Published:Updated:

``பள்ளி மைதானத்தில் அரங்கேறிய அடிதடி..!''- கிரிக்கெட் கார்டு நினைவுகள் #Nostalgia #MyVikatan

கிரிக்கெட் கார்டு
கிரிக்கெட் கார்டு

வீட்டின் கடைக்குட்டிப் பிள்ளைகள் சர்வ நிச்சயமாக நாசமாய்ப் போவார்கள் என நம்பிக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான இந்தியக் குடும்பங்களில் எங்களதும் ஒன்று...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

இப்போது நான் அறவே கிரிக்கெட் பார்ப்பதில்லை. கடந்த பத்து ஆண்டுகளில் நான் பார்த்தவைக் கூட பத்துக்கும் குறைவான ஆட்டங்களாகவே இருக்கக்கூடும் - அதிலும் கால் இறுதி, அரை இறுதி மற்றும் இறுதியாட்டம் என மூன்றும் 2011-ன் உலகக்கோப்பைக்கானது.


எல்லா ஆண்களின் பால்யம் போலவே எனதும் கிரிக்கெட்டால் நிறைந்ததுதான். அதைத் தவிர வேறொன்றும் ஆடியதாக நினைவில்லை. இருப்பினும் கிரிக்கெட் பார்ப்பதில் ஆர்வமற்று விளையாடுவதில் மட்டுமே ஆர்வமாயிருந்தேன்.

அது 1997-98-ன் இடைப்பட்ட காலம் - ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம். கைச் செலவுக்கென பெற்றோர்கள் எதையும் தத்தம் பிள்ளைகளுக்கு தந்திராத காலகட்டம். சிலர் அவரவர் பிள்ளைகளுக்கு பிஸ்கட்டையோ, முறுக்கையோ மதிய உணவுடன் கொடுத்து அனுப்புவதுண்டு.

கிரிக்கெட் கார்டு
கிரிக்கெட் கார்டு

அப்படியான காலகட்டத்தில் திடீரென அந்தவொன்று பேரலையாக எங்கள் வாழ்வில் பிரவேசித்தது. அதுதான் bubble gum -க்கு இலவசமாக வழங்கப்பட்ட கிரிக்கெட் கார்டுகள்.

என் நினைவு சரியெனில் அதை அறிமுகப்படுத்தியது big fun ஆக இருக்கக்கூடும். இல்லையெனில் அதன் மூலமாகதான் எனக்கு அறிமுகமாயிற்று. முதன் முதலாக ஏதோவொரு tournament அடிப்படையில் வெளியிடப்பட்டன (அநேகமாக சஹாரா அல்லது ஷார்ஜாஹ்). அதன் பின்பாக ஒவ்வொரு chewing gum நிறுவனமும் வெவ்வேறு வகையிலான கார்டுகளை கிரிக்கெட் வீரர்களின் தரவுகளைக் கொண்டு வெளியிட்டன. அதாவது ஒரு bubble gum வாங்கினால் ஒரு கார்டு இலவசம். ஆனால், center fresh மட்டுமே இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் என இருந்தது. எனினும் அதற்கும் நல்ல வியாபாரம் இருந்தது.

அப்படியான தருணத்தில் பள்ளியை விட்டு வீட்டிற்குச் செல்கையில் யாரேனும் ஒருவர் கிரிக்கெட் கார்டு வாங்குவதாக இருந்தாலும் அவர்களது நண்பர்கள் புடைச் சூழ கடைக்குச் சென்று ஒவ்வொருவரும் அவரவர் விருப்பத்தை பரிந்துரைக்க அதற்கு ஏற்றார் போல ஒன்றை தேர்ந்தெடுப்பதுண்டு. அது சந்தைக்குப் புதிது என்பதால் கடைக்காரர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. ஆரம்ப கட்டத்தில் வாங்க வரும் சிறுவனிடமே கொடுத்து அவனது விருப்பம் போல எடுத்துக் கொள்ள அனுமதித்தவர்கள் அதன் பின்பு தாங்கள் கொடுப்பதை வாங்குவதாக இருந்தால் மட்டுமே கடைக்குள் அனுமதித்தனர். காரணம் என்னவென்று நான் சொல்லி புரிய தேவையில்லை.

கிரிக்கெட் கார்டு
கிரிக்கெட் கார்டு

எனக்கு அதன் மீது ஆசை இருப்பினும் வாங்குவதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை. வீட்டில் கேட்டாலும், "bubble gum -லாம் சாப்பிடக் கூடாது" எனக் கண்டித்தனர். ஆனாலும் விடாப்பிடியாக இருக்க "இதுதான் மொதலும், கடைசியும் என அப்பா ஒருமுறை வாங்கித் தந்தார். கைவசம் ராகுல் டிராவிட் - எனது ஆசான்.

நண்பர்கள் அனைவரும் அவரவர் பலத்திற்கு ஏற்ப வாங்கிக் குவித்துக் கொண்டிருந்தனர். ஆனாலும், அதை வைத்து எப்படி விளையாடுவதென யாருக்கும் புரிந்தபாடில்லை. நாங்கள் தமிழ் வழிக் கல்வியில் பயின்று வந்தோம். முதன்முறையாக ஆங்கிலம் அறிமுகமானதே மூன்றாம் வகுப்பில்தான். அப்போதைய வகுப்பாசிரியை பரிமளம் ஒவ்வொரு மாணவர்களின் பெயரையும் சிலேட்டில் ஆங்கிலத்தில் எழுதித் தந்து மறுநாள் எங்களை மனப்பாடம் செய்து சொல்லச் சொன்னது எப்போதும் நினைவில் இருப்பதற்கான எளிய காரணம் - பதினைந்து ஆங்கில எழுத்துக்களாலான எனது பெயர்.

கிரிக்கெட் கார்டு
கிரிக்கெட் கார்டு

அப்படியான பின்புலத்தில் இருந்த எங்களுக்கு கிரிக்கெட்டின் பதங்களான economy என்பதோ, batting/bowling average என்பதோ புரிபடவில்லை. அப்போதுதான் எங்கள் வகுப்பின் ரௌடிகளென பெயரெடுத்த வினோத்தும், பிரபாகரனும் விளையாட்டின் விதிகளை அவர்களாக வரையறுத்தார்கள். இருவர் மட்டுமே ஆடுபவர்கள். இருவரிடத்திலும் அவர்கள் சேகரித்த கார்டுகளில் சில. கையில் ஒரு நாணயம். ஒருவர் சுண்டி தனது உள்ளங்கைக்குள் மறைத்து வைத்து, "பட்டா? பொம்மையா?" (பூவா?தலையா? என்பதைத்தான் அப்படி சொல்லிவந்தோம்) எனக் கேட்க, சரியாகச் சொன்னால் கேட்டவனிடம் சுண்டியவனின் கார்டு ஒன்று கொடுக்கப்படும். இல்லையெனில் எதிர்மாறாக கார்டுகள் பயனப்படும்.

10 நிமிடங்களில் PAN Card பெறுவது எப்படி? - ஈசி வழிமுறை #MyVikatan

நாள்தோறும் அவர்கள் இருவருமே பெரும்பாலும் விளையாடினார்கள். பிரபாகரனுக்கெனவும் , வினோத்துக்கெனவும் நண்பர்கள் இரு அணிகளாக பிரிந்து நின்றோம். ஒவ்வொரு காலையிலும் பள்ளியின் பின்புறமுள்ள சத்துணவுக் கூடத்தின் முன்பாக உள்ள மரநிழலில் ஆட்டம் நடப்பதுஅன்றாடமாகிப் போனது. அவரவர்களுக்கென தனித்தனியே சுண்டுவதெற்கென நாணயங்களை வைத்துக் கொண்டனர் - அவரவர்க்கு அது ராசியென.

ஒரு நாணயத்தை எத்திசையில் வைத்து சுண்டினால் எது விழுமென அவரவருக்கான கோட்பாடுகளை வைத்திருந்தனர். நாணயத்தின் தலைப்பகுதியை நம் பக்கமாக வைத்து எவ்வளவு முறை சுண்டினாலும் அவர்கள் சொன்னது போல தலைதான் விழுந்தது. ஒரு நாணயத்தை எவ்வளவு முறை எப்படி சுண்டினாலும் தலை அல்லது பூ விழுவதற்கான சாத்தியக்கூறுகள் ஐம்பது சதவிகிதம் இரண்டுக்கும் இருக்கின்றன என்பது போன்ற விதிகளோ, கணிதங்களோ அறியாத வயது அது.

மிகக் குறுகிய காலகட்டத்தில் இன்னும் பலவாறு கார்டுகள் வெளியிடப்பட்டன. தினம் தினம் இதனால் எங்களது ஆட்டமும் சூடுபிடித்தன. காலை நேரத்தில் மட்டும் என இருந்த ஆட்டம் அத்தனை இடைவேளைகளிலும் நடந்தேறின. இருவர் மட்டும் ஆடிய விளையாட்டு இப்போது கிட்டத்தட்ட அனைவராலும் ஆடப்பட்டது. அப்படியான ஒரு மதிய வேளையில் விளையாட்டின் ஊடாக பிரபாகரனுக்கும், வினோத்துக்கு தொடங்கிய சண்டை மைதானத்தில் அவர்கள் இருவரும் கட்டிப் புரண்டு ஒருவர் மீது மற்றொருவர் மாறி மாறி ஏறி அடித்துக் கொள்ளும் அளவுக்கு வலுத்தது.

கிரிக்கெட் கார்டு
கிரிக்கெட் கார்டு

மேலோங்கிய சச்சரவின் பரபரப்பில் தனது அறையைவிட்டு வெளியே வந்த தலைமையாசிரியை இருவரையும் இழுத்துச் சென்றார். பின்பு - விசாரணை, பள்ளி முழுவதிலும் திடீர்ச் சோதனை, கிரிக்கெட் கார்டு வைத்திருந்த அத்தனை பேரையும் மைதானத்தில் மண்டியிட வைத்து என மீதமிருந்த அன்றையப் பொழுது முழுவதையும் ஒரு சூன்யம் விழுங்கிக் கொண்டிருந்தது.

பள்ளி விடுவதற்கு முன்பாக அனைத்து மாணவர்களையும் மைதானத்தில் அணிவகுத்து நிற்கச் சொல்லி சுற்றறிக்கை வந்தது. தலைமையாசிரியை ஆவேசம் கொண்டவராக கத்தினார். இனிமேல் யாரேனும் கிரிக்கெட் கார்டுகள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு TC கொடுக்கப்படும் என முடித்த போது ஒன்றும் புரியாத ஒன்றாம் வகுப்பு மாணவர்களில் இருவர் அழத்தொடங்கினர்.

பிற்பாடு கோடை விடுமுறைக்குச் சித்தி வீட்டுக்கு தூத்துக்குடி சென்ற வந்தபோது என்னிடம் இருந்த கார்டுகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தன. ஆறாம் வகுப்பிற்கு வேறு பள்ளியில் சேர்ந்த சமயம் உலகக்கோப்பை'99 நெருங்கிக் கொண்டிருந்தது. அதுவரையிலும் இந்திய அணி வீரர்களின் பெயரையே தெரிந்திராத எனக்கு கார்டுகளின் மூலம் எந்த அணியில் யார் நட்சத்திர வீரர், ஒவ்வொரு அணிக்கும் யார் கீப்பர்கள் என எல்லாம் அத்துப்படியாகி இருந்தன. முந்தய நாளின் ஆட்டங்கள் அடுத்த நாளில் வகுப்பறைத் தோழர்களிடம் விவாதிக்கப்பட்டன. வாரயிறுதிகளில் கிரிக்கெட் விளையாடுவதுடன் கார்டுகளும் சேகரிக்கப்பட்டன. அப்போது நகரத்தில் இருந்து பள்ளிக்கு பேருந்தில் சென்று வந்ததினால் என்னிடமும் எப்போதும் கணிசமாக சில்லறைக் காசுகள் இருந்தன.

கிரிக்கெட் கார்டு
கிரிக்கெட் கார்டு

எந்தக் கடைகளில் என்ன கார்டுகள் இருக்கின்றன? எந்தக் கடைக்காரர் எப்படி? எங்கு சென்றால் நாமாக தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் எனக் களப்பணிகள் மிகச் செம்மையாக நடந்தேறின. அப்படியானதொரு தேடலில்தான் எங்கள் தெருமுனையின் வலப்புறமுள்ள கவிதா ஹோட்டலின் பெட்டிக்கடைக்காரரை கண்டடைந்தோம் நானும், ரகுமான் அண்ணனும். அப்போதைய தினத்தில் அந்தக் கடை புதிதாக திறக்கப்பட்டது. அதனாலேயே கடைக்காரருக்கு விபரம் போதவில்லை என்பது எங்களுக்கு அனுகூலமாக இருந்தது.

இரண்டு ரூபாயை எடுத்துக்கொண்டு அவர் கடைக்குச் சென்று நாங்களாகவே எங்களுக்கு வேண்டியதை தேர்ந்தெடுத்துக் கொண்டோம். அக்கடையில் கிரிக்கெட் கார்டுகள் கிடைக்கின்றது என்பதை எங்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக வைத்துக் கொண்டோம். அதற்கு மிக முக்கியமானதொரு காரணமும் இருந்தது. புதிதாக வந்திருந்த கார்டுகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டிருந்தன. எங்களுக்குத் தேவையான கார்டுகளை தேர்ந்தெடுத்த பின்னர் கடைக்காரரிடம், "அண்ணா, இதோ இதை எடுத்துக்கறோம்" என எங்கள் கையிலிருந்தபடியே அவரிடம் காண்பிக்கும் போது அவர் பார்ப்பது லாரா-வாகவும், நாங்கள் பார்ப்பது அப்ரிடி-யாகவும் இருக்கும். நானும், ரகுமான் அண்ணனும் எங்களுக்குள்ளாகவே அறிவித்துக் கொண்ட "ஒன்று வாங்கினால் ஒன்று இலவசத்திட்டம்". சமயங்களில் ஒன்று வாங்க இலவசமாக இரண்டு, மூன்றென நேரமும் கைகூடியது.

கார்டுகளின் எண்ணிக்கை நாள்பட அதிகரித்துக் கொண்டே போனது. பத்தாம் வகுப்புக்கு சென்ற ரகுமான் அண்ணன் அவர்வசம் இருந்த கார்டுகளை எல்லாம் என்வசம் ஒப்படைத்தார். ஒருகட்டத்திற்குப் பிறகு என்னிடம் இல்லாத கார்டுகளே இல்லை எனும் அளவிற்கு ஆயிரத்துக்கும் மேலாக அதிகரித்தன.

கிரிக்கெட் கார்டு
கிரிக்கெட் கார்டு

அதை வைத்திருந்த பைகளையும் எண்ணிக்கைக்கு ஏற்ப மாற்றிக்கொண்டே வரும் போது வீட்டிலிருந்தவர்களின் கண்களிலிருந்து அதை மறைத்து வைப்பதென்பது சவாலாகிப்போனது.

வீட்டின் கடைக்குட்டிப் பிள்ளைகள் சர்வ நிச்சயமாக நாசமாய்ப் போவார்கள் என நம்பிக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான இந்தியக் குடும்பங்களில் எங்களதும் ஒன்று. அவ்வகையில் வீட்டின் கண்கள் என்னை உற்று கவனித்துக் கொண்டிருக்கின்றன என்பதை நான் கவனிக்கத் தவறிவிட்டேன்.

பத்தாம் வகுப்பில் கடைசி மூன்று மாதங்கள் கட்டாய விடுதி என்பது எங்கள் பள்ளியின் விதிகளுள் ஒன்று. மீண்டும் வீடு வந்தபோது எல்லாம் சரியாக இருந்தன எனது பொக்கிஷத்தைத் தவிர. எத்தனை முறை வீட்டிலிருப்பவர்களிடம் கேட்ட போதிலும், "எங்களுக்கு தெரியாதுடா. நீ எங்க வச்சன்னு எங்களுக்கு எப்படி தெரியும்?" என அவரவர் வேலைகளில் கரைத்துக் கொண்டனர்.

அதன் பின்பு நான்கு ஊர்களும், ஆறு வீடுகளும் மாறியாகிவிட்டது. இன்னமும் கண்டுபிடிக்க முடியாத ஏதோ ஓர் அட்டைப் பெட்டியினுள்ளே சென்ற தலைமுறையின் நிகரில்லா கிரிக்கெட் வீரர்கள் உயிர்த்தெழ முடியாமல் உறங்கிக் கொண்டிருக்கின்றனர்.

-நாகா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு