Published:Updated:

மண்டேலாவின் தேவை இன்றைக்கும் இருக்கிறது..! - அமைதியை விதைத்த நிஜ ஹீரோ #MyVikatan

நெல்சன் மண்டேலா
News
நெல்சன் மண்டேலா

நெல்சன் மண்டேலா பிறந்த தினம் இன்று (ஜூலை 18) அவரைப் பற்றி பேச அவர் பிறந்த நாள் மட்டுமே காரணம் அல்ல. சமீபத்தில் அரங்கேறிய இனவெறி தாக்குதல்களும் காரணம்.

90'ஸ் கிட்ஸ் தொடங்கி 2K கிட்ஸ் வரையில் நெல்சன் மண்டேலா பற்றி பாடப்புத்தகத்தில் படித்திருப்போம். ஆனால், 1970-களில் கறுப்பின கிட்ஸின் நாயகன்தான் நெல்சன் மண்டேலா. இன பேதத்துக்கு எதிராக உரத்த குரல் கொடுத்து 27 ஆண்டுகள் சிறைக்குள் இருந்தவர். அவர் சிறை செல்லும்போது அவரது மகளுக்கு வயது 3, சிறையிலிருந்து வெளியேறுகையில் அவரின் மகளுக்கு வயது 30. உலகம் நிறைய மாற்றங்களை கண்டிருந்தாலும், மாற்றம் காணாதது அவரது கொள்கைகள் மட்டும்தான்.

நெல்சன் மண்டேலா
நெல்சன் மண்டேலா
John-Paul Henry on Unsplash

20-ம் நூற்றாண்டின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவராகவும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான நெல்சன் மண்டேலா பிறந்த தினம் இன்று ஜூலை 18. அவரைப் பற்றி பேச அவர் பிறந்த நாள் மட்டுமே காரணம் அல்ல. சமீபத்தில் அரங்கேறிய இனவெறி தாக்குதல்களும் காரணம். ஆம், காந்தியும் நெல்சன் மண்டேலாவும், இன்னபிற தலைவர்களும் இனவெறிக்கு எதிராக ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராடி மீட்ட சமத்துவத்தை இன்று மேற்கத்திய நாடுகளில் சிலர் காலில் போட்டு மிதிப்பது அண்மைக்காலம் வரை தொடர்வதற்கு பிளாயிடின் மரணமே சாட்சி. காந்தியின், மண்டேலாவின் தேவை இன்றைக்கும் இருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்தத் தொழில்நுட்ப காலத்தில், ஊடகங்களின் வெளிச்சத்தில் இவர்கள் அரங்கேற்றும் இச்சம்பங்கள், அன்று எப்படி இருந்திருக்கும் என்பதை ஊகிக்க வேண்டாம். வக்கீலான காந்தியைத் தலைப்பாகை அணிய எதிர்ப்பு தெரிவித்தார் ஆப்பிரிக்க வெள்ளையின நீதிபதி, மேலும் கூலி வக்கீல் என்றே அழைக்கப்பட்டார். முதல் வகுப்பு பயணசீட்டு இருந்தும் ரயிலில் இருந்து வெளியே தள்ளப்பட்டார், குதிரை கோச் வண்டிகளில் அவரை வெள்ளையர்களுக்கு இணையாக உட்கார விடவில்லை, வண்டியோட்டின் காலடியை இருக்கையாக மாற்றி உட்கார வைக்கும்போது மறுக்கிறார் காந்தி.

நெல்சன் மண்டேலா
நெல்சன் மண்டேலா

அதனால் கடுமையாகத் தாக்கபடுகிறார். தமிழ் தொழிலாளி பாலசுந்தரம் கடுமையாகத் தாக்கப்பட்டு பல்லுடைந்த நிலையில் காந்தியின் உதவியை நாடுகிறார். இப்படி தென்னாப்பிரிக்க கொடுமைகளுக்கு காந்தியின் சத்திய சோதனை என்னும் நூலே சாட்சி.

இத்தனைக்கும் ஆப்பிரிக்கர்கள் 1,000 ஆண்டுகளாக அங்கு வசித்து வருபவர்கள், வெள்ளையர்கள் 17-ம் நூற்றாண்டில் குடியமர்ந்து மண்ணுக்கு சொந்தமானவர்களை அடிமைகள் போல் பாவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆப்ரிக்க தேசத்தின் தந்தை 1918-ம் ஆண்டு ஜூலை 18-ம் நாள் Xhosa மொழி பேசும் பழங்குடி இனத்தில் பிறந்தார் மண்டேலா. பெரும் வசதியோ, கல்வியோ அவர்கள் குடும்பத்தில் யாருக்கும் இல்லாவிட்டாலும், அவரது குடும்பத்துக்கு அரச பரம்பரையுடன் தொடர்பு கொண்டிருந்தது. அவரின் தந்தைக்கு 4 மனைவிகள் 9 பிள்ளைகள். மூன்றாம் மனைவிக்குப் பிறந்த மகன் மண்டேலா. அவரது தாய்க்கு படிப்பறிவு இல்லையெனினும் மண்டேலா படிக்க வேண்டுமென விரும்பி கறுப்பின மக்கள் படிப்பதற்கென உள்ள பள்ளியில் சேர்க்க விழைந்தார்.

தனது பகுதியில் தன் வயதுள்ள யாருக்கும் கிடைக்காத உடை அணியும் வாய்ப்பு மண்டேலாவுக்கு கிடைத்திருக்கிறது. தந்தையின் சட்டையும், அரைக்கால் சட்டையும் முதன்முதலாக அணிகிறார். இடுப்பிலிருந்து கால்சட்டை கழராமல் இருக்க டொய்ன் எனும் சணல் நாரைக் கொண்டு கட்டிக்கொண்டார்.

நெல்சன் மண்டேலா நினைவிடம்
நெல்சன் மண்டேலா நினைவிடம்
Denis Farrell

``இன்று எத்தனையோ சீர் உடுப்புக்கள் இருந்தாலும், தான் உடுத்தும் உடுப்புகளைவிட வாழ்நாளிலே சிறந்த உடுப்பு அதுதான்” என பின்னாள்களில் பல தருணங்களில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு ஹீரோவைப்போல வலம் வந்த தந்தையின் உடல் நலம் குன்றுகிறது, புகை பிடிக்கும் பழக்கமுடைய தந்தை சாகப்போகும் தருவாயிலும் புகைபிடிக்க விரும்புகிறார். முதலில் மறுத்த குடும்பத்தினர், கடைசியில் புகை பிடிக்கும் குழாய் மூலம் அவருக்கு கொடுக்க, புகைத்தவாறே உயிரை விடுகிறார் மண்டேலாவின் தந்தை. மரணத்துக்கு முன் தந்தை தன் நண்பரிடம் தன் மகனை ஒப்படைக்கிறார். ஒரு வேலைக்காரனாக அல்ல, ஒரு கல்வியாளனாக.

அரச ஆலோசகனாக ஆக்கினால் தன் மகன் உனக்கு கட்டுப்பட்டவனாக இருப்பான் என்று கூறுகிறார். நெல்சன் மண்டேலாவும் படிப்பு, வேட்டை, கால்நடை மேய்த்தல், விளையாட்டு போக, அந்தப் பகுதி பழங்குடி ஆட்சியாளர்களுடன் பழகியதால் ஆலோசகராகவும் வளர்க்கிறார். பழங்குடி தலைவர் மண்டேலாவை பள்ளிக்கு அனுப்புகிறார், நிறைய ஆங்கிலேயே மாணவ மாணவிகளுடன், சில கறுப்பின மாணவர்களோடும் நெல்சன் படிக்க தொடங்குகிறார். முதலில் தடுமாறினாலும் பின்னர் நன்றாகப் படித்து தேர்ச்சிபெறுகிறார்.

நெல்சன் மண்டேலா
நெல்சன் மண்டேலா
Tsvangirayi Mukwazhi

ஜோகனஸ்பர்க் நகரில் சட்ட நிறுவனத்தில் பணிபுரியும் இடத்தில் சக நண்பரால் ANC ( ஆப்பிரிக்கன் நேஷனல் காங்கிரஸ்), கம்யூனிஸ்ட் இயங்கங்களின் ஆர்வம் காட்டினாலும் கட்சியில் இணையவில்லை.

ஒரு வருடம் கழித்து the Witwatersrand பல்கலைக்கழகத்தில் இளங்கலை சட்டப்படிப்பு படிக்க சேர்கிறார். இவர் மட்டும்தான் கறுப்பின மாணவர். அங்கு கறுப்பின மாணவர்கள் சட்டம் பயில தகுதியற்றவர்கள் என்று வாக்குவாதம் செய்து, ஏற்றத் தாழ்வுகளைக் காட்டி 6 வருடம் படித்தும் பட்டம் கிடைக்காத நிலையில் 1949-ம் ஆண்டு அங்கிருந்து வெளியேறுகிறார்.

1948-ல் நடந்த தேர்தலில் வெள்ளையர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டு `நேஷனல் பார்ட்டி' டச்சு வம்சாவளி ஆப்பிரிக்கர்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்தது. பிரதமராக டேனியல் மாலன் தீவிர சட்டங்களால் கறுப்பின மக்களின் நிலையை மேலும் கேள்விக்குறியாக்கினார்.

  • கறுப்பினத்தைச் சேர்ந்தவர் அனைத்து நேரங்களிலும் அடையாள அட்டை வைத்திருப்பது அவசியம்.

  • ஒவ்வொரு இனக் குழுவும் வெவ்வேறு இடங்களில் வசிக்க வேண்டும். அதில் நல்ல வளமுள்ள பகுதியில் வெள்ளையின மக்களுக்கு ஒதுக்கப்படும்.

  • கல்வியிலும் கடும் ஏற்றத் தாழ்வுகள் காட்டப்பட்டன.

  • கறுப்பின மக்கள் இரவு நேரங்களில் வெளியில் வரக்கூடாது.

  • சில குறிப்பிட்ட தெருக்களில் கறுப்பின மக்கள் நடந்து செல்லக்கூடாது.

  • ஊர் விட்டு ஊர் சென்று வர தனி அனுமதி வாங்க வேண்டும்.

  • கறுப்பின மக்கள் குவாரிகளில், சுரங்கங்களில் குறைவான கூலிக்கு அமர்த்தப்பட்டு, அடிமைகளாக வைக்கப்பட்டிருந்தார்கள் .

நெல்சன் மண்டேலா
நெல்சன் மண்டேலா
Schalk van Zuydam

ஆனால், ஒவ்வொரு உரிமை மறுப்புக்கும் தனித்தனியாகப் போரிடுவதை அவர் விரும்பவில்லை. ஒட்டுமொத்த பிரச்னைக்கும் காரணம் இனவாதம் என உணர்ந்திருந்தார். அது இரண்டாம் உலகப்போருக்குப் பின் முடிந்துவிடும் என்று நினைத்திருந்த வேளையில் போருக்குப் பின் நிலைமை இன்னும் மோசமடைந்தது.

இந்த நிலையில் 1951-ம் ஆண்டு ANC இளைஞர் அமைப்பில் மண்டேலா தலைவராகப் பொறுப்பேற்கிறார். அதன் பின் ANC யின் போராளிகள் எப்போதும் இல்லாத வகையில் அதிகமாக உயர்ந்தனர்.

1952-ம் ஆண்டு காந்தியடிகளின் வழியில் ஒத்துழையாமை அரசுக்கு எதிராக நடத்தப்பட்டது. நூற்றுக்கணக்கான கறுப்பின மக்கள் பாஸ் இல்லாமல் பேரணியை நடத்தி கைதானார்கள். ஊரடங்கு மீறப்பட்டது, சமத்துவமில்லா சட்டங்கள் மீறப்பட்டன.

1953-ம் ஆண்டு வால்டர் சிசுலு, நெல்சன் மண்டேலா உட்பட ANC யின் பல தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். நீதிமன்றம் தொண்டர்களால் நிரம்பி வழிந்தது. நெல்சன் மண்டேலாவுக்கு 9 மாத கடும் காவல் விதிக்கப்பட்டது .

அப்பார்த்தேய்ட் என்னும் இனவாத சட்டம் வெள்ளையின மக்கள் எந்த நிலத்தை வேண்டுமானாலும் தேவைப்பட்டால் எடுத்துக் கொள்ளலாம் என்றும், ஒரு வேளை அந்த நிலம் கறுப்பின மக்களுக்கு ஒதுக்கி இருந்தாலும் எடுத்துக்கொள்ளலாம் என்னும் நிலையில் சோபியா டவுன் என்னும் கறுப்பின மக்கள் வசிக்கும் பகுதி soweto என்னும் பகுதிக்கு மாற்றியது. புலம் பெயர்த்தப்பட இருந்த மக்களின் எண்ணிக்கை 60,000 - 1,00,000 இருந்திருக்கும். இதற்கு எதிராக ANC குரல் கொடுத்தது. ``எங்கள் பிணத்தின் மீது எடுத்து செல்லுங்கள்” என்னும் கூக்குரலோடு மக்கள் தங்கள் வாழ்விடங்களுக்காக போராடினர். 1955-ம் ஆண்டு இரண்டாம் மாதம் 2,000 படை அந்த மக்களை அங்கிருந்து விரட்டியது.

நெல்சன் மண்டேலா
நெல்சன் மண்டேலா
Igor Eberling on Unsplash

இதன் பின் வலுவான அமைப்பு நிறுவப்பட்டது. கிடத்திட்ட 200 அமைப்புகளின் பிரதிநிதிகள், வெள்ளை, கறுப்பு, இந்தியன், coloured, தென்னாப்பிரிக்கன் இந்தியன் காங்கிரஸ், leftwing whites கொண்ட பலம் வாய்ந்த கவுன்சில் அமைக்கப்பட்டு இயங்க ஆரம்பித்தது.

1956-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் நாள் ராஜ துரோக குற்றச்சாட்டில் கைது செய்து, ஜோகன்ஸ்பர்க் சிறையில் சிறையில் அடைத்தது அரசாங்கம், சிறையிலும் மரியாதைக்குறைவாக நடத்தப்பட்டனர். ஆடைகளைக் களைந்து, கடும் குளிர் காலத்தில் சுவருடன் ஒட்டி பலமணிநேரங்கள் நிறுத்தப்பட்டனர், கட்டாந்தரையில் தூங்க கிழிந்த போர்வைகள் மட்டுமே கொடுக்கப்பட்டன. அவரைப்போல ANC -யின் 156 உயர்மட்ட குழு உறுப்பினர்கள் கைது செய்பட்டிருந்தனர். அவர்களுக்கு எதிராக ஆறு ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வந்தது. அதில் மண்டேலா உட்பட 30 பேரின் வழக்கை ட்ரான்ஸ்வால் உச்ச நீதி மன்றத்துக்கு மாற்றப்பட்டது. 18,000 வார்த்தைகளால் மண்டேலா குற்றம் சாற்றப்பட்டிருந்தார். மண்டேலாவும் மூன்று மணிநேரத்தில் 10,000 வார்த்தைகளுடன் நீதிமன்றத்தில் வாதிட்டார். 1961-ம் ஆண்டு குற்றசாட்டு நிரூபிக்க படாததால் விடுதலை செய்யப்பட்டார்.

பின் ANC தடை செய்யப்பட்டிருந்ததால் தலைமறைவு வாழ்க்கையில் கூட்டங்களை நடத்தினார். அப்படி ஒரு தலைவரை சந்திக்க செல்லும்போது மீண்டும் கைது செய்யப்படுகிறார் மண்டேலா. அந்தக் குற்றச்சாட்டுக்கு ஆறு ஆண்டுக்கால சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது, அந்த சிறைச்சாலை நாட்களில் LLB தொடர்ந்து படித்துக்கொண்டிருக்கிறார்.

1963-ல் வால்டர் சிசுலு உட்பட 7 பேர் காவல் துறையால் அரசுக்கு எதிரான ரகசிய திட்டத்தில் செயல்பட்டதாக கைது செய்யப்படுகிறார்கள். அந்த வழக்கில் ஏற்கெனவே தண்டனை அனுபவித்து வரும் மண்டேலாவும் இணைத்துக்கொள்ளப்பட்டார். ஒரு வேளை குற்றசாட்டு நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை தான்.

நெல்சன் மண்டேலா
நெல்சன் மண்டேலா
Vikatan Team

இந்த வழக்கு ரிவோனியா ட்ரைல் என்றும் அதில் மண்டேலா ஆற்றிய உரை வரலாற்று சிறப்பு வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. இதில் குற்றச்சாட்டை ஒப்பிட்டுக்கொண்டதுடன், "தேவைப்பட்டால் மரணத்தை எதிர் கொள்ளவும் தயார் செய்துகொண்டுள்ளேன்" என்று முடியும் அந்த உரை உலகநாடுகள் சபை வரை எட்டியது. உலகநாடுகளின் அழுத்தத்தையும் மீறி 1963-ம் ஆண்டு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து Robben தீவிற்கு நெல்சன் மண்டேலாவும் இரண்டு சகாக்களும் கொண்டுசெல்லப்பட்டார்கள். நெல்சன் மண்டேலாவுக்கு 466\64 என்ற கைதி எண் வழங்கப்பட்டு கல்லுடைக்கும் வேலை வழங்கப்பட்டது.

இதன் பிறகு 27 ஆண்டுக்கால தண்டனையை பல்வேறு சிறைகளில் அனுபவிக்கிறார். சிறையிலும் கடும் கொடுமையை அனுபவித்தாலும் மன உறுதியை விட்டுவிடவில்லை. தொடர்ந்து சிறை நூலகங்களில் படிக்கிறார். 1990-ம் ஆண்டு தண்டனை காலம் முடிந்து சிறைச்சாலையை விட்டு வெளியே வரும்போது ஆயிரக்கணக்கான மக்கள் கூடி இருக்கின்றனர். அவர்கள் மத்தியில் `அமென்டா’ (power ) என்று பலத்த குரலில் கூறுகிறார். கூடியிருக்கும் மக்கள் `நமதே’ என்று உரக்க கூறுகின்றனர் . மீண்டும் ஆப்பிரிக்கன் நேஷனல் காங்கிரஸில் தலைவர் ஆகிறார். அனைத்து மக்களுக்கும் சம வாக்குரிமை வழங்கப்படுகிறது, மண்டேலாவின் கட்சி வெற்றி பெற்று ஆட்சியில் அமர்கிறார். அவர் முன்னாள் ஏராளமான பிரச்னைகள் இருந்தாலும் சமஉரிமை சட்டங்களை அமல்படுத்துவதில் முனைப்புக்காட்டினார்.

நெல்சன் மண்டேலா
நெல்சன் மண்டேலா
Gregory Fullard on Unsplash

பல்வேறு சர்வதேச பிரச்னைகளில் பேச்சுவார்த்தைகளில் உடன்பாடுக்கு கொண்டு வர பெரும் முயற்சி மேற்குண்டார். சர்வ தேச நாடுகளுடன் நல்ல நட்புறவைக் கொண்டிருந்தார். சே குவேரா, பில் கிளின்டன், புஷ், ஒபாமா போன்றோருடன் நட்பில் இருந்தார். நட்புறவை வளர்க்கும் விதமாக 1995-ம் ஆண்டில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டார். அவர் பிறந்த தினத்தை 2009 முதல் உலக நாடுகள் சபை `மண்டேலா தினமாக’ அறிவித்து பின்பற்றிவருகிறது.

`எதையும் உடைத்து தூக்கியெறிவது எளிது, அமைதியை விதைப்பவர்களே நிஜ ஹீரோக்கள்" - நெல்சன் மண்டேலா.

- நா.உமாசங்கர், சந்தூர்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/