Published:Updated:

கருவமரம் பஸ் ஸ்டாப்பும் நண்பர் முருகேசனும்! - நெகிழ்ச்சியூட்டும் #Nostalgic பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image

ஹாலிவுட் மற்றும் தமிழ் படங்களில் பணியாற்றி, தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் நவின் சீதாராமன் தன் சொந்த ஊர் நினைவுகளை பகிர்ந்திருக்கிறார்..

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

என் வீட்டிலிருந்து நான்கு கி.மீ. தூரம் மிதி வண்டியில் சென்று அங்கிருந்து பேருந்தைப் பிடித்து சுமார் 50 கி.மீ தூரத்திலிருக்கும் கல்லூரிக்கு சென்று வரும் எனக்கு, குறிப்பாக ஒரேயொரு பேருந்து நிலையத்தை மாத்திரம் மறக்கவே இயலாது. ஆம்! அதுதான் அந்த `கருவ மரம் பஸ் ஸ்டாப்'. தினமும் கல்லூரிக்குச் செல்லும் எனக்கு தவறாமல் என் தந்தை பத்து ரூபாய் கொடுப்பது வழக்கம். பேருந்து பயணச்சீட்டு ஆறு ரூபாய் போக மீதி நான்கு ரூபாய் எனக்கு மிச்சம். செவ்வாய்க்கிழமை சருகணி வாரச்சந்தை வேறு. பேருந்தின் டயர்கள் தவிர, எங்கெல்லாம் சாத்தியமோ, அங்கெல்லாம் ஆட்கள் தொங்கிக்கொண்டும், மேற்கூரையில் அமர்ந்துகொண்டும் வர, அந்தப் பேருந்து கிட்டத்தட்ட நடைப்பயணமாய்த்தான் சந்தைவரை வந்து சேரும். தனியார் பேருந்து என்பதாலும், நான் தொடர்ந்து பிரயாணிப்பதாலும் ஓட்டுநர், நடத்துநர், பரிசோதகர் நண்பர்களானார்கள்.

Representational Image
Representational Image

கூட்ட நொிசலில் நானும் விசில் அடித்து நகர்ந்து சென்று கட்டணங்களை வசூலித்துத் தற்காலிக நடத்துநராவேன். இந்த நொிசலான சந்தை நாள்களில் நடத்துநர் மாமா காதர்பாய் எனக்குப் பயணச்சீட்டு தரமாட்டார். இதில் ஒரு மூன்று ரூபாய் அல்லது சில வேளைகளில் மொத்த ஆறு ரூபாய்களும் மிச்சம். கல்லூரி முடிந்து மாலை நேரம், சில நேரங்களில் நண்பர்களுடன் சேர்ந்து தேநீர் மற்றும் வடை சாப்பிட்டாலும் தினமும் இரண்டு ரூபாயாவது மிஞ்சும். இப்படி மாதம் முழுவதும் சோ்த்த பணத்தை வைத்துப் போட்ட `மூலதன'த்தில் (கார்ல் மார்க்ஸ் உட்பட) அறிமுகமானவர்கள்தான் கவிஞர் மீரா தொடங்கி, ராகுல சாங்கிருத்தியாயன், பொன்னீலன், காண்டேகர், தி.ஜ., வண்ணதாசன், கி.ரா., மேலாண்மை பொன்னுசாமி, சோ.தர்மன், தனுஷ்கோடி இராமசாமி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், மு.மேத்தா, நா.காமராசன், மாக்சிம் கார்க்கி, ஸ்டாலின், பிரடெரிக் ஏங்கெல்ஸ், வைரமுத்து, கல்யாண்ஜி, கோமல் சுவாமிநாதன், பாமரன், பழநி இராகுலதாசன், டாக்டர் வ.தேனப்பன், ஊடி வயலார், கவிஞர் கண்ணதாசன், டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி, அறிவுமதி, சுப.வீரபாண்டியன், எஸ்.இராமகிருஷ்ணன், பா.ராகவன் என கவிஞர் மதுமிதா வரை எனக்குப் பரிச்சயம்.

இப்படியாக சென்றுகொண்டிருந்த என் கல்லூரி வாழ்க்கையில் தேவகோட்டை பேருந்து நிலையத்தில், காலையில் வந்திறங்கியவுடன் தினமும் தவறாமல் ஒருவரைச் சந்திப்பேன். என்னைப் பார்த்தவுடன் அவர் புன்முறுவலுடன் எனக்கு வணக்கம் வைப்பார். நானும் வணக்கம் வைப்பேன். உடனே என்னையறியாது என் கைகள் எனது கால்ச்சட்டைப்பைக்குள் செல்லும். கட்டாயம் அவருக்கென வைத்திருக்கும் ஒரு ரூபாய் நாணயம் யாருமறியாது அவரின் கைக்குள் கைமாறும். அடிமனதிலிருந்து திரும்ப ஒரு நன்றி சொல்லிவிட்டு கைகளாலேயே நடந்து அடுத்த பக்கம் சென்று விடுவார். ஆம்! அவருக்கு கால்கள் இரண்டும் போலியோவால் பாதிக்கப்பட்டு, இரு சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஒரு பலகையில் உட்கார்ந்துகொண்டு, சுட்டெரிக்கும் தார் ரோட்டில் கைகளாலேயே நடந்து செல்லும் மாற்றுத்திறனாளி நண்பர் முருகேசன். இப்படித்தான் எங்கள் பந்தம் பல வருடங்கள் தொடர்ந்தன.

Representational Image
Representational Image

ஒருமுறை கல்லூரி மதியமே விடுமுறை அறிவிக்க, கட்டாயமாக நண்பர்களுடன் திரைப்படத்துக்குச் செல்லும் நான், அடுத்த ஒரு சில நாள்களில் நாற்று நட இருக்கும் பொிய செய்க்கு நாற்றுப் பறிக்க ஆட்கள் பற்றாக்குறை. நானும் சென்று பறித்தால்தான் காரியம் நடக்கும். இல்லையென்றால் நடவு பாதியில் நிற்கும் என்ற அப்பாவின் குரல் என் காதுகளில் ஒலிக்க வீட்டுக்கு விரைகிறேன். வழக்கமாகச் செல்லும் பேருந்து மாலைதான் வரும். வேறொரு பேருந்தைப் பிடித்து வீடு செல்ல வேண்டும் என்ற வேகம். எப்போதும் காலையில் சந்திக்கும் நண்பர் முருகேசனை அன்று மதியம்தான் சந்தித்தேன். அவசரத்தில் இருந்த நான், எப்போதும்போல் எனது கால்ச்சட்டைப் பைக்குள் கை விட்டேன். எடுத்தேன், அவசரத்தில் வந்ததைக் கொடுத்தேன். வழக்கத்துக்கும் மீறிய புன்முறுவல் என் நண்பர் முருகேசனிடம். பிறகுதான் தெரிந்தது அது ஒரு ரூபாய் அல்ல, ஐந்து ரூபாய் நாணயம்.

ஒரு வழியாகப் பேருந்தில் ஏறி நின்றுகொண்டேன். ``சீட்டு வாங்கணுமா? வண்டில யாரும் சீட்டு வாங்கணுமா?" நடத்துநர் முன் பக்கத்திலிருந்து பயணச்சீட்டு கேட்டுக்கொண்டே நெருங்குகிறார். நான் சட்டைப் பைக்குள் கை விடுகிறேன். தூக்கி வாரிப் போட்டது. பேன்ட் பைக்குள் கை விடுகிறேன். மீண்டும் அதிர்ச்சி. பேருந்து காற்றைக் கிழித்துக்கொண்டு சென்ற போதும் என் உடல் முழுவதும் வியர்த்துக் கொட்டுகிறது. பேருந்தில் கிட்டத்தட்ட என்னைச் சேர்த்து மூன்றோ அல்லது நான்கு பேரோதான் நின்றுகொண்டிருக்கிறோம்.

Representational Image
Representational Image

இன்றென்னவோ பேருந்தில் ஏராளமான கல்லூரிப்பெண்கள், பள்ளிச் சிறுமிகள். திகைத்துப் போகிறேன். காரணம், ஒரு நயா பைசாகூட என்னிடம் இல்லை. இது எப்படி நடந்தது? பேன்ட்'டை மாற்றிப் போடுகையில் காசை எடுத்து வைக்க மறந்திருப்பேனா? சத்தியமாய்த் தெரியவில்லை. ``என்ன செய்வது? யாரிடம் கேட்பது? அந்தப் பேருந்தில் ஓட்டுநர், நடத்துநர் உட்பட எனக்குத் தெரிந்த முகங்கள் யாருமே இல்லை. வழக்கமாய் போகும் பேருந்து என்றாலும் ஒரு வழியாய் சமாளிக்கலாம். அடக் கடவுளே! அவமானமாய்ப் போய்விடுமே! முறுக்கிய மீசையுடன் கிட்டத்தட்ட நடத்துநர் எனக்கு அருகியில்.... ``கருவ மரம் பஸ் ஸ்டாப் எந்திரிச்சு வாங்க". இன்னும் ரெண்டு சீட்டு கொறையிதே.... யாராச்சும் சீட்டு வாங்கணுமா? யாராச்சும் சீட்டு வாங்கணுமா? கசக்கிப் பிழிகிறது என் அடிவயிறு. எனக்கு அடி வயிறு இருப்பதை அன்றுதான் உணர்கிறேன். அப்படியொரு மரண வேதனை. ``காசு இல்லாம ஒனக்கெல்லாம், எதுக்குடா பேண்ட், சட்டை.... அதுல வேற இன்-பண்ணிருக்கே, கீழ எறங்குடா வெண்ணெ" என்று யாரோ திட்டுவதாக என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

``டமார்!! ஓ.... ஓ.... பாத்து.... பாத்து, ஏய்.. ஏய்.. என்னாச்சுப்பா... என ஆங்கங்கே சத்தம். நான் மேலே பிடித்திருந்த கம்பியை மீறி, நடத்துநர் மீது பலமாக இடித்து, அவர் நிலை தடுமாறி விழ, நான் அவர்மீது விழ, ஒரு வழியாய் எழுந்து, சுதாரித்துப் பார்த்ததில், பேருந்து கிட்டத்தட்ட பக்கத்தில் இருக்கும் வயலில் தலைகீழாக சாயும் நிலையில் நின்றுகொண்டிருந்தது. ``எல்லாரும் சீக்கிரம் எறங்குங்க, எறங்குங்க..." ஒரே இறைச்சல், சத்தம்... சந்தையில் வாங்கி வந்த இரண்டு கோழிகள் தப்பித்தோம், பிழைத்தோம் என வயல்காட்டில் அவை பிறந்த இடங்களை நோக்கி தலை தெறிக்க பறந்தோடுவதை விரட்டிப் பிடிக்க ஒருவர் சேற்று வயல்களுக்குள் வேட்டி அவிழ விரட்டிக்கொண்டிருக்கிறார்.

Representational Image
Representational Image

திரும்பி ஓட்டுநர் பக்கம் பார்க்கிறேன். எதிரே வந்த லாரி பேருந்து மீதி மோதி, லாரி ஓட்டுநர் இறங்கி ஓடிவிட, அனைவரும் கீழே இறங்கினோம். நெற்பயிர் வளர்ந்து கதிர்களோடு சேறும், சகதியுமாய் இருந்த அந்த வயலுக்குள் அனைவரும் இறங்கி, ஒரு வழியாக சாலையோரம் வந்தால்..... சரியாக அந்தக் கருவ மரம் பஸ் ஸ்டாப். யாருக்கும் எந்தக் காயமும் இல்லை. பேருந்து கண்ணாடி உடைந்து நொறுங்கி, முன்புறம் சேதமடைந்திருந்தது. எல்லோரும் கருவ மரம் பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தோம்.

எனக்குத் தலை சுற்றியது. இந்த விபத்து எனக்காகவே நடந்ததோ! எனக்குள் ஓராயிரம் கேள்விகள்... ``சரி, பேசாமல் மாலை வரும் எனது வழக்கமான பேருந்திலேயே சென்று விடுவோமா?" என நினைக்கிறேன்.

இப்படி பொிய விபத்து நடந்தும், தப்பிச் சென்ற கோழிகள் தவிர, யாருக்கும் பொிய அளவில் பாதிப்பு இல்லை என்ற திருப்தி ஒருபுறம் இருந்தாலும், என்னிடம் காசு இல்லாமல் போனதற்கும், என் நண்பர் முருகேசனுக்கும், அந்தக் கருவமரம் பஸ் ஸ்டாப்புக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதாகவே நான் உணர்ந்தேன். இதற்கிடையில், இரு புறமும் பேருந்து செல்ல இயலாததால், வந்த பேருந்து அனைத்தும் வந்த வழியே திரும்பி வேறு வேறு மாற்றுச் சாலைகளில் செல்லத் தொடங்கின. கிட்டத்தட்ட நான் மட்டுமே அந்தக் கருவமரம் பஸ் ஸ்டாப்பில் காத்திருக்கிறேன். நான் போக வேண்டிய திசையில் வந்த ஒரு பேருந்து திரும்புவதற்காக நடத்துநர், ஒருவர் கீழே இறங்கி ``வரலாம் வா.... வரலாம், வரலாம் வா... வரலாம் எனக் கத்திக்கொண்டு விசிலடித்து பேருந்தைப் பின்புறமாகத் திருப்பச் செய்கிறார்.

Representational Image
Representational Image

விசிலடிக்கும் நடத்துநரைப் பார்க்கிறேன். திடீரென ஒரு மகிழ்ச்சி. அவர் எனக்குத் தூரத்துச் சொந்தம் என் தந்தை ஒருமுறை எப்போதோ அந்தப் பேருந்தில் வரும்போது அறிமுகம் செய்திருக்கிறார். கிட்டத்தட்ட திரும்பி, கிளம்பி விட்ட பேருந்தை தலை தெறிக்க ஓடிப்போய், விரட்டிப் பிடித்தே விட்டேன். பேருந்தில் நல்ல இடம் பார்த்து நின்றுகொண்டேன். மீண்டும் நடத்துநர்.... அருகே பயணச்சீட்டு கேட்டுக்கொண்டே வருகிறார். நான் அவரைப் பார்த்து அசடு வழியாத குறையாய் சிரிக்கிறேன்.

``என்ன தம்பி நல்லாருக்கியளா? அப்பா எப்படி இருக்காரு? என்ன, இன்னிக்கி சீக்கிரமே வந்துட்டியே, காலேசு லீவா?" என ஒரே மூச்சில் கேட்டு முடித்தார். ``ம்ம்.. நல்லாருக்கேன், நான் வந்த ஆர்.பி.எஸ். பஸ் ஆக்சிடென்ட் ஆயிருச்சு, அதான்..." என இழுத்தேன். ``ஆமா, அவய்ங்கெ நம்ம பொழப்புல மண்ணள்ளிப் போட்டுப்புட்டாய்ங்கெ, இவெய்ங்களால நமக்குக் கலெக்சன் போச்சு" என்று புழம்பிக்கொண்டே, என் பஸ் நிறுத்தத்துக்கான பயணச்சீட்டைத் தந்தார்.

Representational Image
Representational Image

நான் என் சட்டைப்பைக்குள் ஏதோ காசை எடுத்துக் கொடுக்கப் போவதுபோல் கையை விட்டேன். ``அட சும்மா உள்ள வைய்ங்க... படிக்கிற புள்ள...... சம்பாரிக்கும்போது மொத்தமா சேத்துக் குடுங்க" என்றார். எனக்கு மீண்டும் தலை சுற்றியது. சட்டைப்பையும், பேன்ட் பையும் காலி என்பது அவருக்கெங்கே தெரியப் போகிறது. ஆனாலும், ஏதோ... அந்தக் கணத்தில், எனக்குள் தோன்றிய எண்ணங்கள், கேள்விகள், தற்காலிக திருப்தி... இவை என்றுமே எனக்குள் அழிக்க முடியாத அற்புதமான நினைவுகள். சில மணித்துளிகளுக்கு முன் நான் அந்தக் `கருவ மரம் பஸ் ஸ்டாப்'பில் நிற்கும்போது தோன்றிய எண்ணங்கள்.... ஆனால், அதற்குச் சற்றும் சம்பந்தம் இல்லாத இந்த நினைவுகள்..... இவற்றில் எது நிரந்தரம்? நான் செய்த ஒரு ரூபாய், ஐந்து ரூபாய் தர்மம், ஓர் அற்பக் காரியமானாலும்... `தர்மம் தலை காக்கும்' என கர்ணன் ரேஞ்சுக்கு கற்பனையில் மிதந்ததென்னவோ உண்மைதான்.

இன்றும் நான் என் சொந்த ஊருக்குக் காரில் செல்லும்போது, வழியில் உள்ள அந்த `கருவ மரம் பஸ் ஸ்டாப்'பில் ஒரு இரண்டு நிமிடங்களாவது நின்றுவிட்டுத்தான் செல்வேன். எனக்குத் தொிந்து பாரம்பர்யமிக்க பல்வேறு மரங்களை வெட்டி அழித்து விட்ட இந்த தலைமுறைகள் அந்த மரத்தை வெட்டாமல் விட்டு வைத்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி. ஒவ்வொரு முறையும் அதன் வழியாகச் செல்லும்போது, நான் தவறாது கருவ மரத்தைப் பார்க்கிறேன். ஆனால், என் நண்பர் முருகேசனை இன்றுவரை சந்திக்கவே இல்லை. பேருந்து நிலையத்தில் பூக்கடை அக்கா முதல், அன்றைய டாக்சி ஸ்டாண்ட் இன்றைய ஆட்டோ ஸ்டாண்ட், தியாகிகள் பூங்கா என பழக்கடை ராசேந்திரன் அண்ணன் வரை அனைவரிடமும் விசாரித்துவிட்டேன்.

நவின் சீதாராமன்
நவின் சீதாராமன்

என் நண்பர் முருகேசன் பற்றி இன்றுவரை எந்தத் தகவலும் இல்லை. ``நண்பரே! நீங்கள் எங்கிருந்தாலும், சகல சவுகரியங்களோடு, நலமாய், வளமாய் வாழ வேண்டும் என்பதுதான் எனது தீராத ஆசை. கடவுள் என்ற ஒருவன் உண்மையிலேயே இருந்தால், இனி.... ஒரேயொரு முறை உங்களைச் சந்தித்து, மனமாற கட்டியணைக்க வேண்டும்.... நாம் இருவரும் ஒன்றாய்.... ஒரே உணவு விடுதியில் சமமாய் அமர்ந்து... வயிறார சாப்பிடும் வரம் ஒன்று வேண்டும்... அந்த வாய்ப்பை எனக்குத் தருவீர்களா? அதுவே எனது தீராத ஆசை. முருகேசா... நீங்கள் எங்கேயோ நலமாக இருக்கிறீர்கள் என்பது மட்டும் எனக்குள் தெளிவாய்த் தெரிகிறது. நண்பா... ம்ம்... ப்ச்ச்... ம்ம்.... நான் இழுத்து விடும் பெருமூச்சு என் நண்பனுக்கு அவசியம் கேட்கும்... நீ வாழ்க! நலமோடும், வளமோடும் வாழ்க!! வாழ்வாய்...

நான் அடுத்த முறை தாயகம் வரும்போதாவது உன்னைக் கட்டி அணைத்து முத்தமிட வேண்டும்... அது நடக்குமா நண்பா?

``கருவமரம் பஸ் ஸ்டாப் எந்திரிச்சு வாங்க..... போலாம் ரைட்....." இன்னும் அந்தக் குரல் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

- நவின் சீதாராமன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு