் அமைப்புகளின் நெருக்கமான படங்களை எடுக்கும்.

பொதுமக்களுக்கான வாய்ப்புகள்:

இந்த அற்புதமான செவ்வாய் கிரக ராக்கெட் ஏவுதல் பணிக்கு நாசா தயாராகி வருகையில், இதன் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் மக்களுக்கும் கடத்தும் வகையில் பல முன்னெடுப்புகள் நாசாவால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முதலாவதாக செவ்வாய் செல்லும் விண்கலத்தில் ஒரு தனிப்பட்ட மைக்ரோ சிப்பில் தங்களின் பெயர்களைப் பதிந்து அனுப்ப மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. உலகம் முழுக்க இருந்தும் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் பெயர்களை நாசா இணையதளப் பக்கத்திற்கு அனுப்பியிருந்தனர்.

ராக்கெட் ஏவுதலை மெய்நிகராகக் காண்பதற்கான அனுமதிச் சீட்டு
ராக்கெட் ஏவுதலை மெய்நிகராகக் காண்பதற்கான அனுமதிச் சீட்டு

மைக்ரோசிப்பில் பதியப்பட்ட இந்தப் பெயர்கள் இப்போது செவ்வாய் செல்லத் தயாராக உள்ளன.

தற்போது Perseverance Rover ஏவுதலை மெய்நிகராகக் காணும் வாய்ப்பையும் நாசா மக்களுக்கு வழங்கியுள்ளது.

https://www.eventbrite.com/e/mars-2020-perseverance-online-launch-participation-registration-109297596052

என்னும் இணையப்பக்கத்தில் தங்கள் விபரங்களைப் பதிவு செய்துகொள்வதன் மூலம் ஜூலை 30 இல் Mars 2020 - Perseverance விண்கலம் ஏவுதலை நாம், இணையவழியே மெய்நிகராகக் (Virtual) கண்டு ரசிக்கலாம். சமீப ஆண்டுகளில் மனிதனது செவ்வாய் கிரக ஆராய்ச்சிகள் வேகமெடுத்துள்ளன.

பல்வேறு நாடுகளின் செவ்வாய் கிரக செயல்திட்டங்கள் மூலமாக செவ்வாய் குறித்த பல்வேறு புதிய தரவுகள் மேலும் கிடைக்க உள்ளன. அமெரிக்காவின் புகழ்பெற்ற தனியார் விண்வெளி ஆய்வகமான எலன் மாஸ்க்கின் (Elon Musk) SpaceX மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பக்கூடிய புதுமையான தொழில்நுட்பங்களை, மலிவான விலையில் கண்டறிவதற்கான சோதனைகளில் குறிப்பிட்ட அளவிலான வெற்றி கண்டுள்ளது.

இவற்றின் மூலம் செவ்வாய் கிரகப் பயணத்திற்கு என்றே பல ஆண்டுகளாக நாசாவால் தயார் செய்யப்பட்டு வரும் விண்வெளி வீராங்கனையான அலிஷா கார்சன் விரைவில் செவ்வாயில் கால்பதிப்பார் என்று நம்புவோம்! தற்போது விண்வெளித் துறையிலும் உச்சகட்டப் போட்டியில் ஈடுபட்டுவரும் அமெரிக்காவின் Perseverance மற்றும் சீனாவின்Tianwen-1 ஆகிய தற்போதைய இரண்டு செவ்வாய் கிரக சோதனைகளும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துவோம்.

ஏனெனில் இவை மனிதகுலம் முழுமைக்குமான வெற்றிகள்! விண்வெளியில் மனிதனின் அடுத்த மாபெரும் பாய்ச்சல்கள்!

- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு