Published:Updated:

சின்ன நோட்டிலிருந்து லாங் சைஸ் நோட்டுக்கு பிரமோஷன்! - பள்ளியின் முதல் நாள் அனுபவங்கள் #MyVikatan

அரசுப் பள்ளி
அரசுப் பள்ளி

வாங்கியவுடன் அந்த புத்ககத்தை முகர்ந்து பார்ப்பது பிறந்த குழந்தையின் பாதத்தை நுகர்வது போல் இன்பமானது. அதில் ஒட்டிக் கொள்ளும் பக்கத்தை பிரித்து எடுப்பது பிறந்த குழந்தைக்கு துணி மாற்றுவது போல இலாவகாமானது...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

சின்னச் சின்ன வெளிச்சத்தையும் பார்க்கிற கண்கள் உங்களுடையது

அது எழுப்பும் மெல்லிய சத்தத்தை கேட்கிற காதுகள் உங்களுடையது.

அது அணைந்து விடாமல் பாதுகாக்கும் கைகளும் உங்களுடையது

என ஆசிரியர்களைப் பற்றி குறிப்பிடுவார் கல்வியாளர் ச.மாடசாமி. இது பள்ளிக்கும் சிறிது பொருந்தும். உலகமே பள்ளிக்கூடமாய், பள்ளிக்கூடமே உலகமாய் இருப்பது குழந்தைகளுக்கு மட்டும்தான்.
ஏப்ரல் மாதம் கடைசி தேர்வு எழுதிய உடனேயே ஊர்ல யார் கேட்டாலும் அடுத்த வகுப்புக்கு போகப்போவதை குழந்தைகள் பெருமையாய் சொல்லுவார்கள். ஒவ்வொரு மே மாதம் முடியும் போதும் குழந்தைகளுக்கு சிறகு முளைக்க ஆரம்பிக்கும்.புதிய வகுப்பில் சிறகடிக்க ஆசைப்படுவார்கள். அப்படி சிறுவயதில் பள்ளி திறந்த நாளில் துவங்கும்போது நிகழும் சம்பவங்களை திரும்பிப்பார்க்கலாம்.

தெருவில் விளையாடும் போது சண்டையின் போது வாக்குவாதத்தில் அடிக்கடி "டேய் அடுத்த மாசம் நான் நாலாவது போகப் போறேன்" மரியாதையா அண்ணானு கூப்பிடுனு அதட்டுவார்கள். அப்போது அண்ணானு அடுத்தவங்க கூப்பிடுவது அலாதிப் பிரியம். பிற்காலத்தில் எல்லாப் பெண்களும் அண்ணா என அழைக்கப்போவதை முன்கூட்டியே அறியாத பருவம்.

Ignorance is bliss.

என் தங்கம் என் உரிமை போல புது வகுப்புக்கு புது சிலேட்டு வாங்கி பிள்ளையார் சுழி போடுவது தான் உலக வழக்கம். பல வண்ணத்தில் இருக்கும் அந்த சிலேட்டின் கைப்பிடியை பின்னாளில் ராஜ்கிரண் நல்லி எலும்பு கடிப்பதை போல் கடித்து கடித்து மொட்டை சிலேட்டு ஆக்கியிருப்போம். இதிலேயே ஒரு சிலர்கிட்ட கல்லு சிலேட்டு வச்சிருப்பாங்க. இவனை தொட்டோம் நாம கெட்டோம்னு யாரும் அவனிடம் வம்புக்கு போகமாட்டாங்க.

வகுப்பறையில் அப்போதைய அர்னால்ட் அவன்தான்.

 அரசுப் பள்ளி
அரசுப் பள்ளி

சிலேட்டு வாங்கிய கையோடு அப்போது புத்தகப் பை வாங்க திட்டமிடுவோம். தகரப் பெட்டி, மஞ்சப்பை, நரம்புப்பை, பீடியின் பெயரை தாங்கி நிற்கும் மளிகைக்கடைப் பையின் அப்டேட் வெர்சனாக ஜிப் வைத்த பையை தேர்வு செய்து வாங்குவோம். பக்கத்து வீட்டுப்பையனின் பேக்கைவிட ஒரு ஜிப்பாவது அதிகம் இருக்க முன்னுரிமை கொடுப்போம்.

புது வீட்டில் எல்லா அறைகளையும் சுற்றிப் பார்ப்பது போல பையின் எல்லா ஜிப்புகளையும் திறந்து திறந்து பார்ப்போம். ஒரு நாளில் குறைந்தது ஒன்பது முறையாவது திறந்து பார்த்தால் தான் திருப்தி.

#முதல் நாள் முதல் கையெழுத்து

முதல் நாள் எல்லா கோயிலுக்கும் போய் கும்பிட்டுவிட்டு, பயபக்தியாய் எல்லாரிடமும் சொல்லிக் கொண்டு.. பல இலட்சிய கனவுகளுடன் பள்ளிக்குள் நுழைவோம். பலநாள் பார்க்காததுபோல எல்லாரையும் அளவளாவி.. முதல்நாள் வழிபாட்டுக் கூட்டத்தில் உச்சஸ்தாயில் உறுதிமொழியும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் பாடுவோம்.

புது டவுசரின் வாசத்துடன், மஞ்சள் வைத்த புதிய சட்டையின் மணத்துடன் லெப்ட் ரைட் போட்டு வகுப்புக்கு போவோம். எந்த சார், எந்த மிஸ் வரப் போறாங்கனு முதலில் தெரிந்து கொள்ள first day first show படம் பார்க்கப்போவது போல ஆவலாய் இருக்கும். அடிக்காத மிஸ் வந்தால் அரைகிலோ நெல்லை அல்வா ஓசியில் கிடைத்தது போல் அப்படி ஒரு குதூகலம். அவங்க அட்டெண்டண்ட்ஸ் எடுக்கும் போது நம் பெயரை அவர்களுக்கு தெரியப்படுத்தும் போது வரும் சந்தோசம் இருக்கே.. அது அனுபவிச்சு அனுப்பி வச்சாதான் தெரியும். புது மிஸ்ஸிடம் நல்லவனா காட்டிக் கொள்ள நம்பியார் போல நாம் நடித்து வைப்போம்.

வரிசையாய் எல்லோரையும் கூப்பிட்டு புத்தகம் வழங்குவார்கள். அதை வாங்கும்போது ஏதோ பாரதரத்னா வாங்குவது போல பரவசமாய் இருக்கும். வாங்கியவுடன் அந்த புத்ககத்தை முகர்ந்து பார்ப்பது பிறந்த குழந்தையின் பாதத்தை நுகர்வது போல் இன்பமானது. அதில் ஒட்டிக் கொள்ளும் பக்கத்தை பிரித்து எடுப்பது பிறந்த குழந்தைக்கு துணி மாற்றுவது போல இலாவகாமானது. முதன் முதலாய் அப்போது தான் புத்தகத்தில் பெயர் எழுதி புது வகுப்பை எழுதுவோம்.ஏதோ புது சி.எம் ஆகி கையெழுத்து போடுவதுபோலவே இருக்கும்.

பின்பு என்னென்ன நோட் வாங்க வேண்டுமென்று எழுதிப் போடுவார்கள். ஒரு குயர் என்பதை ஒரு குயில் நோட்டுனு தான் சொல்லுவோம்.அதே போல் rough note என்பதை தமிழில் 'ரவ்' நோட் என எழுதி..வைப்போம்.புதிதாய் பள்ளியில் சேருவோரை கண்டால் உன்னையெல்லாம் பார்த்தா பாவமா இருக்குங்கிற ரேஞ்சிலயே பார்ப்போம்.

முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கை கொடுக்குமா தமிழக அரசு? - வாசகர் வாய்ஸ் #MyVikatan

#துடிக்குது புஜம் ஜெயிப்பது நிஜம்

புது புக்கு புது வகுப்பு என ஒரு மிதப்புடன் ராஜாதிராஜாவில் கயிறு கட்டின சின்ராசு ரஜினி மாதிரியே யாரையாவது அடிக்காலாங்கிற எண்ணத்துடன் எவரைப் பார்த்தாலும்

'சண்டை வச்சுக்கலாமா', 'சண்டைக்கு வா' என ஒவ்வொருத்தரிடமும் பர்சனல் லோன் வேணுமானு கேட்கும் பேங்க்காரங்க மாதிரி ஓயாமல் கேட்போம்.

இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை ஆக்சிஜன் மீட்டரில் பல்ஸ் பார்ப்பது போல அடிக்கடி பேக்கில் புது புக் இருக்கானு சரி பார்த்துக்கு கொள்வோம்.முதல் நாள் வகுப்பில் ஆசிரியர் எல்லாரையும் பார்த்து அறிவுரை கூறி எல்லோரும் என்ன வேலைக்கு போறீங்கனு கேட்பார்..அப்போது எல்லாருமே டாக்டர்,கலெக்டர், வக்கீல் னு சொல்லி எல்லாரும் சிரிப்போம்.அப்போது காலமும் எங்களோடு சேர்ந்து சிரித்திருக்கக் கூடும்.

டவுன் பஸ்ஸில் இடம் பிடிப்பது போல் அவ்வளவு சுலபமில்லை.. மாப்பிள்ளை பெஞ்ச் எனும் கடைசி பென்ச்சில் இடம்பிடிப்பது. அதற்கு சின்சியாரிட்டியும், சீனியாரிட்டியும் வேணும்.
மணிகண்டபிரபு

#ஒன்றாம் வகுப்பு வாரியர்ஸ்

தடுப்பூசி போடுவார்களோ என்ற அச்சத்துடன் ஒவ்வொரு குழந்தையும் ஆசிரியரை பெரிய டாக்டராகவோ, நர்சாகவோ தான் முதல் வகுப்பு குழந்தைக்குத் தெரியும். எப்படியாவது இந்த இடத்தை விட்டுச் சென்றுவிட வேண்டுமென சி.ஐ.டி எம்.ஜி ஆர் போல திட்டம் தீட்டி திடீரென வகுப்பிலிருந்து தெரியாமல் ஓடிவிடுவார்கள். சிலர் பத்து மணிக்கே பையை தூக்கிக் கொண்டு ஆசிரியரிடம் வந்து நான் வீட்டுக்குப் போகட்டுமா என வெள்ளந்தியாய் கேட்பார்கள்.சிலர் கொண்டுவந்த வாட்டர் கேனை வாயில் வைத்து சிக்கல் சண்முகசுந்தரம் போல் ஒரு மணிநேரம் நாயனம் வாசிப்பார்கள்.

அழுகை, சிரிப்பு, உறுமலுடன் பொழுது கழிந்து,மாலை பெற்றோர் அழைத்துச் செல்ல வரும் போது தான் 'என் தாயினும் கோயிலை காக்க மறந்திட்ட பாவியடி கிளியேனு' தாய்பாசத்தை தாராளமாய் தளும்ப தளும்ப காட்டுவார்கள்.

Representational Image
Representational Image
Jaikishan Patel from Pixabay

#உயர் வகுப்புகளில் முதல் நாள்

போர்டபிள் டிவியையே பார்த்தவர்களுக்கு எல்.இ.டி டிவி பார்ப்பதுபோல சின்ன நோட்டிலேயே எழுதியவர்க்கு லாங் சைஸ் நோட் அப்போதுதான் அறிமுகமாகும். கோடு போட்ட நோட்டா, பால் பேப்பர் நோட்டா எனக்கேட்டு கேட்டு எழுதிக் கொள்வோம். இதில் புத்தக, நோட் அட்டை போடுபவர்கள் சுவாரஸ்யமானவர்கள். ஓரிருவர் பைண்டிங்,ஓரிருவர் ப்ரெளன் சீட் போட்டிருப்பார்கள். மீதியுள்ள அனைவரும் நியூஸ் பேப்பர்தான். சிலர் அதில் நடிக நடிகைகளுக்கு கிருதா, மீசை வரைந்து ஹாலிவுட் மேக்கப் மேன்களுக்கே சவால் விடுவார்கள்.


டவுன் பஸ்ஸில் இடம் பிடிப்பது போல் அவ்வளவு சுலபமில்லை.. மாப்பிள்ளை பெஞ்ச் எனும் கடைசி பென்ச்சில் இடம்பிடிப்பது. அதற்கு சின்சியாரிட்டியும், சீனியாரிட்டியும் வேணும். அதேபோல் சில நடுநிலைவாதிகள் முன்னால் இருந்தாலும் பின்னால் இருந்தாலும் கேள்வி கேட்பார்கள் என புத்திசாலித்தனமாய் யோசித்து இடையில் இருக்கும் பென்ச்களுக்கு இடைத்தேர்தல் நடப்பது போல் பெரிய போட்டா போட்டியே நடக்கும். மாலையில் பள்ளி விட்டு பஸ்ஸில் போகும் போது நடத்துநர் டிக்கெட் கேட்டால் வரும் பாருங்க ஒரு அறச்சீற்றம்.. நான் எம்.எல்.ஏ ஆளுங்கனு சொல்வதுபோல் நான் ஸ்டூடண்டுங்கனு சொல்லும் போது வரும் பெருமிதம் பத்து பால் ஐஸ் சாப்பிட்டதுக்கு சமம்.

#சில நிகழ்வுகள்

*பள்ளி ஆரம்பிக்கும் நாள் திங்கள், புதன், வெள்ளி என்று இருந்தால் தான் குழந்தைகளை அனுப்புவார்கள்.

*அமாவாசைக்கு அடுத்த நாள் அனுப்பமாட்டாங்க.

*தம்பிக்கு தனியா இருக்க பயமா இருக்குனு அண்ணன், அக்காகூட மேல் வகுப்பில் உட்கார வைப்பாங்க. மதியத்துக்கு மேல் இந்த கூட்டம் அதிகரித்துக் கொண்டே போகும்.

*பக்கத்து வீட்டில் சண்டையிட்ட பிள்ளைகளுடன் அமர்ந்தால் பரம்பரைக்கு அவமானமென கருதி இருவரும் அருகில் அமரவிட மாட்டார்கள்

*சிலர் தாத்தா பாட்டிகளை வகுப்பறைக்குள் வரவிட்டு யாராவது உன்னை அடிச்சா சொல்லுனு அடியாள் மாதிரி சொல்லிச் செல்வதை குழந்தைகள் இசட் ப்ளஸ் பாதுகாப்பாக நினைத்து கொள்வார்கள்.

*சிலர் வகுப்பு முழுவதுக்கும் ஆரஞ்சு மிட்டாய், கடுக்காய் மிட்டாய் கொடுப்பார்கள். அன்னிக்கு முழுக்க அவனோட தான் எல்லாரும் சுத்துவாங்க.

*ஓட்டுச்சாவடியில் மைடப்பாவை தட்டி விடுவதுபோல்..சிலர் வாட்டர்கேனை தட்டிவிட்டு முதல்நாளே மொத்த வகுப்பறையும் வெளியே உட்கார்ந்திருப்பாங்க.

*பென்சில் இருக்கானு கேட்டால் போதும். மனிதக்கரங்களின் அதிகபட்ச வேகத்தை வகுப்பறையில் காணலாம்

முதல் நாள் பள்ளியைவிட்டு வந்த குழந்தைகளை,மாணவர்களை வீடே சூரிய வம்சம் தேவயானியைப்போல் வரவேற்கும். முதல் ஒரு வாரம் அல்லது நம் நடத்தையைப் பொறுத்து ஒரு மாதம் இது தொடரும். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் பாடம்,படிப்பு, தேர்வு எனத்தொடரும். உலகிலேயே மகிழ்ச்சியான செயல்பாடு கற்றுக்கொள்வதுதான் என்பார் அரிஸ்டாடில். அதுபோல் முடிவின்றி கற்றல் நடக்கும்.

Representational Image
Representational Image
Pixabay

இன்றைய கொரொனா காலத்தில் கடந்த ஆண்டு பலருக்கு இந்த வாய்ப்பு கிடைக்காமலேயே போனது. இந்த ஆண்டாவது நோய் தொற்று குறைந்து அனைவரும் இது போல் முதல் நாள் பள்ளி அனுபவத்தை அனுபவிக்க வேண்டும் என்பதே ஆசை. சிலர் வீட்டிலேயே ஆன்லைன் வகுப்பு நடக்கிறதே என கேட்கலாம். அது நேரடி கற்பித்தலுக்கு இணையாகாது. அப்போதெல்லாம் இக்கதைதான் நினைவுக்கு வரும்..

"சஹாரா பாலைவனத்தில் ஒருவனுக்கு தந்தி வந்தது. "வாழ்த்துகள்! பரிசுக் குலுக்கலில் உங்களுக்கு புதிய ஹோண்டா சிட்டி கார் கிடைத்துள்ளது. அது உங்களுக்கு அனுப்பப்படும் என்று.

அவன், "எனக்கு ஹோண்டா வேண்டாம். எனக்குத் தேவை ஒரு ஒட்டகம்"என்பான். அதே போல் குழந்தைகளும் கொரொனா தேவியிடம் வேண்டுவது தொற்று குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பி பள்ளி செல்வதைத் தான் விரும்புகின்றனர்.

ஏனெனில் 'அடையச் சென்றால் கூடு

அடைபட்டுக் கிடந்தால் அது கூண்டு'

என்று உணர்த்திவிட்டது இந்த கொரொனா காலம்.


-மணிகண்டபிரபு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு