Published:Updated:

ஸ்லேட் குச்சி டூ Zoom கிளாஸ் - ஒரு Nostalgic பகிர்வு #MyVikatan

ஸ்லேட்டுகளில் குச்சியை வைத்து எழுதி, அதை அழியாமல் வீட்டுக்குக் கொண்டு வருவது ஒரு கலை...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

என் மகள் அனிச்சத்திற்கு Zoom App மூலம் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார் பள்ளி ஆசிரியை. இந்த வகுப்பு நடக்கும் பொழுது நான் சிறுவனாக பள்ளியில் இருந்த காலத்தை நினைவு மீட்டுக்கொண்டிருந்தேன். இப்பொழுது இருப்பது போன்ற Nursery, Junior KG, Senior KG போன்றவை அப்பொழுது இல்லை. இவை இல்லை என்பதால் நேரடியாக ஒன்றாம் வகுப்பிற்குச் செல்ல வேண்டியதில்லை. குட்டி வகுப்பு என்றொன்று இருந்தது. இதை "அரை கிளாஸ்" என்றும் சொல்வார்கள்.

Representational Image
Representational Image
Credits ; Pixabay

பள்ளிக்கு வருகிற எல்லோரையும் சேர்த்துக் கொள்வார்கள். இடம் கிடைக்குமா என்ற சந்தேகம் தேவையில்லை. இப்பொழுது இருப்பது போன்ற நுழைவுத் தேர்வுகள் இருக்கவில்லை. பள்ளிக்கு வரும் குழந்தையை மே அல்லது ஜூன் மாதத்தில் ஒரு தேதியைக் குறிப்பிட்டு சேர்த்துக் கொள்வார்கள். என் வயதை ஒத்த, என்னுடன் பணிபுரியும் தமிழக நண்பர்கள் அனைவருமே மே அல்லது ஜூன் மாதத்தில் பிறந்திருக்கிறார்கள்! தமிழகத்தில் இதற்குப் பெயர் Certificate Date of Birth! உண்மையில் பிறந்த தேதி, பிறந்த நாள் கொண்டாட்டத்திற்குப் பயன்படுகிறது.

பள்ளியில் சேர்ந்த பிறகு, ஸ்லேட் மற்றும் குச்சி ஆகிய இரண்டையும் எடுத்துக்கொண்டு, கண்ணீரை விட்டுக் கொண்டே பள்ளிக்குச் செல்வார்கள். இந்தக் குச்சியைப் பயன்படுத்தி ஸ்லேட்டில் எழுத வேண்டும். சென்னையில் குச்சியை பல்பம் என்று அழைத்தார்கள். ஸ்லேட்டில் சில வகைகள் இருந்தன. ஒரு வகை ஸ்லேட்டின் எழுதும் பகுதி கறுப்பு நிறக் கல்லினால் ஆனது. அதன் நான்கு பக்கமும் மரக்கட்டையை வைத்து, அதன் மூலைகளில் தகரத்தை வைத்து ஆணி அடித்திருப்பார்கள். கனமான ஸ்லேட் இது. பெரும்பாலான மாணவர்களிடம் இந்த ஸ்லேட் இருக்கும். என்னிடம் ப்ளாஸ்டிக் ஃப்ரேம் கொண்ட மென்மையான ஸ்லேட் இருந்தது. பயன்படுத்த எளிதாக, பார்ப்பதற்குக் கொஞ்சம் அழகாக இருந்தாலும், இதில் ஒரு பிரச்னை இருந்தது. என்னை ஒரு மாணவன் அடித்துவிட்டான்.

Representational Image
Representational Image

கையால் திருப்பி அடித்தால் வலிக்காது என்று நினைத்த நான், என் ப்ளாஸ்டிக் ஸ்லேட்டை வைத்து அவனை நான்கு அடி விட்டேன். அமைதியாக என்னைப் பார்த்து விட்டு, அவன் பையில் இருந்த கல் ஸ்லேட்டை எடுத்து மண்டையில் ஒரு தடவை அடித்தான், என் மண்டை உடைந்து ரத்தம் கொட்டி விட்டது. நல்ல வேலையாக இந்த வகை ஸ்லேட்டுகள் வழக்கொழிந்து விட்டதால், பல மண்டைகள் உடையாமல் தப்பித்தன!

ஸ்லேட்டுகளில் குச்சியை வைத்து எழுதி, அதை அழியாமல் வீட்டுக்குக் கொண்டு வருவது ஒரு கலை. பல நேரங்களில் வீட்டில் எழுதிய வீட்டுப்பாடத்தை ஆசிரியையிடம் காட்ட பையில் இருந்து ஸ்லேட்டை எடுத்தால், பாதி அழிந்து போயிருக்கும். வீட்டுப்பாடம் செய்யாமல், சுத்தமான ஸ்லேட்டைக் காட்டி வீட்டுப்பாடம் அழிந்து போனதாகச் சொல்லி மாட்டியவர்களும் உண்டு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எப்படியோ இரண்டு வகுப்புகளை கடந்து மூன்றாம் வகுப்பிற்குப் போகும் பொழுது ஒரு சந்தோசம் உண்டானது. ஏனென்றால் மூன்றாம் வகுப்பில் பென்சிலால் பேப்பரில் எழுதலாம். கற்பனை செய்தது போல, அது ஒன்றும் அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. இன்று போல் Pencil Sharpner கள் அன்றைக்குக் கிடையாது. ஷேவிங் செய்கிற பிளேடுகளை வைத்துத்தான் பென்சில் சீவ வேண்டும், கூர்மையாக்க வேண்டும். விரலைக் கீறாமல் பென்சில் சீவிய யாரையும் எனக்குத் தெரியாது. பள்ளிக்குச் செல்லும் வழியில் தச்சு வேலை செய்பவர்கள் இருந்தால், அவர்கள் பென்சிலை அழகாக சீவி கூர்மையாக்கித் தருவார்கள். பென்சிலால் எழுதுவதை அழிக்க வெள்ளை நிற ரப்பர் இருக்கும். பல நேரங்களில் அது கறுப்பாகவே இருக்கும். அதற்கொரு காரணம் இருந்தது. எல்லா மாணவர்களுக்கும் பென்சில் கட்டாயம். ரப்பர் கட்டாயமில்லை.

Representational Image
Representational Image

எனவே பல மாணவர்கள், "அழி லப்பர்" கொடு என்று வாங்கிப் பயன்படுத்துவார்கள். இதுதான் அழி லப்பரின் கருமை நிறத்திற்குக் காரணம். எவ்வளவு வறுமை இருந்திருக்கிறது பாருங்கள். இதை உணர்ந்த தமிழ் நாடு அரசாங்கம் கல்வியோடு, இலவசமாக கல்விக்குத் தேவையான உபகரணங்கள் கொடுத்தது பாராட்டப்பட வேண்டிய திட்டம்.

பென்சிலோடு மல்லுக்கட்டி முடித்த பிறகு ஆறாம் வகுப்பில் பேனா வந்தது. இந்த பேனாவில் தினமும் திரவ மை நிரப்ப வேண்டும். கடையில் 10 பைசா கொடுத்தால் மை நிரப்புவார்கள். இந்த மையில் தூசி இருக்கும். இது நிப்பில் மையின் ஓட்டத்திற்குத் தடங்கல் செய்து, பேனா எழுதாமல் போகும். இதைச் சரி செய்ய ஷேவிங் பிளேடு பயன்படும். நிப்பில் உள்ள பிளவில் பிளேடை வைத்து கீறினால், தூசி நீங்கி மீண்டும் பேனா எழுத ஆரம்பிக்கும். அந்தக் காலத்தில் ஒழுகாத பேனா இருந்ததா என்று தெரியவில்லை.

எல்லா மாணவர்களின் கையிலும் நீல நிற மை கறை இருக்கும். கையில் மை பட்டவுடன் தேங்காய் எண்ணெய் தேய்த்து வழித்து சீவிய தலை முடியில் கை விரலை தேய்த்துக்கொண்டால் மை கறை குறைவாக இருக்கும் என்பது ஒரு நம்பிக்கை. ஆனால் விரலும் தலையும் அழுக்கானதுதான் பலன். பள்ளியில் கை கழுவ சோப்பு இருக்காது. தண்ணீரில் கழுவுவதால், கையில் உள்ள மை கறை போகாது. பள்ளியில் மதிய உணவு உண்ணும் மாணவர்கள் அந்த மையோடு சாப்பிடுவார்கள். இந்தப் போராட்டங்களெல்லாம் பால்பாயின்ட் பேனா வந்தவுடன் முடிவுக்கு வந்தது.

Representational Image
Representational Image

பால்பாயின்ட் பேனா கண்டுபிடிக்கப்பட்டு காப்புரிமை வழங்கப்பட்டது 1888 ஆண்டு. ஏறக்குறைய நூறு ஆண்டுகள் கழித்து இந்தியாவில் அறிமுகமானது. அன்றைக்கு அது 5 ரூபாய். இன்றைக்கும் ஏறக்குறைய அதே விலைக்குக் கிடைப்பது ஆச்சர்யம். விலைவாசி உயர்வு பாதிக்காத ஒரே பொருள் பால்பாயின்ட் பேனா என நினைக்கிறேன். இப்பொழுது எழுதுவது வெகுவாக குறைந்திருக்கிறது. ஆசிரியை நடத்தும் பொழுது தருகிற ஸ்லைடுகளை ஸ்கிரீன் ஷாட் எடுத்து விடுகிறார்கள். பல தேர்வுகளை கம்ப்யூட்டரில் எழுத ஆரம்பித்து விட்டோம். குச்சியில் இருந்து ஸ்கிரீன் ஷாட் வரை நடந்திருக்கும் தொழில் நுட்ப வளர்ச்சி பிரமிக்கத்தக்கது. இது போன்ற மாற்றங்கள் தவிர்க்க முடியாதது.

-முனைவர்.கோதண்டம் கிருஷ்ணமூர்த்தி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு