Published:Updated:

`Nostalgic நினைவுகளை மீட்டெடுத்த அந்த போன்கால்!' - வாசகர் பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

செய்தித்தாளை ஆழ்ந்து வாசித்துக்கொண்டிருந்த என் சிந்தனையை குலைக்கும்விதமாக ஹாலில் வைத்திருந்த என் கைப்பேசி அலறி என்னை அழைத்தது.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

மழை கொட்டித்தீர்த்த ஒரு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை. கண்விழித்த நான், மிக சுகந்தமாக ஒரு காபி தயாரித்து அதை 'உச்' கொட்டி குடித்துக்கொண்டே வீட்டின் கதவைத் திறந்துகொண்டு வெளியே வாசலுக்கு வந்தேன்.

நகரத்தின் எந்தவொரு ஞாயிறு அதிகாலையும் மிக நிசப்தமானது.

நகர வாழ்வின் நெருக்கடிகளுக்கு மத்தியில், ஒரு வாரத்தின் அலைச்சல்களுக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் பரபரப்புகளுக்கும் நடுவில் மக்கள் குருவிக் கூடுகளில் அடைபட்டுக் கிடப்பதுபோல் தத்தம் வீடுகளில் சாய்ந்து ஓய்ந்து இருக்கும் சமயம். நகரம் தன் இயக்கு விசையை முற்றும் தொலைத்து ஒரு மயான அமைதி சூழ இருக்கும் ஞாயிற்றுக்கிழமைகளின் ஒருநாள் அன்று.

ஒரு சிறு இரைச்சலற்ற அந்தக் காலைப்பொழுதில், கையில் இருக்கும் காபி கோப்பையைக் கொடுத்த மணத்திலும் அதன் சுவையிலும் கட்டுண்டு, அந்த மென் சூடுள்ள பானக அமிர்தத்தை தொண்டைக்குழியில் அது ஏற்படுத்தும் சுக அவஸ்தையில் மிக இதமாக விழுங்கிக்கொண்டிருந்தேன்.

Representational Image
Representational Image
Pixabay

விடிந்தும் விடியாமலும் மழை விட்டும் விடாமலும் வருண பகவான் கண்ணாமூச்சி ஆட, மழை மிக லேசாகத் தூறிக்கொண்டிருந்தது. ஒரு டி.வி.எஸ் 50-ல் வந்த பேப்பர்காரர், தன் வண்டியின் முன்னால் இருந்த ஒரு பெரிய பாலிதீன் மூட்டைக்குள் கைவிட்டு, அன்றைய செய்தித்தாளை சுருட்டி எடுத்து என் வீட்டு வாசப்படி நோக்கி தூக்கி எறிந்தார்.

வந்து விழுந்த செய்தித்தாள் தரையிலிருந்த ஈரத்திலும் விழுந்து கொண்டிருக்கும் மழைத் துளியிலும் நனைந்துவிடக் கூடாது என்று கையில் இருந்த காபி டம்ளரை வெளியே போட்டிருந்த நாற்காலியில் வைத்துவிட்டு, ஓடிப்போய் அந்தச் செய்தித்தாளை எடுத்துக்கொண்டு வந்தேன்.

நீர்த் திவலைகளால் கொஞ்சமே கொஞ்சம் ஆங்காங்கே நனைத்திருந்த செய்தித்தாளை ஒரு கையால் விரித்து, அன்றைய தலைப்புச் செய்தியை வாசித்துக்கொண்டே மறு கையால் காபியை உளமாற குடித்து முடித்து டம்ளரைக் கீழே வைத்தேன்.

செய்தித்தாளை ஆழ்ந்து வாசித்துக்கொண்டிருந்த என் சிந்தனையைக் குலைக்கும் விதமாக ஹாலில் வைத்திருந்த என் கைப்பேசி அலறி என்னை அழைத்தது. செய்தித்தாளை நாற்காலியின் ஒரு பக்கம் வைத்துவிட்டு, ஹாலுக்கு விரைந்து கைப்பேசியின் திரையைப் பார்த்தால், ஒரு புதிய நம்பரில் இருந்து வந்த அழைப்பு என்னை எடு என்பதுபோல் திரையில் மினுமினுத்தது.

லாஜிஸ்டிக்ஸ் துறையில் துணை மேலாளராக இருப்பதால், எங்காவது சிக்கிக்கொண்டிருக்கும் 'லோடு' வண்டியை மீட்கத்தான் என்னை ஏதாவது டிரைவர்கள் அழைப்பார்கள். ஞாயிற்றுக்கிழமையானாலும் விடமாட்டார்கள் என்று சபித்துக் கொண்டே அந்த அழைப்பை எடுத்தேன். ஆனால் மறுமுனையில், எனக்கு மிகப் பரிச்சயமான குரலில்,

"யாரு பேசுறது நெல்லிக்குப்பம் மணியா?" என்று கேட்டது அந்தக் குரல்.

குரலை வைத்து நமக்கு பரிச்சயமான ஆளைக் கண்டுபிடிக்கும் கலையில் மிகவும் மோசமான நான்,

"ஆமா... நீங்க யாரு?" என்றேன்.

Representational Image
Representational Image
Pixabay

"டேய்... நான் தாண்டா சிவா" என்றது அந்தக் குரல்.

அவன் சிவா. என் பாட்டி வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு வீட்டு மாடியில் குடியிருந்தான். என் பால்ய சிநேகிதன். என் 4 வயதிலிருந்து 13 வயது வரை என் உற்ற தோழனாக இருந்தவன்.

வார சனி ஞாயிறு மற்றும் பள்ளியின் காலாண்டு, அரையாண்டு, முழுப்பரீட்சை விடுப்புக்கு மட்டுமே நான் 8 கிலோமீட்டர் தள்ளி இருந்த என் பாட்டி வீட்டுக்குப் போவேன். அன்றைய நாள்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் பள்ளி விடுமுறையாகவே இருக்கும். வாரம் ஒருமுறை நாங்கள் சந்திக்கும் சந்திப்புக்காக ஏங்கிக் கொள்வோம்.

பின் அவனின் அப்பாவுக்கு பணிமாற்றம் ஆகி, இவன் குடும்பத்துடன் வேறு எங்கோ சென்றுவிட்டான். நாங்களும், பாட்டிக்கு பிறகு அந்த வீட்டை விற்றுவிட்டு பெருநகரம் நோக்கி பெயர்ந்து பல வருடங்கள் ஆகின்றன. கைப்பேசிக்கு முந்தைய காலம் என்பதால் சரியான தொடர்பு இல்லை. அவன் கொடுத்த தொலைபேசி எண்ணையும் நான் எங்கோ தொலைத்து விட்டிருந்தேன்.

பின் என் வாழ்க்கை எங்கெங்கோ திசை மாறி, புதிய நட்பு வட்டாரம் பல தோன்றி, அவனை என் நினைவு அடுக்குகளில் இருந்து கிட்டத்தட்ட மறந்தே விட்டிருந்த ஒருநேரத்தில், இத்தகைய ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் எங்கோ எப்படியோ என்னுடைய கைப்பேசி நம்பர் கிடைத்து என்னை அழைத்திருந்தான்.

பிள்ளைகளைப் பலவகையில் வாட்டிவதைக்கும் இப்போது உள்ள பள்ளிகளைப் போலில்லை எங்கள் காலத்துப் பள்ளிகள். கராத்தே கிளாஸ், டான்ஸ் கிளாஸ், பாட்டு கிளாஸ், நீட் கோச்சிங் கிளாஸ் என்று குழந்தைமை அடக்குமுறை நிகழ்த்தும் இன்றைய கால பெற்றோர்கள் ராட்சகர்கள்.

மிகச் சுதந்திரமாக, விளையாட்டும் விளையாட்டு நிமித்தமாகவும் மகிழ்ச்சி கூத்தாடவும் பள்ளி பால்ய நாள்களை கழித்தவர்கள் நாங்கள். கடிவாளம் கட்டிய ரேக்ளா ரேஸ் குதிரை போல் பிள்ளைகளை பின்னின்று இயக்கும் வன்முறை எங்கள் காலத்தில் இல்லை.

"எப்படிடா இருக்க? பார்த்து 17, 18 வருஷமாச்சுடா."

"திடீர்னு ஒரு மாசமா உன் நினைப்பாவே இருந்துச்சு."

"என் சித்தப்பா மகன் கால்யாணத்துக்காக நம் ஊருக்கு வந்தேன், நீங்க இருந்த வீட்டுக்குப் போய் அங்கே இப்போ இருக்கிறவரிடம் பேசி 'கான்டாக்ட்' புடிச்சு உங்க அப்பா நம்பர் வாங்கினேன். "

Representational Image
Representational Image

" நேத்து நைட்டுதான் உங்க அப்பா உன் நம்பரை கொடுத்தாரு. சரி நாளை ஞாயிற்றுக்கிழமை கூப்பிடலாம் அப்படின்னு உன்னை இன்னைக்கு கூப்பிட்டேன். இன்னும் ஒரு வாரம் நம்ம ஊர்லதான் இருப்பேன்" என்றான்.

பரஸ்பரம் நெகிழ்ந்து ஆனந்த கண்ணீர்விட்ட நாங்கள், பேசுவதற்கு ஓராயிரம் பால்ய கதைகள் இருந்தன.

இதேபோன்ற ஒரு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை. அவனும் அவன் குடும்பமும் சென்னை நோக்கிப் போன அந்த நாள் எங்கள் பால்ய காலத்தின் ஆற்றுப்படுத்த முடியாத துன்பம் கொடுத்த நாள். பின் கடிதப் போக்குவரத்தில் ஓரிரு வருடங்கள் சிநேகம் பாராட்டிய நாங்கள், பின் எங்கள் வாழ்க்கை எங்களைக் கொண்டு சென்ற போக்கிலும் வாழ்வின் புதுப்புது சவால்களிலும் மெல்ல மெல்ல ஒருவரை ஒருவர் மறந்தோம்.

பால்யத்தின் நினைவுகள்தான் எவ்வளவு மகத்தானவை. எதைப் பற்றியும் கவலைப்படாத சந்தோஷம் ஒன்றையே விரும்பும் பால்யத்தின்நட்புதான் எவ்வளவு உன்னதமானது. கள்ளம் கபடமற்ற அந்தப் பருவம்தான் எவ்வளவு பொக்கிஷமானது. நேரத்தை பின்னோக்கி செலுத்தும் இயந்திரம் ஒன்று உண்டென்றால் எல்லோரும் தங்கள் பால்யத்துக்கே திரும்ப விரும்புவோம்.

அவனிடம் பேசிக்கொண்டே ஹாலில் உள்ள கடிகாரத்தில் மணி பார்த்தேன். மணி 9.05 ஆகியிருந்தது, இரண்டு மணிநேரம் போனதே தெரியவில்லை. என் தொண்டை கனத்தது, கண்கள் பனித்தன.

"டேய், உன்ன ஒரு டைம் இப்பவே பார்க்கணும்டா" என்றான்.

"சரிடா... அடுத்த ஞாயிற்றுக்கிழமை நான் ஊருக்கு வருவேன், வா நம்ம சில்வர் பீச்சிலே பார்க்கலாம்" என்றேன்.

நாங்கள் எங்களுடைய தற்போதைய வாழ்க்கை குறித்தும் திருமணம், வேலை, குழந்தை குறித்தும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அதைப்பற்றி நாங்கள் யோசிக்கவுமில்லை.

வாழ்வில் 20 வருடங்கள் பின்நோக்கிப் போய் ஒரு கனவுலகில் இருவரும் சஞ்சரித்துக்கொண்டிருந்தோம். இவ்வளவும் பேசி முடித்த பின் அரைநிமிடம் இருவரும் மௌனமாக இருந்தோம்.

எங்கள் பால்யத்தின் சாட்சியாக இருந்த அந்த மெளனத்தை கலைத்தவனாய் அவனே தொடர்ந்தான்.

Representational Image
Representational Image

"சரிடா... வச்சுடவா... இதான் என் நம்பர் சேவ் பண்ணிக்கோ" என்றான்.

"சரிடா... சிவா, அடுத்த ஞாயிற்றுக்கிழமை நம்ம ஊர் பீச்சில் பார்ப்போம். ஃபுல் ஈவினிங்க ஒதுக்கிடு" என்றேன்.

சொல்லிவிட்டு போனை வைத்தேன். மனம் ஏதோ ஒரு வகையான வெறுமையில் தவித்தது. கனமே இல்லாதவனாக வெறும் தக்கையாக உணர்ந்தேன். ஏதோ ஒருவகையான பரிதவிப்பில், ஞாயிற்றுக்கிழமைக்கே உண்டான ஒரு வகையான குதூகலத்தை இழந்தவனாய் ஹாலில் இருந்து வெளியே வந்தேன்.

மணி 9.30 ஆகி இருந்தது.

இரண்டு மணி நேரத்துக்கு முன்பு இங்கு மழை பெய்ததா என்று கேட்கும் அளவுக்கு வெயில் அடித்துக்கொண்டிருந்தது. ஏதோ ஒன்று என் மனசைப் போட்டு அனத்திக்கொண்டேயிருந்தது. ஏதோ ஒருவகையான இழப்பை உடல் முழுவதும் உணர்ந்து கொண்டிருந்தது.

ஞாயிற்றுக்கிழமை தூக்கத்தை ஆண்டு அனுபவித்து அப்போதுதான் விழித்திருந்த என் மனைவியும் என் மகனும் பேசிக்கொண்டிருந்தது என் காதில் நன்றாக விழுந்தது.

"அம்மா, உன் போனைக் கொடு. நான் கேம் விளையாடணும்" என்று தன் அம்மாவை என் 5 வயது மகன் நச்சரித்துக்கொண்டிருந்தான்.

ஏதோ யோசித்தவாறே வீட்டுப் படியை விட்டு கீழே இறங்கினேன்.

முன் கேட்டை அடைந்தேன். வெயில் கடுமை காட்டிக்கொண்டிருந்தது.

சட்டென்று மேல்நோக்கிப் பார்த்தேன். சூரியனின் வெம்மை மிக உக்கிரமாக என் முகத்தில் தாக்கிக்கொண்டிருந்தது.

- மணிசங்கரன். பா.ந.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு