Published:Updated:

`நண்பா... இங்கு யாருக்கும் கொரோனா இல்லை!’ - இந்தியாவில் இப்படியும் ஒரு பிரதேசமா? #MyVikatan

Lakshadweep
Lakshadweep

லட்சத்தீவில் கொரோனா நிலவரம் குறித்து கேட்டேன். அங்கு இதுவரை யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்கிற தகவல் எனக்கு ஆச்சர்யம் கொடுத்தது.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக உலகம் முழுவதும் ஏராளமான உயிரிழப்புகள் நடந்து வருகின்றன. இந்த நோய்த் தொற்று பரவாமல் தடுக்க நோய்த் தடுப்பு மருந்துகள் இல்லாததால் அதைக் கண்டு பிடிக்கும் முனைப்புடன் உலக நாடுகள் உள்ளன.

கொரோனா
கொரோனா

இந்தியாவிலும் டெல்லி, மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா தாக்கம் அதிகரிப்பதால் மத்திய, மாநில அரசுகள் அவற்றைத் தடுக்கும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பு இல்லாத பகுதியாக லட்சத்தீவு யூனியன் பிரதேசம் உள்ளது. இது குறித்து வாசகர் பகிரும் தகவல் இது.

`ஹேய், கொரோனா..!’ -டெல்லியில் வடகிழக்கு மாநில இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

கடந்த இரு தினங்களுக்கு முன்பு லட்சத்தீவில் இருக்கும் நண்பர் பர்கத்தை செல்போனில் அழைத்தேன். 2000 முதல் 2004 வரை நான் அங்கு பணியாற்றியபோது எனக்கு அறிமுகமான நண்பர் அவர். அதன் பிறகு நான் தமிழ்நாடு திரும்பியபோதும் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் நான் பேசுவதுண்டு. 

லட்சத்தீவு
லட்சத்தீவு

நான் தொடர்பில் இருக்கும் மீனவ நண்பரான பர்கத், மொபைல் நம்பர் எனக்கு எப்போதுமே மறக்காது. காரணம், எனது பழைய மொபைல் நம்பரின் முந்தைய எண் பர்கத் உடையது. அதனாலேயே, அவரது மொபைல் எண் எனக்கு எப்போதும் பரிச்சயமானதாகவும் ஞாபகத்தில் இருப்பதாகவும் உள்ளது.

தற்போதைய கொரோனா லாக்டௌன் காலத்தில் லட்சத்தீவு எப்படி இருக்கிறது என்பதை விசாரிக்க பர்கத்தை அழைத்தேன். ஆச்சரியப்பட்ட அவர், ``என்னோட நம்பரை மறக்காமல் வைத்திருக்கிறாய். நான் உன் நம்பரை தொலைச்சிட்டேன் நண்பா... ஐயாம் வெரி சாரி நண்பா...” என்றார்.

லட்சத்தீவில் மீன்பிடித் தொழில்
லட்சத்தீவில் மீன்பிடித் தொழில்

இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டோம். குடும்பம், குழந்தைகள் எனப் பேச்சு வந்தது. இருவரும் குடும்பத்தைப் பற்றியும் தெரிந்து கொண்டதோடு, `பிள்ளைகள் என்ன படிக்கிறார்கள்?’ என்பது வரை பரிமாறிக் கொண்டோம்.

நலம் விசாரிப்புக்குப் பிறகு அக்கறையாகப் பேசத் தொடங்கிய பர்கத், ``உங்கள் நாட்டில் (தமிழ்நாடு) கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது. அதனால், கவனமாக இருக்க வேண்டும். லேசாகக் காய்ச்சல் அடிச்சாலே குளிகை (மாத்திரை) எடுக்கக் கூடாது. ஹாஸ்பிடல் போகணும்.. அப்புறம் மாஸ்க் போட்டுக்கணும். 

கடற்கரை
கடற்கரை

வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டுத் திரும்பியதும் கைகளைச் சோப்பு போட்டு சுத்தம் செய்ய வேண்டும். பசங்களை வீட்டை விட்டு வெளியே விளையாட விடக்கூடாது” என அன்றைய எங்களின் பேச்சு முழுவதுமே ஆரோக்கியம் தொடர்பான அட்வைஸாகவே இருந்தது.

பர்கத்திடம் நான் லட்சத்தீவில் கொரோனா நிலவரம் குறித்து கேட்டேன். அவர்,``இங்கே லட்சத்தீவில் யாருக்கும் கோவிட்-19 தொற்று இல்லை. இருப்பினும் அரசால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது. தலைநகரான கவரத்தி தீவில் 50 படுக்கைகள் கொண்ட கோவிட்-19  சிறப்பு வார்டு அமைச்சிருக்காங்க. 

எழில் கொஞ்சும் லட்சத்தீவு
எழில் கொஞ்சும் லட்சத்தீவு

அத்துடன், இங்குள்ள அகத்தி, மினிகாய், அந்த்ரூத், கல்பேனி, அமினி போன்ற தீவுகளில் இருக்கும் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்காகத் தனி வார்டு அமைச்சிருக்காங்க. ஆனால், இதுவரையும் யாரும் அட்மிட் ஆகலை. அகத்தி ஏர்போர்ட்லயும், கவரத்தி ஹெலிபேட்லையும் நோயாளிகளை அழைத்துச் செல்வதற்காக ஹெலிகாப்டர் தயார் நிலையில் வச்சிருக்காங்க.

நோய் தடுப்பு நடவடிக்கைகள் இங்கே முழுமையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. ஏனெனில், இங்கு மக்கள் தொகையே ஒரு லட்சத்துக்கும் குறைவுதான். (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 64,773). இங்கிருந்து கரைக்கு (கொச்சி) கப்பலில் செல்வதற்கு முன்னர் மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. அத்தியாவசியமான மருத்துவப் பணிக்கு செல்பவர்களுக்கு மட்டுமே கப்பலில் செல்ல அனுமதி உண்டு.

தென்னை மரங்கள் சூழ்ந்த கடற்கரை
தென்னை மரங்கள் சூழ்ந்த கடற்கரை

வெளி மாநிலத்தவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இங்கே நுழைவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தங்கியிருந்தவர்கள் சிறப்புக் கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கரைக்குச் சென்றவர்கள் மீண்டும் தீவுக்கு திரும்பினால், குறைந்தது 15 நாள்கள் தனிமைப்படுத்தப்படும் முகாமில் தங்க வைக்கப்படுகிறார்கள். இத்தகைய முன்னெச்சரிக்கைகளின் காரணமாகவே இங்கு நோயின் தாக்கம்  இல்லை” என்றார்.

நாடு முழுவதுமே கொரோனா நோய்த் தாக்கம் குறித்து மக்கள் அச்சத்துடன் இருக்கிறார்கள். நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த அரசுகள் தீவிரம் காட்டுகின்றன. ஆனாலும், கொரோனா பாதிப்பே இல்லாத இடமாக, இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவு இருப்பது வியப்புக்குரிய உண்மை.

- சி.அ.அய்யப்பன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு