Published:Updated:

அம்மா சுட்ட பொம்மை தோசை...! - உயிர்ப்பிக்கும் Nostalgic நினைவுகள் #MyVikatan

Representational Image
Representational Image ( Vikatan Team )

கலந்துவைத்திருந்த காபியின் வாசம் மண்வாசனையையே மறக்கடித்துக்கொண்டு இருந்தது....

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

காற்று எங்கோ பெய்யும் மழையின் மண்வாசனையும் அவ்வப்போது வரும் இடியும் மின்னலும் மழைக்கு முந்தய ஒருவித குளிர்ச்சியைத் தந்துகொண்டிருந்தது.

பின் தெருவில் வளர்க்கப்படும் மாடுகளுக்கு என்ன ஆனதோ மீண்டும் மீண்டும் கத்திக்கொண்டே இருந்தது....

Representational Image
Representational Image
Vikatan Team

கலந்துவைத்திருந்த காபியின் வாசம் மண்வாசனையையே மறக்கடித்துக்கொண்டு இருந்தது.

ம்ம்மாஆஆ...... மீண்டும் கத்தியது .... அட அம்மா காபி கொடுக்கும் போதெல்லாம் சொல்வது ஞாபகம் வந்தது....

''இரண்டு வயசுலயே காபி பைத்தியம்டா நீ.... வாசல்ல யானை வந்துருக்குன்னாகூட என் மடில உக்காந்துக்கிட்டே அத கொஞ்சம் நிக்கச் சொல்லுங்க காபி குடிச்சுட்டு வாரேன்.. அப்படினுதான் சொல்லுவ.....''

இந்தக் கதையை ஏறக்குறைய லட்சம் தடவ கேட்டிருந்தாலும் கேட்கும் எனக்கோ அல்லது சொல்கிற அவர்களுக்கோ சலிக்காது. போனதடவை ஊருக்குப் போன போதுகூட மடியில் படுத்துக்கொண்டிருந்த போது தலையை வருடிக்கொண்டே பேசும்போது சொன்னார்கள்.

மழை இப்போது வீட்டுக்கு முன் பெய்துகொண்டிருந்தது. மண்வாசனை காணாமல் போய் மழைச்சத்தம் இனிமையானது. மழையைப் பார்த்ததும் ஓடிப்போய் நனைவதும் அம்மா செல்லமாகத் திட்டிக்கொண்டே தலையைத் துவட்டி விடுவதும் நெத்திநிறைய திருநீறு​ பூசிவிட்டு உச்சந்தலையையும் கொஞ்சம் போட்டு தேய்த்துவிடும் போது கிடைத்த அந்த அன்யோன்யம் ஏக்கமானது....

கொஞ்சம் நனையலாம் என்று கதவைத் திறக்கும்போது எதிர்வீட்டுக் குட்டிப்பையன் சன்னல் வழியாக நக்கலாக சிரிக்கவும் உள்ளே வந்துவிட்டேன். ஆனால் ஏழு கழுதை வயசான என்னை இன்னமும் ``கார்த்திம்மா..’’ என்று கூப்பிடவோ, மடியில் படுக்க வைத்துக் கொள்ளவோ அம்மா மறக்கவேயில்லை. நான் சிறியவனாக இருந்தபோது என்னவெல்லாம் செய்தார்களோ அவற்றைக் கொஞ்சம்கூட மாற்றிக் கொள்ளவில்லை. அவர்கள் அப்படியே நமக்கு அம்மாவாகவே இருக்கிறார்கள். நாம் அவர்களுக்கு இன்னும் ..... என்றைக்கும் இரண்டுமூணு வயசு பிள்ளைதான்.....

Representational Image
Representational Image
Vikatan Team

அம்மா சாதம் உருட்டிக்கொடுத்தால் இரண்டு வாய் அதிகமாகத்தான் உள்ளே போகும். இப்போது என்னதான் ரொம்பவே சுவையான உணவுகிடைத்தாலும், அம்மா கையால் தரும்போது சாப்பிடும் சுவைக்கு..... ம்ஹூம்.... வாய்ப்பேயில்லை.

மத்தியானம் வைத்த சாதம் கொஞ்சம் இருக்க, ``தயிர் ஊத்தி பிசைஞ்சுக்கலாம் சூடா தோசை ஊத்திக்கலாம் ....’’ என இரவு உணவைத் தயாரிக்க பிரிட்ஜை திறந்து தயிரையும் மாவையும் வெளியில் எடுத்தேன்.

தோசைக்கல்லை அடுப்பில் சூடாக வைத்துவிட்டு சாதத்தைப் பிசைந்தவாறே உப்பைப் போட்டு தயிரைக் திறந்தேன். அது மோராகப்பட்டது.

``அண்டா சட்டிக்குள்ள மோரை ஊத்திட்டு நிறைய மோர் இருக்கு எல்லாத்துக்கும் குடுங்கன்னு இரண்டு வயசுல நீ நின்னன்னு சொல்லிட்டு கெட்டியா இருக்கிற தயிரை ஊத்திப் பிசைஞ்சு கொடுக்கும்போதும் கிண்டலா அப்ப எடுத்துவச்சதாம்மா இதுன்னு கேக்குறப்ப ....போட கழுதை’’ என்று ஒரு புண்முறுவலோடு சொல்லும்போது கன்னத்தில் சின்னதாக ஒரு குழி.. அழகும்மா நீ.....

தண்ணீரைத் தெளித்து கல்லு சூடாகிவிட்டதா என்று பார்த்துக்கொண்டே தோசை ஊற்றும்போது கடிக்க வந்த கொசுவோடு நடந்த சண்டைல கோணலான தோசை வார்த்தேன்.

மீண்டும் அம்மாவின் ஞாபகங்கள்..

`` அம்மா.... ஒரு பூனைக்குட்டி தோசை’’ என்று கேட்கும் போது, சிரித்துக்கொண்டே இப்போதுவரைக்கும் ஒரு வட்ட தோசைக்குக் காதும் கொஞ்சம் உடம்பும் போட்டு வாலுமாக ஊற்றி வரும்போதும் இரண்டுமூணு தோசை அதிகமாத்தான் உள்ளே போகும்.

Representational Image
Representational Image
Vikatan Team

அம்மாவிடம் சின்ன வயதில் என்ன கேட்டாலும் .... ``சொல்லி விட்ருக்கேன் லாரில வந்துட்றுக்கு’’ அப்படி என்கிற பதில்தான். அந்த லாரி எல்லாம் ஒருவேளை வேலைநிறுத்தத்தில் இருந்ததோ என்னவோ இதுவரை வந்ததேயில்லை.... மீண்டும் கேட்க எண்ணமும் வந்ததில்லை....!

மீண்டும் மீண்டும் அம்மாவின் நினைவை அதிகப்படுத்த கண்ணோரத்தில் இப்பவோ எப்பவோ என வழிந்து ஓட ஆயத்தமாயிருந்தது கண்ணீர்.....

கணீரென்ற குரலில் பாரதியின் பாட்டு "தீராத விளையாட்டுப் பிள்ளை..... "

"ஹலோ..... ம்மாஆ நான் நல்லாருக்கேன்... நீங்க"

- சுக்கிரன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு