Published:Updated:

`அண்ணனுக்காகச் செய்த திருட்டுத்தனம்!' - எமோஷனல் குட்டி ஸ்டோரி #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

அண்ணன், தம்பிகளுடன் பெரிய குடும்பத்தில் பிறந்த எனக்கு, அவரின் வருத்தத்தை முழுமையாகவே புரிந்துகொள்ள முடிந்தது.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

இப்போது அரசு ஊழியர்களுக்கு வங்கிக்கணக்கில் சம்பளத்தைக் `கிரடிட்’ செய்வதுபோல அப்போது இல்லை. மாதத்தின் கடைசி வேலை நாளில், காலையிலேயே வங்கிக்குச் சென்று, அவரவர் அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கான பணத்தை மொத்தமாக எடுத்து வருவர். பின் ஒவ்வொரு பணியாளரின் பெயர் எழுதப்பட்ட கவரில் திணித்து என்னென்ன டினாமினேஷனில் எவ்வளவு உள்ளது என்ற விபரத்தையும் குறித்து வைத்து விடுவார்கள். கெஜட்டட் அலுவலர்களுக்கு, அவர்கள் இருக்கைக்கே சென்று கொடுத்து விடுவார்கள். மற்றவர்கள் அக்கவுன்ட் செக்‌ஷன் சென்று வாங்கிக்கொள்ள வேண்டும்.

Representational Image
Representational Image
Vikatan Team

எங்கள் அலுவலகம் சென்னையில் இருந்தது. ரிசர்வ் வங்கிக்கு அருகில் இருந்ததால் எங்கள் அலுவலகத்தின் மொத்தச் சம்பளத்தையும், ரிசர்வ் வங்கியில் இருந்துதான் எடுத்து வருவார்கள். அக்கவுன்ட் அசிஸ்டென்ட் சச்சி, 12 மணிக்கே வங்கிக்குச் சென்று சாப்பாட்டுக்கு முன்னர் பணத்தை எடுத்து வந்துவிடுவார். அதற்கென, தனியான ஒரு சூட்கேஸ் உண்டு. தொகை அதிகமென்பதால் வெங்கடேசனும் வேலுவும் கூடவே சென்று வருவார்கள். அன்றைக்கு, அக்கவுன்ட் செக்‌ஷன் துரிதகதியில் இயங்கும். 2, 3 நாள்களுக்கு முன்பிருந்தே அலுவலக உதவியாளர்கள் கவர் தயாரிக்கும் வேலையைத் தொடங்கிவிடுவார்கள் .

தமிழக அரசின் மாதாந்தர காலண்டர்களில், ஒரு பக்கம் மட்டுமே அச்சிடுவார்கள். முடிந்துபோன மாதங்களின் பக்கங்களைக் கிழித்து, அதில் கவர் செய்வார்கள். வெள்ளைப் பக்கம் வெளியில் தெரியும். அவை போதவில்லையென்றால், ஒரு பக்கம் மட்டும் உபயோகப்படுத்தப்பட்ட பழைய பேப்பர்களையும் உபயோகித்துக்கொள்வார்கள். வெள்ளைப் பக்கத்தில், பணியாளரின் பெயர், பதவியின் சுருக்கப் பெயர் ஆகியவற்றை மேலே எழுதி, கீழே மொத்தச் சம்பளத்தொகையை எழுதி, அதன் கீழே, கவரின் உள்ளே வைக்கப்பட்டுள்ள ரூபாய் நோட்டுக்கள் மற்றும் சில்லறைக் காசுகளின் விபரங்களைத் தெளிவாகக் குறித்துக் கொடுப்பார்கள். பல சமயங்களில், நாங்களெல்லாம் வீட்டிற்குச் சென்று ஆற அமர பிரித்துப் பார்ப்பதுண்டு.

Representational Image
Representational Image
Vikatan Team

சில வேளைகளில் எங்கள் கண்ணில் பிரிக்கப்படாமலேயே, எங்கள் துணைவியரின் கைகளுக்குப் போய்விடுவதுமுண்டு. அது வாழ்வின் நம்பிக்கை அடையாளமென்பதும், குடும்பத்தின் ஒற்றுமைக்கு வழிகோலிய எளிய முறை என்பதும் பின்னாளில்தான் எங்களுக்குத் தெரிய வந்தது.

அன்றும் ஒரு சம்பள தினம். எங்கள் அலுவலகம், தமிழகத்தின் மற்ற அலுவலகங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஓர் அலுவலகம். மற்ற அலுவலகங்களைப்போல் ஒரே மாதிரியான பணியை நாங்கள் செய்ய முடியாது. மத்திய, மாநில அரசுகளின் மக்கள் நலத்திட்டங்கள் ஒவ்வொன்றையும் அலசி ஆராயும், அருமையான ஒரு துறை எங்களுடையது.

ஒவ்வொரு திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து திட்டம் தொடங்கியதிலிருந்து, அது இறுதியாக எந்த நபருக்குப் போய்ச் சேருகிறதோ, அதுவரை சென்று, அந்தக் கடைசிப் பயனாளியையும் சந்திக்க வேண்டும். பின், திட்டத்தின் சாதக, பாதகங்களை நடுவு நிலையுடன் ஆராய்ந்து, அரசுக்கு அறிக்கை தரும், உண்மையான மக்கள் நல வாழ்வுத்துறை.

Representational Image
Representational Image
Pixabay

திட்டத்தின் வெற்றி தோல்விகளையும் கணக்கிட்டு, தோல்விக்கான காரணங்களைக் கண்டுபிடித்து, அவற்றைக் களைவதற்கான, நடைமுறைப்படுத்தக்கூடிய ஆலோசனைகளையும் வழங்க வேண்டியது எம் துறையினரின் தலையாய கடமை. 55-க்கும் மேற்பட்ட அரசுத் துறைகளில், எவையெல்லாம் நன்றாகச் செயல்படுகின்றன என்பதும், எந்தெந்தத் துறைகளில் என்னென்ன தகிடுதத்தங்கள் நடைபெறுகின்றன என்பதும், எம் துறைப் பணியாளர்களுக்கு அத்துப்படி. சம்பள தினங்களில்கூட அலுவலகத்துக்கு வர முடியாத சூழல்களும், எம் பணியாளர்களுக்குப் பல சந்தர்ப்பங்களில் ஏற்படுவதுண்டு.

என்னுடைய அறைக்கு வந்த நண்பர், தான் காலையில்தான் மதுரையிலிருந்து திரும்பியதாகவும், தான் மேற்கொண்டுள்ள ரேஷன் அரிசி 'தரம்’ குறித்த ஆய்வில் அரசியல்வாதிகள் தலையீடு அதிகமாக இருப்பதாகவும் கூறினார்.

‘இது சகஜந்தானே!’

என்று கூறியபடி நான் மற்ற விபரங்களை விசாரித்தேன். அவரும், நானும் பணியில் சேர்ந்த நாளிலிருந்து ஒரே பிரிவில்தான் வேலை செய்தோம்.

இருவரும் பணி உயர்வில், கெஜடட் நிலை பெற்றபிறகு, வெவ்வேறு பிரிவுகள் ஆகிவிட்டோம். ஆனால், எங்கள் நட்பில் மட்டும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. தனது குடும்பச் சூழலையும், தன் அண்ணன் செலவில்தான் நண்பர் படித்திருக்கிறார். அந்த அண்ணனின் குடும்பம் தற்போது வறுமையில் உழல்வதையும் சில சமயம் என்னிடம் கூறி வருத்தப்படுவார்.

தன்னுடைய மனைவியும் அரசுப் பணியில் இருப்பதால் பொருளாதாரச் சிக்கல் ஏதுமில்லையென்றும், ஆனால் அண்ணனுக்கு உதவி செய்ய மனைவி இடங்கொடுப்பதில்லை. அதனால்தான் நன்றி கெட்டவனாக மாறிக் கொண்டிருப்பதாகவும் புலம்புவார்.

Representational Image
Representational Image
Pixabay

நான்தான் ஆறுதல் கூறுவேன். "நாளடைவில் எல்லாம் சரியாகி விடும. பொறுத்திருங்கள்" என்பேன். அவரும், "நானும் பொறுத்துதான் போகிறேன். ஆனால் என்னுடைய பொறுமை காரணமாக, என் அண்ணனின் வாழ்க்கையே முடிந்து போய்விட்டால், நான் சம்பாதித்தும் பயனில்லாமல் போய்விடுமே’ என்று ஆதங்கப்படுவார்.

அந்தச் சமயத்தில் அவரின் கண்கள் கலங்கிவிடும். அண்ணன், தம்பிகளுடன் பெரிய குடும்பத்தில் பிறந்த எனக்கு, அவரின் வருத்தத்தை முழுமையாகவே புரிந்துகொள்ள முடிந்தது.

"அண்ணன் குடும்பம் எப்படியிருக்கிறது?" என்று நான் எதார்த்தமாகக் கேட்க, அவர் அவசரமாக,

"பாருங்கள்! நான் உங்களிடம் வந்ததே அவருக்காகத்தான்!" அதை மறந்துவிட்டு ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறேன்!’ என்று கூறி விட்டு, அவசரமாகப் பேன்ட் பாக்கெட்டிலிருந்து ஒரு கவரை எடுத்து மேஜை மீது வைத்துவிட்டு,

" நீங்கள் எனக்கு ஓர் உதவி செய்ய வேண்டும்" என்றார்.

" சொல்லுங்க! என்ன செய்யணும்? அவசரமாக ஏதாவது பணம் தேவையா?" என்றேன்.

"நீங்க வேற! பணமெல்லாம் வேண்டாம். நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கறேன். எவ்வளவு சொல்லியும் என் வொய்ஃப், அண்ணனுக்குப் பணம் அனுப்ப சம்மதிக்கல. அவங்களும், வேலை செய்வதால் பொய் சொன்னாலும் கண்டுபிடிச்சிடறாங்க.

Representational Image
Representational Image
Pixabay

வாழ்க்கையில நிம்மதியே போயிடுது. அதனால, நான் ஒரு முடிவுக்கு வந்திட்டேன். அவங்களை ஏமாற்றி பணம் அனுப்ப ஓர் உபாயம் கண்டுபிடிச்சிருக்கேன். பணத்தை அவங்க கையில கொடுத்துட்டுத் தொங்க வேண்டாமே! அவங்க கைக்குப் போறதுக்கு முன்னாடி, பணத்தை எடுத்திடணும். அதுக்குக் கவரையே மாற்றிடணும்.

சம்பளக் கவரோட, நான் ஒட்டின கவரையும் மாசா மாசம் ஒங்க கையில கொடுத்திடறேன். ஓர் ஆயிரம் ரூபாயைத் தனியா எடுத்திட்டு, நீங்க புதுக் கவர்ல பேரு, மற்ற விபரங்களையும் எழுதிக் கொடுத்திடுங்க. அந்தக் கவரை அவங்ககிட்ட காட்டி சமாளிச்சுக்கிடறேன். ஏமாற்று வேலைக்கு உங்களையும் துணைபோகச் சொல்றதுதான் வருத்தமாயிருக்கு" என்ற அவரை இடைமறித்த நான்,

"சந்தோஷமா, மன நிறைவுடனே இதைச் செய்யறேன். எனக்கு இதில எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்ல. நானும் உங்க மாதிரி அண்ணன்களோட பிறந்தவந்தான். ஒங்க வலி எனக்கு நல்லாவே புரியுது. கொடுங்க கவரை !" என்றேன்.

அவர் ஓய்வுபெறும்வரை எங்கள் திருட்டுத்தனம் ஒவ்வொரு மாதமும் தொடர்ந்தது. எப்போது சம்பள தினம் வருமென்று நானும் ஆவலுடன் காத்திருக்க ஆரம்பித்தேன். ஏனெனில், அந்தத் திருட்டுத்தனம் எனக்கு ஆத்ம திருப்தியைத் தந்தது.

- ரெ.ஆத்மநாதன்

வெர்ஜீனியா, அமெரிக்கா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு