Published:Updated:

``ஒரு கடுதாசி எழுதிக் கொடுக்கிறியா புள்ள…!’’ – வாசகியின் Nostalgic பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image ( Vikatan Team )

கடுதாசியின் துவக்க உரை என்பது ஒரு கட்டுரையின் முன்னுரை போன்றது ... பிள்ளையார் சுழி முதற்கொண்டு ஒவ்வொன்றையும் , ஒவ்வொரு முறையும் விதவிதமாக எழுத வேண்டும் என நினைப்பாள்….

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

``தேவி, இங்க வா'',

``இதோ வந்துட்டேன் தாத்தா'',

``எத்தனாப்பு படிக்குற'',

``மூனாப்பு தாத்தா'',

``சரி உன்னோட தமிழ், ஆங்கிலம், கணக்கு நோட்டு புத்தகங்களை எடுத்துட்டு வா எப்படி எழுதியிருக்கேன்னு பார்க்கிறேன்…''

``இந்தாங்க தாத்தா பாருங்க''

``இன்னும் தமிழை ரெட்ரூல் நோட்டுலதான் எழுதிறயா…''

``ஆமாங்க தாத்தா…''

Representational Image
Representational Image
Vikatan Team

``போன மாசம் தாத்தாவுக்கும் பாட்டிக்கும் ஒரு கடுதாசி எழுதியிருந்தியே அதுல கூட முதல் வரியே தெற்கிலிருந்து வடக்க போயிருந்தது... நேரா எழுதிப் பழகு... அப்புறம் எப்பவும் தமிழை பிழை இல்லாமல் எழுத கத்துக்கணும்... சரி நான் இங்க நல்லபடியா வந்து சேர்ந்துட்டேன்னு ஊருக்கு ஒரு கடுதாசி போடணும் எழுதி கொடுக்கிறயா ..''

``இல்லை தாத்தா , எப்பவும் அம்மாதான் ஸ்லேட்டுல எழுதி தருவாங்க அதைப் பார்த்து நான் அப்படியே இன்லேண்ட் லெட்டர்ல எழுதுவேன்….''

``ம்ம் சரி பரவால அடுத்தமுறை தாத்தாவுக்கு நீயே தனியா ஒரு கடுதாசி எழுதணும் …''

``சரிங்க, தாத்தா…''

இப்படியாகத்தான் தேவியின் எழுத்துப் பணி துவங்கியது... அதாவது கடுதாசி எழுதும் பணி.. அக்கம்பக்கத்து வீட்டு தாத்தா, பாட்டிகளுக்கும், அத்தைமார்களுக்கும் கடுதாசி எழுதிக் கொடுப்பதை ஏதோ தன் வாழ்நாள் கடமையாகவும் ஆயகலைகளில் ஒன்று எனவும் கருதினாள்.

முக்கியமாக, பக்கத்து வீட்டு ராமாத்தாள் பாட்டிக்கு எழுதிக் கொடுப்பது என்றால் தனி உற்சாகம் வந்து விடும்.. ஏதோ பள்ளி கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு வாங்குவதைப் போல பெருமிதம் அடைவாள்.

``தேவிம்மா…..''

ராமாத்தாள் பாட்டியின் குரலை கேட்டதும் துள்ளிக்குதித்து ஓடினாள்..

என்னங்காத்தா கடுதாசி எழுதணுமா எனும்போதே மூளை பிள்ளையார் சுழி இட, அவளது கைகள் பரபரத்தது…

Representational Image
Representational Image
Pixabay

கடிதாசியின் துவக்க உரை என்பது ஒரு கட்டுரையின் முன்னுரை போன்றது ... பிள்ளையார் சுழி முதற்கொண்டு ஒவ்வொன்றையும், ஒவ்வொரு முறையும் விதவிதமாக எழுத வேண்டும் என நினைப்பாள்….

தேவீஈஈ, போனவாரம் புள்ளாச்சிலிருக்கிற அண்ணன் காசு அனுப்புச்சு , மணியார்டரு செரியான சமயத்துக்கு வந்து சேர்ந்திருச்சு, அதுவும் அண்ணிகாரிக்கு தெரியாம வேற அனுப்பிருக்கு… ஊர்ல பெரியவ பையன் என் பேராண்டிக்கு வேற படுப்பு மண்டைல ஏறமாட்டேங்குதாம்... ஏதாவதும் மில்லு வேலைக்கு அனுப்புலாம்னு மாப்பிள்ளை சொன்னாரு, அப்புறம் , அந்த செவல மாட்டுக்கு சொகம் இல்லாம கழனி தண்ணி கூட காட்டல………. இதான் சேதி எழுதிரு…….

என்ன ரோசனை அம்மணி எழுதின கடுதாசியை படிச்சுகாமி கேட்போம்…

11.08.'96

அன்புள்ள ,

அண்ணனுக்கு அன்பு தங்கை ராமாத்தாள் எழுதிக் கொள்வது. இங்கு அனைவரும் நலம் அது போல் அங்கு அண்ணி, மருமகன் சுப்பிரமணியன், மருமகள் திலகவதி மற்றும் தங்களது நலமறிய ஆவல்.

நிற்க,

சென்ற மாதம் தாங்கள் அனுப்பிய தொகை ஆயிரம் மணியார்டரில் வந்து சேர்ந்தது. என் அவசர தேவை அறிந்து உதவியதற்கு நன்றி. மேலும் , இங்கு ………………………………………….

……………………

….

..

இப்படிக்கு ,

தங்கள் பாசமிகு தங்கை ராமாத்தாள்.

Representational Image
Representational Image

ஏன் தேவி அண்ணிக்கு தெரியாம அனுப்புச்சே அதைப்பத்தி ஒரு வரி எழுதிருபுள்ள…..

ஏனுங்காத்தா அதையே கண்டிப்பா எழுதனுங்களா... சரி அப்படியே விலாசத்தைச் சொல்லுங்க எழுதிரேன்…

வெலாசம் என்ன பெரிய வெலாசம் எங்க அண்ணன் பேரு போட்டு புள்ளாச்சி தாலூக்கா, புள்ளாச்சி வட்டம் போட்டா கடுதாசி போயி சேர்ந்திரும்…

இது போன்று விடுபட்ட சேதிகளை நிரப்ப வேண்டுமெனில் கடிதத்தின் கீழே பி.கு என்று அடைப்பிற்குள் எழுத வேண்டும், சில நேரங்களில் முக்கியம் என்ற குறியீட்டின் கீழும் எழுத வேண்டி வரும்…

(பி.கு: அண்ணிக்கு தெரியாமல் அனுப்பியதிற்கு நன்றி என அடைப்பிற்குள் எழுதி கோத்து விடும் பணியை செவ்வனே செய்து முடித்து... பழைய கடிதத்தை துழாவி எடுத்து அனுப்புநர் முகவரியை பெறுநர் முகவரியாக மாற்றி புள்ளாச்சியை , பொ-ள்-ளா-ச்-சி (Pollachchi) என சரியாக எழுதி கோந்திட்டு ஒட்டி தபால் பெட்டியில் சேர்த்துவிட்டு வந்து…

Representational Image
Representational Image
Pixabay

``அம்மா போஸ்ட்" என்ற தபால்காரரின் குரலுக்கு காத்திருப்பது சுகம் என்றால்,

வந்த கடிதத்தைப் பிரித்து படித்து காண்பித்து …" இக்கடிதம் கண்டவுடன் பதில் கடிதம் போடவும்" என்ற வரிகளுக்காக காத்திருப்பது என்பது அதை விட சுகம் ..

பள்ளி விடுமுறை நாள்களில் தாத்தா வீட்டிற்குச் சென்றால் மெல்லிய இரும்புக் கம்பியை நீண்ட 'S' வடிவத்தில் வளைத்து, தேதி வாரியாக தாத்தா கோத்து வைத்திருக்கும் கடிதங்களை எடுத்து ஒவ்வொன்றாக எடுத்து எடுத்து வாசித்து மகிழ்வாள்………………..

" அங்கு அனைவரும் நலம் என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்".............. பதில் கடிதம் போடவும்.

இப்படிக்கு,

ந.கிருஷ்ணவேணி.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு