Published:Updated:

``செல்லாத காசுக்கும் மிட்டாய்..!’’ - Nostalgic நெகிழ்வனுபவம் #MyVikatan

Representational Image
News
Representational Image ( Unsplash )

கடைக்காரர் செந்தாமரை கடையில் இருந்தால் சிறுவர்களுக்கு சிம்ம சொப்பனம்தான். அவருடைய தோரணையே மிரட்டும் தொனியில்தான் இருக்கும்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

10 பைசா அநேகமாக 1, 2, 3, 5, 10, 20, 25, 50 பைசா நாணயங்களைப் பார்த்து புழங்கிய உபயோகப் படுத்திய கடைசி தலைமுறை என்னுடையதாகத்தான் இருக்கும். என் 6 வயதில் எங்கள் ஊரில் ஒரு இட்லி 10 பைசா. ஒரு போண்டா அல்லது வடை அல்லது ஒரு மிக்சர் அல்லது கார சேவ் பொட்டலம் 10 பைசாதான்.

10 பைசா கிடைத்தால் அன்று நான் பணக்காரன். உடனே கடைக்குச் சென்று அதைச் செலவழித்து மேற்சொன்ன ஏதாவது ஒரு பண்டத்தை (நாங்கள் தீனி என்று சொல்வோம்) வாங்கி அதை மெதுவாக 2 அல்லது 3 மணி நேரம் சாப்பிடுவோம். இதில் யாராவது எனக்கும் கொஞ்சம் கொடு என்று கேட்டால் ரொம்ப பிகு செய்து நிரம்ப யோசனை செய்து கொஞ்சமாகக் கிள்ளி கொடுத்துவிட்டு,

``போன தடவ நீ வாங்கினப்போ எனக்கு தர மாட்டேன்னு சொன்னேல்ல... அடுத்த தடவை எனக்கு குடுக்கணும் சரியா’’ என்ற ஒரு நாள் ஒப்பந்தம் போடுவோம். ஏன் அது ஒரு நாள் ஒப்பந்தம்? அந்த அடுத்த முறை என்பது எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. அப்படி வரும்போது இந்த ஒப்பந்தம் நினைவிருக்க வாய்ப்பில்லை, அன்று யாருக்கு அதிர்ஷ்டம் வாய்த்ததோ அவர் வைத்ததே சட்டம். என்றோ போட்ட ஒப்பந்தத்தை நினைவுபடுத்தினால் ஒன்றும் கிடைக்காது.

Representational Image
Representational Image
Pixabay

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வீட்டில் சில நேரங்களில் புதையல் கிடைக்கும். செல்லாது என்று எங்காவது போட்டு வைத்திருக்கும் ஒன்று இரண்டு மூன்று பைசா நாணயங்கள் கண்ணில் பட்டால் அதை எடுத்துக்கொண்டு நேராக செந்தாமரை (கடைக்காரர் பெயர்) கடைக்குச் சென்று அவரின் மகன் இருந்தால் தயங்கித் தயங்கி அந்தச் செல்லாத நாணயங்களைக் கொடுத்து ஏதாவது மிட்டாய் கொடுத்தால் மிக சந்தோசமாக உள்ளங்கைக்குள் அடக்கி வீட்டுக்கு வந்து அதைச் சாப்பிடும் மகிழ்ச்சி இன்று பல கிலோ இனிப்பு கார வகைகளை வாங்கிச் சாப்பிட்டாலும் சாப்பிட பொருளாதாரம் இடம் கொடுத்தாலும் கிடைப்பதில்லை.

மேலும், நாங்கள் கொடுக்கும் அந்தச் செல்லாத நாணயங்களுக்கு எங்களுக்கு தின்பண்டங்கள் கொடுத்தாலும் அந்த வயதில் எனக்கு அந்த நாணயங்களை அவர் என்ன செய்வார் அதனால் நஷ்டமா லாபமா என்றுகூட தெரியாது. செல்லாத நாணயங்களை வைத்து மிட்டாய் வாங்கிய பெருமிதம் மட்டும் எனக்குள் மீதமிருக்கும். இங்கு நான் அந்தக் கடைக்காரர் மகனை பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். ஏன் என்றால் கடைக்காரர் செந்தாமரை கடையில் இருந்தால் சிறுவர்களுக்கு சிம்ம சொப்பனம்தான். அவருடைய தோரணையே மிரட்டும் தொனியில்தான் இருக்கும். ஆனால், அவருடைய மூத்த மகன் அந்தக் கடையை நடத்த ஆரம்பித்த பிறகு நல்ல முன்னேற்றம் அவர்களுக்கு.

Representational Image
Representational Image
Unsplash

காரணம், யாரிடமும் இல்லை என்று சொல்லாத குணம், குறைவான பணம் இருந்தாலும் அடுத்த முறை கொடு என்று கேட்ட பொருளைக் கொடுக்கும் குணம், எந்தப் பொருளையும் இல்லை என்று சொல்லாமல் அது புதியதாக வாங்கி வைக்க வேண்டிய பொருளாயினும் அந்தப் பொருளுக்கான தேவை குறைவாக இருப்பினும் கேட்பவருக்காக மட்டும் அடுத்த நாளே தருவித்துக் கொடுப்பார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்றைய கார்ப்பரேட் உலகத்தில் நிறைய பொருள்கள் சிறார்களைக் கவரும் விதமாக அவர்களை மையப்படுத்தி விற்பனை உத்திகள் வகுக்கப்படுகின்றன. ஆனால், அன்றே சுமார் 35 வருடங்களுக்கு முன்பே அந்த உத்தி அந்தக் கடைக்காரர் மகனுக்கு தெரிந்திருக்க வேண்டும். அதனாலேயே செல்லாத நாணயங்களுக்கு தின்பண்டங்கள் கொடுத்து அனைத்து சிறுவர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஒரு சிறந்த நண்பனாகத் தன்னை மாற்றிக்கொண்டவர் பெருமாள் அவர்கள்.

Representational Image
Representational Image
Unsplash

அனைத்துக் குழந்தைகளும் தன் பெற்றோருடன் பெருமாள் கடைக்கு போய் தீனி வாங்கிக் கொடுக்க வேண்டும் என்றும் அடம் பிடித்த காரணமும் அதுவாகவே இருக்க கூடும். ஆனால், இதன் பின் அவருக்கான லாப நோக்கம் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. அந்தச் சிறு கிராமத்தின் குறைவான மக்களைக்கூட தனது கடையின் வாடிக்கையாளர்களாக மாற்றுவதற்கான முயற்சியாகவே அது இருந்திருக்க கூடும்.

மளிகைப் பொருள்களிலிருந்து மருந்துகள் வரை (கால்நடை மருந்துகள் உட்பட) வைத்திருப்பார். இன்று A to Z என்று அனைத்துப் பொருள்களையும் பல இணைய தளங்கள் பொருள்களை விற்றாலும் அன்று எங்கள் கிராமத்தின் (அன்றய தேவைகள் என்பது அத்தியாவசிய தேவைகளாக மட்டுமே இருந்ததும் ஒரு காரணம், என்னுடைய தேவையான பத்து பைசா போல) A to Z தேவைகளைத் தீர்த்து வைத்தது அந்த மளிகைக் கடைதான். அதுவே, பின்னாளில் பெருமாள் கடையாக மாறி புகழ் பெற்றது. செல்லாத காசுக்கும் திண்பண்டங்கள் கொடுத்து எங்கள் பள்ளிப் பருவத்தை அழகாக்கியவர் இன்றளவும் ஒரு ஹீரோவாகத்தான் எங்கள் மனதில் நிற்கிறார்!

- ஆனந்தகுமார் முத்துசாமி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/