Published:Updated:

`அந்தப் பூரி இருக்கே..!' -உணவுக் காதலரின் Nostalgic பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image

பூரிக்கு ஒரு உருளைக்கிழங்கு மசால் கொடுப்பார்கள். அதன் சுவை இன்றும் என் நாவில் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அது ஒரு பெஞ்ச் மார்க் சுவை என்றே கூறுவேன்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

ன்னுடைய பதிவுகளில் நான் ஏன் உணவு பற்றிய விஷயங்களை அதிகம் பேசுகிறேன், ஏனென்றால் நான் ஓர் உணவு விரும்பி (food lover). அதனாலேயே எனது பெரும்பான்மையான பதிவுகள், நான் அந்தப் பதிவு எழுதும்போது அந்த நினைவுகளின் ஒரு பகுதியாக உணவு பற்றிய சிலாகிப்புகள் இருக்கும்.

மேலும் நான் ரசித்த, ருசித்த அந்த உணவுகள் பற்றிய சம்பவங்களைப் படிக்கையில் உங்களுக்கும் இயல்பாகவே நீங்கள் விரும்பிய அல்லது ரசித்து ருசித்த உணவுகள் பற்றிய நினைவுகளை வெளிக்கொணர விரும்புகிறேன்.

பசி என்ற ஒன்று இல்லையென்றால் இவ்வுலகம் இயங்கி இருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. இப்படி கற்பனை செய்து பாருங்கள்.. காட்டில் உள்ள விலங்குகள் அது அது அதனிடத்தில் சோம்பேறியாக படுத்து உறங்கி.....

புற்களை மேயாத மான்களும்

மான்களை வேட்டையாடாத சிங்கங்களும்

காடுகளை வளர்க்காத யானைகளும்

கூடுகளைக் கட்டாத பறவைகளும்

Representational Image
Representational Image

எந்த வேலைகளும் செய்யாத மனிதர்களுமாக இன்று நாம் பேசும் உணவுச் சங்கிலிகள் பரிணாம வளர்ச்சி போன்ற எதுவுமே நடக்காமல் போயிருக்கும்.

மனிதனின் இன்றைய அனைத்துக் கண்டுபிடிப்புகளும் அவனுக்கான உணவு தேவைகளில் அவன் தன்னிறைவு அடைந்த பின்னரே சாத்தியப்பட்டிருக்கும் எனத் தோன்றுகிறது. கற்கால வேட்டையாடும் கூரிய பல கருவிகள் முதல் சக்கரம் வரை உணவுக்கான தேவை இல்லையென்றால் கண்டுபிடிக்கப்பட்டிருக்காது என்பது உலகறிந்த உண்மை.

மனிதன் பரிணாம வளர்ச்ச்சியடைந்த ஆரம்ப காலங்களில் அனைத்துக் கருவிகளும் இயந்திரங்களும் உணவு சார்ந்த தேவையை நிறைவு செய்வதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதை நிறைவு செய்யாமல் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியும் (Science and Technology) மற்றும் மனிதனின் தற்போதைய நாகரிக வளர்ச்சியும் (Civilization) சிந்தனையும் உச்சத்தை எட்டியிருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்.

Representational Image
Representational Image

எனக்கு சமோசா (samosa) என்பது மிகப் பிடித்தமான ஒரு தின்பண்டம். சமோசா என்றதும் இன்றைய நாள்களில் பேக்கரிகளில் விற்கும் உருளைக்கிழங்கு அடைத்த வடஇந்திய சமோசா அல்ல. உருளைக்கிழங்கு, வெங்காயம் வைத்து (samosa sheet) சுற்றி இருக்கும் மொறுமொறுப்பான நம்ம ஊர் சமோசாக்களை எனக்கு பிடிக்கும்.

நான் முதன்முதலில் எப்போது அதைச் சாப்பிட்டேன்.. ஏன் எனக்கு அது மிகப் பிடித்தமான தின்பண்டமாக மாறியது என்பதற்கான பதில் எனக்கு தெரியவில்லை.

ஆனால், நான் எப்போதாவது என் பெற்றோருடன் திருச்சி செல்ல நேர்ந்தால் என் கண்கள் அது எங்காவது இருக்கிறதா என கூகுள் போல தேடிக்கொண்டேஇருக்கும். பார்த்துவிட்டால் உடனே என் அம்மாவிடம் வாங்கி தரச் சொல்லி கேட்பேன். கெஞ்சுவேன்.. வாங்கிக் கொடுக்கும் வரை அடம் பிடிப்பேன். வேறு எதாவது கேட்டு வாங்கி கொடுக்கவில்லையென்றாலும் அதற்காக அடம் பிடித்ததில்லை. ஏனோ சமோசா மீது அப்படி ஒரு ஈர்ப்பு. ஏனென்று தெரியவில்லை.

இன்று போல் தெருவுக்கு நான்கு இடத்தில் அன்றைய காலகட்டத்தில் சமோசா விற்கப்பட்டதில்லை.

இன்றும் நான் திருச்சி சென்றால் சமோசா வாங்கி உண்ணாமல் என்னுடைய பயணம் நிறைவடைந்ததில்லை.

ங்களுக்கு உடல்நிலை சரி இல்லையென்றால் எங்கள் அம்மா திருச்சி பாலக்கரையில் உள்ள டாக்டர் சபிபுல்லா மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்வார்கள். அன்றைய காலகட்டத்தில் ஓரளவு பிரபலமான மருத்துவமனை அது. இன்றும் அந்த மருத்துவமனை இருக்கிறது என நினைக்கிறன்.

Representational Image
Representational Image

அங்கு ஒரு வயதான மருத்துவர் (அவர்தான் டாக்டர் சபிபுல்லா. ஹோமியோபதி மருத்துவர் என நினைக்கிறேன்) மிக அன்புடன் எங்களுடன் பேசிக்கொண்டே சோதனை செய்வார். அவ்வாறான அன்பான வார்த்தைகளே நோயாளிகளைப் பாதி குணப்படுத்திவிடும்.

இன்று மருத்துவமனைகள் கார்ப்பரேட்டுகளாக மாறியபிறகு இதுபோன்ற உபசரிப்புகளை காண முடிவதில்லை. ஆனால் ஒரு சிறிய அல்ல பெரிய வித்தியாசம் என்னவென்றால் நாம் கொடுக்கும் கட்டணம்.

அங்கு போடப்படும் ஊசி வலித்தாலும் மருந்து கசப்பாக இருந்தாலும் எப்போது மருத்துவமனையைவிட்டு வெளியே வருவோம் என்றே மனம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்.

அப்படி என்ன எதிர்பார்ப்பு?

பெரிதாக ஒன்றுமில்லை மருத்துவமனையை விட்டு வெளியே வந்ததும் மருத்துவமனை எதிரிலிருக்கும் ஹோட்டலுக்குச் சாப்பிடக் கூட்டிச் செல்வார்கள். நான் அங்கு சென்றால் பூரிதான் சாப்பிடுவேன். அந்த ஹோட்டல் பெயர் நினைவில்லை. இதைப் படிக்கும் யாருக்காவது நினைவிருந்தால் கமென்டில் பதிவு செய்யுங்கள். அந்த இடம் இன்று வேறுவிதமாக மாறிவிட்டது.

எனக்கு பூரியின் மீது ஒரு தீராக் காதலை (இங்கு காதலைப் பற்றிப் பேசவேண்டியதாகிவிட்டது மன்னிக்கவும்) உருவாக்கியதில் அந்த உணவகத்துக்குப் பெரும் பங்கு உண்டு.

Representational Image
Representational Image

பூரிக்கு ஒரு உருளைக்கிழங்கு மசால் கொடுப்பார்கள். அதன் சுவை இன்றும் என் நாவில் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அது ஒரு பெஞ்ச் மார்க் சுவை என்றே கூறுவேன். அதன்பின் வேறு எந்த ஹோட்டல்களில் சாப்பிட்டாலும் பூரி மசாலின் சுவையை அந்தப் பெயர் மறந்த ஹோட்டலின் பூரி மசால் சுவையுடன் ஒப்பிடுவேன். ஹோட்டலுக்குச் சென்றால் என்னுடைய மெனுவில் பூரி எப்போதும் இடம் பிடித்ததற்கு அதுவே காரணம்.

பலநாள்கள் எங்களுக்கு வாங்கிக் கொடுத்துவிட்டு அம்மா எதுவும் சாப்பிடாமல் வந்தது வேறு விஷயம்.

அந்த வயதில் நீங்கள் ஏன் சாப்பிட வில்லை என்று நான் கேட்டதே இல்லை. இன்று என் அம்மா ஆசைப்படும் அனைத்தையும் என்னால் வாங்கிக் கொடுக்க முடிந்தாலும் வயது காரணமாக அவரால் அதிகம் சாப்பிட முடிவதில்லை.

ஆனால் இன்றும் ஏதேனும் வாங்கிக் கொடுத்தால் அதன் விலை எவ்வளவு என்று கேட்டு அதிக விலை என்றால்,

``எதற்குப்பா இவ்வளவு காசு போட்டு இதை வாங்குகிறாய்…” என்று கேட்பார்கள்.

தேவைக்கேற்ப செலவு செய்து பழக்கப்பட்ட மனம் அவ்வாறுதான் யோசிக்கும்!

-ஆனந்தகுமார் முத்துசாமி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு